யார் இந்த பெண்?
அதிகாலையில் சென்னை பேருந்து நிலையத்தில் வந்து நின்றது அந்த பஸ், “எல்லாரும் இறங்குங்க, பஸ்ஸை உள்ளே கொண்டு போக வேண்டும்” என்று பஸ்ஸில் யாரோ கத்தும் சத்தம் எல்லாம் இவளுக்கு கனவில் கேட்பது போல் இருந்தது,
கனவும் நினைவும் சேர்ந்து அவள் பாதி உறக்கத்தில் இருக்க ,பக்கத்திலிருந்த பெண்மணிதான், “ஏமா இறங்குமா, கோயம்பேடு வந்துடுச்சு” என்று எழுப்பி விட,
“ஹாங் வந்திருச்சா..” என்று தன் புடவை தலைப்பை எடுத்து தன் முகத்தை அழுந்த துடைத்தவள், கீழே இறங்கிக்கொண்டு கையில் வைத்திருந்த வாட்டர் பாட்டிலால் முகம் அலம்பி வாய் கழுவினாள்.
சென்னை அவளுக்கு புதிதில்லை தான், தற்போது வேற்று கிரகம் போல் இருந்தது, சில நட்பும் உறவும் இருக்கிறார்கள், அவர்களின் எண் கூட அவளிடம் இல்லை, சொல்லப்போனால் இந்த காலத்தில் கையில் ஒரு கைப்பேசி கூட இல்லாமல் ஒருத்தி இப்படி தனியாக வருவாளா? ஆத்திர அவசரத்திற்கு எவரையும் தொடர்பு கொள்ள முடியாத ஒரு நிலை.
வெளியே வந்தவளுக்கு எங்கே செல்வது என்று தெரியவில்லை, இப்போது கையில் சிறு தொகை மட்டுமே இருந்தது, அதில் முதலில் ஒரு போனை தற்காலிகமாக வாங்க வேண்டும் ,இப்பொழுது தான் டச் போன் எல்லாம் பத்தாயிரம் ரூபாய்க்கு வருகிறதே, அதற்குள் ஒரு வேலையை தேட வேண்டும்,
அதற்கு முன் ஒரு ஹாஸ்டலில் சேர வேண்டும், இங்கே நல்ல ஹாஸ்டல் எங்கே இருக்கும் தெரியவில்லையே, விடிய காலையில் வேறு வந்திருக்கிறாள்,
இப்போது எங்கே என்று செல்வது, அந்த பேருந்து நிலையத்திலிருந்து வெளியே வந்து பார்த்தாள், சென்னை மாநகரம் மலைப்பாக இருந்தது அவளுக்கு. பிறந்து வளர்ந்த இடம் தான் ஆனால் பரீட்ச்சையம் இல்லாத ஊர்.
அந்த பேருந்து நிலையத்தில் வாகனங்கள் போகவும் வரவும் வழிகள் இருக்கிறது, இவள் வாகனங்கள் வெளியேறும் வழியில் வெளியே வந்து நின்று, வெளிச்சம் பரவியும் பரவாத அந்த இருளில் நின்று பார்த்துக் கொண்டிருந்தாள்.
அப்போது அவளுக்கு முன்பாக ஒரு கார் வந்து நின்றது. அது ஹாரன் அடிக்க இவளோ அதையெல்லாம் கவனிக்காமல் எங்கே செல்வது இங்கே இருந்து, ஆட்டோவில் செல்லலாமா? முதலில் ஒரு நல்ல ஹாஸ்டலை கண்டுபிடிக்க வேண்டும்,
ஒருவேளை உள்ளே பஸ் ஸ்டாண்டில் அமர்ந்து ஹாஸ்டல் ஏதாவது இருக்கிறதா என்று தேர்வு செய்யக்கூட, தன்னிடம் போன் இல்லையே யோசனையுடன் சுற்றி சுற்றி பார்க்க, வந்த கார்க்காரன் கோபமாக இறங்கி வந்தான்.
