Share:
Notifications
Clear all

அழகன் 23

 

Jiya Janavi
(@jiyajanavi)
Member Admin
Joined: 1 year ago
Messages: 319
Thread starter  

அழகன் 23

 

 

“என்ன பால்கோவா… எங்கிட்டவே வூட்டு வேலை எல்லாம் செய்ற மாதிரி நடிக்கிறியா?” என்று கணவனின் உடைகளை மடித்துக் கொண்டிருந்த ஆண்டாளை பார்த்து நக்கலாக கேட்டாள் அங்கயற்கண்ணி.

 

அப்பொழுதும் அங்கயற்கண்ணியை திரும்பி பார்த்தாள் இல்லை ஆண்டாள். ஏன் அப்படி ஒருவள் தன் அறையில் இருப்பதையே கண்டுகொள்ளாமல் வெகு சிரத்தையாக கணவனின் வேட்டிகளை தனியாக மடித்து வைத்து அடுக்குவதும், அவனது சட்டைகளை இஸ்திரிக்கு தனியாக எடுத்து வைப்பதும், அவன் அவ்வப்போது போடும் டி-ஷர்ட்டுகளையும் அதற்குரிய இடத்தில் வைப்பதும், என்று வெகு மும்மரமாக வேலை செய்து கொண்டு இருந்தவளை தான் குறுகுறுப்போடு பார்த்தாள அங்கயற்கண்ணி. 

 

அவளின் எண்ணப்படி எப்படியும் ஆண்டாளால் தன்னிடம் பேசாமல் இருக்க முடியாது. ஏதோ ஒரு கோபம் போல? இந்த பொடுசுக்கு என்ன மேல கோபமாம்? என்று அவளின் சிறுப்பிள்ளைத் தனமான கோபத்தை எண்ணி பெரியவளாய் இவளுக்கு சிரிப்பு மட்டுமே..!

 

ஒரு பெண் குழந்தையாக இருப்பதும் குமரியாக மாறுவதும் அவளின் சூழ்நிலையை பொறுத்து தான்..!

 

ஆண்டாள் இத்தனை காலங்களாக பெற்றவர்களுக்கு குழந்தையாகவே வளர்ந்தவள் தான், ஆனால் அழகனை திருமணம் முடித்ததும் பெரிதாக அவளது குணநலங்களில் மாற்றம் இல்லை. அவளை அப்படியே ஏற்றுக் கொண்ட அவளது அத்தை குடும்பத்தை பொறுத்தவரை அவள் குழந்தையே..!

 

ஆனால் எவ்வளவு நாள் தான் அதே குழந்தைத்தனத்தோடு இருக்க முடியும்? குமரிக்கான பொறுப்பும் வரவேண்டும் அல்லவா? குடும்பத்தை தாங்க வேண்டும் அல்லவா? அவளின் வாரிசுகளை நன் முறையில் வளர்க்க வேண்டும் அல்லவா?

 

அழகன், அவனின் நின்று போன கல்யாண கதையை கூறும் பொழுது கூட அதை குழந்தைத்தனத்தோடு அங்கயற்கண்ணியின் செயல்களை பெரிய வீர தீர செயல்கள் என்று எண்ணி மகிழ்ந்தவள் தானே??

 

ஆனால் அழகன் எடுத்துச் சொன்ன விதத்தில் தான் அவளுக்கு மற்றொரு பக்கமே புரிந்தது.

 

தன் காதலுக்காக அவள் போராடினால் அது நியாயமான செயல்..!

 

ஆனால் இன்னொரு காதலை சேர்த்து வைத்து குடும்பத்திற்கு அன்று தீரா அவமானத்தை வாங்கி கொடுத்து விட்டாளே அங்கயற்கண்ணி என்று அவள் மீது பெரும் கோபம்..! தாங்க முடியாத வருத்தம்..!

 

என்னதான் இருந்தாலும் அங்கயற்கண்ணியின் செயலை மன்னிக்கவே முடியவில்லை ஆண்டாளால்..!

 

அது அவளது கணவனை கொண்டு மட்டுமல்ல..!

 

அன்பாக நடத்தும் அத்தை மாமாவுக்காகவும்.. அறிவுரையை கூட தன் அனுபவத்தை கொண்டு அழகாக விவரிக்கும் அம்மாச்சி தாத்தாவிற்காகவும் தான்.

 

எப்படி இவ்வளவு நல்லவர்களை, குணம் கொண்டவர்களை அப்படி அவமானப்படுத்த முடிந்தது?

