அத்தியாயம் 16
என் தாய் மாமா பசங்க தான் யசோதா தேசிகன் தேவகி மூணு பேரும்..” என்று ஆரம்பித்தார் ராஜநாராயணன்.
“சின்ன வயசுல இருந்தே எனக்கு யசோதா தானு பேசி வீட்டில் வைச்சியிருந்தாங்க” என்றவர் சற்றே சங்கடமாக தீன தயாளனை பார்த்தார் நாராயணன்…
“இது எல்லா பக்கமும் இருக்கிறதுதானுங்களே உறவு முறையில் உள்ள பிள்ளைகள இப்படி முடிச்சு போட்டு பேசுறது பழக்கம் தானங்களே” என்று தீனதயாளனும் அவருக்கு ஆதரவாக பேசவும் தான் அவருக்கு ஆறுதலாக இருந்தது.
சம்பந்தி என்பதை தாண்டி நல்ல மனிதர் தீனதயாளன் ராஜநாராயணன் பார்த்த வகையில்.. அந்த நம்பிக்கையில் தானே அவர் மூத்த பெண்ணை தூக்கி அங்கே கொடுப்பது.
“யசோதாவுக்கு கல்யாண வயசு வந்து, கல்யாண பேச்சு பேசும்பொழுது தான் எங்க அம்மாவே ‘என் மருமகளை நீ வேற வீட்டுக்கு அனுப்புவியா?’ சத்தம் போட்டு எங்க மாமாட்ட உரிமையா பொண்ணு கேட்டாங்க..”
“எங்க மாமாவுக்கு மறுக்கிறதுல எந்த ஒரு விஷயமும் இல்லை. அதனால எங்களுக்கு வாய் வார்த்தையில் கல்யாணம் பேசி வைத்திருந்த சமயத்துல திடீர்னு ஒரு நாள் தேவகி அரளி விதை அரைச்சு குடிச்சிட்டு உயிருக்கு போராடு இருந்ததா எங்களுக்கு தகவல் கிடைச்சுது. அந்த சமயம் நான் சென்னையில தான் ஒரு ஆடிட்டர் கிட்ட அசிஸ்டன்ட் சேர்ந்து இருந்தேன்”
“எனக்கும் கூட பிறந்தவங்க எல்லாம் யாரும் கிடையாது. மாமா பசங்க மூணு பேருமே எனக்கு ஒன்னு போல தான். அதனால இந்த விஷயம் தெரிஞ்சு நானும் பதறி அங்க பாக்க போனா.. கேள்விப்பட்ட விஷயம் எங்கள் தலையில இடியா இறங்கியது”
*ஏன் டி இப்படி பண்ணி வச்ச அக்காவுக்கு கல்யாணம் பேசுற சமயத்துல இந்த மாதிரி அரளி விதையை குடிச்சா பாக்குற ஊருசனம் என்னடி நினைப்பாங்க? ஊரு உலகத்துல எல்லாம் என்னென்ன பேசுவாங்க தெரியுமா?” என்று தேவகி யசோதாவின் அம்மா அழகம்மை அழுது வைக்க..
“பின்ன நான் மனசார விரும்புற மாமாவ அவளுக்கு பேசினீங்க வச்சீங்கன்னா.. அரளி விதையை குடிக்காம ஆசையை நின்னு அவ கல்யாணத்துக்கு அச்சத்தை போட்டு வாழ்த்துவேனா” என்று மூக்கை உறிஞ்சினாள் தேவகி.
“என்னது மாமன நீ விரும்புறியா?” என்று அங்கிருந்து அனைவருக்கும் பேரதிர்ச்சி..!
அதிலும் சிறுவயதில் இருந்து மாமனைத் தவிர வேறு எதுவுமே நினைக்காத.. அதுவும் தங்கையிடமே பலமுறை தன் மன ஆசைகள் அபிலாஷிகள் எல்லாம் மாமன்தான் என்று பகிர்ந்து கொண்ட யசோதாவுக்கு இதைக் கேட்டு பூமியே தட்டாமாலை சுற்றியது.
