தேன்மழை 💞 - (41)

 

(@priyadinesh)
Member Moderator
Joined: 4 months ago
Messages: 44
Thread starter  

சில மணி நேரங்களுக்கு பின்..

பிரதீஷ் வீட்டை வந்தடைய, வீடு பூட்டியிருப்பதிலே குழம்பியவன் அப்படியே ஒருக்கணம் ஸ்தம்பித்து நின்று விட்டான். எல்லோரும் இருந்த பதட்டத்தில் அவனுக்கு போன் செய்யும் நினைவு யாருக்கும் வரவில்லை.

 

எங்கு சென்றிருப்பார்கள் என்னும் யோசனையில் இருந்தவனை சிந்தை கலைத்தது என்னவோ அண்டை வீட்டின் பெண் குரலே. அப்பெண்ணோ ஆற்றாமையாக அழைக்க, எதுவும் அறியாதவனாக ஏறிட்டான்.

 

அவனுக்கு விடயம் தெரிந்திருக்கும் என நினைத்தவர் குழந்தையின் நலன் பற்றி வினவ, அவ்வளவு தான் மூச்சு பேச்சற்று நின்று விட்டான்.

 

அப்பெண்ணிடமே என்ன என வினவியவனுக்கு, அதிர்ந்து போனது நெஞ்சமே. குஷியை பாம்பு கடித்த விடயம் மட்டுமே அவர் கூறியிருக்க, அவள் இறந்த சேதி அவரது செவியையும் வந்து சேராத ஒன்று.

 

பதறியடித்து அந்த அரசு மருத்துவமனை  நோக்கி பயணித்தவன், வழி நெடுக அவளுக்காக அத்தனை பிரார்த்தனை செய்து கொண்டான். பாவம் அப்பிஞ்சு குழந்தை எப்போதோ உயிர் துறந்து விட்டது என அறியாது.

 

ஏதோ ஆபத்து என உள்நெஞ்சு அடித்துக் கொண்டது தவிர, அது யாராக இருக்கும் என அவனால் அறிய முடியவில்லை. ஒருவேளை, அவனது அழைப்பை ராசிகா ஏற்று பேசிய நொடி குஷி அங்கிருப்பதை கூறியிருந்தால் நிச்சயம் அவளை பற்றியும் யோசித்திருப்பானோ? என்னவோ?

 

அனைத்து ஃபார்மலிட்டிஸ் முடிந்து, எல்லோரும் குழந்தையை வண்டியில் ஏற்றிக் கொண்டு கிளம்பி விட்டனர். ஆனால், அதன் பின்பு தான் பிரதீஷ் மருத்துவமனையை வந்தடைந்தான்.

 

வந்தவன் அங்குள்ள நர்ஸிடம் விசாரிக்க, அவளோ இறந்த விடயத்தை கூறாது கிளம்பி சென்று விட்டனர் என்றாள்.

 

ஒருவேளை அவனுக்கு தெரியும் என்பதனால் தான் மொட்டையாக கூறி விட்டாளோ என்னவோ? அதே வேகத்தோடு திரும்பியவன் காரை எடுத்துக் கொண்டு வீடு நோக்கி புறப்பட்டான்.

 

இங்கு வீட்டின் கூடத்தில் ஐஸ் பெட்டியில் சவமாக படுத்திருந்தவளை காண தாங்காது, எல்லோரும் கூக்குரலிட்டு அழுதனர்.

 

"குஷிஈஈஈ.. அம்மாவை விட்டு இவ்வளவு சீக்கிரம் போயிட்டயே டி.. கண்ணை திறந்து பாக்க மாட்டியா? காலையில தானே அம்மா கிட்ட பேசிட்டு, விளையாடிட்டு போன.. 

 

அதுக்குள்ளே உன்னை இப்படியா பாப்பேன்.. ஐயோ.. குஷி.. உன் பேச்சை கேக்காம நான் இனி எப்படி இருப்பேன்.. ஹரீஸ்.. இனி இவ எந்திரிச்சு பேசவே மாட்டாளாஆஆ?

