27
என்னது கண்ணபிரான் பாவமா?
ஆமாம்ல!! எல்லாம் வீராவின் வீர விழுதுகளின் செயல்கள்!!
வீராவை கண்ணபிரான் திமிராக அங்கே அழைத்து வந்து விட்டு சிறையில் தள்ளி அவனை ஏட்டை பார்த்துக்க சொல்லிவிட்டு தன் பேங்க் பேலன்சை ஏற்ற.. உடனடியாக அம்பலவாணனை பார்க்க சென்றுவிட்டான் அவன்!!
என்ன உள்நோக்கத்தோடு வீரா உள்ளே வந்தான் என்பதை தெரியாத அம்பலவாணன் அக மகிழ்ந்து அவனுக்கு அள்ளி அள்ளிக் கொடுக்க.. அன்று அவ்வாறு அவனை ஏசிய அம்பலவாணன் அடிதொண்டர்கள் இன்று கண்ணபிரானின் வீரதீர சாகசத்தை புகழ்ந்து பேச… நிலத்திலேயே இல்லை கண்ணபிரான். வானத்தில் பறந்தான்!! மேகத்தில் மிதந்தான்!!
"எல்லாத்தையும் விட.. ஐயா பொண்ணையே ஏமாற்றி அவேனுக்கு எதிரே பேச வச்சீக பாத்தீகளா.. அங்கன நிக்கிறீக நீங்க!!" என்று ஜிங்ஜாங்கில் ஒன்று கூற.. அம்பலவாணனிற்குமே அது சற்று சந்தோசத்தை கொடுத்தது.
ஏனென்றால் அன்று அத்தனை பேர் முன்னிலையில் "இவந்தேன் ,யேன் புருஷன்.. இங்கன தேன் இனி இருப்பேன்!!" என்றவள், இன்று மனம் மாறி அவன் மேலேயே வழக்கு தொடர வைத்திருக்கிறான் என்றால் கண்ணபிரான் சாமானியப்பட்டவன் அல்லன்!! இதை சாக்காக வைத்து மகளை மெதுவாக அங்கிருந்து இங்கே கொண்டு வந்து விட வேண்டும். அதற்கு பின் தான் நினைக்கிறது தான் நடக்கணும் என்று மனதுக்குள் பல திட்டங்களை தீட்டி கொண்டிருந்தான்.
திட்டம் தானே? தீட்டட்டும்.. தீட்டட்டும்!! பல கட்டங்களை கட்டி தீட்டட்டும்!! கட்டங்களில் எல்லாம் புகுந்து அவர்களின் கண்ணில் விரலை விட்டு ஆட்ட போகிறான் வீரன் அவனே!!
இங்கே கண்ணாபிரான் புகழ்ச்சி மழையில் நனைந்து.. உயர உயர பறந்து கொண்டிருக்கும் வேளையில்.. அங்கே போலீஸ் ஸ்டேஷனில் இருந்து ஏகப்பட்ட அழைப்புகள் கண்ணபிரானுக்கு.
"என்னய்யா ஒரே போன் மேல போனா வந்துகிட்டு இருக்கு?? என்னென்னு கவனி.. அந்த வீரா தப்பிச்சிடப் போறான்? அவேன் அங்கன தேன் இருக்கானானு என்னனு அந்த ஏட்டுக்கு போன போட்டு கேளு" என்று ஒருவித பயத்தையும் பதட்டத்தையும் வெளிக்காட்டிக்கொள்ளாமல் அம்பலவாணன் கூற..
"இதோ.. இதோ.. ஐயா" என்றவன் ஏட்டின் போனை அட்டென்ட் செய்ய "சார்ர்ர்... சீக்கிரம் வாங்க சார்.. இங்கன நடக்கிறது எதுவுமே சரியில்லை" என்று பதட்டமாக பேசினார் ஏட்டு.
"ஐயோ. அந்த வீரா தப்பிச்சி போயிட்டானா என்ன? சொல்லும்யா ஏட்டு?" என்று அவசரமாக கண்ணபிரான் கேட்க.. அங்கேயே ஆழ்ந்த அமைதி அனைவரின் காதுகளும் அடுத்த ஏட்டு என்ன சொல்லப்போகிறார் என்பதிலேயே கவனமாக குவிந்து நின்றது.
