அழகன் 21
காலையில் முதல் ஆளாய் மருத்துவமனைக்கு வந்து தன் முன்னால் அமர்ந்து தன்னையே கூர்ந்துப் பார்த்தப்படி தோரணையாக அமர்ந்திருக்கும் எதிர்கால மச்சானான கள்ளழகனை கண்டு உள்ளுக்குள் குறுக்குறுத்தது சரபேந்திரனுக்கு..!
அதுவும் அந்த பார்வை இதயத்தை கிழித்து உள்ளே உள்ளதை பார்க்கும் பார்வை அல்ல..!!
அவன் வாய் விட்டே அவன் அகத்தில் உள்ளதை வரவழைக்கும் பார்வை…!
‘இவரு என்ன இப்படி குறுகுறுன்னு பார்க்கிறாரு? நம்ப வாயாலேயே எல்லாத்தையும் சொல்ல வைச்சிடுவாரு போலையே? இவருக்கு எது வரைக்கும் தெரியும் எதுவரைக்கும் தெரியாதுனு.. எனக்கு தெரியலையே? ஆனா எதுவும் தெரிஞ்சு தான் என்னை பார்க்க வந்திருக்காரு..! சரபு உனக்கு இன்னைக்கு நேரம் சரியில்ல போல..” என்று புலம்ப மட்டும் தான் முடிந்தது அவனால். அதுவும் மனதோடு தான்..!
பின் ஆழந்து சுவாசித்தவன், “யாருக்காவது உடம்பு சரியில்லையா?” என்று தானே மௌனத்தை கலைத்து பேச்சை ஆரம்பித்தான் சரபேந்திரன்.
பின்னே என்ன தான் கேட்பது அவனிடம்? சரபேந்திரன் ஏதாவது கடையில் வேலை.. அலுவலகத்தில் வேலை பார்த்தால் அது சம்பந்தமாக எதுவும் கேட்கலாம். இவனோ கால்நடை மருத்துவன்.
அழகன் வந்ததோ தனித்து..! வேறு எப்படி பேச்சை ஆரம்பிப்பது? இவனும் வந்ததிலிருந்து அவனை உத்து உத்து பார்க்கிறானே ஒழிய ஒற்றை வார்த்தை கூட அவன் வாயிலிருந்து வரவில்லை.
‘சரியான அழுத்தம்.. அடம்.. இவரு. இவரு தங்கச்சியும் அப்படியே அண்ணன போலவே இருக்கா’ என்று அண்ணனையும் தங்கையையும் வறுத்து எடுத்துக் கொண்டிருந்தான். மனதில் தான்..!
“நீங்க வெட்னரிக்கு படிச்சதா தான் கேள்வி? எம்பிபிஎஸ் முடிச்சீங்களா என்ன?” என்று இப்பொழுது நாற்காலியில் பின்னால் நன்றாக சாய்ந்து கைகளை டேபிளில் வைத்து லேசாக தாளம் போட்டவாறு கேட்டான் அழகன்.
“பின்ன நீங்க தனியா வேற வந்து இருக்கீங்க? கூட யாரையும் கூட்டிட்டு வரல.. அதனால அப்படி கேட்டேன்” என்றான்.
“அப்போ நான் வந்தா யாருக்காவது உடம்பு சரி இல்லைனு தான் அர்த்தம் இல்லையா?” என்று அழகனின் கேள்வியில் என்ன பதில் சொல்வது? எதற்காவது வலை விரிக்கிறாரா? நம்ம வாயிலிருந்து வருவதற்கு? என்று புரியாமல் குழம்பி எல்லா பக்கமும் தலையாட்டி வைத்தான் சரபேந்திரன்.
“பரவால்ல இந்த மட்டுலையாவது நீங்க உண்மை பேசுறீங்களே..?” என்று கோணலாக வளைந்தது அழகனின் இதழ்கள்.
