அத்தியாயம் 23
“மாப்பிள்ள.. என் பொண்ணு ரொம்ப கஷ்டப்பட்டுட்டா மாப்பிள்ள.. இனியாவது அவள நீங்க சந்தோஷமாக பாத்துக்கணும். உங்களுக்கு அவள கல்யாணம் பண்ணி வைக்க சம்மதிச்சதே உங்க குடும்பத்தை பத்தி எனக்கு நல்லா தெரிஞ்சதுனால தான். சம்பந்தி தீனதயாளன வருஷ கணக்கா எனக்கு தெரியும். அவரோட பிள்ளைங்க எப்படி இருப்பாங்கன்னு நான் யோசிக்க கூட இல்லை.. அவர் கேட்ட உடனே சமூகம் அந்தஸ்து பேதம் அது எதுவுமே நான் பார்க்காமல் சந்தோஷமா சரி சொன்னேன். அதை நீங்க காப்பாத்துவீங்கன்னு நான் நம்புறேன்” என்றார் அவன் கைகளை பிடித்து.
‘என்னடா இந்த மனுஷன் இவ்வளவு பீடிகை போடுறாரு? அப்படி என்ன விஷயமா இருக்கும்?’ என்று அவரை ஆச்சரியமாக பார்த்தான் க்ருஷ்.
தேவகி தன் முதல் மனைவி.. அவர் தான் மீராவின் தாய் என்று ராஜநாராயணன் ஆரம்பிக்கும் போது,
‘இத தான் அந்த அம்மா இவ்வளவு நேரம் கூவி கூவி சொல்லிக்கிட்டு இருந்துச்சே.. இதை ஏன் இவர் மறுபடியும் ஆரம்பிக்கிறாரு..?’ என்று இவன் யோசனையோடு பார்த்தான் அவரை.
“உங்களுக்கு தோணலாம் ஏன் எல்லாத்தையும் மறுபடியும் ஆரம்பிக்கிறேனு.. உங்களுக்கு தேவகிய பத்தி ஃபுல்லா புரிஞ்சாதான் மீரா பட்ட கஷ்டத்தையும்.. அவங்களால இவ பட்ட ரணத்தையும் புரிஞ்சுக்க முடியும்” என்றார் பெரு மூச்சோடு.
“எக்காலத்தாலும் நான் சொல்லப் போற விஷயம் உங்களுக்கு தெரிஞ்சியிருக்குனு நீங்க மீரா கிட்ட காட்டிக்க வேண்டாம்” என்றவர், அவனின் ஒப்புதலுக்காக அவனையே பார்த்திருந்தார்.
“சரிங்க மாமா..” என்று ஒப்புதல் கொடுத்தான் கிருஷ், அவர் கையை பற்றி..!
“ம்ம்..” என்றவர் தேவகி திட்டம் தீட்டி அவரை கல்யாணம் செய்து கொண்டது முதல் பிரிந்து போனது வரை சொன்னார்.
“அவங்க உங்கள தப்பா புரிஞ்சிக்கிட்டு அவன் ஆரம்பிக்கும் முன்.. “இல்லை.. ஏற்கனவே அவளுக்கு அந்த அரசியல்வாதியோடு தொடர்பு இருந்திருக்கு” என்றவர் அதையும் அவமானத்தோடு தான் கிருஷிடம் பகிர்ந்தார்.
யாருக்கு தான் அவமானமாக இருக்காது? தன் மனைவி தனக்கு துரோகம் இழைத்து வேற ஒருவனோடு தொடர்பில் இருந்ததை கூற.. ராஜநாராயணனும் அவமானமாகத்தான் உணர்ந்தார்.
அது மட்டுமல்ல எங்கே ‘தாயைப் போல பிள்ளை.. நூலை போல சேலை’ என்று மீராவையும் அவள் தாய் மாதிரி குணம் கொண்டவள் என்று யாரேனும் முத்திரை குத்துவிடுவார்களோ என்று ஏக பயம் அவருக்கு உண்டு, மீராவின் கல்யாணத்தைப் பற்றி பேச ஆரம்பித்திலிருந்து..!
அதையும் அவரது குன்றல் முகத்தில் இருந்து புரிந்து கொண்டான் கிருஷ்.
