தேன்மழை 💞 - (38)

 

(@priyadinesh)
Member Moderator
Joined: 4 months ago
Messages: 44
Thread starter  

"ஐயோ.. என்னங்க.. முருகா.." என்ற பலரது குரல், சண்முகம் அவர்கள் காதில் விழுந்த நொடி அவர் நெஞ்சடைத்து நிற்க..

 

"தாத்தா.. சித்தப்பா பேச்சு மூச்சு இல்லாம இருக்காரு.. சீக்கிரம் வங்க.." என்று அலறியவண்ணம் போனை வைத்தாள் ருத்ரா.

 

அந்நொடியே அவர் அரக்க பறக்க பதறியடித்து வெளியேறிட, ராசிகாவிடம் தவறு செய்ததற்கு கிடைத்த தண்டனையை எண்ணி நிம்மதி பெருமூச்சு.

 

இங்கு வீடே கலவரமாக மாறியிருந்தது. இப்போது தான், புதுமனை கட்டி கிரஹப்பிரவேஷம் நடந்த மகிழ்ச்சிக் கடலில் மிதந்தனர். அதனுள் துக்க வீடாக மாறி விட்டது. முருகன் அவர்கள் உயிர் பறிக்கப்பட்டு.

 

வீட்டினுள் பலரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் கூடி விட்டனர். உறக்கத்திலேயே முருகன் உயிர் விட்டதாக, அருகாமையில் இருந்த அரசு மருத்துவர் நாடி பார்த்து கூறிய நொடி முதல் எவராலும் அவரது இறப்பை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

 

வெளியே சென்றிருந்த மகன், தந்தை, உடன்பிறப்பு உட்பட எல்லோரும் வீடு வந்து சேர்ந்தனர். எல்லோருக்கும் விவரம் அறிந்தபின் உண்டான முதல் இழப்பு என்பதால், எவராலும் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

 

ராஜீவ் தந்தையின் மீது விழுந்து கதறி அழ, மனைவி தெய்வானை ஒருபக்கம் தலையில் அடித்துக் கொண்டு கதறி தவித்தார். அக்கம் பக்கத்தினரோ, அடுத்த கட்ட நடவடிக்கையை பாருங்கள் என சாவித்திரி அம்மாவிடம் கூறி கடக்க, பெற்ற அன்னை மனம் தான் எதனையும் செய்யும் திடமில்லை.

 

எத்தனை வயதானாலும், அவரை பொறுத்தமட்டில் விவரம் தெரியாத பிள்ளையாக தான் இருவரையும் நினைத்தார். அதில் இன்று ஒன்று உயிர் துறந்திட, யாரை தேற்றுவது என அறியாதவர் ஒரு மூலையில் அமர்ந்து மகனது பெயரைக் கூறி கதறும் நேரம் ராசிகா உள்ளே நுழைந்தாள்.

 

அவரிடம் சவலாக பேசியவள் விழிகளே அத்தனை பேரின் கதறலையும், கண்ணீரையும் பார்த்து கலங்கியது. பிரதீஷ் விழிகளிலும் நீர்த்துளி ஊற்றெடுக்க, ராஜீவை ஆதூரமாக அணைத்துக் கொண்டான்.

 

என்ன தான் தவறு செய்திருந்தாலும், ஒரு உயிர் சென்று விட்டதல்லவா? அதை எவர் ஈடு செய்ய முடியும்? அவரை எவராலும் உயிர்ப்பிக்க முடியாதல்லவா?

 

இதே யோசனையில் இடி விழுந்தாற் போல் தேங்கி நின்றவள், யாரையும் சமன் செய்யவில்லை. மாறாக, பிரதீஷ் கையை இறுக்கமாக பற்றிக் கொண்டாள். அவனுக்கும் இது வீட்டில் நடந்த மிகப்பெரிய துக்கம் என்பதால் என்ன செய்வதென புரியவில்லை.

