Share:
Notifications
Clear all

காமன் 13

 

Jiya Janavi
(@jiyajanavi)
Member Admin
Joined: 2 years ago
Messages: 265
Thread starter  

13

 

 

 

ஒரு நாள் இரவு கதிர்காமனின் லெக்ஷரி வில்லாவில் காலிங்பெல் அடிக்கும் சத்தம் கேட்டது.

 

 

 

ஒரு வழக்குக்காக குறிப்பெடுத்துக் கொண்டிருந்தவன் அதை அப்படியே நிறுத்திவிட்டு,

 

 

 

'இந்த நேரத்தில் யாராக இருக்கும்? வாசல்ல வாட்ச்மேன் இருப்பாரே?' என யோசித்துக் கொண்டே போய் கதவை திறப்பதற்குள் இரண்டு மூன்று முறை காலிங்பெல் அடிக்கும் சத்தம் கேட்டுவிட்டது.

 

 

 

பொதுவாக கதிர்காமன் வீட்டோடு எந்த வேலையாட்களையும் வைத்துக் கொள்ள மாட்டான்.

 

 

 

காலையில் வீட்டு வேலைக்கு வருபவர்கள் இரவோ இல்லை மாலையோ இவன் வரும் பொழுது அனைத்து வேலைகளையும் முடித்துவிட்டுச் சென்று விடுவர்.

 

 

 

பெரும்பாலும் காலை உணவு மதிய உணவு மட்டுமே வீட்டிலிருந்து வரும். இரவு உணவு அவன் இஷ்டப்படி..!

 

 

 

வாசலில் மட்டும் எப்பொழுதும் பகல் மற்றும் இரவு நேரத்துக்கு என்று பாதுகாவலர் மாற்றி மாற்றி இருப்பார்.

 

 

 

“அவரை தாண்டி இந்நேரத்திற்கு யார் வந்திருக்கா? கண்டவங்களையும் அவர் அனுமதிக்க மாட்டாரே... அதுவும் இல்லாமல் இங்க யாரும் என்னைத் தேடி வர மாட்டார்களே? அதெல்லாம் ஹோட்டல் கரையோடு முடிந்து விடுமே.!" என்று அவன் அறையில் இருந்து வாசல் கதவை திறப்பதற்குள் ஆயிரம் எண்ணங்கள் அவன் வக்கீல் மண்டைக்குள் ஓடி மறைந்தது.

 

 

 

இந்த நேரத்தில் அதுவும் இவ்வளவு அவசரமாக யார் வந்து இருக்க போகிறார்கள்? என யோசித்துக் கொண்டே கதவை திறக்க..

 

 

 

அங்கே ரதி கண்களில் கலக்கத்தோடு.. தலையெல்லாம் களைந்து.. சோபையான ஓவியம் போல.. பயம் மற்றும் பதற்றம் நிறைந்த முகத்துடன் வியர்த்து விறுவிறுத்தபடி நின்றுக் கொண்டிருந்தாள்.

 

 

 

அவளை பார்த்ததும், “ரதி?? ரைட்? இந்த நேரத்துல என்ன வந்திருக்க? அதுவும் நான் கொடுத்த ஆஃபர் எல்லாம் எக்ஸ்பெயரான அப்புறம் வந்திருக்க??” என்று கதவில் சாய்ந்து அவளை உச்சாதி பாதம் முதல் அணு அணுவாய் பார்த்தபடி கேட்டான்.

 

 

 

“சார்.. உங்க கிட்ட கொஞ்சம் பேசணும். கொஞ்சம் உள்ள வரலாமா?” கேட்டாள் பதட்டத்தோடு..!

 

 

 

அவனும் அதுக்குள் அவளின் பதட்டத்தை உள்வாங்கி இருந்தான்.

 

 

 

“ம்ம்.. எஸ்.. எஸ்.. கமின் ரதி..” என்றான் அவளும் உள்ளே வந்தாள்..