“நான் மீராவ ராஜநாராயணன் யசோதா பொண்ணா தான் பாக்குறேன் அங்கிள்..” என்று அவன் தெளிவாக புன்னகை முகமாக கூற, அவருக்கு அப்பாடி என்று நிம்மதியாக இருந்தது.
“ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் மாப்பிள்ளை.. என் தேர்வு சோடை போகல” என்று கலங்கி விழிகளோடு அவன் கைகளை இறுக்க பிடித்துக் கொண்டார்.
“மீராவுக்கு அப்ப 10 வயசு இருக்கும் வெறும் விடாத காய்ச்சாலல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கானு போய் பார்த்தோம். ஆனா ஒரு வாரம் ஆகியும் அவளுக்கு அந்த காய்ச்சல் குறையவே இல்லை. என்னென்ன மருந்து கொடுத்தும் வைத்தியம் பார்த்தும் குறையவே இல்ல. ராதாவை தேசிகன் கிட்ட விட்டுட்டு நானும் யசோதாவும் ஹாஸ்பிடலே கதியாக கடந்தோம் அந்த ஒரு வாரமா..
மீராவுக்கு ட்ரீட்மென்ட் பண்ண டாக்டர் கிட்ட நான் சண்டை போட்டேன். உங்களால் முடியலைன்னா என் பொண்ண டிஸ்ஜார்ஜ் பண்ணுங்க.. நான் இதை விட பெட்ரான ஹாஸ்பிடல்ல அவளுக்கு ட்ரீட்மென்ட் பாத்துக்குறேன்னு.. அந்த டாக்டர் சொன்னாரு.. ‘உங்க பொண்ணுக்கு பிசிக்கலா எந்த பிராப்ளம் இல்ல சார். ஆனா மென்டலா தான் ஏதோ டிஸ்டர்ப் ஆகி இருக்காங்க.. பயந்துருக்காங்க.. அதனால தான் இன்னும் ஜுரம் விட மாட்டேங்குது. பெட்டர் அவங்களுக்கு கவுன்சிலிங் கொடுக்கலாம்’ என்று சொன்னார்.
கவுன்சிலிங் என்றதும் நாங்க ரொம்ப பயந்தோம்..
“இதுல பயப்பட ஒன்றும் இல்லை சார்.. உங்க பொண்ணு மனசுல ஏதோ பெரிய விஷயம் பாதிச்சிருக்கு அதை இப்பவே கரெக்ட் பண்ணிட்டா சரிப்படுத்திடலாம். இல்லனா பெரிய பிள்ளையா வளரும் போது இன்னும் கஷ்டம்” என்று எடுத்துரைத்தார்.
“நாங்களும் அவள பீடியாட்ரிக் கவுன்சிலர் கிட்ட கூட்டிட்டு போனோம். ஆனா இது எதுக்கும் தேவகி வரல..”
“நாங்க வந்ததுக்கு அப்புறம் தேவகி ஹாஸ்பிடல் பக்கமே வரல.. அதான் அப்பா நீங்க இருக்கீங்களே நீங்களே பார்த்துக்கங்கன்னு சொல்லிட்டா..
எனக்கு முக்கியமான கட்சி மீட்டிங் இருக்குன்னு அந்த அரசியல்வாதியோட சுத்த போய்ட்டா..” என்றார் வேதனையாக.
“கவுன்சிலிங்ல ஒரே டயத்துல சக்சஸ் எங்களுக்கு கிடைக்கல.. கிட்டத்தட்ட ஒரு மாசமா ரெண்டு நாள் விட்டு ரெண்டு நாள் விட்டு போனோம். அவரும் மீரா கிட்ட அவ்வளவு தண்மையா பேசுவாரு..
அதுக்கப்புறம் ஒரு மாசம் முடிவுல தான் மீரா வாயைத் திறந்து அவ மனசுல உள்ளத எல்லாம் சொன்னா.. அது கேட்டதும்..” என்றவர் தான் அணிந்திருந்த தங்க பிரேமிட்ட கண்ணாடியை கழட்டி கண்களை துடைத்துக் கொண்டார்.