“நான் எப்ப பொய் பேசி நீங்க பார்த்தீங்க? அதுவும் இல்லாம நீங்க என்னிடம் பேசியதே கிடையாதே” என்றான் சற்றே முகிழ்த்த கோபத்தோடு..!
இப்பொழுது கைகளை மார்புக்கு குறுக்கே கட்டிக் கொண்டு அழுத்தமான பார்வை ஒன்றை சரபேந்திரனை பார்த்தான் அழகன்.
“இல்ல.. அது.. அது சின்ன வயசுல பார்த்திருக்கீங்க.. பேசி இருக்கீங்க தான். அப்புறம் நாங்க இங்கிருந்து ட்ரான்ஸ்பர் ஆகி போனதுக்கு அப்புறம் எதுவும் பேசினதில்ல இல்ல.. அத தான் சொன்னேன்” என்றவன் லேசாக திணறினான், அழகனின் பார்வையில்..!
“நான் பேசலனாலும் எங்க வீட்டு விஷயம் எல்லாம் அத்துப்படி தானே உங்களுக்கு..” என்றவனின் பேச்சில் திடுக்கிட்டு அழகனை பார்த்தான் சரபேந்திரன்.
வேறு வழியில்லை அனைத்தையும் கூற வேண்டியதுதான். இவர் வந்திருக்கிற நேரமும்.. அமர்ந்திருக்கும் தோரணையும் ‘எல்லாம் தெரிந்து தான் டா வந்திருக்கிறேன்.. நீ வாய திறக்கப் போகிறாயா இல்லையா?’ என்பது போல தான் இருக்கிறது. எவ்வளவு நாளைக்குத்தான் எல்லாத்தையும் மனதோடு வைத்துக்கொண்டு மருகிக் கொண்டு இருப்பது? அவள் தான் எனக்கு என்றும்.. நான் தான் அவளுக்கு என்பதும் நிதர்சனம்..!
எங்களுக்குள் நாங்கள் சண்டை சச்சரவு என்று திணறினாலும், எங்கள் வாழ்க்கையில் வேறு ஒரு இணையை நாங்கள் ஏற்கமாட்டோம் என்பது திண்ணம்..!
பின் ஏன் நான் அமைதியாக இருக்க வேண்டும்? அதுவும் அவராக என்னை தேடி வந்திருக்கும் பொழுது.. வீட்டு மாப்பிள்ளையை தேடி வந்திருக்கும் போது.. இந்த சந்தர்ப்பத்தை நான் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என்று தனக்குள் ஒரு முடிவுக்கு வந்தவன், இப்பொழுது நேராக நிமிர்ந்து அழகனை பார்த்தான்.
அவனின் முகத்தை கொண்டு அவனின் அகத்தைப் படித்துக் கொண்டிருந்த அழகனும், இப்பொழுது அவன் நிமிர்ந்து தன்னை பார்ப்பதை புரிந்து கொண்டு..
“அப்பாடி ஒரு வழியா இவனுக்கு தைரியம் வந்திடுச்சு.. பேசுடி மாப்பிள்ளை பேசு” என்றபடி அவனை பார்த்தபடியே அமர்ந்திருந்தான்.
“அதில்ல.. வந்து..”
“நான் வந்து அரைமணி நேரமாச்சு..” என்றான் அழகன் தன் கை கடிகாரத்தை திருப்பிப் பார்த்து.
“ம்ப்ச்.. நீங்க எல்லாம் தெரிஞ்சு தானே வந்து இருக்கீங்க..” என்று எப்படி ஆரம்பிப்பது என்று திணறினான்.
“என்னத்த தெரிஞ்சு நான் வந்து இருக்கேன்?” என்று அவனிடமே பதில் கேள்வி கேட்டவனைக் கண்டு ஆயாசமாக பார்த்தவன்,
“நானும் உங்க தங்கச்சியும் ஒருத்தரை ஒருத்தர் விரும்புறோம்ன்னு தெரிஞ்சு..”
