அத்தியாயம் 10
அபிராமி தேவியார் என்று அவ்வீட்டின் பிள்ளைகளால் செல்லமாக அழைக்கப்படும் அபிராமி, பர்வதத்தம்மாள் மற்றும் சிவஞானத்தின் இரண்டாவது மகள்.
அதே தஞ்சாவூரில் மொத்த அரிசி ஆலை சர்க்கரை ஆலை வைத்திருக்கும் ரவீந்திரனுக்கு வாக்கப்பட்டார்.
ஆச்சு.. இவர்களுக்கு திருமணமாகி பல ஆண்டுகள்.
இந்நாள் வரைக்கும் அபிராமி ரவீந்தருக்கு வாக்கப்பட்டாரா? இல்லை ரவீந்திரன் தான் அபிராமிக்கு வாக்கப்பட்டாரா என்பது சுற்றத்தாரிடையே இன்று வரை நிலவி வரும் அதி முக்கிய சந்தேகம்??
‘மூத்தது மூளை.. இளையது காளை..!’ என்பார்கள் அதுபோல தான் பார்கவியும்.. அபிராமியும்..!
துடுக்கான பேச்சும் சிறுவயதில் இருந்தே செல்வ வளத்தில் வளர்ந்து வந்ததால் என்னவோ கூடவே தான் என்று ஈகோவும் அதிகம் இருக்கும் அபிராமியிடம். அதனால் அனைவரிடமும் சற்று தன்னை உயர்த்திக் காட்டியபடி மற்றவரை மட்டம் தட்டி தான் பேசுவார்.
ஆனால் அவரின் அந்த குணம் தவிடு பொடியானது என்னவோ அவரது அக்கா பார்கவியிடம் தான்.
பார்கவி, பிரக்யாவின் அன்னை..! சிவஞானத்தின் மூத்த பெண் அதிலும் செல்லப்பெண்..!
தங்கையின் இந்த குணத்தை அடிக்கடி சுட்டிக்காட்டி மாற்றிக்கொள்ள சொல்லி அறிவுரை கூறுவார்..!
பார்கவியின் 15 ஆம் வயதில்தான் பர்வதத்தம்மாளின் 35 வது வயதில்தான் அவர்களுக்கான ஆண் வாரிசான கதிர்நயனன் பிறந்தான்.
அதுவரை தமக்கு ஆண் வாரிசு இல்லையே?? இரண்டும் பெண்ணாக இருக்கிறார்களே?? என்று சிறிது கூட கலங்காது, வருந்தாது தன் சொத்துகளுக்கு வாரிசாக இருவரையும் படிப்பு, ஒழுக்கம், நிர்வாகத் தன்மை, இரக்க குணம், நிமிர்வு, தைரியம் என்று அனைத்தையும் கற்றுக் கொடுத்து மெருகேற்றினார் சிவஞானம்.
வெளியில்.. தொழிலில்.. எப்படி நடந்துக் கொள்ள வேண்டும் என்று தந்தை வகுப்பெடுக்க…
வீட்டுக்குள்ளே, விருத்தினர்களை இன்முகமாக வரவேற்று உபசரிக்க.. நயமாக நடந்துக் கொள்ள..
அனைவரிடமும் ஏற்றத்தாழ்வு இன்றி பழக.. தான் என்று அகந்தை காட்டாது இனிய முகமாக உறவாட என்று வீட்டின் நிர்வாகத்தின் அனைத்தையும் பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுத்தார் அன்னையாய் பர்வதத்தம்மாள்.
‘நாம் எவ்வளவு உயரத்தில் இருக்கிறோம்..
நல்ல வளத்தில் இருக்கிறோம்.. பின் நாம் ஏன் இவர்களுடன் நம் தராதரத்தை குறைத்து பழக வேண்டும்?’ என்ற கேள்வி சிறு வயதிலேயே அபிராமிக்குள் தோன்றியது.
ஆனால் அதற்கான பதில் அவருக்கு விருப்பமானதாய் இல்லை. அன்னையும் தந்தையும் கொடுத்தது..!
அதற்கு அவராய் ஒரு பதிலை தெரிந்துக் கொண்டு ‘இப்படித்தான் நான்’ என்று தனக்குள்ளே ஒரு கட்டமைப்பை உருவாக்கிக் கொண்டு ‘நான் ஆளப்பிறந்தவள்..!’ என்று அனைவரையும் ஆட்டி வைக்க ஆரம்பித்தார்..!