 

அப்படி என்ன பெரிய இந்த காதல்? பொல்லா காதல்? என்று அழகன் போலவே நினைத்து அங்கயற்கண்ணியிடம் பேச்சை தவிர்த்து வந்தாள்.

 

 எப்படியும் கண்ணி ஒரு நாள் தன்னை தேடி வருவாள் என்று தெரியும். அன்று அழகன் கேட்க மறந்த கேள்விகளையும்.. கேட்கத் துடிக்கும் கேள்விகளையும்.. அவனின் மறுபாதியாய் நின்று தான் கேட்க வேண்டும் என்று அன்றே முடிவு எடுத்திருந்தவள் அங்கயற்கண்ணிக்காய் காத்திருந்தாள்..!

 

இது எதுவும் தெரியாமல் ஏதோ தன் மீது செல்ல கோபம் போல இந்த சின்ன குட்டிக்கு, என் ஆசை பால்கோவாவுக்கு என்று நினைத்து அவளிடம் பேச வந்திருந்தாள் அங்கயற்கண்ணி.

 

“ஏம்டி பால்கோவா.. நான் இம்புட்டு நேரமா பேசிட்டு இருக்கேன். கொஞ்சம் கூட ரெஸ்பான்ஸ் பண்ணாம நீ பாட்டுக்கு இப்பதான் ரொம்ப பொறுப்பா உன் புருஷன் டிரஸ் எல்லாம் எடுத்து வச்சுட்டு இருக்குறவ?” என்று கிண்டலா கேட்டாள் கண்ணி. 

 

முன்னர் அப்படி கேட்டு இருந்தால் “அதானே..! இருங்க அத்தாச்சி அவரே வந்து எடுத்து வச்சுக்கிட்டும். வாங்க.. நம்ம பேசலாம்” என்று கலகலத்து சிரித்தவள் தான் ஒரு காலத்தில் ஆண்டாள். 

 

இப்போது திரும்பி அவளை ஒரு அழுத்தமான பார்வை பார்த்துவிட்டு கணவன் உடைகளை அததது இடத்தில் அழகுற அடுக்கி வைத்துக் கொண்டிருப்பவளை நெற்றி சுருக்கி பார்த்தாள் கண்ணி. 

 

“என் ஆத்துக்காரரோட வேல தான் என்னுடைய முதல் கவனம். அதுக்கு அப்புறம் தான் மத்ததெல்லாம்..” என்றவளின் குரலில் இருந்த பேதத்தை கண்டு ‘என்னாச்சு இந்த பால்கோவாவிற்கு?’ என்று யோசித்தாள் கண்ணி. 

 

பின் கட்டிலில் அமர்ந்திருந்த அங்கயற்கண்ணிக்கு அருகே சற்றே இடைவெளி விட்டு நிமிர்ந்து அமர்ந்தவள் “சொல்லுங்கோ அத்தாச்சி.. என்ன விஷயமா என்னை தேடி எங்க ரூம் வரை வந்திருக்கேள்?” என்று கேட்டவளின் கேள்வியில் கொஞ்சம் கூட அத்தாச்சி என்ற பாசமும் அன்பும் இல்லை.

 

“ஏய் என்ன டி என்னமோ ஃபார்முலா பேசுற? நான் வந்தா, நீ வந்து என்னை ரூம்ல பார்க்கிறதே இல்ல.. சாயந்தரம் டீ குடிக்கிற நேரத்துல கூட நான் வந்து உட்கார்ந்த உடனே ஏதோ வேலை இருக்குன்னு எழுந்தே வந்துட்ட.. அவ்வளவு பெரிய மனுஷி ஆயிட்டியா நீ?” என்று செல்லமாக கடிந்தாள் கண்ணி.

 

“உங்களுக்கு ஸ்கூல் வேலையை விட்டா வேற எந்த வேலையும் கிடையாது அத்தாச்சி. ஆனா.. நான் இந்த ஆத்துக்கு மாட்டுபொண்ணு எனக்கு ஆயிரம் வேல இருக்கும் அத்தாச்சி. அந்த வேலையெல்லாம் நான் பார்க்காம வேற யாரு பார்ப்பா? அதுவுமில்லாம என் ஆத்துக்காரர் காத்தால வேலைக்கு போயிட்டார்னா ராத்திரி தான் வர்றாரு. அவ்வளவு உழைச்சுட்டு வரவருக்கு அவருக்கு தேவையானதை பார்த்து பார்த்து நானில்லாம வேற யாரு செய்வா?” என்ற அவளின் பேச்சில் உண்மையில் திடுக்கிட்டு தான் போனாள் அங்கயற்கண்ணி. 