அவன் இடுப்பில் கைகட்டி கொண்டு, அவளை மேலிருந்து கீழ் வரை முறைத்து பார்த்தவன், “என்ன தண்ணி ஏதாவது அடிச்சி இருக்கியா? கார் ஹாரன் அடிக்கிறது காதுல விழல, கண் எதிர்க்க கார் ஹெட் லைட்டோட எரியுறது தெரியுது,
அப்பவும் வழி விடாம நீ பாட்டுன்னு என்னமோ சுத்தி சுத்தி பாத்துட்டு இருக்குற..
இது என்ன டூரிஸ்ட் ஸ்பாட்டுன்னு நினைப்பா உனக்கு.. இல்ல நைட் அடிச்ச போதை இன்னும் தெளியாம சுத்திட்டு இருக்கியா ?” என்று அவன் பாட்டிற்கு பொரிந்து தள்ளினான்.
அவன் பேச்சில் ஒரு கணம் தலை குனிந்தாள் அவள், இருந்தாலும் அவன் ஓவராக பேசிக்கொண்டு இருக்கிறான்,
தப்புதான் எதிரில் வந்த வாகனம் தெரியாமல், தெரியாமல் என்று சொல்ல முடியாது, கவனிக்காமல் ஏதோ ஒரு சிந்தனையில், தன் பயம் தனக்கு, அவள் பார்த்துக் கொண்டிருக்க, இவன் என்ன இஷ்டத்துக்கு பேசுகிறான் என்று கோபம் வந்தது.
முதலில் சாரி சொல்ல தான் நினைத்தாள், ஆனால் அவன் பேச்சில் கடுப்பாகி, “ஹலோ மிஸ்டர், மைன்ட் யுவர் வேர்ட்ஸ், என்ன ? நான் போதை தெளியாம இருக்கேனோ, இல்லை, இந்த இடத்தை சுத்தி பார்த்துட்டு இருக்கேனோ உங்களுக்கு தேவை இல்லாத விஷயம்,
நீங்க தான் இந்த பஸ் ஸ்டாண்ட் குத்தகை எடுத்த மாதிரி பேசிக்கிட்டு இருக்கீங்க, இது வெஹிக்கல்ஸ் வெளியே போற வே னு தெரியாதா, இந்த வழியா உங்க காரை உள்ள எடுத்துட்டு வந்ததும் இல்லாம இஷ்டத்துக்கு பேசுறீங்க” என்றாள் கடுப்புடன்..
“ஹேய் என்ன திமிரா, பண்றதையும் பண்ணிட்டு பீச்சில நிக்குற கண்ணகி சிலை மாதிரி நின்னுட்டு, பேசுற பேச்சை பாரு, காலைல இப்படித்தான் யார்கிட்டயாவது வம்பு பண்ணி பணம் பறிக்கிற குரூப்ப சேர்ந்தவளா நீ? ஆளையும் மூஞ்சையும் பாரு, உங்க ஆளுங்க என்ன எங்கேயாவது ஒளிஞ்சிட்டு இருக்காங்களா?” என்று அவன் சுற்றும் முற்றும் பார்த்துக்கொண்டு, அவளிடம் எகிறி கொண்டு வர ஆத்திரமாக வந்தது அவளுக்கு.
சரியான திமிர் பிடித்தவன், என்னவெல்லாம் பேசுகிறான் என்று நினைத்துக் கொண்டு, “ஏய்” என்று அவள் கத்த, அவனும் யாரைப் பார்த்து, “ஏய்னு சொல்ற” என்று கத்தினான்.