 

ஒருதடவை கண்ணை திறந்து பாக்க சொல்லுங்க.. ஹரீஸ் என்னை பாக்க சொல்லுங்க.. என் பொண்ணு இப்படி நான் இல்லாம தனியா படுத்துருக்காளே..

 

பிறந்ததுல இருந்து அம்மா கூட தானே பாப்பா படுத்துப்ப.. இப்போ ஏன் டி என்கிட்டே கூட சொல்லாம போய்ட்ட.. இந்த அம்மாவையும் கூட்டிட்டு போயிருக்கலாமே..

 

குஷிஈஈ.. என்னை பாரு டி.. என்கூட பேசு டி.. சாப்பிட வந்துடுவேன்னு சொல்லிட்டு போனயே.. இப்படி ஒரேடியாவா போவ.. எப்படி தான் அந்த பாம்புக்கு ஒரு பச்சை மண்ணை கடிக்க மனசு வந்துச்சோ..

 

குஷிஈஈ.. அம்மாவை பாரு மா.. ஒரே ஒரு தடவை பாரு மா.." அவளின் கதறல் எல்லோர் நெஞ்சையும் கணக்க செய்ய, வீட்டை நிறைத்தது அழுகுரல்.

 

அனைத்தையும் திட்டமிட்டு செய்தவர், குற்றவாளியாகி போன துக்கத்தில் ஊமையாகி எங்கோ வெறித்தபடி அமர்ந்து விட்டார். பேத்தியின் ஓலம் நொடிக்கொரு முறை, அவர் நெஞ்சை கூரிட்டது.

 

காரை வீட்டு வாசலில் நிறுத்தியவன், வீட்டின் முன்பு கூடியிருந்த கூட்டம் கண்டு திடுக்கிட்டான்.

 

அவன் இறங்கியதும் எல்லோரும் வழி விட்டு நிற்க, பேரனின் வருகையை கண்ட பாட்டி கத்தி கதறிக் கொண்டு அவனை வந்து அணைத்துக் கொண்டார்.

 

அவனுக்கு என்ன நடக்கிறது என்பதே புரியவில்லை ஒரு நொடி. பாட்டி பிரதீஷ் பெயரை அழைத்துக் கொண்டு வெளியே வந்ததை உணர்ந்த ருத்ரா, திடுதிடுவென ஓடிவந்தவள் அண்ணனை இறுக கட்டிக் கொண்டாள்.

 

பிரதீஷ் புரியாது இருவரையும் குழப்பமாக பார்க்க, "குஷி.. நம்மளை விட்டுட்டு போய்ட்டாணா.. மாமா மாமான்னு உன்னையவே சுத்தி வந்தவ.. இப்போ.. இப்போ.. உள்ளே.." என்றதும் நாயகனின் நெஞ்சமே ஒருநொடி நின்று துடித்தது.

 

தனது தங்கையை தள்ளி விட்டு உள்ளே நுழைந்தவன், அந்த ஐஸ் பெட்டியில் மாலையும் கழுத்துமாக, ஆட்டம் பாட்டமின்றி அடங்கி ஒடுங்கி படுத்திருக்கும் பிஞ்சின் முகம் கண்டு வீடதிர அவள் பெயரை உச்சரித்தான்.

 

அவனது கதறல் எல்லோரையும் ஒரு நொடி நெஞ்சடைக்க வைத்தது.

 

உண்மையில், மற்றவர்களை விட இருவருக்கும் இடையே இருந்த நெருக்கம் தான் அதிகம். அவள் கடைசியாக கேட்டது கூட பிரதீஷை வீடியோ காலில் பார்க்க வேண்டுமென்று தான்.

 

ஆனால், ருத்ரா வீட்டு வேலையில் மாலை நேரம் பேசிக்கொள்ளலாம் என்றுக் கூறி கல்யாணியோடு புது வீட்டிற்கு அனுப்பி வைத்தாள். அதையெல்லாம் அவன் கதறல் முன்பு அழுது புலம்பியவள், ஓடிச்சென்று அண்ணா என்ற அலறலோடு அவனை அணைத்துக் கொண்டாள்.

