Share:
Notifications
Clear all

கிஷ்-மீ 13

 

Jiya Janavi
(@jiyajanavi)
Member Admin
Joined: 2 years ago
Messages: 265
Thread starter  

அத்தியாயம் 13

 

அன்று மீராவை எங்கும் எதற்கும் வெளியே அனுப்பக்கூடாது என்று திட்ட விட்டமாக கூறி இருந்தார் ராஜநாராயணன். அதனால் கோழிக்குஞ்சை சுற்றி வரும் பருந்தை போல.. அவளை சுற்றி சுற்றியே வட்டமிட்டு கொண்டிருந்தனர் அவளது குடும்பத்தினர். 

 

முதலில் சற்று கடுப்பாக தான் இருந்தது மீராவிற்கு. இப்படி தன்னை கட்டுப்படுத்தி வைக்கின்றார்களே என்று..! அதோடு மட்டுமல்லாமல் தன்னுடைய சுதந்திரத்தை பறித்தது போலவும் அவள் நினைத்தாள். 

 

“இப்படியே என்ன சுத்தி சுத்தி வட்டம் அடிச்சிட்டு இருக்காதீங்க.. நேரம் கிடைச்சா தப்பிச்சு ஓடிடுவேன்” என்று அவர்களை வெறுப்பேற்றி இவளும் கோபத்தின் உச்சியில் அமர்ந்திருந்தாள்.

 

ஆனால் யசோதா கண்களில் தெரிந்த அந்த பரிதவிப்பும் கெஞ்சலும் அவளை கொஞ்சம் மலை இறக்கியிருந்தது.

 

அதனால் இலகுவாக அவர்களோடு விளையாடுவது அவர்களையே விளையாட்டுக்காயாய் பயன்படுத்துவது என்று வீட்டையே ரகலடித்துக் கொண்டிருந்தாள் மீரா.

 

மற்ற நேரமாய் இருந்தால் அவரவர் அவரவர் அறையில் இருந்திருப்பார்கள். இன்று அனைவரும் ஹாலிலேயே அதுவும் மீராவை சுற்றி சுற்றியே இருந்தனர்.

 

பெரும்பாலும் தேசிகனும் ரூபிணியும் அடிக்கடி வந்து செல்வதால் அவர்களுக்கு என்று தனி அறை அந்த வீட்டில் உண்டு. 

 

தேசிகனும் நாராயணனும் காலையிலேயே கல்யாணத்துக்கு முக்கியமான ஒரு நபரை சந்தித்து பத்திரிக்கை வைக்க சென்று விட்டனர்.

 

சில உறவு பெண்களும் ஆண்களும் இளம் வயது பெண்களும் யாசோதா மீரா ராதா ரூபிணி யாமினி ரதன் மட்டுமே அங்கே இருக்க.. சற்றே கலகலப்பாக சென்றது நேரம்.

 

இது தான் சாக்கு மகள் நல்ல மூடில் இருக்கிறாள் என்று யசோதாவும் ரூபிணியும் சேர்ந்து அவளுக்கு மெஹந்திக்கு ஏற்பாடு செய்து விட்டனர்.

 

முதலில் அன்னையை முறைத்தாலும், அவரின் கெஞ்சல் பார்வையில் அவள் தலையாட்ட, அனைத்தும் துரித கதியில் நடைபெற்றது. 

 

வட நாட்டின் பாரம்பரியப்படி இப்போதுள்ள ட்ரண்டை போல மெஹந்தி செய்யதான் யசோதாவுக்கு ஆசை. ஆனால் அதற்கு அவரது மகள் ஒத்துவர வேண்டுமே..!

 

“இங்க பாருங்க மாதாஜி…! மெஹந்தி போட்டு விடுங்க.. ஓகே அதுக்குன்னு நம்ம ஊரு மாரியாத்தாவுக்கு நேத்தி கடன் கட்டுற மாதிரி மஞ்சா கலர்ல எனக்கு உடுத்தி உட்கார வைக்காதீங்க.. ஆமா சொல்லிட்டேன்” என்று அவள் மிரட்டலாக சொல்ல, யசோதாவின் முகமோ சிறுத்து போனது. 