அதற்குள் பின்னால் இருந்து, “அண்ணா, என்ன தேவையில்லாமல் சண்டை போட்டுக்கிட்டு இருக்க, டைம் ஆகுது, அண்ணியை பிக்கப் பண்ணனும்ல” என்று ஒரு பெண்ணின் குரல் கேட்கவும்,ஆத்மீகாவின் பார்வை அவனுக்கு பின்னால் சென்றது,
“இந்த இரிடேட்டிங் இடியட், காருக்கு வழி விடாமல் நின்னுகிட்டு லூஸ் டாக் பண்ணிட்டு இருக்கா, காலையில டென்ஷன் பண்ணிட்டு இருக்கா” என்று அவன் கூறவும்,
“ யாருண்ணா” என்று சொல்லிக் கொண்டே முன்னால் இருந்த பெண்ணை பார்த்தாள் திவ்யா.
“என்னம்மா, உங்களுக்கு என்ன பிரச்சனை?” என்று கேட்டுக் கொண்டே திவ்யா அருகில் செல்ல, ஆத்மகாவின் கண்கள் விரிந்தது, ஒரு கணம் திடுகிட்ட திவ்யா, “ஆத்மி” என்று அழைத்தபடி அவள் அருகில் சென்றாள்.
“திவ்யா..” என்று அவளும் சிறு சிரிப்புடன் அழைக்க, “ஹேய் என்னடி இது” என்று அவளை மேலிருந்து கீழ் வரை உற்றுப் பார்த்தாள்,
“நீ ஆத்மீகா தானே” என்று சிறிது தயக்கத்துடன் கேட்டாள், அதைக் கேட்டு விரக்தி புன்னகை வந்தது ஆத்மிகாவின் இதழில்,
“ஏன்டி அந்த அளவுக்கா உரு தெரியாம இருக்கேன்” என்று ஆத்மி சிரிப்புடன் கேட்க,
“இல்லையா பின்ன, ஏன் இப்படி இருக்க, நான் வேற யாரோனு நினைத்தேன், சரி இப்போ எங்க போற? யார் தேடி வந்திருக்கா? யாராவது வராங்களா?” என்று கேட்டாள்,
ஆத்மி ஒரு கணம் யோசித்தவள், “எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணு, இங்க பக்கத்துல எதாவது ஹாஸ்ட்டல் இருக்குனு தெரியுமா?” என்று கேட்டாள்.
இவர்கள் இருவரும் இப்படி பேசிக் கொண்டிருக்க, திவ்யாவின் பின்னால் நின்றிருந்தவனின் செல் ஒலித்தது, அதாவது ஆத்மிகாவுடன் சண்டையிட்டுக் கொண்டிருந்தவனின் செல் அது.
போனை எடுத்து கையில் பார்த்தவன், “திவ்யா..” என்று அடிகுரலில் சீறீனான், “அண்ணா இவ யார் தெரியுமா?” என்று திரும்ப,
“அண்ணி வந்தாச்சு நினைக்கிறேன், உங்க இன்ட்ரோ சீன் எல்லாத்தையும் அப்புறம் வைத்துக்கொள்ளலாமா, உன் ஃப்ரண்ட் ஃபர்ஸ்ட் வழியை விட சொல்லு, நான் போய் என் பொண்டாட்டியை கூட்டிட்டு வரணும்” என்று கடுப்புடன் கூறினான் அவன்.
அவர்கள் இருவரும் பேசுவதில் இருந்தே நண்பிகள் என்று புரிந்து கொண்டான், தன் சகோதரிக்கு இப்படி ஒரு ஃபிரண்டா வேற்று கிரக ஜந்து போல் அல்லவா இருக்கிறாள் என்று நினைத்துக் கொண்டவன், “வா போலாம்” என்று அவளை அழைத்தான்.
“அண்ணா” என்று சற்று அழுத்தமாக அழைத்தவள் தன் தோழியிடம் திரும்பி , “ஒரு நிமிஷம் இரு, நான் போய் எங்க அண்ணியை கூட்டிட்டு வந்துடறேன், அவங்களுடைய அம்மா வீட்டில் இருந்து வராங்க, அகில் குட்டியும் வரான்” என்று சொல்லிக் கொண்டு சென்றார்கள்.
