36
நாச்சிமுத்து மகனிடம் கண்ணைக்கட்டி 'நீ போ நான் பிறகு வருகிறேன்!' என்று சொல்லி விட அன்னையையும் மனைவியையும் அழைத்துக்கொண்டு இவன் வீட்டிற்கு முதலில் வந்துவிட்டான். வந்தது முதல் குறுக்கு மறுக்குமாய் சீறும் வேங்கையென திரிந்து கொண்டிருந்தான். அவனால் தாங்க முடியவில்லை. அப்படி ஒரு வார்த்தை.. அதுவும் தன் மனைவி வாயிலிருந்தா? ஜீரணிக்க முடியவில்லை.
தர்மாவுக்கு தன் அன்னையைப் பற்றி சிறு வயதில் இருந்தே தெரியும். அதிக பொறாமை குணம் கூடவே நாச்சிமுத்துவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பெண் மாறிப்போய் இவரை திருமணம் செய்துகொண்டதால் அந்த பாதிப்பு என்று இவ்வளவு நாளாக இவன் நினைத்துக் கொண்டு அமைதியாக இருந்து விட்டார்கள் அப்பாவும் மகனும். ஆனால் அதையே மருமகளுக்கும் கற்றுக்கொடுத்து வீட்டில் நிம்மதி இல்லாமல் ஆக்குவதோடு அதேபோல் அடுத்தவர்கள் வீட்டுலையும் இதே புத்தியை காட்டுவது என்ன பொழப்பு என்று தான் அவனுக்கு வேதனையாக இருந்தது.
'அதுவும் யாரை பார்த்து சொல்கிறாள்? தன் சொந்த அண்ணன் மனைவியை பார்த்து!! ச்சசே இப்படி எல்லாம் அவளுக்கு பேச தெரியுமா?' என்று உக்கிரத்தில் இருந்தவனிடம் மெதுவாக வந்து நின்றாள் பூங்கோதை.
"ம்மா.. மாமா.." என்று அழைக்கும் முன் ஒற்றை விரலை தன் உதட்டின் மேல் வைத்து "பேசாத.. எந்த காரணமும் சொல்லாத!" என்றான் கோபத்தோடு தர்மா.
"நமக்கு கல்யாணம் ஆகி மூணு வருஷம் ஆகுது. இத்தன வருஷத்துல யாராவது குழந்தை இல்லைன்னு பேசினா.. அவுக கிட்ட எல்லாம் இது யேன் சொந்த விஷயம் சொல்லி வாயடைக்க வைச்சு இருக்கேன். எங்கேயும் எந்த இடத்திலும் உன்னைய விட்டு கொடுத்தது இல்ல.. விட்டது இல்லை! ஆனா நீயி இன்னைக்கு என்ன பண்ணி வச்சிருக்க? உன் புருஷன் நான் சொல்ல எனக்கு வெட்கமா இருக்கு!!" என்றவனை அழுத விழிகளோடு நிமிர்ந்து பார்த்தாள் பூங்கோதை.
"ஏன்? ஏன்? உனக்குள்ள இவ்வளவு வன்மம்? உன்னைய இந்த வீட்டில் தாங்குற மாதிரி தானே அந்த வீட்டில அந்த பொண்ண தாங்குறாக.. இதுல எதுக்கு உனக்கு இவ்வளவு ஆத்திரம்.. இவ்வளவு கேவலமான எண்ணம்!! நான் நினைக்க கூட இல்லை நீயி இப்படி பேசுவனு" என்றான் ஆற்றாமையா..க இரு கைகளையும் இடுப்பில் வைத்து அவள் முகத்தை கூட பார்க்காமல் திரும்பி நின்றான்.
"ம்மா.. மாமா.. மன்னிச்சிடுங்க.." என்றாள்.
"இந்த மன்னிப்பு கூட நீயி உள்ளிருந்து மனசார கேட்கல.. நானு கோவமா இருக்கேனு தானே கேட்குற?" என்றதும் அவள் இறுக்க வாயை மூடிக் கொண்டாள்.
கோதைக்கு நிஜமாகவே அஸ்திராவை பிடிக்கவில்லை. அதுவும் ஏற்கனவே திருமணமாகி கணவனை இழந்து இங்கே வந்தவளை எல்லோரும் தாங்குவது இன்னும் கடுப்பை கிளப்பியது.
இதுவரை அவள் மட்டுமே உரிமையாக வலம் வந்த வீட்டில் இன்னொருத்தி உரிமையோடு வலம் வருவதை அவள் மனதால் ஏற்க முடியவில்லை. கூடவே திருமணமாகி இத்தனை ஆண்டுகள் கழித்தும் தனது கிட்டாத அந்த குழந்தை பாக்கியம், இரண்டே மாதத்தில் அவளுக்கு கிடைத்துவி.. அந்த வன்மமும் சேர்ந்து கொண்டது.
