Share:
Notifications
Clear all

அழகன் 16

 

Jiya Janavi
(@jiyajanavi)
Member Admin
Joined: 12 months ago
Messages: 310
Thread starter  

அழகன் 16

 

 

“ஏற்கனவே.. உங்க.. உங்களுக்கு வேற பொண்ணோட கல்யாணம் பேசி இருந்தாங்களா? ஆனா நேக்கு அத பத்தி எதுவும் தெரியாதேனா?” என்று கேட்டாள் அதிர்ச்சி விலகாமல் ஆண்டாள்..!

 

அவளின் அப்பட்டமான அதிர்ச்சியை கண்ட பின்பே ‘ஓ.. இத எதுக்கு இவளிட்ட இப்போ சொன்னோம்?’ என்று நெற்றியைத் தேய்த்துக் கொண்டான் அழகன்.

 

 

‘ஆனாலும் பொய் மேல் கட்டப்படும் கோட்டை சீட்டு கட்டு கோட்டையைப் போல அடித்தளம் சரியில்லாமல் எப்போது வேணாலும் சரிந்து விழும். அதனால் அவளிடம் உண்மைய கூறி விடுவதே சரி.!’ என்று நினைத்த அழகன் தன் குரலை செருமிக் கொண்டு,

 

அங்கிருந்த கயிற்றுக் கட்டிலில் அமர்ந்தவன் மனைவியையும் தன் அருகே அமர்த்திக் கொள்ள, அவள் கையை பிடிக்க போக‌‌.. அவளோ அவன் கையை தட்டி விட்டு இரண்டடி பின்னால் நின்று கொண்டாள்.

 

“ம்ப்ச்.. பொம்மா..” என்ற சலித்தவன் மீண்டும் அவளின் கையைப் பிடிக்க செல்ல.. அவளோ தனது கையை இப்பொழுது பின்னால் கட்டிக் கொண்டாள் விரைப்பாக.

 

“எனக்கு கோபத்தை கிளப்பாதடி பொம்மா.. மொத நான் என்ன சொல்றேன்னு முழுசா கேளு.. அதுக்கப்புறம் என் மேல கோபப்படு” என்றவன், இப்பொழுது வலுக்கட்டாயமாக அவள் கையை பிடித்து இழுத்து கட்டிலில் அமர வைத்து, அவளை இடித்தப்படியே அமர்ந்து கொண்டான் பிடித்த கைகளை விடாமல்..!

 

அவளோ நிமிர்ந்து அவனை பார்க்காமல் அவன் அழுத்தமாக பற்றி இருந்த தன் மணிக்கட்டை பார்த்தாள்‌.

 

“நீ சூசகமா பார்த்தாலும் உன் கைய விடுற எண்ணம் எனக்கு துளிக் கூட இல்ல.. நான் சொல்றது அமைதியா இப்ப நீ கேட்க போற.. ஒழுங்கா கேளு..!” என்று அதிகாரமாக கட்டளையிட்டவனை கண்டு அழுகையும் கோபமாய் கண்கள் கலங்க பார்த்தாள் ஆண்டாள்.

 

“ம்ப்ச்.. அழுது தொலையாதடி கடுப்பா இருக்குடி..!” என்று அதுக்கும் காய்ந்தவனை கண்டு அவளுக்கு இப்பொழுது உதடுகள் துடித்தன..!

 

“நீங்க என்னைத் திட்டுறேள்..! அப்போ என்னை உங்களுக்கு புடிக்காம போச்சா?” என்று அழுதவளைக் கண்டு,

 

“ஸ்ஸ்.. படுத்துறாளே..!” என்று ஒரு கையால் சிகையை கோதி கொண்டவன்,

 

மறு கையால் அவள் தாடையை பற்றி தன்னை நோக்கி பார்க்க வைத்து,

 

“என்னமோ நான் பல வருஷமா அந்த பொண்ணோட ஒன்னு மண்ணா பழகி கல்யாணம் பண்ணிக்க போற நேரத்துல.. அது நின்னு.. அப்புறம் அந்த பொண்ண மறக்க முடியாம, தவியா தவிச்சு தாடி வளர்த்து.. அதுக்கப்புறம் ஊரும் சொந்தமும் பேசுறது வைச்சு, பெத்தவங்களுக்காக ஒன்ன விருப்பமே இல்லாம கல்யாணம் பண்ணிட்டு, வாழாம தள்ளியே இருக்குற மாதிரி கண்ட கண்ட கற்பனை எல்லாம் ஓட்டாதடி..!” என்று அவன் மூச்சு விடாமல் பேச..

