பிருந்தாவை கண்டவன் ஸ்தம்பித்து நிற்க, அவளிடமும் அதே நிலை தான். திருமணம் நின்ற பின்பு பெரிதாக கவலை கொள்ளாத ஒருத்தி என்றால் அது பிருந்தா மட்டுமே.
காதலியை மனதில் வைத்துக் கொண்டு, வருங்கால மனைவியிடம் விலகளை காண்பித்து ஒதுங்கியவனை எப்படி தான் ஜீரனிப்பாள். ஏதேதோ நடந்து, அவள் மனநிலையும் முன்பை விட தெளிவான நீரோடை போல் மாறியிருந்தது.
அஸ்வத் மனம் தான் ஒருதலை காதலியின் நினைவால், கல்லெரிந்த குளம் போல கலங்கி தவித்தது.
"பாரு மா.. என்ன பண்ணுறான்னு.."
எப்படி நிமிர்ந்து அவளை காண்பான்? என்னவிருந்தாலும், பெரிதாக பழக்கமில்லாத ஒருவளிடம் கடுமையாக நடந்து கொள்ள முடியாதே. நாகரீகம் அறிந்து லேப்டாப்பை ஒரு ஓரம் வைத்து விட்டு, சோபாவின் விளிம்பில் அமர்ந்தான்.
பிருந்தாவை நேரில் அழைத்து பேசினாளாவது அவன் மனம் மாறும் என்னும் நம்பிக்கையில் தான் அவளை வரவழைத்தார் விசாலாட்சி.
"உட்காரு மா.. காபி எடுத்துட்டு வரேன்.." என்ற அன்னையை, இருவரும் ஆபத்தில் சிக்கிக் கொண்ட பார்வை பார்த்தனர். அவர் அதையெல்லாம் பொருட்படுத்தாது கடகடவென அடுக்களை நுழைந்தார்.
பிருந்தா வருகையை இச்சமயம் எதிர்பாராதவன் அவன் இஷ்ட்டத்திற்கு குதிக்க, அது அவளின் பார்வையில் பட சங்கடமாக உணர்ந்தவன் அவள் பக்கம் கூட திரும்பவில்லை.
அவளும் அவனை பாவமாக பார்த்து விட்டு, சலனப்பட்ட மனதோடு அமர்ந்திருந்தாள்.
சட்டென வீசிய காற்றில், டீபாயில் இருந்த நியூஸ்பேப்பர் சரசரத்து பறந்து நாலாப்பக்கமும் சிதறி விழ, இருவரும் ஓடி எடுக்கச் சென்றனர்.
பேப்பரை கையில் எடுத்தவள், டீபாயில் வைக்கும் நேரம் அவனும் அங்கு தான் வந்து நின்றான்.
அவளது முகம் பார்க்க தயங்கியவன், பார்வையை இடப்பக்கம் இருந்த சுவர்கடிகாரம் மீதும் அவள் மீதும் பதித்தபடி ஸாரி என்றான்.
"பரவாயில்லை அஸ்வத்.. வெளிப்படையா தானே சொன்னீங்க.. இதுல என்ன இருக்கு? எதுவும் மனசுல வச்சுட்டா தான் பிரச்சனை.."
அவளின் கூற்றில் முகிழ்ந்து காணாமல் போன காதல் நினைவு அனைத்தும் இழையோட, அதே நேரம் 10மணி ஆனதை ஒலி எழுப்பிய கடிகாரத்தில் வெறித்தான்.
"வேலைக்கு போகலையா?"
"இல்லை.. அம்மா வர சொன்னாங்க.. அதான் ஹாஃப் டே லீவ் கேட்டு வந்தேன்.."
அதில் அவனோ பல்லை நறநறத்து நின்றான். மீண்டும் இருவரிடமும் பெரும் அமைதி.. கலைத்தது என்னவோ அன்னையின் வருகை தான்..
அவரும் ஒருநொடி வந்து காஃபியை அவளிடம் கொடுத்து விட்டு, ஐந்து நிமிடத்தில் வருகிறேன் என்று போனில் பேசியப்படி கடந்தார்.
அதை கண்டவனுக்கு கோவம் பன்மடங்கானது.. அன்னையை வெறித்திருந்தவனிடம், காபி கப்பை நீட்டினாள் பிருந்தா..