 

 

 

உள்ளே வந்தாலும் அவளிடம் ஒரு தயக்கம், பயம், பதற்றம் இதெல்லாம் இருக்க தான் செய்தது. அவளை பார்க்கும் போது ஏதோ உதவி மட்டும் கேட்க வந்திருக்கிறாள் என தெரிந்தது.

 

 

 

ஆனால் எந்த மாதிரி உதவி என தெரியாமல் அவனாக எதுவும் கேட்காது, அவளே கேட்கட்டும் என உறுதியாக இருந்தான்.

 

 

 

“உட்காரு ரதி. தண்ணீ கொண்டு வரேன்” என்றவன் உள்ளே வந்து ஒரு க்ளாஸில் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தான்.

 

 

 

அவளோ கொஞ்சம் கூட தாமதிக்காமல் அதை வாங்கி மடக்கு மடக்கு என்று குடித்து முடித்தாள்.

 

 

 

அவள் குடித்த வேகத்திலேயே அவளது களைப்பு தெரிந்தது.

 

 

 

“எப்படி ஆரம்பிப்பது?” என தெரியாமல் ஒரு தவிப்புடனே உட்கார முடியாமல் உட்கார்ந்திருந்தாள் ரதி.

 

 

 

“என்ன ரதி. ஏதாவது உதவி வேணுமா? திரும்ப அந்த கார்ப்பரேட் கம்பெனி ஏதாவது உன்கிட்ட தொந்தரவு பண்றாங்களா என்ன? இந்த நைட்டுல என்னை தேடி வந்திருக்கியே?” என்றவன் நெற்றி சுருங்க கேட்க..

 

 

 

“ம்ம்.. அவனுங்க பிரச்சனை பண்ணல.. நாங்க இப்போ வேற வீட்டுக்கு மாறிட்டோம். இப்போ வேற ஒரு பிரச்சனை. ஆனா உதவி பண்ண முடியாதுனு மட்டும் சொல்லிடாதீங்க.” என அவன்‌ காலிலே விழுந்து விட்டாள்.

 

 

 

“ஏய் என்ன ரதி? என் காலுல போய் விழுந்திட்டு இருக்க எழுந்திரி முதல்ல..” மேல்பட்ட வழக்கறிஞரான அவனுக்கு இது போல் எல்லாம் ஒருவர் காலில் விழுவது கொஞ்சம் அதிர்ச்சியாகவும் அசௌரியமாகவும் இருந்தது.

 

 

 

“இல்லை சார்.. கடைசியா உங்கள நம்பி தான் வந்திருக்கேன்.. நீங்க தான் எப்படியாவது இந்த ஒரு உதவிய பண்ணியே ஆகணும்.” காலில் விழுந்தபடி அழுதுக் கொண்டே கேட்டாள்.

 

 

 

கதிர்காமனுக்கு இம்மாதிரி நிகழ்வுகள் புதிது.

 

“முதல்ல எழுந்திரி.” என்று அதட்டியதும் எழுந்துவிட்டாள்.

 

 

 

அவள் எழுந்தாலும் அவளின் படபடப்பு இன்னும் குறையாமல் தான் இருந்தது. அவளை உட்கார வைத்து “இந்தா தண்ணி குடி முதல்ல” என்று மீண்டும் தண்ணீர் எடுத்து வந்த க்ளாஸை அவன் கொடுக்க.. அவளும் குடித்தாள்.

 

 

 

“என்ன உதவி வேணும் கேளு?”

 

 

 

“இல்ல.. உதவி கேட்ட பிறகு முடியாதுனு மட்டும் சொல்லிடாதீங்க. உங்க ஃபீஸ் எவ்வளவு வேணாலும் நான் தரேன். இல்ல ஆஃபர்.. ஆஃபர்..” என்றவள் அதற்கு மேல் வார்த்தைகள் வராமல் மேற்பற்களால் உதட்டை கடித்து தலை கவிழ்ந்து அமர்ந்திருந்தாள்.