 

அவனோ, கதறியபடி தான் இருந்தான். வரும் வரை நிச்சயம் அவளுக்கு எதுவும் ஆகக்கூடாது என வேண்டி வந்தவனுக்கு, அவளது சவமே காட்சியாக உருக்குலைந்து போனவனாக அமர்ந்து விட்டான்.

 

சிலரது மரணம் தான் தக்க பாடமாக அமையும் என தீர்மானிக்கபட்டதோ என்னவோ?

 

இன்று தனது பேத்தியின் மரணத்திற்கு தானே குற்றவாளி என உணர்ந்தும், அதனை வெளிப்படையாக கூற முடியாத நிலையில் இருந்தார் சண்முகம். அப்போது கூட அவரின் சுயநலமும், கவுரவமும் அனைத்திற்கும் தடையாக இருந்தது.

 

அன்று மாலையே குஷியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. வாழவேண்டிய பிஞ்சு வாழ்க்கை முடிந்து, வேறுலகம் பயணித்து விட்டது.

 

வீட்டில் ஒரு ஓரம் ஏற்றப்பட்டிருந்த நிறை விளக்கை கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்த பிரதீஷை, ராசிகா குடிப்பதற்காக நீர் கொடுக்க தோளை தொட்டாள்.

 

அப்போது தான் அவளிடம் பப்பி அங்கிருந்ததை ஏன் கூறவில்லை என்று வினவ, பதிலுக்கு அவளது விழிகளில் நீருற்றே.

 

கல்யாணி அவர்கள் கேவி அழுது கொண்டிருக்க, அதனை பார்த்தவனுக்கு வந்த கோவத்தில் ராசிகாவை பலமாக அறைந்து விட்டான்.

 

அடியை வாங்கியவள் அவன் மனநிலை புரிந்தும் அவன் தோளை பற்ற, "எல்லாம் சோறை தின்னுட்டு இருந்தா போதுமா? குழந்தை என்ன செய்யுதுன்னு.. பொறுப்பா பாக்க மாட்டிங்களா?

 

வாழ வேண்டியவங்க எல்லாம் இந்த வீட்டுல போய் சேந்துறாங்க.. மத்த எல்லாரும் எதுக்கு இருக்கீங்கன்னு தெரியல.." என்றவன் அந்த நீர் கிளாசை அவன் அம்மாவை பார்த்தபடி தூக்கி வீசி வெளியேறி விட்டான்.

 

ஆனால், ராசிகாவோ அவனை தடுக்க முற்பட, கணவனோ தீயாக முறைத்து பாதையை விடுமாறு எச்சரித்தான்.

 

அவள் முடிந்த வரையில் மன்றாடி சமன் செய்ய முயற்சிக்க, "எல்லாரும் இதை ஈஸியா மறந்துடலாம்.. என்னால.. முடியல.." என்றவன் கண்கள் நீரில் மிதக்க, ஏற்கனவே அழுதழுது சிவந்து போன விழியில் மீண்டும் நீர் வடிவதை காண அவளுக்கு தான் வேதனையாக இருந்தது.

 

அவன் வெளியே செல்ல எத்தனிக்க, ராசிகா தடுத்தும் அவன் மீறி சென்று விட்டான். எத்தனையோ முறை எடுத்துக் கூறினாள்.

 

வீட்டில் உள்ளவர்களே மற்றதை பார்த்துக் கொள்ளட்டும் என ஆவேஷமாக பேசி செல்பவனை புதிதாக பார்த்தாள்.

 

பிரதீஷிற்கு இம்மரணம் அதீத பாதிப்பை  ஏற்படுத்தியிருக்கும் என்பது எல்லோரும் அறிந்த ஒன்றே. அதனால், யாரும் அவனை தடுக்க முயற்சிக்கவில்லை. கிளம்பி புது வீட்டிற்கு சென்று விட்டான்.

 

அங்கு சென்றவன் விழிகளில் அவளே எங்கும் மாயபிம்பமாக தோன்றி மறைய, மனம் தாளாது கேவி அழத்துவங்கினான். எவ்வளவு நேரம் அப்படியே அமர்ந்தவனாக அழுது சோர்ந்து போனானோ, நா வறட்சியில் தான் சுயம் பெற்றான்.

