வண்டியின் எதிரே விழுந்த ஆட்டுக்குட்டியில், சதாசிவம் கையில் இருந்து விழுந்த அஸ்தி மண்முட்டி உடைந்தது ராஜீவ் மற்றும் சண்முகம் அவர்களுக்கு தெரியாது. கையில் இருந்த முட்டி கீழே விழுந்து உடைந்ததில் அவரோ சுற்றி நடப்பதை அறியாது, பதைபதைத்து இருந்தார்.
ராஜீவ் என்ன ஏதேன காரை விட்டு இறங்கி காண, ஆட்டுக்குட்டி துடிதுடிக்க உயிரை விட்டிருந்தது. அதனது சாவை கண்ட இருவர் முகத்திலும் ஈயாடவில்லை. ஆனால், சண்முகம் ஐயாவின் எண்ணம் முழுக்க அன்றைய கன்றுக்குட்டி மறைவை நோக்கி பயணித்தது.
"தாத்தா.. என்ன இப்படி ஆகிடுச்சு?"
அவரோ அவனது வார்த்தை செவிதனில் விழாத நிலையில், உறைந்திருந்தார்.
"சதாசிவா.. நீ மட்டும் போய் அஸ்தியை கரைச்சுட்டு வா.."
ராஜீவ் விழிகள் இடுங்க தாத்தாவை ஏறிட்டான். அவரது பார்வை ஆட்டுக்குட்டி மீதே படிந்திருந்தது.
மகனை மீண்டும் உரக்க அழைத்ததில், தந்தையின் குரலுக்கு நடுங்கி போய் பதிலளித்தார். அவரோ, அஸ்தியை நீயே கரைத்து வா எனக் கூற சாதாசிவம் வெலவெலத்து போனார்.
"தாத்தா.. ஏன்.. இப்போ.. பெரியப்பாவா.." என ராஜீவ் ஏதோ கூற வந்தவனை கூட, உள்ளங்கை உயர்த்தி அவன் வாயடைத்து விட்டார்.
அஸ்தியே இங்கு சிதறிக் கிடக்க, எப்படி கரைப்பது என பதறியவர்.. அதை ஒன்று சேர்த்து அள்ளிக்கொண்டு பேப்பரில் வைத்து, துணி போட்டு மூடிக்கொண்டு கீழே இறங்கினார்.
சண்முகம் அவர்கள் மகனை வேகமாக சென்று வா என சமிக்ஞை செய்ய, அவரோ விரைந்து நடந்தார். இருவரும் இறந்த ஆட்டுகுட்டியை பார்த்துக் கொண்டு இருக்க, அவரும் மண்முட்டி உடைந்து கீழே விழுந்ததை கூறாது மறைத்து விட்டார்.
சண்முகம் அவர்கள், மகனை தனித்து அஸ்தியை கரைக்க அனுப்பி வைக்க காரணம் எல்லாம் அவர் உயிருக்கு வைத்த விஷபரீட்சை தான். அவர் சில நிமிடங்களுக்கு பின் அஸ்தியை கரைத்து குளித்து விட்டு திரும்பி வர, அவரிடம் நிம்மதி பெருமூச்சு.
ஆனால், இந்த ஆட்டுக்குட்டி மறைவு யாரை உணர்த்துகிறது என்பது மட்டும் அவருக்கு புரியவில்லை. பாவம் ராஜீவ் தான் அப்பாவின் அஸ்தியை கூட கரைக்க முடியாத பாவியாகி விட்டோமே என்னும் ரீதியில், ஆற்றாமையாக தாத்தாவை ஏறிட்டான்.
"ராஜீவ்.. நான் சொன்னா எல்லாத்துக்கும் ஒரு காரணம் இருக்கும்.. நீ கண்டதை யோசிக்காம வண்டியை வீட்டுக்கு விடு.."
