உயிரே 21

 

Jiya Janavi
(@jiyajanavi)
Member Admin
Joined: 1 year ago
Messages: 223
Thread starter  

21

 

தர்மா தன் முன்னால் போனில் காட்டிய போட்டோக்களை தான் வெறுத்துப் பார்த்து கொண்டிருந்தான் வீரா. 'எங்கெங்கேயோ கைவைத்து கடைசியில் என் அடிமடியில் கை வைத்து விட்டானே இந்த இன்ஸ்பெக்டர் கண்ணபிரான்!' என்று ஏகத்திற்கு கோபம் அவன்மேல்!!

 

அதேசமயம் அருகில் அவனோடு பேசிக் கொண்டிருந்த மனைவியை விரக்தி புன்னகையோடு பார்த்தான். 'வேறு என்ன எதிர் பார்த்து விட முடியும் அவளிடம் இதைத்தவிர?' என்று அவனுக்குள் மெலிதாகச் சொல்லிக் கொண்டான்.

 

தன்னை இந்த கேசில் சிக்கவைப்பதற்கு என்னென்ன தகிடு தத்தங்கள் செய்ய முடியுமோ அத்தனையும் செய்து கொண்டிருக்கிறான் கண்ணபிரான் என்று இவனுக்கு செய்திகள் வந்து கொண்டே தான் இருந்தது. அதை எல்லாம் கண்டும் காணாதது போல் இருந்தாலும் அவன் அடுத்தடுத்து அந்த இடத்தை நோக்கி செல்ல முடியாதபடி பல முட்டுக்கட்டைகளை இருந்த இடத்தில் இருந்து ஆட்களைக் கொண்டு போட்டுக்கொண்டிருந்தான் வீரா.

 

இன்னும் அம்பலவாணன் பேச்சைக்கேட்டு சில ஆட்களை சாட்சிகளாக பொய்யாக ஏற்படுத்திக் கோர்ட்டில் நிறுத்தி வீராவுக்கு எதிராக அரஸ்ட் வாரண்ட் வாங்க முயல.. இவனிடம் பொய்சாட்சி சொல்ல ஒத்துக் கொண்டவர்கள் அங்கே வந்து "இன்ஸ்பெக்டர் தேனுங்க ஜட்ஜ் ஐயா பொய் சாட்சி சொல்ல சொன்னாரு!!" என்று ஜட்ஜ் முன்னாலேயே உரைக்க.. 

 

ஜட்ஜோ "இம்மாதிரி தொடர்ந்து பொய் சாட்சிகளை கொண்டுவந்து நிறுத்தினால் சட்டரீதியாக உங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்!!" என்று எச்சரிக்கை விடுத்து அனுப்பினார். கூடவே இந்த பொய் சாட்சிகளுக்கு அபராதம் விதிக்க அந்த அபராதத் தொகை கட்டவதும் இவன் தலையில் வந்து விழுந்தது.

 

இதை அம்பலவாணனிடம் முறையிட சென்றால்.. அவர்களோ "எங்க வூட்டு பெண்டு பிள்ளைகள கத்திமுனையில் வைச்சு மிரட்டுறான். எங்கள என்ன பண்ண சொல்லுகிறீக ஐயா? இந்த போலீஸ் தேன் எங்களுக்கு பாதுகாப்பு தரணும்.. நாங்க இந்த வேலயில இறங்கும்போது" என்று அவன் பக்கமே அவர்களும் கை காட்டி விட.. இருமுனை இருந்து தாக்குதல் வர.. இருதலை கொல்லி எறும்பாய் தவித்துப் போய் கிடந்தான் கண்ணபிரான்.

 

என்ன செய்வது? என்ன செய்வது? எப்படி இந்த கேஸில் வீராவை சிக்க வைப்பது? என்று இருபத்திநான்கு மணி நேரமும் வீராவின் நினைப்பே!!

 

கண்ணனை பழிவாங்கத் துடிக்கும் சகுனியின் மனநிலையில் கண்ணபிரான்!!

 

அப்போதுதான் ஒருநாள் மாமியாருடன் அடக்க ஒடுக்கமாக கோவிலுக்குள் வந்த அஸ்திராவை கண்டான். 