ஆத்மிகாவிற்கு தற்சமயம் வேறு வழி இல்லை, அட்லீஸ்ட் அவள் போனையாவது வாங்கி பக்கத்தில் ஹாஸ்டல் ஏதாவது இருக்கிறதா என்று பார்த்துவிட்டு செல்லலாம், குழம்பி இருந்தவர்களுக்கு ஒரு சின்ன துருப்பு சீட்டாய் வந்து இருக்கிறாள் திவ்யா, அதனால் அப்படியே நின்றாள்.
உள்ளே சென்றவர்களின் கார் சிறிது நேரத்தில் அங்கே வந்தது, இன்னும் அங்கே வெளியே இருந்த லோக்கல் பஸ் நிறுத்தத்தில் ஓரமாக நின்று இருந்தாள் ஆத்மிகா,
“ என்ன திவி உன் ஃபிரண்டு இந்த இடத்தை பட்டா போட்டு வாங்கிட்டாளா?” என்று கேட்டான் அவன்,
“ ஹே அஜய், யாரு அது” என்று கேட்டாள் அவன் மனைவி தீபிகா, அவள் கையில் அவர்களின் இரண்டு வயது குழந்தை அகில் உறங்கிக் கொண்டிருந்தான்.
சட்டென அவள் புறம் திரும்பிய திவ்யா, “அண்ணி அவ என் ஃப்ரெண்ட், பக்கத்துல எதாவது ஹாஸ்டலுக்கு போகணும்னு சொல்றா, நாம இப்போ வீட்டுக்கு கூட்டிட்டு போயிட்டு, மார்னிங் அவள ஹாஸ்டலுக்கு அனுப்பிடலாமா, இந்த டைம்ல எந்த ஹாஸ்டல் இருக்கும்” என்று அவள் கேட்க,
“உன் ஃபிரண்டா?” என்று கேட்டாள் தீபிகா, “ஆமா அண்ணி” என்று சொல்ல, அவளும் திரும்பி பார்த்தாள், அவள் தோற்றம் உருவம் எல்லாமே வித்தியாசமாக இருந்தது, அவள் பார்வையை வைத்தே என்ன நினைக்கிறாள் என்று புரிந்து கொண்ட திவ்யா,
“ அவளுக்கு ஏதோ பிராப்ளம் என்று நினைக்கிறேன், அவ இப்படி கிடையாது தெரியுமா, எனக்கே சட்டுன்னு அவளை அடையாளம் தெரியல” என்று கூறவும், “ஓ..” என்று ஒரு சிறு அதிர்வு தான் தீபிகாவிடம்.
“சரி கூட்டிட்டு வா..” என்று சொன்னாள் அவள், “ஹம்..” என்றவள் வேகமாக இறங்கி ஆத்மிகாவிடம் வந்தாள்.
அங்கே பஸ் ஓரத்தில் ஸ்டோன் பெஞ்சில் அமர்ந்திருக்க, திவ்யா தன்னை நோக்கி வருவதை பார்த்த ஆத்மிகா எழுந்து நின்றாள்.
“ என்கூட வாடி..” என்று சொல்ல, “எங்க..?” என்று பதற்றத்துடன் கேட்டாள்.
“ஹாஸ்டல் தேடலாம்” என்று சொன்னாள், “இல்ல பரவால்ல, எனக்கு ஹாஸ்டல் மட்டும்..” என்ற அவள் இழுக்க,
“வாடி ஃபர்ஸ்ட்.. பிறகு பேசிக்கலாம், இந்த டைம்ல எங்க இருந்து ஹாஸ்டல் போய் தேடுவ, ரெஃப்ரெஷ் ஆகிட்டு போலாம், நானும் உன் கூட வரேன் ,ரெண்டு பேரும் சேர்ந்து பார்ப்போம்” என்று சொல்லவும்,
திவ்யா உடன் வருகிறேன் என்று சொன்னது அவளுக்கு நிம்மதியாக இருந்தது, கையில் போன் வேறு இல்லையே, “இல்ல.. உங்க வீட்ல, உங்க அண்ணா அண்ணி எல்லாம் இருக்காங்களே..” என்று அவள் தயக்கத்துடன் சொல்ல,
‘அட அண்ணிக்கிட்ட சொல்லிட்டேன் வாம்மா, அவங்க எல்லாம் நல்ல டைப் தான்..” என்று சொல்லிக் கொண்டே அவளை அழைத்து சென்றாள்.
