இராவணா 5

 

Jiya Janavi
(@jiyajanavi)
Member Admin
Joined: 1 year ago
Messages: 219
Thread starter  

அத்தியாயம் 5

 

 

“அப்பாடி.. ஒரு வழியா நம்ம ரூட்டு கிளியர் ஆகிடுச்சு கதிர். உமையா ஒரு வழியா வந்துட்டா.. கண்டிப்பாக அவளா வந்திருக்க மாட்டா.. நீங்க தான் நம்ம நிலைமையை எடுத்து சொல்லி அழைச்சிட்டு வந்து இருப்பீங்கன்னு எனக்கு தெரியும் கதிர்..!" என்றபடி அவள் அவனை ஒட்டி இழைந்து நின்றாள் விசாலினி.

 

“ம்ப்ச்.. தள்ளி நின்னு பேசு விசா..!” என்று எரிச்சலை கட்டுப்படுத்திய குரலில் கூறினான் கதிர்நயனன்.

 

“ஏன் கதிர்.. இப்ப இங்க யாரும் இல்ல தானே? நாம மட்டும் தானே இருக்கோம். நான் இப்படி உங்க பக்கத்துல ஒட்டி கைய புடிச்சு உங்க தோளுல சாய்ஞ்சுக்கணும்னு எவ்வளவு நாள் ஏக்கம் தெரியுமா?” என்றவள் அவன் தாடையை பற்றி தன் புறம் திருப்பினாள்.

 

“எப்போ நீங்க உமையாவை கல்யாணம் பண்ணிக்கிட்டீங்களோ.. அப்போதிலிருந்து என்னை பக்கத்துல கூட அனுமதிக்கிறது இல்ல..!” என்று ஏக்கமாக கூறியவளை பார்த்தவன் ஒரு பெருமூச்சுவிட்டு, 

 

“நான் ஆரம்பத்திலேயே உங்கிட்ட சொல்லிட்டேன் விசா. அவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைத்துக் கொடுக்காம நான் என் வாழ்க்கையை அமைச்சுக்க மாட்டேன்னு.. உன்னால வெயிட் பண்ண முடியலன்னா நீ யாரை வேணாலும் கல்யாணம் பண்ணிக்கிட்டு போன்னு அப்பவே உறுதியா உன் கிட்ட ஓராயிரம் முறை சொல்லிட்டேன்..!” என்று அவளை குற்றம் சாட்டியவன்,

 

“உங்களுக்காக வெயிட் பண்றேன் சொன்னது நீதான்..! இப்ப வந்து இப்படி பேசுறது நீதான்..! கொஞ்சமும் நியாயம் இல்ல விசா” என்று அவன் சற்று கடுகடுத்த குரலோடு பேச, முணுக்கென்று கண்களில் நீர் கோர்த்துக்கொண்டது விசாலினிக்கு. 

 

அவளின் கண்ணீர் இன்னமும் அவனுக்கு ஆத்திரத்தை அளித்தது. ஒரு வகையில் அவளின் இந்த கண்ணீருக்கு தானும் காரணம் என்று அவனின் இயலாமை அவனை குற்ற உணர்ச்சியாய் சுட..

 

“இங்க பாரு விசா.. நீ அழுகுறதை நிறுத்து..! இப்ப எதுக்கு இந்த கண்ணீர்?” என்றதும்,

 

“கதிர்.. நான் எப்படி உங்களை விட்டுக் கொடுக்க முடியும்? எப்படி உங்களை மறக்க முடியும் சொல்லுங்க? எவ்வளவு ஆசை ஆசையா நம்ம கல்யாணத்தை எதிர்பார்த்துட்டு இருக்கும்போது திடீர்னு வந்து உமையாவை கல்யாணம் பண்ணிக்ககிட்டீங்க. அவ வாழ்க்கையில் ஒரு பிரச்சனை அது சரி செய்யாத வரைக்கும் என்னால் வேறு எதையும் யோசிக்க முடியாதுன்னு சொன்னீங்க…”