 

அவளோ திடுக்கிட்டு அவனைப் பார்த்தாள். ஏனென்றால் அவளது கற்பனையில் இவ்வாறு தான் ஓடிக்கொண்டிருந்தது நினைவுகள் எல்லாம்..!

 

அவளின் அதிர்ச்சி முகமே அவள் அகத்தினை அவனுக்கு எடுத்து உரைக்க..

 

“நினைச்சேன்டி..! லூசுத்தனமா இப்படித்தான் யோசிப்பனு.. ஓவரா படம் சீரியல் எல்லாம் பார்த்து கெட்டுப் போயிட்ட டி பொம்மா” என்று மறு கையால் அவள் தலையை லேசாக தட்டினான். மீண்டும் அவனை முறைத்துக் கொண்டே தலையை தேய்த்துக் கொண்டாள் அழகனின் ஆண்டாள்.

 

“கேளு.. பெரிய பிளாஷ்பேக் கதையெல்லாம் இல்ல..! நீ நினைக்கிற மாதிரி லவ் ரொமான்ஸ்னு எந்த எழவும் இல்லை..! மொத மொத நான் தொட்ட பொண்ணும் நீ தான்.. கடைசி பொண்ணும் நீ தான்..!” என்றதும் அவளது முகத்தில் மெல்லிய நாணம் சிவப்பாய் படர்ந்தது..!

 

அதை ரசித்துப் பார்த்தவன் “இப்போ இந்த நிமிஷம்.. உனக்கு நீ எனக்கு நான்..! நம்ம ரெண்டு பேரும் தான் புருஷன் பொண்டாட்டி..! இதுதான் உண்மை.. இதுதான் நிதர்சனம்..! அதை புரிஞ்சுக்கோ நான் சொல்றதெல்லாம் கடந்த காலம். கடந்த காலங்குறதே.. பழசு தானே? அதையேன் நிகழ்காலத்தில கொண்டு வந்து நம்ம எதிர்காலத்தை வீணா அடிச்சுக்கணும்?” என்றவனின் பேச்சில் அவளுக்கு மனதில் நிம்மதி பெருமூச்சு..!

 

“எனக்கு மணிமாறனு ப்ரண்ட் ஒருத்தன்.. பல வருஷமா பழக்கம்”

 

“காலேஜ் ஃபிரண்டா?” என்று கேட்டாள் அவள்.

 

“ம்ப்ச்.. இல்லயில்ல.. பொண்ணுங்க உங்களுக்கு வேணா காலேஜ் ஸ்கூல்ல படிச்சவங்க மட்டும் பிரண்டா இருக்கலாம். ஆனா பசங்களுக்கு போற வர இடத்துல பழகுற எல்லாருமே பிரண்ட்ஸ்ங்க தான்” என்று சிரித்தவன், 

 

“ஸ்கூல்ல லீவு விட்டா சின்னதுல இருந்தே பேட்ட தூக்கிட்டு வயல் பக்கம் போறதுதான் பசங்களோட முக்கிய பொழுதுபோக்கே.. அப்படி பழகினவன் மணிமாறன். பக்கத்து ஊரு காரன் தான். அப்படியே எங்க பழக்கம் தொடர்ந்துச்சு.. வேற வேற ஸ்கூலு‌‌.. வேற வேற காலேஜ்.. வேற வேற தொழில்னு இருந்தாலும், மனசு ஒரே அலைவரிசையில பயணிச்சுன்னா அந்த நட்பு ரொம்ப காலம் நீடிக்கும்னு சொல்லுவாங்க அது போல தான் எங்க நட்பும்..! அதுவும் அப்ப எல்லாம் நம்ம வீட்ல இருந்து காளைங்கள ஜல்லிக்கட்டுக்கு விடுவோம்..! நிறைய இடத்துல நம்ம காளைங்க பரிசுகளுடன் தான் வருவாங்க.. அதெல்லாம்.. பாக்குறதுல மணிமாறனுக்கு ஒரு தனி பிரியம் நம்ம வீட்டு மேல..!”