 

ஆனால், அக்கம் பக்கத்தினர் சடலத்தை குளிப்பாட்டி, ஐஸ் பெட்டியில் வைத்திட உதவி செய்ய; உற்றார் உறவினர்களுக்கு தகவல் சொல்லப்பட்டது.

 

சில மணி நேரங்களுக்கு பின்..

வீட்டை நிறைத்திருந்த அழுகுரல்.. யாவரின் முகத்திலும் துக்கம்.. இதையெல்லாம் கண்டபடி இறங்கிய சுமித்ராவை, ஓடிவந்து கட்டிக்கொண்டார் சாவித்திரி பாட்டி.

 

பெற்ற அன்னை மாரிலும், வயிற்றிலும் அடித்து அழ; பொறுப்பில்லாத வயோதிக தந்தையை ராசிகா தீயாக பார்த்தாள். தான் வழி மாறி சென்றதும் இல்லாது, மகனை பலி குடுத்த தந்தையை எண்ணி உண்மையறிந்த அவளுக்குள் நெருப்பின் கனல்.

 

பிரதீஷ் கனவில் ஒவ்வொரு முறை ஏதோ அசம்பாவிதம் நடப்பது போல் வர, அனைத்திற்கும் முட்டுக்கட்டையாக அக்காரியத்தை ஏதேனும் செய்து கெடுத்து விடுவான்.

 

சண்முகம் கேரளாவில் இருந்த போது நெருங்கிய நண்பர் ஒருவரோடு கொடுக்கல் வாங்கலில் பிரச்சனை வந்து அடிதடியில் வந்து நின்று சண்முகம் ஐயா உயிர் போவது போல் கனவு.

 

சண்முகம் ஐயா நண்பரை அழைத்து பேசியவன், வாங்கிய கடனுக்கு அவன் சிறு பண உதவி செய்து தாத்தாவிடம் திருப்பித் தருமாறு கூறினான். அவர் முதலில் வாங்க மறுக்க, பின்பு அரை மனதாக ஏற்றுக் கொண்டு கடனை செட்டில் செய்ததில் பிரச்சனை சுமூகமாக முடிந்தது.

 

இரண்டாவது முறை பாட்டி போன் செய்து அவருக்கு விபத்து என கூறுவது போல் கனவு கண்டவன், தீவிரமாக யோசித்து இருவரையும் புனித யாத்திரை செல்ல வட இந்தியாவிற்கு ஒரு வாரம் அனுப்பி வைத்தான்.

 

மாலதி விடயத்தில் பேரனை பிடிக்காது தான் ஐயாவிற்கு. பேரன் தங்களை ஊர் சுற்ற அனுப்பி வைக்கிறான் என எண்ணி மெச்சியவருக்கு, பிரதீஷ் மீது தனி பாசம் பொங்கியது.

 

மூன்றாவது முறை நெஞ்சை பிடித்துக் கொண்டு படுப்பது போல் கனவு வர, அக்கனவு கண்ட நாள் முதல் மிக விழிப்போடு இருந்தான்.

 

என்றேனும் பாட்டியிடமிருந்து போன் வந்து விடுமோ எண்ணியவனுக்கு உண்மையில் ஒருநாள் போனும் வர, பதறி துடித்தான். யாருக்காகவும் துடிக்காதவன், பாட்டியின் கண்ணீருக்கு மனமிறங்கி ஆஞ்சியோ செய்ய அத்தனை உதவி புரிந்தான்.

 

பழி தீர்க்க எண்ணிய ஆன்மாவிற்கு அத்தனை கோவமும், பிரதீஷ் பக்கம் திரும்பியது. கேரளாவில் இருந்ததால், அவருக்கு நடந்ததை மட்டும் கண் கூடாக பார்த்திருந்தான். ஆனால், அவன் அப்பா சித்தப்பாவிற்கு நடந்த இடற்பாடுகள் அவன் அறியாத ஒன்று.

