எட்டு நாட்களுக்கு பின்..
வழிபாடு பூஜை என சிரத்தையோடு எல்லாம் செய்து வந்தாலும், விதி சில நேரங்களில் விளையாட்டை காட்டி விடும் என்பது தான் திண்ணம். அன்றும் அது போல் தான் யாரும் எதிர்பாராத சம்பவம் நடந்தேறியது.
மனைவியிடம் பேச அழைத்தவண்ணம் இருந்தான் நாயகன். அவள் சிறு வேலையில் இருந்ததால் அலைபேசி அழைப்பை கவனிக்கவில்லை.
அவனுக்கோ ஏதோ ஒரு நெருடல். ஹாஸ்பிட்டல் கிளம்பியவனுக்கு என்றும் இல்லாதொரு பதட்டம் நெஞ்சை கவ்வ, ராசிகாவை பற்றி சிந்தித்தபடி இறங்கியவன் கால் இடறி படிகளில் உருண்டு கீழே விழுந்தான்.
விழுந்தவன் ஐயோ.. அம்மா.. என அலறாது, நெற்றியில் அடிப்பட்ட வலியில் ராசிகா என்றே அலறினான். அவனின் பயமும், பதட்டமும் உண்மையில் சரி தான்.
தன் பேரனின் மனைவி தனக்கும் பேத்தி தான் என பாராது, அவளை கொல்ல துணிந்து விட்டார். அதுவும் பாம்பு கடித்து இறந்து விட்டதாக நம்பும்படியான திட்டம். வேறொரு நபராக இருந்தால், அவர் வழக்கம் போல் களத்தில் இறங்கி விடுவார்.
இவளால் தனக்கு அவமானம் வந்து சேருமோ என்னும் பயம் தான் அவரை இப்படியெல்லாம் யோசிக்க வைத்தது. சுமியின் காதலுக்கு செய்த கொலை மட்டும் வெளியே தெரிந்தால், எவரும் இவருக்கான மரியாதை தர மாட்டார்கள்.
அதை ஆயுள் உள்ள வரை மறைத்து வாழ தான் இப்படியொரு திட்டம்.
அடிப்பட்டவன் அதே பதட்டத்தோடு மீண்டும் அவளுக்கு அழைத்தான்.
"பிரதீஷ்.."
"ராசிகா.. எங்க இருக்க டி?"
"நான் இங்க புது வீட்டுல தான் இருக்கேன்.. நீங்க ஹாஸ்ப்பிட்டல் போகலையா?"
அவனோ வலியை அடக்கிக் கொண்டு அவளை பற்றி குசலம் விசாரித்தான்.
"கிளம்பனும் டி.. கூட யாரு இருக்கா?"
"நான்.. அப்பறம் உங்க அம்மா.."
"ம்ம்ம்.. சரி.. நல்லா தானே இருக்க?"
"எனக்கு என்ன பிரச்சனை பிரதீஷ் நான் நல்லா தான் இருக்கேன். நீங்க ஏன் ஒரு மாதிரி நெர்வஸா பேசுறீங்க?"
"இல்லை டி.. நார்மல்லா தான் இருக்கேன்.."
அவனும் அவளுக்கு எதுவும் நேரவில்லை என்றபின் நிம்மதி பெருமூச்சு விட நினைக்க, ஏனோ அவனால் இயல்பாக சுவாசிக்க முடியவில்லை. ஏதோ ஒரு நெருடலில் அப்படியே அமர்ந்து விட்டான் நாயகன்.
இங்கு தென்னைந்தோப்பில், அவளை கொல்ல கொடிய விஷம் கொண்ட பாம்பை வைத்துக் கொண்டு கம்பி வேலிக்கு பின்னால் அமர்ந்திருந்தனர் இருவர்.
வெளிக்காற்றை சுவாசிக்க வெளியே வந்தாள். கண்ணுக்கெட்டிய தூரம் வரை தெரிந்த பசுமை அவள் மனதை வருட, நினைவுகள் எல்லாம் பின்னோக்கி நகன்றது.
