சுமித்ரா, ராசிகாவை அவசரப்படுத்த இளநீரை குடித்து விட்டு காசு கொடுக்கும் போது அவளின் பரிவு கொண்ட முகத்தை கண்டவனுக்கு குற்றவுணர்வு அதிகரித்தது. அவளோ காசை நீட்ட, நடுநடுங்கிய குரலில் உண்மையை கூறிடும் மனநிலையில் அவர்களை அழைத்தான்.
அவனுக்கும் குடும்பம், குழந்தை என உள்ளதல்லவா?
சிலர் தவறே செய்தாலும் மனசாட்சி இல்லாதது போல் இருப்பார்கள். ஒருசிலரால் தவறை உணரும் போது, மனமே ஆயிரம் கேள்வி கேட்டு கொல்லாமல் கொன்று விடும்.
"அம்மாஆஆ.."
"என்ன அண்ணா?"
அவனோ கசங்கிய முகத்தோடும், கண்ணீர் வடிய அவளை நோக்கி கரம் கூப்பினான்.
சுமிக்கு அவனது செய்கை ஓன்றும் புரியவில்லை. ஏன் திடீரென ராசிகாவை பார்த்து கரம் கூப்புகிறான் என யோசித்தவள், பதட்டத்தில் என்னவென வினாவினாள்.
"மாஆஆ.. நான் தப்பு.. பண்ணிட்டேன்.. நான் பெரிய தப்பு பண்ணிட்டேன்.. பாவி மா நான்.." என கலங்கியவன் தலையில் அடித்துக் கொண்டு குமுற, ராசிகா திகைப்பாக பார்த்தாள் அவனை.
ஆனால், அவனோ கை கூப்பியப்படி மண்டியிட்டு அமர்ந்து விட்டான் அவள் கால் முன்பு. அதில் இருவரும் வெலவெலத்து போக, சுமித்ரா பதறிய குரலில் அவரை எழுந்திரிக்க கூறினாள்.
அவனும் அழுதப்படியே இருக்க, இருவருக்கும் ஒன்றும் விளங்கவே இல்லை. ரோட்டின் ஓரம் இப்படியொரு நிகழ்வை எல்லோரும் வேடிக்கை பார்த்தப்படி கடந்து செல்வது சங்கடமாகி போனது.
"எதுக்குன்னா இப்படி மன்னிப்பு கேக்குறீங்க? அப்படி நீங்க என்ன பண்ணுனீங்க? அதுவும் ராசிகா கிட்ட? மன்னிப்பு கேக்கணும்?"
அவன் கேவி அழுதிட, அவளுக்கு பன்மடங்கு குழப்பம் அதிகரித்தது.
"அண்ணா.. உங்களை தான் கேக்குறேன்.. எதுக்கு அவகிட்ட இப்படி நடந்துக்குறீங்க?"
"மாஆஆ.. என்னை மன்னிச்சுடுங்கன்னு கேக்க கூட முடியாத பாவி மா.."
அவன் தலையுமின்றி வாலுமின்றி ஏதோ பேசுகிறான் என எண்ணியவள், "ப்ளீஸ்.. அண்ணா கொஞ்சம் புரியுறபடி சொல்லுங்க.. எதுக்கு எங்க கிட்ட மன்னிப்பு கேக்குறீங்க?"
"சதாசிவா.. அந்த பணிக்கரை வர சொல்லி பாக்கலாமா? புள்ளை குட்டிங்க எல்லாம் நல்லாருக்கணும் பா. யாரு செய்ஞ்ச பாவமோ, சாபமோ தெரியல. என் குடும்பத்தை பிடிச்சு ஆட்டுது.."
"என்ன சொல்ல மா.. எனக்கே நம்ம குடும்பத்துல என்ன நடக்குது தெரியல.. யாரு கண்ணு பட்டுச்சோ?"
"சதாசிவா, சீக்கிரம் ஏதாவது பண்ணி சரி பண்ணுங்க பா.. அடுத்து ஏதாவதுன்னா நான் தாங்கிக்கிற மனநிலையில இல்லை.." என்றவர் பார்வை ருத்ரா மீது பதிந்தப்படி அவ்வார்த்தை வந்தது.
