34
உம்ம குலம் தளைச்சிடிச்சு ஐயா.. இனி ஊருக்கு நாட்டாம பண்ற உம்மையே ஆட்டி வைக்க ஆள் வர போகுது" என்று உறவுக்கார மூதாட்டி சந்தோசத்தோடு சற்குணத்திடம் கூற அவருக்கும் மகிழ்ச்சி கடலலைப் போல பொங்கியது. கையில் கிடைத்த பணத்தை எண்ணிப் பாராமல் அம்மூதாட்டியின் கரங்களில் திணித்தார் சற்குணம்.
"மறுக்காத ஆத்தா.. யேன் மனசு நிறைஞ்சு இருக்கு" என்று அவர் கூற மறுப்பு ஏதும் கூறாமல் சந்தோஷத்தோடு அந்த மூத்தாட்டியும் வாங்கி சென்றார்.
இன்னமும் கிராமப்புறங்களில் மகளின் வாரிசை விட மகனின் வாரிசை தங்கள் வாரிசு என்று நினைப்பவர்கள்தான் அதிகம். அதுவும் ஆண் பிள்ளைக்காக வரிசையாக பெண் பிள்ளைகள் பெற்று கொண்டவர்களும்.. இரண்டு மூன்று திருமணம் செய்துகொண்டவர்களும் அங்கு சர்வ சாதாரணம்!!
என்னதான் புது புது சட்டம் இயற்றி, செயற்கையாக கருவை வளரச் செய்யும் அளவிற்கு விஞ்ஞானம் வளர்ந்து இருந்தாலும் இவர்களின் இந்த அறியாமையை யாராலும் இதுவரை போக்க முடியவில்லை.
எத்தனை பெரியார் வந்தாலும் சீர் திருத்தங்கள் சில இடங்களில் சீரற்றே போகின்றன!!
மகளின் வாயிலாக அவர்களுக்கு ஒரு பேரக்குழந்தை இருந்தாலும் அது அசோகன் வீட்டு வாரிசு தானே. இங்கு வீரா மூலம் வரும் குழந்தையை அவ்வீட்டின் வாரிசு!!
ஆக குளம் தழைச்சத்து என்று பெருமிதமும் சந்தோசமும் அங்கே போட்டிபோட.. வடிவாம்பாளோ சற்று முன்பு வரை மருமகள்தான் மகனை போலீசில் காட்டிக் கொடுத்தது என்பதை எல்லாம் மறந்து பேரப்பிள்ளை பெறப்போகும் சந்தோசத்தில், பட்டியில் இருக்கும் ஆடை ஒன்றை பிடித்து உடனடியாக விருந்து சமைக்க சொன்னார்.
அனைவருக்கும் அப்போதே இனிப்பு தயாரிக்க வேலையாளிடம் உத்தரவிட்டார். இன்னொரு பக்கம் கோவிலுக்கு அன்று மாலை சிறப்பு பூஜை செய்யவும் உத்தரவிட்டார்
இப்படி பம்பரமாக சுற்றி சுற்றி வேலை செய்யும் மனைவியை பார்த்து சற்குணம் மனநிறைவோடு சிரித்துக் கொண்டார்.
வீராவின் நிலையோ நிலை கொள்ளவில்லை. அவன் ஆனந்தத்தின் உச்சியில் இருந்தான்!!
'ஒரே ஒரு வாந்தி.. அதுக்கு என்ன எல்லாம் நாம் நினைத்து விட்டோம் அவளை' என்று தனக்குத்தானே தலையில் அடித்துக்கொண்டவன் ரகசியமாக உதட்டை கடித்து சிரித்துக் கொள்ள, அவன் அருகில் வந்த தர்மாவும் ஜெகனும் அவனை கட்டிக் கொண்டனர் தங்கள் மகிழ்ச்சியை காட்ட..
பூங்கோதைக்கும் தர்மாவுக்கும் திருமணமாகி இரண்டு ஆண்டுகள் ஆகியும் குழந்தை பாக்கியம் கிட்டவில்லை. இதுவரை ஏறாத கோயில் ஆஸ்பத்திரி கிடையாது எல்லாம் யோகலட்சுமியின் கைங்கரியம் தான்!! விடாமல் எல்லா கோயிலுக்கும் பூஜை புனஸ்காரம் என்று செல்வது ஆனாலும் இன்னும் நேரம் தகையவில்லை அவர்களுக்கு.