 

இப்போது தன் முன்னால் பேசுவது தன் மாமாவின் அறியா பெண் அல்ல, தன் அண்ணனின் மனைவி அண்ணியாய் பேசுகிறாள் என்று உணர்ந்தவளுக்கு, ஒரு பக்கம் சந்தோஷம் என்றாலும்.. மறுபக்கம் ஏதோ இழந்தது போல வலித்தது. 

 

இவ்வளவு நாட்களாக அங்கயற்கண்ணியை பார்க்கும் போதெல்லாம் “அத்தாச்சி அத்தாச்சி” என்று சிறு நாய்க்குட்டி போல அவள் காலையில் சுற்றி சுற்றி வந்து, அவள் முகம் பார்த்து பேசி சிரித்து, கொஞ்சிக் குலாவி என்று வயது வித்தியாசம் இன்றி பழகியவள், 

 

இன்றோ ஏதோ இவள் அண்ணனை கல்யாணம் செய்ததால் தான் இவள் உறவு என்பதைப் போல பேசுவது அவளுக்கு மிகுந்த வருத்தத்தை கொடுத்தது. 

 

“ஏன் பால்கோவா இப்படி எல்லாம் பேசுற? நான் எதுவும் உன்னை திட்டிட்டேனா? உன்னை கோபப்படுத்திட்டேனா?” என்று அவள் கையை மெதுவாக பிடித்து தன் கைகளுக்குள் பொத்தி வைத்து கேட்டாள் அங்கயற்கண்ணி.

 

“ஏன் நான் எப்படி பேசுறேன்? எப்பொழுதும் போல சாதாரணமா தானே இருக்கேன் அத்தாச்சி” என்றவள், மெதுவாக அவள் கையில் இருந்து தன் கையை உருவிக்கொண்டு நான் அப்படி இல்லை என்று தெளிவாகவே உணர்த்தி விட…

 

“ஏன் என்னாச்சு இவளுக்கு?” என்று யோசித்துக் கொண்டிருந்தாள்.

 

“நான் கோபப்படும்படி ஏதாவது நீங்க செஞ்சீங்களா அத்தாச்சி? அப்படியே நான் கோபப்பட்டாலும் அது உங்களுக்கு வலிக்கவா போகுது? இல்ல வருத்தப்பட தான் போறீங்களா?” என்று அங்கயற்கண்ணியின் கண்களை ஆழ்ந்து பார்த்து கேட்டவள் சத்தியமாகவே வேறொருத்தியாக தான் தெரிந்தாள் கண்ணியின் கண்களுக்கு.

 

“சொந்த அண்ணன் வருத்தப்பட்டா என்ன? அவமானப்பட்ட என்னன்னு இருக்குறவாளுக்கு, நான் கோவப்பட்டா மட்டும் வருத்தம் வந்திடுமா என்ன?” அவள் காதில் விழும்படி சற்று சத்தமாகவே முணுமுணுத்தாள் ஆண்டாள்.

 

“என் அண்ணன் வருத்தமா? கோபமா?”

 

 

திடீரென என் அண்ணன் மீது இவளுக்கு ஏன் பாசமும் நேசமும் பொத்துக்கிட்டு ஊத்துது என்று குழம்பியவளின் மனதில்.. அப்படியும் இருக்குமோ?

 

இவங்க ரெண்டு பேருக்குள்ளும் எல்லாம் சரியாகி அண்ணன் நடந்த விஷயத்தை எல்லாம் சொல்லி இருப்பாரோ? அதனால் தான் என் மேல் இவளுக்கு கோபமோ? என்று சரியாக நாடி பிடித்தாள் கண்ணி. 

 

அவளின் முகத்தையே பார்த்து அதில் மாறும் வர்ணங்களையும் ஜாலங்களையும் கொண்டே அங்கயற்கண்ணி கண்டு பிடித்துவிட்டாள் என்று யூகித்தாலும் அதே நிர்மூலமான முகத்தோடு தான் அமர்ந்திருந்தாள் ஆண்டாள். 

