அழகன் 25
குடும்பமே தன்னைச் சுற்றி நின்றிருக்க.. இனி மறைத்து ஒன்றுக்கும் ஆகப்போவதில்லை என்று உணர்ந்த அங்கயற்கண்ணி,
ஒரு பெருமூச்சோடு “ஆமா.. நான் அவரத் தேன் விரும்புறேன் இப்ப இல்ல.. ரொம்ப வருசமாவே” என்றாள்.
“ரொம்ப வருசமாவேனா? எப்பதிலிருந்து?” என்று சற்றே முகத்தை கடுகடுவென்று வைத்துக் கொண்டு கேட்டார் கலையரசி.
அவருக்கு அவருடைய கோபம்..! தான் பெண்ணின் கல்யாணம் நடப்பதற்காக எத்தனை எத்தனை கோவில்கள்.. எத்தனை எத்தனை பரிகாரங்கள்.. எத்தனை எத்தனை கல்யாண தரகர்கள் என்று அலைந்து திரிந்து, எதுவும் சரி வராமல் மனதில் வருத்தப்பட்டு கொண்டிருக்கிறோம்
இவளோ தனக்குள் ஒரு காதலை வைத்துக் கொண்டு நம்மிடம் பகிராமல் இருந்திருக்கிறாளே என்று அத்தனை வேதனை அவருக்கு..!
அம்மாவாக அவருக்கும் வேதனையும் ரணமும் இருக்கும் தானே? மகளின் இந்த காதலில் விருப்பு வெறுப்பை தாண்டி அவருக்கு இருந்தது ஏமாற்றப்பட்டதின் வலி..!
“ம்ப்ச்.. ம்மா.. அதான் ரொம்ப வருஷமாவேனு சொல்றேன் தானே? அப்புறம் என்ன?” என்றவளின் மனதிலும் இப்போது அவளின் விஷயம் இங்கே பகிரப்பட்டது பிடிக்கவில்லை அவளுக்கு.
பின்னே.. தன்னை ஒரு குற்றவாளியாக நிற்க வைத்து அனைவரும் சுற்றி நின்று குத்தும் பார்வைகளாலும்.. வலிக்கும் வார்த்தைகளாலும் பேசினால்.. அங்கயற்கண்ணிக்கு அது பிடிக்கவில்லை..!
ஆனால் அவளுக்கு வலித்தது போல, அவளை பெற்றவர்களுக்கும், பெற்றவர்களை காட்டிலும் பாசம் காட்டி வளர்த்த தாத்தா பாட்டிக்கும் அத்தனை வலித்து இருக்கும் என்பது அவளுக்குப் புரிந்தாலும்,
‘என்னை விட உங்களுக்கு பெரிய வலியா?’ என்று இளமையின் வேகம் அவளை இன்னும் கோபப்பட தான் வைத்தது.
சட்டென்று அப்பத்தாவோ “அப்போ மணிமாறன நீ கட்டிக்கிறேனு சொல்லும் போதே இந்த பயல நீ விரும்பிட்டு தேன் இருந்திருக்க.. அப்புறம் ஏன் கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்ட மாதிரி எங்க கிட்ட எல்லாம் பேசின கண்ணி? அப்பவே உடைச்சு சொல்லி இருக்க வேண்டியதுதானே?” என்று கேட்டவரை அவளோ தவிப்போடுப் பார்த்தாள்.
இவள் செய்தது பாதி தவறு என்றால்.. சரபேந்திரன் செய்தது மீதி தவறு..!
“எனக்கான ஒரு வேலை அங்கீகாரம் முதலில் கிடைக்கட்டும். அதன் பின் நான் என் அப்பா அம்மாவிடம் சொல்லி, உன்னை பெண் கேட்க அழைத்து வருகிறேன். அதன்பின் உன் பெற்றோரிடம் நீ சொல்லலாம்” என்று உரைத்து சென்றது என்னவோ அவன் தான்.