 

போன் பேசினால் தானே அவன் அறிந்து கொள்ள! யாரோ செய்த செயலுக்கு, இவன் குறுக்கே வந்து நிற்பதறிந்து மொத்த கோவமும் அவன் பக்கம் திரும்பியது. 

 

சில வேண்டுதலுக்கு சக்தி உண்டு என்பது போல், எதுவும் தீங்கு செய்யாத மகனுக்கு அன்னை எதுவும் நேரக் கூடாது என வேண்டிக் கொள்ள அவனுக்கு எதுவும் நிகழவில்லை. மற்றொரு புறம் அவன் கழுத்தில் உள்ள மாலை.

 

தாமரை மாலை.. அவனது பாட்டி, அதாவது சண்முகம் ஐயாவின் முதல் மனைவிக்கு குழந்தை இல்லை.. சிறு வயது முதல் ஆன்மிகம், கடவுள் பக்தி என இருந்தவருக்கு வீட்டில் கட்டாயத்தின் பேரில் திருமணம் நடந்து முடிந்தது..

 

அதை திருமணம் முடிந்த இரவே அவர் கணவரிடம் கூற, சண்முகம் அவர்களிடம் பேரதிர்ச்சி. அதுவும் தான் குறிப்பிட்ட நாளில் மரணித்து விடுவதாக கூறியவரை அவரால் நம்ப முடியவில்லை. அதே போல் அவர் மரணமும் நிகழ்ந்தது.

 

திருமணம் முடிந்தாலும், கணவன் மனைவியாக வாழாத அவர் வாழ்க்கையில் இரண்டாவதாக வந்த சாவித்திரி பாட்டி தான் அனைத்தையும் பூர்த்தி செய்தார். அவரது மரணத்திற்கு பின், மனைவியையும் தெய்வமாக வழிபட துவங்கி விட்டார்.

 

இறக்கும் முன்பே, சாவித்திரி பாட்டியிடம் இறை நாமம் சொல்லி உருட்டிய மாலையை குடுத்து சென்றார். அதை ஒரு பொருட்டாக கருதாது அவர் மூலையில் போட, அது பிரதீஷ் கையில் கிடைத்தது. அன்றிலிருந்து அவன் மாலையை வைத்துக் கொண்டு யாருடையது என தேட, அது அவன் பாட்டிக்கு சொந்தமானது என அறிந்த பின்பு அத்தனை நெகிழ்ச்சி.

 

அதுவும் அவன் வீட்டை விட்டு வெளியேறும் சில நாளுக்கு முன்பு தான் கையில் கிடைத்தது. அது கையில் கிடைத்ததில் இருந்து அவனுக்குள் பெருமாற்றம். அதன் பின்பு தான் நடப்பதை முன்கூட்டியே அறிந்து கொண்டான். அப்படி அறிந்து கொண்டவன் சண்முகம் உயிரை காப்பாற்ற, அது அவன் உயிரை குடிக்க தீர்மானித்து விட்டது.

 

இன்று கூட அவன் கழுத்தில் அணிந்திருக்கும் மாலை ராசிகாவை எண்ணியே. கனவில் மனைவி தன் இறப்பை எண்ணி கதறி அழுதது நடந்து விடுமோ என்னும் பயமே! அவன் கனவு பலிக்கிறதா? இல்லையா? என்பது அவனே அறியாத ஒன்று.

 

ராசிகாவே அவ்வீட்டில் தங்கியதால் தான், அவர்கள் செய்த அக்கிரத்தை அறிந்து கொண்டாள். முதல் மரணம் முருகன் அவர்களுடையது என அறிந்து கொண்டவள், இரண்டாவது மரணம் யாருடையது என அறியவில்லை.

 

முருகனது இறுதிச்சடங்கு அனைத்தும் நடந்து முடிந்தது. வீட்டில் எல்லோரிடமும் நிறைந்திருந்த கண்ணீரை உணர்ச்சி துடைத்த முகத்தோடு கண்டாள். எப்படிப்பட்ட கல் நெஞ்சத்தையும் கரைக்கக் கூடியது, சிலரது கண்ணீர் குரல். அவளுக்கும் கண்ணீர் முன்னுக்கு வர, தனியே சென்றாள்.