 

“நானும் உங்களுக்கு ஒத்துழைச்சேன் தானே..! நீங்க உமையா வாழ்க்கையை சரி பண்ணிட்டு வர வரைக்கும் உங்களுக்காக காத்திருக்கேன் சொன்னேன் தானே? ஏன்னா உங்க மேல எனக்கு அவ்வளவு காதல்.. அவ்வளவு நேசம்..! அதை எல்லாம் விட்டுட்டு எப்படி இன்னொருத்தனை ஈசியா இந்த மனசு ஏத்துக்கும் சொல்லுங்க?” என்று அவள் கேட்டது இன்னும் அவனின் குற்ற உணர்ச்சியை அதிகப்படுத்தியது போல் தான் இருந்தது. 

 

அன்றைய நிலையில் விசாலினி பேசிய பக்கம் பக்கமான வசனங்கள் எல்லாம் அவனுக்கு கொஞ்சும் குளிர் மழை சாரல் போல தவித்த மனத்துக்கு சற்று குளிர்ச்சியாக இருந்தது என்னவோ உண்மைதான்..! 

 

அதனை மறுக்க இயலாது. அவள் அவனுக்காக காத்திருந்ததையும் வீண் என்று சொல்ல முடியாது..!!

 

“ஆனால் இப்பொழுது...” என்று சிகையை கோதியவன் பிடரியை நீவி விட்டுக் கொண்டே அவளைப் பார்த்து,

 

“இன்னமும் நான் உமையாவோட புருஷனா தான் இருக்கேன் விசா. அந்த உறவுக்கு எந்த களங்கமும் நான் வரக்கூடாதுன்னு நினைக்கிறேன்..!” என்றதும் அவள் அதிர்ச்சியுடன் சட்டென்று நிமிர்ந்து அவனை பார்த்தாள்.

 

“ஆமா விசா.. ஏற்கனவே உன்னை அலட்சியம் பண்ணிட்டு அவளை கல்யாணம் பண்ணிக்கிட்டேன்னு எனக்கு ஊருக்குள்ள உறவுக்குள்ள நிறைய பேச்சு..! இதுல நீ இங்கு வந்து போறதே எனக்கு பிடிக்கல..! இன்னும் ஊரு வாய்க்கு அவலை கொடுத்த மாதிரி தான் இருக்குன்னு சொன்னா.. நீயோ ‘என்னால உங்கள பார்க்காம இருக்க முடியல அத்தையை பார்க்காமல் இருக்க முடியலன்னு’ சொல்லி வீட்டுக்கு வந்து போயிட்டு இருக்க. இதோட வீரியம் உனக்கு இப்ப புரியாது” என்றான் சற்று கோபமாகவே..!

 

“ஏன் கதிர் இப்படி எல்லாம் பேசுறீங்க? அப்படி என்ன நான் தப்பு பண்ணிட்டேன்? என்னால உங்களையும் அத்தையும் பார்க்காம இருக்க முடியல கதிர். நீங்க ஒரு ஆம்பள கல் மனசா இருக்கீங்க. ஆனா ஒரு பொண்ணு மனசை யோசிச்சு பாருங்க.. உங்கள மறக்கவும் முடியாமல் விடவும் முடியாமல் தவிப்பு எனக்குத்தான் தெரியும். அதான் நானே உங்களை தேடி தேடி வரேன். நான் இப்படி தேடி தேடி வர்றது தான் உங்களுக்கு நான் ரொம்ப சலிச்சு போயிட்டேனா?” என்ற அவள் கண்ணீர் கன்னங்களை தாண்டியது இப்போது..!

 

‘ஓ காட்..! இந்த பொண்ணுங்களுக்கு எப்படி தான் டக்குனு கண்ணீர் பொசுக்கு பொசுக்குன்னு பொங்கி வழியுதோ தெரியலையே..! அதிலும் இந்த விசா.. ஆண்டவா..! எல்லா பெண்களுமே இப்படி தானா? ஏன் இப்படி தண்ணீர் டேங் கண்ணுல வச்சு அவங்கள படைச்ச..!' என்று அவன் மானசீகமாக கடவுளை திட்டிக் கொண்டிருக்கும் நேரத்தில்..

