அழகன் 22
“ஆச்சி.. இங்க பாருங்கோ.. இந்த சிகப்பிய.. என்னமா அழகா இருக்கா பாருங்களேன்.. அச்சோ அதிலிருந்து என்னால கண்ண எடுக்கவே முடியல” என்று தன்னருகில் கருஞ்சிவப்பில் வெள்ளை புள்ளிகளை கொண்டு அங்கே இங்கே என்று குதித்து குதித்து விளையாடிக் கொண்டிருந்த கன்று குட்டியை தான் பார்த்து ரசித்து கொண்டு இருந்தாள் ஆண்டாள்.
“மாடா?? அச்சச்சோ..! நான் வரலப்பா..!”
“அத பாத்தாலே நேத்து பயமா இருக்கு” அதுவும் இங்க உள்ள காளையெல்லாம் பார்த்தா ரொம்ப ரொம்ப பயமா இருக்கு ஆச்சி”
“அதுவும் பெரிய கொம்பும் அதுங்க மூச்சு விடுறதுல உள்ள கோபமும் நினைச்சாலே எனக்கு உடம்பெல்லாம் பதறுது நான் வரலப்பா..!” என்று கொட்டில் பக்கம் மாடுகளை காண அழைத்தாலே இம்மாதிரி பதுங்கி ஓடிவிடுவாள் ஆண்டாள்.
“அட.. என்னடி இவ.. ஜல்லிக்கட்டு காளைய வளக்குற குடும்பம் டி இது.. அதுவும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டிலிருந்து நம்மூர் அவனியாபுரம் பாலமேடு புதுக்கோட்டை சுற்றியுள்ள மாவட்டத்துக்கலாம் நம்ம வூட்டு காள போய் ஜெயிச்சுட்டு வருதுங்க.. இவ என்னடான்னா கொட்டில் பக்கம் வர மாட்டேங்குறா.. ஒழுங்கா கம்முனு என் பின்னாடி வர நீ” என்று அப்பத்தான் ஒரு கையால் தடியை வைத்துக்கொண்டு நடந்து முன்னே செல்ல..
இவளோ முதல் நாள் பள்ளிக்கு செல்ல அடம் பிடிக்கும் சிறு பிள்ளையை போல “நான் போக மாட்டேன்” என்று தரையில் அமர்ந்து அழாத குறையாக.. காலை தரையில் அழுத்தமாக ஊன்றிக் கொண்டு நின்றிருந்தாள். முகத்திலோ அத்தனை பிடித்தமின்மை.. அதை காட்டிலும் அவ்வளவு பயம்..!
மருமகள் முகம் சுருங்கினாலே கலையரசிக்கு தாங்காது. அதிலும் பயத்தோடு நிற்பவளை எப்படி அனுப்பி வைப்பார் மாமியாரோடு?
“அய்த்த.. நீங்க மட்டும் போயிட்டுவாக.. புள்ள பாவம் பயப்படுறா” என்று மருமகளின் தாடையை பற்றி பேசிய கலையரசியை தன் கையில் வைத்திருந்த தடியாலே பின்பக்கம் ஒரு அடி அடித்தார் சொக்கியம்மாள்.
“மருமக பயப்படுறாளாம்.. இவ அக்கத்துல வச்சுக்கிட்டு பாதுகாக்காளாம். நல்லா வந்து வாய்ச்சிருக்கீங்க டி இரண்டு பேரும் வந்து யேன் வூட்டுக்கு மருமகளா.. இந்தாரு கலை இத்தன வருஷமா உன் மேல கை நீட்டிருக்கேனா நானு? உன் மருமகளுக்கு பரிஞ்சிட்டு வந்த மருமக எடுத்த பின்னாலயும் இந்த மாமியாரு கையால அடி வாங்காத சொல்லிப்புட்டேன்.. ஆமா..! நீ இந்தாண்ட வா” என்றவர் ஆண்டாள் முன் இடுப்பில் கைவைத்து அவளை முறைத்துப் பார்த்தார்.
“அம்மாச்சி.. அம்மாச்சி.. ப்ளீஸ் அம்மாச்சி..! நான்தான் சொல்றேன்ல நேக்கு அங்க வந்தாலே பயமா இருக்கு. மாட்ட விடுங்க.. அங்க அந்த சாண நாத்தம்.. எல்லாம் இன்னும் எனக்கு ஒருமாறி கொமட்டிண்டு வருது” என்றாள் முகத்தை அஷ்ட கோணலாக வைத்து.