காரின் முன் பக்கம் அஜயும் தீபிகாவும் இருக்க, பின்னால் அவளை அமரச் சொன்னாள் திவ்யா,
“ சாரி உங்கள ரொம்ப டிஸ்டர்ப் பண்ணிட்டேனோ?” என்று சிறு தயக்கம் இருந்தது அவளுக்கு,
“ஆமா பண்றதெல்லாம் பண்ணிட்டு, டிஸ்டர்ப் பண்ணிட்டேனானு வேற கேள்வி” என்று முனுமுனுத்தான் அஜய், அவன் பேசியது அவளுக்கு நன்றாகவே விழுந்தது,
தீபிகாவும், “அஜய் சும்மா இருங்க” என்று சொல்ல, அவன் வெளியே பார்த்தான், தீபிகா, “அது எல்லாம் ஒன்னும் இல்ல, கார்ல ஏறுங்க, பனி அதிகமா இருக்கு” என்றாள் தீபிகா..
சங்கடமாக அவள் நிற்க, “ஏறுடி..” என்று திவ்யா அவசரப்படுத்தவும், சங்கடமான அந்த சூழ்நிலையில் தான் இன்னும் தயங்கினால், ஓவராக பண்ணுவது போல் தோன்றும்” என்று நினைத்தவள் ஏறிக் கொண்டாள். அந்த சூழ்நிலைக்கு சற்றும் பொருந்தாமல் அமர்ந்திருந்தாள் அவள்.
“என்னடி ஆச்சு, ஏன் ஒரு மாதிரி, இப்படி இருக்கிற?” என்று திவ்யா கேட்க, ரியர்வியூ மிரர் வழியாக தீபிகா அவளை பின்னால் பார்த்தாள், அஜயும் பார்த்தான், அவள் சங்கடமாக தலை குனிந்து கொண்டிருந்தாளே தவிர ஒரு வார்த்தை பேசவில்லை,
“ உன் ஹஸ்பண்ட் எங்க ? என்னாச்சு?” என்று கேட்க, தன் கணவனை பற்றி கேட்டதும் கண்கள் மீண்டும் கலங்க ஆரம்பிக்க, உதட்டை கடித்து தன் அழுகையை கட்டுப்படுத்தினாள் அவள், “டிவோர்ஸ்..” என்று மெதுவாக கூறினாள் அவள்.
“வாட்” என்று திவ்யா அதிர, “அய்யோ இவ பேசுற பேச்சுக்கு, ஒருத்தன் எப்படி இவ கூட வாழ்வான், அதான் விரட்டி விட்டு இருப்பான்” என்று ஏளனமாக கூற, “அண்ணா” என்று திவ்யாவும், “அஜய் என்ன பேசுறீங்க” என்று தீபிகாவும் ஒரு சேர கூறினார்கள்,
அவன் அப்படி சொன்னதும் கண்களில் கண்ணீர் நிறைந்து விட்டது அவளுக்கு, பார்வையை வெளிப்புறமாக திருப்பிக் கொண்டாள் ஆத்மி,
“ அவங்க பர்சனல் லைஃப் பத்தி உங்களுக்கு எதுவும் தெரியாத வரைக்கும், நீங்க எதுவும் பேசாதீங்க, அப்படி ஏதும்னாலும் அவங்கள பத்தி கிரிட்டிஸைஸ் பண்ண உங்களுக்கு ரைட்ஸ் இல்ல” என்று தீபிகா சற்று அதட்டலுடன் கூறவே,
“ உண்மைதான் சொல்றேன், என்கிட்டேயே என்ன பேச்சு பேசுறா, அப்போ அவ புருஷன் கிட்ட எப்படி பேசி இருப்பா, அதான்..” என்று அவன் கடுப்புடன் கூறியபடி காரை ஓட்டினான்.
