அத்தியாயம் 8
“என்னன்னு பெத்தீங்க அம்மம்மா.. இவரை..” என்று தன்னை கேட்காமல்.. தன்னிடம் கலக்காமல்.. ஏன் தன்னிடம் ஒரு வார்த்தை கூட கூறாமல்…
சிறு பிள்ளைக்கு மிட்டாய் ஆசை காட்டி பள்ளிக்கூடத்தில் சேர்ப்பது போல.. தன்னை மருத்துவமனையில் சேர்த்து விட்டதாக.. பக்கம் பக்கமாய் மாமனை பற்றி புகார் கூறிக் கொண்டிருந்தாள் பிரக்யா…!
ஒரு புன் சிரிப்போடு அத்தனையும் கேட்டுக் கொண்டே அமைதியாக சாப்பிட்டுக் கொண்டு, அவளையும் பார்வையால் சாப்பிட்டுக் கொண்டிருந்தான் கதிர்நயனன்.
தன் மகனை தன்னிடமே குறை கூறினால் எந்த அன்னைக்காவது தாங்குமா? இல்லை ஏற்க தான் இயலுமா?
ஆனால்.. அனைத்தையும் சாத்தியம் ஆக்கியது பேத்தியின் பாசம்..!
“அப்படியா?"
“பாரேன் அவனுக்கு இருக்குற கொழுப்பை?”
“இந்நேரம் உன் தாத்தன் இருந்திருக்கணும்…?”
“ஆனாலும் உன் மாமனுக்கு ரொம்ப ஏத்தம் டி சின்னு..” என்று பேத்திக்கு ஏற்றாற் போல பேசினார் பர்வதத்தம்மாள்..!
அன்னையையும் மனைவியையும் பார்த்து இடவலமாக தலையாட்டி சிரித்துக் கொண்டே உணவு உண்டான் வெகு திருப்தியாய் கதிர்நயனன், வெகு ஆண்டுகளுக்கு பிறகு..!!
உணவு முடிந்ததும் “நீ தூங்கி ரெஸ்ட் எடு. ஈவினிங் வந்து ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போறேன்..!” என்றவனை பிரக்யா இப்போது அப்பட்டமாக முறைக்க..
“இன்னைக்கு ஒரு நாள் தான். நாளைக்கு உனக்கு தனியா கார் ஏற்பாடு பண்ணிடுவேன்.. சின்னு” என்று அவள் கன்னம் தட்டிச் சென்றவனை ஒரு பெருமூச்சோடு பார்த்தவள்,
“இவரோட மல்லுக்கு நின்று மாயாது” என்று ஓய்வு எடுக்க சென்றாள்.
மாலை 5:00 மணிக்கு எல்லாம் தயாராகி கீழே மாமனுக்காக காத்திருந்தாள் பிரக்யா.
“பார்றா.. யாரோ இங்க இருக்க மாட்டேன்.. வேலை செய்ய மாட்டேன்னு சொன்னாங்க? இப்போ எனக்கு முன்னால கிளம்பி வந்து உட்கார்ந்து இருக்காங்க..”
“ஒன்ஸ் நான் கமிட் ஆகிட்டா.. அதுல முழுசா இறங்கிடுவேன்” என்றவளை அர்த்தப் புன்னகையோடு பார்த்தவன், “அப்படியா?” என்று புருவம் உயர்த்தி கேட்க…
“அது.. அது.. அதுல சில விதிவலக்குகள் இருக்கும்” என்றாள் அவன் பார்வையை தவிர்த்து..!
அவளுக்கு மேலும் சங்கடத்தை கொடுக்காமல், “வாட் அ மெடிக்கல் மிராக்கிள்.. சின்னு..! ஆறு மணி ஓபிக்கு நீ அஞ்சு மணிக்கே கிளம்பி இருக்க.. !” என்று அவளை வார்த்தைகளால் வாரிக்கொண்டு வந்து எதிரே அமர்ந்தான் கதிர்நயனன்.
“நாங்க இப்போ வளர்ந்துட்டோமாக்கும். முன்னால தான் சின்ன புள்ள இப்போ சின்ன பிள்ளைக்கே வைத்தியம் பார்க்குற டாக்டராக்கும் நான்..!” என்று அவள் முகத்தை வெடுக்கென்று திருப்பிக் கொண்டாள்.
