அத்தியாயம் 17
என்னது அட்ட கருப்பியா? எவ சொன்னது என் மருமவள? அவ வாய பருப்பு மத்தால மொத்திடுறேன்” என்று பட்டுப் புடவையை தூக்கி சுருக்கி கொண்டு பேசிய சங்கீதாவை கண்டு ராஜ நாராயணனுக்கு திருப்தியாக இருந்தது என்றால்.. தீனதயாளனுக்கோ பதைப்பதைப்பாக இருந்தது.
“ஏய் சங்கீ.. சங்கீ.. நீ அமைதியா இரு முதல்ல.. அமைதியா இரு.! நாம பேசிக்கலாம்..” என்று மனைவியை பிடித்து அமர வைப்பதற்குள் போதும் போதும் என்றானது தீனதயாளனுக்கு.
அவரோ சீறும் காளையாக பெருமூச்சு விட்டப்படி கோபம் குறையாமல் அமர்ந்திருக்க தன்னருகில் இருக்கும் தண்ணீர் பாட்டிலை எடுத்து நீட்டினார் நாராயணன்.
தண்ணீரை குடித்து ஆசுவாசமான சங்கீதா “ஏன் அண்ணே.. எப்படி நீங்க அந்த பொம்பளைய சும்மா விட்டீங்க? அதுவும் பிஞ்சு குழந்தைய பார்த்து எப்படி அவ அப்படி சொல்லலாம்? குழந்தையை தூக்கிட்டு வந்து விடுற வரைக்கும் நீங்க என்ன பண்ணிட்டு இருந்தீங்க?” என்று வருங்கால மருமகளுக்காக அத்தனை வாதாடினார் சங்கீதா.
விரக்தியாக சிரித்தவர் “கான்ஃப்ரன்ஸுக்காக நான் என் சீனியரோட டெல்லி போயிருந்தேன் மா. அந்த சமயத்துல தான் அவ இப்படி பண்ணிட்டா..” என்றார்.
தேவகிக்கு எப்பொழுதுமே தன் அழகின் மீதும்.. வனப்பின் மீதும் அதீத நம்பிக்கை. அதனாலயே யசோதாவா? நானா? என்று கேட்டால் கண்டிப்பாக தன்னை தான் மாமா கட்டுவார் என்று அதி நம்பிக்கை வைத்திருந்தாள்.
தன் அழகு மீது ஏற்படும் பிரேமையால் மயக்கத்தால் தான் கேட்டவற்றையெல்லாம் வாங்கி குவிக்கும் கணவனை எதிர்பார்த்து ஏமாந்து போன விரக்தியில் மாநிறத்தில் பிறந்திருந்த ராஜ மீரா அவருக்கு அட்டக் கருப்பியாக தெரிந்தாள்.
மகளின் முதல் பிறந்த நாளை மிகவும் விமர்சையாகவே கொண்டாடினார் ராஜநாராயணன்.
அவரின் தொழில் வட்டார நண்பர்களும் வந்திருக்க..
“இவ்வளவு பெரிய பணக்காரங்களாம் மாமாவுக்கு பிரண்ட்ஸா?” என்று ஆச்சரியமடைந்தார் தேவகி. அவருமே அதற்கு தக்க மேக்கப் போட்டு வெகு நேர்த்தியாக அழகாக சென்றார்.
ராஜ நாராயணனோடு தொழில் தொடர்பாக பேசியவர்களின் மனைவிகள் தேவகியை சூழ்ந்து கொண்டு அவரின் அழகை.. குழந்தை பெற்றும் குறையாத வனப்பை பற்றி பேச பேச அவருக்கு தன் அழகின் கர்வம் அதிகமாகியது.
அதிலும் சிலர் தாங்கள் இருக்கும் கிளப்புக்கு ஆடிட்டரின் மனைவியும் உறுப்பினராக வந்தால் சந்தோஷப்படுவோம் என்று கூற விரும்பியே அந்த பணக்கார சூழலில் சிக்கினார் தேவகி.