“மாமா இவ்ளோ கஷ்டப்பட்டு எல்லாம் நீங்க இது என்கிட்ட சொல்லணும்னு அவசியம் இல்லை.. எனக்கு அது தெரியாமலே போறதுனால எந்த பிரச்சனையும் இல்லை.. நீங்கள் ரிலாக்ஸ் ஆகுங்க..!” என்று அவர் தோளை நீவி விட்டான் கிருஷ்.
“இல்ல இல்ல மாப்பிள.. நீங்க இத தெரிஞ்சுக்கணும். முதல்ல நீங்க என் மருமகன் அதாவது மகன் மாதிரி. அடுத்து மீராவோட சரிபாதியாக போரவர். அவ என்ன மனநிலையில இருக்கான்னு நீங்க தெரிஞ்சுக்கணும். அவளோட நல்லபடியாக குடும்பம் நடத்த இது உங்களுக்கு கண்டிப்பா உதவி செய்யும்” என்றதும் ஆமோதித்தவன் “சரி சொல்லுங்க!” என்றான்.
“மீராவுக்கு ரொம்ப விவரம் தெரியறதுக்கு முன்னாடியே தேவகி என்கிட்ட இருந்து பிரிச்சி கூட்டிட்டு போயிட்டா.. ஆனாலும் கோர்ட் மூலமாக வாரத்துல ரெண்டு நாள் நான் இங்கு கூட்டிட்டு வந்துருவேன். மீரா அவளுக்கு நான் அப்பா யசோ அம்மானு எல்லாரையும் தெரியும். ஆனா அந்த வீட்ல அம்மா இருக்கா அவ கூட இருக்கிற அந்த ஆள் யாரு? அப்படின்னு கேள்வி கேட்க ஆரம்பிச்சா? நாங்க அவகிட்ட என்ன சொல்லி புரிய வைக்கிறதுன்னு மழுப்பிட்டோம்”
“ஆனா அதே அவ மனசுல ஏதோ நெருடலா இருந்திருக்கு. சம்பந்தமே இல்லாம இருக்கிற இந்த ஆளு யாரு? எதுக்கு நம்ம வீட்டுக்கு வராரு? எதற்கு அம்மா கூட என் கூட ஒரே ரூம்ல இருக்காரு? அப்படின்னு அவ சின்ன மனசு போல ஆயிரம் கேள்விகள்..! ஆனா அந்த கேள்விகளுக்கு பதில் அளிக்க தான் எங்களால முடியல..”
“வளர வளர அவளுக்கு சுற்றி உள்ளவங்க பேச்சாலையும் எங்களோட அணுகுமுறையாலையும் பல விஷயங்கள் புரிந்ததும் அவளால் அதை ஏற்றுக்கொள்ள முடியல..!”
“எனக்கு மட்டும் ஏன் இப்படிப்பட்ட அம்மா? எல்லாருக்கும் ஒரு அம்மா ஒரு அப்பா இருக்காங்க தானே? எனக்கு மட்டும் ஏன் இல்லை அது போல? நீங்க ஏன் என்னை அவங்க கிட்ட கொடுத்தீங்க? அப்படின்னு ஏகப்பட்ட கேள்விகள்.. ஆதங்கம் சண்டை கோவம் எல்லாம் வரும் அவளுக்கு அந்த சின்ன வயசுலயே..” என்றார் வேதனையாக..!
க்ருஷ் தன்னை பற்றி யோசித்தான். அதே வயதில் நாம் எவ்வளவு பாதுகாப்பாக அம்மா அப்பா அன்பில் அரவணைப்பில் கண்டிப்பாக இருந்தோம் என்று யோசித்தவன் வாழ்க்கை எல்லோருக்கும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை என்று புரிய.. மீராவை அந்த கணத்திலிருந்து நன்றாக உள்வாங்கிக் கொண்டான்.
“அது மட்டும் அல்ல அப்பறம் கொஞ்ச நாள் அவ அங்க இருக்கும்போது அந்த அரசியல்வாதியோட துடுப்பு பச்ச பிள்ளைனு பார்க்காம தப்பா நடந்துருக்கான். அதாவது தொட கூடாத இடங்களுல அவள தொடறது.. கிள்ளுறது.. தடவுறதுனு..! என்னை மாமானு கூப்பிடுனு சொல்றது.. சில சமயம் ஸ்கூல் கொண்டு போய் விடும்போது அவனுடைய உடம்பெல்லாம் தொட சொல்றது.. இந்த மாதிரி நிறைய வேலைகள் பண்ணி இருக்கான்.