 

அழுத்தமாக சில முறை தன்னை முறைத்து பார்க்கும் அந்த இரண்டு கண்கள் அவன் முன்னே வந்து ‘நானும் அப்படியா?’ என்று கேட்க.. மனதுக்குள் மத்தாப்பு அவனுக்கு..!

 

“இங்க பாரு நாம ரெண்டு பேரும் உயிருக்கு உயிரா நேசிச்சு.. அன்பு வளர்த்து.. காதலிச்சு அதுக்கப்புறம் எங்கேஜ்மென்ட் பண்ணிக்கல..! நீ என் அக்கா வீட்டுக்காரரோட சித்தி பொண்ணு. உன்னோட ப்ரொபோசல் எங்க வீட்டுக்கு வந்துச்சு. எனக்கும் ஆப்ஷன்ஸ்னு சொல்ல எதுவும் இல்லை.. அதனால ஓகே சொன்னேன். அதுக்கு அப்புறம் இந்த வீட்டு நிலவரம்.. உமையா நிலமை தெரிஞ்சு உன்னிடம் எல்லாத்தையும் சொல்லித்தான் இந்த கல்யாணத்தை நான் ட்ராப் பண்ணிட்டேன். இப்படி எதுக்கு எடுத்தாலும் கண்ணுல தண்ணி வச்சுக்கிட்டு என் முன்னாடி நிக்காத…! புரியுதா?” என்றான் சற்றே கடுமையாக..!

 

“புரியுது.. நல்லாவே எனக்கு புரியுது. நான் கண் கலங்குனா உங்களுக்கு தாங்க முடியாது என்று புரியுது…!” என்றாள் இப்பொழுது சிரித்த முகமாக கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்த படி..!

 

'ஷிட்…! இனி இவ கிட்ட எல்லாம் பேசி பிரயோஜனமே இல்லை' என்று நினைத்தவன்,

 

“நீ கிளம்பு..!” என்றபடி வேகமாக கீழே இறங்கி விட்டான். அதன் பின் அவன் வீட்டு பக்கமே வரவில்லை. கண்டிப்பாக விசாலினி இரவு வரை இருப்பாள் என்று அவனுக்கு அநேக நம்பிக்கை..!!

 

அவனது நம்பிக்கையை பொய்யாக்காமல் அவளும் அங்கே இருந்தாள்.

 

“மணியாச்சு விசாலினி. நீ கிளம்பு இதுக்கு மேல ஒரு பொண்ணு எவ்வளவு உறவுக்காரியா இருந்தாலும் அடுத்தவங்க வீட்ல இருக்கறது? அதெல்லாம் நல்லதல்ல..!” என்றார் பர்வதத்தம்மாள்.

 

அவர் அருகில் அமர்ந்து இவர்கள் பேசியதற்கு எதற்குமே வினையாற்றாமல் அமைதியாக அமர்ந்திருந்த பிரக்யாவை முறைத்தவாறே..

 

“நடக்க வேண்டியது எல்லாம் ஒழுங்கா நடந்திருந்தால் நான் என்ன உறவுக்காரியா இல்லை இந்த வீட்டுக்கு உரிமையான உறவா இருந்திருப்பேன் அத்தை..!” என்றவளின் முகத்தில் இருந்த கடுமை வார்த்தையில் இல்லை. ஏனென்றால் அவள் பேசுவது பர்வதத்தம்மாளிடம் அல்லவா? ஆனால் பார்வை என்னமோ பிரக்யாவிடம்..!

 

அவளின் உள்குத்து பேச்சு அவர் அறியாததா? அவர் வயசுக்கு எத்தனையோ கண்டுருப்பார் அல்லவா?

