13
இருவரின் மனங்களும் பழைய நினைவுகளில் கட்டுண்டு இருக்க.. தேகங்களோ ஒருவரையொருவர் கட்டி பிடித்தப்படி இருக்க.. பழைய நினைவுகளின் தாக்கங்களில் சட்டென்று சஞ்சயனின் உயிரற்ற உடல் அவள் கண் முன்னே வந்து போக.. விதிர்விதிர்த்தவள் அவனை வேகமாக தள்ளிவிட்டு "நீயி கொலைகாரன்.. நீயி ஒரு கொலைகாரன்.. யேன் அய்த்தான கொன்ன கொலைகாரன்!!" என்று கத்தியவள் அப்படியே மடங்கி சரிந்து அழுதாள்.
அவள் கத்தியதை கேட்டு வீராவுக்குள்ளும் அன்று சஞ்சயன் மறைந்த நிகழ்வு கண்முன்னே வந்து போக.. தன் கண்களை இறுக மூடி தன் ஆத்திரத்தை கட்டுப்படுத்த முயன்றான். ஆனாலும் முடியவில்லை அவனால்.. இறுக்கி மடித்த முஷ்டியில் புடைத்தோடிய நரம்பு சொன்னது அவனது கோபத்தின் அளவை!!
வீராவோ கோபத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் நின்றிருக்க.. அவளோ சஞ்சயன் மரணத்தை பார்த்த அந்த நொடியில் இருந்து மீளாமல் கதறிக்கொண்டு இருக்க.. "ஏய்ய்ய்…!!" என்று ஆத்திரம் மிக கத்தியவன், அருகிலிருந்த ஆள் உயர கண்ணாடியை தன் பலங்கொண்டு மட்டும் அவன் குத்த.. அதுவோ சில்லு சில்லாக சிதறியது அஸ்திராவின் மனதை போல..
அவனின் ஆக்ரோஷ கத்தலிலும்.. கண்ணாடியின் க்ளீங்கென்ற சத்தத்திலும்.. அமர்ந்திருந்தவள் வாரி சுருட்டி அதிர்ச்சியோடு அழுகையை மறந்து எழுந்து நின்றாள்.
அவளின் நடுங்கிய தேகமும்..
அதிர்ந்த பார்வையும்..
படப்படத்த நெஞ்சும்..
பயத்தில் ஏறி இறங்கிய மூச்சும்..
துடித்த இதழ்களும்.. அவளை இழுத்து அணைத்து ஆறுதல் கொடுக்க தோன்றியது.. தூண்டியது அவனை!! ஆயினும் கட்டுப்படுத்திக் கொண்டு நின்றான்.
இப்போது அவளுக்கு ஆறுதல் கொடுப்பதைவிட அந்த ஞாபகத்தை மறக்கச் செய்வது தான் நல்லது என்று உணர்ந்தவன், "நானு என்ன செத்தா போயிட்டேன்.. எதுக்கு இப்புடி வூடான வூட்டுல ஒப்பாரி வைக்கிறவ?? இன்னொரு முறை அவனுக்காக நீயி அழுத.. என்ன பண்ணுவேனு தெரியாது" என்று கடுமையாக பேசியவன், "வந்து படு டி!" என்று கட்டிலை கண்களால் காட்ட நடுங்கியவளோ இன்னும் நகராமல் நின்றிருந்தாள்.
"காதுல விழுல.. நான் சொன்னது!!" அவனின் கர்ஜனையில் குடுகுடுவென்று ஓடி வந்து அவனுக்கு அந்தப் புறமாக சென்று படுக்கையில் சுருண்டு படுத்துக் கொண்டாள் அஸ்திரா.
அழுது கொண்டிருந்தவள் ஒரு கட்டத்தில் விசும்பலுடன் உறங்கி விட.. இடது கையால் மெல்ல அவளை தன் அருகே திருப்பியவன் தன் நெஞ்சில் அவளை சாய்த்தவாறு அவனும் உறங்க முற்பட்டான். ஆனால் உறக்கம்தான் வந்தபாடில்லை!!
இவளை அந்த நிகழ்வில் இருந்து எப்படித் தேற்றுவது என்று மனதுக்குள் ஆயாசமாக இருந்தது அவனுக்கு. இத்தனை வருடங்களாய் தன்னவள் என்று மனதில் தரித்தவள்.. அவளை பொண்டாட்டி என்று நினைத்து வாழ்ந்தவனிடமே "என் புருஷன கொன்ற கொலைகாரன் நீ!!" என்று கண்களில் கோபமாக.. வார்த்தைகள் அக்னி தெறிக்க பேசியதைக் கண்டவனுக்கு உள்ளுக்குள் அடர் அமிலத்தை ஊற்றியது போல தகித்தது.. வலித்தது. ஆனால் அவனது வலியை விழிகள் கூட காட்டி விடாதபடி இறுக்க மூடி நின்றான்.