“பார்றா.. சாணத்தை பார்த்தா உனக்கு கொமட்டிக்கிட்டு வருதா? இதே சாணத்த வைச்சு தேன்.. உங்க ஆளுங்க எல்லாம் பூஜை பண்ணுவேள். ஞாபகம் இருக்கானோ? முன்னெல்லாம் இந்த சாணத்தை கரைச்சு வாசல்ல தெளிச்சி.. வீடு மெழுகி.. அதுக்கப்புறம் தேன் கோலம் போட்டுக்கிட்டு இருந்தாய்ங்க.. ம்ஹீம்.. இப்ப எல்லாமே மாறிப்போச்சு..! அதுவொண்ணும் அவ்வளவு அசிங்கம் இல்ல டி எம்புட பேத்தி. நம்ம போடுறத விட அது போடுறது நாத்தம் கம்மியாத்தேன் இருக்கும்” என்றார் சொக்கியம்மாள் நிதர்சனத்தை நிச்சியமாய்..
ஆண்டாளோ “ச்சீ..!” என்று முகத்தை சுளித்தாள்.
“அது என்னடி இளவட்ட குமரி உள்ளத சொன்னா உனக்கு நோகுதா? ஒழுங்கா என்கூட கிளம்பி வர்ற.. அழகன் பொண்டாட்டியா இதெல்லாம் நீ தான் பார்த்தாகணும் உன்னைய என்ன மாட்டு சாணி அள்ள சொன்னோமா? இல்ல மாட்ட குளிப்பாட்டி நல்லது கெட்டதுனு பங்குடு பாக்க சொன்னோமா? வந்து மே பார்வை பாக்குறதுக்கு உனக்கு இம்புட்டு கொழுப்பு ஆகாதடி ராசாத்தி..!” என்றவர்,
“அடியே எம்பூட்டு மருமக கலை.. நாளையிலிருந்து உன் மருமவளுக்கு போடுற நெய்ய குறை. அப்பதேன் அவளுக்கு கொழுப்புக குறையும். நீ வா தினமும் என் கூட சாயங்காலம் இந் க்ஷநேரத்துக்கு கொட்டிலுக்கு வரவ.. அங்கன உள்ள மாட எல்லாம் பாக்குறவ.. மேற்பார்வை என்னென்ன பார்க்கணும்னு நான் உனக்கு கத்து கொடுக்கிறேன்” என்றார்.
“நான் வரல.. வரல..” என்றவளை விடாப்பிடியாக இழுத்துச் சென்றார் சொக்கியம்மாள்.
“அவதான் வேண்டாம்னு சொல்றள அய்த்த..” மென்று முழுங்கி வார்த்தைகளை மெதுவாக கக்கினார் கலையரசி மருமகளுக்கு ஆதரவாய்..
“வந்தேன்னா பாரு..! எல்லாம் நீ கொடுக்கிற செல்லம் தேன் அவளுக்கு இம்புட்டு ஏத்தம்..! அவ விஷயத்துல ஒன்ன விட்டேனா, அவள கடைசி வரைக்கும் கோழி இறக்கைக்குள்ள பொத்தன குஞ்சு மாதிரியே அவளை வைச்சு நீ கெடுத்துபுடுவ.. இந்த குடும்பத்துக்கு ஏத்த மருமகளா நாலு நல்லது கெட்டது எல்லாம் சொல்லிக் கொடுத்து நான் இருக்கிற காலத்திலேயே அவளை ஆளாக்கி விடணும். நீ போ.. அங்கிட்டு போய் வேலையை பாரு” என்று சத்தமாக பேசியவர், தினமும் மாலையில் ஆண்டாளை அங்கே கொட்டிலுக்கு அழைத்துச் செல்வது வழக்கமாக்கி கொண்டார்.
முதலில் தன் முந்தானையாலோ அல்லது போட்டிருக்கும் சுடிதார் ஷாலால மூக்கை பொத்திக்கொண்டு.. காலை பார்த்து பதமாக ஒவ்வொரு அடியாக ஏதும் மிதித்து விடுவோமோ என்று அப்படி ஜாக்கிரதையாக வந்தவள் தான் ஆண்டாள்.