 

முதலில் அவனுக்கு அடையாளம் தெரியவில்லை இவள் யார் என்று. ஆனால் வடிவையும் அவர்களுக்கு கொடுத்த மரியாதையையும் பார்த்து ஏதோ பெரிய புள்ளி வீட்டு பெண்கள் என்று அவர்களை கடந்து இவன் செல்ல.. பரிகாரத்தில் இரண்டு மூன்று பெண்மணிகள் அஸ்திராவை பார்ப்பதும் தங்களுக்குள் குசுகுசுப்பதுமாக இருந்தனர்.

 

இவன் கண்டுகொள்ளாமல் பிரகாரத்தை சுற்றி வந்து கொண்டிருக்கும்போது அந்த வார்த்தைகள் அவன் காதில் வந்து தானே விழுந்தன.

 

"இவ அந்த சஞ்சயனோட பொண்டாட்டி.. அம்பலவாண மக தான?" என்று முன்னொருத்தி கேட்க..

 

"அம்பலவாண மக சொல்லு ஒத்துக் கிடுத்தோம். ஆனா சஞ்சயன் பொண்டாட்டினு சொல்லாத!! அது தேன் அவன் போயிட்டானே.. தாலி அறுத்து ரெண்டு மாசத்துக்கு மேல ஆகுது. போதாகுறைக்கு நம்ம சின்னய்யா தேன் அவளை கட்டி இருக்காக.. சும்மா நீயி வாயு புளிச்சுதோ மாங்கா புளிச்சுதோனு பொது இடத்துல ஏதாவது பேசி வாங்கி காட்டிக்காதவ!" என்று மற்றவள் அவளை அடக்க..

 

"ம்க்கும்… பெரிய பொண்டாட்டி!!! சின்னய்யா கூட ஒன்னு மத்தா குடும்பம் நடத்துறாளா இல்லையானு தெரியல.. மூஞ்ச பாத்தியா? அதுல கொஞ்சமாவது சந்தோஷம் இருக்கா?" என்று மீண்டும் வம்பு வளர்ப்பதிலேயே குறியாக இருந்தாள் முன்னொருத்தி!!

 

"கொஞ்சமாச்சும் உனக்கு அறிவு இருக்கா? பொண்டாட்டி செத்தா மூணு நாளு புதுமாப்பிள்ளைகுறது எல்லாம் ஆம்பளங்களுக்கு தேன் சரி!! பொட்டச்சி மனசுக்கு ரொம்ப கஷ்டம்!! அதுவும் சின்ன வயசு.. போதாக்குறைக்கு நம்ம சின்னய்யா வம்படியா கட்டிட்டு வந்திருக்காரு.. கொஞ்ச நாளாகத்தேன் செய்யும்!!" என்றாள் பின்னொருத்தி!!

 

"ம்ஹீம்.. எங்கன? இதா நம்ம சின்னையா கூட ஒழுங்கா குடும்பம் நடத்த போவுது?? ஆனாலும் பொண்ணும் பாவம் தேன்!! நம்ம பெரிய ஆத்தாவுக்கு இப்படிப்பட்ட மருமக வந்து வாய்ச்சிருக்க கூடாது. ஊருக்கு அத்தன நல்லது செய்றவுக" என்று ஒரு இக்கு வைத்து முன்னொருத்தி முடிக்க..

 

"போதும்!! போதும்!! வாய அடக்கிட்டு வாடி!!" என்று பின்னொருத்தி அவளை இழுத்துக்கொண்டு சென்றாள்.

 

அம்பலவாணன் பொண்ணு..

சஞ்சயனின் முன்னால் மனைவி..

விருப்பமில்லா கல்யாணம்..

அதுவும் இரண்டாம் கல்யாணம்..

வம்படியாக குடும்பம் நடத்தும் வீரா..

 

இவ்வளவு விஷயங்களை அவர்கள் பேச்சிலிருந்து புரிந்து கொண்ட கண்ணபிரானுக்கு இதற்கு மேல் எதுவும் வேண்டுமா என்ன அஸ்திராவை அஸ்த்திரமாக வைத்து வீராவை தாக்க..

 

ஆனால்.. அவன் மறந்துவிட்டான் வீரா சாதாரண வீரன் அல்ல!!

வில்லுக்கு விஜயன்..

கதாயுத்ததில் பீமன்..

கணிப்பதில் சகாதேவன்..

பதுங்கி தாக்குவதில் நகுலன்..

தர்மத்துக்கு மட்டுமே கட்டுப்படும் தர்மன்!! என பஞ்ச பாண்டவர்களின் கலவை அவன் என்று!!

 

நன்றே செய்!! அதுவும் அன்றே செய்!! என்று மூத்தோர் வாக்கு உண்டு!!

