அத்தியாயம் 6
தன் இதழ் ஓரத்தில் இருந்த சாஸை துடைத்து.. அதனை சுவைத்துக்கொண்டே சென்ற மாமனை.. தான் விழி தெறிக்க பார்த்துக் கொண்டிருந்தாள் பிரக்யா.
‘அச்சச்சோ.. இந்த மாமாக்கு நிஜமாலுமே என்னமோ ஆயிடுச்சு..! என்னை எப்போ அமெரிக்காவுல இருந்து கூட்டிட்டு வந்தாரோ அன்னையிலிருந்து இவர் ஒரு மார்க்கமா சுத்திட்டு இருக்காரு.. இதெல்லாம் கொஞ்சம் கூட சரியில்லை..! என்ன ஓரண்டை இழுத்து வைக்கப் போறாருன்னு தெரியலையே..! பிரகதீசா என்னை நீ தான் காப்பாத்தணும்..!' என்று வழக்கம் போல அந்த பெருவுடையானை அவளின் துணைக்கு அழைத்துக் கொண்டாள்.
“சீக்கிரம் கிளம்பி போவோம்.. இல்ல அதுக்கு ஏதாவது சொல்லுவாரு” என்ற படி குளித்து முடித்து மிதமான ஒப்பனையில் வழக்கம் போல அவளது குர்தி பளோசாவில் கிளம்பி வந்தவளை பார்த்த பர்வதத்தம்மாள், பேத்தியின் சாத்வீக அழகை கண்டு அவளுக்கு நெட்டி எடுத்தார்.
“அழகிடி நீ சின்னு..! ம்ம்ம்.. சீக்கிரம் சாப்பிட்டு கிளம்பு.. உன் மாமன் ஏற்கனவே சாப்பிட்டுட்டு வெளியில் யார்கிட்டயோ கோவமா கத்திக்கிட்டு இருக்கான். என்ன விஷயம்ன்னு தெரியல?” என்று பேத்தியிடம் கிசுகிசுத்தார். அவளும் மெல்ல புன்னகைத்தாள்.
அம்மம்மா அப்படி பேசியதும், அவளுக்கு பழைய கால ஞாபகங்கள் குழியில் அமிழ்ந்திருந்த பந்து தண்ணீர் ஊற்றியதும் மேலே வருவது போல மெல்ல மேலே வந்தன..!
இவள் பள்ளி செல்லும் காலத்தில் இப்படித்தான் பேத்தியிடம் "சீக்கிரம் சாப்பிடு கண்ணு.. அவன் யார்கிட்டையோ கத்திக்கிட்டு இருக்கான்.. வந்து உன்னை பேசுவான்” என்று வேக வேகமாக அவளுக்கு எடுத்து ஊட்டி விட முயலுவார்.
அவளோ நத்தை என ஊரும் ரகம்..!
சாப்பாட்டிலும் சரி கிளம்புவதிலும் சரி..!
கதிர்நயனனோ வெளியில் காட்டிய கோபத்தை அப்படியே கொண்டு வந்து பிரக்யாவிடம் பார்வையால் கொட்டுவான்.
“சீக்கிரம் சாப்பிட்டு கிளம்ப மாட்டியா நீனு?” என்று அவன் பார்வையின் கேள்விக்கு..
“நல்லா சீவ் (மென்று) பண்ணி சாப்பிட்டாதான் டைஜெஷன் சரியா நடக்கும்.. நியூட்ரிஷியன் எல்லாம் உடம்புல வரும்னு எனக்கு ஸ்கூல்ல சொல்லிக் கொடுத்திருக்காங்க..” என்று வெளியில் எழும்பாத குரலில் மாமன் முகத்தை பாராது தட்டை பார்த்துக் கொண்டே சாப்பிடுபவளை கண்டவனுக்கு ஜிவ்வென்று ஆத்திரம் தான் ஏறும்.