அதுவும் மனம் கவர்ந்தவனின் மீது எண்ணங்கள் பயணித்தது.
அவனோடு பாலக்காடில் இருந்த போது, வீட்டை சுற்றியுள்ள மரங்களுக்கு மத்தியில் ஒளிந்து விளையாண்ட நினைவுகளில் சிலாகித்தாள் ஆயிழை.
சில நிமிடங்கள் ஏதோ யோசனையில் அமர்ந்தவன், வேலைக்கு விடுப்புக் கூறி ஊருக்கே கிளம்பி விட்டான்.
ஏதோ ஒன்று நிகழப்போவதாக தோன்றிய நிகழ்வு மாயையா? இல்லை உண்மையா? என அறிய முடியாது பரிதவித்தவன் கிளம்பி விட்டான் கோயம்புத்தூர் நோக்கி.
பிருந்தா இல்லம்
அஸ்வத், அவனது அப்பா கண்ணன், விசாலாட்சி, ஆர்த்தி என குடும்பத்தினர் அனைவரும் கூடத்தில் அமர்ந்திருந்தனர்.
அவர்களது திடீர் வருகையை எதிர்பார்க்கவில்லை கௌதமன் மற்றும் ராணி அவர்கள். வந்தவர்கள் தாம்பூலத்தட்டோடு வருகை தந்திட, அதிலே விடயம் என்னவென புரிந்தது.
சில நிமிடங்களுக்கு பின் தட்டை மாற்றிக்கொண்ட இரு வீட்டினரும் திருமண நாளை பற்றி கலந்தாலோசிக்க, அஸ்வத் வீட்டை சுற்றி பார்க்கிறேன் என்ற பேர்வழியில் பிருந்தாவை தேடிச் சென்றான் வீட்டின் பின்புறம் வழியாக.
அதில் அவளது அறையில் ஏதோ தயக்கத்தோடு அமர்ந்திருந்தவளை, ஜன்னல் வழியே முட்டைக்கண்ணால் கண்டு கொண்டான்.
"ஷ்ஷ்.. ஷ்ஷ்.." என்ற பாம்புச்சீறலில் திடுக்கிட்டு சத்தம் வந்த திசை நோக்கி திரும்ப, அங்கே அவன் வாட்ட சாட்டமாக நின்றிருந்த தோரணையில் துணுக்குற்றாள்.
"ஹலோ மேடம்.. என்ன பண்ணுறீங்க? வெளியே வராம, உள்ளே என்ன யோசனையில இருக்கீங்க?"
அவனையே விழி மூடாது பார்த்துக் கொண்டிருந்தவளை பார்த்து கண் சிமிட்ட, பட்டென முகத்தை திருப்பிக் கொண்டவள் முகத்தில் சிந்தனை ரேகைகள்.
"பிருந்தா!"
"........."
"பிருந்தா!"
"........."
"சரி என்னை பிடிக்கலன்னு போய் சொல்லிறேன்.."
"ஐயோ!! அப்படிலாம் இல்லை அஸ்வத்.. ஒன் மினிட்.." என பதட்டத்தோடு அழைத்தாள். அவன் போலியாக கூறி செல்வதை உண்மையென நம்பி.
"சொல்லுங்க.. டைம் இல்லை.. இப்போ போனா தான் தட்டு மாத்துறதை நிறுத்த முடியும்." என்றவன் உதட்டில் குறும்பு புன்னகை. அவளோ, விழிகள் கலங்க ஏறிட்டாள்.
"பிருந்தா.. என்ன ஆச்சு? ஏன் இப்போ அழுறீங்க? பிடிக்கலைனா சொல்லிடுங்க.."
"ஐயோ.. அஸ்வத் கொஞ்ச நேரம் பேசாம இருக்கீங்களா? ஏன் நீங்களும் என் மனநிலை புரியாம பேசுறீங்க?" என்றவள் பிடிமானத்திற்காக ஜன்னல் கம்பியை பற்றினாள்.