“அப்படியா என்ன? நான் தை மாசம் வர இருக்கும் ஜல்லிக்கட்டு பத்தி உங்ககிட்ட பேசிட்டு போலாம் வந்தேன்.. டாக்டரே” என்றவனை கண்டதும் திடுக்கிட்டு
‘ஐயய்யோ நாம தான் உளறிட்டோமா? இது கேள்வி பட்டா அவ என்ன வச்சு செய்வாளே? சரியான ரெண்டும் அடாவடி அண்ண தங்கச்சி கிட்ட வந்து மாட்டிக்கிட்டேன்..’ என்று ஒரு கணம் தடுமாறிய சரபேந்திரன்,
‘இல்லயில்ல.. இவரு எல்லாம் தெரிஞ்சு தான் வந்திருக்கிறாரு.. ஜல்லிக்கட்டு பத்தி பேச நாள் இருக்கே..’ என்று யோசித்தவன், அழகனின் அழுத்தத்தை கண்டு, அவனே வாயை திறந்தான்.
“ஜல்லிக்கட்டு பத்தி விஷயம் பேசணும்னா அபீஸியல நோட்டீஸ் வந்ததுக்கு அப்புறம் தான் நீங்க வந்து இருக்கணும்” என்றதும் அப்பொழுதும் அவனை அழுத்தமாக பார்த்துக் கொண்டே,
“நான் அபிஷியல் ஜல்லிக்கட்டு விஷயமா உங்ககிட்ட பேச வந்தேன் யாரு சொன்னா டாக்டரே.. என் வீட்டிலேயே நிறைய காளைகள் இருக்கு.. அத பத்தி பேச வந்தேன் டாக்டரே” என்றான்.
‘காளைய மட்டுமா வச்சு வளர்க்கிறீங்க அந்த காளையை மேய்க்குற.. என்னை மயக்குற ஒருத்தியும் தானே வைச்சு வளக்குகிறீங்க..’ என்று பெருமூச்சு விட்டவன்,
“ஓகே..! ஐ அம் சரண்டர்..!” என்று இரண்டு கைகளையும் மேலே தூக்கி தன்னை ஒப்புக்கொடுத்தவன்,
“நானா இந்த விஷயத்த பேசினதா கனிக்கு தெரிய வேணாம்!” என்றவனை பார்த்து,
“கனி?” என்று கேட்டு ஒற்றை புருவம் உயர்த்தினான் அழகன்.
“ம்ப்ச்.. அங்கயற்கண்ணியின் சுருக்கம் கனி. அதுவா இப்ப பேச்சு பொருள்?” என்றவனின் கேள்வியில்..
‘அது தான் டா பேச்சு பொருளே..!’ என்று பார்த்தான் அழகன்.
அவனின் பார்வையில் சிறிது வெட்கம் கூட முகிழ்த்தது சரபேந்திரனுக்கு.
ஆனாலும்.. எதையும் காட்டி கொள்ளாமல், “கனியும் நானும் எங்க அப்பா வில்லேஜ் ஆஃபீஸராக இங்க வந்த போதிருந்து லவ் பண்றோம்” என்றான்.
“எது? ஐஞ்சு வயசுல ஜட்டியோட சுத்திட்டி இருந்தியே? அப்போதிலிருந்தா?” என்று அழகன் மடக்க..
“ஜட்டியோட?” என்று அதிர்ந்தவன், “அப்புறம் அந்த வயசுல அப்படிதானே இருப்போம். அப்ப சொல்லல… அதுக்கு அப்புறம்… அப்புறம்..” என்று அவன் சங்கோஜமாக அழகனை பார்க்க..
‘எல்லாம் தெரிந்து தான் வந்திருக்கேன்’ என்பது போல பார்த்தானே ஒழிய ஒரு வார்த்தை பேசவில்லை அழகன்.