தனது அருகில் தூங்கும் மனைவியை தான் இமை தட்டாமல்.. விழி எடுக்காமல் பார்த்துகொண்டிருந்தான் வீரா.
மூன்று மாதங்களுக்கு முன்னால் 'எல்லாம் முடிந்தது!! இனி அவள் என் வாழ்வில் இல்லவே இல்லை!!' என்று விரக்தியின் உச்சத்திற்கே சென்றிருந்தான். ஆனால் இன்று அவனின் கை வளைவில் அவனது தீரா!! காலம் அவளை அவன் வாழ்வில் கொண்டு வந்ததைப் போல.. அவளது உள்ளத்திலும் மாற்றத்தை ஏற்படுத்தும்.
மாற்றம் ஒன்றே மாறாதது அல்லவா??
ஏனோ அவளின் அருகாமை இன்னும் வேண்டும் என்று தோன்ற..
அவளை இடையோடு இழுத்து தன் இடையோடு இணைத்துக் கொண்டு.. அவனுடைய ஒரு காலை தூக்கி அவள் தொடை மேல் போட்டு.. நெருக்கமாக நெருங்கியவன் அவள் உதட்டில் தன் உதட்டை பொருத்தி.. பொருத்தி "ஏன் டி.. அப்படி சொன்ன? ஏன் அப்படி சொன்ன?" என்று தவிப்புடன் கேட்டவன், பின் அவளே தஞ்சமென அவளது சின்ன உதடுகளில் தன் உதட்டை புதைத்தான். அவளை இறுக்கினான் தன் நெஞ்சில் அவளது அழகிய கலசங்கள் அழுந்துமாறு.. பின் துக்கம் மறந்து துயில் கொண்டான்!!
மாலையில் வீரா விழிக்கும் போது அஸ்திரா அருகில் இல்லை. காலையில் விட இப்போது கை சற்று வலித்தது. "எங்கன போனா இவ?" என்று கண்கள் அவளை தேட.. மெதுவாக சென்று முகம் கழுவி வந்தவன், சட்டை போட முடியாமல் தடுமாற.. ம்ப்ச் எரிச்சல் மேவியது வீராவுக்கு.
"தீரா..!!!" என்று மாடியிலிருந்து அவன் கத்த..
அடுக்களையில் இருந்தவளை வடிவு "போ.. போ.. சீக்கிரம் போ கண்ணு.. எழுந்திட்டியான் போல.. கை வேற நோவெடுக்கும். போய் அவன கவனி. இங்கன நான் பார்த்துக்குறேன்" என்று அவளை அனுப்பியவர் கையோடு மாலை நேர சிற்றூண்டியையும் சேர்த்தே அனுப்பினார்.
மெல்ல தலையை ஆட்டியபடி மாடி ஏறியவள் அவன் கோபத்தோடு நிற்க.. அவனை கண்டுகொள்ளாது அறைக்குள் நுழைந்தாள்.
"நான் நிக்கிறேன் கொஞ்சமாவது கண்டுக்கிறாளா பாரு.. திமிரு.. திமிரு.. அப்பனுக்கு உள்ள அதே திமிருதேன் இவ கிட்டேயும்!! என்று முணுமுணுத்தான். சத்தமாக சொல்லி விட்டு அதே அறையில் அவனால் இருந்து விட முடியுமா என்ன?
என்னதான் ஊருக்கே அரக்கனாக இருந்தாலும் மகளுக்கு அன்பான அரவணைக்கும் அப்பா அல்லவா!!
இன்று இவளது திருமணத்தால் இருவர்களுக்கிடையே பிளவு இருந்தாலும் அம்பலவாணன் அவளது அப்பா இல்லை என்றாகிவிடுமா? இல்லை அஸ்திரா தான் அவரது மகள் இல்லை என்றாகிவிடுமா??
உள்ளே நுழைந்தவள் அவனை ஏறெடுத்தும் பார்க்கவில்லை.. கொண்டு வந்திருந்த டீயை அவனிடம் நீட்ட.. அவனோ கட்டுப்போட்டு இருந்த தன் கையை அவள் முன்னே காட்டி விட்டு அமைதியாக நின்றிருந்தான்.