எங்கே அதற்கு முன் விஷயம் தெரிந்தால்.. தன் வீட்டில் ஒத்துக் கொள்ள மாட்டார்களோ? இல்லை தாம் தூம் என்று குதித்து அடித்து சண்டை போடுவார்களோ இல்லை ஒருவேளை சரபேந்திரனை தேடி சென்று அவனை கட்டம் கட்டி தூக்கி விடுவார்களோ.. என்றெல்லாம் பயந்து தான் இவ்விஷயத்தை யாரிடமும் பகிரவில்லை அங்கயற்கண்ணி.
ஆனால் இப்பொழுது அதை சொல்லவும் அவள் விருப்பப்படவில்லை.
‘ஏன் இந்த பால்கோவா இந்த பேச்சை இப்ப ஆரம்பிச்சா? இப்போ எத்தன சிக்கலாய் கொண்டு போய் முடியுது. எப்பொழுதும் போலவே இருக்க வேண்டியதுதானே? என் மேல மேல பேசி பேசி.. இப்போ எல்லார்டேயும் நான் வாங்கி கட்டுறேன்’ என்று முணுமுணுத்தாள். அவளின் பிரச்சினையிலிருந்து அவளை வெளிவர மறைமுகமாக உதவி செய்தவளையும் தன் மனதில் போட்டு திட்டிக் கொண்டுதான் இருந்தாள் அங்கயற்கண்ணி.
ஏன்.. இப்பொழுது அவளுக்கு என்ன வேண்டும் என்று அவளுக்கே புரியவில்லை?
எப்படியும் இந்த காதல் விஷயம் தெரிந்தால் பிரச்சினை வரும். அதை பேசி சமாளித்து சரபுவை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று ஒரு எண்ணம் மனதில் இருந்தது..!
மற்றொரு பக்கமோ என்ன இருந்தாலும் அன்று அவன் பேசியது தப்பு. அவனை நான் மன்னிக்கப் போவதாய் இல்லை என்று சரபேந்திரன் மீது வீம்பு பிடித்துக் கொண்டிருந்தது.
சரபேந்திரன் வேணுமா? வேணாமா? என்று இடைப்பட்ட நிலையில் அவள் தவித்துக் கொண்டிருக்கும் நேரத்தில், அவர்களின் விஷயம் வீட்டாருக்கு தெரிய வந்ததில்.. அவளுக்கு விருப்பமில்லை..!
ஒன்று அவனை வேண்டாம் என்று வீட்டில் உள்ளவர்கள் மறுத்து விட்டால்? அவர்களை எதிர்த்து அவனை திருமணம் செய்து எண்ணம் கொஞ்சம் கூட அவளுக்கு இல்லை..!
ஒருவேளை பிரச்சனை சுமூகமாக முடிந்து அவனை அவளுக்கு மணவாளனாக கொண்டு வந்தால்? அவனை மணந்து கொள்ளவும்.. அவன் பேசியதை மறக்கவும் மன்னிக்கவும் அவளால் முடியவில்லை..!
என்ன செய்வது? நான் இப்போ என்ன செய்வது? என்று தவிப்போடு தவித்துக் கொண்டிருந்தவளின் கயல் விழிகளோ இங்கும் அங்கும் அலைபாய்ந்து கொண்டிருந்தது.
அவளின் மனம் யாருக்கு புரியாமல் போனாலும் அழகனுக்கு நன்றாக புரிந்தது.
அவள் இப்பொழுது பெரும் குழப்பத்தில் இருக்கிறாள். அந்த குழப்பத்தில் இருந்து அவள் தெளிந்து வந்தால் தான் அவள் தெளிவான ஒரு முடிவை எடுக்க முடியும் என்பதை நினைத்துதான் அவனும் இத்தனை காலமாக அவளை விட்டு பிடித்துக் கொண்டிருந்தான். இன்னும் அதிலேயே அவள் உழன்று கொண்டிருப்பது அவனுக்கு பிடிக்கவே இல்லை.
தான் கொண்ட காதலுக்கு அவள் நியாயம் செய்ய வேண்டாமா? இவனை தான் காதலிக்கிறேன் என்று தைரியமாக தங்களைப் பற்றி பெற்றவர்களிடம் எடுத்துரைத்து, அவனை திருமணம் செய்து கொள்ளப் போகிறேன் என்று தன் முடிவில் தீவிரமாக இருக்க வேண்டாமா?