பெரியவர்களுக்கும் என்ன செய்வது என்றே தெரியவில்லை. ஒரு மகள் சிறுவயதிலிருந்தே நாராயணனை நினைத்துக் கொண்டிருக்கிறாள். அதுவும் தாங்கள் போட்டோ முடிச்சு அது.
இன்னொரு பக்கமும் சிறிய மகளும் அவன் பால் ஈர்க்கப்பட்டு இருக்கிறாள். அதன் கொண்டு தற்கொலை வரை சென்றிருக்கிறாள்? இப்போது என்ன செய்வது? ஏது செய்வது? என்று தெரியாமல் பெற்றவர்கள் இருவரும் இரு மகள்களின் வாழ்க்கையை நினைத்து பயத்தில் குழம்பித் தவித்தனர்.
மருமகள் விஷயம் கேள்வி பட்டு மகனோடு பார்க்க வந்த மீனாட்சியம்மாள் விஷயத்தை கேள்வி பட அவருக்குமே திகைப்பு.
எந்த பக்கம் முடிவெடுப்பது? எந்த பக்கம் சாய்வது? யாருக்கு சாதகமாக பதில் சொல்வது?
இருவருமே பெற்றோர்களுக்கு இரு கண்கள் போல தான். ஒரு கண்ணில் சுண்ணாம்பையும் மற்றொரு கண்ணில் வெண்ணையுமா வைக்க முடியும்? என்று பொறுமிக் கொண்டிருந்தார் இருவரின் தகப்பன் முருகன்..
தன் அக்காவிடம் சென்று “அக்கா என்ன மன்னிச்சிடு என் மருமகனுக்கு இரண்டு பொண்ணுங்களையும் தரதா இல்ல. ஒருத்தியை கொடுத்தா.
இன்னொருத்தி வெசனப்படுவா.. அவள கொடுத்தா இவ உயிரையே போக்கிக்கிறேனு சொல்கிறா? அதனால ரெண்டு பேருக்குமே வெளியிலேயே கொடுத்துவிடலாம்னு முடிவு எடுத்துட்டேன்” என்றார்.
மீனாட்சிக்கோ பெரும் கவலையாகி போனது. தம்பி மகள் என்றால் கடைசி வரை உறவு தொடருமே என்று நினைத்தவருக்கு, தம்பியின் முடிவும் சரிதான் என்று ஆமோதித்தார்.
வள்ளியம்மை பொறுக்காமல் “ஏங்க அது எப்படி சின்ன வயசுல இருந்தே யசோதா அவரையே நினைச்சுட்டு இருந்தவளாச்சே?” என்று கேட்க..
“நீயே யோசி வெறும் வாய் வார்த்தை பேசினதுக்கே தற்கொலை வர போய் இருக்கா.. நெஜமா கல்யாணம் பண்ணா உன் சின்ன பொண்ணு வேற ஏதாவது பண்ணுனா நம்மளால தாங்க முடியுமா? இல்ல அவளுக்கு கட்டி வச்சா பெரியவ தாங்குவாளா? நாளைக்கு யாருக்கு கட்டிவைத்து மருமவன் நம்ம வீட்டுக்கு மாப்பிள்ளை வந்தாலுமே மற்றவர்களுக்கு சங்கடமாத்தான் இருக்கும். அதனாலதான் நான் இந்த பேச்சே வேணாம். என் அக்கா மகன் என் வீட்டுக்கு மருமகனா வராதது எனக்கு எவ்ளோ கஷ்டம் தெரியுமா?” என்று மூவரும் மாய்ந்து மாய்ந்து இந்த விஷயத்தை பேசி கடைசியாக இருவருக்குமே வெளியில் மாப்பிள்ளை பார்ப்பது என்று முடிவெடுத்தனர்.
அந்த சமயத்தில் பட்டாளத்தில் வேலை செய்யும் ஒருவருக்கு பெண் கேட்டு வர.. ஏற்கனவே எடுத்த தீர்மானத்தின் பேரில் யசோதாவை அவருக்கு திருமணம் செய்து கொடுத்தனர்.
அதுவரை அமைதியாக இருந்த தேவகி, திரும்பவும் அவளும் திருமணம் பேச்சை எடுக்க இன்னும் அவளின் முடிவில் இருந்து மாறாமல் இருந்தாள்.