 

“ஏன்னா அவங்க வீட்ல இந்த மாதிரி காளைங்க வளர்க்கறது எல்லாம் கிடையாது. பொதுவா கிராமத்தில் மாடு ஆடு கோழி எல்லாம் வளர்ப்பாங்க.. ஆனா அது தங்கள் தேவைகளுக்குத்தான் பாலு இரைச்சி முட்டைக்காக.. ஆனா, அதை தாண்டி நம்மள மாதிரி சில குடும்பத்துல ஜல்லிக்கட்டுக்காகவே காளைகள வளர்ப்போம் இல்லையா? அது அவனுக்கு பெரிய விஷயம்.. நாம எங்கெங்கெல்லாம் காளைகள அழைச்சிட்டு ஜல்லிக்கட்டுக்கு போறோமோ‌. அங்கெல்லாம் தவறாம அவனும் வந்துடுவான்”

 

“எதே? இந்த மாடுகளோட திமில விடாம கட்டிப்பிடிச்சு.. அது சீறுறதையும் தாங்கிக்கிட்டு.. சில சமயம் முட்டி கிழிக்கும்.. பல சமயம் அவங்கள புரட்டி விட்டு மேலே ஏறி ஓடும்.. சில சமயம் கொம்புகளால கூட குத்தும்.. இதெல்லாம் பார்க்க அவ்வளவு ஒரு ஆர்வமா அவருக்கு?” என்று அவள் ஒருவித விருப்பமின்மையோடு கேட்க,

 

“ஹா..‌ ஹா… பொம்மா.. பொம்மா..” என்று அவள் தலையில் கை வைத்து தலையாட்டி சிரித்தவன் “உனக்கு இதெல்லாம் பயம். ஆனா எங்களுக்கு இதெல்லாம் வீரம்..! அத உனக்கு சொன்னாலும் புரியாது..! அந்த பெருமையும் தெரியாது..!” என்றான் கர்வமாக..!

 

“நீங்க மதுரைக்காரங்கறதுக்காக ஜல்லிக்கட்டு பண்றது பெருமையா நினைக்கிறீங்களாக்கும்?” என்றாள் முகத்தை சுழித்து..

 

“அடி எவடி இவ..! மதுரகாரன் மட்டும் தேன் ஜல்லிக்கட்டு பண்றான்னு உனக்கு எவன் சொன்னான்? எந்தந்த ஊர்ல எல்லாம் பண்றாங்க தெரியுமா?” என்று வரிசையாக ஊர்களின் பட்டியலை அடுக்கி அவனை இவள் வாய் விரித்து பார்த்தாள்.

 

“தமிழர்களின் மரபுவழி விளையாட்டுல இது ஒன்னு. ஏறு என்பது காளை மாட்டைக் குறிக்கும். மாட்டை ஓடவிட்டு அதை நாம அடக்குறது, அல்லது கொம்பைப் பிடித்து வீழ்த்துவதான விளையாட்டு. சிவகங்கை மாவட்டம் மஞ்சுவிரட்டுவூக்கு "சொர்க்க பூமி”. தமிழ் நாட்டில் அதிகமாக மஞ்சுவிரட்டு நடைபெறு‌ம் மாவட்டம் சிவகங்கை தேன்” 

 

 தமிழ்நாட்டுல பல மாவட்டங்கள் ஜல்லிக்கட்டு நடக்குது. மதுரை மாவட்டம் அவனியாபுரம், அலங்காநல்லூர் மற்றும் பாலமேடு ஊர்களிலேயும், திருச்சி பெரிய சூரியூர், நாமக்கல் மாவட்டம் அலங்காநத்தம், சேலம் மாவட்டம் தம்மம்பட்டி , கூலமேடு, தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம், புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை, வேலூர் மாவட்டம் திருவண்ணாமலை மாவட்டம் ஆதமங்கலம் புதூர் மற்றும் தேனீமலை, தேனி மாவட்டம் போன்ற ஊர்களில், ஆண்டுதோறும் தை மாசம் பொங்கல் திருநாளையொட்டி நடக்கும்.. அங்க இருக்கிற மக்களும் ரொம்ப சந்தோஷமா தங்களோட மாட்ட அலங்கரிச்சு ஜல்லிக்கட்டிற்கு கூட்டிட்டு வருவாங்க”