அதை விடுத்து இது என்ன இருக் கொல்லி எறும்பாக இரு பக்கமும் அவள் தவித்துக் கொண்டிருக்கிறாள்? ஏதாவது ஒரு பக்கம் முடிவு அவள் சாதகமாக எடுக்க வேண்டும் தானே? என்று அமைதியாக தங்கையை அவதானித்திருந்தான்.
“சொல்லு கண்ணி? அப்பத்தா கேக்குறாக இல்ல? பதில சொல்லு..! அப்பவே நீ என்கிட்ட சொல்லி இருந்தா நாங்க உன் விருப்பத்திற்கு மறுப்பு சொல்லி இருப்போமா?” என்று கேட்ட தந்தையை அவள் தயக்கமாகப் பார்த்தாள்.
“உன்னோட விருப்பப்படி தான் நீ டீச்சருக்கு படிச்ச.. அதை எங்ககிட்ட சொல்லி சாதித்துக்கொள்ள உனக்கு தெரிஞ்சது. ஏன் காங்கேயன கொண்டு வந்து அழகன் கொடுத்த போ கூட நாங்க பொம்பள புள்ள வேணான்னு தான் சொன்னோம். இல்ல ‘நான் கண்டிப்பா காங்கேயம் வளர்ப்புன்.. நானும் ஜல்லிக்கட்டுல அவனை விட்டு கலந்துப்பேனு’ சொல்லி பிடிவாதம் பிடிச்சு.. தனக்கு தேவையானதை நீ சாதிச்சுக் கிட்ட, இதெல்லாம் உனக்கு பிடிச்ச பிடிச்சது போல செய்ய நாங்க எந்த மறுப்பும் சொல்லலையே?”
“ஆனா.. இப்படி ஒருத்தர நான் விரும்புறேனு எங்ககிட்ட சொல்லி அவனை பத்தின தகவல்கள என்ங்கிட்ட சொல்லி நீ கேட்க வேண்டியதுதானே? உன்னோட கோரிக்க.. உன்னோட ஆசை சரியா இருந்தா? அதை நாங்க நிறைவேற்ற மாட்டோமா? இத்தனை வருசம் எங்கள நீ புரிஞ்சுக்கவே இல்லையா?” என்று சற்றே கோபமும் ஆற்றாமையுமாக கேட்டார் போஸ்பாண்டி மகளை பார்த்து..!
சரபேந்திரன் அன்று பேசியதை சொல்லி குடும்பத்தாற் முன்னிலையில் அவனை கீழ் இறக்கவும் அவள் மனம் ஒப்பவில்லை.
அதே நேரம் அது சொல்லாமல் இவர்களுக்கு புரியாது. அவளோ கையை பிசைந்து கொண்டு தவிப்போடு தான் அண்ணனை இப்பொழுது நேருக்கு நேராக பார்த்தாள்.
‘என்ன செய்தாவது இதிலிருந்து என்னை காப்பாற்றி விட்டேன்?’ என்று கெஞ்சல் அதிலிருந்து.
அதேசமயம் கண்ணியின் கண்களின் கெஞ்சலை கண்டு கொண்ட, ஆண்டாளும் இப்பொழுது கணவனை தீர்க்கமாக முறைத்தாள்.
‘உனக்காகத்தான்.. இந்த குடும்பத்துக்காக தான் அவளுக்கு அவள் செய்த தப்பை புரிய வைக்க ந நான் பாடுபடுகிறேன். ஏதாவது பாசமா அன்பா பேசுறேனு ஆட்டைய கலைக்க நெனச்ச.. மவனே..!’ என்று இவள் கண்களால் அவனுக்கு மிரட்டல் விடுக்க..
மெதுவாக மனைவி புறம் தலையை ஆட்டி ‘இல்ல.. ஒன்னும் பேசல’ என்றவன், இப்பொழுது கைகளை கட்டிக்கொண்டு நேர் பார்வையாக தங்கையை பார்த்தான் கூர்மையாக..!
‘உன் எண்ணத்தை.. உன் விருப்பத்தை நீ தான் பேசிக் கொள்ள வேண்டும்..!’ என்று ஆணை தோரணையாக அதிலிருந்து..!