 

அதே போல.. அப்போதே சென்று அஸ்திராவிடம் பேசினான் கண்ணபிரான். வடிவு முன்னிலையில் அஸ்திராவின் தூரத்து உறவு என்றும்.. விஷயம் கேள்விப்பட்டு அவளை பார்க்க வரும்போது கோவிலுக்குள் இவர்கள் செல்வதை பார்த்து வந்ததாகவும் என்று அடித்து விட்டவனை, வெள்ள மனம் கொண்ட வடிவும் நம்பி அவர்களுக்கு தனிமை கொடுத்துவிட்டு சென்றார்.

 

"அஸ்திரா நான் உன்னோடு தூரத்து சொந்தம் எல்லாம் கிடையாது!!" என்று அவன் கூறி அவளை அதிர்ச்சியாக நினைக்க..

 

"தெரியும்!! யேன் சொந்தக்காரவியங்கள எனக்கு தெரியாதா? அது மட்டும் இல்ல நீக புதுசா இந்த ஊருக்கு வந்த இன்ஸ்பெக்டருனும் எனக்கு தெரியும்!!" என்று அவனுக்கே அந்த அதிர்ச்சியை பார்சல் செய்தாள்.

 

ஒரு நிமிடம் அசந்து நின்றவன் "அம்பலவாணன் பொண்ணு வேற எப்படி இருப்ப!!" என்று சிலபல பிட்டுகளை போட்டு சஞ்சயனின் கொலை வழக்கைப் பற்றிக் கூறி "என்ன இருந்தாலும் நீ அவேன் முன்னா மனைவி தான.. நீ ஒரு சாட்சியாய் மாறி சொல்லனும். அப்பத்தேன் உன் கணவன்.. மன்னிச்சுக்கோ என்ன இருந்தாலும் உன்னோட முதல் கணவன் அவேன் தானே.. அவன் இறந்ததற்கு நியாயம் செய்ய வேண்டாமா நீனு? அதும் இல்லாம உன் கூடவே வளர்ந்த பையன் அவன்!! உன் புருஷன் இல்லைனாலும் அவன ஒரு மனுஷனா நினைச்சு அவேனுக்கு நியாயம் செய்வனு எதிர்பார்க்கிறேன். அடுத்த வாரம் இதே நேரம் நான் இந்த கோவிலுக்கு வரேன் உன் பதிலை எதிர்ப்பார்த்து" என்று சென்று விட்டான்.

 

இப்படியாக தொடர்ந்து இரண்டு வாரம் அவளிடம் பேசிப் பேசி.. ஏற்கனவே வீரா சஞ்சயனை கொன்றுதுக்காகவும்.. தன்னை வம்படியாக கல்யாணம் செய்ததற்காகவும் ஏதேனும் செய்யவேண்டும் என்று வறட்டுப் பிடிவாதம் முரட்டு கோபத்தில் இருந்தவள் தானாக வந்த வாய்ப்பை விடாமல் பற்றிக் கொண்டாள்.

 

முதல் இரண்டு வாரம் எதேச்சையாக சந்திப்பது போல் இருக்க.. அடுத்த வாரமும் இவர்கள் சந்தித்ததை பார்த்த, இவர்கள் பாதுகாப்பு என்று அனுப்பபட்ட பையன் போட்டோக்களை எடுத்து தர்மாவுக்கு அனுப்ப.. அதை தான் வீராவிடம் காட்டிக் கொண்டிருந்தான் தர்மா தற்போது!!

 

"மச்சான்.. நீ ஒன்னும் அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்க வேண்டாம்.. தங்கச்சி கிட்ட பேசி பாரு" என்று வீராவின் முகத்தில் இறுக்கத்தை பார்த்து கவலையோடு தர்மா கூற..

 

"விடு மாப்புள.. அவளை கை பிடிக்கும்போது இத்தனை பிரச்சனைகள் அடுத்தடுத்து வரும் தெரிஞ்சு தானே செய்தேன். இதைக்கூட சமாளிக்கலைனா நானெல்லாம் என்ன வீரன்??" என்று வழக்கமான அவனது நிமிர்வோடு இடதுகையால் மீசையை முறுக்கிக் கொண்டவன் "வரேன் மாப்புள!!" என்று கிளம்பி விட்டான். ஆனால் உடனே வீட்டுக்கு செல்ல அவனுக்கு மனமில்லை. தனது வக்கீலும் நண்பனுமான பத்ரியை பார்க்க சென்றான்.


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top