அவனுக்கோ விழிகளில் நீர் கோர்த்தது. தனது தாத்தாவே தனக்கான உரிமையை வஞ்சக எண்ணத்தோடு தட்டி பறித்து விட்டாரே என வேதனை கொண்டவனாக அவரை முறைக்க, "நான் தான் சொல்லுறேன்ல.. காரை எடு டா.." என்றார் அதட்டலாக.
அவர்களும் சிறிது நேரத்தில் வீடு வந்து சேர்ந்தனர். வந்தவர்களிடம் எல்லோரும் அஸ்தி கரைத்தது பற்றி கேட்க, எவ்வித சலனமற்று பதில் கூறினார் சண்முகம் அவர்கள். ஆனால், தனது அப்பாவின் அஸ்தியை கரைக்க விடாது செய்த செயலை எண்ணி ராஜீவ் கடுங்கோவத்தோடு அறை நோக்கி சென்று விட்டான்.
அடுத்தபடியாக அவருக்கு தழுகையிட்டு சாமி கும்பிட அனைவரும் ஆயத்தமாகி வந்திட, சதாசிவம் அவர்களுக்கு நெருடல் உண்டானது. ஆட்டுக்குட்டி விழுந்தது, அஸ்தி உடைந்தது என அனைத்தையும் எண்ணி நொந்தவர் தனது அப்பாவிடம் தனியே பேச அழைத்து சென்றார்.
சண்முகம் அவர்களுக்கு ஒரு விடயம் மட்டும் நன்கு புரிந்து போனது. இது இயற்கையான மறைவல்ல என்று. அன்றும் இதே நிகழ்வு. ஒரு உயிர் பறி போய் விட்டது. அந்த அஸ்தியை கரைக்க மகனை தனியே அனுப்பியது, ஒரு வேளை சதாசிவம் அவர்களின் உயிருக்கான ஆபத்தா என அறிய தான்.
ஆனால், இப்போது வரை இது யாருக்கு கண்டம் என அவரும் யோசித்திட, இறுதியில் ராஜீவ் மற்றும் அவரை பற்றிய சிந்தனை தான் வலுத்தது. ஒருவேளை பேரனுக்கு எதுவும் ஆகிவிட்டால் என்ன செய்வது என பதறியவர், மகனிடம் ஏதோ பேச வர அதற்கு முன் சதாசிவமே மனதில் ஓடும் எண்ணத்தை போட்டுடைத்தார்.
மெஹபூபா மால்(கோவை)
அந்த மாலில் ஆடவர் பிரிவில் நண்பனோடு சேர்ந்து டி-ஷர்ட் பர்ச்சேஸ் செய்து கொண்டிருந்தான் அஸ்வத். நண்பன் அது இதென கூறி அவனை ஒருமணி நேரமாக சுத்தலில் விட்டது தான் மிச்சம்.
பொறுமையிழந்தவன், ஏதோ ஒன்றிரண்டை எடுத்துக் கொண்டு கீழே இறங்கினான் பில் போட்டு முடித்து. எஸ்கலேட்டரில் அப்போது தான் மேலே ஏறி வந்து கொண்டிருப்பவளை ஒருநொடி ஆழ்ந்து பார்த்து விட்டு திரும்பிக் கொண்டான்.
அவள் அவனை கவனிக்கவில்லை. எங்கோ பார்த்தப்படி நின்றிருந்தவளிடம் பேச உந்தியது எண்ணங்கள். இல்லை.. இல்லை.. அக்கேள்வியை கேட்டிட, துடித்தது அவனது உதடுகள்
அவனும் அவளை அழைக்க, பட்டென திரும்பி பார்த்தவள் இதழில் 40mm புன்னகை. அதில் மேலும் அவனுக்கு ஆர்வம் வலுக்க, "கொஞ்சம் பேசணும்.." என சத்தமாக அவள் காதில் விழ வேண்டுமென கூறியதில், சுற்றியிருந்தவர்கள் தான் அவனை ஒருவாறு பார்த்து நகைத்தனர்.