“நீ வளர்ந்ததை நான் இன்னும் பார்க்கவே இல்லையே சின்னு..!” என்று தாபமாக மெல்ல முணுமுணுத்தவன் சிகையைக் கோதிக் கொள்ள…
“என்ன சொன்னீங்க?” என்று அவள் கேட்க..
“ம்ம்ம்.. அம்மா வராங்கனேன்..!” என்று மழுப்பி விட்டான்.
இருவரும் பேசுவதைப் பார்த்துக் கொண்டே பூஜை முடித்து வந்த பர்வதத்தம்மாளும் அவர்களோடு இணைந்துக் கொள்ள மூவருக்கும் மாலை தேநீர் சிற்றுண்டி பரிமாறப்பட்டது.
சிற்றுண்டியோடு சிரிப்போடு அவர்கள் பேசிக் கொண்டிருக்கும்போதே உள்ளே நுழைந்தவர்களை கண்டு உறைந்தாள் பிரக்யா.
“ப்பா.. ப்பாஆஆஆ..” என்றன அவளது இதழ்கள் நடுக்கத்தோடு..!
“உனக்கும் என் பொண்ணுக்கும் தான் ஒத்து வரலன்னு அவ உன்னை விட்டு போய்ட்டா தானே..! நீ விசாலினியை கல்யாணம் பண்ணிக்க போறதா தான் ஊர் பூரா பேச்சா இருக்கே.. அப்புறம் எதுக்கு என் பொண்ண இன்னும் உன் வீட்டில் வச்சிருக்க.. என் வீட்டுக்கு அனுப்பு..!” என்று கர்ஜனையோடு வந்தது பிரக்யாவின் அப்பாவின் குரல்..!
“இவரா?” என்று பர்வதத்தம்மாள் அதிர்ந்து பார்க்க..
“நினைச்சேன்.. என்னடா இன்னும் காணலையேனு? வந்துட்டாரு கரெக்டா..!” என்ற படி அவரை அழுத்தமாக பார்த்தான் கதிர்நயனன்.
அவர் நீலகண்டன்..! பிரக்யாவின் அப்பா..! பர்வதம்மாளின் மூத்த மகள் பார்கவியின் கணவன்..!
அவர் வரும்பொழுது மூவரையும் நன்கு ஆராய்ந்து விட்டே, அவர்களை நோக்கி சக்கர நாற்காலியில் வந்தார்.
பிரக்யா சிலையென சமைந்து நின்றாள் தந்தையை கண்டு..! ஆனது.. இதோடு முழுதாக மூன்று ஆண்டுகள் தந்தையை நேரில் பார்த்து..!
இடையிடையே அவருக்கு பல உடல் உபாதைகளும் பிரச்சனைகளும் வந்து போனது எல்லாம் அறிவாள் தான் பிரக்யா.
ஆனால் ஒருமுறை கூட தந்தைக்கு அவள் அழைத்து பேசவும் இல்லை..! அவரை பார்க்க செல்லவும் இல்லை..!
ஏனென்றால் அன்றைய சூழலில் அவர் விட்ட வார்த்தைகள் அப்படி..! அவளிடம் நடந்துக் கொண்ட முறை அப்படி..!
இதோ மூன்று ஆண்டுகள் கழித்து பார்க்கும் மகளை உரிமையாக தன் வீட்டிற்கு வேண்டுமென்று அழைப்பவர்,
கண்களால் கூட மகளை உச்சாதி பாதம் முதல் பாசமாகப் பார்க்கவில்லை..!
பேசவில்லை என்றாலும் கண்களால் கூட அன்பை காட்டவில்லை..!
உடல் மொழியால் கூட மகளைக் கண்டதும் நெகிழவில்லை..!
ஆனால் மகள் மீது கொண்ட உரிமை மட்டும் வேண்டும். அவள் அடுத்தவர் வீட்டில் வந்து இருப்பது அவர் குடும்ப மானத்திற்கு இழுக்கு என்று அவளை தன் வீட்டிலேயே வைத்துக்கொள்ள இந்நாள் வரை போராடி வருகிறார்.