மகளை இழந்த துக்கத்தில் பித்து பிடித்தவளாகவே ஆகி விட்டாள். போதாக்குறைக்கு மாமியாரும் மருமகளை அள்ளி தூற்றி விட்டார்.
பொறுப்பில்லாதவளுக்கு பிள்ளை பிறந்தால் இப்படி தான் ஆகுமென அவளை வஞ்சித்து, வீட்டுபக்கமே வரக்கூடாது என்று விட்டனர் பேத்தி இறந்ததற்கு பின்.
அதையும் மனதில் போட்டு மூடிக்கொண்டு, கணவன் மட்டும் தான் தனக்கெல்லாம் என நினைத்துக் கொண்டு புகுந்த வீட்டை விட்டு வெளியே வந்து விட்டாள். அன்றிலிருந்து அவளுக்கு ஒரே ஆறுதல் ஹரீஸ் மட்டுமே.
அவன் உடனிருந்ததால் தவறு அவள் மீதல்ல என்பதை அவனாவது புரிந்து கொண்டான்.
இங்கோ அம்மாவும், மகனும் குடும்பத்தில் அடுத்தொரு அசம்பாவிதம் நடக்கக்கூடாது என பேசிக்கொண்டிருக்க, "ஆமா.. துரோகியை கூட வச்சுட்டா, ஊர் சாமியா காவலுக்கு வந்து நிக்கும்?" என சுமித்ரா ஆவேஷம் பொங்கிய குரலில் பல்லைக் கடித்துக் கொண்டு பேசியப்படி உள்ளே நுழைந்தாள்.
அதில் இருவரும் ஒருநொடி, பேத்தி மற்றும் மருமகளை வினோதமாக பார்க்க..
"கூப்பிடுங்க உங்க புருஷன் கொலைகார சண்முத்தை.." என்றாள் ராசிகா அதிரடியான குரலில். அதே முகப்பாவனையோடு தான் சுமியும் நின்றிருக்க, எல்லோரும் கூடம் நோக்கி வேகமாக வந்தனர்.
என்றுமில்லாது ஓங்கி ஒலித்த ராசிகா குரல் கேட்டு, அறையிலிருந்த பிரதீஷ் மற்றும் ராஜீவ் அரக்க பறக்க வந்து சேர்ந்தனர்.
"ஹேய்.. ராசிகா என்ன ஆச்சு? ஏன் இப்படி நிக்குற?"
அவன் கேட்டது உண்மை தான். போருக்கு தயாராகி செல்லும் பெண் போல் நின்றிருந்தவள் கையில் ஆயுதம் ஒன்று மட்டும் தானில்லை.
"ராசிகா.. என்ன மா? ஏன் இப்படி பேசுற?"
"எங்க உங்க கொலைகார புருஷன்?" என மீண்டும் அதே கேள்வியை அழுத்தமாக கேட்க, அனைவருக்கும் நுனி மூக்கில் கோவம் எட்டி பார்த்தது.
"ராசிகாஆஆ.. பாத்து பேசு.." என்றார் அத்தை கல்யாணி. அதோடு தெய்வானையும் சேர்ந்து கொண்டு, "இவ என்ன இந்த பேச்சு பேசுறா? புத்தி கித்தி கோளாறாகிடுச்சா?" என அவரும் ஒருவாறு கூறிட, அதில் கோவம் பொத்துக்கொண்டு வந்தது என்னவோ பிரதீஷிற்கு தான்.
தனது மனைவியை எல்லோரும் அவதூறாக பேசும் முன்பு வாயடைக்க நினைத்து பிரதீஷ் அவளை அழைத்துக் கொண்டு நகர நினைக்க, "என்னை விடு டா.. உன் தாத்தா எங்க? அவரை வர சொல்லு இங்க.. யோவ் சண்முகம் கீழ வாயா.." என ராசிகா குரல் கொடுக்க, அதில் எல்லோரும் விதிர்விதிர்த்து தான் நின்றிருந்தனர்.