“ஏனுங்க மாமா இவ முழிக்கிற முழியே சரியில்ல..! அந்த பொண்ணு மணிமாறன் தங்கச்சி அன்னைக்கு நிச்சயத்து போது காதல் கல்யாணம் பண்ணிக்கிட்டு வந்து நின்னுச்சு.. இவ தேன் அதுக்கு உதவி பண்ணுனானு நாம நினைச்சோம்.. இல்ல ஒருவேள இவளே இந்த கல்யாணத்தை நிறுத்தத்துக்கு அந்த பொண்ணுக்கு அப்படி ஒரு ஆசைய தூண்டி விட்டு இருப்பாளோ?” என்று சந்தேகம் என்ற பெயரில் கண்ணியின் செயலை அவர் போட்டு உடைக்க…
திடுக்கிட்டு அன்னையைப் பார்த்தாள் அங்கயற்கண்ணி.
‘என்னடா இது? மொத்த குடும்பம் இத்தனை நாள் அமைதியாய் ஏதும் தெரியாத பாப்பா மாதிரி இருந்தீங்க.. இன்னைக்கு ஒரே ஒரு நாள் இந்த பால்காவோ கொஞ்சம் ஒரு பிட்டு தான் போட்டா.. அதற்கு புள்ளி வைச்சு.. பெரிய பெரிய சிக்கு கோலமாக்கி நீங்களே அதுக்கு கலர் எல்லாம் கொடுக்குறீங்களேடா?’ என்று விழிவிரித்து பார்த்தாள் தன் குடும்பத்தினரை..!!
“ஆக.. அப்படி தான் நடந்து இருக்கு இல்லையா?’ என்று சத்தமாக போஸ் பாண்டி பெண்ணின் அதிர்ச்சியை கண்டு கேட்க..
ஒரு பெருமூச்சு விட்டவள் இனியும் மறைத்து பிரயோஜனம் இல்லை என்று “ஆமா..!” என்றாள் ஆணித்தரமாக…!
அடுத்த நிமிடம் அவள் சொல்லியதை விட அழுத்தமான ஒரு அறை அவள் கன்னத்தில் விழுந்து இருந்தது. அடித்தது கலையரசி தான்..!
ஆனால் இந்த அடி உனக்கு தேவை தான் என்பது போல மொத்த குடும்பமும் மட்டுமே அவளை அத்தனை கோபத்தோடு பார்த்தது.
“ஏண்டி? ஏன்? உனக்கு என்ன கொற வச்சோம்? ஏன் இப்படி பண்ணுன? எல்லாம் உன்கிட்ட கேட்டு தானே முடிவு பண்ணுனோம்? அப்பவே ஒரு வார்த்தை எனக்கு விருப்பம் இல்லைன்னு சொல்லி இருந்தா.. ஒன்னு இதுல நாங்க உன்னைய கட்டாயப்படுத்தி இருப்போமோ? மாட்டோம் தானே? ஆனா உன்னால என் புள்ள அன்னைக்கு அத்தன பேர் முன்னாடி தலை குனிஞ்சு அவமானப்பட்டான் தெரியுமா?”
“அதிலிருந்து அவன் மீண்டு வருவதற்கு எவ்வளவு காயப்பட்டான் தெரியுமா? அடுத்து ஒரு பொண்ணு பார்க்கறதுக்கு கல்யாணம் பண்றதுக்கு எவ்வளவு நாளாச்சு தெரியுமா? எதுக்குமே அவேன் சம்மதிக்கவே இல்ல.. இதே உனக்கு பார்த்து இருந்த பையன் வேற ஒருத்திய கல்யாணம் பண்ணிக்கிட்டு வந்து நின்னா உனக்கு எப்படி இருக்கும்? ஒன்னும் அவன் இடத்துல வச்சு யோசிச்சு பாத்தியா?” என்று சரமாரியாக கேள்வி கேட்டார் கலையரசி.!