அவனிடமோ ஏகத்துக்கும் அதிர்வு! அவள் வந்து காஃபியை நீட்டுவாள் என எதிர்பார்க்கவில்லை. வீட்டிற்கு வந்த விருந்தாளி அல்லவா அவள். அதனால் பெரிதாக அதிர்ந்தவன், சுயம் மீள சில நொடிகள் பிடித்தது.
"சாப்பிடுங்க.."
"உங்களுக்கு?"
"இதோ இருக்கு.." என்றவள் டீபாயில் இருந்த கப்பை விழிப்பார்வையில் காண்பித்து விட்டு மீண்டும் சோபாவில் அமர்ந்து கொண்டாள்.
தனக்கு எதிரே அமர்ந்து காபியை நெட்டியவளை பாவமாக பார்த்தான். மனமோ ஆற்றாமையில் தவித்தது. மணமேடை வரை வந்து நின்று போன திருமணம் அவன் நினைவுக்கு வர, வீட்டை சுற்றி முற்றி பார்த்தவள் விழிகள் அவளையே ஆழ்ந்து பார்த்த ஆடவன் நேத்திரங்களை கண்டு கொண்ட நொடி அவன் விருட்டென எழுந்து நின்றான் முதுகு காட்டி.
விசாலாட்சி இதோ வருகிறேன் என்று கூறி சென்றவர் வரவில்லை. பதினைந்து நிமிடங்கள் கடந்திருக்க, அவனோ ஏதோ யோசனையில் ஜன்னலை பார்த்திருந்தான். அவளும் நாளிதழை புரட்டி சோர்ந்தவள், கிளம்புகிறேன் என்றாள்.
"ஆங்.. கிளம்பிடீங்களா?"
"ம்ம்.. அம்மாவை காணாம்.. அதான்.."
அவனுக்கோ மீண்டும் சினத்தின் உச்சத்தில் பல்லைக் கடித்து பார்வை செல்ல, "இட்ஸ் ஓகே.. அதான் பேச வேண்டிய விஷயத்தை நீங்க தான் வந்ததும் சொல்லாம சொல்லியாச்சே.." என்றவள் இதழில் முறுவல்.
அந்த முறுவலை கண்டவனுக்குள் பெரும் மாற்றம். ஜன்னல் வழி வீசிய தென்றல், மேனியில் பரவிய நொடி புயலாக தெரிந்தது. உணச்சி துடைத்த முகத்தோடு அவளை பார்த்து நின்றான்.
பெரும் வலியை கண்டவளுக்கு, தனது செயல் எப்படியொரு தாக்கத்தை உண்டாக்கியிருக்கும் என உணர்ந்தான்.
"ஸாரி பிருந்தா.."
"பரவாயில்லை அஸ்வத்.. அம்மா கிட்ட சொல்லிடுங்க.." என்றவள் நிற்காது செல்ல, மீண்டும் அழைத்து அவளிடம் மன்னிப்புக் கேட்கவே மனம் உந்தியது.
தனது காலணியை மாட்டி விட்டு ஏதேர்ச்சியாக திரும்பியவள் அவனை காண, அந்நொடி அவனுள் உண்டான மாற்றம் சொல்ல முடியாத ஒன்றே.
'இவளது ஏமாற்றத்தை விடவா, தான் அடைந்தது பெரிய ஏமாற்றம்?'
ஒருநொடி அவனது எண்ணத்தில் மின்னலின் அதிர்வு. அவள் விறுவிறுவென வெளியேறி செல்ல, தானும் இவளை ஏதோ ரீதியில் காயப்படுத்தி விட்டேனோ என நொந்தான்.
வேறு யாராக இருந்தாலும், அவ்விடத்தில் பொறுமை காத்து செல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஏன், நிச்சயம் நீ என்ன பெரிய ஆணழகனா என்னும் சொல் கூட அவன் முகத்தில் அறைந்தது போல வந்து விழுந்திருக்கும்.
அவள் சிரித்துக் கொண்டே கூறி கடந்த விதம், அவள் மீது நல்ல அபிப்ராயத்தை உண்டாக்கியது.
அன்றைய நாள் இருவரும் பேசிக்கொள்ளவில்லை. ஆனால், மறுமுறை அவளை தனியே காணும் சூழ்நிலை வந்தால், இருவரின் மனதில் உள்ள எண்ணம் உடைபடுமோ என்னவோ?