சிறிய மகளின் இந்த போக்கு பெற்றவர்களுக்கு மிகுந்த வருத்தத்தை கொடுத்தது. ஆனாலும் அவரை கண்டிக்கவும் தவறவில்லை. அன்னை தந்தை முன்பு சற்று குறைத்து வாசிப்பவர்.. அவர்கள் இல்லாத நேரம் அனைவரையும் விலாசி தள்ளி விடுவார், அவரின் விஷ வார்த்தைகளால்..!
சின்ன மகளின் இக்குணத்தை சரியாக கணக்கிட்ட சிவஞானம் தனது தொழிலில் வெகுவாக அவரை ஈடுபடுத்தவில்லை. அனைத்தையும் பார்கவியிடமே ஒப்படைத்தார்..!
சிலமுறை நேராக சொன்னாலும் அவர் புரிந்துக் கொள்ளாமல், ‘தான் பிடித்த முயலுக்கு 300 கால்கள்’ என்று இருப்பதைக் கண்டு அவர் போக்கிலேயே போய் “இப்போ நீ சின்ன பொண்ணுடா அபி.. லைஃப் என்ஜாய் பண்ணுடா. அதுக்குள்ள நீ ஆபீஸ்க்கு வரணும்னு என்ன இருக்கு?” என்று சொல்லி அவரின் எண்ணத்தை மடை மாற்றி விடுவார்.
ஆனால் பெற்றவர்கள் இருவரும் பெரிய பெண்ணிடம் ஒரு மாதிரியும்.. தன்னிடம் ஒரு மாதிரியும் நடந்துக் கொள்வதாக சிறுவயதிலேயே அபிராமிக்கு ஒரு எண்ணம் தோன்றியது..!
அந்த எண்ணங்கள் தமக்கையின் மீது பொறாமையையும் காழ்ப்புணர்ச்சியையும் ஏற்படுத்தியது.
அபிராமி வளர வளர அது இன்னும் வளர்ந்ததே ஒழிய… கொஞ்சம் கூட குறையவே காணும்..!
பார்கவியிடம் ஏதாவது குறையை கண்டுபிடித்து பெற்றோரிடம் போட்டுக் கொடுக்க நினைப்பார், ஆனால்.. அவரால் ஒரு சிறு தப்பை கூட பார்கவியிடம் கண்டுபிடிக்க இயலாது..!
அத்தனை நேர்த்தியாக.. அத்தனை நிமிர்வாக.. அத்தனை பொறுப்பாக இருக்கக் கூடியவர் பார்கவி..!
அவர் இறந்த பின்பு அவரின் மகளான பிரக்யாவை இங்கே அழைத்து வந்தபின், சிறு பெண்ணான அவளிடம் தனது வன்மத்தை கண்டித்தல் என்ற பெயரில் கக்க ஆரம்பித்தார் அபிராமி..!
அவள் சிறு தவறு செய்தாலும் அதை மலையென உருவகப்படுத்தி ஒரு ஆட்டம் ஆடி தீர்த்து விடுவார்..!
“விடு அபிராமி.. அவ சின்னப் பொண்ணு, அதுவும் தாய் இல்லாத பொண்ணு..!” யாரும் அப்படி பிரக்யாவுக்காக பரிந்து வந்தால்,
“அதனால தான், நான் இவ்வளவு அவளுக்கு எடுத்து சொல்றேன். நாளைக்கு தாயில்லா பொண்ண இங்க கூட்டிட்டு வந்து தருதலையா வளர்த்து விட்டாங்கனு யாரும் சொல்லக்கூடாது இல்லையா?” என்று அவர் இன்னும் பேச..
பிரக்யாவுக்கு பரிந்து வந்தவர்களால் அவரின் கேள்விக்கு பதில் அளிக்க முடியவில்லை. அதிலும் “அவளாச்சு.. அவ அக்கா பொண்ணாச்சு..!” என்று மெல்ல அந்த உறவு சிக்கலில் சிக்கி விடாமல் நழுவி விட்டனர்..!
பர்வதத்தம்மாளிடம் அதேதான் கூறுவார். “ம்மா..நீ தான் செல்லம் கொடுக்கிற.. நானாவது இங்க வந்து நேரம் கொஞ்சம் கண்டித்து வைக்கிறேனே.. அப்போ தான் அவளுக்கு ஒரு பயம் இருக்கும் மா..! சும்மா செல்லம் கொடுத்து கொடுத்து கெடுத்து வைக்காதீங்க..!” என்பார்..!
