உயிரே 9

 

Jiya Janavi
(@jiyajanavi)
Member Admin
Joined: 1 year ago
Messages: 316
Thread starter  

9

 

காலை உணவு முடித்து வீரா வெளியில் கிளம்பி சென்று விட்டான். அதற்கு முன்னே சற்குணம் தன் மச்சினன் நாச்சிமுத்துவோடு அருகில் இருக்கும் விவசாய சங்கத்தின் கூட்டத்திற்கு சென்று விட்டார்.

 

பெரிய மனிதர்கள் இப்படி ஊர் வேலையை தங்கள் தலையில் தூக்கிக் கொள்ள.. அனுசரணையான பெண்களோ குடும்பத்தை தன் தலையில் தாங்கிக் கொள்வார்கள். 

அனுசரணை இல்லை என்றால் குடும்பத்து பஞ்சாயத்தே பெரிய பஞ்சாயத்தாக இருக்கும் இந்த பெரிய தலைகளுக்கு.

 

வடிவாம்பாளும் குடும்பத்துக்கு உள்ளேயும் சரி.. வெளியே இருந்து குடும்பத்தை தாக்கும் பஞ்சாயத்தையும் சரி கட்டி விடுவார். சில சமயம் அன்பால்.. அரவணைப்பால்.. பல சமயம் அதிரடியால். ஆனால் அவை அனைத்தையும் கணவன் காதுக்கு எடுத்துச் சென்று விடுவார். பெரும்பாலும் குடும்பத்துக்குள் நடக்கும் இம்மாதிரி சண்டை சச்சரவுகளை ஆண்களிடம் சொல்லாமல் இருப்பது தான் நல்லது. "அவக வெளிய தெருவ வேலைக்கு போறாவுக.. மனசு இதனால சங்கடப்படும் குழப்பம் அடையும் ஆத்தா.. எதையும் சொல்லத!" என்று பலர் சொன்னாலும்,

 

"அதெல்லாம் கிடையாது அய்த்த.. இது அவரு குடும்பம். அவரு தேன் குடும்பத் தலைவரு. அவருக்கு தெரியாம இங்கு ஒன்னும் நடக்க கூடாது. அது சிறுசா இருந்தாலும் அவக காதுக்கு கண்டிப்பாக போய்டனும். பின்னால எந்த ஒரு சகுனியும் உள்ளே புகுந்து யேன் குடும்பத்துக்குள்ள எந்த ஆட்டமும் ஆட முடியாது இல்லையா?" என்று மிகத் தெளிவாக இருப்பார் வடிவாம்பாள்.

 

படிப்பிற்கும் தெளிவுக்கும் கொஞ்சம் கூட சம்பந்தம் இல்லை என்பதை இந்து கிராமத்து.. கட்டு கலையாத பெண்மணி நிரூபித்துக் கொண்டிருக்கிறார். இன்று பலர் படித்தால் மட்டுமே ஞானம் வந்து விடுமென்று அற்பமாய் நடந்து கொள்கிறார்கள். 

 

அவரவர் நியாயம் அவரவருக்கு!! ஆனால் அந்த நியாயம் என்பது யாருக்கு?

 

அஸ்திராவதி அங்கே ஓரமாகவே அமர்ந்திருந்தாள். அவளை வைத்த கண் வாங்காமல் தங்களுக்குள் பேசிக் கொண்டிருந்தனர் சிசிடிவியை தங்கள் கண்களில் பொருத்திக் கொண்டிருந்த கிழவிகளும் உறவினர்களும்.

 

அவளுக்கு பெரும் அவஸ்தையாக இருந்தது. இங்கே இருப்பதற்கு பதில் தன் அறைக்கு சென்றாலாவது சிறிது நேரம் ஓய்வு எடுக்கலாம் என்று உடம்பும் கண்களும் தூக்கத்திற்கு அவளிடம் கெஞ்சியது. ஆனால் காலையில் கணவன் வந்து பார்த்துக் கொள் என்று மாமியாரிடம் விட்டுவிட்டு சென்றுவிட்ட தானே இப்போது தானாக சென்றால் அதற்கு ஒரு பேச்சு வரும் என்று பல்லைக் கடித்துக் கொண்டு முந்தானையை நடுவிரலில் சற்று பதட்டமாகவே அமர்ந்திருந்தாள் யாரையும் நிமிர்ந்து பார்க்காமல்..

 

மருமகளை ஓரக்கண்ணால் பார்த்துக்கொண்டே காலை வேலைகளை செய்து கொண்டிருந்தார் வடிவாம்பாள். 

மருமகள் அருகில் அமர்ந்து பேசவும் அவருக்கு ஏக பிரியம். ஆனால் வேலை அவரை இழுத்துக் கொண்டிருந்தது.

 

பெரிய வீடாக இருந்தாலும் சரி சிறிய வீடாக இருந்தாலும் சரி வேலை செய்பவர் தான் செய்வர். அதிலும் அவர் தான் அவ்வீட்டின் அரசி என்கிற போது.. அனைத்தும் தன் கண் பார்வையிலேயே நடக்குமாறு பார்த்துக் கொண்டார்.