"ஆத்தா பூங்கொடி.. மருமகள அழைச்சிட்டு வா" என்று சர்குணம் கூற, வடிவமாம்பளோ "ஐயையோ வேணாம்.. வேணாம்.. அந்தப் புள்ள தேன் வாந்தி எடுத்தது படுத்திருக்குல.. கொஞ்ச நேரம் கழிச்சு கீழ கூட்டிட்டு வரலாம்" என்று தடுத்தார் பூங்கொடியை.
"அட.. சந்தோஷமான விஷயம் கேள்விப்பட்டு பார்க்கலாம் கூட்டியார சொன்னா.. ரொம்ப தேன் செய்யுறவ.. போ போ நான் பார்த்தே ஆகணும். மருமக பொண்ண கூட்டுட்டு வா ஆத்தா" என்று சற்குணம் விடாப்படியாக நிற்க.. அருகிலிருந்து நாச்சிமுத்து "ஆத்தா வடிவு.. மாப்பிள மகனையும் மருமகளையும் ஆசிர்வாதம் பண்ண நினைக்குறாக.. அடம் பண்ணாம போய் கூட்டிட்டு வா" என்று
கூறி சிரித்தார்.
சற்குணம் முகத்திலும் அதே எண்ணம் வர பூங்கொடியும் வேகமாக தன் நாத்தனாரும் அண்ணியுமான அஸ்திராவை அழைக்க மாடிக்கு சென்றாள். அங்கே அஸ்திராவோ பிடித்து வைத்த பிள்ளையார் போல இருந்த இடத்திலேயே அமர்ந்து இருந்தாள். அவளுக்கு இப்பொழுது என்ன நினைப்பது என்றே தெரியவில்லை.
சஞ்சயனை கொன்றதற்காக வீராவை போலீஸிடம் மாட்டி விட்டதும்.. இனி இங்கிருந்து வேறு எங்காவது சென்றுவிட வேண்டும் என்று தான் அவள் மனதுக்குள் ஒரு தனி திட்டம் இருந்தது. அப்பாவும் வேண்டாம் ஆத்துக்காரனும் வேண்டாம் என்று எண்ணம்.
ஆனால் இப்போது தான் இந்த நிலையில் இருக்கிறோமே இனி அடுத்து என்ன.. என்று யோசிக்கவே பயமாக இருக்க சிலையென சமைத்திருந்தவளை உலுக்கினாள் பூங்கொடி.
"அஸ்திரா.. ஏட்டி அஸ்திரா.. என்ன தூங்கிட்டியா? உட்கார்ந்துகிட்டு புள்ளய பத்தி கனவு காணுறியா? இனி கனவுல கூட பிள்ளை தேன் வரும்.. அதனால வித விதமா கனவு காணலாம்.. இப்ப கீழ வா" என்று சிரிப்போடு கூற திருவிழாவில் காணாமல் போனவள் போல விழித்தவளை பார்த்து "என்ன ஆச்சு உடம்புக்கு? ஏதாவது செய்யுதா அஸ்திரா" என்று அவளை அருகில் நெருங்கி தொட்டுப் பார்த்தாள் பூங்கொடி.
அஸ்திராவுக்கு இந்த வீட்டில் தெரிந்து ஒரே நல்லுறவு பூங்கொடி மட்டும்தான், திருமணமாகி இவள் அசோகன் வீட்டிற்கு வந்ததிலிருந்து.. அம்பலவாணனும் அசோகனும் தனித்தனியே தான் வசிக்கின்றனர். ஆனாலும் பெண்களுக்குள் நல்ல ஒற்றுமை உண்டு. அதிலும் பூங்கொடி வடிவாம்பாள் போலவே அனைவரையும் அரவணைத்துச் செல்லும் பாங்கு. அதனால் ஒரே ஒரு நாத்தனாரை எப்பொழுதும் அவள் விட்டுக் கொடுப்பதில்லை.