“அதென்ன நீ விரும்புற விரும்புறனு இத்தன வருஷமா சொன்ன இல்ல.. அதேபோல அவனும் அந்த பொண்ண அந்த இடப்பட்ட காலத்துல விரும்பி இருந்து.. அவேன் மனசுலயும் ஆசை முளைச்சிருந்தா??” என்று கேட்டதும் அங்கயற்கண்ணி அதிர்ச்சி அடைந்தாளோ இல்லையோ ஆண்டாள் திடுக்கிட்டு இப்பொழுது தன் கணவனை பார்த்தாள் ‘அப்படியா?’ என்று பரிதவிப்போடு..!
அவனும் கண்களால் இல்லை என்று கூறி, சிரித்து கண் சிமிட்ட, அவளோ பயந்து பார்வை பார்க்க.. கண்களை மூடி திறந்தவன் ‘அமைதியாக இருடி பொம்மா.! இப்போ உன்கிட்ட விளக்கம் சொல்ல முடியாது பொறவு சொல்றேன்’ என்று இதழசைத்தான்.
“அப்பாடி..! நல்ல வேள அந்த பொண்ண இவரை நேசிக்கல. ஒருவேளை நேசித்து இருந்து என்கிட்ட பொய் மட்டும் சொல்லி இருந்தாரு.. நைட்டு வச்சிக்கிறேன் நோக்கு?” என்பது போல அவள் செய்கை செய்ய…
“வச்சிக்கோ.. வச்சிக்கோ..” என்று இதழசைத்தவன், முகிழ்த்து சிரிப்பை இதழ் கரையோரம் மறைத்துக் கொண்டான் கள்ளழகன், ஆண்டாளின் மனதை கொள்ளை கொண்டவன்..!
“போதுமா நிறுத்து..! நீ பாட்டுக்கு ரொம்ப பேசிட்டே போற( நான் ஒன்னும் அண்ண மேல உசுர வைத்திருந்த பொண்ணு வேற ஒருத்தன காட்டி கொண்டு போய் கல்யாணம் பண்ணி வைக்கல..! அந்த பொண்ணுக்கு அண்ணனை பார்த்தாலே அத்தனை படபடப்பு பயமா இருந்துச்சு ஆரம்பத்திலிருந்து..”
“அண்ணனோட அந்த ஆங்குதோதான உடல் அமைப்பு, அதோட ஜிம் பாடி, இதுல அண்ணன் ஜல்லிக்கட்டு போச்சு.. அதுல அந்த பொண்ணு இன்னும் பயந்துருச்சு.. கூடவே அங்கன கூட்டத்தில எவனோ ஏதோ சொன்னானு அண்ணே அவனை போட்டு புரட்டி எடுத்தத பார்த்து அரண்டே போயிடுச்சு..! இதெல்லாம் அன்னைக்கு ஜல்லிக்கட்டுல நான் அந்த பொண்ண பார்த்து அவதானிச்சுட்டு இருந்தேன்”
“கண்டிப்பா இந்த பொண்ண கட்டினா.. அண்ணனுக்கு ஒவ்வொரு விஷயத்துக்கும் அந்த பொண்ணு கிட்ட பேசி புரிய வைச்சு போராடி போராடிய வாழ்க்கை ரொம்ப போர் அடிச்சு வீணா போயிடும் நெனச்சு தேன்… அந்த பொண்ணு மனசுல யாருது இருக்காங்களான்னு பார்க்கும்போது.. ஏற்கனவே அந்த பொண்ண ஒரு தலையா காதலிச்சவன் மேல அந்த பொண்ணுக்கு ஒரு ஈர்ப்பு இருந்தது எனக்கு தெரிஞ்சிச்சு..”
“என்ன??!!” என்று குடும்பமே கொஞ்சம் அதிர்ந்து தான் அவளை பார்த்தது.
“வீட்ல சொந்தத்தில ஊர்காரவுக என்ன சொல்லுவாகளோனு பயந்து பயந்து அந்த பொண்ணு அத மனசுக்குள்ளேயே மறைச்சிருந்திருக்கு.”