 

இரவு நேரம் வரை ஒரு சொட்டு நீர் கூட பருகாது துயரத்தில் இருந்தவனுக்கு, விம்மி அழுததில் தொண்டைக்குழி வறண்டு போனது.

 

நீர் தேடி அடுக்களையினுள் நுழைந்தவன், நீரை குடித்து விட்டு அருகே இருந்த டைனிங் டேபிள் சேரில் சாய்ந்து கண்களை மூடி அமர்ந்து விட்டான்.

 

மீண்டும் அவள்.. அவளது நினைவே மனதையும் மூளையும் ஒருசேர ஆக்கிரமித்தது.

 

அதற்குள் காலிங் பெல் சத்தம் அவனது செவியை அலற வைக்க, கண்ணீரை துடைத்துக் கொண்டு கதவு திறந்தான்.

 

ராசிகா தான் அவனை தேடி வந்து விட்டாள். அவன் எப்படியொரு மன நிலையில் இருப்பான் என தெரிந்தே வந்தவள், தழுதழுத்த குரலில் சாப்பிட கூற இடவலமாக தலையசைத்து வேண்டாமென்று விட்டு அறை நோக்கி சென்றான்.

 

அறையில் எதிரே இருந்த சுவரை பார்த்தப்படி கண்ணீர் சிந்திக் கொண்டிருந்தவன் அருகில் நெருங்க அவளுக்கும் கை கால்கள் உதறல் எடுத்தது. எல்லாம் சற்று நேரத்திற்கு முன்பு வாங்கிய அடியினால் தான்.

 

தயங்கியப்படி நெருங்கியவள் அவனருகே அமர, அவனிடம் சன்னமான அதிர்வு கூட இல்லாது அமர்ந்திருந்தவன் தோளை பற்றினாள்.

 

"பிரதீஷ்.."

 

அவளது அழைப்பில் ஆறுதல் தேடியவன் தோளில் முகம் புதைத்து அழுது புலம்பி தவித்தான்.

 

"அவ சின்ன குழந்தை டி.. பாம்பு கடிச்சு யார்ட்டையும் சொல்ல முடியாம எப்படி துடிச்சுருப்பா? இதே வீட்டுல.. இன்னேக்கி ஒரு உசுரு போய்டுச்சு.. இதுக்கு தான் இந்த வீடை கட்டுனோமா?

 

அதுவும் ஒரு பச்சைக் குழந்தை.. என்ன ஏதுன்னு வெவரம் தெரியாத குழந்தையை.. கவனமில்லாம பறி குடுக்க யாரு காரணம்? எல்லாம் இந்த வீட்டு ஆளுங்க தானே?

 

என்னால அழுகையை கண்ட்ரோல் பண்ண முடியல டி.. நிச்சயம் அவ சாகுற நேரம் என்னை தான்.. நினைச்சுருப்பா.. மாமா.. மாமான்னு வார்த்தைக்கு வார்த்தை சொல்லுவா..

 

இப்போ அப்படியொருத்தி இல்லவே இல்லை.. என்னை விட்டுட்டு தூரமா போய்ட்டா.. ரெம்ப மனசு பாரமா இருக்கு.. அவ முகத்தை பாத்தா செத்த மாதிரியா இருக்கு?" என்றவனை ஆதூரமாக அணைத்து ராசிகா தேற்றிட முயற்சிக்க..

 

அவனோ விலகிக் கொண்டு எழுந்து நின்றான் தனிமை தேடி செல்ல.

 

"பிரதீஷ்.. எங்கயும் போகாதீங்க.." என்றவள் குரலையும் மீறி கதவை அறைந்து சாற்றி வெளியேறினான். ஹாலில் இருந்த சோபாவில் அமர்ந்தவன், இரவு விளக்கின் ஒளியில் மின்னும் சுவர் கடிகாரத்தை கூர்ந்து கவனித்தான்.

 

வித்தியாசமான கடிகார ஒலி பன்னிரண்டு மணி ஆனதை தெரிவித்தது.

