அடுத்த கட்ட நடவடிக்கையாக போலீஸ்க்கு போன் செய்தான் பிரதீஷ். அவர்களும் வந்து சேர்ந்து விபத்தை பற்றி விசாரிக்க, எவரும் அந்த வண்டியை பற்றி அடையாளம் தெரியாது என்றனர்.
அதன் பின் அனைத்து நடைமுறைகளும் முடிந்து போஸ்ட் மார்டம் செய்யப்பட்டு, மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது சண்முகம் அவரின் உடல்.
எத்தனை எத்தனை இழப்புகள்.. மீண்டெழ முடியாத மரணங்கள்.. ஒவ்வொருவர் விட்டுச்சென்ற நினைவுகள்..
எல்லாம் வீட்டினருக்கும் பெரும் பாதிப்பை உண்டாக்க, அடுத்தடுத்த மரணத்தால் எல்லோரின் நிம்மதியும், மனமும் கலங்கியிருந்தது.
எல்லோரும் சாவித்திரி பாட்டிக்கு ஆறுதல் கூறிக் கொண்டு தான் இருந்தனர். இருந்தும் அவரால் எளிதில் கணவன் மரணத்தையும், இத்தனை நாள் அவரோடு வாழ்ந்த வாழ்க்கையையும் மறக்க முடியவில்லை.
கேவி அழுதவர், சற்று தனிமை தேடி அங்கிருந்து நகர்ந்து விட்டார். வீட்டில் சண்முகம் அவர்கள் இருந்தபோது அவருக்கான மரியாதையே வேறு. இன்று ஆலமரமே சரிந்து போன நிகழ்வு. அவர் இத்தனை வருடம் நல்லவராக வாழ்ந்த விதமே எல்லோரிடத்திலும் பேச்சாக அடிப்பட்டது.
ருத்ரா தனக்கு நீதி கிடைத்து விட்டது என்னும் மனநிலையில் இருந்தாலும், பாட்டியின் பூவும் பொட்டு போனது அவளை வெகுவாக காயமடைய வைத்தது.
சதாசிவம் அவர்களுக்கோ கீழே விழுந்ததில் முதுகில் அதீத வலி. ஏற்கனவே அவருக்கு தண்டுவட பிரச்சனை. அதோடு அடிபட படுத்த படுக்கையாகி விட்டார்.
ராசிகா வீட்டினரும் மரணத்தை கேள்வியுற்று விசாரித்து சென்றவர்கள், பிரதீஷிடம் புது வீட்டில் ஏதேனும் ஆவிகோளாறு உள்ளதோ என வினவ அவனுக்கும் அதனை பற்றிய யோசனை வலுத்தது.
மூன்று நாட்களுக்கு பின்..
ராசிகாவை தனியே அழைத்துக் கொண்டு அவ்வீட்டிற்கு சென்றவன், எதுவும் பேசாது மௌனமாக அமர்ந்து விட்டான் சோபாவில். அவளும் ஏதேனும் பேசுவான் என எதிர்பார்த்து ஏமாந்து, கணவனின் மௌனத்தை ஆதூரமாக தோளை தொட்டு கலைத்தாள்.
"இந்த வீடு வேணாம் ராசிகா.. எனக்கு என்னமோ இங்க இருக்க இருக்க.. இன்னும் ஏதாவது நடந்திடுமோனு தோணுது.. அன்னேக்கி கூட ஏதோ ஒன்னை நான் பாத்தேன்..
அதை சொல்ல வந்தப்போ நீ இல்லைன்னு சொல்லிட்ட. ஆனால், ஏதோ ஒன்னு இங்க இருக்கு. அது தான் நம்மளை இந்த அளவு ஆட்டி படைக்குது.."
அங்கு நிலவிய குளிர் காற்றிலும், லேசாக அரும்பியது வியர்வை முத்துக்கள். அதனை பட்டென துடைத்துக் கொண்டு எழுந்தவள், நேராக கபோர்ட் நோக்கி நடந்தாள்.
அதில் ஒரு போட்டோ ஒன்றை வேகமாக எடுத்து வந்தவள் அவனிடம் நீட்டினாள். அவனோ, என்னவென புரியாது அவளை காண அவனது உள்ளங்கையில் வைத்தாள்.
"..........."
"இவங்க தான் கார்த்தி அண்ட்.."
"இது சிவக்குமார் அண்ணேல.. இது எப்படி உன் கைக்கு?"
"ம்ம்ம்.. அவங்க தான்.. இந்த போட்டோ உங்க தாத்தா ரூம்ல கிடைச்சது.. இவங்க ரெண்டு பேரையும் தான் உங்க தாத்தா அடிச்சு கொன்னது.."
அதில் அவன் அதிர்ந்து அவளை காண, "ஆமா.. அன்னேக்கி சுமித்ரா சொன்னது உண்மை தான். குஷி இறந்ததுல நீங்க இதெல்லாம் பெரிசா எடுத்துக்கல. இவங்க ரெண்டு பேரையும் உங்க தாத்தா அடிச்சு கொன்னுட்டாரு. எல்லாம் சுமித்ரா அண்ணி காதலிச்ச காரணத்துக்காக.."