சரி இவள் தான் இப்படி பேசுகிறாள் என மற்றவர் புரியாது பார்க்க, "தாத்தா.. எங்க ஓடி போய் ஒளிஞ்சுட்டு.. யாரை கொலை பண்ண திட்டம் போடுறீங்க? என்னையவா? இல்லை என் வயித்துல வளருற பிள்ளையையவா?" என சுமியும் வரம்பு மீறிய கேள்வியை கேட்டு விட்டாள்.
தெய்வானை ஓடி வந்து மகளை கட்டிக்கொண்டு சமன் செய்ய முயற்சிக்க அவளோ கேவி அழுதாள். பாட்டியும் ஓடிவந்து பேத்தியிடம் என்ன ஆனது என கேட்க, மௌனமாக ருத்ராவை பார்த்தாள்.
"ஹான்.. என்ன சொல்லணும்? என்ன சொல்லணும் உங்க எல்லாருக்கும்?" என ராசிகா சீறிக்கொண்டு வர, பிரதீஷ் வேகமாக அவள் கரம் பிடித்து இழுத்து தடுத்து நிறுத்திட, "உன் தாத்தா ஒன்னும் யோக்கியமானவர் இல்லை.." என்றவள் கணவன் பிடியிலிருந்து திமிறியப்படி வாசலுக்கு வெளியே இருந்த இளநீ கடைக்காரனை அழைத்தாள்.
அவனும் கையை கட்டிக்கொண்டு உள்ளே நுழைய, அவனை அடையாளம் கண்டு கொண்ட சதாசிவம் நீயா என்பது போல் அவனை பேர் கூறி அழைக்க, அதேபோல் தான் எல்லோரும் வேல்சாமி என ஒரே நேரம் அவனது பெயரை உச்சரித்தனர்.
"ஐயா.. எல்லாரும் என்னை மன்னிச்சிடுங்க.. இந்தம்மாவை கொல்ல சொல்லி தான் சண்முகம் ஐயா பாம்பை அனுப்ப சொன்னாரு.. அது.. கடைசியில ஒரு.. குழந்தை.. உயிரை.." என்றவன் கைக்கூப்பி மண்டியிட்டு கூற, அனைவருக்கும் திக்பிரமை பிடித்த நிலை தான்.
உண்மையென எவராலும் நம்ப முடியவில்லை. ஆனால், அவன் தனது மகன் மகள் மீது சத்தியம் செய்து இவ்விடயத்தைக் கூற எல்லோரும் ஸ்தம்பித்து நின்றிருந்தனர்.
"வேல்சாமி.. நீ சொல்லுறது உண்மையா?"
"அம்மா.. நான் சொல்லுறது பொய் இல்லை.. உண்மை தான் மா.. இந்த பொண்ணை தான் கொலை பண்ண சொன்னாரு.."
பிரதீஷ் ஓடிச்சென்று அவனது சட்டையினை கொத்தாக பற்றியப்படி, காசுக்காக எது வேண்டுமானாலும் செய்வியா என கேட்டவாறு பலமாக தாக்க, வீட்டினர் அனைவரும் நெஞ்சை பிடித்திடாத குறையாக நின்றிருந்தனர்.
ருத்ரா அனைத்திற்கும் தன் தாத்தாவா காரணம் என்றதிலே மகள் பெயரைக் கூறி கத்தி அழ, அருகில் நெருங்கிய தம் வீட்டினரையே வேண்டா வெறுப்பாக பார்த்தாள். உடனிருந்த வீட்டின் பெரிய மனுஷனுக்குள் இப்படியொரு கேவலமான குணமா என பிரதீஷ் கொந்தளிக்க, சுமியோ தனது மன ஆதங்கத்தையும் மூடி வைத்த காதலை சின்னாபின்னமாக்கிய தாத்தாவின் குட்டை போட்டுடைத்தாள்.
ராசிகாவும் அவர் தன்னிடம் நடந்த கொண்ட விதத்தோடு அறைந்ததையும் கூற, வீட்டினருக்கு தான் தலைச்சுற்றலே உண்டானது. எப்போதும் கம்பீர பேச்சு, நடை, உடை என முறுக்கிக் கொண்டு இருப்பவருக்குள் இப்படியொரு கேவல குணமா என கட்டிய மனைவி சாவித்திரி அவர்களாலே ஜீரணிக்க முடியவில்லை.