"ஒரு கைதான அடிபட்டு இருக்கு.. அந்த கைக்கு என்ன கேடு வந்துச்சு?" என்று அவனுக்கு கேட்க வேண்டுமென்றே சத்தமாக முணுமுணுத்தவள்.. அவனது இடது கையை பற்றி டீ டம்ளரை திணித்து விட்டு படுத்திருந்து படுக்கை விரிப்பை சரி செய்தாள்.
அவனும் இடது கையில் இருந்த டீயையும் அவளையும் பார்த்துக்கொண்டே "டீ ஓகே.. அம்மா கொடுத்தனுப்பிய வடையையாவது கொடுப்பியா? இல்ல…" என்று அவன் கேட்க.. மெல்ல திரும்பி வந்தவள், அவனிடம் முடிந்தளவு எட்ட நின்று வடையை பிய்த்து அவன் வாய்க்குள் போட்டாள். ஏதோ பாஸ்கெட் பால் விளையாடுபவள் போல..
"உனக்கு இருக்கிற அதப்பு!!" என்றவன் நறநறவவென பல்லை கடித்தான். ஆனால் அப்படியே விட்டால் அவன் வீரா அல்லவே?
"ஆமா பொண்டாட்டி.. எந்த கற்ப காப்பாத்த இப்புடி நின்னு பாஸ்கெட் பால் விளையாடுறவ?" என்று நக்கல் தெறிக்க கேட்டவனை பார்த்து முறைத்தவள், இம்முறை வடையிலிருந்த பச்சை மிளகாயை எடுக்காமல் ஊட்டி விட்டவள் அவன் கையில் சிக்கும் முன் சிட்டாக பறந்து விட்டாள் கீழே..
மிளகாயை தின்ற கார எரிச்சலோடு அவளின் இந்த ஓட்டமும் ஒருவித கடுப்பை கொடுக்க "ராவு மாட்டுவள டி.. அப்ப பாரு மாமன் விளையாட்ட மேன் மயிலு" என்று பற்களை நறநறவென்று கடித்தபடி கையில்லாத பனியனை கஷ்டப்பட்டு போட்டுக் கொண்டு கீழே சென்றான்.
காலையில் சற்குணம் போட்ட போடில் உறவினர் கூட்டம் கலைந்து போய் இருக்க.. இப்போது ஒரிரு உறவினர்களோடு வீட்டினர் மட்டுமே இருந்தனர். அதிலும் தர்மா கோதையை அழைத்துக்கொண்டு கோவில் செல்வதாக சென்று விட்டான்.
"நைட்டு தேன் வருவேன் வந்ததுக்கப்புறம் உன்னையும் கூட்டிட்டு போறேன். வூட்டுக்கு சேர்ந்து போலாம்" என்று யோகலட்சுமியிடம் கூறிவிட்டு செல்ல..
"நான் ஏண்டா உனக்காக காத்திருக்கனும் யேன் புருஷன் இருக்காரு.. அவரு கூட நான் போய்க்கிறேன்" என்று மனைவியை மட்டும் கோயிலுக்கு அழைத்து போகிறானே என்று கோபத்தோடு யோகலட்சுமி கூறினார்.
அவன் என்ன நிஜமாவே கோவிலுக்கா கூட்டி கொண்டு செல்கிறான்? கோபமாக இருந்த மனைவியை மலை இறக்க ஊர் சுற்ற கோவில் என்பது ஒரு சாக்கு!!
மிச்ச மீதி இருந்த இரண்டு மூன்று உறவினர்களோடு யோகலட்சுமி வாயிலில் அமர்ந்து ஊர்க்கதை வளவளத்துக் கொண்டிருக்க.. கீழே இறங்கி வந்த மகனை "என்ன ராசா வலி எப்படி இருக்கு?" என்று வடிவு கேட்டார்.
"கொஞ்சமா வலிக்குது மா" என்றவாறு டைனிங் டேபிளில் அமர்ந்த வீரா அங்கே அடுக்களைக்குள் ஏதோ நோண்டி கொண்டு இருந்த அஸ்திராவை பார்த்தவாறு "தீரா.. வடை எடுத்துக்கிட்டு வா கொஞ்சம். பசிக்குது!!" என்றான்.
'அச்சச்சோ.. இப்ப போனா அவ்வளவுதான் மாட்டிப்பேனே? ஆனாலும் அவக அம்மா இருக்கும்போது வம்பு செய்ய மாட்டான். கூடவே கை வலி வேற' என்று யோசித்தவள் காலையில் நடந்ததை மறந்து அவனுக்கு வடை எடுத்துக் கொண்டு வந்து டேபிளில் வைக்க.. இடது கையால் அவளை பற்றி அருகே அமர வைத்து ஊட்டி விடு என்றான்.