 

“என் பொண்ணு கல்யாணத்துக்கு எல்லாமே நல்லா செஞ்சு பாக்கணும்னு நான் ஆசைப்படுறது தப்பா மீரு..?” என்று வருத்தமாக கேட்டு கண்கள் கலங்கியவரை கண்டு அவள் மனம் இரங்க.

 

“நம்ம பாரம்பரியத்த ஃபாலோ பண்ணுங்க யசோதா மா..” என்று அவரின் இரு கன்னங்களையும் பிடித்து ஆட்டினாள்.

 

எப்பொழுதுமே அவள் அப்படித்தான்..! யசோதா சோகமாக இருக்கும் நேரங்களில் எல்லாம் அவரது கன்னங்களை பிடித்து ஒரு ஆட்டு ஆட்டி உதட்டை குவித்து அவர் உதட்டில் மெல்லிய முத்தம் வைப்பது வழக்கமாக கொண்டிருப்பாள். 

 

இன்றும் அதுபோல செய்யும் மகளை கண்டவர் “இனி மகள் புகுந்த வட்டு சென்று விடுவாள்” என்ற நினைப்பே வருத்தத்தையும் மகிழ்ச்சியையும் ஒருங்கே தர, அவளை இறுக்க அணைத்து அவர் கண்ணீர் சிந்த..

 

“ஹோல்டு.. ஹோல்டு.. நீங்க பாட்டுக்கு உங்க பிளாஷ்பேக் எல்லாம் ஆரம்பிச்சிடாதீங்க என்னால தாங்காது” என்றாள் கண்டிப்பாக..!

 

கண்களில் இருந்து கண்ணீரை உள்ளிழுத்துக் கொண்டு “எஸ் எஸ் நோ பிளாஷ்பேக்..! நோ கண்ணீர்..!” என்று சிரித்தவர் மகள்களுடனும் மருமகளுடன் மற்றும் இவள் வயது ஒத்த உறவின பெண்களுடன்  

மெஹந்தி கொண்டாட்டத்தில் சந்தோஷமாக ஈடுபட்டார்.

பார்த்து பார்த்து அனைத்தும் செய்தார். ஓரிடத்தில் நிற்கவே இல்லை. ஓடிக்கொண்டே இருந்தார்.!

 

ரூபிணி கூட “அண்ணி நீங்க உக்காருங்க. நீங்க ரொம்ப படப்படப்பா தெரியுறீங்க.. வேலைக்கு தான் இவ்வளவு ஆளு இருக்காம்ல.. நாங்க பார்த்துக்க மாட்டோமா?” என்று கேட்கவே செய்தார்.

 

“இல்ல ரூபி.. என் பொண்ணு கல்யாணத்த, என் கண்ணால பாப்பேனானு எவ்வளவு ஏக்கமா இருந்தேன் தெரியுமா? அப்படி நடக்கும் போது என்ன எல்லாம் செய்யணும்னு இவ்ளோ பிளான் வச்சிருந்தேன் தெரியுமா? இவளோட அசட்டு பிடிவாதத்தினால இவ்வளவு நாள் தள்ளி போச்சு.. இப்ப தகஞ்சு இருக்கு… நல்ல சீரும் சிறப்புமாக செய்யணுமா இல்லையா? கல்யாணம் முடிகிற வரைக்கும் நான் அப்படி படப்படப்பா தான் இருப்பேன்” என்ற அன்னையை ஆதூரமாக பார்த்தாள் மீரா.

 

“எங்க அத்தையை சைட் அடிச்சது போதும்.. போதும்..! எங்க அண்ணன சைட் அடிச்சாலாவது பரவாயில்ல..” என்று யாமினி மீராவின் வலது பக்கம் இடிக்க..

 

“யாரு இவ? போடி போ..! நல்ல ஆள பாத்து சொன்ன பாரு..! லவ்.. சைட்.. க்ரஷ் இதெல்லாம் இவ டிக்ஷனரியில் கெட்ட வார்த்தைக” என்று கண்களை விரித்து கூறிய தங்கையை முறைத்தாள் மீரா.

 

“அச்சச்சோ.! என்ன அத்தாச்சி இவ்ளோ கெட்ட பிள்ளையா இருக்கீங்க” என்று யாமினி சீண்ட..