எல்லோரும் குஷியின் இறப்பை அவரிடமே கேட்டு தெரிந்து கொள்ள நினைத்து அறை நோக்கி செல்ல, காலியறையை பார்த்து அதிர்ந்தது தான் மிச்சம்.
எங்கு சென்றார்? என்ன ஆனார்? என எவராலும் அறிந்து கொள்ள முடியாத புதிராக அமைந்தது. ஆளாளுக்கு அவரை கரித்து கொட்ட, ஒருபுறம் தனது தாத்தா தன் மகளை கொன்று விட்டார் என்று ருத்ரா தலையில் அடித்துக் கொண்டு புலம்பி அழுதாள்.
உண்மையில் அவளின் நிலை தான் எல்லோருக்கும் நெஞ்சை கவ்வியது. ஏற்கனவே, துயரில் இருந்தவளை மீட்டெடுக்க அரும்பாடு பட்டனர்.
இது கொலை என அறிந்ததில் இருந்து ஹரீஸ் மாரில் சாய்ந்து அழுது கதறினாள்.
அறையில் இருந்து வெளியேறும் போது ராஜீவ் கையில் கிடைத்தது ஒரு கடிதம். அதுவும் சண்முகம் அவர்களே எழுதி வைத்த கடிதம். தாமதிக்காது பிரித்து எல்லோர் முன்பும் படித்துக் காண்பித்தான்.
"எல்லாரும் என்னை மன்னிச்சுடுங்க.. தப்பை பண்ணிட்டு உங்க எல்லார் கூடவும் என்னால சகஜமா சிரிச்சு பேசிட்டுருக்கவும் முடியல, கண்ணீர் சிந்தவும் முடியல.
எப்படியும் இந்த உண்மை எனக்கு தெரிஞ்சுடும்ன்னு தோணுச்சு. அதான் நானே வீட்டை விட்டு வெளியேறிட்டேன். என்னை யாரும் தேட வேணாம். ருத்ரா உன் குழந்தை சாவுக்கு நான் தெரிஞ்சோ, தெரியாமலோ காரணமாகிட்டேன்.
எல்லாத்தையும் தானுங்கிற ஆதிக்கத்துல பண்ணிட்டேன். இனி உண்மை தெரியவும் உங்க யாரையும் என்னால முகங்குடுத்து பாக்க முடியாதுன்னு தான் வீட்டை விட்டு வெளியேறிட்டேன். என்னை மன்னிச்சுடுங்க எல்லாரும். சாவித்திரி பிள்ளைங்களை நல்லா பாத்துக்கோ.."
கடிதத்தை படித்தவன் கண்ணீரோடு முறுக்கிக் கொண்டு நிற்க, அதனை போல தான் நாயகனும் நின்றிருந்தான்.
அத்தனை பேருக்கும் அவர் மீது அவ்வளவு கோவம். நிச்சயம் அவர் கண் முன் இருந்தால் பேரன் பிள்ளைகளே உண்டில்லை என ஆக்கியிருப்பார்கள். அவரோ, மற்றொருவன் மூலம் போனில் தகவலை அறிந்து கொண்டு, எல்லோர் கண்ணிலும் மண்ணை தூவி ஓடி விட்டார்.
பாம்பை அனுப்பியது இருவர் சேர்நது செய்த செயல். ஒருவன் குற்றத்தை ஒப்புக்கொண்ட விடயம், அவருக்கு போனில் மற்றொருவன் மூலம் தகவல் வந்த நொடி வீட்டிலிருந்து மாயமானார் சண்முகம்.
அன்றைய தினம் எவருக்கும் தூக்கமும் இல்லை, நிம்மதியும் இல்லை. விடிந்தால் குஷிக்கு பதினாறாம் நாள் காரியம்.
அதனை கூட தானே ஒரு பிள்ளையை பெற்று, கொன்று காரியம் செய்யும் நிலைமைக்கு ஆளாகி விட்டேனே என கதறி அழுதவளை அண்ணனவன் ஆரத்தழுவி தேற்றிட, நாயகனின் விழிகளிலும் வலியின் நீருற்றே.