 

“உனக்கு என்ன என் மேல கோவம் பால்கோவா? நான் என்ன தப்பு பண்ணிட்டேன்னு என் மேல உனக்கு இவ்வளவு கோபம்னு நான் சொல்லட்டா..?” என்றவள்,

 

“என் அண்ணன் கல்யாணத்தை நான் நிறுத்திட்டேன்னு உனக்கு கோபம் அப்படித்தானே? அண்ணனுக்கு பார்த்த பொண்ணு ஏற்கனவே இன்னொருத்தன லவ் பண்ணிட்டு இருந்துச்சு.. அதனால அந்த பொண்ணுக்கு கல்யாணம் பண்ணி வச்சிட்டேன். இதுல என்ன தப்பு? காதலிக்கிற ரெண்டு பேர சேர்த்து வைக்கிறது அவ்வளவு பெரிய குத்தமா என்ன? அதுவும் இல்லாம அந்த பொண்ண கல்யாணம் பண்ணி அனுப்பி விட்டதால் தேன் நீ இந்த வீட்டுக்கு மருமகளா வந்து இருக்க..!” என்று அங்கயற்கண்ணியின் சொல்லில் மறைந்திருந்தது என்னவோ,

‘நான் உனக்கு நல்லது தான் பண்ணி இருக்கேன். என்னால தான் நீ இந்த வீட்டுக்கு மருமகளாய் வந்திருக்கிறாய்’ என்று..!

 

 

“ஓஓ.. காதலிக்கிறவங்க ரெண்டு பேர சேர்த்து வைக்கிறது நல்ல விஷயம் தான். அப்புறம் ஏன் நீங்க இன்னும் உங்க காதலரோட சேராம தனியாக இருக்கீங்க? யாரோ ஒரு பொண்ண சேர்த்து வச்ச நீங்க இன்னும் ஏன் தனியா இருக்கீங்க?” என்று கேட்டவளை அதிர்ந்து பார்த்தாள் அங்கயற்கண்ணி. 

 

“சாரி.. சாரி.. நான் தான் மறந்துட்டேன். உங்களோடது ஒரு தலை காதல் இல்லையா? அந்த அவர் தான் வேற ஒருத்திய கல்யாணம் பண்ணிக்கிட்டு போயிட்டாரு இல்லையா? அப்புறம் ஏன் முடிஞ்சு போன காதலுக்காக இன்னும் நீங்க தனியா இருக்கீங்க? அந்த மணிமாறன் அண்ணாவே கல்யாணம் பண்ணி இருந்திருக்கலாமே? ஒருவேளை காதலுக்கு மரியாதை செலுத்துகிறீங்களோ?” என்றவளை தீர்க்கமாக பார்த்தாள் கண்ணி.

 

“பால்கோவா..??!!” என்று அதிர்ந்து பேச போக,

 

“நீங்க சொன்ன அந்த ஒரு தலை காதல்.. எல்லாம் முடிஞ்சு போன விஷயம்னு சொன்னது எல்லாம் சுத்த கப்ஸானு நேக்கு தெரியும் அத்தாச்சி..” என்றவளை கண்டு,

 

“அதான் உன் புருஷன் எல்லாத்தையும் உன்கிட்ட சொல்லி இருக்கும்ல” என்று உதட்டை சுழித்தாள் கண்ணி‌.

 

“ஆமா.‌. சொல்லிட்டார் தான்..! நீங்க ஏன் இன்னும் உங்க காதலர் அதான் அந்த மாட்டு டாக்டர் சரபேந்திரன் அவரை கல்யாணம் பண்ணிக்காம இப்படியே இன்னும் தனியா இந்த வீட்ல இருக்கீங்க? ஒருவேளை அண்ணனுக்கு செஞ்சு தப்புக்கு பரிகாரம் செய்யணும்னா? இல்ல அந்த குற்ற உணர்விலிருந்து வெளியில் வர முடியாமலா?” என்று திரும்பவும் அழுத்தமாக ஆண்டாள் கேட்க அங்கயற்கண்ணிக்கு சட்டென்று பதற்றம் தொற்றிக் கொண்டது. 

 

“என்ன ஆச்சு இன்னைக்கு இந்த பால்கோவாவுக்கு? என்ன வச்சு செய்றா? அதுவும் என் மனசுல உள்ளத எல்லாம் கண்ணாலே ஸ்கேன் பண்ணி பார்த்த மாதிரி ஒப்பிக்கிறாளே?” என்று உதட்டை கடித்து முகத்தை வேறு புறம் திரும்பி தன் புடவை முந்தானையால் விரலைச் சுற்றி சுற்றி அவிழ்த்துக் கொண்டிருந்தாள் அங்கயற்கண்ணி.

 

அவளின் செய்கையிலேயே அவளின் பதட்டம் அப்பட்டமாக தெரிய..

 

“அப்போ குற்ற உணர்ச்சி தான் இல்லையா.. அத்தாச்சி?” என்று கேட்ட ஆண்டாளை இவள் சற்று கோபமாக முறைக்க..