"..........."
"இப்போ தன் சாவுக்கு காரணமான ஒவ்வொருத்தவங்களையும் பழி வாங்கிடுச்சு.. ஏன் அந்த மாணிக்கம் இருக்கார்ல அவரும் இப்போ முடியாம படுத்துட்டாராம்..
காதலுக்காக மட்டுமில்லை உங்க தாத்தா இன்னும் நிறைய நிறைய ஏதோ பண்ணிருக்காரு. அதுல இது தான் பெரிய விஸ்வரூபம் எடுத்து உங்களை ஆட்டி படைச்சது. எது எப்படியோ, இனி எந்த பிரச்சனையும் வராது. இந்த வீட்டை விக்க வேணாம் பிரதீஷ்.."
"ராசிகா.. எப்படி இதை என்னால நம்ப முடியும்? இன்னொரு இழப்பு என்னால மட்டுமில்ல யாராலயும் தாங்கிக்க முடியாது.."
"பிரதீஷ்.. என்னை நம்புங்க.. இனி எதுவும் நடக்காது.."
"ஏன் பேய் உன்கிட்ட சொல்லிட்டு போச்சா?"
"ஐயோ.. அப்படிலாம் இல்லை.. அவங்க அவங்க பண்ணுன தப்புக்கு எல்லாம் தண்டனை அனுபவிச்சுட்டாங்க.. அப்படியிருக்கும் போது, இனி யாருக்கும் எதுவும் ஆகாது.."
"ராசிகா.. பேசாம ஊரை காலி பண்ணிட்டு எல்லாரும் பாலக்காடு வர்றது தான் நல்லது.."
"அதுக்கு அத்தை வேணாம் சொல்லிட்டாங்க. நான் உங்களுக்கு முன்னாடியே அவங்க கிட்ட பேசிட்டேன்.."
"எப்படியோ தொலையட்டும்.. விடு.. நான் முதல எங்கையாவது தூரமா போய்டணும் இதையெல்லாம் பாக்காம.."
"ஏன் டா இப்படி பேசுற?"
"பண்ணுனது எல்லாம் அநியாயம்.. எப்படியெல்லாம் என்னை பாடா படுத்தி வச்சாங்க தெரியுமா?"
அதில் அவனது தோள்ச்சந்தில் கை நுழைத்து, சாய்ந்து கொண்டவள் கோவமடைய வேண்டாம் என்று ஆறுதல் படுத்தியும் தலை வலி தாங்க முடியவில்லை என்றான்.
பட்டென எழுந்து கொண்டவள் சூடாக காபி தயாரிக்க அடுக்களை சென்று விட்டாள்.
'காதலித்தால் இவர்களுக்கு என்ன பிரச்சனை? சுமித்ரா காதலித்தாளா? ஒரு தவறு எத்தனை உயிரை எடுத்து விட்டது? அநியாயமாக பிஞ்சொன்று இறந்து விட்டதே..' என ஏதேதோ யோசித்தவன் சிந்தனையை, அந்த போட்டோ வீசிய பலத்த காற்றால் எங்கெங்கோ பறந்து திரும்பி பார்க்க வைத்தது.
காற்று வீசும் திசையில் அப்போட்டோ பறந்திட, இறுதியில் வீட்டு வாசலில் வந்து விழுந்தது. சரி எதற்கும் எடுப்போம் என்று எழுந்து அவன் ஓட, அது வேகமாக பறந்து காம்பன்வுட்டை கடந்து வெளியே தேங்கியிருந்த நீரில் விழுந்தது.
அவள் காபி கப்போடு கணவனை தேட, அவனோ நீரில் விழுந்த போட்டோவை யோசனையாக வெறித்திருந்தான். அவள் பின்னால் வந்து தோளை தட்ட, தூக்கி வாரிப்போட்டது அவனுக்கு.
"இங்க என்ன டா பண்ணுற?"
"இல்லை.. இந்த போட்டோ.. காத்துல வந்து இங்க விழுந்துடுச்சு.."
எட்டி பார்த்தவள் யூகம் உறுதியானது. அதனது வேலை முடிந்ததில், அது வெளியேறி விட்டது என புரிந்து கொண்டவள் அதனை எடுத்துக் கூறாது பிரதீஷை அழைத்து கொண்டு உள்ளே சென்றாள்.
"இந்த ஒன்வேல இவ்வளவு பெரிய லாரி எங்க இருந்து எப்படி வந்துச்சு என்ன ஏதுன்னு இப்போ வரை ஒன்னும் புரியல. எப்படி கவுரவமா இருந்தவருக்கு இப்படியொரு டெத். நான் அவர் பண்ணுன தப்பை நினைச்சு, அவரோட டெத்தை மறக்க நினைச்சாலும் என்னால முடியல.."