ஊர் முழுக்க நாராயணனும் அவளும் காதலிப்பதாகவும் அதனால்தான் ஏற்கனவே யசோதா கூட பேசி இருந்த திருமணத்தை முறித்து விட்டு யசோதாவுக்கு பட்டாளதாரோடு திருமணம் நடந்தது என்றும் வதந்தியை பரப்பி விட்டாள்.
சிறு கிராமம் என்பதால் கூடவே எல்லாம் அங்காளி பங்காளி மாமன் முறை என்பதால் இந்த பொய்யும் உண்மையாகவே நம்பப்பட்டது.
இதைக் கேட்டு ஜெற்கான நாராயணனோ “தேசிகா அப்படி என்னடா உன் தங்கச்சிக்கு என் மேல இப்படி பைத்தியம்? இத்தனைக்கும் யசோதாவையாவது அப்பப்போ வீட்ல ரெண்டு மூணு வாட்டி பார்த்து இருக்கேன். இவள எல்லாம் இந்த மாதிரி நான் நினைச்சதே இல்லையாடா?” என்று அவர் ஒரு முறை புலம்பித் தள்ள..
“அது ஒன்னும் இல்ல அய்த்தான் எங்க அந்த புள்ளையை கிராமத்திலேயே யாராவது பார்த்து கட்டி வைச்சிடுவாங்களோனு ஒரு பயம். கூடவே.. எங்க பக்கத்து பெரிய படிப்பு காலேஜ் படிப்பு நீங்க தான் படிச்சிதனால உங்க மேல தேவகிக்கு ஒரு எண்ணம் இருக்கு. முதல்ல எங்க யாருக்குமே தெரியாமல் போச்சு.. இப்ப யோசிக்கும்போது புரியுது” என்றார் தேசிகன்.
எவ்வளவோ மாப்பிள்ளைகள் பார்த்தும் ஒருவரை கூட சீண்டவில்லை தேவகி.
ஒரு கணம் நாராயணமே “இது என்ன இத்தனை பிடித்தமா நம் மீது?” என்று யோசித்தவர் மாமனிடம்,
“யசோதா அப்படிலாம் நினைக்கிற பொண்ணு இல்ல.. நானும் யசோதாவ அப்படி எல்லாம் நினைக்கல.. தேவகி எனக்கே கட்டி வையுங்க” என்று அம்மா மூலம் தூது விட்டார்.
பின் யசோதாவிடம் பேச..
“நான் ஏற்கனவே சொன்னேனே ம்மா.. தேவகிய அப்பவே மாமாவுக்கு கட்டி வைங்கன்னு நீங்கதான் கேட்கல. நான் நல்லா தான்மா இருக்கேன். நீங்க தங்கச்சிய மாமாவுக்கு கட்டி வைங்க” என்றாள் மனதில் உள்ள காதலை புதைத்து. இனி அக்காதலுக்கு நியாயம் செய்வதும் தவறாகிவிடும் அல்லவா கணவன் கட்டிய தாலி கழுத்தில் இருக்க..
தேவகி நாராயணன் திருமணம் நல்லபடியாக முடிக்க.. அவர்கள் திருமணம் முடிந்து அடுத்த மாதம் போரில் யசோதாவின் கணவன் இறந்துவிட்டதாக தகவல் வந்தது.
கணவன் முகம் பார்த்து பேசி பழகியது என்னவோ இரண்டு நாட்கள் தான். அதன் பின் அவர் பட்டாளம் சென்றுவிட இங்கோ தனிமையில் தான் இருந்தார் யசோதா. இக்காலம் போல அப்போது அதிகம் செல்போன் பயன்பாடு இல்லாததால் ஓரிருமுறை டெலிபோனில் தான் பேசினார் கணவனிடம்.
இப்போது அந்த கணவனும் இல்லாமல் போக.. கணவன் பற்றி ஏதாவது கேட்டால்.. சொல்லக்கூட தெரியாத கைம்பெண்ணாக நின்ற மகளை கண்ட பெற்றோர்கள் கதறி அழுதனர்.