"அதெல்லாம் ஒன்னும் இல்ல சார்!! அந்த வீரா பையன் நல்லா தேன் இருக்கியான். நீக விட்டுட்டு போனா ரூமுக்குள்ள போனவன் தேன்.. ஏதோ மாமியார் வூட்டுக்கு விருந்துக்கு வந்த மாப்புள போல சொகமா படுத்து தூங்கிட்டு இருக்கியான்.. ஆனா அவேன் ஆளுங்க தேன்...ஐயையோ இருடா.. இருடா.. எடுப்பட்ட பயல அதே எடுக்காதடே.. அவசரப்பட்டு எதுவும் செஞ்சிடாதேடே.. இதோ வந்துட்டேன் டா.. இருடா.." என்று கத்திக் கொண்டே ஏட்டு ஓடுவது கேட்க.. அங்கே ஏதோ பெரும் பிரச்சனை என்பதை புரிந்துகொண்ட கண்ணபிரான் அம்பலவாணன் மற்றும் அவனது ஆட்கள் அனைவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
"என்ன டே சொல்றான் அந்த ஏட்டு? அவேன்.. வீரா.. தப்பிச்சி போய்ட்டானாமா?" என்று ஏமாற்றம் கோபம் கலந்து அம்பலவாணன் கேட்க..
"அதெல்லாம் ஒன்னும் இல்லை ஐயா.. அவேன் நல்லா தேன் படுத்து தூங்கிட்டு இருக்கியான். ஆனா அவனோட ஆளுங்க தேன் எதோ வேலை காட்றாங்க போல.. எதோ அடிச்சு நொறுக்குறானுக போல.. நான் இந்தா கிளம்பி போய் அவனுங்களுக்கு ஒரு வழி பார்க்கிறேன்" என்று கிளம்பினான் கண்ணபிரான்.
"இரு.. இரு.. நம்ம ஆளுகள அனுப்புறேன்.. அவனுங்கள கை கால உடைச்சு போட்டு எல்லா பயலுவோளையும் புடிச்சு உள்ள போடு!!"
"வேணா ஐயா.. உங்க ஆளுக வந்தா பிரச்சினை வேற மாதிரி வரும். உங்க ஆளுக அவேன் ஆளுகள அடிக்க.. அவனுங்க திருப்பி அடிக்க.. அதுல இரண்டு ஊரு பிரச்சனையா திரும்ப மாறும். இதையே நான் கைய வைச்சா போலீஸ் ஸ்டேஷன் தாக்கினானுவோ.. போலீசை தாக்கினானுவோனு சொல்லி கேஸ் ஃபைல் பண்ணி உள்ள தள்ளி விடுவேன் நாய்கள.. நீங்க கவலைப்படாதீங்க!! யேன் கிட்ட ஒருத்தன் வாலாட்ட முடியாது.." என்று ஜம்பமாக வீரன் நினைவுடன் போன கண்ணபிரான் தான் பாவமாக ஏட்டை பார்த்து "அவனுகள வெளியே எடுத்து போக மாட்டாரா?" என்று கேட்டது!!
அப்படி என்னதான் ஜியா செய்தானுங்க அந்த தடிபயலுக..
உஷ்.. உஷ்.. அடக்கம்!! அடக்கம்!! அவனுக எல்லாம் நம் வீராவின் வீர விழுதுகள்.. மரியாத பேசு.. இல்லைன்னா..
இல்லன்னா… என்ற நொடி பறந்து வந்தது அருகே விழுந்தது உலக உருண்டை!!
ஒன்னும் இல்ல ஒன்னும் இல்ல.. விழுதுகளின் அறப்போராட்டம் தேன்!! இதோ ஆரம்பிச்சுட்டானுகள.. அப்படி ஓரமா நில்லுடே!! இன்னும் நிறைய பொருளுக வந்து விழும். உனக்கு என்ன வேணுமோ எல்லாத்தையும் எடுத்திட்டு போ.. அட.. அட.. நில்லுடே.. கேட்டுட்டு இப்படி ஓடுனா என்னா அர்த்தம்??