அவனது குரல் தழுதழுக்க, "பிரதீஷ்.. எல்லாருக்குமே ஒவ்வொரு டெத் ரெம்ப பெரிய பாதிப்பு தான். இல்லைனு சொல்லல. ஆறுதல் சொல்லுற இடத்துல இருந்து நீங்களே அழலாமா?" என்றாள் கணவன் கரத்தினை இறுக்கி பிடித்தப்படி.
"ராசிகா.. கிளம்பு.. வீட்டுக்கு போலாம்.."
"ஏன் பிரதீஷ்?"
"கிளம்புனா கிளம்பு.." என்றவன் விடுவிடுவென வெளியேற, எங்கு ரகளை செய்து விடுவானோ என்னும் பயம் மேலோங்கியது மனைவிக்கு.
அதே போல் வந்தவன் துணிமணியை அள்ளி வைத்துக் கொண்டிருந்தான். ராசிகாவையும் கிளம்பு என பணித்திட, எல்லோரையும் இயலாமையோடு ஏறிட்டாள்.
"ராசிகா எங்க கிளம்புறீங்க?"
"அத்தை.. ஊருக்கு தான்.."
அவரால் எதுவும் கூற முடியாத நிலை. மகனது வேலை பற்றி தான் தெரியும். அதனால், யாரும் அவர்களை தடுக்க இயலவில்லை.
"இன்னும் ஒருவாரம் இருந்துட்டு போலாமே மா.." என்றார் தெய்வானை.
அடுத்தடுத்த மரணம் அவரது ஆணவத்தையும் ஆட்டத்தையும் ஒடுங்க வைத்து விட்டது. கூட்டு குடும்பமாக வாழ்ந்து, ஒவ்வொரு உறவுகளும் மறைந்து போனதில் இப்போது புது உறவிடம் நெருக்கம் தேடியது. பிரதீஷ் தான் எவரிடமும் ஒட்டாதவன் ஆகிற்றே.
அப்படியிருக்க, அவனிடம் இரு என கூறி வில்லங்கத்தை விலை குடுத்து வாங்கவா முடியும்?
ஆனால், தங்கையின் கணவன் ஹரீஸ் அவனிடம் வருத்தம் இழையோடும் குரலில் உடனிருக்குமாறு கேட்டு பார்த்தான். அவன் தனது வேலையை பற்றிக் கூறி விட்டு, சிறிது தினம் அங்கு வந்து இருங்கள் என்றான்.
ஹரீஸ் அதனை வீட்டில் பேசி பார் எனக் கூற, அவனோ கூடம் நோக்கி விரைந்தான். கல்யாணி மகன் வருவதும் எழுந்து நிற்க, அதே போல் தான் தெய்வானையும் எழுந்து நின்றார்.
வேறுவழியில்லை இனி ஆண்கள் என்றால் அவ்வீட்டில் ராஜீவ், பிரதீஷ், ஹரீஸ், தேவா தான். சதாசிவமும் படுத்த படுக்கையாகி விட்டார். அதனால், இனி அத்தனை பொறுப்பும், முடிவும் இவர்களுடையதே.
"நான் கிளம்புறேன்.. வேலை இருக்கு.."
"கண்ணா.. ராசிகா எங்க கூட இருக்கட்டுமே.."
"ஏன் அவ எதுக்கு?"
"இல்லைபா.. எங்களுக்கு கொஞ்சம் ஆறுதலா இருக்கும்.."
"அப்போ.. கிளம்பி அங்க வாங்க.. என்னால ரெம்ப நாள் இங்க இருக்க முடியாது.."
"அப்பாவும் அடிப்பட்டு இப்படி நடக்க முடியாம.." என்றவர் தனது கேவலை முந்தானை தலைப்பில் வாய்மூடி அடக்கிக் கொள்ள, பிரதீஷ் எப்படியிருந்தவர்கள் எல்லோரும் இப்படி ஆகி விட்டனரே என யோசித்தவன் அகக்கண்ணில் மூன்று பேரின் கம்பீரக் குரலும் நடையும் மின்னி மறைந்தது.
"நீங்க போங்க பா.. நாங்க காரியம் எல்லாம் முடிச்சுட்டு ஆர அமர வரோம்.."
தெய்வானை பதிலை கேட்டு பிரதீஷ் ஒருவாறு பார்க்க, அதற்குள் ராஜீவ் முந்திக்கொண்டு "ஏன் இங்க என்ன வேலை உங்களுக்கு?" என்றான் சற்றே கரகரத்த குரலில்.
"இல்லை பா.. வந்தாலும் அங்க எவ்வளவு நாள் இருக்க முடியும்?"
அதில் எல்லோரிடமும் மௌனமே நிலவ, அதன்பின் தெய்வானை அவர்கள் அக்காவையும் கணவரையும் உடனிருந்து பார்த்துக் கொள்கிறேன் என்றார்.