 

“நீ நினைக்கிற மாதிரி இது வெறும் பொழுதுபோக்க விளையாட்டை மட்டும் கிடையாது. அதை தாண்டி ஒரு வாழ்வியலை இதுல அடங்கியிருக்கு..!

 

 

ஜல்லிக்கட்டு நிகழ்வுக்குக் கூடும் கூட்டத்தில் இருப்பவங்க யார் யார்னு பார்த்தா உனக்கு இது விளங்கும் டி. போட்டியில் பங்கேற்கும் காளையோட அதன் உரிமையாளரும் அவிய்ங்க உறவுகளும் அவிய்ங்க ஊரைச் சேர்ந்தவர்களும்னு பலர் வருவாய்ங்க..”

 

“எதே? ஒரு காள ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கெடுக்கறத ஒரு ஊரே வந்து பாக்குமா?” என்ன கதை விடுறியா என்று அவள் அவனைப் பார்த்தாள்.

 

“அது அப்படி தான் பொம்மா..! ஏன்னா.. அந்தக் காளை போட்டியில் பங்கேற்பது ஊருக்கான கௌரவம். மாடுபிடி வீரர்கள் வரும்போது அவிய்ங்கள ஊக்குவிக்க அவிய்ங்க ஒரு கூட்டமும் வரும். அந்தக் கூட்டம் என்பது அவன் உறவிலிருந்து அவன் நண்பர்கள் வர எல்லாருமே..!”

 

 

“ஒரு வீரர் பங்கேற்குறானா அவர் சார்ந்த ஊரே பங்கேற்பது போல தேன்… எந்தந்த ஊரில போட்டி நடைபெறுகிறதோ அவ்வூரைச் சேர்ந்தவர்களுக்கும் சுற்று வட்டார ஊரார்களுக்கும் ஜல்லிக்கட்டு என்பது சாதாரணப் போட்டி அல்ல, திருவிழா. அதன் ஒவ்வொரு அம்சத்திலும் மக்கள் பங்கேற்பு இருக்கிறது”

 

 

“ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்துல என்னென்ன இருக்கணும்னு நீ பார்த்து இருக்கியா?”

 

“ம்ம்ம்.. டிவில பாத்திருக்கேன்.. மேல மேடையில உக்காந்துட்டு ஒருத்தர் அனௌன்ஸ் பண்ணின்டே இருப்பார். மாடு வரும் இவங்க எல்லாம் போட்டி போட்டு அதை பிடிப்பாங்க.. அப்புறம் ஜெயிச்சவங்களுக்கு அல்லது மாட்டுக்கோ பரிசு பொருள தருவாங்க” என்றாள் அவள் பார்த்த விதமாய்..!

 

“அது தான்..! அது பாக்குறதுக்கு ஒரு திருவிழா போல இருக்கும். திருவிழாக் காலத்து வியாபார ஸ்தலமாகவும் மாறும். உணவுப் பொருட்கள் மட்டுமல்லாமல், விவசாயம் சார்ந்த கருவிகளும் மாடு பராமரிப்புக்கான பொருட்களும் விற்கும் கடைகள் நிறைந்த பெரும் சந்தை அது..!”

 

“இப்படி பெரிய திருவிழாவா நடக்குற ஜல்லிக்கட்டு போட்டியே பாக்குறதுக்கு மணிமாறன் வந்து போயிட்டு இருந்தான். அது மட்டும் இல்ல.. அப்பத்தான் உன் அத்தாச்சி இருக்காளே.. அவளுக்கு நான் அந்த காங்கேயம் காளை வாங்கி பரிசு கொடுத்து இருந்த சமயம்..! அதையும் கூட்டிகிட்டு அவளுமே ஜல்லிக்கட்டு வந்திருந்தா..”