 

“என்ன ரொம்ப கோவமா பாக்குறீங்க அப்படியே முழிக்கிற ரெண்டு மொழியும் நோண்டி எடுத்துப்புடுவேன். ஆமா…! செஞ்சதெல்லாம் தப்புன்னு தெரியல.. அத்தனை பேரும் முன்னால அன்னைக்கு கூட பொறந்த அண்ணன்.. பெத்த அம்மா அப்பா.. அருமை பெருமையா வளர்த்த ஆச்சி தாத்தாவ, அத்தனை சொந்தக்காரவுக உறவுகாரவுக ஊர்காரவுக முன்னால தலைக் குனிய வச்சுட்டு இப்ப வந்து என்ன முறைக்குறிங்களோ?” என்று எழுந்து நின்று இடுப்பில் கை வைத்து நியாயம் கேட்டவளை கண்டு சற்று திடுக்கிட்டாள் கண்ணி.

 

“உன்கிட்ட எனக்கு என்ன பேச்சு?” என்று வேகமாக எழுந்து கண்ணி கீழேச் செல்ல..

 

“அப்படி எல்லாம் உங்களை என்னால விட முடியாது” என்று அவள் பின்னாலே துரத்தி சென்று மாடிப்படி இறங்கியதும், அவள் கையை பிடித்து அருகில் இருந்த சோபாவில் இழுத்து அமர வைத்த ஆண்டாள், அவள் முன்னால் கைகட்டி நின்று இருந்தாள்.

 

அதற்குள் என்ன சத்தம் என்றபடி கலையரசியின் சொக்கியம்மாளும் வந்து எட்டிப் பார்த்தனர்.

 

“கேட்கிறேன் இல்ல சொல்லுங்க அத்தாச்சி.. எப்படி உங்களால அப்படி செய்ய முடிஞ்சது? அதுவும் யாரோ ஒரு பொண்ணுக்காக அத்தனை பேரையும் அவமானப்படுத்தி இருக்கீங்க? ஏன் உங்க காதல வாய் விட்டு சொல்ல உங்களுக்கு தைரியம் இல்லையோ? ஜல்லிக்கட்டு காளைய வளர்த்து அதை கெத்தா கொண்டு போய் ஜல்லிக்கட்டு போட்டியில விட்டா மட்டும் தைரியம் இல்ல அத்தாச்சி?” என்றவள், 

 

“நமக்கு தேவையானதை.. நாம சரியா தான் செய்கிறோம்கிறதை நம்ம பெத்தவங்க கிட்ட கேக்குற அந்த செயலும் கூட தைரியம்தான்..! அப்படி பார்த்தா உங்களை விட நான் தைரியசாலி தான்.‌!” என்று பேசும் ஆண்டாளை தான் இரு முதிய பெண்மணிகளும் ஆச்சரியமாக பார்த்தனர்.

 

கலையரசி இடையில் புக வர சொக்கியம்மாள் கண்ணை காட்டி உதட்டில் வாய் வைத்து ‘பேசாம அங்கு நடப்பது மட்டும் பார்.!’ என்று சைகை செய்தார். 

 

“எனக்கு என்ன தைரியம் பத்தல? எனக்கு என்ன தேவையோ? அது எப்ப தேவையோ? அப்ப எனக்கு கேட்டுக்க தெரியும்..! போடி நீ உன் ஜோலிய பார்த்துகிட்டு” என்று இந்த பேச்சை முடித்து வைத்து அறைக்குள் அடைந்து கொள்ள போனவளின் கையை பிடித்த ஆண்டாள்,

 

“நீங்க எல்லார் கிட்டயும் மறைக்கணும்னு.. ஏன் மறைச்சிட்டேனு நினைக்கிற விஷயம், இந்த வீட்ல உள்ள எல்லாருக்குமே தெரியும் அத்தாச்சி..! அதாவது நீங்க அந்த டாக்டர் சரபேந்திரனை விரும்புறது இங்க எல்லாருக்குமே தெரியும்..!”என்றாள் ஆண்டாள் அங்கயற்கண்ணியை தீர்க்கமாக பார்த்து..!

 

“என்ன தெரியுமா?” என்று அன்னையையும் அப்பத்தாவையும் மாறி மாறி பார்த்தாள் கண்ணி.

 

அதே சமயம் இதையெல்லாம்

வாயிலில் நின்று கேட்டுக் கொண்டிருந்த போஸ்பாண்டியும் கள்ளழகனும் உள்ளே வந்தனர் ஆமாம் என்பது போல..!

 

தொடரும்..

 

 

 

 

 

 

 

 

 


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top