“ஸ்கூல்ல சொல்லிக் கொடுத்ததெல்லாம் அப்படியே நீ ஃபாலோ பண்ணுற போல? ஏன் காலேஜ்க்கு டைம்க்கு வரணும்னு சொல்லி இருப்பாங்களே.. அதெல்லாம் கேட்குற ஆளா நீ..?” என்றவனின் சரியான பாயிண்ட்டில்,
அவளின் பிரம்மாஸ்திரத்தை எடுத்தாள். கண்களில் கண்ணீரோடையும் குரலில் அவ்வளவு வருத்தத்தோடையும் “இதுக்கு தான் நான் ஸ்கூல் ஹாஸ்டல்லே இருக்கேன்னு சொன்னேன். அம்மம்மா நீங்க தான் கேட்க மாட்டேனீங்க.. இப்ப பாருங்க காலைல சரியா சாப்பிட கூட விட மாட்டேங்குறாரு” என்றவள் மூக்கை உறிஞ்ச..
“ஏன்டா புள்ள சாப்பிடும் போது வந்து தான் நீ அட்வைஸ் மழைய கொட்டணுமா? போடா.. போ..! நீ சாப்பிடு சின்னு.. மெதுவாக சாப்பிடுமா” என்றவர் பேத்தியை சீராட்ட..
என்ன சொல்வது செய்வதென்று தெரியாது அன்னையை முறைத்து விட்டு இவன் சென்று வெளியில் காரில் காத்திருப்பான்..! கோபமாக தான்..!
அதெல்லாம் இப்பொழுது நினைக்க ஏதோ முன் ஜென்மம் போல அவளுக்கு தோன்றியது.
மெதுவா சாப்பிடுற காலமெல்லாம் இப்பொழுது மலை ஏறி போய்விட்டது, ரசித்து ருசித்து சாப்பிட்ட காலங்கள் அவை..!
இப்பொழுது வெறும் பசிக்கு மட்டுமே சாப்பிடும் காலம்..!
பழையதை நினைத்து மெல்ல சிரித்துக் கொண்டவள், சாப்பிட்டு முடித்து அம்மம்மாவிடம் சென்று சொல்லிக்கொள்ள..
“இரு சின்னு..” என்று வழக்கமாக அவள் வெளியே செல்லும்போது இடுவது போல திருநீர் இட்டு விட்டார்.
அதே சமயம் உள்ளே வந்த கதிர்நயனனோ “மா அவ இன்னும் உன் பேத்தி மட்டும் கிடையாது. மருமகளும் அவ தான். குங்குமமும் சேர்த்து வைச்சு விடணும்னு தோணலையா?” என்றவன் அவர் கையில் இருந்த அந்த பூஜை அறை தாம்பாளத்தில் இருந்த குங்குமத்தை எடுத்து அவள் நெற்றியில் இட்டு விட்டான்.
அவளோ அவனின் இந்த செயலில் அதிர்ந்தாள் என்றால்.. பர்வதத்தம்மாளுக்கு மனம் நிறைந்தது..!
மனைவிக்கு பேரதிர்ச்சியையும்.. அன்னைக்கு பேரின்பத்தையும் இன்னும் கொடுக்க முயன்றவன் போல.. மீண்டும் குங்குமத்தை தன் மோதிர விரல் மற்றும் கட்டை விரலால் எடுத்து அவளது வகுடில்லா நெற்றியிலும் வைத்துவிட்டான்.
பர்வதத்தம்மாளுக்கு இப்போது கண்களும் பனித்தன..!
பேத்தியின் அதிர்ந்த பார்வையையும் மகனின் அன்பான பார்வையையும் கண்டு சிறு புன்னகையோடு பர்வதத்தம்மாள் நகர்ந்துவிட..