“காலேஜ் படிக்குற காலத்துல இங்க ஜல்லிக்கட்டு நடக்கும் போது மாடுகளை இன்ஸ்பெக்ஷன் பண்ண வந்த டாக்டர் குழுவோடு நானும் இருந்தேன்.. அப்பத்தான் கனிய மறுபடியும் பார்த்தது..” என்றவன் அதற்கு மேல் அவர்களது காதலைப் பற்றி எதுவும் விவரிக்கவில்லை. காரணம் அது அவர்களின் அந்தரங்கம். அதனை அழகனும் புரிந்து கொண்டு மேலே சொல் என்பது போல கையசைத்தான்.
“அதான் எல்லாம் சொல்லிட்டேனே இனிமே என்ன சொல்றதுக்கு இருக்கு?” என்றான் அழகன்.
“உங்க காதோல் காவியத்தைக் கேட்கவா நான் இவ்வளவு தூரம் வந்தேன். அதெல்லாம் எனக்கு எப்பவோ தெரியும். அதுக்கப்புறம் என்ன நடந்ததுச்சுனு சொல்லு? எங்க கல்யாணத்துல இல்லை என் கல்யாணத்துல என்ன கொளறுப்படி செஞ்சி வைச்சீக ரெண்டு பேரும்? அதான் எல்லா கொளறுப்படி பண்ணி என் கல்யாணத்த அவ கல்யாணத்தையும் ஒட்டுக்கா நிறுத்திய்ச்சு இல்ல.. அதுக்கு அப்புறம் ஏன் இரண்டு பேரும் ஆளுக்கு ஒரு மூலையில சுத்திட்டு இருக்கீக..” என்று கேட்டான் அழகன்.
இது சொல்லாமல் இந்த பிரச்சனை ஒரு முடிவுக்கு வராது என்று புரிந்த சரபேந்திரன் ஒரு பெருமூச்சு விட்டபடி, “வீட்டுல பொண்ணு பார்த்ததுமே அவ என்கிட்ட இன்ஃபார்ம் பண்ணினா.. வந்து.. பொண்ணு கேட்க சொல்லி.. ஆனா.. உடனே என்னால வர முடியல. முதல்ல எனக்கு சரியான ஒரு இடத்துல போஸ்டிங் போடல... அடுத்து இப்படி வேலை சரியா அமையாம லவ் பண்றேன்னு அப்பா கிட்ட சொல்ல கொஞ்சம் தயக்கமா இருந்துச்சு. அதனால நான் கொஞ்சம் தாமத்திச்சிட்டேன்..! ஆனா நான் விடாம யார் யாரையோ பார்த்து எப்படி எப்படியோ முயற்சி பண்ணி மதுரையில் எனக்கு போஸ்டிங் வாங்கிட்டு ஆசையோடு அவகிட்ட சொல்ல வந்தா.. உங்க இரண்டு பேருக்கும் மணிமாறன் அவரோட தங்கச்சியோட அன்னைக்கு நிச்சயம்னு ஊரே கோலாகலமாக இருந்துச்சு..! நான் பதட்டத்தோட.. கவலையோட.. அவள தேடி ஓடி வந்தா.. அவ முழு அலங்காரத்தோட நின்னா.. எனக்கு அது கொஞ்சமே இல்ல ரொம்ப ரொம்ப கஷ்டமா இருந்துச்சு..! கோபமா வந்துச்சு” என்றவன் அழகனை நிமிர்ந்து கண்ணுக்குள் பார்த்தான்.
‘நான் சொல்வது ஒரு ஆணாய் உனக்கு விளங்குதா? புரியுதா?’ என்ற ஏக எதிர்பார்ப்பு அந்த பார்வையில்..
“அதெல்லாம் புரியுது.. புரியுது..! நீ மேல சொல்லு” என்ற அழகனின் குரலிலோ முகத்திலோ எந்தவித ஆறுதலும் அவனுக்காய் இல்லை..!