 

“இது மட்டும் இல்ல யாமி. இவ கண் எதிர்க்க யாராவது லவ் லெட்டர் கொடுக்கிறது, கிரீட்டிங்ஸ் கொடுக்கிறது, இல்ல ப்ரோபோசல் பண்றத பார்த்தா.. அவ்வளவுதான் அந்நியன் மாதிரி பிரிச்சு விட்டுருவா அப்படி ஒரு வியாதி இவளுக்கு..”

 

“என்ன இப்படி ஒரு வியாதியா?” என்று போலியாக ஆச்சரியப்பட்ட யாமினி, “அப்போ எங்க அண்ணன் நிலைமை? அவ்வளோ தானா? ஏதாவது டச்சிங் கிஸ்ஸிங் நடக்குமா?”

 

“வாய்ப்பே இல்ல.. இரண்டு பேரும் ஹனிமூன் போகுறதுக்கு பதிலா கோவில் குளம்னு யாத்திரை தான் போவாங்க” என்று ராதா வார.. இருவரையும் முறைத்தாள் மீரா.

 

ராதாவும் யாமினியும் மாறி மாறி கிடைத்தது வாய்ப்பு என்று மீராவை கலாய்ச்சி தள்ள.. ஒரு கட்டத்தில் மீராவுக்குமே அவர்கள் பேசிய பேச்சில் சிரிப்பு ஒரு புறமும்.. வெட்கம் மறுபுறமும் வந்தது. 

 

“அத்தாச்சி ஸ்மைல்..” என்று ரதன் கூற.. மூவரும் புன்னகையை முகத்தில் நிறுத்தி அவனை திரும்பி பார்க்க..

 

அங்கே ரதன் தான் வளைத்து வளைத்து இவர்களை எல்லாம் போட்டோ எடுத்துக் கொண்டிருந்தான், புதிய காமிராவில்..!

 

“இப்ப எல்லாம் ட்ரெண்டிங்கு மாப்பிள்ளை பொண்ணு போட்டோவ கையில மெஹந்தியா போட்டுகிறது தானாமே? ஏன் சிஸ்டர் உங்களுக்கு அந்த மாதிரி போட தெரியுமா?” என்று மீராவுக்கு மெஹந்தி போட்டுக் கொண்டிருந்த பெண்ணை பார்த்து யாமினி கேட்க அவரும் தெரியும் என்றார். 

 

“அப்ப இருங்க..!” என்றவள் தேடிப்பிடித்து கிருஷின் போட்டோவை எடுத்து அந்த பெண்ணிடம் நீட்டி..

 

“அச்சு அசல் இப்படித்தான் வரணும்னு இல்ல குத்துமதிப்பா வந்தா கூட பரவால்ல” என்று சொல்லி மீராவின் கையை இழுத்து பிடித்து நீட்ட..

 

“முடியவே முடியாது..! நான் போறேன். இப்படி எல்லாம் போட்டுக்க மாட்டேன்” என்று மீரா அத்தனை பிடிவாதம் பிடித்தாள்.

 

“நோ நோ நீ போட்டே ஆகற..!” என்று யாமினியும் ராதாவும் அவளது கையை அழுத்த பற்றிக்கொள்ள மெஹந்தி போடும் பெண்ணும் சிரித்துக்கொண்டே அவர்களை பார்த்து,

 

“மேம்.. அவங்களா இஷ்டப்பட்டா தான் அழகா வரைய முடியும். இல்லைன்னா நல்லா வராது. ஃபோட்டோ பிடிக்கலைன்னா நேம் மட்டும் எழுதவா?” என்று கேட்டாள்.

 

“சொன்னா கேளுங்கடி.. என்னோட ஜாபுக்கு இதெல்லாம் சுத்தமா செட்டே ஆகாது.. மாதாஜி.. என்னைய இந்த வாலில்லா குரங்கு கூட்டத்துல மாட்டிவிட்டுட்டு நீங்க எங்க போனீங்க” என்று அவள் கத்த..

 

உடனே ஆஜரான யசோதா “அழகா இருக்கும் தானே மீரா? போட்டுக்கேயேன்..!” என்று கொஞ்ச கெஞ்ச.. ம்ஹூம் வேலைக்கு ஆகவில்லை அவளிடம்.

 

“நோ.. நோ..! அதெல்லாம் வேணாம்னா வேணாம்” என்று அத்தனை அடம்பிடித்தாள்.