 

“அதைத்தான் நானும் சொல்றேன் விசாலினி.. உறுதியான உறவா ஆகுறதுக்கு முன்னால இப்படி உரிமையா வீட்டுக்கு அடிக்கடி வந்தா நல்லா இருக்காது..! நாம ஊர் மெச்ச வாழுற குடும்பம்..! ஊரு வாயில விழற போல இருக்கக் கூடாது..!” என்றார் சற்று அழுத்தமாகவே..!

 

‘ஊரு வாய்.. ஊரு வாய்.. ஊரு வாய்..!! அம்மாவுக்கும் பிள்ளைக்கும் இதை தவிர வேற ஒன்னும் தெரியாதா? ஊருக்காக தான் நாம வாழ முடியுமா? நாம நமக்காக வாழ கூடாதா? நான் அப்படித்தான் வருவேன். இது எனக்கு உரிமையான வீடு..!’ என்று அந்த பெரிய வீட்டின் வரவேற்பறையே அதிரும் வண்ணம் கத்தி பேச தான் அவளுக்கு தோன்றியது.

 

ஆனால் பேச முடியாதே..! பேசினால் அங்கே இனி வர முடியாதே..! என்று தெரிந்தவள்.. தெளிந்தவள் “சரிங்க அத்தை.. நீங்க சொன்னா சரியாத் தான் இருக்கும்” என்றவாறு அவளுடைய காரில் வீட்டிற்கு சென்றாள்.

 

பர்வதத்தம்மாள் அமைதியாக தன் கை நகங்களை பார்த்தபடி அமர்ந்திருந்த பேத்தியை கண்டு பெருமூச்சு விட்டார்.

 

“நீ போய் ரெஸ்ட் எடு டா சின்னு” என்று பேத்தியை அனுப்பி வைத்தவர்,

 

தன் எதிரே சட்டத்துக்குள் சிரித்த முகமாக இருக்கும் கணவனை தான் இயலாமையோடு பார்த்தார்.

 

“நான் என்னங்க செய்யப் போறேன்? ஒருபுறம் பேத்தியோட வாழ்க்கை.. இன்னொரு புறம் மகனுக்கு நிச்சயம் பண்ணின பொண்ணோட வாழ்க்கை.. இரு பெண்களோட வாழ்க்கையை ஏன் இப்படி ஒருத்தனோட முடிச்சு போட்டு விட்டீங்க? என்னால இப்படி அழுத்தத்தோடு இருக்க முடியலங்க.. சீக்கிரமே ஒரு நல்லது பண்ணுங்க..!” என்று மனதாங்கலை எல்லாம் கணவனின் முன் இறக்கி வைத்தவர் உறங்க சென்றுவிட்டார். 

 

காலையில் பிரக்யா எழும்போதே எதிரே திவ்ய தரிசனமாக அமர்ந்திருந்தான் கதிர்நயனன்..!

 

அவனை கண்டவுடன் சட்டென்று வாரி சுருட்டி எழுந்து அமர்ந்தவளை கண்டவன் கூர்பார்வையாக அவளை நோக்கி “உன்கிட்ட வந்த முதல் நாளே என்ன சொன்னேன்?” என்று சற்று அதட்டலாக வெளிப்பட்டது அவனது குரல். 

 

நேற்று விசாலினி வந்து சென்றது அவளை பாதித்திருந்தது. ‘விசாகா பாவம். அவளது ஏக்கமும் கோபமும் நியாயம் தானே? நான்தான் அவளது வாழ்க்கையை பறித்துக் கொண்டு விட்டேன். இனி இவர்களுக்கு இடையில் வரக்கூடாது. கூடிய சீக்கிரம் விடுதலை பத்திரத்திலோ இல்லை விவாகரத்து பத்திரத்திலோ கையெழுத்திட்டு இங்கிருந்து ஓடிவிட வேண்டும்..!' என்று என்னமோ யோசனையோடு வந்தவள் வழக்கம் போல அவளது அறையில் சென்று படுத்துவிட்டாள்.