அதுதான் சற்றும் யோசிக்காமல் அவள் வாயை விட்டது.
"உனக்கு ஒன்னு தெரியுமா கோத? உன் மனசுகுள்ள இவ்வளவு அழுக்கும் வன்மமும் அகங்காரமும் பொறாமையும் இருக்கறதுனால தான் உனக்கு ஒரு குழந்தையை அந்த ஆண்டவன் இன்னும் கொடுக்கல போல!" என்று அவன் சொல்லி விட, அதிர்ந்து கணவனை பார்த்தாள் கோதை.
"என்னடா பேசுற நீயி? நானும் ஏதோ கோபத்துல பேசுறானு கம்முனு இருந்தா யேன் மருமகவள பேசுவியா நீயி? அந்த கேடுகெட்ட சிறுக்கிக்காக…" என்று முந்தானையை உதறி கொண்டு சண்டைக்கு வந்த யோகலட்சுமி கூர்ந்து பார்த்தான் மகன்.
*அந்த பொண்ணு என்ன கேடு கெட்ட பொண்ணு? அதுவா வந்தா வீராவ கல்யாணம் பண்ணிக்கிறேன் வந்துச்சு? இவன் போய் கல்யாணம் கட்டிகிட்டா இழுத்திட்டு வந்துட்டியான். அதுக்கு அந்த பொண்ணு என்ன பண்ணும்? இன்னொரு முறை அந்த பொண்ணை பத்தி பேசாத!!" என்று எச்சரித்தான்.
"உன்னை சொல்லி தான் கூட்டிட்டு வந்தேன். ஆனாலும் நீயி அடங்குற மாதிரி தெரியல.. உன்னை கொண்டு போய் ஏதாவது ஒரு முதியோர் ஆசிரமத்தில் சேர்க்க தான் போறேன் பாரு.." என்றதும் யோகலட்சுமி பம்மிக் கொண்டு திரும்பவும் வாசல் திண்ணையில் அமர்ந்து கொண்டார்.
"ஏன் மாமா இப்படி சொன்னீக.. நான்.. யேன் வயித்துல.. குழந்த.." என்று வயிற்றை கெட்டியாக பிடித்துக் கொண்டு நடுங்கும் குரலில் கேட்ட பூங்கோதையை பார்க்க தர்மாவுக்கும் பாவமாகத்தான் இருந்தது. ஆனால் அவளிடம் இருக்கும் அத்தனையும் அவளிடம் இருந்து வெளியேற வேண்டும் அல்லவா? அதை மனதில் கொண்டு அவளின் நன்மையை கொண்டே இவ்வாறெல்லாம் பேசினான்.
"உண்மைதானே கோதை!! உனக்கு மனசு நல்லதா இருந்தா உனக்கும் நல்லது நடக்கும்!!
நீயி அடுத்தவுகளுக்கு நல்லது நினைச்சா.. உனக்கு நல்லது நடக்கும்!!
நீயி அடுத்தவுக மேல அன்பா இருந்தா.. உனக்கு நல்லது நடக்கும்!! நீயி அடுத்தவுக கிட்ட பொறாமைப் படாம.. ஆங்காரம் காட்டாம.. அரவணைச்சு போனா.. நீயி நல்லா இருப்ப.. ஆனா.. இது எதுவும் உன்கிட்ட இல்லையே கோதை.. பின்ன எப்படி உனக்கு நல்லது நடக்கும்? உன்னை கட்டிக்கிட்டு நான் தான் கஷ்டப்படுறேன்? உன் கூட தானே பூங்கொடிக்கும் கல்யாணம் நடந்துச்சு.. அதுக்குப் பிள்ளை பிறக்குல.. ஏன்னா அதுக்கு நல்ல மனசு. நாத்தனர கூட கூடப் பொறந்த பொறப்பா பார்க்குது. ஆனா நீயி.. ச்ச்சீ!!" என்று அவர்களுக்கு விளக்க வேண்டும் என்று வார்த்தைகளை விலாசி வீசி விட்டு சென்று விட்டான்.
அவளோ மடிந்து அமர்ந்து வெடித்து அழுதாள்.. அந்தக் கண்ணீரில் அவளது அழுக்குகள் கரைந்து போகுமா?
பூங்கோதை திருந்துவாளா அது காலத்தின் கையில்??!!!
பூங்கோதை பேசிய வார்த்தைகள் அங்கு இருந்த ஒவ்வொருவரின் மனதையும் காயப்படுத்தியது உண்மை. ஆனால் அந்த சூழ்நிலையை தன் கையில் எடுத்துக் கொண்ட வடிவாம்பாள் அனைவரையும் பேசி சமாதானப்படுத்தி அவரவர் வேலைக்கு அனுப்பி வைத்தார்.