 

“அத்தாச்சியா? அந்த ஜல்லிக்கட்டு நடக்கும் இடத்துக்கு வந்திருந்தாளா?” என்று ஆச்சரியமாக கேட்டாள் ஆண்டாள்.

 

“ஆமா.. உங்க அம்மா போல அவளை பொத்தி பொத்தி நாங்க வளர்க்கல..!

அவ காளைய யாராலும் பிடிக்க முடியல..! அந்த அளவு அவ ட்ரைனிங் கொடுத்து கூட்டி வந்து இருந்தா..! அவ்வளவு பெரிய கூட்டத்துல அத்தனை ஆம்பளைங்களுக்கு முன்னால கெத்தா நின்னு பரிசு வாங்குவதை பார்த்த மனைமாரனுக்கு அவள ரொம்ப புடிச்சி போச்சு” என்றான்.

 

“என்னது மணிமாறனுக்கு அத்தாச்சியை புடிச்சு போச்சா? அப்போ அத்தாட்சியோட காதல்?” என்ற சொல்ல வந்தவள் அதை விழுங்கிக் கொண்டாள்..

 

“அப்புறம் என்ன ஆச்சு?” என்று ஏக எதிர்பார்ப்போடு கேட்டாள் ஆண்டாள். 

 

“இப்போ மணிமாறன் பத்தி சொல்லவா? இல்ல என் கல்யாணம் எப்படி நின்னுச்சுன்னு சொல்லவா?” என்று வேண்டுமென்றே அவளை சீண்டினான்.

 

அவளோ முகத்தை விரைப்பாக வைத்துக் கொண்டு “உங்க கல்யாணம் நின்னத மட்டும் சொல்லுங்கோ?” என்றாள்.

 

“என் கல்யாணம் எப்படி நின்னுச்சுன்னு உனக்கு தெரியணும் அவ்வளவு தானே.. வேற ஒன்னும் இல்ல ஒரு தடவை இந்த மாதிரி தான் ஒரு ஜல்லிக்கட்டுக்கு நாங்க எங்க காளைகளை கூட்டிட்டு போயிருந்தோம். அப்ப மணிமாறனும் அவேன் தங்கச்சிய கூட்டிட்டு வந்திருந்தியான்.. அவனுக்கு உன் அத்தாச்சியை விட முடியல.. ஏற்கனவே நம்ம வீட்டில அவங்க வீட்டு பெரியவங்கள விட்டு

பொண்ணு கொடுத்து பொண்ணு எடுக்கலாம் அப்படின்னு பேச வைச்சிருந்தியான்..”

 

“பொண்ணு கொடுத்து பொண்ணு எடுத்தா?” என்றாள் இன்னும் என்னென்ன வரப்போகிறது என்று ஆவலாய்..!

 

“ம்ம்ம்..! பெருசா ரெண்டு வீட்டிலும் இதுக்கு எதிர்ப்பை இல்ல.. ஓரளவு ரெண்டு பேர் வீட்லயும் கல்யாணத்தை பத்தி பேசி இருந்தாய்ங்க.. கிட்டத்தட்ட முடிஞ்சது போல தேன்..! தை மாசம் பொங்கல் எல்லாம் முடிஞ்சது பூ வச்சி உறுதி படுத்திக்கலாம்னு நாளெல்லாம் குறிச்சி வைச்சிருந்தாய்ங்க..” என்றான்.

 

“அவ்வளவு தூரத்துக்கு போனீங்களா?” என்று கேட்டவள் குரலில் சத்தியமாக இருந்தது பொறாமை மட்டுமே..!

 

அதை கண்டுக் கொண்டவனோ மென்மையாக சிரித்து “பின்ன? பேசி முடிச்சா தானே அடுத்து கல்யாணம் ஏற்படலாம் நடக்கும்.. அப்படி நடந்தா தானடி அது எப்படி நின்னு போச்சுன்னு உன்கிட்ட சொல்ல முடியும்?” என்று அவளுக்கு தக்க பேசியவாறு கடந்த காலத்தில் நடந்ததை கூறினான்.