 

 

 

கதிர்காமனுக்கோ ஆச்சரியம்..! ஒரு மாமதத்திற்கு முன்னால் அந்த வீடு அத்தனை முக்கியம்.. தன்னை ஏமாற்றி விட்டார்கள்.. என் அம்மா பெயரில் விற்ற வீட்டுக்கு பணம் போட்டதாக சொல்லி ஏமாற்றி விட்டார்கள்.. என்று அந்த கார்ப்பரேட் கம்பெனி எதிராக வழக்கு தொடுக்க வந்தவளிடம் இவன் ஆஃபர் பேச..

 

 

 

“எனக்கு அந்த வீடே வேணாம். என் ஒழுக்கம் முக்கியம்..‌கற்பு முக்கியம்” என்று பேசியவள், இன்று அர்த்த ராத்திரியில் வந்து ஆஃபரைப் பற்றி பேசுகிறாளே என்று அவளை யோசனையோடு பார்த்தான்.

 

 

 

“நீ கேட்குற உதவிய கண்டிப்பா செய்றேன் ரதி. முதல்ல என்ன உதவினு சொல்லு.”

 

 

 

“என் தம்பியை.. தம்பியை.. போலீஸ் புடிச்சிட்டு போய்ட்டாங்க.. நீங்க தான் எப்படியாவது என் தம்பிய காப்பாத்தி கொடுக்கணும் பிளீஸ்” கை கூப்பி அழுதாள்.

 

 

 

“உன் தம்பிய போலீஸ் அரெஸ்ட் பண்ணிட்டு போய்டுச்சா? ஏன்? எதுக்காக அரெஸ்ட் பண்ணாங்க?”

 

 

 

“அதலாம் சரியா தெரியல சார்.. இன்னிக்கு அவனோட ப்ரண்டு பர்த்டே பார்ட்டி இருக்கு. முடிச்சி வர லேட்டாகும்னு மட்டும் தான் சொல்லிட்டு போனான்.. அவனும் இந்த காலனியில் இருக்கிற வருணும் சேர்ந்து தான் போனாங்க. அதனால நானும் கால் பண்ணி எதும் கேட்கல.. இப்ப தான் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி ஸ்டேஷன்ல இருந்து அரெஸ்ட் பண்ண விசயத்தை கால் பண்ணி சொன்னாங்க.. எனக்கு கையும் காலும் ஓடல.. இங்க பக்கத்து வீட்டுல இருக்குறவங்க கிட்ட உதவி கேட்டேன்.. போலீஸ் சமாச்சாரம் சொல்லி யாரும் வர முடியாதுனு சொல்லிட்டாங்க.. கடைசியா உங்கள நம்பி தான் வந்திருக்கேன்.. முடியாதுனு மட்டும் சொல்லிடாதீங்க” என்று அழுதாள்..

 

 

 

‘ஓஹ்.. தம்பி சமாச்சாரமா? தம்பி மேல அவ்வளவு பாசமா? அவளே ஆஃபர் வேணுமான்னு கேட்குற அளவுக்கு பாசம் போல..’ என்று நினைத்தவன், “சரி.. சரி அழாத.. முதல்ல விஷயம் என்னனு தெரியாம ஒன்னும் பண்ண முடியாது. எந்த போலீஸ் ஸ்டேஷன்ல இருந்து கால் பண்ணாங்க” என்று விவரம் கேட்டான்.

 

 

 

அவளும் அவளுக்கு தெரிந்த விவரங்களை எல்லாம் கொடுக்க “ஒரு டூ மினிட்ஸ் வெயிட் பண்ணு ரெடி ஆயிட்டு வரேன்” என்று உள்ளே சென்றவன், அவளுடன் கிளம்பி அந்தக் காவல் நிலையத்திற்கு சென்றான்.

 

 

 

“வா.. ரதி இறங்கு” என்றான்.

 

 

 

“சார்.. அவங்களுக்கு பணம் ஏதாவது கொடுக்கணுமா? லஞ்சம் மாதிரி?” என்று தயக்கத்தோடு கேட்டாள்.

 

 

 

“பணமா அது எதுக்கு?”

 

 

 

“இல்ல அங்க கேட்பாங்களா? நீங்க சொன்னீங்கன்னா அதுக்கு ஏதாவது ஏற்பாடு பண்ணுவேன்” என்றாள் பரிதாபமாக..