எல்லோரும் பேசி ஒருமனதாக ஒரே வீட்டில் இருக்கப்போவதாக முடிவு எடுத்தனர். கூட்டுக்குடும்பம் இனியும் விரிசல் விட்டால் எவராலும் தாங்கும் மனோத்திடம் இல்லை. அதனால் இதே வீட்டில் ஒன்றாக இருக்கப்போவதாக முடிவு எடுக்க, பிரதீஷ் ஊருக்கு கிளம்பிட வாயிலை நோக்கி நடந்தான்.
நீண்ட நாட்களுக்கு பின் தந்தையின் அழைப்பு அவன் செவியில் விழ, அக்குரலில் நடையை தளர்த்தியவன் வேகமாக அறை நோக்கி சென்றான். அவனை பின்தொடர்ந்தனர் அனைவரும்.
படுத்த படுக்கையாக இருந்தவரை இயலாமையோடு அவன் காண, மகனை குற்றவுணர்ச்சியில் ஏறிட்டார்.
எதற்கு அழைத்தீர்கள் என கேட்க எண்ணம் தான். இருப்பினும் மனம் அக்கேள்வியை கேட்க தடையிட, வாய் மூடிவிட்டான். அவரே விழிகள் கலங்க மன்னிப்பை யாசித்தார்.
"கவுரவம்.. கவுரவம்ன்னு பெரியவங்களே மானத்தையும், நிதானத்தையும் காத்துல பறக்க விட்டுடாங்க..
உன்னை எல்லாருமே அன்னேக்கி எல்லை மீறி பேசிட்டோம்.. மன்னிச்சுடுபா எங்க எல்லாரையும்.." என்றவர் மகன் கரத்தை பற்ற நினைக்க, அவன் அப்போதும் அவரை விட்டு விலகியே நின்றிருந்தான்.
"அம்மாடி.. ராசிகா.. நீயும் என்னை மன்னிச்சுடு மா.. என் பையன் காதலை நாங்க அழிக்க நினைச்சோம்.. ஆனால், அவன் மனசு போல வாழ்க்கை அமைஞ்சப்போ தான் அவன் தங்கமான குணம் எனக்கு தெரிஞ்சது..
கடவுள் நல்லவங்களை சோதிச்சாலும், கை விட மாட்டான்னு உங்க காதலை ஒன்னு சேத்து வச்சப்போ தான் என் மரமண்டைக்கு புரிஞ்சது.. நீயும் அவனும் நல்லாருக்கணும் மா.. எந்த விதத்துலயாவது உன் மனசை கஷ்ட்டப்படுத்தியிருந்த மன்னிச்சுடு மா.." என்றவர் கைக்கூப்பி மன்னிப்பு கேட்க, எல்லோருக்கும் அவர்கள் காதலித்த விடயம் இப்போது தான் தெரிய வந்தது.
பிரதீஷ் இப்போதும் ஒதுங்கியே நிற்க, கல்யாணி அவர்கள் மகனிடம் மன்னிப்பை யாசிக்க நெருங்கினார். அவனுக்கோ விழிகளில் நீர் திரையிட்டு நின்றது.
முன்பு அன்னை மீது கொண்டிருந்த அன்பும் இணக்கமும் நினைவுக்கு வந்தவனாக அவரை கண்ணீர் சிந்தியப்படி ஏறிட்டான்.
"கண்ணா.. அம்மாவை.. மன்னிச்சிடு.." என்னும் போதே அவன் எதுவும் பேச முடியாத நிலையில், கண்ணீரை துடைத்துக் கொண்டு வெளியேறி விட்டான்.
தந்தை மன்னிப்பு கேட்ட போது கூட அவன் மனமிறங்கவில்லை. அன்னை அவனை நோக்கி வந்ததுமே, பால்ய நினைவு முதல் இளமைப்பருவம் வரை அன்னையோடு பேசிக் கழித்த நினைவுகள் இழையோடியது. சிறிது நேரத்திற்கு பின் அவர்களும் கிளம்ப, எல்லோரிடமும் விடை பெற்றவர்கள் பாட்டியிடம் அத்தனை ஆறுதல் கூறி கிளம்பினர்.
மகன் ஏதேனும் பேசுவான் என்னும் ரீதியில் தெய்வானை மற்றும் கல்யாணி கார் அருகே நிற்க..
அவனும் காரினை ஸ்டார்ட் செய்தப்படி "உடம்பை பாத்துக்கோங்க மா.. போயிட்டு போன் பண்ணுறேன்.. சித்தி நீங்களும் நேரத்துக்கு சாப்பிடுங்க.. பாட்டியை பாத்துக்கங்க..
அடிக்கடி போன் பண்ணுங்க.. லீவ் கிடைச்சா வாங்க.. ராஜீவ் போன் பண்ணுடா.." என்றவனை கல்யாணி மனம் நிறைந்தப்படி கண்ணீரை துடைத்துக் கொண்டு காண, மெல்லிய முறுவலை உதிர்த்து விடைபெற்று விட்டனர் இருவரும்.
அதன் பின் அவர்களே சண்முகத்திற்கு எளிமையான முறையில் பதினாறாம் நாள் காரியம் செய்து முடித்தனர்.