 

இறந்தவர் உடல் மயானம் சென்றதும் மூன்று நாட்கள் அவர் நினைவு பெரிதாக  பாதித்திருக்க, அடுத்து கறி சமைத்து விருந்து போடுவதிலும், உறவினர் வருகையிலும் சற்று மனம் மாறியிருந்தது. ஆனால், எவரின் மனமும் அப்பாதிப்பில் இருந்து வெளிவரவில்லை.

 

அதன் பின் வந்த நாட்களில் அவரவர் வேலைக்கு திரும்பியிருக்க, இடைப்பட்ட நாளில் வீட்டினரை சந்திக்க கௌதமனும் ராணியும் வந்தனர். ஒப்புக்கு பேசும் மகளை கண்ட இருவரும் விரக்தியாக பார்க்க, எல்லாம் கவனித்துக் கொண்டிருந்த கல்யாணி அவர்கள் மருமகளை அழைத்து அறிவுரை கூறினார்.

 

"உங்களுக்காக பேசுறேன் அத்தை.. எனக்கு என்னமோ நெருடலாவே இருக்கு பேச.."

 

"அப்படி சொல்லாதே மா.. இந்த நொடி மட்டும் தான் நிஜம்.. அடுத்த நிமிஷம் நீயே நினைச்சாக் கூட கடந்து போன ஒவ்வொரு நொடியையும், நாளையும் நாம வாழ முடியாது.. போய் அப்பா, அம்மா கிட்ட பேசு.." என்றவர் மருமகளிடம் டீயை குடுத்து அனுப்ப, பெற்றவர்கள் இருவர் விழிகளிலும் வலியின் சாயல்.

 

"நல்லாருக்கயா ராசி மா?"

 

"ம்ம்.. நல்லாருக்கேன் மா.."

 

"மாப்பிளை எங்க மா?"

 

"ஊருக்கு போய்ட்டாரு மா. பதினாறாம் நாள் காரியத்துக்கு வருவாரு.." என்று வாய் திறந்து இயல்பாக பேசிய மகளை கண்டவருக்குள் நெகிழ்ச்சி ஆர்ப்பரிக்க, எழுந்தவர் மகளை அழைத்துக் கொண்டு தனியே சென்றார்.

 

மனம் விட்டு மகளிடம் பேசியவர் மன்னிப்புக் கோரி, நெஞ்சம் நிறைந்த அன்பை அணைத்தும், வாஞ்சையாக கேசம் கோதி வெளிக்காட்டினார். இறுதியில் கேட்டது என்னவோ மகளின் தாய்மை பற்றியே.

 

"இன்னும் கொஞ்சம் நாள் ஆகட்டும் மா.. என்ன அவசரம்?"

 

"என்ன ராசிகா பேச்சு இது? இன்னும் கொஞ்ச நாள்னா ஆறு மாசமா?"

 

அதற்கு பதிலளிக்காது தலை கவிழ்ந்த மகளை மோவாயை பற்றி நிமிர்த்தியவர், "அடுத்த மாசம் நல்ல சேதி சொல்லணும். அம்மா உன்னை மாதிரி குட்டி ராசிகாவை பாக்கணும்ன்னு ஆசையில தான் கேட்டேன். நாளை கடத்தாதே.." என்றவர் மகளை அழைத்துக் கொண்டு உள்ளே வர, சண்முகம் ஐயா அவர்கள் பார்வை ராசிகா மீது அமிலமாக படிந்தது.

 

அன்று அவள் கூறிய வார்த்தை சரியாக நினைவுக்கு வராத போதே இப்பார்வை என்றால், ஒருவேளை நினைவுக்கு வந்தால்? நிச்சயம் அதற்கான வெகுமதி அவளுக்கு உண்டு. வராத வரை தப்பித்திடுவாள்.