ருத்ரா மனநிலையை எண்ணி பதினாறாம் நாள் காரியத்தையும் செய்யவில்லை. அவளும் தான் குடும்பத்தாரால் ஏமாற்றப்பட்டு விட்டதாக எண்ணி, முறுக்கிக்கொண்டு வீட்டை விட்டு வெளியேற நினைக்க ஹரீஸ் தான் அனைத்தையும் பக்குவமாக கூறி புரிய வைத்தான்.
இருபது தினங்கள் கடந்தது. சண்முகம் அவர்களை தேடி தோற்று போனது தான் மிச்சம். ராசிகாவும் அங்கிருக்க விருப்பமின்றி, கணவனோடு பாலக்காடு வந்து விட்டாள்.
அவளுக்குள் எரியும் கனல் இன்னும் துளிக்கூட மாறவில்லை. தன்னை கொலை செய்ய தான் என்ன செய்தேன் என அடிக்கொரு முறை நினைத்து கண்ணீர் சிந்திக் கொள்வாள்.
அன்றும் அப்படி தான் கண்ணீரை துடைத்தபடி, வீட்டின் முன்பு இருந்த செடிகளுக்கு நீர் பாய்ச்சிக் கொண்டிருந்தாள். கேட்டை திறந்து பிரதீஷ் காரை உள்ளே ஏற்ற, ஒப்புக்கு கூட அவன் பக்கம் பார்க்கவில்லை.
அவனும் வந்த நாளில் இருந்து குஷியின் நினைவிலே இருக்க, மனைவியின் மனநிலையை புரிந்தும் சரியாக ஆறுதல் கூட கூறவில்லை. இன்று தான் அவளது வாடிய முகம் கண்டு, யோசனையாக அவளை பார்த்தபடி காரினுள் அமர்ந்திருந்தான்.
கண்ணாடியை கீழிறக்கி, கீச்சென குரல் கொடுத்தான். நீண்ட நாட்களுக்கு பின், அவனது சேட்டை லேசாக தலைதூக்கியது அவளை சமன் செய்யும் பொருட்டு.
"ஷ்.. ஷ்.."
"........."
"மேடம்.."
".........."
"ராசிகா.. மேடம்.. கதவை திறந்து விடுங்க.. நான் கீழே இறங்க.."
அவனது குரல் சற்று ஓங்கி ஒலிக்க அதன்பின்பு தான் சுயம் பெற்றவளாக திரும்பி பார்த்தாள் அவனை.
அவனோ இரு விழிகளையும் சிமிட்டி வா என அழைக்க, தண்ணீர் பைப்பை விசிறி எறிந்து வீட்டை நோக்கி நடையை கட்டினாள்.
'ஏதோ நான் கொலை பண்ண பாத்த மாதிரி இவ என்கிட்ட ரியாக்ட் பண்ணுறா.. நான் என்ன பண்ணேன்? இப்படி மூஞ்சிய காட்டிட்டு போறா..' தானாக முனங்கிக் கொண்டு உள்ளே செல்ல, அவளோ உடை மாற்றி கிளம்பி வெளியேறி வந்தாள்.
"ராசிகா வெளியே கிளம்பிட்டயா?"
அவள் வீட்டில் எவனும் இல்லை என்பது போல் தனது வேலையை மும்மரமாக பார்த்தப்படி, தலை வாரிட கண்ணாடி முன்பு நின்றாள்.
"ராசிகா.. எங்க போற?"
"ஏன் தெரிஞ்சு என்ன பண்ண போறீங்க?"
"ஏன் டி இப்படி பேசுற?"
"வேற எப்படி பேசணும்?" என்றவள் விழிகள் கலங்க, கூந்தலை இடப்புறம் ஒதுக்கியப்படி அவனை தீயாக பார்த்து விட்டு முகத்தை திருப்பிக் கொண்டாள்.
அவன் ஷூவை கூட கழட்டாது அவளை நோக்கி நெருங்க, "அறிவில்ல.. அதானே குடும்பத்துல எல்லாருக்குமே நல்லெண்ணம், நல்ல சிந்தனை இருந்தா தானே?" என வார்த்தைகளில் தேள் கொடுக்கை வைத்து பேச அதிர்ந்தவனாக நின்று விட்டான்.