“சும்மா இப்படி எதுக்கு எடுத்தாலும் நான் ஷாக் ஆகிட்டேன் மாமான்னு.. முழிய விரிச்சு வெறிச்சு.. உதட்டை குவிச்சு பார்த்துக்கிட்டு இருக்காதடி…! பாய்ஞ்சு கடிச்சிட போறேன்” என்று அவளை நெருங்கி கூறியவன்,
“போலாம் வா..!” என்று முன்னே நடந்தவன், அன்னையிடம் சொல்லிக் கொண்டு கிளம்பினான்.
எங்கே அழைத்து செல்கிறான் என்று
கேட்கக்கூட அவளால் இயலவில்லை.
அந்த அளவுக்கு காலையிலிருந்து அவளை உணர்வுகளின் பிடிக்குள் தள்ளி கொஞ்சம் கொஞ்சமாக ஆட்டுவித்துக் கொண்டிருந்தான் கதிர்நயனன்..!
அவளும் உணர்வுகளும் உணர்ச்சிகளும் உள்ள பெண்தானே??
காரில் ஏறியது முதல் அவன் பக்கம் கூட திரும்பவில்லை அவள்.
எந்தவித பந்தமும் வேண்டாம் என்று ஒட்டுமொத்தமாக ஒதுங்கி சென்றவளை, இழுத்து வந்து அதே பந்தத்திற்குள் வைத்து.. ஆனால் அதுவும் சில காலம் தான் என்று கூறி.. தன்னிடம் உணர்வுகளால் விளையாடுபவனை என்ன செய்வது என்று அவளுக்கு தெரியவில்லை.
அவன் அறியாமல் தலைமுடியை கோதுவது போல அவன் நெற்றியில் வைத்து விட்ட குங்குமத்தை விரல் நடுங்கத் தொட்டு பார்த்தாள் பாவை..!!
தாய் மாமனாய் அவன் பூசி விட்ட காலங்கள் வேறு..!
ஆனால் இன்று கணவனாய் அவன் குங்குமம் வைத்து விட்டதும் உள்ளுக்குள் ஏதோ ஒன்று உடைந்து நொறுங்கியது..!
அது அவளது மனோபலமா இல்லை வேறு எதுவுமா?
“இறங்கு உமை..” என்றான் நயனன்.
தன் எண்ண ஓட்டத்திலிருந்து விடுபட்டு வந்தவள் வந்திருந்த இடத்தை கண்டதும் முகத்தில் அத்தனை சந்தோஷம்..!!
அவளுக்கு மிகவும் பிடித்தமான.. உலகப் பிரசித்தி பெற்ற.. ஈசனின் பெருவுரு லிங்க வடிவம் கொண்ட.. தஞ்சை பெருவுடையார் கோவில்..!
சிறு வயது முதலே இக்கோயிலுக்கு பலமுறை வந்திருக்கிறாள். அவளின் தாத்தா இருந்தபோது அடிக்கடி அம்மம்மாவோடு.. பின் அவ்வப்போது கதிர்நயனனோடு..!
சில சமயங்களில் சித்தி குடும்பத்தாரோடு..!
வெகு சில சமயம் தனிமையாய் அமைதி தேடி.. அந்த ஈசனை மட்டுமே தேடி..!!
ஆனால் ஒவ்வொரு முறையும் அந்த கோவிலையும் அதன் பிரம்மாண்டத்தையும் பார்க்க.. பார்க்க.. அவளுக்கு ஆச்சரியங்களும் ஸ்லாகிப்புகளும் உச்சம் பெறும்.
அதுவும் தமிழனின் பாரம்பரியத்தின் கலைநயத்தின் கட்டடக்கலை திறனின் மீது கொண்ட பிரமிப்பு அவளிடம் இருந்து இன்னும் அகலவில்லை..!!
ஒவ்வொன்றாக கண்கள் விரிய பிரமித்து பார்த்து வருபவளை ஒரு புன்னகையோடு தலையாட்டி முன்னே நடந்தான் கதிர்நயனன்.