 

“அது.. அது வந்து..” என்று முதலில் இழுத்தவள், “இனி நான் இங்க.. என் ரூம்ல தான் இருப்பேன். எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் என்னை டிவோர்ஸ் பண்ணி ஊருக்கு அனுப்பி விடுங்க.. விசா அக்கா பாவம்..!” என்றாள், அவனது முகத்தை பார்த்து தைரியமாக பேச இயலாது வெளியே ஜன்னலை பார்த்துக் கொண்டே..!!

 

“இவளை கட்டி இங்க இழுத்துட்டு வரவே எனக்கு மூணு வருசம் ஆச்சு.. வந்த மூணு மணி நேரத்துல அவ வேலையை காட்டிட்டு போயிட்டா.!” என்று பல்லை கடித்தவன்,

 

“உனக்கு எப்போ டிவோர்ஸ் தரணும் அவளை எப்போ வைச்சுக்கணும்னு எனக்கு தெரியும்..!” என்றவனது வார்த்தைகளில் அவள் திடுக்கிட்டு பார்க்க..

 

அவளோ பயந்து அவனைப் பார்க்க “முதலில் ரெஃப்ரெஷ் பண்ணிட்டு வந்து சாப்பிடு” என்று அவன் அருகில் காட்ட, அவளுக்கு பிடித்த பிரட் ஆம்லெட்டோடு குட்டி பிளாஸ்க்கில் அவளுக்கான காஃபியும் காத்திருந்தது. 

 

பிரக்யா இதழ்களின் ஓரம் ஒரு மெல்லிய குறுநகை. ‘அவருக்கு எப்படி தெரிஞ்சுச்சு நைட்டு நான் சாப்பிடலைனு?’ எண்ணியப்படி, அவன் சொன்னபடி ஃபிரெஷ் ஆகி வந்தவளுக்கு கப கப என்று பசிக்க அவனை சட்டை செய்யாமல் அங்கிருந்தவற்றை சாப்பிட்டு முடித்தாள்.

 

அவள் பின்புறம் வந்தவன் அவள் தோள்களில் தன் கைகளை வைக்க.. அவள் அதிர்ந்து சுவற்றுடன் ஒண்டிக் கொண்டாள். 

 

தன் கழுத்து வரையே இருந்த அவள் முகம் நோக்கிக் குனிந்த படி அவள் முகத்தை தன் கைகளில் பிடித்து நேராக நிமிர்த்தினான்.

 

அவன் கண்களை ஒரு நொடி நேருக்கு நேராகப் பார்த்தவள் சட்டென கண்களை மூடிக்கொண்டாள்..!! 

 

“இங்க பாரு சின்னு.. இந்த சின்ன மண்டையில இப்ப எதுவும் ஏத்திக்காத குளிச்சிட்டு ரெடி ஆயிட்டு வா.. இன்னைக்கு நான் உன்னை ஒரு இடத்துக்கு கூட்டிட்டு போறேன்..” என்றவன் அவள் நெற்றியில் மென்மையாக ஒரு முத்தம் கொடுத்தான். அவள் அதற்கே இன்னும் சுவரோடு சுவராக பல்லியைப் போல ஒட்டிக்கொள்ள..

 

அவனும் இன்னும் அழுத்தமாக அவள் தாடைகளைப் பற்றி, பின் தன் முகத்தை சாய்த்து ரசனையாக அவள் கன்னங்களிலும் முத்தம் கொடுத்தான்.. !!

 

இப்போது நிமிர்ந்து பார்த்தவளின் இதழோரம் அவள் சிவப்பு இதழ்களுக்கு போட்டி போட்டுக் கொண்டிருந்த அந்த செந்நிற சாஸை சற்று ஆழ்ந்து பார்த்தவன், அடுத்த நொடி தன் பெரு விரல் கொண்டு அதனை துடைத்தான், அவளின் அதிர்வினை பொருட்படுத்தாமல்

..

 

பின்.. அவளை தான்டிச் சென்றான் அவ்விரலை சுவைத்துக் கொண்டே…

அவளை பார்வையால் பருகிக் கொண்டே…!!


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top