"ராசிகா ஏன் இப்படி பேசுற?"
"நான் பேசாம தானே இருக்கேன்.. நீ ஏன் டா பேசுற?"
அவனோ இடையில் கை வைத்து உஷ் என மூச்சை விட்டு எங்கோ பார்த்திருக்க, வம்பிழுக்கும் மனநிலையில் இருந்தவள் தான் ஏன் பேசாமல் நிற்கிறான் என்பது போல் பார்த்திருந்தாள்.
"உனக்கும் என்னை பிடிக்கலலை.. நான் எங்க போனா என்ன பிரதீஷ்?"
அவளது கேள்விக்கு பதில் கூறாது ஷூவை கழட்டாது அடுக்களை நோக்கி வேண்டுமென்றே அவன் செல்ல, "என்ன ஜென்மம் நீ? ஷூவை போட்டு நடு வீடு வரைக்கும் வர்ற? புத்திகித்தி இருக்கா இல்லையா?" என்றவள் அவனை பின்தொடர..
பிரதீஷ் அடுக்களையில் நுழைந்து ஒரு பார்வை பார்த்து விட்டு வெளியே வந்தவன் அப்படியே சோபாவில் அமர்ந்து விட்டான்.
அதன் பின்பு தான் உணர்ந்தாள் இவையெல்லாம் தன்னை வெறுப்பேற்ற செய்த செயல் என்று.
அவள் அவனை பாராது கிளம்பிட, அவன் விழிகள் இரண்டும் தீவிரமாக அவளை தான் ஆராய்ந்து கொண்டிருந்தது.
இறுதியில் கிளம்பியவள் வாட்சை எடுக்க கபோர்டை திறக்க, மீண்டும் எங்கு செல்கிறாய் என்றான்.
"ஷூட்டிங் போறேன்.."
சற்றே அதிர்ந்தான்! மணம் முடித்த இத்தனை நாளில் அவளது எண்ணத்தில் இச்சிந்தனை வரவேயில்லை. இன்று எப்படி என யோசித்தவன், "ராசிகா.. என்மேல கோவமா? அதான் ஷூட்டிங் கிளம்புறயா?" என உடைந்து போன குரலில் கேட்டவனை, அப்போது தான் திரண்டு நின்ற நீர் விழியோடு அவனை ஏறிட்டாள்.
"நான் யார் மேலயும் கோவப்பட என்ன இருக்கு? நீங்களே மனசு சரில்லாம இருக்கீங்க. அப்படியிருக்கும் போது நான் ஏன் உங்க மேல கோவப்படணும் ஸார்?"
"எது? ஸாராஆஆ.. நான் உனக்கு? இன்னும் வேற என்னெலாம் சொல்ல போறீங்க?" என்றவன் கையை கட்டிக்கொண்டு சப்பாத்துக் கால்லை தரையில் தட்ட, அந்த சத்தமே அவளை மேலும் சினமடைய வைத்தது.
"உங்களுக்கு நான் ஒருத்தி இருக்கேனான்னு கூட நியாபகம் இருக்கா? இதே லவ் பன்னும் போது இப்படி இருந்தீங்களா? ஒரே வீட்டுல என் கூட இருக்குறனால தானே இப்படி இருக்கீங்க?"
"இப்போ நான் என்ன செய்யணும் சொல்லு.
"யாரும்.. எனக்காக ஒன்னும் செய்ய வேணாம்.." என்றவள் வேகவேகமாக ஹேண்ட்பேக்கை மாட்டிக்கொண்டு கிளம்ப, ஓடி வந்து அவள் முன்பு நின்று வழி மறித்தான்.
அவளோ முகத்தை திருப்பிக் கொள்ள, "நான் அன்னேக்கியே அவர் மேல கம்பளைண்ட் குடுக்கவான்னு கேட்டேன்.. எல்லாரும் வேணாம்ன்னு சொல்லிட்டீங்க..