சிலர் வாழ்ந்து மறைந்த நிஜங்கள் காணாமல் போயிருந்தாலும், கூட்டுக்குடும்பமாக அவர்கள் வாழப்போகும் தருணங்கள் இனி அவர்கள் கவலையை மீட்டெடுக்கவுள்ளது.
ஒருத்தர் தொய்ந்து அமர்ந்தாலும், மற்றவர்கள் ஏதேதோ கூறி அவர்களை தேற்றுவதும் ஆறுதல் அளிப்பதும் இழந்தபோன நிம்மதியை ஏதோ ஒரு நொடி உணர வைத்தது.
ஒரு கை ஓசை எங்கும் கேட்காது. ஒரு கையோடு இன்னொரு கை சேரும் போது தான் ஓசையே பிறக்கிறது. அதுபோல தான் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருந்து நாட்களை கழித்தனர்.
இரண்டு மாதங்களுக்கு பின்..
பிரதீஷ் அப்போது தான் வேலை முடித்து வந்தான். இவளோ வந்தவனை அன்போடு, கனிவோடு கவனிக்காது மூஞ்சியை உர்ரென வைத்து அமர்ந்திருந்தாள்.
அவளது தொங்க போட்ட முகத்தை கண்டவன், வேண்டுமென்றே வம்பிழுக்கும் பொருட்டு ஷூ காலோடு மாடிப்படி நோக்கி ஏறினான்.
அதில் ஏற்கனவே கடுப்புற்றிருந்தவளுக்கு கோவம் கண் மண் பாராது எகிற, வார்த்தையும் அப்படி தான் வந்து விழுந்தது.
"எருமை.. எருமை.. ஷூ காலோட எங்க போற? அதானே.. கண்ட கழிசடை கூட சேர்ந்தா எப்படி நல்ல புத்தி வரும்?"
"ம்ம்ம்.. இவ்வளவு பேசுற வெங்காயம் அதை கழட்டி விட ஹெல்ப் பண்ணுறது?"
"ம்க்கும்.. நான் உனக்கு ஹெல்ப் பண்ணனுமா?"
"ஆமா.. அதுக்கு தானே நீ இங்க இருக்க.. இந்த வாய் டைவர்ஸ் ஆனாலும் கல்யாணம் பண்ணிக்கோன்னு விட்ட டையலாக் எல்லாம் ஒருவேளை பொய்யோ?"
"டேய்.. தேவையில்லாததை பேசாதே..".
"ஓஹ்.. அப்போ அதெல்லாம் நடிப்பா?" என்றவன் இரண்டு படிகளுக்கு மேலே நின்னபடி அவள் இடது தோளில் கை போட, அவளோ கையை தட்டி விட்டு அவனது கரத்தை பிடித்து இழுத்து வாயில் நோக்கி தள்ளி விட்டாள்.
"ஓஹோ.. என்னையவே வெளியே போக சொல்லுறயா?"
"நான் வெளியே போக சொல்லல.. ஷூ கழட்டிட்டு வா.."
"பேசுறயே கழட்டி விடு.." என்றவன் மறுபடி சோபாவில் சென்று அமர்ந்துகொண்டு அவளிடம் பளிப்புக் காட்ட, ராசிகாவுக்கோ ஓங்கி அறைய வேண்டும் போல் இருந்தது.
"அவளுக்கு கால் பண்ணி வர சொல்லி கழட்டி விட சொல்லு.."
"எவ அவ?"
"ம்ம்ம்.. உனக்கு டெய்லி குட் நைட்.. மார்னிங் சொல்லி குசலம் விசாரிக்கிற அந்த விளங்காத நாயை தான் சொல்லுறேன்.."
"ஓஹோ.. மேடம்க்கு பொசசிவ்வா என்மேல.."
"அப்படிலாம் ஒண்ணும்மில்ல.."
"அப்பறம் ஏன் அவளை பத்தி யோசிச்சு ஷூ கழட்டி விடுற வரை பேசுறீங்க? சரி போனை எடு அவளுக்கு கால் பண்ணி வர சொல்லலாம். அவளுக்கும் என்மேல கிரஷ்ன்னு அன்னேக்கியே சொன்னா.. நான் தன் கொஞ்சம் யோசிக்காம அவசரப்பட்டுட்டேன்.." என்றவன் டீபாயில் இருந்த போனை எடுக்க குனிந்த நேரம், வேகமாக வந்து சட்டையை கொத்தாக பற்றி அவள் முகம் நோக்கி திருப்பினாள்.
அதில் அவன் போன் கீழே விழ, "அவளுக்கு உன்மேல கிரஷ்ஷாஆஆ? அவ சொன்னாளா இதை? சொல்லு டா.." என உஷ்ணமாக கேட்க, அவனோ சீரியசாக தலையசைத்தான்.
"எவ்வளவு திமிரு அந்த பரதேசிக்கு உன்மேல கிரஷ்ன்னு சொல்லிருக்கா. நீ என்னை லவ் பண்ணுறது தெரிஞ்சும்.." என அவள் கொதித்து போய் கேட்க, அவனோ கலகலவென சிரித்தவனாக அவளை சோபாவை நோக்கி இழுத்து சென்று அமர வைத்தான்.