 

கோதை காலையில் வீரா பேசியதற்கு முணகிக் கொண்டே தன் அறையில் சென்று முடங்கி விட்டாள். அண்ணன் மனைவியும் நாத்தனாருமான யோகலட்சுமி உறவினர்களோடு உட்கார்ந்து அவரும் உள்ளூர் விவகாரம் தொடங்கி உலக விவகாரங்களை விவாதித்துக் கொண்டிருக்க.. பெருமூச்சோடு தன் வேலையை பார்த்துக் கொண்டிருந்தார் வடிவாம்பாள்.

 

சிறுது நேரம் இருந்த அஸ்திரத்துக்கு அதற்கு மேல் பொறுக்க முடியாமல் போக கண்களாலேயே அத்தையை துலாவினாள். ஒரு கண்ணை அவள் மேல் வைத்திருந்த வடிவும் அவள் தேடுவதை பார்த்து "இங்கன வா கண்ணு" என்று சத்தமாக அழைக்க.. எழுந்து வேகவேகமாக அவர் அருகில் சென்றவள், "நான் செத்த நேரம் என் ரூமுக்கு போக வா?" என்று அங்கு இருப்பவர்களை ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டே இவள் கேட்க.. அவருக்கும் இவளது நிலை புரிந்துதான் இருந்தது.

 

அத்தை என்ற வார்த்தை எல்லாம் அவள் வாயிலிருந்து இன்னும் வரவே இல்லை. கணவனையே ஏற்றுக்கொள்ள முடியாமல் இருப்பவள். அவன் குடும்பத்தை எவ்வாறு ஏத்துக் கொள்வாள்? இந்த பேச்சு கூட அவர் தண்மையாக அவளிடம் நடந்து கொள்வதால் மட்டும் தான்.

 

"செத்த பொறு ஆத்தா.. நீ பாட்டுக்கு இப்போ போனா ஏற்கனவே ஏதாவது ஆப்புடாதானு அலையுறவக வாய்க்கு அவலா ஆகாத ஆத்தா.. இன்னும் ஏதாவது பேசுவாக.. என்ன உனக்கு அங்கன தனியா இருக்க முடியல தானே. யேன் கூடவே நீயி வா. நான் சொல்ற வேலையை பாரு. வேலைனதும் பயப்படாத.. நாம ஏவுற இடத்துல இருக்கோம். அதெல்லாம் சரியா செய்கிறாங்களா பாரு.. எனக்கு அடுத்தது இதெல்லாம் நீயி தான் பார்க்கவேணும்" என்றவர் அங்கு சமையல் வேலை நடந்து கொண்டிருக்கும் இடத்திற்கு அவளை அழைத்துச் சென்று, இந்த வேலை எல்லாம் சரியா செய்கிறாங்களா பாரு.. இங்கன இந்த இடம் பிடிக்கலேனா.. அங்கன பக்கத்துல தோப்புல கொண்டுவந்த தேங்காய மட்டை உறிக்கிறாக.. அதை ஒழுங்கா செய்றானுவோலானு பாரு.. அதுவும் இல்லையா.. அந்த பக்கம் காத்தாட போனேனா அங்கன பூந்தோட்டம் இருக்கு. கதை படிக்காம ஒழுங்கா பறிக்குறாவோளான்னு பாரு.. எந்த வேலை பிடிக்குதோ செய் ஆத்தா" என்றார்.

 

அவளோ மூன்று இடத்தையும் பார்த்துக் கொண்டே நிற்க.. "செத்த உட்காரு!" என்று அவளை அமரவைத்து நல்லி எலும்பு போட்டு ரெடியாக கொண்டிருந்த சூப்பை ஒரு கிண்ணத்தில் எடுத்து வந்து அவளிடம் கொடுத்து "இத மொதல்ல குடி கண்ணு" என்று கொடுத்தார்.

 

அவள் தயங்கி பார்த்தவாரே இருக்க "குடி ஆத்தா" என்று வலுக்கட்டாயமாகத் திணிக்க அவள் குடித்து முடிக்கும் வரை அங்கேயே நின்றிருந்தார்.

 

அப்போதும் அவள் எங்கேயும் செல்லாமல் அங்கேயே நின்று கொண்டிருப்பதை பார்த்து பெருமூச்சு விட்டார். "ஊர் கூடி தேர் இழுப்பது போல உன்னை ஒரு இடத்திலிருந்து எழுப்புவதற்கே எனக்கு பெரும்பாடாக இருக்கும் போலயே" என்று பேசிக்கொண்டே அவளை தன் அருகிலேயே வைத்து, அவர் செய்யும் வேலைகளை இவளை விட்டு செய்யவைத்தார். பணம் கொடுப்பவர்களுக்கு இவளும் மூலமே கொடுக்க வைத்தார். வேலை செய்பவர்களையும் இவள் மூலமே செய்ய வைத்தார். கிட்டத்தட்ட இந்த வீட்டில் எனக்கு அடுத்தது இவள் தான் என்று அனைவருக்கும் புரிய வைத்துக் கொண்டிருந்தார்.