ஏன் அவனது ஜொல்லை எண்ணி சிலர்.. பிருந்தாவிடம், "போய் பேசுங்க.. உங்க ஆளுக்கு உங்க கிட்ட பேசாம இருக்க முடியல.." என நக்கலடிக்க, அவளுக்கோ என்னவோ போல் ஆனது.
அவன் மீண்டும் மேலேறி வந்தான் அவளுக்காக. அவளிடம் கேட்க நினைத்த கேள்வியை கேட்டிட..
வந்தவன் எப்படி ஆரம்பிப்பது என தெரியாது, தனியாகவா வந்தாய் என கேட்க; அவளோ உதட்டை சுளித்து முறைத்தாள்.
"நான் என்ன பத்து கார்ட்ஸ் கூடவா வந்தேன்? தனியா வந்ததை பாத்துட்டும் இப்படி கேக்கலாமா?"
"இல்லை.. சும்மா.."
"என்ன சும்மா? ஒரு பொண்ணு தனியா வந்துடக் கூடாதே.. உடனே.." என்றவள் அவனை ஒருவாறு மீண்டும் முறைக்க, அவன் தான் விழிகளை சுருக்கி மன்னிப்பை யாசித்தான்.
அதில் சிரித்தவள், "சரி சொல்லுங்க.. என்ன பேசணும்? எல்லாரும் என்னை கிண்டல் பண்ணுறளவா பேசணும்ன்னு சொல்லுவீங்க?" என்றவள் கையை கட்டிக் கொண்டு ஸ்டைலாக நிற்க, அவனுள் உண்டான தடுமாற்றம் விழிகளில் தாண்டவமாடியது.
"பிருந்தா.. அது.. அம்மா.."
"என்ன அம்மா? சொல்லுங்க..".
"இல்லை நான் ஒரு விஷயம் கேள்விப்பட்டேன்.."
"என்ன விஷயம்?"
"அப்படி காஃபி ஷாப் போய் பேசலாமா?" என்றவனை, ஆழம் பார்க்கும் பார்வை பார்த்தாள் பிருந்தா.
"ம்ம்ம்.. வாங்க.."
இரண்டு கோல்ட் காபி விட்டம் பார்த்து சிரித்தது. அவன் முகத்திலோ பதற்றம். அவளிடமோ ஆயாசம் குடிகொண்டிருந்தது.
"சாப்பிடலையா அஸ்வத்.. இப்படி சைலன்ட்டா இருக்கீங்க?"
"இல்லை பிருந்தா அம்மா என்கிட்டே ஒன்னு சொன்னாங்க.. அதான் எப்படி கேக்கன்னு தெரியல.."
அவனது முகத்தில் தெரிந்த பதட்டத்தை பார்த்தவளுக்கு சிரிப்பு வர, "ரிலாக்ஸ் பண்ண சில் பண்ணுங்க.." என்றாள் காஃபி கப்பை விழியசைவில் சுட்டிக்காட்டி.
கையில் கப்பை எடுத்தவன் எப்படியோ திணறி கேட்டேன் விட்டான்.
"நீங்க.. என்னை தவிர வேற யாரையும் மேரேஜ் பண்ண போறதில்லைன்னு உங்க அப்பா அம்மா கிட்ட சொன்னீங்களா? அதுனால வீட்டுல அம்மா.. ரெம்ப.. என்னை.." என அடுத்து கூறாது தடுமாற, அவனது வெறுப்பை புரிந்து கொண்டவள் கலகலவென சிரித்தாள்.
"அது சும்மா நான் சொன்ன பில்டப்.. என் அப்பா மேரேஜ்ன்னு சொல்லுறாரு.. மணமேடை வரை போய் கல்யாணம் நின்னு போச்சுன்னு அக்கம் பக்கத்தில சொல்லவும் எவன் வந்தாலும் ஓடிடுறான்..