மனைவி என்கிற பட்டம் எல்லாம் சும்மா இல்லை!! சூழ்நிலை தடுமாறி நிற்கும் வேளையில் அதை தாங்கிப் பிடித்து அவரை மனதாலும் உடலாலும் அந்நிலையில் இருந்து விடுபட செய்வது குடும்பத்தலைவியின் பெரும்பங்கு!! அதை இன்று வரை சிறப்புடன் ஆற்றி வருகிறார் வடிவாம்பாள்.
அண்ணனையும் கணவனையும் அவர்களது பஞ்சாயத்து வேலையை பார்க்கவும், எல்லோருக்கும் இந்த விஷயத்தைச் சொல்லவும் என்று அவர்களை அனுப்பி வைத்தார். மகனையும் மருமகளையும் பிடிவாதமாக கிளப்பி கோவிலுக்கு அனுப்பிவைத்தார். ஏற்கனவே சிறப்பு பூஜை கொடுத்திருப்பதாக இவர் சொல்லி இருக்க.. வேறு வழியின்றி எங்கோ வெறித்து அமர்ந்து இருந்த மனைவியை கட்டாயப்படுத்தி தான் அழைத்து வந்திருந்தான் வீரா.
பெரிய மகளையும் மருமகனையும் பலக்காரத்தோடு அனுப்பி வைத்து விட்டுதான் வந்தமர்ந்தார். ஆனாலும் மனது நிலை கொள்ளாமல் தவித்தது. சின்ன மகளின் இந்த குணத்தை எண்ணி.. இனி அவள் வாழ்க்கை எப்படி செல்லுமோ என்று பயம் வேறு..
கோவிலில் சிறப்பு பூஜைகள் முடிந்து தரிசனம் முடித்து கோவிலை சுற்றி இருவரும் நடந்து கொண்டிருந்தனர்.
வீராவுக்கு தெரிந்தது தான் இருந்தது மனைவியின் மனநிலை. ஆனால்
இப்பொழுது ஒன்றும் பேச முடியாத சூழ்நிலை.
பிரசாதத்தை பெற்றுக் கொண்டு இருவரும் திரும்பி வரும் வழியில் "கொஞ்ச நேரம் அந்தப் பக்கம் போகலாம் தீரா" என்று அக்கோவிலில் இருந்து சற்று வடக்கு புறம் இருக்கும் ஆலமரங்கள் சூழ்ந்த வடபத்திர காளியம்மன் கோவிலுக்கு நோக்கி அவன் கை காட்ட.. இவளும் அமைதியாக அவன் பின்னோடு சென்றாள்.
வீராவுக்கு இந்த அமைதியும் மனைவியின் மௌனமும் கொன்றது. எப்பொழுதும் தனக்கு சரிக்கு சரியாய் வாய் பேசி.. தன்னை கடுப்பேத்தி.. அதன் பிறகு தன்னிடம் வாங்கி காட்டிக்கொள்ளும் அந்த வாயாடியைத் தான் பிடித்திருந்தது.
உள்ளே சென்று காளி அம்மனை வணங்கிவிட்டு வெளியே சற்று தள்ளி சுணைக்கு அருகில் இருக்கும் பெரிய ஆலமரம் ஒன்றின் தாழ்ந்த கிளையில் அவன் அமர.. அவனை ஒருநிமிடம் பார்த்தவள் தானும் சற்று தள்ளி அமர்ந்து கொண்டாள். கண்கள் என்னவோ கையிலிருந்த அர்ச்சனை கூடையை தவிர்த்து எங்கும் பார்க்க மறுத்தது.
"இந்த இடம் உனக்கு ஞாபகம் இருக்கா தீரா?" என்றான் மென்மையான குரலில் மனைவியை பார்த்துக்கொண்டே..
'என்ன கேள்வி இது? இத்தனை வருடங்களாக இங்கேதான் வளர்கிறோம்? இந்த இடம் தெரியாதா? இதில் ஞாபகம் வைத்துக் கொள்ள என்ன இருக்கிறது?' என்று புரியாமல் கண்களை உயர்த்தி கணவனை பார்த்தாள்.
அவன் கண்கள் வழியை கருத்தினை படித்தவன் போல "இத்தன வருஷம் நீயி வளர்ந்த இடம் தேன்.. இல்லைன்னு சொல்லல.. நான் கேட்டது இந்த இடத்தை ஞாபகம் இருக்கா?" என்று அவன் அழுத்தி கேட்க.. அவன் கண்களை கூர்ந்து பார்த்தாள். அதில் ஒருவித சுவாரசியமும் அவளுக்கு ஞாபகம் இருக்க வேண்டுமே என்ற தவிப்பும் சேர்ந்து இருக்க, 'அப்படி என்ன இடம் இது?' என்று சுற்றும் முற்றும் பார்த்தவளின் நினைவடுக்குகளில் இருந்து வெளிவந்தது அந்த திருவிழா நாட்கள்.