"பிருந்தா.. எதுவும் சொன்னா தானே எனக்கு தெரியும். இப்படி சொல்லாம அழுதா நான் என்ன நினைப்பேன்?"
அவளோ பெரிதாக விசும்ப, "பிருந்தா.. ப்ளீஸ்.. சொல்லுங்க.. வீட்டுல என் அம்மாக்கு தெரிஞ்சது, நான் தான் உங்களை அழ வச்சேன்னு நினைப்பாங்க." என்றான் குழம்பியவனாக.
"மேரேஜ் அப்பறம் யாரோ சொல்லுறதை கேட்டு, என்னை ராசி இல்லாதவன்னு சொல்லிட மாட்டீங்களே?" என்றவள் விழிகளில் நீர் முன்பை விட அதீதமாக சுரக்க, ஜன்னல் மீதிருந்த அவளது வலது கையை இறுக பற்றினான்.
அந்நொடி அவள் கண்ணீரும் தடைப்பட்டு நின்றது.
"பிருந்தா.. எனக்கு என்ன சொல்லன்னு தெரியல.. என்னோட ஏற்பாடுல தான் இந்த கல்யாணம் நடக்குது.
அதுவும் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ.. அவ்வளவு சீக்கிரம் பண்ண சொல்லிட்டேன்.
பிருந்தா.. ரெடியாகிட்டு வெளியே வாங்க.." என்றவன் விழியசைவிலே, அவளை கிளம்பிடக் கூறி கடக்க அவளுக்கு தான் இயல்பு நிலைக்கு சட்டென வர, சில நிமிடங்கள் பிடித்தது.
ஒருவழியாக திருமண நாளை குறித்து விட்டனர். அத்தை வேதகி மற்றும் ஜெயமோகனை முன் வைத்தே நாள் குறித்தாயிற்று. பிரதீஷ் வீட்டினருக்கு திருமணத்திற்கு மட்டும் அழைப்பு விடுத்தால் போதுமென முடிவு செய்து விட்டனர்.
பிருந்தா மனநிலையை எண்ணி தான் அவளை வெளியே கூட யாரும் அழைக்காது, அஸ்வத் வீட்டினர் கொண்டு வந்த தாம்பூலத்தை மனமாற பெற்றுக்கொண்டனர்.
யாரும் எதிர்பாராத நொடி பிருந்தா பட்டுடுத்தி வெளியே வர, அத்தனை பேருக்கும் இன்பதிரிச்சியாக அமைந்தது. வீட்டினர் பிருந்தாவிடம் நாள் குறித்த விஷயத்தைக் கூறி சம்மதம் கேட்க, அவளோ அஸ்வத்தை ஒரு பார்வை பார்த்து விட்டு சம்மதம் என்றாள்.
எல்லோருக்கும் ஒரே அவா பிருந்தாவுக்கு இம்முறையாவது நல்லபடி திருமணம் நடக்க வேண்டுமென்பது தான். பெரியோர்கள் பேசிக்கொண்டிருக்க, மீண்டும் அவன் அதே பின் வாசல் வழியே போன் பேச சென்றான்.
ஆர்த்தி மற்றும் பிருந்தா அவர்களது கல்லூரி கால நினைவை அளவாளவிக் கொண்டிருக்க, அண்ணன் மனம் விட்டு பேசட்டும் என கருதி ஆர்த்தி பொய்க்காரணம் கூறி நகன்று விட்டாள்.
அன்று அந்த மாலில் பார்த்த போது நிதானமாக தோரணையோடு பேசியவளுக்கு, இன்று அவன் பேச வந்த நொடியும் தனிமையும் நடுக்கத்தை தந்தது.
கணவனாக போகிறவன் அல்லவா? புதிதான தயக்கமும் நடுக்கமும் அவளை தொற்றிக் கொள்ள, வந்தவனும் சுற்றி முற்றி பார்த்தான்.
"பிருந்தா.. நீ தப்பா.. நினைச்சக்கலைனா.." என்றவன் ஏதோ கேட்க போகிறான் என அஞ்சி, விழிகள் விரிய "ஏதேய்ய்.." என்றாள்.
