அத்தியாயம் 12
அக்காடி என்ன டி சொல்ற?” என்று விவேக் போல விழியை விரித்து அதிர்ச்சியாய் கேட்ட ராதாவை பார்த்து கண்ணடித்தவள்,
“அதெல்லாம் அப்படித்தான்..! ஒரு விஷயம் சொன்னா அனுப்பவி டி அது எப்படி இது எப்படினு ஆராயாத டி என் சிப்ஸூ” என்று எதிரில் அமர்ந்த தங்கையின் நெற்றியில் உள்ளங்கையால் தட்ட.. சற்று என்ற பின்னால் சாய்ந்து விடப்போனவள், நொடி பொழுதில் சுதாரித்து, “போடி லூசு அக்கா” என்று திட்டு விட்டு தன்னறைக்கு ஓடி விட்டாள் ராதா.
“லூசு..? ஆமா.. லூசு தான் நானு.!” என்ற மீராவின் கண்களில் கடந்த காலத்தின் வலிகள் ரணங்கள் நிகழ்காலத்தில் கண்முன்னே வந்து செல்ல.. வலிக்க வலிக்க அதையே அசை போட்டாள்.
“பாப்பா.. கடந்த காலத்தை நிகழ்காலத்துல நெனச்சிட்டு இருந்தா எதிர்கால வாழ்வு சூனியமாகி விடும். இருக்கும் சந்தோஷமும் நிலைக்காது..! அதனால அதையெல்லாம் தூக்கி போட்டுட்டு நிகழ்காலத்தில ஒவ்வொரு நிமிஷத்தையும் அனுபவிச்சு வாழு பாப்பா.. என் மருமக வாழக்கைய அனுபவிச்சு வாழ பிறந்தவ” என்று தேசிகன் அவ்வப்போது கூறும் அறிவுரையை இன்று மனதில் ஏற்றவள்,
“தேங்க்ஸ் மாமா ஜி..!” என்று முகம் தெளிய மாமனுக்கு மானசீகமாக நன்றியை கூறிவிட்டு உறங்கி விட்டாள்.
காலையில் மீரா எழும்பொழுதே அவளுக்கு திவ்ய தரிசனம் கொடுத்தார் யசோதா, “பாப்பா…!” என்ற அவள் முன் குனிந்தப்படி.
“அய்யோ.. அம்மா பேய்..! பயந்தே போயிட்டேன். ஏன்மா காலங்காத்தால இப்படி பயமுறுத்துற? வீட்ல தானே இருக்கேன்” என்று நெஞ்சில் கை வைத்து அன்னையை கடிந்தவளை கண்டு,
“அதில்ல டா பாப்பா.. நீ சட்டுனு கிளம்பி பட்டுனு ஓடிப் போயிடுவ..” என்றார் யசோதா முகத்தை பாவம் போல வைத்து.
“எதே ஓடிப் போயிடுவேனா?”
“இல்ல இல்ல வேலைக்கு போயிடுவ..! அதுக்கப்புறம் உங்க அப்பா கிட்ட யாரு திட்டு வாங்குறது? கொஞ்சம் ரெண்டு நாளைக்கு மட்டும் வீட்ல இரு பாப்பா..” என்று அத்தனை கெஞ்சினார் அவர்.
“ரெண்டு நாளைக்கு அப்புறம் வேலைக்கு போனா தப்பு இல்லையா மாதாஜி?” என்று அவள் கேட்க..
“அதுக்கப்புறம் உன்னை நாங்க கல்யாணம் பண்ணி கொடுத்துடுவோமே.. நீ ஆச்சு உன் மாமியார் ஆச்சு..! எனக்கு தொல்லை விட்டுச்சு..!” என்று அவர் ரெண்டு கையும் நெஞ்சில் வைத்து நிம்மதியாக கூற..
“அப்படி எல்லாம் உங்களை நிம்மதியா விட்டுற மாட்டேன் ஞாபகம் வச்சுக்கோங்க” என்றவள் “சரி சரி வந்ததுக்கு பெட்ஷீட் எல்லாம் மடிச்சு போடுங்க” என்றபடி குளியலறைக்குள் புகுந்து கொண்டாள்.
மீரா காலையில் இருந்து எங்கெல்லாம் செல்கிறாளோ, அவள் பின்னாலேயே யசோதாவும் சென்றார்.
“மாதாஜி…!!” என்று அவள் பல்லை கடிக்க…
“இல்ல பாப்பா.. சும்மா..” என்று சமாளித்தவர், அவளது முறைப்பில் சென்று விட்டார்.