‘இவரிடம் சொல்வதும் அந்த செவுத்து கிட்ட சொல்றதும் ஒன்னு தான். ஆனா செவுத்து மச்சானா ஆக முடியாதே.. வேற வழி..! வாக்கப்பட போறேன்.. அப்ப சிரிச்சு தான் ஆகணும்’ என்று மனதுக்குள் அழகரை பொறிந்தப்படி கஷ்டப்பட்டு முகத்தை மாற்றாமல் மீண்டும் கதைக்குள் சென்றான்.
“நான் அவளை பார்க்க போகும்போது அவ முழு அலங்காரத்தோட நின்னு அவளுக்கு அண்ணியா வரப்போற அதாவது மணிமாறன் தங்கச்சியோடு ஏதோ சிரிச்சு சிரிச்சு பேசிட்டு இருந்தா.. எனக்கு அதை பார்த்ததுமே ரொம்ப கோபம் ஆயிடுச்சு. ஏதோ ஒரு கட்டாயத்துல உங்க வீட்டுல ஃபோர்ஸ் பண்றதுனால தான் அந்த கல்யாணத்துக்கு சம்மதத்திருப்பான்னு மனசுல சொல்லிக்கிட்டே இருந்துச்சு. ஒரு பர்சன்ட் கூட அவ மேல எனக்கு சந்தேகமே வரல.. ஆனா அங்க அவ சிரிச்சு மகிழச்சியா அலங்காயத்தோட நின்னுகிட்டு இருந்தத பார்க்கும்போது என்னால தாங்க முடியல..! இவளுக்காக நான் கஷ்டப்பட்டு இந்த ஊருக்கு போஸ்டிங் வாங்கிட்டு வந்தா.. இவ வேற ஒருத்தன் கல்யாணம் பண்ணிக்க ரெடியா ஆகிட்டானு அவ்வளவு கோபம்..!” என்றவன்,
“இவ்ளோ நாளா எங்க காதலுக்காக அவ போராடவே இல்லையா? அவ்வளவு தானா என் மேல அவ வச்ச காதல்? ஒருவேளை அது காதலே இல்லையோ? வெறும் இனக்கவர்ச்சியோ? அப்படினு ஏக குழப்பம்..! கூடவே போஸ்டிங் கிடைச்ச உடனே அப்பா அம்மா கிட்ட கூட சொல்லாம இவகிட்ட சொல்ல தான் இவள ஆசையோடு தேடிட்டு வந்தேன்.. ஆனா அவ இருந்த கோலம்.. ஆற்றாமை கோபம் எல்லாம் சேர்ந்து அவளை கொஞ்சம் பேசிட்டேன்” என்றான் தன் முன்னால் இருந்த பேப்பர் வெயிட்டை மூன்று விரல்களால் சுழற்றியபடி..!
“என்ன பேசின?” என்று சற்று இறுக்கமாக அழுத்தமாக வெளிவந்தது அழகனின் குரல் அதுவரை இருந்த பன்மை விகுதி எல்லாம் பறந்து விட்டது.
“அது.. அது... நான் இல்லைன்னாலும்.. வசதிய வேற ஒருத்தன் வந்தவுடனே.. அவன..” என்று முடிக்க முடியாமல் திணறினான் சரபேந்திரன்.