 

“கல்யாணங்குறது வாழ்க்கையில ஒரு வாட்டி தான் அத்தாச்சி.. இந்த மாதிரி சின்ன சின்ன சந்தர்ப்பத்தை எல்லாம் வேஸ்ட் பண்ணாம யூஸ் பண்ணி அழகான மெமரீஸா சேவ் பண்ணி வச்சுக்கணும்” என்று யாமினி கூற.. மீரா அவள் அன்னையை கூர்ந்து பார்க்க..

 

“ஏய் விட்ருங்க டி வேணாம். அவ தான் வேண்டாம்னு சொல்றாள்ல.‌ அவள ஃபோர்ஸ் பண்ணாதீங்க” என்று இப்பொழுது யசோதாவும் மீராவுக்கு ஆதரவாக பேச…

 

“சரி பொழச்சு போ.. அட்லீஸ்ட் நாங்க சொல்ற டிசைனையாவது நீ வரைஞ்சுக்கணும்” என்ற ராதா மெஹந்தி பெண்ணின் காதில்..

 

“கண்டிப்பா எங்க அத்தான் பேரு இவ கையில இருக்கணும். அத நீங்க எழுதுனதுக்கப்புறம் தான் நாங்க இந்த இடத்தை விட்டு நகர்வோம்” என்று அந்த பெண்ணிடம் குசுகுசுவென்று கூறினாள். 

 

குழல் ஊதும் மாய கிருஷ்ணனின் ஓவியத்தையும்.. அவனது குழல் ஓசையில் மயங்கும் மீரா போல ஒரு பெண்ணையும் அழகாக அவளது கைகளில் வரைய ஆரம்பிக்க..

 

“வாவ் சூப்பர்..! பேருக்கு பேரும் பொருத்தம் ஆச்சு.. இமேஜூம் பக்காவா பொருத்தமா இருக்கு..” என்று இருவரும் சிலாகித்துக் கொண்டிருக்கும் போது தான் வீடே சற்று என்று பரப்பரப்பு நிலைக்கு தள்ளப்பட்டது.

 

உயர்ரக கார் ஒன்று அவர்கள் வீட்டு போர்டிகோவில் வந்து நிற்க.. ஓட்டுநர் வந்து திறந்த பிறகே, அதில் இருந்து இறங்கினாள், நடுத்தர வயது பெண் ஒருத்தி.

 

ஹை ஹீல்ஸ் சத்தமிட ஒய்யாரமாக நடந்தப்படி அவ்வீட்டின் உள் அலங்காரங்களை தனது கூலரை மேலே உயர்த்தி பார்த்து சற்று மெச்சுதலாய் உதட்டை சுழித்தார். 

 

“வீடு முன்ன விட கொஞ்சம் பெட்டரா இருக்கு நாட் பேட்..!” அலங்கார பூஜிதையாக உள்ளே வந்தார் தேவகி.

 

அனைவரும் முதலில் யார் என்று தெரியாமல் கூர்ந்து பார்த்துவிட்டு பின் அவர் யார் என்று தெரிந்ததும் ஸ்தம்பித்தனர். உறவினர்களோ தங்களுக்குள் குசு குசு என்று பேசிக் கொண்டிருந்தனர்.

 

“வீட்டுக்கு கெஸ்ட் வந்து இருக்கேன்.‌ உள்ளவானு கூப்பிட கூட இந்த வீட்ல யாரும் இல்லையா? ஏன் இந்த வீட்டு எஜமானி அம்மா எங்க போனாங்க?” என்று நக்கலாக கேட்டபடி அவள் அணிந்திருந்த அந்த மெல்லிய காஞ்சிபுரம் பட்டுப் புடவையை ஒயிலாக எடுத்து சோபாவில் படர விட்டு, தோரணையாக அமர்ந்தார் கால் மீது கால் போட்டபடி..!

 

அவரது ஒவ்வொரு அங்க அசைவுகளையும் பேச்சையும் பார்த்தபடி பேச்சு வராமல் ஸ்தம்பித்து நின்று இருந்தார் யசோதா.

 

“அண்ணி.. என்ன அண்ணி அப்படியே நின்னுட்டீங்க? போங்க அண்ணி.. இன்னும் ஏதாவது பேசி ரசபாதம் ஆகுறதுக்குள்ள சீக்கிரம் போங்க” என்று பின்னால் இருந்து ரூபிணி தான் அவரை உந்தித் தள்ள..