"ஐயோ.. நான் அந்த அர்த்தத்துல கேக்க வரலங்க.."
"அப்பறம்.. எதுக்கு இப்போ.. இப்படி கேட்டிங்க?"
"அது எனக்கும் நெர்வஸா இருக்கு.. அதான் உங்க கையை கொஞ்சம் பிடிச்சுக்கிட்டுமா?" என்றவன் முகத்திலும், விழிகளிலும் சிறு பதட்டம் தெரிய, அவனை ஒருவாறு பார்த்தவள் வேண்டாம் என்றாள் பட்டென.
"சரிங்க.." என்றவன் தோளை குலுக்கி விட்டு, காம்பவுண்ட் சுவர் உயரத்தை ஆராய்ச்சி செய்தான்.
அவள் தான் பேச வந்து விட்டு பேசாமல் இருக்கிறானே என்னும் ரீதியில் அவனையே பார்க்க, "என்னங்க?" என்றான் தன்னையே குறுகுறுவென பார்த்துக் கொண்டிருப்பவளை கண்டு.
"இல்லை.. பேச வந்துட்டு சுவரை பாத்துட்டு இருக்கீங்க.."
"நீங்க பேசுங்க.. நான் கேக்குறேன்.."
"எனக்கும் என்ன பேச தெரியல.." என்றவள் பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு, உதட்டை பிதுக்க..
"எனக்கும்.. என்ன பேச.." என அவன் கூற வரும் நேரம் ஆர்த்தியின் குரல் இருவருக்கும் வெட்கத்தை உண்டாக்கியது.
"ப்பச்.. ரெண்டு பேர்ல யாராவது பேசுங்க பா.. பாட்டி வடை சுட்டுச்சு.. காக்கா தூக்கிட்டு போச்சு.. இடையில நரி வந்துச்சுன்னு.. ஏதாவது ஆரம்பிக்கங்கப்பா.." என்றவள் மாடியில் இருந்து குரல் கொடுக்க, இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டு ஐயோ என்பது போல் சிரித்து விட்டனர்.
"ஹேய்.. ஒழுங்கா போடி.. கீழ.. ஏதோ நல்லவன்னு நினைச்சா ஒட்டு கேக்குறயா?"
"சரி.. சரி.. போறேன்.. நீ சுவரை பாரு.."
"ஹேய்.. உன்னை.. மேல வந்தேன்.."
"அட.. போடா காமெடி பீஸ்சு.."
ஆர்த்தி வெறுப்பேற்றி விட்டு அவ்விடம் விட்டு நகன்றிட, அஸ்வத் அவளை வெரட்டி பிடிக்க நினைத்த நேரம் பிருந்தா அவனது கரம் பற்றினாள். அதில் சட்டென தடுமாறி திரும்பி பார்த்தவனிடம் சினேகமாக புன்னகைத்தாள் வஞ்சியவள்.
"நான் சும்மா விளையாட்டுக்கு தான் சொன்னேன்.."
"எது?"
"அப்போ.. கையை.. பிடிச்சுக்கவா கேட்டீங்களே.. அது தான்.." என்றவள் முகம் செம்மை கொண்டு கூற, அவனது கை மீதிருந்த கையை இறுக பற்றிக் கொண்டவன் பார்வையில் கரைந்து நின்றாள்.
"ஸாரி.."
"எனக்கு ஸாரிலாம் வேணாம்.."
"பின்னே.." என்றவள் மூக்கு மீண்டும் காற்றடிக்க, அஸ்வத் அவள் கையில் நறுக்கென கிள்ளி வைத்தான்.
"எப்போ பாரு.. எடக்கு மடக்கா.. நினைங்க.."
"நீங்க எதுனாலும் தெளிவா கேளுங்க.."
"சரி நான் கேட்டதுல, என்ன புரிஞ்சுட்டிங்க சொல்லுங்க.." என்றவன் சுவர் மீது சாய்ந்து நின்று கொண்டு, தன்னருகில் வெட்கம் மின்ன நின்றிருந்தவளை இமை மூடாது பார்த்தான்.