‘இப்படி ஒருத்தனை காதலிப்பத அவ வூட்டில சொல்லவே இல்ல.. அப்படியும் அவளுக்கு கல்யாணத்துக்கு பேசி முடிக்கும் வரைக்குமே சொல்லவே இல்ல கண்ணி. கடைசியில அண்ணனின் கல்யாணம் நின்னா கூட பரவாயில்லனு.. அப்பாம்மா சபையில அத்தனை பேரும் முன்ன அவமானப்பட்டாலும் பரவாயில்லனு.. அவள் கல்யாணத்தோடு என் கல்யாணத்தையும் சேர்த்து அவள் நிறுத்திட்டா.. இவன என்னவென்றால் அவள் முழு மனதாக கல்யாணத்திற்கு தகுதியாக நிற்கிறானு அவள் மீது குற்றம் சாட்டுகிறான்..!!’ என்று அண்ணனாய் தங்கையின் மீது தப்பில்லாமல் கோபப்பட்ட சரபேந்தரனை முறைத்தவாறு அமர்ந்திருந்தான் அழகன்.
“அவள சொன்னா? நீ மட்டும் காதலுக்கு தகுதியானவனா?” என்றதும் அவன் திடுக்கிட்டு நிமிர்ந்து பார்க்க..
“நீ அவ மேல வச்ச நம்பிக்கை அப்போ அவ்வளவு தானா? அவ மேல வெச்ச காதல் அப்போ அவ்ளோதானா? அலங்காரத்துல அவளை பார்த்த உடனே உனக்கு சந்தேகம் வந்துருச்சுன்னா.. அப்படியென்ன காதல் உன்னது? எந்த நம்பிக்கையில அவ மேல நீ காதல் வைச்ச? இல்ல எனக்கு புரியல..!” என்று சரபேந்திரனை பார்த்து தீர்க்கமாக கேட்டான் அழகன்.
“இல்ல நான் வர்ற வழியிலேயே நல்லா விசாரிச்சிட்டு தான் வந்தேன் வெறும் கண்ணால பார்த்து மட்டும் அவ மேல நான் சந்தேகம் கொள்ளவோ.. அவ மேல உள்ள நம்பிக்கை போகவோ இல்ல. அதுவும் இல்லாம அங்கே இரண்டு குடும்பமும் இரண்டு பேரோடைய நிச்சயத்துக்கு தயாராதான் இருந்தீங்க. இல்லன்னு உங்களால சொல்ல முடியுமா?” என்று அழகான மடக்கிவிட்ட இறுமாறுப்பில் அவனை பார்த்து கேட்டான் சரபேந்திரன்.
“ஆமா.. ரெண்டு பேருக்கும் நிச்சயம் செய்ய தான் இருந்தோம்..! உங்கள லவ் பத்தி என்கிட்ட இதுவரைக்கும் நீங்க ரெண்டு பேரும் பேசி இருக்கீங்களா? இல்ல தானே..! அப்போ வீட்ல ஒரு முடிவு சொல்லும்போது அவ உன்ன லவ் பண்ணதை சொல்லல..! அப்போ நாங்க எங்க வீட்டுக்கு பொண்ணுக்கு மாப்பிள்ளை பார்க்கிறதுக்குல என்ன தப்பு?” என்று கேட்டதும் சரபேந்திரனால் பதில் அளிக்க முடியவில்லை.
“ஆனாலும்…” என்று இழுத்தவனை இப்பொழுது அழுத்தமாக பார்த்து..
“ஆனாவும் இல்ல.. உனாவும் இல்ல..
நீ கொண்ட காதல்ல நம்பிக்கை இருந்தா.. நீ காதலிச்ச பொண்ணு மேல நம்பிக்கை இருந்தா என்ன நடந்தாலும் அவளுக்கு உறுதியாக நீ நின்னு இருக்கணும். அவ எந்த சூழ்நிலையில அதை செஞ்சு இருப்பான்னு யோசிச்சிருக்கணும்.. எதுவுமே யோசிக்காம.. எதுவுமே பார்க்காம.. கண்டதே கோலம்ன்னு நீ பாட்டுக்கு அவளை பேசிட்டு வருவியா? இதுக்கு பேரு காதலா?” என்று கேட்டவனின் குரலில் அத்தனை கோபம் இருந்தது.