ஆனால் கதிர்நயனனோ ‘உனக்கு நான் சளைத்தவன் இல்லை.!’ என்று அவரின் போராட்டத்தை அசால்ட்டாக சமாளித்துக் கொண்டிருக்கிறான்..!
உறவுகளிடம் சொல்கிறாயா? வா பேசு.. பஞ்சாயத்து வை..! ஒரு கை பார்த்து விடுகிறேன்..!
இல்லை.. காவல் நிலையத்தில் புகார் செய்கிறாயா? தாராளமாக செய்..! அதையும் எதிர்கொள்கிறேன்..!
இல்லை வழக்காடு மன்றத்தில் வழக்கு தொடுக்கிறாயா? அந்த வழக்கையும் இடது கையில் இலகுவாக தள்ளிவிட்டு போய்க்கொண்டே இருப்பேன்..!
என்று கடந்த 10 வருடங்களாக அவருடன் சலிக்காமல்.. அலுக்காமல்.. அலட்டாமல் போராடிக் கொண்டிருக்கிறான்..! இல்லை இல்லை அவர் தான் போராடிக் கொண்டிருக்கிறார். இவன் அவரை லெஃப்ட் ஹேண்ட் இல் ஹேண்டில் செய்துக் கொண்டிருக்கிறான்..!
மகனைப் போல முறைத்துக் கொண்டு நிற்க முடியவில்லை பர்வதத்தம்மாவால். ஏனென்றால் மகளை இழந்து விட்டாலும் மாப்பிள்ளையின் உறவு அப்படியே தானே இருக்கும்.
“வாங்க மாப்பிள்ளை..!” என்று அவர் மனது நிறைய கூப்பிடவில்லை, வாய் நிறைய கூப்பிட்டார்..!
“ஆமா மாப்பிள்ளை.. பெரிய மாப்பிள்ளை..!” என்று முணுமுணுத்தவாறு அவர் வர.. அவர் கூட வந்த பூர்ண சுந்தரி, அதாவது அவரது இரண்டாவது மனைவி, பிரக்யாவின் சித்தி..
அவரோ கொஞ்சம் கூட கணவனை கண்டு கொள்ளாமல் “நல்லா இருக்கீங்களா அம்மா?” என்று அன்போடு பர்வதத்தம்மாளிடம் விசாரித்தார்.
‘இந்த பொண்ணுக்கு இருக்கிற அன்பு கூட அக்கறை கூட மாப்பிள்ளைக்கு இல்லை என்ன செய்வது?’ என்று அவரையும் வரவேற்று நலம் விசாரித்தார் பர்வதத்தம்மாள்.
“உமையா எப்படிடா இருக்க? நீ வந்தது சொல்லவே இல்ல சித்தி கிட்ட..?” என்று அருகில் நின்றவளின் கன்னம் வழித்து பேசியவரை எந்நாளும் பிரக்யாவால் உதறித் தள்ளி விட முடியாது.
ஏனென்றால் எப்பொழுதும் அன்பொழுக மட்டுமே அவர் பேசுவார். அடித்து,கண்டித்து ஏன் அடுத்தவரிடம் குறை கூறியோ இவள் கண்டதில்லை..! யாரு மூலமாகவும் கேட்டதும் இல்லை..!
பொதுவாக அப்பாவின் இரண்டாம் தாரம்.. சித்திகள்.. என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற கட்டுக்குள் இவர் இல்லாதவர் என்று நினைத்துக் கொள்வாள் பிரக்யா.
ஆனால் அப்பாவுக்கு முன்னே எதையும் காட்டிக் கொள்ளாமல் அவர் கேட்டதற்கு மட்டும் “நல்லா இருக்கேன் சித்தி. பூர்வா நல்லா இருக்காளா?” என்று அக்கறையோடு விசாரித்தாள்.
பூர்வா, நீலகண்டன் பூர்ண சுந்தரியின் மகள்..!
“நல்லா இருக்காடா..! உன்னை கேட்டுக்கிட்டு இருந்தா.. வரேன்னு கூட சொன்னா.. ஆனா உங்க அப்பாவுக்கு பயந்து..” என்று வார்த்தையை விழுங்கிக் கொண்டவர்,
“அவளுக்கு தான் மாப்பிள்ளை பார்த்துட்டு இருக்கோம். ஒன்னும் இன்னும் அமையல..” என்று மென் குரலில் வீட்டு சங்கதிகளை பிரக்யாவின் காதில் ஓதிக் கொண்டிருந்தார் சுந்தரி..!