ஆனால் அதற்கும் சேர்த்து கதிர்நயனன் கண்டிப்பும் அன்பையும் ஒருசேர காட்டுவதில் அவனின் முன் பெரும்பாலும் வாயை திறக்கவே மாட்டார் அபிராமி.
அவ்வளவு நிமிர்வாக பொறுப்பாக இருந்த அக்காவின் குணத்தைக் கண்டு பொறாமை கொண்ட அபிராமி, அந்த வயதில் சற்று விளையாட்டுத்தனமாக இருந்த அக்காள் மகள் மீது, அந்த பொறாமை தீயை வன்மத்தை கொட்டி தீர்த்துக் கொண்டார் என்பதே உண்மை..!
பிரக்யாவின் சிறு சிறு தவறுகளுக்கு கூட பெரிய வியாக்கியானம் பேசி பாடம் எடுத்து “உனக்கு அம்மா இல்ல..இதெல்லாம் நாள பின்ன நீ போற வீட்ல என்ன பொண்ணு இப்படி வளர்த்து வெச்சிருக்கீங்கனு எங்கள தான் கேட்பாங்க?” அப்படி இப்படி என்று அவளை ஒரு வழியாக்கி விடுவார்.
அது மட்டும் இல்லாமல் விதிவசத்தால் பிரக்யாவின் வாழ்க்கையில் பல கோரங்கள் நிகழ்ந்து விட.. அதில் விதியின் ஆட்டுதலுக்கோ இல்லை பிறர் சதியின் ஆட்டுதலுக்கோ பொம்மையாய் ஆட்டி வைக்கப்பட்ட பிரக்யா அனைவரின் முன்னும் பெரும் குற்றம் செய்த குற்றவாளியாய்.. குற்றத்திற்கு துணை போனவளாய்.. சித்தரிக்கப்பட, கேட்கவும் வேண்டுமா அபிராமியின் வார்த்தை விளையாடலை??
இப்படியாகத்தான் அவள் மூன்று வருடங்கள் முன் இங்கிருந்து சென்ற போது வார்த்தைகளால் குத்தி கிழித்து அவளை ரணப்படுத்தி அனுப்பி இருந்தார்..!
இப்பொழுது திரும்பி வந்திருப்பவளிடமும் அதே தனது உத்தியை காண்பிக்க அவர் முயல.. அவரின் ஆரம்பத்திற்கு எண்டு கார்டு போட்டு முடித்து விட்டான் கதிர்நயனன்..!
“என்ன உன் பொண்டாட்டியா? இந்த வீட்டு மருமகளா? என்னடா இப்படி சொல்ற.. அப்போ என் நாத்தனார் விசாலினி வாழ்க்கை.. அவ்வளோ தானா?” என்று அதிர்ந்து கேட்க திரும்பி அக்காவை ஒரு முறை முறைத்த கதிர்நயனன், அக்கா என்று ஆரம்பிக்கும் முன்னே..
“அபிராமி..!” என்று மகனுக்கு முன் மகளை அதட்டி இருந்தார் பர்வதத்தம்மாள்..!
“என்ன பேச்சு பேசுற நீ? இப்பதான் கொஞ்ச நேரத்துக்கு முன்ன இந்த வீட்டு மருமகளா என்னை அவ வரவேற்கல அது இதுன்னு சொல்லிட்டு, இப்ப அடுத்த நிமிஷமே உன் நாத்தனார் பத்தி கேட்குற? இங்க பாரு.. அது ஏற்கனவே முடிஞ்சு மூணு வருஷம் ஆச்சு.! இனிமே அது தொட்டு தொடர விருப்பப்படாதே..!” என்றார் அழுத்தம் திருத்தமாக.
அபிராமியோ அம்மாவிடம் எதிர்வாதம் செய்ய முடியாமல் சற்றென்று கணவன் புறம் திரும்பி கண்களால் சமிக்ஞை செய்தார்.
அதை புரிந்துக் கொண்ட ரவீந்திரன் “என்ன அத்த.. இப்படி பட்டுன்னு சொல்றீங்க? மூணு வருஷமா விசா நயனனுக்காக தானே காத்திருக்கா? அப்போ அவ வாழ்க்கை?” என்று தன் சித்தி பெண்ணிற்காக ரவீந்திரன் போர் கொடியை தூக்க..