அதான் எனக்கு வேற வழி தெரியாம, உங்க மேல இருக்க நம்பிக்கையில உங்களை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொன்னேன்..
நீங்க தான் எப்படியும் மனசு மாற மாட்டீங்கன்னு தெரியுமே.. தப்பிக்க வேற வழி தெரியல இப்போதைக்கு..
அதுவும், என் அப்பா கொஞ்ச நாள் மாப்பிள்ளை பாக்குறதுக்கு ரெஸ்ட் குடுப்பாருன்னு சொன்னேன். வேற ஒண்ணுமில்லை அஸ்வத். நீங்க கன்ஃபியூஸ் ஆக வேணாம்..
நீங்க ரெம்ப ஸ்ட்ராங்ன்னு எனக்கு மட்டும் தானே தெரியும். அதுனால, அவர் கொஞ்ச நாள்ல இதை எப்படியும் மறந்துடுவார். ஸாரி.. நான் தப்பிக்க இப்படி சொல்லிட்டேன்.." என்றவள் காஃபியை ஒரு மிடறு பருகினாள்.
அவனோ யோசனையில் எங்கோ பார்வை பதித்திருந்தான்.
"என்ன அஸ்வத் நான் எதுவும் தப்பா சொல்லிட்டேனா?"
"ஆங்.. அதெல்லாம்.. இல்லை.. நானும் என் அம்மா கேட்டதுக்கு என்னோட பதிலை சொல்லிட்டேன்.." என்றவன் அவளை விழி வெட்டாமல் பார்த்தான்.
அதில் சிறு குறுகுறுப்பை உணர்ந்தவளாக, சட்டென முகத்தை திருப்பிக் கொண்டாள் வஞ்சி.
"என்ன சொன்னேன்னு கேக்க மாட்டீங்களா பிருந்தா?"
"ம்ம்ம்.. என்ன சொல்லிருப்பீங்க! வழக்கம் போல எதையாவது தூக்கி போட்டு உடைக்க பாத்தீங்களா?"
"ஹா.. ஹா.. நெவர்.."
"தென் என்ன சொன்னீங்க?" என்றவள் அசட்டையாக கேட்டுக்கொண்டே, இறுதி மிடறு காஃபியை பருகினாள்.
அவன் விழிகளிலோ கூடுதல் பளபளப்பு. அதே நொடி தடித்த இதழில் வசீகர முறுவல்.
"எனக்கு ஓகேன்னு சொல்லிட்டேன்.."
"வாட்!! ஓகேயா?"
எஸ் என்றான் தலையசைப்பாக. அவளிடம் பேரமைதி. அதனையும் புதிதாக ரசித்தபடி, "இனி அடிக்கடி மீட் பண்ணி கோல்ட் காஃபி சாப்பிடுற மாதிரி இருக்கும்.." என்றவன் விழிகளை சிமிட்டி நகன்று செல்ல, அவளுள் உண்டான படபடப்பிற்கு அளவே இல்லை.
இரண்டு நாட்களுக்கு பின்..
அன்றைய தினம் அப்பாவும், மகனும் பேசி தீர்மானித்த விடயம் ஒரு முடிவுக்கு வந்து, கேரள பணிக்கர் ஒருவரை அழைத்து சோழி பிரசன்னம் பார்க்கும்படி அமைந்தது.
எல்லோரும் அவர் வருகைக்கு தான் வாயிலை நோக்கி காத்திருந்தனர். கிறீச்சிட்டு வாசலில் கார் வந்து நிற்க, சதாசிவம் வேகமாக வாசல் நோக்கி ஓடினார். அவரை மரியாதையோடு வரவேற்க.