"சரி ஸார் அதுக்கு என்ன சொன்னீங்க?"
"ராசிகா.. அது முடிஞ்சு போனது அதை ஏன் கேக்குற?" என்றவன் அவளை தூக்கி மடியில் அமர வைக்க முயல, அவளோ அந்த ஷூ கால்லை தான் அழுத்தமாக பார்த்தாள்.
அதில் அவன் வராத வெட்கத்தை வரவைத்துக் கொண்டு சிரித்து, அவள் காதோரம் முத்தமிட்டப்படி "ஓகேன்னு தான் சொல்ல தோணுச்சு. பட் சொல்லல.." என்றதில் நாயகன் கன்னத்தில் அவளது விரல்கள் பதிந்து விட்டது.
"வலிக்குது டி.."
"நல்லா வலிக்கட்டும்.."
"என்னடி காதல் பார்வை பாக்க வேண்டிய புருஷன் கிட்ட இப்படி வன்மமா பாக்கிற?"
"ப்ளீஸ்.. பிரதீஷ்.. விடு டா.. முதல ஷூவை கழட்டு டிரஸ் சேஞ் பண்ணு..".
"அப்போ அதுக்கப்புறம்.." என்றவன் மோன விழிகளில் அவளை நிறைத்தவன், "ஒன் ஸ்நொக்.." என்றான் காதில் முத்தமிட்டவாறு..
"ஆமா.. இப்படியே சொல்லி சொல்லி தான்.. ஏதேதோ ஆகிடுச்சு.. எனக்கு ப்ராமிஸ் பண்ணுங்க நேஹா கூட பேச மாட்டேன்னு.."
ஒருநொடி அவளது முகத்தில் தெரிந்த பொசசிவை ரசித்தவன், "சரி பேசல.." என்றவன் அவளை அப்படியே தூக்கிக் கொண்டு அறை நோக்கி சென்றான்.
"பிரதீஷ்.. விடுங்.." என்றவள் அலறல் முழுவதும் வெளிவரும் முன் இதழ்கள் இரண்டும் அவளது இதழை ருசிக்கத் துவங்கி விட்டது. அந்த மஞ்சத்திலும், அவன் தந்த அணைப்பிலும் உருகிக்கொண்டிருந்தாள் ஆயிழை.
இரண்டு மாதங்களுக்கு பின்..
அதன்பின் வந்த நாட்களில் பிரதீஷ் வேலையில் மும்மரமடைய இடையிடயே ஊருக்கு பயணமனாள்.
எல்லோரிடமும் சற்றே நிம்மதி நிலவினாலும், ராசிகா பிரதீஷிற்கு இன்னும் ஒரு நல்லது நடக்கவில்லையென எந்நேரமும் பெரியவர்கள் கூடி அமரும் போதெல்லாம் இதனையே பேசி குறைப்பட்டுக்கொள்வார்கள்.
அன்றும் இதே போல தான் கல்யாணியோ மருமகள் தாய்மை அடையவில்லையே என ஏக்கமாக பேச, வழக்கம் போல் கார்த்திகா நழுவிக் கொண்டாள்.
இருக்குமிடமே தெரியாத ஒருவள் என்றால் அது பெரிய மகனும் மருமகள் தான். அதுவும் மூத்த மருமகள் சிரித்து பேசவே கூலி கேட்கும் சுபாவம். இப்போது எட்டு மாத கர்பிணி வேறு.
அதனால் அவள் கழண்டு கொள்ள, ராசிகா தான் எப்படி நழுவி செல்வது என புரியாது அமர்ந்திருந்தாள்.
"ராசிகா கண்ணு.. பாட்டி ஒன்னு கேக்குறேனு கோவிச்சுக்காதே டா."
"கேளுங்க பாட்டி.." என்றவள் மெல்ல அவர் மடியில் படுத்துக் கொள்ள, "அவன் உன் கூட சண்டை போடாம நல்லா தானே பாத்துக்குறான் உன்னை?"
அவளின் பதிலுக்காக நால்வரும் எதிர்பார்ப்போடு பார்த்திருக்க, "இப்போ கூட சண்டை தான் பாட்டி.." என்றாள் புன்னகையை அடக்கிக் கொண்டு போலியான கவலை படிந்த முகத்தில்.
"ஏன் மா என்ன சண்டை?"
கல்யாணி அவர்களும், "ஏன் ராசிகா எதுக்கு சண்டை போடுறான்? நான் கேட்டப்போ அவ்வளவு பெருமையா பேசுனானே உன்னை?" என அவரும் சந்தேகமாக வினவ..
"என்ன பண்ண அத்தை தினமும் சண்டை தான் போடுறாரு போன்ல.. இதோ இப்போ கூட, ஏன் ஊருக்கு போனன்னு சண்டை போடுறாரு.." என்றவள் கலகலவென சிரித்துக் கூறி எழுந்து செல்ல, எல்லோரும் அவளது பதிலில் மூக்கின் மேல் விரல் வைத்து விட்டனர்.