‘நம்ம இங்க எதுக்கு வந்திருக்கோம்? இவ போய் அங்க கொஞ்சி குழாவிட்டு இருக்கா..!’ என்று பல்லை கடித்த நீலகண்டனோ, “சுந்தரி..!” என்று அடக்கப்பட்ட கோபத்தோடு அழைக்க..
“இதோ.. இதோ.. வந்துட்டேங்க..” என்று கணவனின் அருகில் பவ்யமாக நின்றுக் கொண்டார் அவர்.
“என்ன திடீர் விஜயம்?” கதிர்நயனன் அவரை பார்த்து கேட்டான்.
“என் பொண்ணு இங்க தானே இருக்கா..! அப்ப இங்க வராம வேற எங்க போவ?” என்று அவரும் அவனிடம் சற்று இறுமாப்போடு தான் பேசினார்.
“ஓ பெண்ணை பார்க்க அவ மாமியார் வீட்டுக்கு வந்திருக்கீங்க அப்படித்தானே?” என்றதும் வெடுக்கென்று அவனை பார்த்தவரோ,
“அவளுக்கு மட்டும் இல்ல..! எனக்கும்தான் அந்த உரிமை இன்னும் இருக்குனு நினைக்கிறேன்..!’ என்று பர்வதத்தம்மாளை அர்த்தத்தோடு அவர் பார்க்க..
என்னதான் மகளை இழந்தாலும்.. மாப்பிள்ளை இரண்டாவது திருமணம் செய்துக் கொண்டாலும்.. அவர்களுக்கு உண்டான அந்த பந்தம் பிரக்யா என்று முழுதாய் நிற்க.. எப்படி இல்லை என்று மறுப்பார் அவர்?
“அது எப்பொழுதும் மாறாது மாப்பிள்ளை..!” என்று ராணியின் தோரணையோடு கூறினார் அவர்.
இதுதான்..
இந்த தோரணை தான்..!
இந்த மிடுக்கு தான்..!
இந்த நிமிர்வு தான்..!
இந்த கண்களைப் பார்த்து அழுத்தமாக பேச்சும் பேச்சு தான்..
என்னவோ நீலகண்டனுக்கு அன்று முதல் இன்று வரை சுத்தமாக பிடிப்பதே இல்லை..!
மாப்பிள்ளை என்றால் பயந்து.. கண்களில் மரியாதையும் பவ்யமும் கலந்து.. உடல் மொழியை குறுக்கிக் கொண்டு.. ஏதோ அந்த தெய்வமே வீட்டுக்கு வந்து காட்சியளிப்பது போல அத்தனை பவ்யத்துடன் நடந்துக் கொள்ள வேண்டும் மனைவியின் வீட்டார் என்று தான் அவரின் எதிர்பார்ப்பு..!
‘அந்த எதிர்பார்ப்பெல்லாம் நீ எதிர்பார்க்கவே கூடாது.! அப்படி எதிர்பார்த்து இருந்தால் உன் எதிர்பார்ப்புக்கு ஏற்ற மாதிரி தான் நீ பெண்ணை கட்டி இருக்க வேண்டும்..! நீ கட்டி இருக்கிறது சிவஞானத்தின் பெண்ணை.. அப்படி எல்லாம் யாரும் உனக்கு கூலைக் கும்பிடு போட மாட்டார்கள்..! அதேசமயம் உன்னை மரியாதை குறைவாய் என்றைக்கும் நடத்த மாட்டார்கள்..!’ என்று உடல் மொழிகளாலும் நடத்தையாலும் காண்பித்துக் கொண்டிருக்கிறது பிரக்யாவின் அம்மா பார்கவியின் குடும்பம்..!!