“இவங்களோட..” அதுக்குப்பின் சாப்பிட சென்றால் ராதா வந்து அவள் அருகில் அமர்ந்து கொள்ள.. அவளை முறைத்தவாரே சாப்பிட்டு முடித்தாள்.
ஓய்வாக ஷோபாவில் வந்து அமர்ந்தாள் மீரா, “என்ன மீரா சாப்பிட்டியா?” என்றப்படி அவளது அத்தை ரூபிணி வந்து அமர,
“இப்படி நீங்க நச்சரிச்சு நச்சரிச்சு என்னைய துரத்தப் போறிங்க பாருங்க” என்று கோபமாக முறைத்து விட்டு வாசல் பக்கம் சென்றாள் மீரா.
“ஹாய் அத்தாச்சி..” என்று வந்தான் ரதன், அவளது மாமா தேசிகனின் மகன்.
“என்னடா காலையிலிருந்து எல்லாரும் என்னைய சுத்தி ரவுண்டு கட்டிக்கிட்டே இருக்கீங்க.. என்னடா விஷயம்?” என்று அவள் எரிந்து விழ..
“நீ பாட்டுக்கு வேலைக்கு போறேன்னு சொல்லிட்டு கிளம்பி ஓடிட்டேனா..”
“டேய் ரதா..!!”
“லிட்ரலி மீனிங் பண்ணாதே அத்தாச்சி.. வேலைக்கு போயிட்டேனா? பர்த்டே பார்ட்டி எங்கேஜ்மென்ட் இப்படி ஏதாவது இருந்தா பரவால்ல.. பெரிய காரியம்னா? இந்த சமயத்துல போக கூடாது இல்லையா நீனு?”
“என்கிட்ட வா இன்னொரு சீக்ரெட் சொல்றேன்.. நீ வீட்ல இல்லைனா.. வீட்ல இருக்குற, வரப் போற சொந்தக்காரங்களுக்கு யார் பதில் சொல்றது அத்தாச்சி? அதனாலதான் மாமா உன் பின்ன இப்படி யாரையாவது வச்சி அரெஸ்ட் பண்ணி வச்சுக்கிட்டே இருக்காரு” என்று சிரித்தான்.
“முளைச்சு மூணு இல விடல நீ எல்லாம் என்னை பார்த்து சிரிக்கிற மாதிரி ஆயிட்டுடா என் நிலைம..! ஏன் டா தம்பி, நீ ரன்னிங் வேகமா ஓடுவியா?”
“உசைன் போல்ட் அடுத்தது நான் தான் அத்தாச்சி..!” என்றான் பெருமையாக..!
“அப்ப எங்க என்னைய புடி” என்று அவள் வேகமாக ஓட பின்னாடியே துரத்தினான். மீரா வெளியில் செல்ல முயல்வதை பார்த்து,
“அத்த.. மாமா.. அக்கா.. அண்ணா.. அப்பா.. அம்மா.. எல்லாம் ஓடி வாங்க அத்தாச்சி எங்கேயோ வெளியில ஓடுறாங்க..” என்று இவன் சத்தம் போட…
ரதனை பார்த்து சிரித்தவள் வெளியே ஓடாமல் சட்டென அவர்களது தோட்டத்திற்குள்யே அவள் புகுந்து ஓட..
“என்ன நேரத்துல பொறந்தாளோ.. எனக்கு நெஞ்சு வலி வராம விடமாட்டா போலயே..” என்ற யசோதா “ஓடிங்கடி ரெண்டு பேரும்” என்று ராதாவையும் யாமினியையும் விரட்ட, அவர்களும் தேசிகனின் மகன் ரதன் பின்னாலே ஓடினார்கள்.
“அத்த.. அங்கன தான் மீரா வரா.. புடிங்க.. புடிங்க..” என்று யாமினி கத்த, யசோதாவும் ரூபிணியும் ஆளுக்கொரு மூலையில் நின்று கொண்டு அவளை பிடிக்க முயல, அவர்களுக்கு இடையில் புகுந்து லாவகமாக தப்பி ஓடினாள்.
இப்படியாக.. அனைவரையும் ஒரு மூன்று நான்கு சுத்து ஓட விட்டு அதன் பின் மூச்சு வாங்க நின்றவள், திரும்பி அவர்களை பார்த்து சாவதானமாக வீட்டுக்குள்ளே செல்ல..
“டேய்.. அக்கா வீட்டுக்குள்ள தான போறா? ஏன் டா வெளிய ஓடுறானு சொன்ன?” என்று ராதா ரதனை திட்ட.. அந்த பக்கம் வாகினியும் வந்து அவன் காதை பிடித்து திருக..