"நீயி ராசாவுக்கு ஊட்டிவிடு கண்ணு.. நானு நீ டீ குடிக்கலைல. உனக்கு போய் எடுத்துட்டு வரேன்" என்று நாகரீகமாக நகர்ந்து விட்டார் வடிவு.
சொன்னதுபோல் மருமகளுக்கும் டீயும் இன்னும் வடை சட்னி சாம்பார் அனைத்தும் கொண்டு வந்து டேபிளில் வைத்து விட்டு அவரும் வாசல் பக்கம் போய் விட..
"மாட்டினியாடி யேன் மாமன் மகளே!" என்று மீசைக்குள் அடக்கினான் சிரிப்பை.
அவளோ கண்களில் அக்னி ஜுவாலை பொழிய வடையை கார சட்னியில் தொட்டு அவனுக்கு ஊட்டி விட்டாள். இரண்டு வாய் அமைதியாக வாங்கிக் கொண்டவன் இடது கையால் டீயை அவள் புறம் நகர்த்தி "ஆறி போய்.. ஏடு படிஞ்சிடும் குடிச்சிடு!" என்றான் வெகு அக்கறையாக.
அவனின் இந்த அக்கறையை தான் சிறு வயது முதலே பார்த்துக் கொண்டிருக்கிறாளே.. ஒன்றும் கூறாமல் இடது கையால் எடுத்து அவள் ஒரு வாய் குடித்து இரண்டாவது வாய் குடித்துக் கொண்டிருக்கும் பொழுது "தீரா.." அழைத்தான் தாபமான குரலில்.
என்ன என்றவள் அவன் புறம் திரும்ப இடது கையை அவளது பின்னலுக்குள் செலுத்தி இறுக்கி தன் புறம் இழுத்தவன்.. அவள் வாயிலிருந்த சூடான டீயை தன் வாய்க்கு இடம் மாற்றிக் கொண்டான்.
கன நேரம் என்பார்களே அது கூட கிடையாது. சட்டென்று நடந்து முடிந்ததை அவள் 'என்ன நடந்தது இங்கே? இப்போது?' என்பதுபோல விழிகளை விழித்து விழித்து பார்க்க "சூடு ஆறிடும் குடி டி!" என்றான் இம்முறை சற்று கிண்டலாகவே..
"வேணாம்.." என்று அவள் கூற.. "உஷாராகிட்டா" என்று சிரித்தவன், "எம்மாவ்.. உன் மருமக டீ குடிக்க மாட்டேங்குறா.. எனக்கு ஊட்டி விட்டு தான் குடிப்பாளாம்.. கொஞ்சம் சொல்லு நீயே" என்று இங்கே இருந்தே அவன் குரல் கொடுக்க..
"ஏன் கண்ணு.. நீ மொதல்ல டீ குடி ஆத்தா. அப்புறம் அவனுக்கு ஊட்டி விடலாம்" என்று வாசலிலிருந்து வடிவு குரல் கொடுத்தார்.
"எம்மாவ் அவ குடிக்கமாட்டேங்குறா நீயே வந்து என்னன்னு கேளு?" எல்லாம் செய்வதையும் செய்து விட்டு ஒன்றும் தெரியாத பிள்ளை போல அம்மாவிடம் மாட்டி விடுகிறான் பார் என்று ஏக கடுப்பில் அஸ்திரா.
"டீ ஆறிடும்ல குடி ஆத்தா" என்றவாறு வடிவு இவர்கள் பக்கம் வர ஒன்றும் சொல்லமுடியாமல் ஒரு வாய் எடுத்து அஸ்திரா டீ குடிக்கும் போதே அவளுக்கு உள்ளுக்குள் படப்படத்தது.
"கிறுக்க பய.. கோட்டி பய.. அம்மாவக்கு நேரு ஏதும் பண்ண மாட்டானு இவன உறுதியாகக் சொல்ல முடியாதே!" என்று மெதுவாக குடித்துக் கொண்டிருக்கும் போதே அருகிலுள்ள தட்டை வீரா தள்ளிவிட.. வடிவு அதை குனிந்து எடுக்கும் அந்த இடைப்பட்ட கேப்பில் மீண்டும் அவள் பின்னலை பிடித்து தன் பக்கம் இழுத்து அவள் வாயில் இருந்த மொத்த டீயையும் தன் வாய்க்கு மாற்றிக்கொண்டான்.
தன் பெருத்த உடலை கொண்டு குனிய முடியாமல் குனிந்து தட்டை எடுத்து வடிவு நிமிரும் முன் அனைத்தும் நடந்து முடிந்துவிட.. சாதுவான பிள்ளையாக மனைவியை பார்த்தவாறு அமர்ந்திருந்தான் வீரா.