 

அவனுக்கு நேர் எதிரே ஷோகேஷ்! அதில் குருதி வடிய எழுத்துக்கள் மின்னி மின்னி மறைந்தன.

 

அப்போது தான் அவன் உண்மையில் சுயம் பெற்றான். அதுவரை ஏதேதோ நினைவுகளில் ஊடாடிய மனம் ஒன்றியது அவ்வெழுத்துகளில்.

 

"தலைவிதி மாறலாம்.. என் எண்ணம் உயிர் எடுக்கும் வரை மாறாது.."

 

பிரதீஷ் விழிகள் கோழி குண்டாக விரிந்து நின்றது. இதயமும் பயத்தில் பன்மடங்காக அடித்துக் கொள்ள, ஆங்காங்கே வியர்வைத் துளிகள் அவன் முகம் முழுவதும்.

 

"ராசிகாஆஆஆ...."

 

அவனது அலறல் கேட்டு, ஓடி வந்தவள் என்னவென வினவ, பிரதீஷ் ஷோகேஷையே மிரட்சியோடு பார்த்திருந்தான்.

 

"என்னாச்சு டா? ஏன் இப்படி கத்துன? மறுபடி பப்பி நியாபகமா?"

 

அவனோ இல்லை என தலையை மட்டும் அசைக்க, பதிலை தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் அவனை உலுக்கி எடுத்து விட்டாள்.

 

"அப்பறம்.. என்ன?"

 

"இங்க.. ஏதோ.. ஒன்னு.."

 

"எங்க பிரதீஷ்?"

 

"இந்த.. ஷோகேஷ்ல.."

 

"அங்க என்ன இருக்கு? நீ வந்து தூங்கு அப்போ தான் ரிலிஃப் ஆகும். இப்படி அழுதுட்டே இருந்தா.." என வழக்கம் போல் அவனுக்கு அறிவுரை கூற விழைய, அவனோ ஹேய் என அதட்டி மீண்டும் அவ்விடத்தில் ஏதேனும் தெரிகிறதா என கேட்க இல்லை என்றாள்.

 

"இங்க.. ஏதோ ஒன்னு.. எழுதுன மாதிரி.. தெரிஞ்சது ராசிகா.."

 

"நீங்க நல்லா ரெஸ்ட் எடுங்க பிரதீஷ்.. அங்க ஒண்ணுமில்லை.." என்றவள் அவனை பேசக்கூட விடாது அழைத்து செல்ல, அவன் மீண்டும் அதையே உளறிக் கொண்டு தான் இருந்தான். அவள் தான் ஒவ்வொரு முறை அவன் அதனை முழுதாக கூற வரும் போதெல்லாம் பேச்சை கத்தரித்தாள்.

 

எல்லோருக்கும் குஷியின் மரணம் பெரும் இழப்பாகவும், ஆறா வடுவாகவே இருந்தது நாட்கள் கடந்த போதிலும்.

 

ஆனால், தவறை செய்த சண்முகம் அவர்கள் அன்றைய நாள், அந்நொடியில் குற்றத்தை உணர்ந்தவறாக இருந்தாரே தவிர, எல்லாம் முடிந்த மூன்றே நாளில் இது தான் விதியோ என்னவோ என யோசிக்கலானார்.

 

குஷியின் மரணம் நடந்து பத்து நாட்கள் கடந்திருந்தது. வேலைக்கு நீண்ட நாள் விடுப்பு எடுத்துக் கொள்ள முடியாத நிலையில் பிரதீஷ் ஊருக்கு திரும்பியிருக்க, பேரனை பதினாறாம் நாள் காரியத்திற்கு வருமாறு அழைத்தார் சாவித்திரி.

 

அவனோ பதிலுக்கு காச் மூச்சென கத்தி விட்டு போனை துண்டித்து விட்டான்.

 

ஆனால், மறுநாள் இரவே ராசிகாவின் கட்டாயத்தின் பேரில் வந்தான். வந்தவனுக்கு மிகப்பெரிய சந்தேகம் வலுத்தது அதுவும் அவன் தாத்தா மீதே. முன்பு அவன் எப்படி இருமலோடு நள்ளிரவு போராடுவானோ அதே இருமல், கரிய புகையின் நெடி அனைத்தையும் அவரின் அறையில் உணர்ந்தான்.