அப்பொழுதுதான் பிறந்து நான்கு நாளாகி இருந்த கன்று குட்டியை இவளிடம் அழைத்து வந்து உறவாட விட்டார் சொக்கியம்மாள்.
“அச்சோ ஆச்சி.. நேக்கு பயமா இருக்கு தொட.. வேணாம்” என்று பயந்தவள் கையை பிடித்து அந்த கன்றுக் குட்டியை தொட வைத்த சொக்கியம்மாளையே கதறடித்தாள் ஆண்டாள்.
ஆனால் சொக்கியம்மாள் யாரு? விடுவாரா என்ன?
நிதமும் அங்கே அவளை இழுத்துச் சென்று விடுவார்.
ஒரு கல்லு பெஞ்ச் போட்டு இருக்கு அவ்விடத்தில் அமர்ந்து இவளையும் அருகில் அமர வைத்து கன்றுக் குட்டியின் கயிற்றை கையால் பற்றிக்கொண்டு, மற்றொரு கையால் இவள் கையை பிடித்து மெதுவாக அது தலை கன்னம் என்று வருட வைத்தார்.
முதல் நாள் அருவருப்பாக தான் இருந்தது ஆண்டாளுக்கு. ஏன் இங்கு வந்து விட்டு, வீட்டுக்கு சென்றவுடனே ஒரு குளியலை போட்டவள் தான் ஆண்டாள்.
ஆனால் நாட்கள் செல்ல.. செல்ல.. அதுவும் இந்த கன்று குட்டியின் அருகாமை அவளுக்கு அத்தனை பிடித்தது.. அதனை ரசிக்க வைத்தது..!
அதன் பட்டுப்போன்ற மென்மையான முடி.. துருதுறுக்கும் கண்கள்.. இங்கே அங்கே என்று துள்ளிக் குதிக்கும் நீண்ட கால்கள்.. இவள் அருகே வந்து ஒட்டி உரசி நின்று கொஞ்சும் பாங்கு.. அவள் கையை தலையில் வைத்தால் இன்றும் நன்றாக தடவி கொடு என்பது போல முட்டி முட்டி உறவாடும் அழகு.. என்று அவளை கொள்ளை கொண்டது அந்த இளம் கன்று..!!
அதற்கு சிகப்பி என்று பெயரும் அவளே தான் வைத்தாள்.
முதல் இரண்டு, மூன்று நாட்கள் தான் மூக்கை பொத்திய வந்த வண்ணம் வந்தாள். பிறகு அந்த வாசனை நாற்றம் எல்லாம் அவளுக்கு பழகிவிட்டது.
சொக்கியம்மாள் அருகில் இருந்தால் சற்றே தைரியம் பெற்று அவ்வப்போது பசு மாடுகளுக்கு அருகில் செல்லுவாள். ஆனால் காளையை கண்டால் இன்னமும் காது தூரம் தான் ஓடுகிறாள்.
“இங்க பாருங்கோ அம்மாச்சி.. எனக்கு இந்த நாத்தம் மாடு கன்னு குட்டி இதெல்லாம் பழகி விட்டிங்க ஒத்துக்கிட்டேன். ஆனா அங்க கொம்பு வச்ச சிங்கம் இன்னும் சிலுத்துக்கிட்டு நிக்குது பாருங்கோ.. அது கிட்ட எல்லாம் என்னை கொண்டு போய் சிக்கிவிட்டாதிங்கோ..! அது பக்கத்துல கூட வர வேண்டாம் அங்கிருந்து எடட்இ மூச்சு விட்டாலே நான் சிதறி போய்டுவேனாக்கும். அப்புறம் சேதாரம் உங்க பேரனுக்கு தான் பார்த்துக்கோங்க” என்று மறைமுகமாக கூறியவளின் கொமட்டில் குத்தியே சொக்கியம்மாள்,
“ஆனாலும் வாய் உனக்கு இன்பும்டு இம்புட்டு ஆகாதுடி..! என்னோட பேரன சொல்லி என்னைய பயமுறுத்துறியா? இங்கன பாரு ரொம்ப எனயேன்கிட்ட சிலித்துக்கிட்டு நிக்காத அப்புறம் அவன விட்டு நம்ம வெள்ளையன் கருப்பன் காங்கேயன் கிட்ட எல்லாம் உன்னைய பழக விட்டுபுடுவேன்” என்றார் கெத்தாக..!