"என்னாச்சு ஏதோ போலிருக்கா?" என்று அவள் தலையை ஆதரவாக தடவி அருகில் நின்றவளின் இடையை இறுக்கி கட்டிக்கொண்டாள் அஸ்திரா.
பூங்கொடிக்கும் அஸ்திராவின் மனநிலை கொஞ்சம் புரிய தான் செய்தது. ஏற்கனவே யாரிடமும் சொல்லாமல் சஞ்சயன் திடீரென்று மணந்து வந்தால் அங்கே ஏகப்பட்ட பிரச்சனைகள். வெளியே தெரியவில்லை என்றாலும் வீட்டுக்குள் இருந்த பூங்கொடிக்கும் தெரியும்தானே!!
அவ்வளவும் தீரும் நிலையில் திடீரென்று அவனது இழப்பு.. இறப்பு!! அலனுடைய இழப்பிலிருந்து இவள் மீளும் முன் தன் அண்ணனின் இந்த அதிரடி.. சற்று நேரம் கூட அவளுக்கு இடம் கொடுக்கவில்லை. அடுத்து எப்பொழுது குழந்தை.. என்று அடுத்தடுத்து அவளுக்கு மனரீதியாக அழுத்தமே என்று உணர்ந்தாள் பூங்கொடி.
"அஸ்திரா..!!" என்று மென்மையாக பூங்கொடி அழைக்க..
இடுப்பில் முகம் புதைத்திருந்தவள் முதுகு குலுங்கியதிலிருந்து அவள் அழுவதை உணர்ந்த பூங்கொடி மெதுவாக அவளது முதுகை நீவி விட்டு "என்னைய நிமிர்ந்து பாரு ஆத்தா" என்றாள் அழுத்தமாக..
"ம்ம்ம்..!!" என்று இடுப்பை அணைத்த கைகளை விலக்காமல் தலையை மட்டும் நிமிர்த்தி மேல் பார்வையாக பூங்கொடியை பார்த்தாள் அஸ்திரா. அதில் அன்னையிடம் கோபம் கொண்டு முறைத்துக்கொண்டு பார்க்கும் செல்ல பெண்ணை போலவே பூங்கொடியின் கண்களுக்கு தெரிந்தாள் அஸ்திரா.
பூங்கொடியை விட இரண்டு மூன்று வயது குறைந்தவளாக இருப்பாள். 'ஆனால் அதற்குள் அவள் பட்ட கஷ்டங்கள்.. அப்பப்பா... என்ன தான் சொத்து சுகம் இருந்தாலும் அதை தாண்டிய நிம்மதி அவள் வாழ்வில் இல்லையே.. இனியாவது வரவேண்டும்!! என் அண்ணன் மூலம் அவளுக்கு நிம்மதியான வாழ்வு மலர வேண்டும்!!' என்று மனதுக்குள் மனதார எண்ணினாள் பூங்கொடி.
"எல்லாமே மாறும் காலம் வரும்!!" என்று அவள் கன்னத்தை வருடி மெதுவாக கூறினாள்.
பூங்கொடியின் இந்த அணுகுமுறை அஸ்திராவின் மனதுக்கு விரக்தியை தந்தது. ஆனாலும் அவள் கூற்றை ஏற்றுக் கொள்ளமுடியாமல் "ஒன்னும் மாறாது.. இது எல்லாம் மாறவே மாறாது.. இது மாறாது!! என்னுடைய இந்த நிலைமை.. இந்த வூடு.. உங்க அண்ண.. ஏன் இரு ஊரு இந்த சண்டை.. எதுவுமே மாறாது!! இது எல்லாத்துக்கும் பலியாடுகள் நம்ம மாதிரி பொண்ணுக தேன்!! எல்லாத்தையும் அனுபவிக்கனும்.. இன்னும் என்னென்ன வச்சிருக்கோ காலம் எனக்கு??" என்று மீண்டும் அழகு துடித்த உதடுகளை கடித்துக்கொண்டு கூறினாள்.
"அப்படி சொல்ல கூடாது அஸ்திரா.. வெறுத்துப்போனதெல்லாம் விரும்பும் காலம் வரும்!!