யசோதா புகுந்த வீடோ பெருங்கூட்டுக் குடும்பம். அதனால் அங்கே இருக்க முடியாமல் மீண்டும் தாய் வீடு புகுந்து விட்டார் யசோதா.
“எங்க தப்புதான்..! உன் வாழ்க்கைய நாங்களே இப்படி சீரழிச்சிட்டோம்” என்று வள்ளியம்மையும் முருகனும் மருகிப்போகினர், திருமணமான ஆறாம் மாதத்தில் கைமாபெண்ணாக பிறந்த வீட்டுக்கே வந்த யசோதாவை நினைத்து.
ஆனால் அவருக்கு பக்க பலமாக நின்றது என்னவோ தம்பி தேசிகன் தான்.
கிராமத்தில் இன்னொரு திருமணம் எல்லாம் அந்தக் காலகட்டத்தில் அத்தனை சாத்தியமில்லை. ஆனால் அக்காவுக்காக அவர் அவ்வளவு போராட… யசோதாவோ “எனக்கு அதுல எல்லாம் விருப்பம் இல்லடா என்ன படிக்க வைக்கிறியா?” என்று அவர் ஆசையாக கேட்க.. அருகில் உள்ள கல்லூரியில் டீச்சர் ட்ரைனிங்யில் அக்காவை சேர்த்து விட்டார் தேசிகன்.
முதல் பிரசவத்திற்கு வீட்டுக்கு வந்தார் தேவகி. ஒரு வருட டீச்சர் ட்ரைனிங் முடித்து அப்பொழுது தான் அருகில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டு இருந்த நர்சரி பள்ளிக்கு டீச்சராக சென்று கொண்டிருந்தார் யசோதா.
தேவகிக்கோ தான் வாழ நினைத்த வாழ்க்கை வேறு. இப்பொழுது வாழ்கிற வாழ்க்கை வேறாக இருந்தது.
சிறு கிராமத்திலிருந்து பெருநகரமான சென்னை செல்லும் போது படோபகரமாக ஆடம்பரமாக அதுவும் ஆடிட்டரிடம் அசிஸ்டெண்டாக இருக்கும் மாமனின் பெரும் சம்பாத்தியத்தில் சுகபோகமாக வாழலாம் என்று அவர் நினைத்துக் கொண்டு செல்ல.. தலை கீழாக இருந்தது அங்கே அவர்களது வாழ்க்கை.
கட்டுக்கோப்பான குடும்பம்.. செலவுகளை கட்டுப்பாடாக செய்யும் மீனாட்சி.. இப்பொழுதுதான் ஓரளவு தலை எடுத்து வந்த ராஜநாராயணன் தொழில்.. என்று தேவகி நினைத்தது எதுவுமே அங்கு நடக்காததால் பெரும் ஏமாற்றமாகி போனது அவரது வாழ்க்கை.
அதற்கென்று கஷ்ட ஜீவனம் எல்லாம் இல்லை.
தேவகியின் ஆசையோ வார வாரம் மாமனோடு கைகோர்த்து ஷாப்பிங் செல்ல வேண்டும்..
அவர் விரும்பியது கண் பார்த்தது எல்லாம் மாமன் வாங்கி கொடுக்க வேண்டும்..
சர்ப்ரைஸ் கிப்ட்களாக தங்கம் வெள்ளி அவ்வப்போது வைரம் என்று வாங்கி வந்து போட்டு அழகு பார்க்க வேண்டும்..
குழந்தை பெறுதல் இரண்டு வருடமாவதே தள்ளி வைத்து மாதம் ஒரு முறை இருவரும் இளஞ்சோடிகளாக தேன் நிலவு கொண்டாடி வரவேண்டும்..
வருஷத்துக்கு ஒருமுறை வெளிநாடு அழைத்துச் செல்ல வேண்டும்..
என்று ஏகப்பட்ட கனவுகளோடு சென்றவருக்கு, அங்கு எதார்த்தமான வாழ்வு முரண்டியது.
நிறைவேறா ஆசையால் தினம் ஒரு சண்டை சச்சரவு என்று கழிந்தது அவர்களது வாழ்க்கை.