பாவம் அப்பாவி… உயிர கைல புடிச்சுட்டு ஓடிட்டு!!
அவசர அவசரமாக இங்கே காவல் நிலையத்திற்கு கண்ணபிரான் வந்து பார்க்க.. முன்னே ஒரு கூட்டம் நின்று கொண்டிருந்தது. காவல் நிலையத்துக்கு வெளியே நின்றிருந்த கூட்டத்தை போல அங்கு சிறையிலும் இன்னும் நிறைய பேர் இருந்தனர்.
"யோவ் ஏட்டு!! என்ன யா நடக்குது இங்கன?" என்று கண்ணபிரான் கேட்க..
"அதை ஏன் சார் கேக்குறீக?? அண்ணனை பாக்கணும் ஒருத்தன் வந்து கேட்டான். உங்க அனுமதி இல்லாமல் உள்ளே அனுப்ப முடியாதுன்னு சொன்னேன்!! நான் சொன்னது சரிதானுங்களே?" என்று ஏட்டு கேட்க..
"ஆமா.. சரி தேன்..என்னைய கேட்காமல் எப்படி அனுப்ப முடியும்?" என்று மிடுக்குடன் கண்ணபிரான் சொன்னான்.
"அதைத்தேன் அங்க பக்கி பயப்புள்ள கிட்ட சொன்னேன்.. அந்த எடுபட்ட பய என்ன நெனச்சானோ ஓங்கி யேன் கன்னத்தில் ஒரு அப்பு அப்பி.. இப்போ நான் உன்னைய அடிச்சிட்டேனுல என்னைய தூக்கி உள்ள போடுனா.. எனக்கு வந்த வேகத்திற்கு கோபத்திற்கு அவனுக்கு தூக்கி உள்ள போட்டுட்டேன்" என்றார் ஏட்டு.
"சூப்பர்.. சூப்பர்.. உன் மேல கைய வெச்சவன உள்ள தூக்கி போட்டது கரெக்ட் தான். ஆனா அதுக்கு ஏன் நீ பதிறிட்டு போன் பண்ணின? ஏன் உள்ள இத்தனை பேர் இருக்கானுக?"
"அந்த கொடுமையை ஏன் சார் கேக்குறீக!! அவன மட்டும் உள்ளே அனுப்பின.. என்னையும் அனுப்புனு அடுத்தவன் வந்து கேட்டான்.. அவன்கிட்ட இந்த விஷயத்தை சொன்னேனா.. அவேன் யேன் மறு கன்னத்தில் அடிச்சிட்டு.. அவன தூக்கி உள்ளே போட்ட மாதிரி என்னையும் போடுட்டான் சார்!!" என்றதும் சற்றே மிரண்டான் கண்ணபிரான்.
"அதுக்கு அடுத்த வந்தவன் யேன் கன்னத்தை பதம் பார்க்கும் முன்ன.. நானு யேன் கன்னத்த காப்பாத்தி கிட்டேனா.. போலீஸ் ஸ்டேஷனில் உள்ள பொருளெல்லாம் காவாலி பயலுகளா.. களவாட ஆரம்பிச்சுட்டானுக!! ஒன்னு ஒன்னா இங்கிருந்து வாசல நோக்கி எரிய எரிய.. நான் ஒவ்வொருத்தனா புடிச்சு உள்ள போட போட.. வேர்த்து விறுவிறுத்து போச்சு சார் எனக்கு!!" என்று சோர்ந்து போய் நின்றார் ஏட்டு.
கொஞ்சம் கலக்கமாகத்தான் இருந்தது கண்ணபிரானுக்கு. ஆனால் அதை வெளியே காட்டிக்கொள்ளாமல் "சரி சரி விடு அதான் எல்லாம் முடிஞ்சிடுச்சு இல்ல" என்று ஏட்டுக்கு ஆறுதல் சொல்வது போல தனக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டான் கண்ணபிரான்.