வேண்டாமென்னு ஒதுக்கியவரெல்லாம் ஆசையோடு பேசும் காலம் வரும்!!
உன்னை தூக்கிப்போட்டு பந்தாடிய காலம் கொண்டாடும் காலம் வரும்!!
உன்னை குறைத்து பேசியவர்கள் எல்லாம் உனக்கு பணிந்து போகும் காலம் வரும்!!
அலட்சிய படுத்தியவர்கள் கெஞ்சும் காலம் வரும்!!
எதிர்த்து வாதாடியவர்கள் மண்டியிடும் காலம் வரும்!!
கடினமெல்லாம் சுலபமாகவும் மாறும் காலம் வரும்!!
உன்னை தொலைத்தவர்களை எல்லாம் தொலைத்து விட்டோமே என்று வருந்தும் காலம் வரும்!!
நீ ஏங்கி தவித்த வாழ்வினை கைக்கூடும் காலம் வரும்!!
நீ தேடிக்கொண்டிருந்த நிம்மதி தேடி வரும் காலம் வரும்!!
ஆனால் எல்லாமே காலத்தின் கைகளில் மட்டுமே உள்ளதென்று எண்ணாதே.. காலமானது உன்னை
சந்திக்கின்ற.. உன்னோடு பயணிக்கும் மனிதர்களின் கைகளில் கொடுத்துள்ளது. அதை ஒழுங்காக பற்றி கொள்வது இப்போது உன் கையில் உள்ளது!!" என்றாள் பூங்கொடி.
பூங்கொடி பேசப்பேச கண்களைத் திறந்து அவளைத்தான் விழிவிரித்து பார்த்துக் கொண்டிருந்தவளின் முகத்தில் சற்றே தெளிவு பிறந்தது. வார்த்தைகளுக்கு வலிமை அதிகம்!! ஒவ்வொரு வார்த்தையும் அவை நன்மையோ தீமையோ கேட்பவரின் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
சும்மாவா சொன்னார்கள் கத்தி முனையை விட பேனா முனை கூர்மை என்று!!
நாக்கு என்ற வாளெடுத்து சரியாக சுழற்றினால் பெரும் பகையும் நட்பாகும்.. நட்பும் துரோகமாகும் என்று!!
"உனக்கான நேரம் வந்திடிச்சு அஸ்திரா.. உன் மனசுல உள்ள கோபத்தை தள்ளி வைச்சு.. யோசி அஸ்திரா.. உனக்கு எல்லாம் புரியும். புரியாத பல விஷயங்கள்.. அதிலும் குறிப்பாக யேன் அண்ணன் பத்தி புரிஞ்சுப்ப!!" என்றதும் 'இவள் அண்ணனைப் பத்தி நான் ஏன் புரிந்துகொள்ள வேண்டும்? அவனுடைய நிஜமுகம் ஊர் அறியும் காலம் நெருங்கிவிட்டது" என்று மனசுக்குள் கோபத்தோடு தான் இருந்தாள் அஸ்திரா.
அதற்குள் ம்க்கும் என்று தொண்டை கணைக்கும் சத்தத்தில் இருவரும் திரும்பி பார்க்க.. அங்கே கதவு நிலையில் சாய்ந்துகொண்டு பின்னால் கைகளை கட்டிக்கொண்டு அஸ்திராவைத்தான் இமை தட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தான் வீரா. அவன் கண்களில் காதலோடு நேசமும் பாசமும் சேர்ந்து வழிந்தது.
"ஐயா கூப்பிட்டாக.. சீக்கிரமா ரெண்டு பேரும் கீழ வாங்க" என்று இங்கிதமாக விலகி சென்றாள் பூங்கொடி.
அவள் மேலிருந்து கண்களை திறக்காமலேயே மெல்ல அடியெடுத்து அவளை நெருங்கி சென்றான் வீரா. என்னதான் பூங்கொடி அவளுக்கு நிறைய அறிவுரைகளை வழங்கினாலும் சஞ்சயன் கொலையிலிருந்து வீராவை பிரித்து வைக்க அவளால் முடியவில்லை