அவர் விரும்பியதும் அதுதானே? இப்படி பகட்டாக உடை உடுத்தி.. நகை போட்டு.. அலட்டாமல் பெரிய காரில் வந்து இறங்கி.. என்று ஹைஃபை சொசைட்டியின் அங்கமாக இருப்பது. அதற்கான ஒரு வழி கிடைக்கும் போது ஏன் தவிர்க்க வேண்டும் என்று அதில் இணைந்தார்.
ப்ளஸ் டூ முடித்து வீட்டில் இருந்தபோது அலங்காரங்கள் மீதான பிரேமை அவரை அழகு நிபுண கலையை கற்றுக்கொள்ள செய்தது. அதன்படி அவர் தன்னை அலங்கரித்துக் கொள்ளும் விதம் மற்ற பெண்களை ஈர்க்க.. பின் அதை தொழிலாக செய்ய ஆரம்பித்தார்.
அதுவும் மாமியார் இருந்தவரை பரவாயில்லை. மாமியாரிடம் மகளை தள்ளிவிட்டு முக்கியமான விஐபி மனைவிகளுக்கு வீட்டுலேயே சென்று மேக்கப் போட.. கிளப் நண்பர்களோடு அரட்டை அடிக்க.. சமூக சேவை செய்கிறேன் என்று ஊர் சுற்ற என்று வீட்டில் இல்லாமல் சுற்றித் திரிந்தார்.
ராஜநாராயணன் இவரை கேள்வி கேட்டால் “நான் என் சுயத்தில் நிற்பது உங்களுக்கு புடிக்கலையா? உங்களால என் தேவைகள பூர்த்தி செய்ய முடியல.. என் சம்பாதியத்துல செஞ்சிக்கிறதும் புடிக்கலையா?” என்று கத்தி தீர்த்தார்.
ஒரு பக்கம் வயதான அம்மா.. மறுபக்கம் சிறு குழந்தையான மகள்.. இருவரும் இவர்களின் நித்தம் போடும் சண்டையை கண்டு பயம் கொள்ள.. எப்படியோ போய் தொலை என்று தண்ணீர் தெளித்து விட்டார் மனைவியை.
ஒரு வயது ஆகியதால் அம்மாவை ரொம்ப தேடாமல் பாட்டியுடன் இருக்க பழகிக் கொண்டாள் மீரா.
மாமியார் இறந்து விட, சிறிது காலம் கிளப் பக்கம் செல்லவில்லை தேவகி.
நிறைய பேர் ஃபோன் செய்து கேட்க, வேறு வழியின்றி ஒருமுறை மீராவை அழைத்துக் கொண்டு அவர் கிளப் செல்ல.. அங்கே உள்ளவர்களோ மீராவை பகடி பொருளாக்கினர்.
“என்ன தேவகி உன் அழகுல ஒரு பங்கு கூட உன் பொண்ணு இல்ல” என்று மகளை மட்டும் தட்டும் நண்பர்களை திட்டாமல்
“அப்படியே என் மாமியார உரிச்சிட்டு வந்து பொறந்திருக்கு” என்று அருவுருப்பாக கூறினார் தேவகி
அதிலும் அவருக்கு ஒரு அரசியல்வாதி மனைவியோடு தொடர்பு கிடைக்க.. அடிக்கடி அவருக்கு மேக்கப் போட, அவர் கணவனோடு கட்சி கூட்டம் என்று செல்லும் போதெல்லாம் இவரும் அவருக்கு டச் அப் செய்ய என்று கூடவே சுற்றினார்.
அதற்கு தடையாக இருக்கும் மகளை என்ன செய்வது என்று யோசித்தவர் “நீ வீட்ல சும்மா தானே இருக்க.. நான் நாலு இடத்துக்கு போயிட்டு வரேன். அதுவும் அட்ட கருப்பியா இருக்குற இவளை எல்லாம் தூக்கிட்டு போகவே முடியாது. நீயே இவள வளர்த்துக் கொடு” என்று வந்து அக்காவிடம் நின்றார்.
ராஜநாராயணன் இருப்பது சொந்த வீடு. சற்று பெரிய வசதியான வீடு.
நாத்தனார் இருந்தவரை சென்றது வேறு.. இப்பொழுது அவரும் இல்லாமல், மகளை மட்டும் எவ்வாறு அனுப்புவது? என்று முருகனும் வள்ளியம்மையும் தயங்கினர்.