“அண்ணனை பேசினதுக்கு அப்புறம் ரெண்டு பேரையும் அது ஒப்பிட்டு பார்த்து இருக்கு, நான் பேசும்போது இதெல்லாம் தெரிஞ்சிக்கிட்டு தான் வேற ஒருத்தனே இப்படி எல்லா விஷயத்தையும் ஒப்பிட்டு பேசுறது கல்யாணத்துக்கு அப்புறம் நடந்தா நல்லாவா இருக்கும்? அத நினைச்சு தேன் அப்படி நான் செஞ்சேன்” என்றவள்,
“மத்தபடி நான் அண்ணனுக்கு துரோகம் பண்ணனும்னு நினைக்கல” என்று விசும்பினாள்.
“நீ அண்ணனுக்காக பார்த்த.. அண்ணனுக்காக பேசுனேன்.. அண்ணனுக்காக செஞ்சேன்னு சொல்றதெல்லாம் சரிதான் அத்தாச்சி… ஆனா அதை யேன் நீங்க அண்ணன் கிட்ட சொல்லல அத தான் உன் கிட்ட சொல்லலனு தான் கேட்கிறேன்?”
“அண்ணே.. இந்த மாதிரி.. இந்த மாதிரி.. இந்த பொண்ணு எப்படி இருக்கு. நான் தனியா போய் பேசி தெரிஞ்சுகிட்டேன்.. இது உனக்கு ஒத்து வருமானு ஒரு வார்த்தை நீ சொல்லி இருந்தேனா.. அத்தனை பேருக்கு முன்னால இந்த அவமானமும் தலைகுனிவும் அவருக்கோ மத்தவங்களுக்கு ஏற்பட்டிருக்காதில்ல அத்தாச்சி.. அதுதான் நீ ஏன் பண்ணல நான் கேட்கிறேன்?” என்று ஆண்டாளின் தெளிவான கேள்வியில் அசந்து நின்றாள் அங்கயற்கண்ணி.
சிறு வயது முதலே எதுவும் தெளிவாகவும் தைரியமாகவும் யோசித்து பேசி தனக்கு பிடித்தவற்றை சாதித்துக் கொள்ளும் அங்கயற்கண்ணியா இப்படி நடந்து கொண்டாள் என்று வீட்டாருக்குமே அத்தனை மன வருத்தம்.
‘ஏன் அங்கயற்கண்ணிக்குமே தன் மீது அனேக நம்பிக்கை. தான் செய்வது தவறாக இருக்காது. தான் அண்ணனுக்காக தான் செய்தேன்.. அது எப்படி தவறாகும்?’ என்று அவளின் சுயநலம் உள்ளே இருந்தாலும், அதை தாண்டி அண்ணனுக்காக தான் செய்தேன் என்று அத்தனை உறுதியாக நம்பியவளை இன்று ஒற்றை கேள்வியில் திணறடித்தாள் ஆண்டாள்.
‘இந்த பால்கோவா சொல்றதெல்லாம் சரியாதான் இருக்கு. நான் தான் அண்ணனை செய்ய புரிஞ்சுக்கலையோ?’ இப்பொழுது அவள் மன்னிப்பாய் அண்ணனை பார்த்தாள்.
“அப்ப சொல்லலனாலும்.. அந்த கல்யாணம் நின்னதுக்கு அப்புறம் உங்க அண்ணன் கிட்ட இத பத்தி நீ பேசி இருக்கணும் இல்ல அத்தாச்சி? சொல்லியாவது இருக்கலாம் இல்லையா? அப்பவும் நீ சொல்லல.. அடுத்தடுத்து உன்னுடைய பிரச்சனையும் போது நீ யேன் உங்க அண்ணனை தேடி வரல அத்தாச்சி?” என்று கேட்டவளின் கேள்வி சாட்டை அடியாய் இருந்தது கண்ணுக்கு.
“ஏன் அத்தாச்சி கூட பொறந்தவங்க எதுக்கு இருக்காங்க? நம்மளோட சுகத் துக்கங்கள தாங்கிக்கறதுக்கு தானே? இப்ப நீ சொன்னியே அண்ணனுக்காக தான் யோசிச்சு அவ்வளவு செஞ்சேன்னு.. அண்ணனுக்காக நீ இவ்ளோ பாக்கும்போது தங்கச்சிக்காக அவர் எவ்வளவு பார்ப்பார்? நீயேன் அத மறந்துட்ட? உங்க அண்ணனை ஏன் நீ மறந்துட்ட அத்தாச்சி?” என்று கோபமாக ஆரம்பித்து ஆற்றாமையாக முடித்தாள் ஆண்டாள்.