“ஐயோ அக்கா அத்தாச்சி.. சத்தியமா பெரிய அத்தாச்சி வெளில போறேன்னு தான் சொல்லி ஓடுனாங்க..” என்று அழுகாத குறையாக பேசியவனை பார்த்து கண்ணடித்த மீராவோ,
“அது ஒன்னும் இல்ல கைஸ்.. ரெண்டு நாளா எக்ஸைஸ் பண்ணல.. ஜாகிங்கும் போகல.. அதனால ரன்னிங் போனேன்” என்று சிரித்து விட்டு உள்ளே குதித்தப்படி சென்றவளைக் கண்டு மொத்த குடும்பமும் நெஞ்சில் கை வைத்து தோட்டத்திலேயே அமர்ந்தது… ஓடிய களைப்பில் சோர்வாக..!
“அப்புறம்.. ஒன்னு இந்த மீராவா நினைச்சா தான் எங்கேயும் இருப்பா.. அவள கட்டி போட உங்க யாராலயும் முடியாது..!” என்று போனிடைலை ஸ்டைலாக பின்னால் தூக்கிப் போட்டு செல்லும் மகளை பார்த்த யசோதா, “யோவ் நாராயணா.. புள்ளிய பெக்க சொன்னா பொறுக்கிய பெத்து வச்சிருக்கியே..!” என்று திட்டிக் கொண்டிருந்தார்.
இந்த பக்கம் மீராவோடு கல்யாணத்திற்கு மல்லிகட்டு கொண்டிருந்தது அவர்களது குடும்பம்..!
அங்கு கிருஷ்ணாவோ அமைதியாக இருந்தான். தீனதயாளனே அவனின் அமைதியை கண்டு ராகுல் கண்ணாவை அழைத்து “டேய் சின்னவனே.. நெசமாவே உன் அண்ணன் கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டானா? வந்தபோது அந்த குதி குதிச்சான்,இப்போ அந்த பொண்ண பார்த்து சைலன்ட் ஆயிட்டான். வேற ஏதாவது பிளான் ஏதும் பண்றானாடா? கல்யாணத்துக்கு முன்னால ஓடி கீடி போக மாட்டானே இல்ல..”
“அதெல்லாம் ஓட மாட்டான்பா தைரியமா இருங்க..!”
“இல்ல டா.. போன தடவ நிச்சயம் வரைக்கும் வந்து நின்னு போச்சு. மொட்டை கடுதாசி.. அன்நோன் நம்பர் இருந்து மெசேஜ் பண்றது கிராபிக்ல போட்டோ மார்ஃபிங் பண்ணி அனுப்புறது.. இந்த மாதிரி வேலை எல்லாம் எதுவும் நடக்காது இல்ல. எனக்கு என்னமோ உங்க அண்ணனு இதெல்லாம் பண்ணி இருப்பானோ ஒரு டவுட்டாவே இருக்குடா” என்று தீவிரமாக கேட்டுக் கொண்டிருந்தார் சின்ன மகனிடம்.
“அப்பா.. ஏம்பா?? அண்ணன் இந்த மாதிரி எல்லாம் பண்ணாது எனக்கு தெரிஞ்சு. யாராவது தன் சொந்த கல்யாணத்த நிப்பாட்ட தனக்கு தானே சூனியம் வச்சுப்பாங்களா? அப்படி எல்லாம் கண்டிப்பா அண்ணன் பண்ணி இருக்காது. வேற யாரும் அண்ணன் வளர்ச்சி பார்த்து அப்படி பண்ணி இருக்கலாம்” என்றதும்,
சின்ன மகனை மேலும் கீழும் பார்த்தவர் “ஏன்டா உனக்கே இது ஓவரா இல்ல? உங்க அண்ணா என்ன சேம்பியன் டிரோபி வாங்கினானா இல்ல ஐபிஎல்ல ஏதாவது ஒரு டீமையே ஏலத்துக்கு எடுத்துட்டானா? அவன் வளர்ச்சியை கண்டு எல்லாரும் பொறாமை பட?? சாதாரண ஐடில வேலை பார்க்கிறான். இப்போ மெட்ரோ சிட்டியில் மட்டுமல்ல சாதாரண சிட்டில கூட ஐடி கம்பெனிக வந்துருச்சுடா..!” என்று அவர் பேசியதை கேட்டபடி,
“என்ன ரெண்டு பேரும் டிஸ்கஸ் பண்ணிட்டு இருக்கீங்க?” வந்து அமர்ந்தான் கிருஷ்.