"நான் ஒன்னும் நினைக்கல.."
"அப்போ.. ஏன் இந்த மூக்கு ஏர் அடிச்சது?"
"ஹான்.. அதெல்லாம் சொல்ல முடியாது.." என்றவள் ஒருவாறு முகத்தை சுளித்துக் கூற, அவனுக்கு தான் இதுவரை இல்லாத யோசனையை உண்டாக்கி விட்டாள்.
அதில் ஒருநொடி அவளையே ஆழ்ந்து பார்த்த பார்வை கண்டு, தலை தாழ்த்திக் கொண்டாள்.
"வீட்டுக்கு வந்துருக்கேன் ஃபர்ஸ்ட் டைம்.. உங்க கையால, ஒரு ஜூஸ் குடுத்தா குடிச்சுட்டு தெம்பா கிளம்புவேன்.."
அதில் உதட்டை கடித்துக் கொண்டு சாரி என அப்பாவியாக கூறி உள்ளே செல்ல முயன்றவளை மீண்டும் அழைத்தான்.
"ஜூஸ் போட்டு இங்க எடுத்துட்டு வாங்க.."
"ஏன் உள்ளே வர மாட்டீங்களா?"
"இல்லை.. இங்க கொஞ்சம் கம்பர்டபிள்ளா இருக்கு.." என்றவன் ஆளில்லாத தனிமை பேச நல்ல சந்தர்ப்பம் என எண்ணிக் கூற, மீண்டும் முறைத்து பார்த்தாள்.
அவள் எண்ணத்தை புரிந்து கொண்டு கலகலவென சிரித்தபடி, அவளை நோக்கி நெருங்கினான்.
"எனக்கு ஜூஸ் வேணாம்.. நான் சும்மா உங்களை டைவர்ட் பண்ண தான் கேட்டேன்.. கிளம்புறேன் டைம் ஆச்சு.." என்றவன் விடைபெற்றுக் கிளம்ப, ஏனோ அவன் கிளம்புகிறேன் என்றதும் வெறுமையை உணர்ந்தவள் அவ்விடத்திலே ஒருவாறு நின்று விட்டாள்.
அவனும் உள்ளே வந்த பின்பு தான் அவளை காணவில்லை என திரும்பி பார்க்க, மீண்டும் பின் வாசலை நோக்கி வேகமாக வந்தவனுக்கு அதிர்ச்சியானது.
ஏதோ யோசனையோடு தலை கவிழ்ந்து நின்றிருப்பவள் முன்பு வந்து நின்றவன், ஊஃப் என காதோரம் ஊதிய பின்பு தான் சிந்தை தெளிந்தாள்.
பார்வையிலே அவன் என்ன ஆனது என கேட்க, அவளோ ஒன்றுமில்லை என கூறினாலும் அவள் முகம் ஏதோ ஒன்றை கூறாமல் கூறியது.
"இன்னேக்கி லன்ச் வெளியே போலாமா? வேணாம்னா இன்னொரு நாள் பாத்துக்கலாம்.."
"இல்லை.. போலாம்.."
"எத்தனை மணிக்கு?"
"ஷார்ப்பா 1மணிக்கு வரேன்.."
"ம்ம்ம்.."
"வீட்டுல அப்பா அம்மா கிட்ட பெர்மிஸன் கேக்கவா?"
"இல்லை.. நான் சொல்லிக்கிறேன்.."
"சரி உள்ளே வாங்க.." என்றவன் முன்னே நடக்க, அழைத்தாள் அவனை.
"வாங்க.. போங்க வேணாம்.. வேற எப்படினாலும் கூப்பிடுங்க.."
"அப்போ வாடி.. போடி?"
"ஏதேய்ய்.." என மீண்டும் அவள் ஹை பிட்சில் கூற, அவன் தான் குபீரென சிரித்து விட்டான்.
"சும்மா கேட்டேன்.. உங்க ரியாக்சன் தெரிஞ்சுக்க.."