அடுத்த நிமிடம் ஓஓஓஓ என்று அழுதுக் கொண்டே ஓடி அண்ணனின் கால்களுக்கு அடியில் அமர்ந்து அத்தனை வெடித்து அழுதாள் அங்கயற்கண்ணி.
பெண்ணின் கண்ணீரில் அவளின் தப்பின் வீரியம் குடும்பத்தினருக்கு குறையத்தான் செய்தது. என்ன இருந்தாலும் அவர்களின் பெண்ணரசி அல்லவா?
ஆனால் அது எதையும் காட்டிக் கொள்ளாமல் அமைதியாக அவள் அழுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.
ஆனால் அன்பை கேக்க வைத்த அம்மாவான கலையரசியால் அப்படி இருக்க முடியவில்லை. கையை பிசைந்து கொண்டு போகலாமா? வேண்டாமா? என்று பரிதவிப்போடு நிற்க..
அவள் கையை கெட்டியாக பிடித்துக் கொண்ட சொக்கியம்மாள் மெதுவாக “ஏதாவது உள்ள போய் பேசின.. கொன்னுடுவேன்..! அவ அழுவட்டும்” என்று விரலை ஆட்டி அவர் செய்கை செய்ய..
அவரோ “பாவம் அத்த யேன் பொண்ணு.. ரொம்ப அழுவுறா” என்று மகளை கண்களால் காட்டி கெஞ்சினார்.
“உன் மவ ஒன்னும் வெல்லக்கட்டி இல்ல.. அழுதா கரைஞ்சு போறதுக்கு? கொஞ்சம் அழுகட்டும் கண்ணுல உள்ள அழுக்கும் அவ மனசுல உள்ள அழுக்கும் சேர்ந்தே போகட்டும்”’என்று அமைதி காக்க சொன்னார் சொக்கியம்மாள்.
ஒரு கட்டத்திற்கு மேல் தன் காலடியில் கால்களை பிடித்துக் கொண்டு அழுகும் தங்கச்சியை காண சகிக்கவில்லை அழகனுக்கு.
என்ன இருந்தாலும் அவளின் உடன்பிறப்பு.. செல்ல தங்கை அவனின் ரத்தம்.. தானடா விட்டாலும் தன் சதை ஆடும் அல்லவா? என்னதான் தப்பே செய்திருந்தாலும் அவள் அவனின் செல்ல தங்கை அல்லவா?
“எழுந்திரு கண்ணி, இப்படி அழுது என்னை சங்கடப்படுத்தாத..” என்று அவனின் குரலும் கலங்கி தான் இருந்தது.
“சாரி அண்ணா.. உனக்கு நான் கெட்டது செய்யணும் நினைக்கல. நீ அவமானப்படனும் நினைக்கல.. அந்த சமயத்துல அதுதான் சரியா இருக்கும்னு என் புத்தி சொல்ல.. அதுபடி தான் நான் நடந்துக்கிட்டேனே ஒழிய.. வீட்டுல உள்ளவங்களுக்கோ.. உனக்கோ அவமானத்தை தேடித்தரும் நினைக்கவே இல்ல..!
“அப்படி அவமானத்தை தேடித்தரவளா இருந்தனா அந்த பொண்ண அதோட லவ்வரோட சேர்த்து வைக்காம… நான் என் லவ்வரை தேடி அங்கிருந்து ஓடி இருப்பேன். அது எவ்வளவு தீரா பழியையும் குடும்பத்து மேல கலங்கத்தை கொடுக்கும்னு எனக்கு தெரிஞ்சு தான், யாருக்கும் எந்த பிரச்சினையும் வராம அந்த பொண்ண அவ காதலனோட அனுப்பி வச்சிட்ட சுமூகமா முடியும் தான் நினைச்சேன். ஆனா அது அப்படி மாறிப்போகும் நான் நினைக்கவே இல்ல?” என்று அழுகையோடு அவள் பேச, அவளை தோளோடு அணைவாக அணைத்துக் கொண்டான் அழகன்…!