“வரும்போது என்னமோ சொன்னீங்களே? நீங்க பேசிக்கிட்டே வந்தீங்களா.. அதனால நான் அதை சரியா கவனிக்க முடியல. அப்படி என்ன சொன்னீங்க அத்தான்?” என்று வெகு அக்கறையாக கேட்ட மச்சானை இல்லை தற்போதைய மாப்பிள்ளையை தான் ஆத்திரத்தோடு பார்த்தார் அக்கா கணவர்.
''உனக்குத்தான் ஒருத்தியோட நிலையா இருக்க முடியாதே.. ஏற்கனவே விசாலினி அப்புறம் என் பொண்ணு.. இப்ப மறுபடியும் விசாலினினு ஊர் பூரா பேச்சா இருக்கு..! இப்படிப்பட்ட உனக்கு எதுக்கு என் பொண்ணு? அவளை என் கூட என் வீட்டுக்கு அனுப்பி வை..!” என்று கட்டளையிட்டார்.
‘உன் கட்டளைக்கு நான் அடிபணிவதா?' என்பது போல அவரை நிமிர்ந்து ஒரு பார்வை பார்த்தவன், “ஊர்ல ஆயிரம் பேரு வேலை வெட்டி இல்லாம ஆயிரம் பேசுவான்..! அதுக்கெல்லாம் நான் பொறுப்பாக முடியாது..!” என்று அசால்ட்டாக தோள்களை குலுக்கினான் கதிர்நயனன்.
அவனின் நக்கலை கண்டவருக்கு ஆத்திரம் பெருக “அதெப்படி ஒருத்தியோடு ஒழுங்காக உன்னால குடும்பம் நடத்த முடியல. இங்கேயும் அங்கேயும் தாவிக் கொண்டிருக்க, அதை கண்ணால தானே பார்க்கிறோம்..! அப்படி இருக்கிறவன் கிட்ட என் பொண்ணை எப்படி விடுவது? நாளைக்கு இவளையும் விட்டுட்டு இன்னொருத்தி கிட்ட போக மாட்டனு என்ன நிச்சயம்? இல்ல ஊர் பூரா தொடுப்பு தான் வச்சுக்க மாட்டன்னு யார் கண்டா?”
கடகடவென நரம்புகளற்ற வார்த்தைகளை கொட்ட,
''யோவ்.. என்னையா பேசற? என்னை பார்த்தா உனக்கு எப்படி இருக்கு? ஊர் பொறுக்குறவன் மாதிரி இருக்கா? இல்ல பொம்பள பொறுக்கி மாதிரி இருக்கா? வாய் இருக்குன்னு என்ன வேணும்னாலும் பேசுவியா..! எல்லாத்துக்கும் ஒரு அளவிருக்கு! நான் சிவஞானத்தோட பிள்ளை..! ஊர்ல ஒழுங்கா விசாரி..!” என்றவனின் திடீர் மரியாதை இன்மையில் ஒரு கணம் ஆடிப்போனாலும்,
''என் பொண்ணு உன்னை கல்யாணம் பண்ணாலும் உன்னை போல் ஒருவனோட நான் வாழ விட மாட்டேன்!'' என்ற நீலகண்டனோ கண்டத்தில் விஷத்தை வைத்தது போல விஷமாய் கொட்ட..
“நான் என் பொண்டாட்டி கூட வாழ.. நீ யாரு எனக்கு பெர்மிஷன் கொடுக்க..?” என்று அவனும் தன் கெத்து குறையாது கூற..
மாமனுக்கு மச்சானுக்கும் அங்கே முட்டிக்கொண்டு நின்றது..!
இல்லை இல்லை மாமனாருக்கும் மாப்பிள்ளைக்கும் தான் முட்டிக்கொண்டு நின்றது..!
''இப்போ முடிவா என்ன சொல்ற? என் பொண்ண என்னோட அனுப்புவியா மாட்டியா?” என்றவர் ஆத்திர மிகுதியில் பல்லை கடிக்க,
அவனோ அவருக்கு பதில் சொல்லாமல் அன்னையின் புறம் திரும்பி “வந்தவங்கள
சரியா உபசரிக்க மாட்டீங்களா? உபசரிச்சு அனுப்புங்க மா..! வா உமையா.. போகலாம்..!” என்றவனோ அவரை சிறிதும் கண்டு கொள்ளாமல், பிரக்யாவின் கைப்பற்றி வேகமாக வெளியேறினான்..!