 

போதாக்குறைக்கு, சாவித்திரி பாட்டி அவர்களும் புது வீடு கட்ட ஆரம்பித்ததில் இருந்தே பிரச்சனையென அடிக்கொரு முறை தலையில் அடித்துக் கொண்டு அழுதிடுவார். அதிலும் அன்று பணிக்கர் சொன்னது, ரங்கராஜன் மரணம் என அவர் ஒவ்வொன்றாக கூறி அழுவது அவனுக்கு ஏதோ ஒரு இடியாப்ப சிக்கல் எங்கோ உள்ளது என்பதை ஊகித்தான்.

 

வீட்டினர் எல்லோருக்கும் உயிர் பயம் வந்து விட்டது. பணிக்கர் கூறியது போலவே ஒரு பெண் உயிர் விட்டிருக்க, இது தொடர்கதையாகி விடுமோ என ஆளாளுக்கு மாறி மாறி பேசிக்கொண்டனர்.

 

இதைப்பற்றி எதுவும் அறியாத பிரதீஷிற்கு தான், குடும்பத்தாரின் பேச்சு புதிதாக தெரிந்தது. அன்று அவன் படித்த வாசகமும் அந்நொடிக்கு பின் மறந்து போக, என்னவாக இருக்கும் என தனியே அமர்ந்து யோசித்து பார்த்தான்.

 

அது மனப்பிரமையாக கூட இருக்கலாமோ? எப்படி உண்மையெனில் உடனே மறந்து போகும் என புலம்பியவன் வாசகத்தை நினைவு கூற முயற்சித்து போராடி தோற்று போனது தான் மிச்சம்.

 

அன்றைய தினம் தான் வீட்டில் பெரும்புயல் அடிக்கவுள்ளதை எவரும் அறியவில்லை. ராசிகா, சுமியை அழைத்துக் கொண்டு காரில் மார்க்கெட் கிளம்பினாள். வழியில் வாந்தி வருவதாக கூறிட, டிரைவர் வண்டியை நிறுத்த இருவரும் ஒரு ஓரம் இறங்கி நின்றனர்.

 

கடையில் இளநீர் சீவிக் கொண்டிருந்தவன் இருவரையும் மேலிருந்து கீழ் வரை தாடையை நீவிக் கொண்டு பார்த்தான். அதில் அவனை கண்டதும் சுமித்ரா, நலம் விசாரிக்க நெருங்கினாள். முன்பு, அவர்களது தோப்பில் இளநீ இறக்குபவன் என்பதனால் அவனை நன்கு தெரியும் சுமிக்கு.

 

அவனோ சுமியிடம் பேசியப்படி ராசிகாவை ஒருவாறு பார்த்திருந்தான். அவனும் பேச்சுவாக்கில் என்ன ஏதேன விசாரிக்க, சுமியும் பதினாறாம் நாள் காரியத்திற்கு காய்கறி வாங்க வந்ததை கூறினாள்.

 

அவனோ விதிர்விதிர்த்தவனாக, யாருக்கு காரியம் என்றான். தனது தங்கை குழந்தை இறந்ததையும், பாம்பு கடித்த விடயத்தை அவள் கண் கலங்க கூறிட, அதில் திடுக்கிட்டான்.

 

நஞ்சு கொண்ட பாம்பை அனுப்பி வைத்த மகா உத்தமனல்லவா? எவள் சாக வேண்டும் என நினைத்து, கையில் எடுத்த காரியம் சிதறி போய் குழந்தை உயிர் போனதை கேட்டு அவன் விழிகளிலும் நீர் வழியத் துவங்கியது.

 

பாம்பை விட்டவர்கள், எப்படியும் அவளை கடித்து விடும் என்னும் மெத்தனத்தில் யாரை கடித்தது என கூட பாராது அங்கிருந்து நகர்ந்து விட்டனர். இப்போது சுமித்ரா கூறிய விடயத்தில் அவனும், குற்றவாளியாகி நின்று விட்டான்.

 

தேன்மழை💖💖

 

 


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top