அவன் தங்கை ஒன்றும் கெட்டவள் அல்ல.. அவளுக்கு தீங்கு செய்யும் எண்ணமும் இல்லை.. என்னவோ தனது அறியாதனத்தால் தெளியா புத்தியால் இவ்வாறு செய்துவிட்டாள் என்று புரிந்தவன் அவளுக்கு அத்தனை ஆறுதல் சொன்னான்.
“இல்ல.. இல்ல.. உன்னை நான் ரொம்ப கஷ்டப் படுத்திட்டேன். எனக்கு முன்னாடி அது தெரியவே இல்ல.. புரியல.. ஆனால இன்னைக்கு பால்கோவா கேள்வாய் கேட்கும் போது தான்.. எனக்கு அது உரைச்சிசு.. அவ சின்ன பொண்ணா இருந்தாலும் சரியான கண்ணோட்டத்தோட பார்த்திருக்கா.. ஆனா எனக்குத்தான் எல்லாம் தெரியும் தெரியும் நெனச்சு இப்படி போய் பண்ணி வச்சு.. உங்களுக்கு தீராத அவமானத்தை தேடி தந்துட்டேன்” என்று மருகினாள்.
“மணிமாறனும் நீங்களும் எவ்வளவு ரொம்ப திக் ப்ரண்டஸூனு எனக்கு தெரியும். என்னால உங்க பிரண்ட்ஷிப்பும் இல்லாமல் போச்சு.. கூடவே அவங்க குடும்பத்துக்கும் அவமானமா போயிடுச்சு என்னால.. நான் போய் அவர்கிட்டயும் சாரி கேக்கவா?” என் அண்ணனின் அணைவில் நின்று கொண்டு விழியை மட்டும் உயர்த்தி கலங்கிய கண்களோடு கேட்ட, தங்கையை கண்டவன் அவள் நெற்றியோடு நெற்றி முட்டி சிரித்து,
“அதெல்லாம் நீ ஒன்னும் கேட்க வேண்டாம். எங்களுக்குள்ள நாங்களே எல்லாம் சரி பண்ணிக்கிட்டோம்” என்றான் அழகன்.
“இது எப்போ?” என்று குடும்பமே அவனை கேள்வியாய் பார்க்க..
“என் கல்யாணத்தை போது தான்..! அவன் கிட்ட எல்லா விஷயத்தையும் சொல்லி.. சீக்கிரமே அவனும் கல்யாணம் பண்ணிக்கணும் சொல்லிட்டு வந்தேன். இப்போ முன்ன மாதிரி இல்லனாலும் பார்க்கிற இடத்துல எல்லாம் நாங்க பேசிக்கிறோம். இதுவும் கொஞ்சம் கொஞ்சம் சரி ஆகும் நீ அதை பத்தி கவலைப்படாத..! அழுதழுது முகமே ஒரு மாதிரியா இருக்கு.. நீ போய் ரெஸ்ட் எடு..!” என்று அவளை அனுப்பி வைத்துவிட்டு செல்லும் அவளை பார்த்து “ஒரு நிமிஷம் கண்ணி..!” என்று நிறுத்தினான்.
“உன் ஆளுகிட்டையும் நேத்தே போய் பேசிட்டு வந்துட்டேன். ஒரு வாரம் தான் உனக்கு டைம். அதுக்குள்ளார அவன் வந்து பேசணும்.. இல்லனா…” என்று அவன் நிறுத்த,
“இல்லனா? என்ன அண்ணா?” என்று இவள் பதட்டத்தோடு அண்ணனை பார்க்க..
அதற்குள் ஆண்டாளோ.. “ம்ம்ம்.. மணிமாறன் அண்ணனுக்கு இன்னும் கல்யாணம் ஆகலையாம். ஞாபகத்துல வச்சுக்கோ” என்
றபடி கணவனை இழுத்துக்கொண்டு மாடி ஏறியவளோ,
“மாட்டனடி அத்தாச்சி..!” என்று கலகல சிரிப்போடு செல்ல.. அவளை முகம் கொள்ளா சிரிப்போடு பின் தொடர்ந்தான் கணவனாய் கள்ளழகன்..!
தொடரும்..