“இதே யசோதாவை கட்டி இருந்தால் இப்படி நடந்திருக்குமா?” என்று ஒரு முறை மீனாட்சி வாய் விட..
அதைப் பிடித்துக் கொண்டு மேலும் ஆட்டம் அதிகமாக ஆடினார் தேவகி.
அதிலிருந்து தாய் வீட்டுக்கு செல்லும் பொழுது நாராயணனை கூட வர விடுவதில்லை.
இதற்கு இடையில் அவர் கர்ப்பமாகி விட.. கர்ப்ப காலத்தில் அவரது மனநிலையையும் உடல்நிலையையும் கருதி அத்தனை செய்தார் ராஜநாராயணன். ஆனால் அதில் எல்லாம் திருப்தி படவே இல்லை தேவகி.
அதுவும் வளைகாப்பு போட்டு வந்ததில் இருந்து அக்காவை தான் போட்டு அந்த பாடு படுத்தினார் தேவகி.
காரணம் சிறு வயதிலிருந்தே இருந்த அக்கா மீது பொறாமை..!
“எனக்கு வேலை செய்யறது முக்கியமா? ஸ்கூலுக்கு போறது முக்கியமா?” என்று எரிந்து விழுந்தவரை கண்டு பயந்தார் யசோதா.
‘தங்கை முன்னெல்லாம் இது மாதிரி மனம் புண்படும் மாதிரி பேச மாட்டாளே? இப்பொழுது என்னவாயிற்று?’ என்று புரியாமல் அவர் தவிக்க..
“சில பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் இந்த மாதிரி எரிச்சல் அமைதியின்மை இப்படி எல்லாம் இருக்கும்டா.. கொஞ்சம் பொறுத்து போடா.. புள்ளத்தாச்சி” என்று வள்ளியம்மை தான் பெரிய பெண்ணை சமாதானப்படுத்தினார்.
அந்தா இந்தா என்று அவரது பிரசவம் வரை வேலைக்கு சென்றவரை பிரசவித்தில் இருந்து வீட்டோடு இருக்க வைக்க அத்தனை பேசினார் தேவகி.
‘நான் மட்டும் குடும்பம் பிள்ளை மாமியாருக்கு சேவைனு அடிமைத்தனமான வாழ்க்கைனு வாழ்கிறோம். இவள் மட்டும் சுதந்திரமாக வேலைக்கு செல்வாளோ? கூடாது கூடவே கூடாது..! அவ எனக்கு அடிமையாக இருக்கட்டும்’ என்று அவர் மீது அத்தனை வஞ்சம் கோபம்.
இவர் வாழ்க்கையில் தாம் தட்டிப் பறித்து விட்டோம் என்று குற்ற உணர்ச்சி இல்லாமல்.. தான் இங்கே குழந்தை பெற்று சிரமப்படுகிறேன் இவ மட்டும் ஜாலியாக ஊர் சுற்றுவாளா? என்று கோபம் தான் வந்தது தேவகிக்கு.
ஒருவேளை தேவகியை ராஜநாராயணனுக்கு திருமணம் செய்யாமல் வேறு யாருக்காவது திருமணம் செய்து இருந்தால்.. இத்தனை சுகபோகமான வாழ்க்கை கூட அவருக்கு கிட்டியிருக்காது என்பதை அவரது தியாக மனம் ஏற்கவே இல்லை.
ஆறு மாதம் வரை அக்காவை அந்த பாடு படுத்தி.. அம்மாவின் சமையல் அப்பாவின் அன்பு.. அவ்வப்போது அண்ணன் திட்டினாலும் அவள் தேவையை பார்த்துக் கொள்ள என்று சுகமாக இருந்தவர், திடீரென்று நாராயணன் அவர்களை அழைக்க வருகையில் கொதித்து எழுந்து விட்டார்.