கையெடுத்து கும்பிட்டவர் “ஆச்சி.. போதும் போதும்.. இந்த மட்டில எனக்கு நீங்க கலங்க விட்டதே போதும்..!” என்றாள்.
சொக்கியம்மாள் அதன் பிறகு அவளை வற்புறுத்த வில்லை.
ஆனாலும் தன்னோடு அவளை அழைத்து வருவார். அங்கே பால் கறப்பதை மேற்பார்வையிடுபவர், இத்தனை மாடு.. இத்தனை லிட்டர் கிடைக்கும்.. எவ்வளவு தண்ணீர் சேர்க்கணும்.. இவ்வளவு பாலு டெம்போவுக்கு போகுது.. இவ்வளவு பாலு நம்ம வீட்டு எடுத்தது போக.. இவ்வளவு லிட்டர் பால பக்கத்துல உள்ளவங்களுக்கு கொடுக்குறோம் என்று கணக்கு விவரங்களை சொல்லுவார்.
அதை கையில் வைத்திருக்கும் நோட்டிலும் கையோடு எழுத சொல்லுவார்.
இவ்வளவு நாட்களாக இவர் தனியாக தான் பார்த்தார். சில சமயம் கலையரசி வருவார். ஆனால் இதையும் ஆண்டாளுக்கு பழகிக் கொடுக்க.. அனைத்துமே கற்றுக் கொடுத்தார் அவ்வீட்டின் பெரியவராய்.
அன்றும் வந்து பால் எல்லாம் கறந்து எடுத்து சென்ற பின் சிகப்பியும் முட்ட முட்ட பால் குடித்தவுடன் வயிறு நிரம்பிய சந்தோஷத்தில் இவளோடு தான் விளையாண்டு கொண்டு இருந்தது.
அவளை சுத்தி சுத்தி வருவதும்.. அவளிடம் செல்லும் கொஞ்சுவதும்.. தலையால் அவள் கையில் முட்டுவதும்.. பின்பு அவள் குனிந்து நின்றால் கன்னத்தில் உரசுவதும் நாக்கால் நக்குவதும் என்று ஏக அட்டகாசம் தான்.
முதல் முறை கன்னுக்குட்டி நக்கும் போதெல்லாம் அதன் சொரசொரப்பான நாக்கு தீண்டியதில் அரண்டே விட்டாள் ஆண்டாள்.
இப்பொழுது அனைத்துமே பழகிவிட்டது. ஒரு சிறு குழந்தையின் குதூகலிப்போடு பாசத்தோடு மிருகங்களுக்கும் பழக தெரியும் என்பதை அனுபவரீதியாக உணர்ந்து கொண்டவள், அதை ஆத்மார்த்தமாக அனுபவித்தாள்.
மாலை தேநீர் பலகாரங்களோடு அமர்ந்து மூவரும் உண்டு கொண்டிருக்கும் அந்தி மாலை நேரம் எப்பொழுதும் அழகாக இருக்கும்.
ஆம்..! மூன்று தலை முறை சேர்ந்த பெண்களும் ஒரே இடத்தில் அமர்ந்து அதுவும் ஒற்றுமையாய் பேசி சிரிப்பதெல்லாம் விசித்திரம் அல்லவா? அதிசயம் அல்லவா? அதுவும் மாமியார் மருமகள் என்ற உறவில்??
“நீங்க ஏன் அம்மாச்சி எப்படி இருக்கீங்க? பொதுவா வீட்டுக்கு புது மருமக வந்தா அவ கையில காசு கொடுக்க கூடாது.. வீட்டு கணக்கு எல்லாம் காட்ட கூடாது.. வீட்டு நிர்வாகத்த கத்துக்க கூடாது.. இப்படி தானே காலம் காலமாக நடக்குது?
எத்தன சீரியல மாமியார் பண்ணி நான் பார்த்திருக்கேன். நீங்க என்னடான நான் வந்து ரெண்டு மூணு மாசத்துல இதெல்லாம் நீ தான் பாக்கணும் இந்தப்படின்னு கொடுக்குறீங்க? இதெல்லாம் வெரி வெரி ராங் ப்ரோ..!” என்று அவள் கூறிய தினுசில் கலையரசி வாய் பொத்தி சிரிக்க..