தேசிகன் கூட “அக்கா.. அவ சுயநலத்துக்கு உன்னை பயன்படுத்திக்க நினைக்குற? நீ போகாத அக்கா..!” என்று கண்டித்து கூறினர்.
கூடப்பிறந்தவன் பெற்றவர்கள் அவற்றையெல்லாம் தாண்டி அந்த பிஞ்சு குழந்தையின் “ம்மா..” என்ற அன்பு வார்த்தை யசோதாவை கட்டிப்போட்டு தேவகிக்கு பின்னே செல்ல வைத்தது.
“அப்படியெல்லாம் உன்ன அனுப்ப மாட்டோம். ஏற்கனவே அவர் கூட உன்னை தப்பா பேசுறா.. இதுல நீயும் போனேன்னா இன்னும் பேசுவா” என்று வள்ளியம்மை எடுத்து சொல்ல..
“மா எனக்கு இன்னொரு கல்யாணம் புள்ள குட்டி எல்லாம் கிடையாது. இருக்கிற உன்னோட இந்த ஒரு பேத்திய நல்லா வளர்க்க வேணாமா? உனக்கு என்ன பத்தியும் தெரியும் மாமாவ பத்தியும் தெரியும். எங்கள விடு..! இந்த பச்ச குழந்தையை பத்தி நீ யோசிச்சியா? உன்னோட மூத்த பேத்தி இப்ப இருக்குற ஒரே ஒரு பேத்தி..!” என்றதும் வள்ளியம்மையும் பேத்தியை நினைத்து மகளை அனுப்ப சம்மதித்தவர்,
“அப்படின்னா தேசிகனும் உன்னோட வருவான்” என்று அவரையுமே அனுப்பி வைத்தார்.
சென்னை சென்றதும் யசோதா தனக்கென்று அருகில் இருக்கும் நர்சரி பள்ளியில் வேலை தேடிக் கொண்டவர், மகளையும் தன் கூடவே வைத்துக்கொண்டார். தேசிகனும் அங்கேயே வேலை பார்க்க ஆரம்பிக்க.. அப்போது தனியாக தொழில் தொடங்கி இருந்த ராஜநாராயணனும் அவர் வீட்டிலேயே அலுவலகம் தொடங்கி தொழிலை செய்தார்.
தேவகி எப்போது வருகிறார் போவார் என்று யாருக்குமே தெரியாமல் போகும்.
அந்த யசோதாவின் உலகம் ஆயர் குல கண்ணன் என்றால்..
இந்த யசோதாவின் உலகம் முழுக்க முழுக்க மீரா மீரா மட்டுமே..!
அதுவும் சொன்ன பேச்சை கேட்காது தன்னை முறைத்துக் கொண்டு நிற்கும் இரண்டு மகளை கண்டிக்கவே அவருக்கு மனம் வராது.
‘அப்படியே அந்த கண்ணன் தான் நீ. பேரு தான் உனக்கு மாற்றி வைத்துவிட்டார்கள்’ என்று மனதினில் கொஞ்சிக் கொள்வார்.
மீராவை மலையிறக்க.. இவர் பாவமாக பார்த்தால் போதும். உடனே அவர் கன்னத்தை பிடித்து ஆட்டி “சிலி யசோம்மா சிலி..” என்று அவள் கொஞ்சி பேசும் மழலை அழகில் அனைத்தும் மறந்து மகளை மட்டுமே மனதை நிறுத்திக் கொள்வார்.
அடிக்கடி அந்த அரசியல்வாதி மனைவியோடு வெளியே செல்வதும் வழக்கமானது தேவகிக்கு.
“ உள்ளூருல சுத்துறது பரவால்ல வெளியூர் எல்லாம் வேணாம் தேவகி” என்ற ராஜநாராயணன் தடுக்க..
“என்னங்க பண்ண சொல்றீங்க? நான் அவங்களுக்கு பர்சனல் டச் அப் உமனாக இருக்கேன். அப்படின்னா அவங்க போகும்போது நானும் போய் தானே ஆகணும். சும்மாவா மாதம் 25 ஆயிரம் கொடுக்குறாங்க..” என்று பணத்தின் பின்னால் செல்லும் மனைவியை வருத்தமாக பார்த்தார் நாராயணன்.