அவள் அடிப்பட்ட பார்வை பார்த்து முகத்தை திருப்பிக் கொள்ள, நடையை கட்டியவனை மீண்டும் அழைத்தாள் கேள்வியாக கேட்டு.
"நானும் வாடா.. போடான்னு கூப்பிடுற மாதிரி இருக்கும்.."
அதில் பன்மடங்கு ஆனந்த நர்த்தனம் கொண்டது என்னவோ அஸ்வத் இதயமே.
"எனக்கு டபுள் ஓகே.. எப்போ இருந்து ஸ்டார்ட் பண்ணுறீங்க? இப்போவே கூட ஓகே தான் எனக்கு.." என்றவன் அவளை பார்த்து கண்ணடிக்க, அதில் வெகுவாக சிவந்து போனவள் அவனை தள்ளி விட்டு உள்ளே ஓடி விட்டாள்.
தென்னைந்தோப்பில் ராசிகாவின் பெரும் அலறல் சத்தம் கேட்டு, உள்ளே ஏதோ வேலையாக இருந்த கல்யாணி பதறியடித்து வெளியே வந்தார்.
கல்யாணி அக்காட்சி கண்டு நிலைகுலைந்தவறாக, "குஷி!!" என அலறினார்.
அவளும் குஷியை மடியில் வைத்துக் கொண்டு கதற, அப்போது தான் குஷியை கடித்துச் சென்ற பாம்பை பார்த்தாள்.
"அத்..தை.. குஷி..யை.. பாம்பு.. கடிச்சிடுச்சு.. சீக்கிரம்.. யாருக்காவது போன் பண்ணுங்க.. உடனே போயாகணும்.."
அக்குழந்தையின் விழியோ சொருக, முகத்தை தட்டி தட்டி கண்ணைத் திற என்றவள், அவளை தூக்கிக் கொண்டு தெருவிற்கு வந்தாள்.
அவளுக்கும் பதட்டத்தில் என்ன முதலுதவி செய்வது என தெரியாது போக, கல்யாணியோ தலையில் அடித்துக் கொண்டு கதறியப்படி எல்லோருக்கும் போன் மூலமாக விஷயத்தை கூறினார்.
கார் டிரைவர் காரை எடுத்துக் கொண்டு பெட்ரோல் போட சென்று விட்டான். ஒரு உயிரை காப்பாற்ற அவளோ குழந்தையை கையில் ஏந்தியப்படி கதறிடும் நொடி, ஆட்டோக்காரர் ஒருவர் உதவிக்கரம் நீட்டினர்.
இருவரும் விரைந்து அரசு மருத்துவமனை வந்து சேர, பிரதீஷ் வீட்டினர் அனைவரும் அங்கு வந்து விட்டனர்.
மருத்துவர் குழந்தையை பரிசோதித்து விட்டு, குழந்தை உயிரோடு இல்லை எனக் கூற வீட்டினர் அனைவரின் கதறலும் அங்கிருந்த அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தது.
யார் உயிரையோ பறிக்க நினைத்த செயல், தன் வீட்டு இளம்பிஞ்சு உயிர் போனதையெண்ணி செய்வதறியாது குற்றவாளியாக விலகி நின்றார் சண்முகம் அவர்கள்.
ருத்ரா மற்றும் ஹரீஸ் மாரிலும் நெஞ்சிலும் அடித்து அழ, சாவித்திரி பாட்டியோ குழந்தையை வாங்கிக் கொண்டு நெஞ்சோடு இறுக அணைத்தபடி கதறியவறாக தரையில் அமர்ந்தார்.
நாமோன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கும் என்பதை அறியாத அறிவிலியாக சண்முகம் அவர்கள் திட்டமிட்ட செய்த வேலை பற்றி தெரியாது, அவர் நெஞ்சில் சாய்ந்து தாத்தா தாத்தா என கதறி அழும் ருத்ரா ஓலம் கேட்டு ஒடுங்கி போய் ஊமையாகி நின்று விட்டார்.
தேன்மழை💖