"எங்க சார் முடிஞ்சிடுச்சிச்சு? இப்பதேன் ஒரு லாக்கப் உள்ள நெறச்சு வச்சிருக்கேன்.. இன்னும் வெளியில் எத்தனை பயலுவோ இருக்கானுக? அங்க பாருங்க.. இதுக்கு மேல என்னால முடியாது சார்" என்று ஓரமாக அமர்ந்து விட்டார்.
அப்புறம் என்ன அண்ணனின் விழுதுகள் காவல் அலுவலகத்தை மட்டுமல்ல அந்த வழியே சென்றவர்களை எல்லாம் வம்பு இழுத்து அவர்களை கைது செய்ய வைத்து தாங்களாகவே அண்ணன் பாதுகாப்பை உறுதி செய்தனர்!!
போதாத குறைக்கு ஒருத்தன் கமிஷனர் ஆபீஸ்க்கு போன் போட்டு "என்ன சார் எங்க அண்ணன கைது பண்ணி வச்சிருக்காங்க.. என்னன்னு கேட்டு வந்த எங்களை ஒவ்வொருத்தனா புடிச்சி புடிச்சி இந்த இன்ஸ்பெக்டர் கண்ணபிரான் உள்ள போட்டுகிட்டே இருக்காரு.. இதுவரைக்கும் நூறு பேரை உள்ள போட்டு இருக்காரு சார்!! என்ன சார் நினைச்சிட்டு இருக்காரு? நாங்க எல்லாம் சேர்ந்து போராட்டம் பண்ண ஆரம்பிச்சோம்னா என்ன நடக்கும்னு தெரியுமா?" என்று மிரட்டியவன் நாங்கள் மறியல் போராட்டம் செய்யப் போவதாக அவன் மிரட்ட.. பதறிப்போன கமிஷனர் கட்டப்பா கண்ணபிரானுக்கு போனை போட்டு காட்டு காட்டு என்று காட்ட..
அவனும் இல்ல சார்! நோ சார்! சாரி சார்! என்று தனக்குத் தெரிந்த அனைத்து ஆங்கிலப் புலமையையும் கட்டப்பாவிடம் காட்டினாலும் அவர் எட்டப்பன் ஆகவே இருந்து இவனை திட்டி அனைவரையும் வெளியே அனுப்ப சொல்ல…
"அது.. அது.. எஃப்ஐஆர் போட்டாச்சு சார்!!" என்று இவன் பயந்து பயந்து கூற,
"அப்ப ஒருத்தனுக்கும் அரசாங்கச் செலவில் சாப்பாடு எதுவும் கிடையாது. வீம்பு பண்ணி நீதானே புடிச்சி எல்லாரையும் உள்ள போட்ட எஃப்ஐஆர் ஃபைல் பண்ணுன.. நீயே அவனுகளுக்கு செலவு செய்யும்!! அப்பதான் உன்ன மாதிரி ஆளுங்களுக்கு எல்லாம் புத்தி வரும். அந்த அம்பலவாணன் கிட்ட வாங்குன காசுக்கு கொஞ்சம் செலவு செய்!!" என்று அவர் போனை வைத்துவிட்டார்.
அப்புறம் என்ன.. கண்ணாபிரானின் பிராடு பட்டு ச்சச.. பாடுபட்டு சேர்த்த செல்வங்கள் எல்லாம்.. தண்ணீராய் இல்லையில்லை பிரியாணியாகவும் சிக்கன் சிக்ஸ்டீ ஃபையாகவும்.. மட்டன் சுக்காவாகவும் போனது.. அவ்வப்போது டீ காஃபி சைட் டிஷ் தனி கணக்கு!!
மயங்கி கிடந்த பத்ரி எழுப்பி அவனுக்கும் கண்ணபிரானின் சொந்த செலவிலேயே ஃப்ரெஷ்ஷாக ஜூஸ் எல்லாம் வாங்கி கொடுத்து "இங்கன இருப்பவனுகள தயவுசெய்து தள்ளிக்கட்டு போங்க" என்று சாஷ்டாங்கமாக அவன் காலில் விழவே சென்றுவிட்டான் இன்ஸ்பெக்டர் கண்ணபிரான்.