தீபிகா அவனை முறைத்து விட்டு ஏதோ சொல்ல வர, “ஆத்மி சாரிடி” என்று கூறினாள் திவ்யா,
“ஆத்மிகா நீங்க அவர் பேசுறது எல்லாம் பெருசா எடுத்துக்காதீங்க, என்று தீபிகா சொல்ல, “பரவாயில்லைங்க” என்றாள் அவள்.
“ தீபிகானே சொல்லுங்க” என்றாள் அவள், அவள், “ஹும்” என்று சொன்னாளே தவிர, எதுவும் சொல்லவில்லை.,
இவன் மனதில் இருப்பது வெளிப்படையாக கூறிவிட்டான், இன்னும் இது போல் நிறைய கேட்க வேண்டுமே எல்லாவற்றையும் எதிர்த்து தான் ஆக வேண்டும்,
ஒரு பெண் திருமணமாகாமல் ,அல்லது விவாகரத்து வாங்கி இருந்தாலும், கணவனை இழந்து இருந்தாலும் எத்தனையோ விதமான சூழ்நிலைகளைக் கடந்து வந்தால் தான் அவளால் வாழ முடியும், ஒரு பெருமூச்சு எழுந்தது அவளிடம்,
ஆத்மிகாவை திவ்யா பார்த்துக் கொண்டிருக்க, “அப்புறமா பேசலாம் டி” என்றாள் மெதுவாக ,அவளும் அதற்கு மேல் வற்புறுத்தவில்லை, அமைதியாக இருந்தாள், சிறிது நேரத்தில் அவர்களின் வீடு வந்தது.
இப்போது நன்றாகவே பொழுது விடிந்திருந்தது, காலை 6:30 மணிக்கு வீடு வந்து சேர்ந்திருந்தார்கள், அது ஒரு தனி வில்லா, பார்க்க அழகாக இருந்தது, பெரிய பிரம்மாண்டமான வீடு என்று சொல்ல முடியாது, ஆனால் 10 பேர் கூட வசிக்கும் அளவிற்கு கொஞ்சம் பெரிய வீடுதான்,.
“வாமா வாமா..” என்று கார் சத்தம் கேட்டவுடனே வெளியே வந்தார் வாசுகி, அங்கே அஜயும் தீபிகாவும் அகிலைத் தூக்கிக்கொண்டு வந்தார்கள், “வாமா டிராவல் எப்படி இருந்தது? அப்பாலாம் எப்படி இருக்கார்” என்று கேட்டுக் கொண்டே பேரனை வாங்கினார் அவர்,
அப்பொழுதுதான் திவ்யாவையும் அவளுடன் வந்த ஆத்மிகாவையும் பார்த்தார், “யாருடி இந்த பொண்ணு?” என்று திவ்யாவிடம் கேட்க,
“ அம்மா உங்களுக்கு தெரியலையா?” என்று கேட்டாள் அவள், ஆத்மிகா சிறு புன்னகையுடன் அப்படியே நிற்க “இவ.. இந்த பொண்ணு..” என்று யோசிக்க, “எப்படி இருக்கீங்க ஆன்ட்டி, நல்லா இருக்கீங்களா? ஃபேமிலி டூர் போலாமா?” என்று அவள் சிரித்தபடி கேட்க, அவர் கண்கள் அதிர்ச்சியில் விரிந்தது,
“ ஆத்மி..” என்றவர் அகிலை தீபிகாவிடம் கொடுத்துவிட்டு, “என்ன இப்படி ஆயிட்டாளே அடையாளம் தெரியல” என்று கேட்டுக்கொண்டே அவள் அருகில் வந்தார்.