“அது எல்லாம் வெளியே சொல்ல முடியாமல் தவிச்சிருக்கா என் பொண்ணு. அதையும் மீறி ஒரு நாள் தைரியத்தை வரவழைத்து அம்மா கிட்ட சொல்லிடுவோம்னு தேவகி கிட்ட சொல்லி இருக்கா..
அதுக்கு அவ சொன்ன பதில் என்ன தெரியுமா?” என்று கிருஷை பார்த்து கேட்டார் ராஜநாராயணன்.
ஏதோ விபரீதமாக வரப்போகிறது என்று புரிந்தது அவனுக்கு. அதுவும் இல்லாமல் சின்ன பெண்ணிடம் இப்படி முறைக்கெட்டு நடந்த அந்த பயல் மட்டும் எப்பொழுது அவன் கையில் கிடைத்தால் அடித்து நொறுக்கி அவன் கையை உடைத்து விடும் வேகம் வெறி கிருஷிடம்.
“சொல்லுங்க அங்கிள்..?” என்றான் உலர்ந்த குரலில்..
விரக்தியாக சிரித்தவர், “உன் மூஞ்சிய கண்ணாடியில பார்த்து இருக்கியா நீ?” என்று கைகொட்டி சிரித்த தேவகி அவளை இழுத்துக் கொண்டு வந்து அவர்கள் அருகில் இருந்த முழு நீள கண்ணாடி முன் நிற்க வைத்து,
“எலும்பும் தோலுமா ஒரு உருவம்.. கன்னங் கரேல்னு நிறம்.. கருப்பா இருந்தாலும் கலையாவது இருக்கியா அதுவும் கிடையாது.. அள்ளி எடுக்க என்னை கிள்ளி எடுக்க கூட உனக்கு சதை கிடையாது உடம்பில்.. இந்த லட்சணத்துல நீ இருக்க அவன் உன்னை தடவினான் கிள்ளுனானு சொல்றியா?
இதுல நீ அவன பத்தி குறை சொல்றியா? உன் எலும்ப தடவுனாலும் என்ன பெருசா சுகம் கிடைச்சிட போகுது அவனுக்கு? போ .. போய்.. ஸ்கூலுக்கு டொக்கு போடாமல் ஒழுங்கா படிக்கிற வேலைய பாரு” என்று அவமானப்படுத்தி அனுப்பி வைத்து விட்டாள்.
“என்ன??” என்று அதிர்ந்து எழுந்து விட்டான் கிருஷ்..
“என்ன.. என்ன அங்கிள் சொல்றீங்க? இப்படி அப்பட்டமாகவா ஒரு அம்மாவா.. ச்சீ.. அந்த பொம்பளைய அம்மானு சொல்லவே என் வாய் கூசுது. எப்படி ஒரு பொம்பளையால பேச முடியும்? அதுவும் தான் பெத்து பொண்ணு கிட்டவே?” என்று அவனுக்கு ஆறவே இல்லை மனது.
மீண்டும் கலங்கி இருந்த கண்ணீரை துடைத்துக் கொண்ட ராஜநாராயணன் “ஒரு சின்ன பொண்ணு மனசுல இந்த வார்த்தைகள் ஆழமா பதிஞ்சிருக்கனா.. அந்த ராட்சசி எப்படி அதை சொல்லியிருப்பா? எத்தனை தடவை சொல்லி இருப்பா? அது மட்டும் இல்லை அந்த வார்த்தைகளுக்கான அர்த்தம் கூட தெரியாத பச்சை மண்ணு அப்போ என் பொண்ணு” அவர் என்று குலுங்கி கண்களை மூடி அழுதார் ராஜநாராயணன்.