 

இறுதியில் இருவரும் விடைபெறும் நொடி இயல்பாக பேசியவளை கண்டு கௌதமன் நெகிழ்ந்தவர், மகளை வீட்டிற்கு வருமாறு கூறி வெளியேறினார். வாசலை கடந்தவருக்கு சொல்லாமல் மறந்த விடயம் நினைவுக்கு வந்தது.

 

காலணியை மாட்டிக் கொண்டு மீண்டும் மகளை நோக்கி வந்தவர், பிருந்தாவிற்கு அஸ்வத் மாப்பிள்ளையாக போகும் சேதியை கூறியதும் அவள் முகத்தில் ஈயாடவில்லை.

 

அதிர்ச்சியில் நின்ற மகளை சரியாக கூட கவனியாது அவர் மகிழ்ச்சியில் கூறி செல்ல, அஸ்வத்திற்கு ஏதோ ஒரு ரீதியில் ஆசை காட்டி ஏமாற்றி விட்டோம் என நொந்து கொண்டாள்.

 

எவ்வளவு நேரம் அதை பற்றி யோசித்தாளோ, அதே சிந்தனையில் அவள் தனித்து அமர்ந்து விட்டாள். அவளை சிந்தை கலைத்தது உரியவன் அழைப்பே. அலைபேசியை எடுத்து வந்து கல்யாணி கொடுத்து செல்ல அழைப்பை ஏற்றாள்.

 

"பிரதீஷ்.."

 

"ஊருக்கு வரயா டி?"

 

"இப்போ.. எப்படி?"

 

"எது எப்படியா? என்ன டி சொல்லுற? நான் வந்து கூட்டிட்டு வரேன். பட் வீட்டுக்கு வரல.."

 

"பிரதீஷ்.. லூசா நீங்க?"

 

"இதுக்கு என்ன ஆன்சர் பண்ணுனா வருவ?"

 

"காரியம் பண்ணுற நாள் வரப்போகுது. நீங்க தான் வரணும்.."

 

"நேர்ல வந்தேன் பல்லை பேத்துருவேன் டி. நான் என்ன வேலை பாக்குறேனா? இல்லை ஊர் சுத்திட்டு இருக்கேனா? சும்மா ஊருக்கு வரதுக்கு?"

 

"டேய் அப்போ நீ வரலையா?"

 

"நீ வேற ஹாஸ்பிட்டல்ல வேலை வாங்கி குடு. நான் அடிக்கடி கேரளாக்கும் தமிழ்நாடுக்கும் ரோடு போடுறேன்.."

 

"ஆள் இருக்காங்கன்னு பாக்குறேன்.."

 

"இல்லை நீ பேசு.. பேசி தான் பாரேன்.."

 

"என்ன சண்டை போட போன் பண்ணிருக்கயா டா?"

 

"பிரதீஷ் அது உன் சித்தப்பா டா.. நீ வரலைன்னா நானாவது இருக்க வேணாமா?"

 

"இந்த வியாக்கினம் பேசுறதா இருந்தா அவங்க கூடவே இருந்துக்கோ. இந்த பக்கமே வந்துடாதே டி. நாளைக்கி ஈவினிங் வரேன். எப்படியோ கிளம்பி வர்ற. இல்லை.."

 

"இல்லைனா.."

 

"ரசிகாஆஆ.."

 

"பிரதீஷ்.. நீ இல்லைனா நானாவது இருக்கணும் டா. அது முறை இல்லை.."

 

"ஓஹ்.. உனக்கு எல்லா முறையும் தெரியும் அப்போ?"

 

"ஏன் டா இப்படி பேசுற?"

 

"வரயா? இல்லையா?"

 

"............"

 

"லைன்ல இருக்கயா?"

 

"பிரதீஷ்.."

 

"ஈவ்னிங் 5.30க்கு ரெடியா இரு. இதுக்கு மேல எதுவும் பேசாதே.."