“இல்ல.. கனி வந்து… அவ பக்கத்தில் இருந்த பொண்ணோட அண்ணன தான் எனக்கு பேசியிருக்கிறாங்கனு சொன்னாளே..” என்று அவன் மீண்டும் தன்னை தன் செயலை சரி என்று நிரூபிக்க பார்க்க..
“ஆமா சொல்லி இருப்பா தான். அது உண்மைதானே..! அவளுக்கு நாங்க அந்த பொண்ணோட அண்ணனை தான் பேசி வச்சிருந்தோம். ஆனா அடுத்த என்ன சொல்ல வந்தானு நீ காது கொடுத்து கேட்காம நீ பாட்டுக்கு பேசிட்டு வந்துட்ட.. எத்தனை வருஷமா அவளும் கல்யாணமே வேணான்னு பிடிவாதமா இருக்கா. அப்போ அதிலிருந்து தெரியலையா உனக்கு? அவ உன் மேல வச்சு அன்பின் ஆழத்தை.. நேசத்தின் வீரியத்தை?” என்று கேட்க.. சரபேந்திரன் பேச்சற்று அமர்ந்திருந்தான்.
“சரி.. எனக்காக அவ இத்தனை வருஷமா காத்திருந்திருக்கலாம். ஆனா அன்னைக்கு அந்த நிச்சயதார்த்தம் நடந்திருந்தால்..?? நான் கேள்விப்பட்டேன் உங்களுக்கு நிச்சயமா அந்த பொண்ணு வேற ஒருத்தனை அதே இடத்தில் கல்யாணம் பண்ணிக்கிட்டதால பேசி இருந்த நிச்சயம் நின்னு போச்சுன்னு” என்றான் சரபேந்திரன்.
“அப்போ இதுல இருந்து நீ என்ன சொல்ல வர!” என்றதும்…
“நான் என்ன சொல்ல வரேன்.. அதான் அவளுக்கு என் மேல கொஞ்சம் கூட நம்பிக்கை இல்ல. எப்படியாவது போஸ்டிங் வாங்கிட்டு வந்து அவளை கைப்பிடிம்பேன்ங்குற நம்பிக்கையில்ல..! காதல் அதன் அடிப்படையே நம்பிக்கைதானே..! அந்த நம்பிக்கை இல்லாத போது.. என்ன சொல்றது..?” என்று மேலும் பேசாமல் அமைதியாக இருந்தான்.
“ஓஓ.. நம்பிக்கை..??!! ஆனா அந்த நம்பிக்கை அவ மேல உனக்கு இல்லையே? அப்ப நீ மட்டும் என்ன பெரிய… இவன்?” என்றதும் அழகனை முறைத்து பார்த்தான்.
“முறைச்சு பார்க்கிற வேலையெல்லாம் வச்சுக்கிட்டா கண்ணு மூழகய நோண்டி உன் கையிலே கொடுத்துபுடுவேன்..” என்று சற்ளே காட்டமாக கேட்ட அழகன்,
“அன்னைக்கு அந்த பொண்ணுக்கு கல்யாணம் ஆனதனால நிச்சயம் எல்லாம் நின்னு போச்சுன்னு சொன்னியே.. அந்த பொண்ணுக்கு கல்யாணம் பண்ணி வச்சது யாரு தெரியுமா? அங்கயற்கண்ணி தான்..!” என்றதும் அதிர்ந்து அழகனைப் பார்த்தால் சரபேந்திரன்.
“எதுக்கு தெரியுமா? இந்த சம்பந்தத்தை நிறுத்த..! அதுவும் பொண்ணு எடுத்து பொண்ணு குடுக்குற சம்பந்தத்தை நிறுத்த.. அவ அண்ணன கல்யாணமும் அதனால பாதிக்கப்படும் கொஞ்சம் கூட யோசிக்காம.. உன்னை கைப்பிடிக்கும்னு ஒரே காரணத்தினால, அந்த பொண்ணு மனசுல இருந்த சிறு சலனத்தை பயன்படுத்தி, அந்த சலனத்தை ஏற்படுத்தவனையே அவளுக்கு கல்யாணம் பண்ணி வச்சு இரண்டு கல்யாணத்தை நிறுத்திட்டா..!”