இவர்கள் இருவரையும் தனியாக ஒரு அறையில் விட்டு விட்டு மற்றவர்கள் எல்லாம் வெளியில் இருந்ததனால் இங்கு நடப்பது தெரியவில்லை. அருகில் இருந்து வாட்டர் பாட்டில் இருந்து அவருக்கு தண்ணீர் எடுத்து நீட்டினான் கிருஷ்.
“அந்த வயசுல அவளுக்கு என்ன தெரியும் சொல்லுங்க மாப்பிள்ளை? சின்ன பொண்ணு.. பச்ச மண்ணு.. அது கிட்ட போய்…” என்று மீண்டும் குலுங்கியவரின் கையை பிடித்து அழுத்தியவன்,
“வேண்டாம் அங்கிள். அதை பத்தி பேசாதீங்க.. எனக்கு கேக்க கஷ்டமா இருக்கு” என்று தடுத்தான் உண்மையில் அந்த வார்த்தைகள் அவனை கூறு போட்டு தின்றது என்னவோ உண்மை.
பெற்ற அம்மா ஒரு தன் பெண்ணிடம் பேசும் வார்த்தைகள அவைகள்? என்று அவனுக்கு அத்தனை கோபம் வந்தது தேவகியின் மீது.
அதே சமயம் பெற்றவள் இல்லை என்றாலும் யசோதா மீராவின் மீது காட்டும் அன்பை கண்டு வியந்து போனான். அவன் அம்மா சங்கீதா மட்டும் சும்மாவா என்ன? தன் கொழுந்தனார் மகனை தன் மகனாகவே சுவகரீத்துக் கொண்டு ராகுல் கண்ணா மீது அத்தனை பாசம் காட்டுவாரே..!
இப்படி அன்பும் பாசமும் கொண்ட பெண்கள் வாழும் இதே நாட்டில் தான் இப்படி அரக்க குணம் படைத்த அரக்கிகளும் வாழுகின்றனர் போலும் என்று நினைத்தவனுக்கு தேவகியை கண்டாலே குமட்டி கொண்டு வந்தது.
“அதை அந்த கவுன்சிலிங் பண்ண டாக்டர் ரெக்கார்ட் பண்ணி எங்களுக்கு போட்டு விட்டார்.. நெஞ்சில் அடிச்சு வாய் விட்டு கதறி யசோதா அழுத அழுகையை இந்த ஜென்மத்துல என்னால மறக்க முடியாது”
“அதுக்கப்புறம் கோர்ட்க்கு போனோம் என்னென்னமோ ஆச்சு பாடுபட்டு நாங்க மீராவை எங்களோட கொண்டு வந்தோம்”
“அது மட்டுமல்ல அவ ஏழாவது படிக்கும் போது பெரிய மனுஷி ஆகிட்டா. அந்த சமயம் வயசுக்கு வந்த பொண்ணு கண்டவங்கள் வீட்டில் எல்லாம் விட்டு வச்சிருக்க முடியாதுனு மறுபடியும் மீராவோட கஸ்டடியை தேவகி தன் அரசியல் பலத்தை வைச்சு வாங்கிவிட்டா.. அந்த சமயத்துல நாங்களும் அவளை விட்டுட்டோம்னு எங்க மேல அவ்வளவு கோபம் மீராவுக்கு”
“ஆனா ஏற்கனவே கவுன்சிலிங் போன ரெக்கார்டு இதெல்லாம் நாங்க காமிச்சு மீராவிற்காக எந்த ஒரு சின்ன துன்புறுத்தல் நடந்தாலும் அவங்க சும்மா விடமாட்டோம்னு கோர்ட்டு மூலியமாவே பேசி அனுப்பினேன”
“யசோதாவுக்கு மனசே வரல என் பொண்ணு இல்லாம நீங்க வீட்டுக்குள்ளே வராதீங்கன்னு சொல்லிட்டு என்கிட்ட அவ்வளவு சண்டை..! தேசிகன் கூட நீங்க இவள விட்டு இருக்க கூடாதுன்னு அடிக்கடி சொல்லிக்கொண்டே இருப்பான்..! அந்த டயத்துல தேவகியோட பணபலம் மட்டுமல்ல அரசியல் பலமும் ரொம்ப தீவிரமா ஆடுச்சு.. அதனால எனக்கு வேற வழி இல்லாம என் மகளை விட்டுக் கொடுத்துட்டேன்” என்று அரற்றினார்
“திடீர்னு அந்த பொம்பளைக்கு மீரா மேல அக்கறை வர அப்படி என்ன காரணம்? ஏன் அவ கஸ்டடியை வாங்கிட்டு போகணும்..?” என்று தான் சந்தேகத்தை கேட்டான் கிருஷ்.