 

“எங்க வீட்ல நாங்க போன ஜல்லிக்கட்டுக்கு மணிமாறணும் அவேன் தங்கச்சி மாலதியை கூட்டிக்கிட்டு வந்திருந்தியான். எனக்கும் அப்போ அந்த பொண்ணு முன்னால என்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயம்..!”

 

“என்னத்த அவ கிட்ட நிரூபிக்க கட்டாயம்?” என்று அவள் சற்று கடுப்பாக கேட்க..

 

“அதான் நானும் ஜல்லிக்கட்டு போட்டியில் இருந்தேன் இல்லையா? எப்படியாவது ஒரு மாட்டையாவது அடக்கி காட்டணுமா இல்லையா? அதுவும் நான் கட்டிக்க போற பொண்ணு என் கண்ணெதிரே நிக்குது.. அதுக்கு முன்னால என் வீரத்தை நான் பறைசாற்றனுமா இல்லையா?” என்று அவன் கேட்ட விதத்தில் அவளது தலையோ ஆமாம் என்று எல்லா பக்கமும் அசைந்தது. 

 

“அதே தான்..! அன்னைக்கு நானும் நின்னு எப்படியும் ஒரு ஆறு ஏழு மாட்ட புடிச்சி இருப்பேன். ஆனா நாம மட்டும் பிடிச்சா நல்லா இருக்காது அடுத்தவங்களுக்கும் வாய்ப்பு கொடுக்கணும்னு அதோட மேல வந்துட்டேன். எல்லாரும் ஒன்னா நின்னு தான் இத பாத்துட்டு இருந்தாய்ங்க அந்த டைம்ல தான் உங்க அத்தாச்சி என்னைய பத்தி ஏதோ பெருசா பில்டப் பண்ணி இருக்கா அந்த பொண்ணுகிட்ட..”

 

“அப்படி என்ன பெருசா உங்கள பத்தி அத்தாச்சி பில்டப் பண்ணி இருப்பாங்க?” என்று அவள் யோசிக்க..

 

“ரொம்ப யோசிக்காத அதையும் சொல்றேன்..! இடையில பேசாம ஒழுங்கா கதையை கேளு..!” என்றவன், 

 

“ஜல்லிக்கட்டு போட்டி முடிஞ்சு அவிய்ங்கள நான் பார்க்க வரும்போது அந்த பொண்ணு என்னைய நேசமா பாக்காம பயந்து பயந்து பார்த்துச்சு.. அவங்க அண்ணன் பின்னால ஒளிஞ்சிட்டு இருந்தா, நான் ஏதோ 2 கட்டிக்க போறவன் தெரிஞ்சுதும் வர்ற பெண்களோடு இயல்பான வெட்கம்னு நினைச்சேன்..”

 

“ஏன் ரா.. அவாகளுக்கு அப்படி ஏதும் இல்லையா?” என்று தெரிந்து கொள்ள ஆவலாய் அவள் கேட்க..

 

“அவ கண்ண பார்த்ததுமே எனக்கு தெரிஞ்சது நேசம் இல்ல பயம்னு அப்பாட்டமா..”

 

“அப்பாடி.. நல்ல வேள அந்த பொண்ணு என் ஆத்துக்கார பார்த்து சைட் அடிக்கல..! அப்படி மட்டும் அடிச்சியிருந்தா கண்ண முழி இரண்டையும் நோண்டி இருப்பேன்..” என்று மெல்லிய குரலில் தலையை தலையை அசைத்து தனக்குள் பேசிக்கொண்டாள் ஆண்டாள். 

 

“ஏய் பொம்ம.. பொம்மா.. என்ன தனியா பேசிட்டு இருக்குறவ?” என்று மீண்டும் அவள் தலையில் அழகன் தட்ட.. 