கழுத்தில் ருத்ராட்ச மாலை மற்றும் கருங்காலி மாலை.. நெற்றியில் சந்தனத்தில் குழைத்து பூசிய பட்டை.. அதன் நடுவே கருப்பு மை பொட்டு.. முதுகை போர்த்தியிருந்த வெண்ணிற துண்டு.. காவி வேஷ்டி என ஆளே ஒரு தினுசாக தான் வந்திறங்கினார் மணிக்கன் பணிக்கர்.
வந்தவரிடம் வீட்டினரை அறிமுகம் செய்து வைத்து, நடப்பு விஷயத்தை சண்முகம் அவர்கள் விளக்கி கூறும் முன், மணிக்கன் இஷ்ட்ட தெய்வத்தை வணங்கி சோழியை உருட்டினார்.
விழுந்தது முதலிலே எட்டு என்ற எண். அதில் எல்லோரையும் ஒருவாறு பார்த்து விட்டு தலையை வலமும் இடமும் அசைத்தார்.
மீண்டும் சோழியை உருட்டினார் மணிக்கன். விழுந்தது ஆறு என்ற எண்.
ஆழ்ந்து மனதில் தியானித்து விட்டு சோழியை உருட்ட, விழுந்தது பன்னிரண்டு.
எல்லோர் முகத்திலும் பயத்தின் சாயல். அவர்கள் நினைத்தது போலவே, அவரும் இடியை இறக்கி விட்டார்.
"கண்டம் இருக்கு சண்முகா.. ஒரு மறிச்ச பிரேதம், இரத்த பலி வேண்டி வாசலில் நிற்குனு.."
எல்லோரும் ஐயோ.. அம்மா.. கடவுளே என அலற, அவர் மீண்டும் தொடர்ந்தார்.
"இப்போல் சம்பவிச்சது ஒரு மரணமல்ல. இது தொடக்கமானு. குல தெய்வமும் விலகி போய் நின்னு. பலி ஒருபுறம் பாவம் ஒருபுறம்ன்னு அடுத்தே மரணம் நடந்தாலும் ஆச்சரியப்பட ஒன்னுல்லா.."
மணிக்கன் கூறிய நொடி அனைவரின் இதயமும் ஒருக்கணம் நின்றே துடித்தது.
"ஐயா.. இதுக்கு பரிகாரம் ஏதாவது இருக்கா? என் புள்ளை குட்டி எல்லாம் நல்லாருக்கணும்.. காப்பாத்துங்க.." என சாவித்திரி பாட்டி கதற, அனைத்து பெண்களும் அதையே வழிமொழிந்து அழுவது போல் அவரை ஏறிட்டனர்.
"அதுக்கான வாய்ப்பு குறைச்சு தான் உண்டு சண்முகா.. நிச்சயம் ரெண்டு ஜீவனிண்ட உயிர் பறி போனாலும், ஆச்சரியப்படான்னு ஒன்னுல்லா.."
ஆளாளுக்கு பயத்தில் அழுது கதற, கல்யாணி யாருக்கு கண்டம் என்றும், ஆணா? பெண்ணா? என கேட்டார்.
"நிச்சயம் ஒரு பெண்ணுக்கு கண்டம் உண்டு.. இப்போல் நீங்கள் கேட்ட சமயம் வச்சு பார்த்தால், ஸ்த்ரீ தான் வருது.. இது முன் செய்த ஒரு பாவ செயலால் இப்போல், தீர்க்க வேண்டிய பலி கணக்காக நடக்குன்னு..
யாரு ஒன்னும் பேடிக்க வேணாம்.. ஒரு விடயம் மாத்தரம் ஞான் பரயான்.. குல தெய்வத்துக்கு பூஜை செய்யவும் இப்போல் முடியாத நேரமாகி போய்..
எல்லாவரும் தோஷத்தில் உண்டு.. ஒரு திங்கள் கழியவும், மறிச்ச தெய்வத்தை மனம் குளிர பூஜை செய்தால் மாத்தரமே, விடியல் கிட்டும். அது ஒன்னு இப்போல் எல்லாவரையும் ரட்சிக்கும்.." என அவர் அடுக்கடுக்காக கூறிட, எல்லோரும் நடுநடுங்கி போயினர்.