“அது ஒன்னும் இல்ல கல்யாணத்த பத்தி தான் டிஸ்கஸ் பண்ணிட்டு இருக்கோம் கிருஷ்” என்று கண்ணா பதில் கொடுக்க..
“ஆஹான்..” என்றவன், “டேய்.. நீங்க யாருன்னு எனக்கு தெரியும். நான் யாருன்னு உங்களுக்கு தெரியும். அப்புறம் எதுக்கு இந்த பேச்சு. சரி சரி எனக்கு ஒரு லட்சம் வேணும். அக்கவுண்ட்ல மாத்திவிடுங்க இல்ல கேஸா கொடு சொல்லு டா” என்று கேட்டான்.
“எதுக்காம்? ஒரு லட்சம்?” என்று தீனதயாளன் கேட்க கண்ணனை பார்த்து கேட்க.. எனக்கும் தெரியாது என்று உதட்டை பிதுக்கியவன் அண்ணனை பார்த்தான்.
“வேறு எதுக்கு என் உட்பீக்கு கிஃப்ட் கொடுக்க தான்.!” என்று குண்டை போட்டவனை அதிர்ச்சியோடு பார்த்தனர் இருவரும்…
“டேய் நிஜமா தான் சொல்றேனா?” வேகமாக கண்ணாவின் முதுகில் தட்டி தீனதயாளன் கேட்க..
முதுகை தடவிக் கொண்டு “நிஜமா வாடா கிருஷ்?” என்று கண்ணனும் ஆச்சரியம் விலகாமல் கேட்க..
“யா..!” என்று ஸ்டைலாக தோலை குலுக்கிக் கொண்டான் கிருஷ்.
“என்ன இவ்வளவு நேரம் அப்பாவும் பிள்ளைகளும் பேசாறாங்க.. ஆனா அந்த சச்சரவு சத்தம் எதுவுமே இல்லாமல் அமைதியா இருக்கே அந்த இடம்..! அப்படி என்று ரகசியம் பேசிட்டு இருக்காங்க?” என்று சங்கீதா தன் அறையில் இருந்து எட்டி எட்டி பார்த்தவர், “என்ன ரகசியம்னு தெரிந்தே ஆகணுமே” என்று மூவருக்கும் குளிர்பானம் கொடுப்பது போல எடுத்துக்கொண்டு வந்தார்.
அவர்களிடம் கொடுத்தவர் “என்னங்க நீங்க இன்னும் ரிசப்ஷனுக்கு டெக்ரேசன் பாக்குறதுக்கு வர சொன்னாங்கன்னு சொன்னீங்களே அங்க போகலையா?” என்று கேட்டார்.
“ஏண்டி அத நான் நேத்தி சொன்னேன். இன்னைக்கு வந்து கேட்கிற.. வயசாக ஆக உனக்கு மறதி ஆயிடுச்சு” என்று கிண்டல் அடித்தபடியே குளிர்பானத்தை எடுத்துக் கொண்டார் தீனதயாளன்.
மகன்களுக்கும் கொடுத்தவர்,
“அப்பாவும் மகன்களும் என்ன ரகசியம் பேசிட்டு இருக்கீங்க?” என்று கேட்டவர் கிருஷூக்கு அருகில் அமர்ந்தார்..
“அது ஒன்னும் இல்லம்மா.. அண்ணனுக்கு ஒரு லட்சம் வேணுமாம்” என்றான் கண்ணன்.
அவரும் ஆச்சரியமாக மகனை பார்க்க.. ஆமா என்று அவன் தலையசைத்தான்.
“ஒரு லட்சம் எதுக்குடா உனக்கு?” கேட்டதும்,
தன் பக்கம் தாயின் முகத்தை தாடையை பற்றி திருப்பிய கண்ணா “எதுக்குனு நான் சொல்றேன். அந்த ஒரு லட்சம்ல அண்ணிக்கு ஏதோ கிஃப்ட் வாங்க போறானாம்” என்றான்.
“நிஜமாவா டா?” என்று கேட்டவருக்கும் ஆச்சரியம், அதைவிட ஆனந்தம்.
மகன் பட்டு கொள்ளாமல் தொட்டும் கொள்ளாமல் இப்படி கல்யாணத்தில் ஈடுபடாமல் இருக்கிறானே என்று அத்தனை வருத்தம் அவருக்கு.
என்னதான் நல்ல பெண்.. நல்ல குடும்பம் என்றாலும்.. ஜாதக பொருத்தம் இருந்தாலும்.. மன பொருத்தம் என்று ஒன்று வேண்டும் அல்லவா?