நிலைமையின் தீவிரம் வேறு திசையில் செல்வதை உணர்ந்த கதிர்நயனன், அதுவும் பிரக்யாவுக்கு முன்னால் இவ்வாறு விவாதிப்பது அவள் மனநலத்திற்கு நல்லதல்ல என்பதை உணர்ந்தவன்,
“ஆமா நீ பிள்ளைகள அவுட்டிங் கூட்டிட்டு போனு சொல்ல தானே வந்த..! முதல்ல நாங்க அந்த வேலையை பார்க்கிறோம்” என்றவன்,
“ஆதி ஆரு கிளம்பலாமா?” என்றிட,
“மாமா நாங்க எப்போதோ ரெடி..!”
“அப்போ காருக்கு போங்க”
“இதோ.. ஓடிட்டோம்..! பை ஆல்..!” என்றவாறு எங்கே நின்றால் அபிராமி பிடித்துக் கொள்வாரோ என்று சிட்டாக பறந்தனர்.
அவர்கள் ஓடுவதைப் பார்த்ததும் கதிர்நயனின் முகத்தில் மெல்ல புன்னகை மலர, பிரக்யாவை பார்த்தான்.
அவளோ உடல் இறுகி சித்தியும் சித்தப்பாவும் பேச பேச சுடிதார் ஷாலை விரல்களில் சுற்றிக் கொள்வதும், பின் அதை அவிழ்ப்பதுமாக இருந்தாள்.
தன் மனதை இதன் மூலம் கட்டுப்படுத்துகிறாள் என்பதை உணர்ந்த கதிர்நயனன்,
“சின்னு.. போலாமா?” என்று கேட்க..
“ஹான்.. எங்க..?” என்று திருதிருவென்று விழித்தாள்.
அபிராமி பேசப்பேச அவளது நினைவுகள் எல்லாம் கடந்த காலத்தில் சுற்றித் திரிந்து.. நிலை தடுமாறி.. வீழ்ந்து எழுந்து.. இப்பொழுது எங்கே இருக்கிறோம் என்பதை கூட அறிந்துக் கொள்ள முடியாத நிலையில் அவள் இருக்க..
“ஹான் மாமா..” என்றவளது துடித்த உதடுகளும் தவித்த அவளது பார்வையின் மூலமே அதனை கண்டு கொண்டவன்,
“அவுட்டிங் தான் கிளம்பு..!” என்று அவள் கையை பிடித்து எழுப்பியவன் அம்மாவிடம் தலையசைத்து விட்டு மனைவியை அதற்கு மேலும் அங்கு நிற்க விடாமல் வேகமாக இழுத்தே வந்தான்.
“பாருங்க மா.. நான் என்ன விஷயம் பேசிட்டு இருக்கேன்.. இவன் பாதிலேயே எழுந்து போறான்” என்று மீண்டும் தம்பியை பற்றி அம்மாவிடம் அபிராமி புகார் படிக்க..
“ம்ப்ச்.. அபி.. காலையிலிருந்து எனக்கு ஒரே தலைவலி. நான் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்கிறேன். நீயும் உன் ரூம்ல மாப்பிள்ளையை கூட்டிட்டு போய் ரெஸ்ட் எடுங்க. மதியம் சாப்பிட்டுட்டு அப்புறம் கிளம்பலாம்” என்று ரவீந்திரனை பார்த்தவர், “ரெஸ்ட் எடுங்க மாப்பிள்ளை” என்று மரியாதையாக மொழிந்து விட்டு தன் அறைக்குள் அடைந்து விட்டார்.
ச்சே.. தான் நினைத்து வந்ததில் ஒன்று கூட நடக்கவில்லையே என்று அபிராமியின் முகம் சிறுத்தது.
“அபி, விசா விஷயத்தை நாம பேசுறதை விட என் சித்தி சித்தப்பா பேசுறது தான் சரியா இருக்கும். விசாவுக்காக என்னை சப்போர்ட் பண்ண வச்சி எனக்கும் நயனனுக்கும் இடையில் முட்டிக்க வச்சிடாத..! தொழில் ரீதியா நிறைய இடைஞ்சல் எனக்கு வரும்” என்றார் பக்கா தொழிலதிபராக..!
“என்னது தொழில்ல இடைஞ்சல் கொடுப்பானா? அப்படி அவன் பண்ணிடுவானா? நான் விட்டுடுவேனா? இருங்க அவன் வரட்டும்..!” என்று விறுவிறுவென்று எழுந்து
அவர் அறைக்குச் செல்ல..
‘அச்சோ.. கிணறு வெட்ட போய் பூதம் கிளம்பி விட்டதே..!’ என்று தலையில் கை வைத்துக்கொண்டார் ரவீந்திரன்.