அஜயும், “உங்களுக்கு அவளைத் தெரியுமா?” என்று கேட்டான், “தெரியுமாவா?” என்றவர்,
“ஆத்மீடா, எல்லாம் உள்ள வாங்க, பனி வேற அதிகமா இருக்கு, குழந்தைய வெளியே வெச்சிட்டு, வாங்க..” என்று சொல்லிக் கொண்டு உள்ளே அனைவரையும் அழைத்து சென்றவர், ஆத்மிகாவின் கையைப் பிடித்துக் கொண்டிருந்தார்.
“ உட்காரு மா, இருங்க எல்லாருக்கும் காபி கொண்டு வரேன்” என்று சொல்ல, அவள் தயக்கத்துடன் அமர்ந்திருந்தாள், எல்லாருக்கும் அவர் காஃபி கொண்டுவர, அதற்குள் அகிலை அவர்கள் அறையில் படுக்க வைத்து விட்டு வந்தாள் தீபிகா.
அவளிடமும் ஒரு கப்பை நீட்டியவர், தானும் அருகில் அமர்ந்து கொண்டு, “என்ன ஆத்மி எப்படி இருக்க? ஏதாவது உடம்பு சரியில்லையா?” என்று வருத்தத்துடன் கேட்க,
அவள், “இல்லை” என்று தலையாட்டினாள். அப்போது திவ்யா, “அண்ணா வந்துட்டாராமா?” என்று கேட்க..
“இன்னும் இல்ல, வர நேரம் தான்” என்று சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே, ஜிம் போய்விட்டு உள்ளே வந்தான் விஜய் மாயன் அந்த வீட்டின் மூத்த வாரிசு.
“இதோ வந்துட்டானே..” என்று சொன்னதும், அனைவரின் பார்வையும் அவன் புறம் திரும்பியது, ஆனால் ஆத்மிகா அவனைப் பார்க்கவில்லை, அவள் கவனம் வேறெங்கோ இருந்தது, யோசனையுடன் தலை குனிந்தபடி அமர்ந்திருந்தாள்.
“ஹம்,வந்தாச்சா,அங்கிள் எப்படி இருக்கார்” என்று கேட்டபடியே அஜயும் தீபிகாவையும் பார்த்தவன், அகில் எங்க?” என்று ஆளுமையான,அதே சமயம் நிதார்னமாக கேட்க, “ஹம் அப்பா இப்போ ஓகே மாமா, அகில் உள்ள தூங்குறான்” என்று கூறினாள் தீபிகா,
“ஹம்” என்றவன் அப்பொழுதுதான் அங்கே ஒருத்தி அமர்ந்திருந்ததை பார்த்துவிட்டு அவன் புருவங்கள் இடுங்கியது, ஆனால் அவளோ அவனை கவனிக்கவில்லை, தலையை குனிந்தபடி தான் அமர்ந்திருந்தாள்.
அவன் பார்வை உணர்ந்து மற்றவர்களும் ஆத்மிகாவின் புறம் திரும்ப, அஜய்க்கு தான் கோபம் வந்தது,
தங்கள் வீட்டிற்கு வந்திருக்கிறாள் தங்கள் அண்ணன், அவன் தான் இந்த வீட்டின் ஆலமரம், ஒரு மரியாதைக்கு கூட ஒரு வார்த்தை பேசாமல் இப்படி திண்ணக்கமாக அமர்ந்திருக்கிறாள் என்று நினைத்தான் அவன்.
விஜய் எதுவும் கேட்காமல் அவளைக் கூர்ந்து பார்த்துவிட்டு, மாடி ஏறப் போக, “ஹேய் ஆத்
மி” என்று அவள் ஏதோ நினைப்பில் இருப்பதை புரிந்த திவ்யா, அவள் தோளைத் தட்ட படியேற போனவன், அந்த பெயரில் சட்டென திரும்பி அவளைப் பார்த்தான்.
வருவான்.