“ஊரு உலகம் உறவு எல்லாம் அப்பா அம்மாவை என்ன பேசுவாங் அண்ணனை என்ன பேசுவாங்கன்னு அவளுக்கு கொஞ்சம் கூட யோசனை இல்ல.. அவளுக்கு அந்த நேரத்துல தெரிஞ்சதெல்லாம் நீ பேசின வார்த்தைகள்..! அதுகூட எப்படியாவது இந்த கல்யாணத்தை நடத்தி உன்னை கைப்பிடிக்கணும்கிறது மட்டும்தான்” என்றவனை இப்பொழுது அதிர்ந்து பார்த்தான் சரபேந்திரன்.
இத்தனை நாளாக அந்த கல்யாண பேச்சு வார்த்தையில் நின்ற பிறகு, தான் பேசி வந்ததும் ஒரு குற்ற உணர்வில் தான் அவள் இன்னும் மறுவாழ்க்கைக்கு தயாராகாமல் இருக்கிறாள் என்று நினைத்து இருந்தான் சரபேந்திரன். ஆனால் அந்த கல்யாணத்தையே அதுவும் அண்ணனோடு சம்பந்தப்பட்டிருப்பதை தெரிந்தும் இப்படி செய்திருக்கிறாள் என்று அழகன் வாயிலாக கேட்டபின் அவனால் நம்பாமல் இருக்கவும் முடியவில்லை.
ஒரு பக்கம் சந்தோஷம்.. இன்னொரு பக்கம் தன் மீது கோபம், இப்படி அவள் மீது அநியாயமாக சந்தேகப்பட்டு விட்டோமே என்று..!
அதன் மூலம் அவளை வார்த்தைகளால் எத்தனை காயப்படுத்தி இருக்கிறோம் என்று..!
அதை எல்லாம் சேர்ந்து அவன் குழப்பமாக அமைந்திருக்க.. அவன் முன் இருந்த டேபிளில் தட்டி அவனுடைய யோசனையை தடை செய்து தன் பக்கம் அவனது பார்வையை திருப்பினான் அழகன்.
“இன்னும் ஒரு வாரம் உனக்கு டைம் அதுக்குள்ளார நீ பொண்ணு கேட்டு எங்க வீட்டுக்கு வரணும் சரியா? குடும்பத்தோட வரியோ உறவுகளோட வரியோ அதெல்லாம் எனக்கு தெரியாது. ஆனால் வந்தே ஆகணும்..!” என்று கட்டளை இட்டவன், வழக்கம் போல இடது கையால் வேட்டியை பிடித்துக் கொண்டு அறை வாசல் அருகே சென்றவன் பின்னர் திரும்பி சரபேந்திரனை கூர்ந்து பார்த்து..
“அதுவரைக்கும் நேரம் காலம் இல்லாம.. கண்ட நேரத்தில் எங்க வீட்டை சுத்தி குளத்து பக்கம் வராதோ.. இல்ல காங்கேயன் கட்டியிருக்கிற இடத்து பக்கம் வரதோ.. கூடாது..! கூடவே கூடாது..!” என்று அழுத்தமாக சொன்ன விதத்திலேயே,
சரபேந்திரன் ஒரு முறை அங்கயற்கண்ணியை தனியாக சந்தித்து இதழ்யணைப்பு
நடந்ததெல்லாம் நினைவுக்கு வர..
“அச்சோ.. இவர் அதெல்லாம் பாத்துட்டாரா?” என்று வெட்கம் கொண்டு முகத்தை பொத்திக் கொண்டான் சர்வேந்திரன்.
தொடரும்..