 

யாருக்கு புரிந்ததோ இல்லையோ அவரின் நாத்தனாரான யோகலட்சுமிக்கும்.. அஸ்திராவின் நாத்தனாரான் கோதைக்கும் நன்றாகவே புரிந்தது. மாமியாரும் மருமகளும் தங்கள் கண் பார்வையிலேயே அந்த மாமியார் மருமகளை சுட்டிக்காட்டி மௌன பாஷையில் பேசிக் கொண்டனர்.

 

ஆயினும் ஒத்த வார்த்தை வடிவை எதிர்த்து பேச முடியாது யோகலட்சுமியால். தன் அண்ணன் மட்டுமல்ல வடிவின் அண்ணனான அவரின் கணவர் நாச்சிமுத்துவும் பாய்ந்து கொண்டு வந்துவிடுவார். அதனாலதான் தன்னால் முடியாததை மருமகளை கொண்டு அவ்வப்போது பேசவைத்து குத்திக்காட்ட வைக்கிறார். இந்த செம்மறி ஆட்டு மூளை கோதையும் அத்தை சொல்வதை அவ்வப்போது தட்டாமல் செய்து அண்ணனிடமும் அன்னையிடமும் வாங்கிக் கட்டிக் கொள்வாள்.

 

இப்படியாக நேரம் சென்று கொண்டிருந்த நேரத்தில் மதியம் அனைவருக்கும் உணவு முடிந்தும் இன்னும் தர்மாவும் வீராவும் வரவில்லை. "நீய் மாடிக்கு போய் கொஞ்சம் ஓய்வு எடுமா" என்று மருமகளிடம் சொன்னார் வடிவாம்பாள்.

 

"சரி!!" என்று இவளும் தலையாட்டி மாடி ஏறும் முன்னமே வாசலில் பைக் சத்தம் கேட்க.. "ஆத்தா நில்லு.. நில்லு.. உன் புருஷன் வந்துட்டான் பாரு. சாப்பிட்டுவிட்டு மாடிக்கு போங்க" என்றதும் ஒரு பெருமூச்சுடன் இவளும் வந்து நின்றாள்.

 

அப்போது கைத்தாங்கலாக தர்மா அழைத்து வர வலது கையில் பெரிதாக கட்டு போடப்பட்டிருந்தது வீராவிற்கு..

 

வீராவை பார்த்த வடிவம்பாளுக்கு மனம் பதறி விட‌‌.. "யாத்தே.. ராசா.. என்னாச்சுது? ஏன் இப்படி கட்டு போட்டு இருக்கு? மாப்புள்ள என்ன ஆச்சு சொல்லுக யேன்‌ மவனுக்கு?" என்று அழுகையேடு கேட்டுக் கொண்டே அலறிக்கொண்டு ஓட.. வீட்டில் இருந்த மற்றவர்களும் என்ன ஏது என்று அரை தூக்கத்தில் இருந்து எழுந்து அமர்ந்தனர்.

 

அவன் கையில் அடிபட்டு இருப்பதை பார்த்து ஒரு சிறு சந்தோசம் முகிழ்த்து என்னவோ அஸ்திராவுக்குள் நிஜமே!! ஆனால் இதில் எங்கே தன்னை இணைத்து பேசி விடுவார்களோ என்று மனமும் பதைபதைத்தது. அவளது மனம் பதைபதைத்து உண்மை என்பது போலவே..

 

"எல்லாம் வாழ வந்த மகராசியோட ராசி தேன்!!

 

"இப்படி ஒரு அமலிங்களிய கூட்டிட்டு வந்தா.. இப்படிதேன் எல்லாம் கெட்டதா தேன் நடக்கும்!!"

 

"அவளுக்கு ஜாதகத்தில என்ன தோஷமோ?"

 

"ஏற்கனவே கட்டுன புருஷன் மூணு மாசத்துல போய் சேர்ந்துட்டான். இப்ப அடுத்தது நம்ம புள்ளைக்கு வேற.. இனி என்ன நடக்குமோ?"

 

"ராசி கெட்டவள துரத்திவிட்டு நல்ல தாலிபாக்கியம் உள்ள பொண்ணா பாத்து நம்ம புள்ளைக்கு கல்யாணம் பண்ணி வைப்போம் மதினி" என்று ஆளாளுக்கு ஏதேதோ பேசிக்கொண்டே இருக்க.. 

 

இப்பவோ.. அப்பவோ என்று வெளியில் வரவிருந்த கண்ணீரை உள்ளிழுத்துக் கொண்டு உதட்டை கடித்து கைகளை இறுக்க மூடிக் கொண்டு நின்றிருந்தாள் அஸ்திரா. 


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top