அவன் ஏற்கனவே கொடுத்த பூஜை ஏற்பாட்டில் அங்கிருந்த அர்ச்சகர்கள் பிரக்யாவின் பெயருக்கு அர்ச்சனை செய்து பிரசாதத்தை அவளிடம் நீட்ட அவளோ திரும்பி நயனனை தான் பார்த்தாள்.
“வாங்கிக்கோ..” என்ற அவனின் மெல்லிய உதட்டசைப்பில்.. சிறுதலையாட்டலுடன் அவள் வாங்கிக் கொள்ள.. இருவரும் மீண்டும் ஒரு முறை சிவனை தரிசித்து பின் அப்பிரகாரத்தை சுற்றிக்கொண்டு.. அங்கிருந்த மற்ற தெய்வங்களையும் வேண்டி விட்டு, அம்பாளை சேவிக்க சென்றனர்.
மெதுவாக திரும்பி அவளை பார்த்தவன் “புடவை கட்டிட்டு வந்து இருக்கலாம்..!” என்றான்.
“என்ன.. என்ன..?” என்று புரியாமல் அவள் பார்க்க..
“இல்ல.. நம்ம கல்யாணத்துக்குப் பிறகு ஜோடியா இப்பதான் கோயிலுக்கு வரோம். நீ புடவை கட்டிட்டு வந்தா நல்லா இருக்கும்னு தோணிச்சு.. சொன்னேன்” என்றான்.
'ஆத்தாடி..! நிஜமாவே இவருக்கு என்னமோ ஆகிடுச்சு..' என்பதைப் போல அவனிடமிருந்து சற்று தள்ளியே அவள் வர..
சுற்றும் முற்றும் பார்த்தவன் “நீ என் பொண்டாட்டி தானே டி? தள்ளிட்டு வந்தவ மாதிரி தள்ளி நடக்குற.. அப்புறம் கோயில்னு கூட பார்க்க மாட்டேன்..” என்று நயனங்களால் நயனன் எச்சரிக்கை விடுக்க ஒட்டியும் ஒட்டாமலும் உரசியும் உரசாமலும் அவனுடன் நடந்தாள் பிரக்யா.
பிரகதீஸ்வரருக்கு ஏற்ற பிரகன் நாயகியாகவும்.. பெருவுடையாருக்கு ஏற்ற பெரியநாயகியாகவும் அங்கே வீற்றிருந்த சிவனின் சரிபாதியான பார்வதி தேவியை இருவரும் மனமாற பிராத்தித்தனர்.
அர்ச்சகர் கொண்டு வந்து கொடுத்த குங்குமத்தை ஏதோ பல காலம் அவளுடன் வாழ்ந்த வாழ்க்கையின் வழக்கம் போல இயல்பாக அவள் நெற்றியிலும் வகுட்டிலும் வைத்தவன், சற்று தள்ளி வந்து அவளிடம் தன் வலது கையை நீட்டி கண்களை காட்ட ஏன் என்று புரியாமல் அவனைப் பார்த்தாள்.
திரும்பவும் அவள் நயனங்ளை பார்த்து தன் கையில் இருந்த குங்குமத்தை நயனங்களால் காட்டி நயன பாஷை பேசிய நயனனை அவனின் சரிப்பாதியால் புரிந்துக் கொள்ளவே முடியவில்லை..! இயலவில்லை..!
“உன்னை..!” என்று பல்லை கடித்தவன் வேக வேகமாக நடக்க.. அவன் பின்னே தான் அவளும் அவன் வேக நடைக்கு ஈடாக ஓட வேண்டிருந்தது.
அதிலும் வலது கையில் அவன் வைத்திருந்த அந்த குங்கும பிரசாதத்தை அப்படியே அவன் மடக்கி வைத்துக் கொண்டே நடக்க..