“அது எப்படி நீ வரலாம்? உன்ன தான் நான் வர வேணாம்னு சொல்லி இருந்தேன்ல.. அதுவும் இவ இருக்கும்போது எப்படி நீ என் பேச்சை மீறி வரலாம்? ஓஓ.. முன்னால் காதலியை பார்க்காம இருக்க முடியலையோ?? உண்மைய சொல்லு குழந்தையை பார்க்க வந்தீயா இல்ல இவள கொஞ்ச வந்தீயா?” என்று நாக்கில் நரம்பில்லாமல் பேச மொத்த குடும்பமே அவரின் இந்த அநியாய குற்றச்சாட்டில் அதிர்ந்து போனது.
வேலையை காரணம் காட்டி மகன் குழந்தையை பார்க்க வராதது ஏன் என்று அப்போதுதான் மீனாட்சிக்கு தெரிய.. திடுக்கிட்டு மகனை பார்க்க அவரோ முகத்தை வேறுப் புறம் திருப்பிக் கொண்டார்.
அதிலேயே மகன் வாழும் வாழ்க்கை புரிய.. மகனின் வாழ்க்கையை நாமே கெடுத்து விட்டோமே என்று பரிதவித்துப் போனார் தாயாக வள்ளியம்மை.
“இங்க பாருடி ஆறு மாசமா அன்னம் தண்ணி உங்காம.. ராத்திரி தூங்காம கொள்ளாம.. குழந்தையை பார்த்துக்கிட்டது அவ.. உன் தீட்டு துணியிலிருந்து உன் புள்ள ஆய் துணி வரைக்கும் அலசி போட்டாவ அவ.. உனக்கு பார்த்து பக்குவமா நான் செஞ்சத விட அதிகம் தாங்கினது அவ.. உனக்கு எண்ணெய் குளியல் மருந்து அப்படி பாத்துக்கிட்டது அவ.. அவளை நீ பேசுவியா? அதுவும் கேவலமா உன் புருஷனோடு சம்பந்தப்படுத்தி? அசிங்கமா இல்ல உனக்கு?” என்று மகளை கண்டித்தார் வள்ளியம்மை.
“உனக்கு என்னம்மா தெரியும்? உனக்கு என்ன தெரியும்? ஏதோ இவ பட்ட மரமா நிற்கிறா.. இவரு ஒரு வருஷமா பொண்டாட்டியோட கூட சேராம உள்ளுக்குள் அப்படியே எரிஞ்சுட்டு இருக்காரு.. ரெண்டும் சேர்ந்து எனக்கு துரோகம் பண்றதுக்கா? விடமாட்டேன் நான்” என்று நின்றவரை,
என்ன சொல்லி அமைதிப்படுத்த? என்று வழி தெரியாமல், கலங்கிய கண்களோடு மனநிறைய பாரத்தோடு யசோதா பின் கட்டு வழியாக அடுத்த வீட்டில் சென்று அமர்ந்து கொண்டார்.
அதன் பின் ராஜநாராயணன் பிறந்த ஆறு மாத பொக்கை வாய் சிரிக்கும் அழகு மகள் ராஜ மீரா.. அம்மா மீனாட்சி மற்றும் மனைவி தேவகியோடு சென்னை கிளம்பிப் பின்னாடி வீடு திரும்பினார் யசோதா.
யாரும் அறியா காரிருளில் தனிமையின் கொடுமையை அனுபவித்தபடி கண்களில் கண்ணீர் வழிய மொட்டு மொட்டு விழித்திருந்தவர் உள்ளமும் உடலும் தவியாய் தவித்தது.
மீரா முதல் பிறந்தநாளை கொண்டாடிய ஒரே வாரத்தில் மீனாட்சி நெஞ்சுவலியில் இறந்து போக.. மீராவை பார்த்துக் கொள்ளும் பொறுப்பு யசோதாவிற்கு வந்தது.
“இவள எல்லாம் நான் எப்படி என் பொண்ணு வெளிய சொல்லிக்குறது? லேடிஸ் கிளப்ல என் மானம் போகுது..! கொஞ்சமாவது என் கலர்ல ஒரு துளியாவது இருக்காளா? அட்ட கருப்பி.. ஆளும் கலையா இருக்காளானா? அதுவும் இல்ல” என்று மாநிறமாக ராஜநாராயணனை உரித்து வைத்து பிறந்திருந்த மகளை அறவே வெறுத்தார் தேவகி.
தொடரும்..