இன்று மனம் உவந்து அந்த பெண்ணுக்கு ஒன்று வாங்க நினைக்கிறான் அதுவே அவருக்கு அத்தனை சந்தோஷத்தை கொடுத்தது.
“இது தான் டா எதிர்பார்த்தேன்” என்று மகன் கன்னத்தை வருடி திருஷ்டி கழித்தவர், பாய்ந்து சென்று கணவனின் போனைப் பறித்து அதிலிருந்து ஒரு லட்ச ரூபாய் மகனின் நம்பருக்கு ஜிபே செய்தார்.
“கிருஷ்ணா அனுப்பிட்டேன் நீ போய் மருமகளுக்கு உனக்கு பிடிச்ச மாதிரி வாங்கு” என்று ஆரவாரமாக சொன்ன அன்னையை கட்டிக் கொண்டவன்,
“அம்மான்னா அம்மா தான்..!” என்றபடி வண்டி சாவியை விரல்களில் சுழற்றிக்கொண்டு விசில் அடித்தபடி சென்றான் கிருஷ்.
மகனை சந்தோஷத்தோடு வழி அனுப்பியவர் திரும்பி பார்க்க அங்ஙு தீயாய் முறைப்போடும் மனைவியை பார்த்தார் தீனதயாளன்.
“உன்னை எவன்டி இப்போ அவசரமா ஜிபேல பணம் அனுப்ப சொன்னது?”
“இது என்ன புள்ள அவன் பொண்டாட்டிக்கு என்ன மொத மொத ஒன்னு கேட்கிறான். மனசு மாறத்துக்குள் உடனே அனுப்பி வைக்கணும்னு உங்களுக்கு ஒரு யோசனை வருதா? இப்ப அனுப்புன என்ன திட்டுறீங்க?” என்று அவரும் கடுப்பாக கேட்க…
“அதுக்கு ஏன் டி ஜிபே பண்ணுன?
நான் கொடுக்க வேண்டாம்னு எப்ப சொன்னேன்? ஏன் ஜிபே பண்ணனு தான் கேட்டேன். உள்ள தான் கல்யாணத்துக்கு பணம் இருக்கு இல்ல.. அதை எடுத்துட்டு போய் கொடுத்திருக்கலாம் இல்ல..”
“கொஞ்சமாவது உங்களுக்கு ரோசனை இருக்கா.. ஒரு லட்ச பணத்தை எப்படி புள்ள எடுத்துட்டு போவான்? அவன் பாட்டுக்கு மருமக கூட பேசிட்டு இருக்குற டைம்ல யாராவது பாக்கெட்ட ஆட்டைய போட்டா?” என்று அவர் பெரும் வருத்தத்தோடு கேட்க, தலையில் அடித்துக் கொண்டார் தீன தயாளன்.
“ஏன் டி ஆத்திர அவசரத்திற்கு நானும் பணத்தை கையிலேயேவா தூக்கிக்கிட்டு அலைய முடியும்? புள்ளன்னு வந்துட்டா எதையும் யோசிக்கிறதே கிடையாது. அது புருஷனை பத்தி கொஞ்சம் கூட யோசிக்கிறது கிடையாது” என்று நொடித்தவர்,
“டேய் கண்ணா உன் கிட்ட ஜிபில பணம் இருக்கு தானே.. வா நம்ம கொஞ்சம் வெளியில போயிட்டு வரலாம்” என்று சின்ன மகனை அழைத்துக்கொண்டு சென்றார்.
எப்படியோ மகனின் மனம் மாறிவிட்டது. நன்றாக திருமணம் நடந்து மருமகளோடு வாழ்ந்து விடுவான் என்று சந்தோச பூரிப்போடு அவர் மற்ற வேலையை பார்க்க செல்ல..
அவரது மகனோ வில்லங்கத்தை விலை கொடுத்து வாங்க வேண்டும் என்று மீராவை தான் தேடி சென்று கொண்டிருந்தான்.
ஆனால் அதைவிட பெரிய வில்லங்கம் அங்கே வந்து அமர்ந்திருந்தது.
“என்னக்கா என் பொண்ணுக்கு கல்யாணம். ஆனா பெத்தவ எனக்கே சொல்லாம ஏற்பாடு பண்ணி இருக்கீங்க போல.. ஆனா பாருங்க.. எனக்கு செய்தி வந்துட்டு” என்று கால் மேல் கால் போட்டு அங்கே அமர்ந்திருந்தார் தேவகி. ராஜநாராயணனின் முதல் மனைவி சாட்சாத் மீராவைப் பெற்ற அன்னை.
தொடரும்..