"இப்படி உட்காந்து கதை பேசாம சாயங்காலம் ஸ்னாக்ஸ் ரெடி பண்ணுங்க.." என சுமியும் அடுத்த வேலையை நியாபகப்படுத்த..
அதற்கு பதில் கூறியவனாக, "எதுக்கு ஸ்னாக்ஸ்? நான் எல்லாருக்கும் வடை அண்ட் பக்கோடா வாங்கிட்டு வந்திருக்கேன்.." குரல் கொடுத்தபடி ராஜீவ் உள்ளே நுழைந்தான்.
"எல்லாருக்கும் ஒரே வடை தானா?" என ராசிகா வினவ..
அவனும் பதிலுக்கு, "ஆமா.. ஏன் உங்களுக்கு என்ன வடை வேணும்?" என்றான்.
"ம்ம்ம்.. பூனை வடை வேணும்.."
அதில் எல்லோருமே அவளது துருதுரு பேச்சில் அவளையே பார்த்திருக்க, "அதென்ன பெரிய விஷயமா? தவளை வடை, ஆமை வடை போடும் போது பூனை வடை போட முடியாதா?" என்றவன் பதிலுக்கு கண்ணை சிமிட்ட அங்கு மெல்லிய சிரிப்பலை தான்.
எல்லோரோடு சேர்ந்து வடை சாப்பிட்டுக் கொண்டிருந்தவளுக்கு, திடீரென குமட்டல் வருவது போலிருந்தது. அதனை பெரிதாக அலட்டிக்கொள்ளது வடையை வாயில் அதக்கினாள் மீண்டும். அதில் சற்றே குமட்டல் குடலை பிரட்ட, எழுந்து ஓடுபவளை தான் ராஜீவ் வடை சரியில்லையோ என்னும் ரீதியில் பார்த்திருந்தான்.
அவளோ குமட்டலோடு குடலே சேர்த்து வெளியே வந்துவிடுமளவு வாந்தி எடுக்க, தெய்வானை என்னவென காண வேகமாக ஓடிவந்தார். அவள் தலையை அழுத்தி பிடித்துக் கொண்டவர், வாந்தி எடுத்து முடிக்கவும் அழைத்து வந்து சோபாவில் அமர வைத்தார்.
அவளோ வாந்தி எடுத்து முடிந்து அசௌகரியமாக உணர, உடனே கல்யாணி எலுமிச்சை ஜூஸை நீட்ட அதுவும் குடலை தொட்ட நொடி வாந்தியாக வந்தது. மிக சோர்வோடு அமர்ந்திருந்தவளை கண்டு, சுமித்ரா நக்கலாக "போன்ல போட்ட சண்டைக்கு இப்போ தான் அர்த்தம் புரியுது.." என அழுத்திக் கூற, எல்லோர் செவியிலும் நன்கு விழுந்தது.
ராஜீவோடு சிறிது நேரத்திலே எல்லோரும் மருத்துவமனை சென்றடைய, அங்கு மகப்பேறு மருத்துவரை காண வீட்டினரோடு அமர்ந்திருந்தாள். அவரும் அவளை தனியே பரிசோதித்திட அழைத்து செல்ல, அப்போது தான் நாள் தள்ளி போன நினைவு வந்தது.
அவரும் கன்ஃபார்ம் செய்ய, கிட் மூலம் டெஸ்ட் எடுக்க அதில் கிடைத்த இரு கோடுகளை கண்டவள் விழிகளில் ஆனந்த நீரே. மருத்துவர் வீட்டினரிடம் விஷயத்தைக் கூற, ஆழியளவு சோகமெல்லாம் புதிய வருகையை எண்ணி காற்றோடு கரையத் துவங்கியது.
ராசிகாவோ பிரதீஷிடம் இப்போதைக்கு கூற வேண்டாம். நேரில் வரவும் கூறிக் கொள்ளலாம் என்று விட்டாள். அவள் பேச்சை யாரும் மீறவில்லை. அவனும் மீட்டிங் என்று கூறி, ஹைதரபாத் சென்று விட்டான் ஒரு வாரமாக. அதனால் அவனது அழைப்பும் ராசிகாவிற்கு குறைந்து போனது.
அன்னை ராணி விஷயம் கேள்வியுற்று வீட்டிற்கு அழைத்தும் அவள் செல்லவில்லை. எங்கும் செல்லாது அவனது அருகாமையையும் அரவணைப்பையும் நாடியவள் சாவித்திரி பாட்டியோடு ட்ரெயினில் பாலக்காடு வந்து விட்டாள்.
வந்து என்ன பிரயோஜனம் அவன் ஹைதராபாத்தில் இருந்து மறுநாள் இரவு தான் வந்தான். வந்தவன் ஆயாசமாக உறங்க போன நேரம், நெஞ்சில் சாய்ந்து கொண்டு கூறிடலாம் என நினைக்க பெரிய கல்லொன்று அவள் கனவில் விழுந்தது.