 

தலையை தேய்த்துக்கொண்டு “அதீ மைண்ட் வாய்ஸ்..! நீங்க மேல சொல்லுங்கோ.. அப்புறம் என்ன ஆச்சு?” என்று ஆர்வமாக கேட்டவளை பார்த்தவன்,

 

“நான் மொக்க வாங்குனது உன்கிட்ட வெக்கமே இல்லாம சொல்றேன். அது கேக்குறதுக்கு தான் உனக்கு எவ்வளவு ஆர்வம் பாரு?” என்று தலையை இடவலமாக அசைத்துக் கொண்டவன் மீதி கதையை கூறலானான்.

 

“அந்த பொண்ணுக்கு பூ வச்சு உறுதி பண்றதுக்காக நம்ம சொந்த பந்தங்களோட அவிய்ங்க வீட்டுக்கு போகணும். கிட்டத்தட்ட பூ வச்சு உறுதி பண்றதுன்னா பாதி கல்யாணம் முடிஞ்ச மாதிரி தேன். பொண்ணு எடுத்து பொண்ணு எடுக்குறதுனால ரெண்டு பேருக்கும் பொதுவா ஒரு கோயிலிலேயே இந்த நிகழ்ச்சியை வச்சுக்க நாங்க ஏற்பாடு செஞ்சுருந்தோம்…”

 

 

 “கோவில் மண்டபத்துல ரெண்டு குடும்பமும் உட்கார்ந்து பேசி முடிச்சு தட்டு மாத்துற சமயம் அங்கு கோயில் கருவறைக்கு முன்னால பஞ்ச வாத்தியம் முழங்குச்சு..! பெரியவங்களுக்கு எல்லாம் ரொம்ப சந்தோஷம். ரொம்ப நல்ல சகுனம்னு சந்தோசப்பட்டாய்ங்க”

 

“ஆமா.. ஆமா.. ரொம்ப நல்ல சகுனம் தான்” என்று பற்களை கடித்தாள் ஆண்டாள். 

 

அழகன் தன் கல்யாணம் நின்றதை இவ்வளவு விலாவாரியாக கதை சொல்ல வேண்டிய அவசியம் எல்லாம் இல்லை. இரண்டு வரிளில் சொல்லி முடித்து இருப்பான். ஆனால் ஒவ்வொரு முறை அவன் விவரித்து சொல்லும் போதும் அதற்கு தக்கவாறு முகத்தை 

ஒன்று சோகமாக.. 

இல்லை வலியோடு..  

பெரும் கோபமாக..

சிவந்து ஆத்திரமாக..

பற்களை கடித்து பொறாமையாக..

 

இப்படி இந்த ஜாலகாரியின் முக ஜாலங்களை காணவே.. ரசிக்கவே.. இவ்வாறு அழகனும் அந்த நிகழ்வுகளை விவரித்துக் கூறினான். 

 

“அப்புறம் என்ன எங்களுக்குள்ள பேசி பொண்ணுக்கு பூ வைக்க போகலாம்னு முதல்ல அந்த பொண்ணு மாலதி வர சொன்னா..”

 

“என்ன.. வந்தாளா.. நல்லா பட்டுப் புடவையில் நகையும் பூவுமா மினுக்கி கிட்டு..” என்ற ஆண்டாளின் முகத்தில் அப்பட்டமான பொறாமை தெரிந்தது.

 

அழகனோ அதை வெகுவாக ரசித்து இல்லை என்று தலையாட்டினான்.

 

“இல்ல அந்த பொண்ணு மாலையும் கழுத்துமா வந்து நின்னா” என்றான்

தன் மனைவியின் முகத்தை ஆராய்ந்தப்படி..!

 

முதலில் புரியாது கேட்டவள் பின்பு புரிந்தது போல ஓ என்றாள் சந்தோஷமாக..!

 

“ஆமா..! நீ நெனச்சது சரிதேன். கொஞ்ச நேரத்துக்கு முன்னால பஞ்ச வாத்தாயம் முழங்குச்சுல அந்த டயத்துல தான் இவிய்ங்க கல்யாணம் பண்ணி

இருக்காய்ங்க..! இதைவிட கொடுமை என்ன தெரியுமா? அந்த கல்யாணத்தை பண்ணி வச்சது வேற யாரும் இல்ல ஒன் அத்தாச்சி தேன்..!” என்றான் கடுப்பாக..

 

 

தொடரும்..

 

 


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top