நான் உன்கிட்ட பேசாம இருந்தாலும், உன்னை பத்தி நினைக்காம இருக்கேனு தெரியுமா உனக்கு? ஏன் இப்படி முட்டாள் தனமா யோசிக்கிற?
ஒரு பெரிய மனுஷன் குழந்தையை கொன்ன வேதனையில இருக்கேன் டி. அதை புரிஞ்சுக்கோ. நீ எந்த தப்பும் பண்ணலன்னு எனக்கு தெரியும்.
நான் உன்கிட்ட இங்க வந்தப்ப கூட கேட்டேனே. நீ தான் கம்பளைண்ட் வேணாம்ன்னு சொன்ன.
இப்போ நீ ஏன் இவ்வளவு ஃபீல் பண்ணுற?
நான் தான் இப்படியொரு மனுஷன் தாத்தாவான்னு நொந்து போயிருக்கேன். அதோட குஷி.." என்றவன் குழந்தை பெயரைக் கூறும் நொடி குரலும் உடைந்திட, ராசிகா அவனை கண்கள் கலங்கியப்படி பார்த்திருந்தாள்.
"சில விஷயங்கள் வாழணும்னா மறந்து தான் ஆகணும்.. இல்லை பைத்தியம்.. பைத்தியம் பிடிச்சு தான் சுத்தணும்.. போன மனுஷன் போய்ட்டாரு.. நீ ஏன் அவர் பண்ணுனதை நினைச்சு அழுற? இப்போ கூட சரின்னு சொல்லு, அந்த வேல்சாமி என் தாத்தா எல்லார் மேலையும் கம்பளைண்ட் தரலாம்.." என்றவன் அவள் பதிலுக்காக முகம் காண, அவள் அப்போதும் மறுப்பாக வேண்டாமென தலையசைத்தாள்.
"அப்போ என்ன தான் நினைக்கிற? நாளைக் கழிச்சு உன் அக்காக்கு கல்யாணம். நியாபகம் இருக்கா?"
ஏற்கனவே அவள் நொந்து போய் இருக்க, இந்நினைவு அவளை மேலும் மௌனமடைய வைத்தது.
"இன்னும் கொஞ்ச நேரத்துல ஊருக்கு கிளம்புறோம். அப்படியே போயிட்டு வீட்டுல எல்லாரையும் பாத்துட்டு வந்துடலாம். பாட்டி என்ன நிலையில இருப்பாங்கன்னு யோசிச்சு பாரு ராசிகா..
எல்லாருக்குமே அவர் பண்ணுன ஒரு விஷயம், நிம்மதியே இல்லாம ஆக்கிடுச்சு. நீ ஆரம்பத்துலயே அவர் உன்கிட்ட பேசுற விதத்தை சொல்லிருந்தா கண்டிப்பா, இதுக்கொரு ஃபுல் ஸ்டாப் வச்சுருப்பேன்.." என்றவன் அவள் மனவோட்டம் புரியாது பேசி கடந்திருந்தான்.
அவளுக்கோ அக்காவின் திருமணத்திற்கு செல்லவே விருப்பமே இல்லை. ராசிகா வீட்டினரும் நல்ல காரியம் பேசி முடித்ததால், குஷி மரணத்திற்கு கூட வராது போனிலே தகவலை கேட்டுக் கொண்டனர்.
நின்று போன திருமணம் இம்முறையாவது நல்லபடியாக நடக்க வேண்டுமென்றேன்னி, அவர்கள் மருமகன் வீட்டிற்கு வரவேயில்லை. வீட்டினர் மனநிலையை எண்ணி, திருமண அழைப்பை பிரதீஷிடம் கூறியிருந்தனர்.
"ஸாரி.. ராசிகா.. நான் எதுவும் கோவமா பேசி ஹர்ட் பண்ணிருந்தா.."
அவளிடம் சன்னமான அசைவு கூட இல்லை. அஸ்வத்தை காண சங்கடமாக இருந்தது.
"நான் மேரேஜ்க்கு வரல.."
"ஏன்?" என்றவன் கோப்பையில் ஊற்றிய தேநீரை ஒரு ஓரம் தள்ளி வைத்து விட்டு, அதிர்ந்து எழுந்தான்.
தேன்மழை💖💖