 

"ஸாரி பிரதீஷ்.."

 

"அப்போ நீ வரல.."

 

"இந்த.. ஒன் டைம்.. ப்ளீஸ் பிரதீஷ்.."

 

"அங்க இருந்து நீ என்ன......" என்றவன் அதற்கு மேல் எதுவும் பேசாது வாய் மூடிக்கொள்ள, அவளுக்கோ எரிச்சல் வந்தது.

 

"ரொம்ப பிடிவாதம் பண்ணுற. ஏன் நார்மல் சிட்டுவேஷன் கூட உனக்கு புரிய மாட்டுது?"

 

"உனக்கு எல்லாம் புரியுதுல.. இனி போன் பண்ணுறேனா பாரு.."

 

"பண்ணாதே.. இருந்துக்கோ.."

 

"இருக்குறனால எல்லாம் பேசுவா.. உன்னை தேடி வர நான் ஒருநாள் இல்லாம போனா தான் உனக்கு என் லவ் புரியும்.. அப்படியே இருந்து எனக்கும் காரியம் பண்ணிட்டு வா.." என்றவன் படபடவென பேசி போனை வைக்க, அவள் விழிகளிலோ நீருற்று.

 

அன்பு இருக்க வேண்டிய ஒன்று தான்.. ஆனால், சூழ்நிலையை புரிந்து கொள்ளாத அன்பையெண்ணி அவளுக்கே கோவம் தான் வந்தது. பேசி முடித்து திரும்பியவள், தன் முன் நின்றிருந்த சண்முகம் ஐயாவை கண்டு மிரண்டு போனாள்.

 

அவர் விழிகள் இரண்டும் அவள் மீது நெருப்பை உமிழ, சற்று நடுங்கியப்படி அவரை ஏறிட்டாள்.

 

"அன்னேக்கி நீ என்ன சொன்ன?"

 

"நான்.. எதுவும் சொல்லலயே.."

 

"ஹேய்.. என்ன நடிக்கிறயா? இதெல்லாம் இப்போ போன்ல பேசுனவன் கிட்ட வச்சுக்கோ. என்கிட்டே விளையாடாதே.."

 

அவரது அதிகாரப் பேச்சில் கோவம் மூளையை சூடேற்றியது காரிகைக்கு.

 

"ஏன் என்கிட்ட மோத பயமா தாத்தா? நீங்க சொன்னது உண்மை தான். எதுனாலும், என் புருஷன் கிட்ட தான் பேச முடியும். உங்க கிட்டயா பேச முடியும்?" என்றவள் இறுமாப்பாக கூறி கடக்க, அவளை ஏதாவது செய்திடலாமா என மனம் ஓயாது அடித்துக் கொண்டது அவருக்கு.

 

மறுநாள் ஊருக்கு கிளம்ப வேண்டியவள் கிளம்பவில்லை. பதினாறாம் நாள் காரியம் வரை இருந்தே விட்டாள். ஆனால், பிரதீஷ் வரவில்லை.

 

காரியம் முடித்தவர்கள் அஸ்தியை கரைக்க காரில் செல்ல, வண்டியில் எதிரே வந்து விழுந்த ஆட்டுக் குட்டியை கண்டு சடன் பிரேக் வைத்தான் ராஜீவ். அதில் சதாசிவம் கையில் அஸ்தியோடு இருந்த மண் முட்டி கீழே விழுந்து சுக்குநூறாக உடைந்தது.

 

இந்த கதை 'kathaiyodu kathal audio novels' la daily episode வரும் டியர்ஸ். இதுவரை 15எபிசொட் அப்டேட் ஆகிடுச்சு. விருப்பம் உள்ளவங்க பிரகதி குரலில் ஆடியோ நாவலை கேளுங்க. சேனலை சப்ஸ்கிரைப் பண்ணிக்கோங்க!

 

 

தேன்மழை💖

 

 


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top