அவள் முதுகில் ஒரு தட்டு தட்டி கலகலவென்று சிரித்தார் சொக்கியம்மாள்.
அவரது அந்த தட்டலில் வலிமிக முதுகை தேய்த்துக்கொண்டவள், “எதா இருந்தாலும் வாயாலே சொல்லுங்க அம்மாச்சி இப்படியெல்லாம் கையால பேசாதீங்க என் உடம்பு தாங்காது..!” என்று நெளிந்தாள்.
“அதுக்கு தேன் சின்ன சிறுக்கி என்னைய மாதிரி நாளும் கறியும் நல்லி எலும்பு நல்லா திங்கறதுங்குறது.. ஏதோ சோத்த கொஞ்சமா போட்டு காய்கறியை கண்ணுக்கு தெரியாம வச்சு கொறிச்சுக்கிட்டு இருந்தா அப்புறம் உடம்புல எங்க வலு இருக்கும்? என் வயசுக்கு எல்லாம் நீ எல்லாம் இப்படி நிமிர்ந்து உட்கார்ந்து இருப்பியா?” என்று கேட்டதும்..
“பர்ஸ்ட் உங்க வயசுக்கு எல்லாம் நான் இருக்கிறனான்னு பார்ப்போம்,” என்றதும் கலையரசுக்கு கோபம் வர,
“என்ன பேச்சு இது பொழுது போன நேரத்துல பொம்பள புள்ள வாயிலிருந்து( வாயில வாயில அடி..!” என்று அவர் ரெண்டு போட..
“ஆக மொத்தம் மாமியாரும் மருமகளும் சேர்ந்து என்னை அடிக்கிறீங்க இருங்க இருங்க ராத்திரிக்கு என் புருஷன் வரட்டும் உங்க ரெண்டு பேரையும் மாட்டிக் கொடுக்கிறேன்” என்று வம்பு இழுத்துக் கொண்டிருந்தாள்.
“இங்க பாருடி சின்னவளே, எனக்கு உன்னைய பிடிக்காத விஷயத்துல கொண்டு போய் விட்டு கொடுமைப்படுத்தணும்னு எண்ணம் இல்ல.. இந்த வூட்டு கணக்கு நிர்வாகம் எல்லாம் எப்பவுமே பொம்பளைங்க நம்ம கிட்ட தேன் இருக்கணும். அப்புறம் இந்த மாடு பாலு கணக்கு, வாய்க்கா வய வரப்பு கணக்கு, தோட்டம் தொறவு இந்த கணக்கெல்லாம் பொம்ளைங்க பார்க்குறது, நம்ம சொந்த காலு நிக்குற மாதிரி தேன்..! என் புருஷன் தேன் சம்பாதிக்கிறானே நான் இதெல்லாம் எதுக்கு பாக்கணும்னு வீட்டுக்குள்ளே இருந்தா.. நமக்கான மரியாதை எங்கேயும் கிடைக்காது. ஏன் புருஷன் கிட்ட கூட கிடைக்காது..!” என்றதும்,
“என் புருஷன் அப்படி எல்லாம் சொல்ல மாட்டார்” என்று கர்வமாக சொன்னாள் ஆண்டாள்.
“சந்தோசம் டி ரொம்ப சந்தோசம்..! ஏன்னா உன் புருஷனை வளத்தது நாங்க..! அப்படித்தான் வளர்த்து இருக்கோம். ஆனா எல்லா ஆம்பளைங்களும் அப்படி இருப்பாங்கன்னு சொல்ல முடியுமா சொல்லு?” என்றார் ஆண்டாளை அழுத்தமாக பார்த்து..
“சொல்ல முடியாதுதான் ஆச்சி” என்று தலையசைத்தாள்.
“ஹான்.. அதேன் சொல்லுதேன். ஒவ்வொரு பொம்பளையும் தனக்கான செலவு சமாளிக்கிற வகையில சம்பாத்தியத்தை வச்சிக்கிட்டா.. எந்த ஆம்பளையும் அவளை அடிமையா நடத்த மாட்டானுவோ..! எந்த மாமியாளும் அவளை நசுக்க மாட்டாளுவோ..!” என்றார் தீர்க்கமாக..!