 

“ஹான்.. ஆஹான்.. போகணும்.. போய்‌தான் ஆகணும்” என்ற திக்கத்திணறி பேசியப்படி தேவகியின் முன் வந்த நின்றார் யசோதா.

 

“அடடே..! யாரு யாசோதா அம்மாவா? நல்லா இருக்கீயா? அதெல்லாம் நல்லா தான் இருப்ப..!” என்று உதட்டை ஏளனமாக சுழித்து கூறியவரை வெறுமையாக பார்த்தார் யசோதா. 

 

வீட்டில் அங்கங்கே உறவின பெண்கள் அழகாய் பட்டு புடவையில் சரச்சரக்க.. ஆண்கள் வேஷ்டியில் அம்சமாய் இருக்க… சிறு குழந்தைகள் அலங்காரத்தோடு ஒன்றோடு ஒன்று விளையாடியபடி அங்கொன்று இங்கொன்றாக ஓடிக்கொண்டிருந்தனர். அதை எல்லாம் கூர்பார்வையோடு பார்த்தார் தேவகி.

 

அவர் கார் வீட்டினுள்ளே நுழையும் பொழுதே வாசலில் போடப்பட்டிருந்த பந்தலும் அலங்காரங்களும் உள்ள இருந்த உறவினர்கள் கூட்டமும் அதனோடு கூடிய பூக்களின் நறுமணமும், சந்தன வாசமும் அவ்வீடு கல்யாணத்துக்கு தன்னை தயார்படுத்திக் கொண்டது என்பதை அழகாக எடுத்து இயம்ப..

 

அதனைப் புரிந்தாலும் புரியாதது போலவே யசோதாவை கேள்வியாய் பார்த்தார்.

 

“என்ன வீட்ல ஒரே கூட்டமும் கும்மாளமுமா இருக்கு? பந்தல் அலங்காரம்னு பயங்கரமா இருக்கு? என்ன விசேஷம் யசோதா அம்மா..! கல்யாணமா? யாருக்கு?” என்று எகத்தாளமாக கேட்டார் தேவகி.

 

அப்பொழுதும் யசோதா வாய் திறந்து ஒரு வார்த்தை பேசவில்லை. அங்கிருந்த ஒரு உறவினரிடம் கண்களை காட்ட..‌ அவரோ சற்று முன் தான் அனைவருக்கும் பகிரப்பட்ட முலாம்பழ ஜூசை கொண்டு வந்து நீட்டி “எடுத்துக்கோ தேவகி..” என்றார். 

 

“ம்ம்ம்.. விருந்தோம்பல்..! பலே.! பலே.! நல்ல விருந்தோம்பல் தான்..” என்று சிரித்தபடி அந்த முலாம்பழ ஜூசை தன் சிறு கையசைப்பால் எடுத்துச் செல்லுமாறு கூறினார் தேவகி. 

 

அந்த உறவினரோ “இவெல்லாம் இன்னும் திருந்தவே இல்ல போல.. நடு வீட்டில் வந்து உட்கார்ந்திருக்கா.. இவளுக்கு உபசரிக்க வேற சொல்றாங்க இந்த யசோதா அண்ணி..!” என்று முணுமுணுத்தவாறே சென்றார்.

 

“என் ஸ்டேட்டஸுக்கு இதெல்லாம்..” என்று இகழ்ச்சியாக கூறியவர் பின் யசோதாவை பார்த்து..

 

“யாருக்கு கல்யாணம் என்று கேட்டேனே யசோதா அம்மா?” என்று நக்கலாக கேட்டார்.

 

மூச்சை உள்ளிழுத்து தன்னை சீராக்கிக் கொண்டவர் “ஏன் என் பொண்ணு மீரா.. ராஜ மீராவுக்கு தான் கல்யாணம்.!” என்றார்‌ நிமிர்வாக..!

 

“பார்ரா மீராவுக்கு கல்யாணமாமே..! அதுவும் எனக்கு தெரியாம? அவளை பத்து மாசம் பெத்த அம்மா நான் இருக்கும்போது எனக்கு தெரியாம எப்படி நீங்க கல்யாணம் பண்ணலாம்?” என்றார் தேவகி ராஜநாராயணனின் முதல் மனைவி.