சில மணி நேரங்களுக்கு பின் வீடு வந்த சேர்ந்த ராசிகாவிற்கு, பணிக்கர் வந்து போன விடயம் அத்தையின் மூலம் தெரிய வந்தது. அதன் பின் அவள் நேராக காண வந்தது என்னவோ சண்முகம் அவர்களை தான்.
அவர் நெற்றி ரேகை தெரிய, பலத்த யோசனையில் அறையில் உள்ள சாய்வு நாற்காலியில் எங்கோ வெறித்தபடி அமர்ந்திருந்தார். மரியாதை நிமித்தமாக கதவை தட்டி உள்ளே செல்ல நினைத்த கையை கூட, இம்மரியாதை இவருக்கு தேவை தானா என மூளை ஒருபுறம் நல்யோசனையை எடுத்துக் கூற விடுவிடுவென உள்ளே நுழைந்தாள்.
கண் முன் வந்து நின்றவளை, ஏதோ ஒரு புழு போல் அவர் பார்க்க..
"பலி ஒரு பக்கம்.. பாவ கணக்கு யாரு பக்கமோன்னு இப்போ நடக்குது.. இதை பாத்து உங்களுக்கு வயிறும், மனசு நிறைஞ்சுடுச்சா?"
அவர் பதிலே பேசாது, நாற்காலியில் ஆடியப்படி அவளையே வெறித்திருந்தார்.
"முதல மகனை கொன்னாச்சு.. இனி யாரு சாவுக்கு காரணமாக போறீங்க?" என அவள் குத்தலாக கேட்ட நொடி விருட்டென எழுந்து நின்றார்.
"அதானே அடியாள் வேலை பாத்தவருக்கு, மகன் மகள் யார் செத்தாலும் எப்படி ஈவு இரக்கம் வரும்? சந்தோஷம் தானே வரும்.."
"ஹேய்.. வாயை மூடு நாயே.. ரொம்ப பேசாதே.. என் முன்னாடி நின்னு பேச கூட ஒரு தகுதி வேணும்.. உனக்கு அது துளி கூட இல்லை.."
"ஆமா.. தரங்கெட்டவங்க முன்னாடி பேச அதே தகுதி வேணும்ல.."
அவரோ அவளை அடிக்க பாய்வது போல் எழுந்து நின்றார்.
"இந்த வீட்டுல உங்களை தவிர யாரு உயிராவது போனது.. நான் மனுஷியா இருக்க மாட்டேன்.. அதுனால, நீங்களே எங்க எல்லாருக்கும் நிம்மதி தந்துட்டு சொர்க்கத்துக்கு.. ஸாரி நரகத்துக்கு போய் சேருங்க.." என்றாள் ரௌத்திரம் கொண்ட விழிகளில்.
அதில் அவளை இரண்டாம் முறையாக ஓங்கி அறைய நினைத்த கையை தடுத்தவள், "மறுபடி சொல்லுறேன்.. நீங்க செய்ஞ்ச தப்பை மறைச்சுட்டு நல்லவன் வேஷம் போடுறீங்க.
இனி யாரு உயிராவது போனது.. நான் அதை எல்லாருக்கும் நிரூபிக்கிற விதத்துல நிரூபிப்பேன்.. அதுவும் ஆதாரத்தோட.." என ஆங்காரமாக கூறி கடந்தவள் மீது, அடங்கா சினம் வலுத்ததில் அவளை கத்தியின்றி ரத்தமின்றி கொலை செய்ய தீர்மானித்து விட்டார்.
சிலரது மரணம் அவர்களுக்கு பாடமாகவும், மீளாத்துயராக மறைவுள்ளது என்பதை அறியாது. ராசிகா தனது ஆபத்தை எதிர்கொள்வாளா?
தேன்மழை💖💖