"நீங்க தான் மாலதி அப்பாவா? ஏன் இதை வந்ததுமே சொல்லல? உள்ளே வாங்க.." என்றவள் அவரை உள்ளே வம்படியாக அழைக்க, அவர் மறுத்து விட்டார் உறுதியாக.
"இருக்கட்டும் மா.. நீ வாங்கிக்கோ அப்போ தான் எனக்கும் மாலதிக்கும் மனசு நிறைவா இருக்கும்."
"அதுக்குன்னு வாசல்ல வச்சா அங்கிள்.." என்றவள் மிகவும் வற்புறுத்த, தயக்கத்தோடு அவர்கள் புதிய வீட்டில் உள்ளே நுழைந்தார் செல்வராஜ்.
அவரை அமரச்சொல்லி விட்டு, காபி பழங்களோடு வந்து நின்றாள். அவரும் மனமுவந்து ஏற்றுக்கொண்டு ஆசுவாசமாக பருக, மனதை உறுத்திய விடயத்தை கேட்டு விட்டாள் ஈன்றவரிடமே.
"அங்கிள் நான் கேக்குறேன்னு தப்பா நினைச்சுக்காதீங்க.."
"கேளு மா.." என்றவரின் முகப்பாவனையே பெருந்தன்மை குணத்தை பிரதிபலிக்க..
"பிரதீஷ்க்கு ஏன் அவங்க அம்மா அப்பாவை பிடிக்கல? நீங்களே இவ்வளவு பெருந்தன்மையா இருக்கும் போது நிச்சயமா உங்க பொண்ணும் அப்படி இருக்க மாட்டாங்கன்னு என் உள்மனசு சொல்லுது.."
அவளின் பதிலை கேட்டு அவரிடம் கசந்த முறுவல். இருப்பினும், சிறு பெண்ணாக இருப்பவளிடம் இருக்கும் பக்குவம் அவர்கள் வீட்டில் யாரிடமும் இல்லை எனவே அவருக்கு உதயமாகியது.
"அது முடிஞ்சு போன விஷயமா.. ஏன் நீ அதை தெரிஞ்சுக்க நினைக்கிற? பிரதீஷ் உன்கிட்ட சொல்லிட்டானா?"
"சொன்னாங்க ஓரளவு.. அதுக்கு மேல அழுத்தி கேட்டபோ, அதை நியாபகப்படுத்த வேணாம் சொன்னாங்க அங்கிள்.."
அவள் அதை அறிந்து கொள்ளும் நோக்கில் கூறினாலும், இந்த ஒரு சம்பவம் நிரந்தர முறிப்பை தந்து விட்டதெண்ணி அவர் கண்களில் வலியின் நீருற்று.
"மாலதிக்கு வரன் பாத்து கூட வச்சுட்டேன். அப்பறம் வேலைக்கு போக சிரமமா இருக்குன்னு பேச்சு வாக்குல பிரதீஷ் கிட்ட சொன்னேன். தம்பி தெரிஞ்ச ஹாஸ்ப்பிட்டல்ல ரிஷப்ஷன்ல வேலைக்கு சேத்து விட்டான்.
இதை மாலதி பெருமையா கல்யாணி அம்மா கிட்ட சொல்ல, ஆனா அவங்க சித்திக்கு மனசுல எடக்கு மடக்கான சிந்தனை விழுந்துடுச்சு. அதுக்கு காரணம் அவங்க எண்ணம் மட்டுமல்ல. சுத்தி இருக்கிறவங்க சொன்ன விஷயம் தான்.
தெரிஞ்ச ஹாஸ்பிட்டல்ல மாலதியை வேலைக்கு சேர்த்து விட்டு, அங்க போய் ரெண்டு பேரும் ஜாலியா இருக்க நினைக்கிறாங்க.. அப்படி.. இப்படின்னு எல்லாரும் கண்ட மேனிக்க பேச ஆரம்பிச்சாங்க..
இந்த ஊர்ல தான் பேச இடம் கிடைச்சா என்ன வேணாலும் பல்லுல போட்டு மெல்லுவாங்களே. அது போல தான் அன்னேக்கி ஒரு சம்பவம் நடந்துச்சு.
மழை நேரம்ன்னு பஸ்க்கு காத்துட்டுருந்த மாலதியை ஏதேர்ச்சியா பாத்து தம்பி கூட்டிட்டு வந்து வீட்டுல விட, கல்யாணி அம்மாக்கே கண் மண் காணாம மகன் மேல அப்படியொரு கோவம்.