 

 

 

ஏனோ அன்று ஹோட்டலில் பார்த்ததைவிட இன்று மேலும் அவனை ஈர்த்தாள் பெண்.!

 

 

 

“உன் தம்பியும்.. அவன் ஃப்ரெண்ட்ஸும் தப்பு பண்ணியிருப்பாங்களா? லாயர் கிட்ட எதையும் மறைக்க கூடாது சொல்லு?” என்றான்

 

 

 

“அய்யோ அதெல்லாம் இல்ல சார்.

 

இன்னும் சொல்லப்போனால் என்னை விட என் தம்பி ரொம்ப மெச்சூர். இந்த வீட்டு விஷயத்திலேயே இதை விட்டுட்டு நம்ம வேற வேலைய பார்ப்போம்னு என்னை கன்வின்ஸ் பண்ணுனதே அவன் தான். ரொம்ப பொறுப்பான பையன் சார்.. இப்பதான் பிளஸ் டூ எக்ஸாம் முடிச்சிருக்கான்” என்றாள் கன்னத்தில் வழிந்த கண்ணீரை புறங்கையால் துடைத்துக் கொண்டே..

 

 

 

“பின்ன என்ன? அதெல்லாம் வேணாம்.. வா போலாம்.” என்றான். ஆனாலும் அவள் மிகவும் பயத்துடன் பதற்றத்துடன் இருந்தாள்..

 

 

 

அவளை தைரியப் படுவதற்காக “ரதி அதெல்லாம் ஒன்னும் ஆகாது. நீ முதல்ல பயப்படாம வா..?” ஆறுதல் கூறினான்.

 

 

 

“இல்ல சார்.. ஏனோ மனசு அடிச்சிட்டே இருக்கு.. என்னனு தெரியல? அங்க என் தம்பிக்கு எதும் ஆகியிருக்காதுல.. இப்பல்லாம் என்னென்னமோ நியூஸ் பார்க்குறோம். பணம் இல்லாதவங்க மேல தான் வீண் பழி எல்லாம் விழுது அதான் கொஞ்சம் பயமா இருக்கு”

 

 

 

“ஏய்.. அதலாம் நீ நினைக்கிற மாதிரி எதுவும் நடந்திருக்காது.. பாசிட்டிவ் திங்க் பண்ணு. நான் தான் கூட இருக்கேன் இல்ல”

 

 

 

“என்னால முடியல சார். படபடப்பாவே இருக்கு” என்றாள்.

 

 

 

“ரதி இந்த தண்ணிய குடி. படபடப்பு கொஞ்சம் குறையும். நம்மளோட பலவீனமே இந்த பயமும் படபடப்பும்தான்” என்றவன் தண்ணீர் போத்தலை கொடுக்க அவளும் தண்ணீரைக் குடித்தாள்.

 

 

 

“கொஞ்சம் ரிலாக்ஸா இரு.. என்ன நடந்திருக்குனு உள்ள போன தான் தெரியும்..” என அவளை அமைதிப்படுத்தினான்.

 

 

 

ஏன் இந்த பொண்ணுக்காக நாமும் இத்தனை பதட்டப்படுகிறோம் இவளை எதற்காக அமைதிப்படுத்துகிறோம் என்று புரியவில்லை கதிர்காமனுக்கு.

 

 

 

புரியவில்லை என்பதை விட அவன் அதை பற்றி எல்லாம் யோசிக்கவில்லை.

 

 

 

காவல் நிலையத்தில் போய் பார்க்க ராகவ்வோடு இன்னும் சில இளைஞர்களும் இருந்தனர். எல்லாருமே 18 19 வயசு பையன்கள் தான்.

 

 

 

அந்த காவல் நிலையத்தினை‌ அனுமானித்தவன் “நீ போய் என்னன்னு ஃபர்ஸ்ட் கேளு.. நான் பின்னாடி வரேன்” என்று அவளை அனுப்பி வைத்தான் முதலில் கதிர்காமன்.

 

 

 

தொடரும்..


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top