“அது தேர்தல் சமயம். அந்த அரசியல்வாதி எம்எல்ஏவுக்கு நிக்கும் போது தேவகியும் அந்த ஆள் கூட பிரச்சாரத்துக்கு போவா.. அப்போ ஒரு பிரச்சனை வந்துச்சு.. ‘இந்த அம்மா புருஷன் பொண்டாட்டி பிள்ளை எல்லாம் விட்டுட்டு இந்த இவன் கூட சேர்ந்து இருக்குன்னு சொல்லிட்டு’ தேவகி அதெல்லாம் கேட்டு பொறுக்க முடியல. அவளை எப்படி தப்பா சொல்லலாம்னு அப்படிங்கிற ஒரு ஆங்காரம்?
“அது அப்படி இல்ல.. சொந்த அக்காவே எனக்கு துரோகம் பண்ணதுனால நான் பிரிஞ்சு வந்துட்டேன்.. அப்படின்னு காமிக்கிறதுக்கு அவளுக்கு பொண்ணு தேவைப்பட்டா.. அதனால அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி என்னை மிரட்டி குடும்பத்தை ஒன்னுமில்லாம பண்ணிடுவேன் மிரட்டி, ராதா படிக்குற ஸ்கூல் கூட அவள கடத்த ஆளெல்லாம் வைச்சிருந்தா.. இப்படியெல்லாம் மிரட்டி தான் மீராவை அவங்க கூட்டிட்டு போனாங்க..” என்று கூறி குறுகி போனார்.
“என்ன இருந்தாலும் நான் என் பொண்ண விட்டுயிருக்க கூடாது இல்ல மாப்பிள..” என்று அவர் கேட்டதும், அவர் கையை கெட்டியாக பிடித்தவன் “அந்த நிலைமையில் வேறு நீங்க என்னதான் பண்ணி இருக்க முடியும் அங்கிள். கடந்து போனது நினைச்சு கவலைப்படாதீங்க அங்கிள்” என்று அவரை தேற்றினான்.
“அந்த ஜெயில்ல மாட்டிட்டு அவ அவ்வளவு கஷ்டப்பட்டா. எலக்சன் முடிஞ்சதும் அவங்க பக்கம் ஜெயிக்கல, நான் மறுபடியும் கோர்ட் மூலமா அந்த கவுன்சிலர் வச்சு இவளோட ரிப்போர்ட் எல்லாம் காட்டி
“மீரா அங்கு இருந்தால் திரும்பவும் அவங்க அந்த நிலைமை வரதுக்கு சான்ஸ் இருக்குன்னு” சொல்லி மீராவை நான் கூட்டிட்டு வரும்போது பிளஸ் டூ எக்ஸாம் முடிச்சிருந்தா.. ஆனா என் பொண்ணு அரை உயிரா தான் என்கிட்ட வந்தா.. மனச அளவுல உடைஞ்சு போயிருந்தா” என்று வருத்தப்பட்டார்.
“நல்லா படிக்கிற பொண்ணு. மெடிக்கல் போக வேண்டிய பொண்ணு. ஆனா அவன் எதிர்பார்த்த மார்க் கிடைக்கல.. நான் பணம் கட்டி படிக்க வைக்கிறேன்னு சொன்னதுக்கு வேணாம்னு மறுத்துட்டு அவ மார்க்குக்கு என்னவோ அதை தான் படிச்சா.. அங்கேயும் ஏதோ பிரச்சனை வந்து ரெண்டாவது வருஷத்தோட நின்னுட்டா.. அதுக்கப்புறம் காலேஜ் போக மாட்டேனு சொல்லிட்டு இந்த ஆர்கனைஸர் வேலையை அது எனக்கு பிடிக்காதுன்னு தெரிஞ்சும் வீம்புக்காக செஞ்சுகிட்டு சுத்துறா” என்றார்.