“அவசரப்பட்டுட்டோம்..! மாமா சொன்ன மாதிரி ரெண்டு பொண்ணுங்களையும் வெளியே கொடுத்து இருந்தா.. எனக்கு இவ்வளவு பிரச்சனை இருந்திக்காது. இல்லைன்னா.. நிலையா இருந்து யசோதாவை கட்டி இருக்கலாம்” என்று பெரு மூச்சு விட்டார்.
மீராவை கவனித்துக் கொள்ளும் விதம், தம்பி மற்றும் அம்மா அப்பாவோடு கொண்டிருக்கும் பாசம் என்று அத்தனையும் பிடித்தது யசோதாவிடம். ஆனால் காலம் சென்று என்ன பயன் என்று அமைதியாக விட்டு விட்டார்.
ஒரு நாள் தேசிகன் அலுவலகத்திற்கு “உங்க அப்பாவுக்கு ஆக்சிடெண்ட்” என்று வந்த ஃபோன் காலில் பயந்து ஊருக்கு சென்றார்.
“அய்த்தான் அப்பாவுக்கு ஆக்சிடென்ட் சொல்லி போன் வந்திருக்கு. நான் அவசரமா போறேன் நீங்க கொஞ்சம் யசோ கிட்ட சொல்லிடுங்க” என்று சென்று விட்டார்.
“நானும் கூட வரவா தேசிகன்?” என்றதற்கு “வேணா அய்த்தான் நானே பார்த்துக்கிறேன்” என்று சென்று விட்டார் தேசிகன்.
வீட்டிற்கு சென்று பார்க்க அன்று அதிசயமாக தேவகியும் வீட்டிலேயே இருந்தார்.
“நல்லதா போச்சு நீயும் இருக்கியா? மாமவுக்கு ஆக்சிடெண்ட்டாம் தேசிகனுக்கு போன் வந்தா அவசரமா போயிருக்கான்” என்றார் வருத்தமாக..
சமையலறையில் இருந்த யசோதா “ஐயோ மாமா.. எப்போ? என்னாச்சு? இப்போ எப்படி இருக்காங்க அப்பா?” என்று பதறிப் போனார். ஆனால் அவர் அளவெல்லாம் தேவகி பதறவில்லை.
“நாளைக்கு கோயம்புத்தூரில் மீட்டிங் நைட்டு ட்ரெயினுக்கு நான் கிளம்பனும். அதான் வீட்ல இருக்கேன். அந்த நேரம் கூட நிம்மதியா இருக்க முடியல பாரு..” என்று யசோதாவின் அழகையை கண்டு கத்தியவர், “போய் உன் ரூமுக்குள்ள ஒப்பாரி வை. அவர் முன்னாடி சீன் போடாத” என்று திட்டினார்.
யசோதாவும் ராஜநாராயணன் முன் அவ்வளவாக வரமாட்டார். காலை மதியம் என்று சமைத்து வைத்துவிட்டு அவர் பள்ளிக்கு சென்றுவிடுவார். வீட்டிற்கு ஒரு வேலையாளையும் வைத்துவிட்டார் நாராயணன்ஹ அவர் வந்து மற்ற வேலைகளை செய்வார்.
மாலை போல வரும் யசோதா மகளுடன் நேரம் கழிப்பார். இரவு உணவையும் செய்து வைத்து விட்டு தன் அறைக்குள் அடைந்து கொள்வார் மகளுடன். இரவு உணவு நாராயணனும் தேசிகனும் இணைந்து உண்ணுவர்.
இப்படி இவர்கள் கூட்டுக்குள் தான் நுழையவே கூடாது என்று தான் தள்ளி இருந்தாலும், வார்த்தைகளை தீயாய் கொட்டும் தங்கையை வெறுப்புடன் பார்த்தவர், வீட்டிற்கு டெலிஃபோன் செய்தார் ஆனால் வீட்டிலோ யாரும் எடுக்கவே இல்லை…
9:00 மணி போல டான் என்று வந்து நின்ற டாக்ஸியில், இரவு உணவை முடித்த தேவகியும் கிளம்பி சென்றுவிட, உறங்கும் மகளை மடியில் போட்டுக் கொண்டு ‘அப்பாவுக்கு என்ன ஆனது தேசிகன் போய் ஒரு போன் கூட பண்ணலையே?’ என்று தவிப்புடனே அமர்ந்திருந்தார் யசோதா.