உடம்பு சரியில்லன்னு படுத்துருந்தவன், இந்த மழையில இவளை போய் கூட்டிட்டு வந்து விட என்ன இருக்குன்னு அவங்களுக்குள்ளயும்.." என்றவர் பேச்சு திடீரென தடைப்பட்டது.
புதிதாக வந்த பெண்ணிடம் உண்மையை கூறி, ஏன் அவள் மனதில் கொடிய நஞ்சை விதைத்து உறவில் விரிசலை உண்டாக்க வேண்டுமென நினைத்து அவர் வாய் மூடிக்கொள்ள, ராசிகா உண்மையை அறிந்து கொள்ளவே கெஞ்சினாள்.
போதாக்குறைக்கு அவருக்கு சத்தியம் வேறு செய்து கொடுத்தாள். கட்டிய கணவனிடம் தாம் கூறிய உண்மையை கேட்க மாட்டேனென்று. அவரும் மறுப்பு தெரிவிக்காது, கண்ணீர் வடிய கூறினார்.
"தம்பி கூட்டிட்டு வந்ததை அந்த தெருவுல இருக்கிறவங்க பாத்துட்டு போய் கல்யாணி அம்மாகிட்ட சொல்ல, முதல நம்பல அவங்க. அப்பறம், சொட்ட சொட்ட நனைஞ்சு வந்த பையனை பாத்த சதாசிவத்துக்கும் சந்தேகம் வந்துடுச்சு.
அவரும் தலையை துவட்ட உள்ளே வந்த மகனை வெளியே போடான்னு சொல்ல, பாவம் தம்பிக்கு விஷயமே புரியல. அதுக்குள்ளே கல்யாணி அம்மா, நீ இந்த வயித்துல தான் பெறந்தயா? ஏன் டா கல்யாணம் ஆனவ பின்னாடி அலையுறன்னு கேட்டு அவங்க வச்ச சத்தத்துல வீட்டுல எல்லாரும் வந்துட்டாங்க.
தம்பியை என்ன ஏதுன்னு கூட விசாரிக்காம.. ஆளாளுக்கு மாலதியை, தம்பியையும் தப்பா பேசி, கல்யாணி அம்மா அடிச்சுட்டாங்க.. சதாசிவம் செருப்பு எடுத்து அடிக்க வர, அதே செருப்பை வாங்கி மகன் மூஞ்சில விசிறி எறிஞ்சாங்க கல்யாணி. தம்பி அவங்க நடந்துட்ட விதத்தை பார்த்து, ஒருவார்த்தை கூட பேசல.
ஆனால், தெய்வானை தம்பியை பாத்து மத்த பிள்ளைகளும் கெட்டு போய்டுவாங்கன்னு சொல்லி, ரொம்ப அசிங்கப்படுத்தவும் அப்போ பேக்கை எடுத்துட்டு வீட்டை விட்டு போன பையன் தான். ஊர் பக்கமே வரல. ஆனால், இந்த விஷயத்தை நம்பாதவங்க சாவித்திரி அம்மா மட்டும் தான்.
அதுக்கப்புறம் தம்பி இந்த பக்கமே வரல. நாங்களும் கொஞ்ச நாள்ல வீட்டை காலி பண்ணிட்டு போய்ட்டோம். இப்படியொரு சந்தேக பேர்வழியை பாத்தது இல்லை மா. ஆளாளுக்கு ஒன்னொன்னு சொல்லும் போது யாரும் நம்ப தானே செய்வாங்க. அப்படி தான் நானும் நினைச்சுட்டு மனசை தேத்திட்டேன்.
இப்போ மாலதிக்கு கல்யாணம் ஆகிடுச்சு. மதுரைல இருக்காங்க. எப்படியோ, தம்பி பழசு போல சந்தோஷமா இருக்க நீ மட்டும் தான் காரணம்.." என்றவர் எழுந்து விடைபெறும் நேரம் வாசலில் வந்து நின்றார் சண்முகம்.
அவரை நேருக்கு நேர் கண்ட சண்முகம் விழிகளில் அப்படியொரு அதிர்ச்சி. கடமைக்கு விடைபெற்று அவர் பேசாது கடந்து செல்ல, பேரனின் மனைவியை தான் கேவலமான பார்வை பார்த்தார்.