'என்ன சொல்ல வந்தாரு மாமா? ஏன் நமக்கு ஒன்னும் புரியல? அவ்வளவு மக்கா நாம??' என்று இவள் தன்னளவில் தலையை தட்டி தட்டித் தனக்குத்தானே ஒரு சுயமதிப்பீட்டை செய்துக் கொண்டே நடந்தாள்.. இல்லை இல்லை அவன் வேகத்திற்கு ஓடினாள்.
திருப்தியாக வேண்டுதலை முடித்து காரில் ஏறியதும் அவன் அருகில் அவள் அமர்ந்தாள்.
இன்னும் காரை எடுக்காமல் நயனன் அமர்ந்திருக்க ‘ஏன் இன்னும் மாமா காரை எடுக்கல? ஃபோன் பேசுறாரா?’ என்று அவனை திரும்பி பார்த்தாள்.
அவனும் இப்போது நன்றாக அவள் புறம் திரும்பி அவளைத் தான் முறைத்து பார்த்துக் கொண்டிருந்தான்.
‘அச்சோ பிரகதீஷா..! திரும்ப என்ன? ஏன் இப்படி முறைக்கிறாரு? என்ன சொல்ல வராருனு ஒன்னுமே புரியலையே? வொய் மாமா முறைச்சுஃபையிங்?’ என்று அவள் பேந்த பேந்த விழிக்க..
திரும்பவும் தன் வலது கையில் இருந்த குங்குமப்பிரசாதத்தை அவள் முன் நீட்டினான். அதுவோ அவன் கை வியர்வையில் சற்று நனைந்து குளிர்ந்திருந்தது.
இப்பொழுதும் புரியவில்லை அவளுக்கு.
“அதுதான் குங்குமம் வச்சு விட்டீங்களே மாமா?” என்று அப்பாவியாக முகத்தை வைத்து கேட்டவளை கண்டவன்,
சட்டென்று தன்னைையும் தன் சுற்றுப்புறத்தையும் ஒரு முறை பார்த்துக் கொண்டான். ஏசி காரில் அனைத்து கதவுகளும் மூடப்பட்டிருந்தாலும், எதிரில் ஒரு முறை பார்த்துக் கொண்டவன், சற்று அவள் புறம் குனிந்து அவள் மார்பில் உள்ளே உறங்கிக் கொண்டிருந்த அவன் கட்டிய தாலியை எடுத்து வெளியில் போட்டான்.
அவள் கழுத்தில் கை வைத்து இரு தனங்களுக்கு இடையே சுகமாக தூங்கிக் கொண்டிருந்த பொன்நாணை இழுத்ததுமே அவள் பதறிவிட்டாள்.
“ஐயோ மாமா.. என்ன பண்றீங்க?” என்று அவள் பதறி தன் நெஞ்சில் கை வைத்து அவனைப் பார்க்க…
அவனோ அவள் கைகளை அகற்றி விட்டு, வெகு நிதானமாக தன் வலது கை மோதிர விரலால் குங்குமத்தை வழித்தெடுத்தவன்,
அவள் மார்பில் தவழ்ந்த தாலியில் குங்குமத்தை வைத்தவன், இப்பொழுது அவளது கண்களை ஆழ்ந்துப் பார்த்தான்.
காலையிலிருந்து அவனின் சின்ன சின்ன உணர்ச்சித் தீண்டல்களுக்கு உணவாய் மாறிக் கொண்டிருந்தவள், இப்பொழுது அவனின் இந்த செயலில் சிலிர்த்து சில்லு சில்லாக சிதறினாள்..!
அதன் உச்சமாக மெல்ல குனிந்து அந்த தாலியில் அவன் முத்தமிட…
அவனின் முரட்டு அதரங்கள் அவள் அணிந்திருந்த தாலி
யில் மட்டுமல்ல.. அவளின் மென்மையிலும் மென்மையாய் தீண்டிச் செல்ல.. பெண்ணவளுக்குள் உணர்வுகளின் பிரவாகங்கள்..!!
உணர்ச்சிகளின் வேறொரு பரிமாணங்கள்..!