அப்போது கதவு தட்டப்பட்டது.
மகள் மடியில் இருக்க “கதவு திறந்து தான் மாமா இருக்கு. வாங்க” என்றார் யசோதா, நாராயணனாகத்தான் இருக்கும் என்று யோசித்து.
“சாப்பிட வா யசோ.. கண்டிப்பா மாமாவுக்கு ஒன்னும் இருக்காது. நானும் அங்க பிரசிடெண்ட் வீட்டுக்கு போன் செஞ்சு போய் பார்க்க சொல்லி இருக்கேன். எப்படியும் தகவல் வரும். நீ சாப்பிடாமல் இருந்தால் சரி ஆயிடுமா?” என்று அவரை சாப்பிட வைத்தார். கூடவே அவரும் சாப்பிட்டார்.
இரவு 11:00 மணி போல நாராயணன் அறை கதவைத் தட்டினார் யசோதா.
“மீராவுக்கு ரொம்ப ஜுரம் அடிக்குது மாமா.. வாந்தி வேற மூணு தடவ எடுத்திட்டா.. என்னன்னு தெரியல” என்று பதட்டத்தோடு கூறினார் யசோதா.
இங்கே வந்து நான்கைந்து மாதம் சென்று இருக்கும். இது போல எல்லாம் மீராவுக்கு எந்த தொந்தரவும் வந்ததில்லை. இன்று பதறி கதவைத் தட்டினார்.
இந்நேரம் எங்கிருந்து மருத்துவரை பார்க்க முடியும்? என்று இருவரும் அவருக்கு தெரிந்த கை வைத்தியமான காட்டன் துணியில் தண்ணீர் நனைத்து பத்து போட்டு ஏற்கனவே டாக்டர் கொடுத்து இருந்து சிரப்பை புகட்டி என்று மகளுக்கு மருத்துவம் பார்த்து தூங்காமல் இருவரும் விழித்திருந்தனர்.
தூக்கத்திலேயே அரற்றிய மீரா ம்மா.. ம்மா.. என்று அழைக்க அவள் அருகில் சென்று அமர்ந்துக் கொண்டார் யசோதா. அதன்பின் அப்பாவை பார்த்து பார்த்து தூக்கு என்று அவரையும் இம்சை செய்தாள் மீரா.
இருவரும் அவளை மாறி மாறி பார்த்துக் கொண்டு அதே கட்டிலில் மூவரும் படுத்து உறங்கிவிட.. விடியக் காலை நேரத்தில் கதவை வேகமாக யாரோ தட்டுவது போல் இருக்க.. யசோதா சென்று கதவைத் திறந்தார். மொத்த குடும்பமும் அங்கேதான் இருந்தது.
“நான் சொன்னேப்ப நீங்க எல்லாம் நம்பல இல்ல.. இப்ப பார்த்தீங்க இல்ல” என்று அங்கே பத்திரகாளி ஆக நின்றிருந்தார் தேவகி.
அதன் பின் ராஜநாராயணன் யசோதாவும் எவ்வளவோ குழந்தைக்கு உடம்பு சரி இல்லை என்று எடுத்துக் கூறியும், தேவகி நம்பவே இல்லை.
“உன்ன புள்ள வளர்க்க கூட்டிட்டு வந்தா.. நீ என் புருஷனுக்கு இன்னொரு புள்ள பெக்க ரெடியாயிட்ட இல்ல” என்று வார்த்தைகளால் விஷத்தை கொட்டினார்.
வள்ளியம்மை மூத்த மகளை திட்டினார். “இதுக்கு தான் அப்பவே உன்னை அனுப்ப மாட்டேன்னு சொன்னேன். இப்ப பார்த்ததில்ல..”
“அம்மா நீயும் என்னை நம்பலையா?* என்று யசோதா அழுக..