"ஒண்ட வந்த பிடாரி ஊர் பிடாரியை விரட்டியடிச்ச மாதிரி இருக்கே உன் செயல் எல்லாம்.."
அவளின் பார்வை வெகு துச்சமாக அவர் மீது விழுந்தது. மிதப்பாக சிரித்தாள். அதில் அவமானப்பட்டவரின் முகம் கண்டு, ராசிகா உள்ளம் ஏகத்துக்கும் ஆனந்தம் அடைந்தது.
"நான் பிடாரி தான்.. நீங்க?" என்றவள் இறுமாப்பாக கையை கட்டிக் கொண்டு, புருவம் உயர்த்தி கேட்ட தோரணை அவர் இது நாள் வரையில் யாரையும் இப்படி கண்டது இல்லை.
அடியாளாக இருந்தவரை, வார்த்தையாலும் பார்வையாலும் தாக்கிய முதல் பெண் என்னவோ ராசிகா தான்.
அவர் முகமும் விழியும் செம்மை கொள்ள, "நாடகமாடி வீட்டுக்குள்ள நுழைஞ்ச நாயை சுதந்திரமா விட்டா, இப்படி தான் வீட்டு சோறை தின்னுட்டு நம்ம முகரையில மிதிக்க பாக்கும்.." என்றார் உட்சபட்ச கோவத்தில்.
"ம்ம்ம்.. நாய் தான்.. சரியா சொன்னீங்க தாத்தா.. திருடனை கண்டுபிடிக்கிற போலீஸ் நாய்.." என்றவள் சோபாவில் சென்று அமர்ந்து கொண்டாள் விஸ்தாரமாக.
"சின்ன பொண்ணாச்சுன்னு பாக்கிறேன்.. இல்லை.."
"இல்லைனா?"
அவளை அடிக்க பாய, பட்டென எழுந்து நின்றாள்.
ஆனால், சண்முகம் அவர்கள் கை நீளம் என்பதை உறுதி படுத்தும் விதமாக அவளை அறைந்து விட, அதில் விஷமமாக பார்த்து புன்னகைத்தாள்.
"என்ன அடிக்கிற ஒவ்வொரு அடியும்.. அதுல பாதிக்கப்பட போறது நீங்க தான்.."
"அடி வாங்கியும் திருந்தலையா நீ? இப்போ நீ பண்ணுன வேலை மட்டும் கல்யாணிக்கு தெரிஞ்சது.."
"தெரியட்டும் எனக்கென்ன பயமா? கல்யாணி அம்மாவா எனக்கு தாலி கட்டிருக்காங்க.. உங்க பேரன்.. ஸாரி.. ஸாரி.. என் ஆசை காதலன் பிரதீஷ் தானே உங்க எல்லார் விருப்பத்தோட தாலியை கட்டுனது.." என்றவளின் குத்தல் பேச்சில், அவரது மூளையும் குத்தி கொன்று விடலாமா எனக் கூட சிந்திக்க வைத்தது.
அவளது பேச்சில் கடுங்கோவம் கொண்டு நின்றிருந்தார் சண்முகம் ஐயா. ஆனால், அடியையும் வாங்கி அவள் வாய் மூடாது பதிலடி கொடுத்தாள்.
"தாத்தா.. உங்களுக்கு கை நீளம்ன்னு சொல்லிடீங்க. நான் சொல்ல மாட்டேன்.. ஆனால், ஒவ்வொரு நொடியும் நீங்க என்னை நினைக்கிற மாதிரி தரமான சம்பவம் நடக்க போகுது..
கவுண்ட்டவுன் சொல்லவா? அதுவும் இந்த வாசலை விட்டு கடந்து போறதுக்குள்ள? நீங்க சரின்னு சொல்லுங்களேன்.. எனக்கு கன்னத்துல குடுத்த அடியை விட, பலமடங்கு உங்க நெஞ்சுல விழப்போகுது.." என அவள் அங்கலாய்க்க, எரிச்சலுற்றவர் அவளை வீட்டை விட்டு அனுப்ப போவதாக சவால் செய்து கூறி கடந்தார்.
"அதுக்கு முதல.." என்னும் போது அவரின் அலைபேசி ஒலி எழுப்பிட, ஹலோ என்றவர் நெஞ்சில் கை வைத்தப்படி அதிர்ச்சியில் உறைந்து நின்றார்.
தேன்மழை💖💖