“காலேஜ்ல பிரச்சனைன்னு சொன்னிங்களே அங்கிள் எதுவும் லவ் மேட்டரா?” என்று கேட்டான் உள்ளுக்குள் சிறு சந்தேகத்தோடு.
விரக்தியாக அவனை பார்த்து சிரித்தவர் “அவங்க அம்மா காதல் தான்.. என்னை கல்யாணம் பண்ணிட்டு அவளோட இத்தனை கஷ்டங்களுக்கும் காரணம்னு அவ ஆணித்தரமாக நம்புறா.. அதனால அவளுக்கு அந்த காதலே பிடிக்காமல் போச்சு.. அவளாவது யாரையாவது காதலிக்கிறதாவது நெவர் எவர்.. அப்படியே யாராவது ப்ரோபஸ் பண்ணானாலும் அவங்கள வச்சு செஞ்சுடுவா.. ஏன் என் சின்ன பொண்ணு ராதாவுக்கு எத்தனையோ பேரு ப்ரொபோஸ் பண்ணுனாங்க அதை எல்லாம் கலைத்து விடுறதே இவ தான்..” என்று சிரித்தவர் “கிட்டத்தட்ட அவளுக்கு அண்ணன் மாதிரி தான் பொறுப்பா பார்த்துப்பா தங்கச்சிய” என்றார்.
“ஆமா ஆமா ரொம்ப தான் பொறுப்பு..! அந்த பொறுப்பாளராலா என் லைஃப் எப்படி ஆச்சுன்னு எனக்கு தானே தெரியும்..!” என்று தனக்குள் முணுமுணுத்துக் கொண்டான் கிருஷ்.
“மாப்ள என் பொண்ணு ரொம்ப ரொம்ப பாசக்காரி.. கொஞ்சம் ரோசக்காரி.. கொஞ்சம் கோபக்காரி..! ஆனா பழகிட்டா அன்பு வைச்சிட்டா அவங்களுக்காக எதையும் செய்வா..
உங்க வாழ்க்கை முதல்ல கொஞ்சம் சடுகுடு போல கரடு முரடாக இருந்தாலும் போகப்போக கண்டிப்பா நல்லா இருக்கும்.. எனக்காக கொஞ்சமே கொஞ்சம் என் பொண்ண அட்ஜஸ்ட் பண்ணி போங்க மாப்பிள.. கேக்குறது தப்புதான்.. ஆனாலும் என் பொண்ணு ரொம்ப நல்ல பொண்ணு மாப்பிள்ளை.. விதி மட்டுமல்ல சிலர் சதியாலும் தான் அவளோட நடவடிக்கை எல்லாம் இப்படி மாறிடுச்சு..!” என்று கையை பிடித்து கெஞ்சலாக கேட்டவரின் கையை தட்டிக் கொடுத்தவன்,
“இனி மீரா ஓட கவலை உங்களுக்கு இல்ல மாமா.. நான் பாத்துக்கிறேன். அவளை எப்படி நார்மல் லைப் கொண்டு வரணும்னு எனக்கு தெரியும்.. நாங்க ரெண்டு பேரும் கண்டிப்பா நல்லா வாழ்வோம் நீங்க பார்க்க தான் போறீங்க..!” என்று வாக்கு கொடுத்தான்.
அதுவரை எதுவுமே சுவாரஸ்யம் இல்லாத மாதிரி இருந்த இவர்களது திருமணம்..
மீராவின் சிறுவயதில் ஏற்பட்ட வலிகளை ஆற்றவும்.. ரணங்களை நீக்கவும்.. அவளை ஒரு இயல்பான இல்லற வாழ்வுக்கு தயார்படுத்துவது மிக சவாலாக இருப்பதை உணர்ந்து கொண்டவன்,
“மீருக்குட்டி இந்த சேலஞ்சிங் லைஃப் கூட நல்லா தான் டி இருக்கு” என்று சிரித்துக் கொண்
டவன், தன் அருகில் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும்
அணங்கவளை தன் முரட்டு கையால் இடையோடு அணைத்துக் கொண்டு உறங்கினான்.
தொடரும்..