“நம்புறது நம்பாம போறதும் இங்க விஷயம் இல்ல யசோதா.. இப்ப பாரு பேரு போச்சு இல்ல” என்று அவரும் மகளிடம் கோபமாக கத்தினார்.
அவர்கள் குடும்பம் மட்டுமல்ல அக்கம் பக்கத்திலும் தேவகியின் சத்தத்தில் எட்டிப் பார்க்க “ஆடிட்டர் கொழுந்தியாளை மனைவி ஊருக்கு சென்றதும் மனைவியாக்கி கொண்டார்” என்ற பேச்சுப் பரவியது காட்டுத் தீயாய்..
“இனிமே இந்த ஆளோட நான் குடும்பம் நடத்துறதா இல்லை.. பணம் இல்லை என்றால் கூட நான் இவர் கூட படுப்பேன். ஆனா ஏற்கனவே வேறொருத்தியோட படுத்துவரோட என்னால படுக்க முடியாது” என்று பச்சையாக பேசிய தேவகி அப்பொழுதே வேற வீட்டிற்கு சென்றார்.
கூடவே குழந்தை மீராவையும் தூக்கிக் கொண்டு.
இதற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் தீனதயாளனும் சங்கீதாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருந்தனர்.
“விடுங்க சம்பந்தி உங்க மூத்த தாரம் தவறான புரிதல்னால உங்களை விட்டு பிரிஞ்சு போயிட்டாங்க… கொஞ்சம் அமைதியா எடுத்து சொல்லி இருந்தீங்கன்னு இப்படி நடந்திருக்காது. ஆனாலும் என்ன பண்றது.. எல்லாம் விதி..!” என்று தீனதயாளன் அவருக்கு ஆறுதல் கூறுவதை போல பேச..
இல்லை என்று தலையாட்டி மறுத்த ராஜநாராயணன் “இதெல்லாம் விதி இல்ல அவ செய்த சதி..!” என்றார்.
“அவ அன்னைக்கு ஒன்பது மணிக்கு போனது கோயம்புத்தூர் இல்ல.. அவங்க அப்பா அம்மாவை கூப்பிட, அதே மாதிரி தேசிகனுக்கு போன் வந்ததும் இவள் ஏற்பாடு செய்த ஆள் மூலமா தான். எங்க ரெண்டு பேரையும் தப்பா காமிக்கிறதுக்கு ஆதரத்தோடு அவங்களை எல்லாம் கையோடு அழைச்சிட்டு வந்து இருக்கா.. அன்னைக்கு மீராவுக்கும் ஏதோ கொடுத்திருக்கா போல.. அதனாலதான் ஃபுட்பாய்ஸன் ஆகி, அவளுக்கு வாந்தி காய்ச்சல் எல்லாம்” என்றார் விரக்தியாக..
“உங்க ரெண்டு பேரையும் தப்பா காமிக்கிறதுனால அவங்களுக்கு என்ன லாபம்? இல்லை எனக்கு புரியல?” என்று சங்கீதா கேட்க..
“ஏன்னா என்ன தப்பா காமிச்சா தானே அவ பண்ற தப்பு வெளியில தெரியாது? புருஷன் அப்படி போனதுனால அவங்க பிரிஞ்சு போயிட்டாங்கன்னு அவளை எல்லாரும் உத்தமியா சொல்லுவாங்க..” என்றதும் இப்பொழுதும் தீனதயாளன் தம்பதிக்கும் அவர் என்ன சொல் வருகிறார் என்று புரியவில்லை.
“அவ அந்த அரசியல்வாதியோட கீப். மேக்கப் போட்டது அவர் பொண்டாட்டிக்கும் அல்ல அவருக்கும் சேர்த்து தான் போல.. இப்போ அந்த அரசியல்வாதியோட இரண்டாம் தாரம்னு உரிமையா ஊர் சுத்திட்டு வரா..” என்ற
தும் இரண்டு பேரும் திடுக்கிட்டனர்.
“மீராவை அவளோடு அனுப்புனது தான் நாங்க செய்த பெரும் தவறு” என்று கண்ணை துடைத்துக் கொண்டார் நாராயணன்.
தொடரும்..