“அப்ப பணம்தான் எல்லாத்துக்கும் பிரதானமா ஆச்சி?” என்று கலங்கிய முகத்தோடு கேட்ட ஆண்டாளின் தாடையை பற்றி செல்லமாக ஆட்டியவர்,
“அப்படி இல்ல ஆத்தா..! நம்ம காலுல நிக்கிற தெகிரியத்தையும், தன்னம்பிக்கையையும் சுய மரியாதையையும் நமக்கான ஒரு அடையாளத்தையும் தரும்..! அந்த அடையாளம் எதுவா வேணா இருக்கட்டுமு.. நீ பெரிய வேலை செய்யணும் பெரிய பெரிய படிப்பு படிச்சு தான் செய்யணும் எல்லாம் இல்ல ஆத்தா.. இப்படி வீட்டோட ஒரு காய்கறி கனினு தோட்டம் போட்டு கூட சொல்லாலாம்.. நான் தேன் இந்த மாடுகள வளக்க ஆரம்பிச்சேன். இதுல வர்ற பணம் எனக்கும் உன் மாமியாளுக்கு மட்டும் தேன்..! அவ பொண்ணுக்கு கூட கிடையாது” என்றதும் ஆண்டாள் சொக்கியம்மாளை ஆச்சரியமாக பார்த்தாள்.
“அதுபோல கண்ணி சம்பாதிக்கிறது அவளோட செலவுக்கு மட்டும்தேன் அதை நாங்க தொடறது கூட இல்ல..” என்றவரை வாகாக கட்டிக் கொண்டாள் ஆண்டாள்.
“யூ ஆர் அசேம் ஆச்சி..! எல்லா ஆத்துலேயும் உங்களைப் போல தொலைநோக்கு பார்வையோடு ஒரு வயசான லேடி இருந்தா போதும் கஷ்டமே படாது” என்றாள்.
“அப்படி எங்கடி விட்டு வைக்கிறீக? நாங்க அறிவுரை சொன்னாலே வேப்பங்காயா கசக்குது உங்களுக்கு.. நீங்களா தனி குடும்பம் வேணும் தன்னிச்சியாதான் முடிவைப்பேன் பிச்சிக்கிட்டு போயிடுறீக.. எங்கள மாதிரி உள்ளவக எல்லாரையும் கொண்டு போய் ஹோமு ஆசிரமம்னு சேர்த்து விடுறீக? பின்ன.. எப்படி வெளங்கும் வீடு? என்று கேட்டார்.
இதுக்கு என்ன பதில் சொல்வது என்று விழித்தாள் ஆண்டாள். மருமகளின் பார்வையைக் கண்டு இன்னும் கலகலத்து சிரித்தார் கலையரசி.
அந்நேரத்தில் தான் அங்கயற்கண்ணியும் பள்ளி முடிந்து வந்தாழ்.
எப்பொழுதும் சற்று நேரம் சென்று தான் வருவாள்.. அதற்குள் இவர்கள் தங்கள் மாலை வேளை தேநீர் அருந்துவதை முடித்துவிட்டு, அடுத்து அவரவர் வேலை பார்க்க சென்று விடுவார்கள்.
இன்று இவர்கள் மூவரும் அமைந்திருப்பதை பார்த்து ஒரு மெச்சுதல் பார்வையோடு “பார்றா.. மாமியார மருமகள் எல்லாம் ஒன்னா சேர்ந்து உட்கார்ந்து பேசிட்டு இருக்கிறத..?” என்று கிண்டல் அடித்தபடி அன்னைக்கும் ஆண்டாளுக்கும் இடையில் வந்து அமர்ந்தாள்.
அங்கே தண்ணீர் அமர்ந்த அடுத்த நிமிடம் அத்தை எனக்கு உள்ள வேலை இருக்கு என்று எழுந்து சென்று விட்டாள் ஆண்டாள்.
மூவரும் அதிர்ச்சியாகி இதரை பார்க்க.. நெற்றி சுருங்க ஆண்டாளை பார்த்தவள், அவளை தேடிக்கொண்டு சென்றாள் அங்கயற்கண்ணி.
தொடரும்..