 

“உங்கள மாதிரி பொறுப்பில்லாதவ நான் கிடையாது. அதனாலதான் விஷயம் கேள்விப்பட்ட உடனே மீராவ பாத்துட்டு வாழ்த்திட்டு போகலாம்னு வந்துட்டேன். எங்க மீரா?” என்று கேட்டார் அதிகாரமாக..

 

சலசலப்பாக சந்தோஷமாக ஆரவாரமாக இருந்த வீடு சட்டென்று அமைதியாகி விட, காரணம் மீராவுக்கும் தெரிய வந்தது. அதுவரை இலகுவாக இருந்தவளது முகம் இறுக்கமாக மாறியது.

 

அதுவும் இல்லாமல் வீட்டின் அமைதியால் ஹாலில் தேவகி பேசிக் கொண்டிருந்த அனைத்தும் ஒன்று விடாமல் மீராவின் காதிலும் விழுந்தது.

 

யாமினியும் ராதாவும் சற்றே பயத்தோடு தான் மீராவை பார்த்தனர். 

 

சற்று நேரத்தில் உள்ளே வந்த யசோதா “வா மீரா..!” என்று அழைக்க..

 

“அம்மா..!” என்று பசுவை தேடும் கன்னுக்குட்டியாய் அவள் கண்கள் அலைபாய..

 

“அம்மா.. நான் இருக்கிறேன் வா டா” என்றவளை அழைத்துச் சென்று நிறுத்தினார் தேவகி முன்னால்..!

 

எப்பொழுதும் பேன்ட் ஷர்ட்டில் சுற்றிக்கொண்டு இருக்கும் மீரா இன்று யசோதா பிடிவாதத்தால் வெள்ளை நிற லஹங்காவை அணிந்திருக்க.. அதில் குட்டி குட்டியாய் ரோஜா பூக்கள் பிங்க் கவரில். கூடவே சிறு சிறு அணிகலன்களும் அவள் அழகுக்கு அழகு சேர்த்தன..! 

 

ஆகமொத்தம் தேவதையாய் நின்றிருந்தவளை, ஒரு வித இகழ்ச்சியாய் பார்த்தார் தேவகி.

 

“வா மீரா. வந்து உன் அம்மா கிட்ட ஆசிர்வாதம் வாங்கிக்க” என்று தேவகி அழைக்க இருந்த இடத்தை விட்டு அசையாமல் நின்று இருந்தாள் மீரா. 

 

“என்ன யசோதா மா பிள்ளைக்கு நல்ல பழக்கம் எல்லாம் கத்து கொடுக்கலையா நீ?” என்று மீண்டும் இகழ்ச்சியாக கேட்க..

 

“போ மீரா..” என்று மென் குரலில் யசோதா கூறினாலும் நின்றிருந்த இடத்தை விட்டு நகராமல் நின்றிருந்தாள் மீரா.

 

அதேசமயம் “மாப்பிள்ளை வரார்

மாப்பிள்ளை வரார்.. மாப்பிள்ளை வரார்..” என்று நாராயணனின் ஒன்றுவிட்ட தம்பி வந்து கூவ..

 

“என்னது மாப்பிள்ளை வராங்களா? என்று குரல் தந்தியடிக்க கேட்டார் யசோதா. 

 

“ஆமா அண்ணி.. நம்ம மாப்பிள தான். பைக்ல வந்து இறங்குனத நான் மாடியில் இருந்து பார்த்தேன்” என்றார் அவர். மீண்டும் ஒரு பரபரப்பு அவ்விடத்தில் அனைவருக்கும் தொற்றிக் கொண்டது.

 

இப்பொழுது தேவகியோ ஒரு வித வெற்றி பார்வையோடு யசோதாவை பார்த்தார்.

 

“நான் யாருனு கண்டிப்பா சொல்லி இருக்க மாட்ட.. மாப்பிள்ளை

வரட்டும் நானே என்னை அறிமுகப்படுத்திக்கிறேன்” என்றவரின் கண்களில் தெரிந்த கொடூரமும் வன்மமும் யசோதாவுக்கும் மீராவுக்கும் மனதில் திக் என்றானது.

 

 

தொடரும்..


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top