ஒரு விபத்து கேஸ் என்பதால் பிரதீஷ் அவசர கதியாக ஸ்கேன் பார்க்க செல்ல வேண்டிய நிர்பந்தம். அவனும் சென்றுவிட்டு தாமதமாக வீடு திரும்பியவன், கீழே உள்ள அறையிலே தூங்கி விட்டான்.
காலையிலும் தாமதமாகவே அவன் எழ, சரி அவன் கண்ணில் படும்படி டெஸ்ட் செய்த கிட்டை வைப்போம் என நினைத்தாள். அது நிச்சயம் அவனுக்கு ஷாக்காக தான் இருக்கும் என எண்ணியவளுக்கு அதிலும் ஏமாற்றமே. அவன் அந்த கிட்டை காணவே இல்லை.
அவனோ, எழுந்து கிளம்பி சிறிது நேரத்தில் டேக் கேர் என்று மட்டும் கூறி கடக்க, சாவித்திரி பாட்டியோ பேத்தியிடம் போன் செய்து கூறு என்றார். அவன் போனையும் எடுக்கவில்லை. சரி மெசேஜ் செய்வோம் என எண்ணியவளுக்கு அழுகை வர போனை ஒரு ஓரம் போட்டு அமர்ந்து விட்டாள்.
அந்த அறை முழுவதும் நிறைந்திருந்த இருட்டில் அவன் மும்மரமாக ஸ்கேன் பார்க்க, நர்ஸ் ராசிகா என்ற பேரினை வாசிக்கவும் அதிர்ந்து எழுந்து வெளியே வந்தான் காத்திருக்கும் பேஷன்ட்டை காண..
அதில் ராசிகா அமர்ந்திருக்க, என்ன ஆச்சு என பதறியப்படி கேக்க அவளிடம் பதிலே இல்லை. முகத்தை திருப்பிக் கொண்டாள். அவன் நர்ஸிடம் அவளது ரிப்போர்ட்டை கேட்க, அதில் அப்டாமினல் ஸ்கேன் எழுதியிருந்தது.
அவன் உனக்கா என்னும் ரீதியில் பார்க்க, அவளோ அவனை முறைப்பாக பார்த்தாள். ஏற்கனவே ஒருவர் ஸ்கேன் பார்த்து முடித்து வெளியே வர, பிரதீஷ் காதல் மனைவியின் வருகைக்காக காத்திருந்தான்.
அவளும் கடுகடுத்த முகத்தில் அந்த மெத்தைப்படுக்கையில் அமர, "எதுவும் பெயினா? ஏன் என்கிட்டே சொல்லல?" என்றான் அக்கறையாக.
"சொன்னா மட்டும் என்ன செய்ய போறீங்க? ஹைதராபாத்ல இருக்க வேண்டியது தானே?"
அதில் அப்போது தான் அவளது கோவம் புரிய, அதற்கு மேல் எதுவும் பேசாது நர்ஸ் இருப்பதால் வாய் மூடிக்கொண்டான்.
வழக்கம் போல் ஜெல் இல்லை என்று கூறி நர்ஸை எடுத்து வர அனுப்பியவன், "நிஜமா ஸ்கேன் பாக்க தான் வந்தயா டி?" என்றான் கனிவாக.
"ஆமா.. நான் என்ன லூசா? டாக்டர் கிட்ட பொய்யா ரிப்போர்ட் எழுதி வாங்கி வர?"
அவனுக்கோ அவள் பதிலில் சிரிப்பு தான் வந்தது. சரி அவள் கோவமாக இருக்கிறாள் என புரிந்து கொண்டு, ஸ்கேன் பார்க்க திரும்பினான்.
அவனும் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் பார்க்க, ஒவ்வொரு உள்ளுறுப்புகளையும் தீவிரமாக பார்த்தவன் விழிகள் இடுங்கியது கர்பப்பையில் தெரிந்த ஆரம்ப கால கருவளர்ச்சி கண்டு.
அதோடு அக்கருவின் இதயதுடிப்பு அந்த அறையை நிறைக்க, "ராசிகா நிஜமாவா?" என்றான்.
அவளோ.. ஒரே வார்த்தையில் அவனுக்கு பதிலளித்தாள்.
"குஷி வரப்போறா.."
அவன் விழிகளில் நீர் கோர்க்க, அவளும் ஆனந்த கண்ணீரை தத்தெடுத்தவளாக அவனை இறுக கட்டிக்கொண்டாள்.
சில உறவுகள் மரணத்தால் உலகம் விட்டு மறைந்தாலும், புது உருவத்தில் புதிய பிறப்பெடுத்து பூமி வந்தடையலாம். அது போல தான் ராசிகாவின் தாய்மை அனைவரிடமும் பெரிய நிம்மதியையும், எதிர்பார்ப்பையும் உண்டாக்கியது.
மீண்டும் குஷி வரவுள்ள நம்பிக்கையில்..
முற்றும்.....!
