5
ரயில் நின்ற வேகத்தில் தன் முன்னே குனிந்து குறும்ப கூத்தாட பார்த்துக்கொண்டிருந்தவன் கன்னத்திற்கும் இதழுக்கும் இடைப்பட்ட இடத்தில் இதழ்களை எதிர்பாராமல் பொருந்தியிருந்தாள் தாமரை..
ஜெர்ரி ஜஸ்ட் மிஸ் என்ற விழி மொழியுடன் அந்த கணத்தை ஆழ்ந்து அனுபவித்தான் என்றே சொல்லலாம்!!
சட்டென்று விலகியவள் அருகிருந்த ஹாண்டிலை பிடித்துக்கொண்டு அவன் முகம் பார்க்க சங்கடப்பட்டு திரும்பிக்கொண்டாள். முதல் முறையாக ஆணின் ஸ்பரிசம்!! அதுவும் இரண்டாம் முறை!!
உடலோ ரயிலின் வேகத்திற்கு சிறிதும் குறையாமல் தடதடவென்று ஆட.. இதயமும் எகிறி குதித்து விடும் அளவுக்கு வேகமாக துடித்துக் கொண்டிருந்தது. உதடுகள் மீது அந்த குளிரையும் மீறி இவளுக்கு வியர்க்க.. வேகவேகமாக கை கிளவுஸை அகற்றி துடைத்துக்கொண்டாள்.
அவளின் அந்த மன உணர்வுகளை அருகிலிருந்து படித்தவன் அவளுக்கு பின்புறமாக இரண்டடி இடைவெளியில் நின்று.. "ஹே டாம்.. ரிலாக்ஸ்!! ரிலாக்ஸ்!! இது கூட ஆக்சிடென்ட் தான்!!" என்று அதற்கு மேல் அருகில் இருந்தால் இன்னும் சங்கடப்படுவாள் என்று உணர்ந்து சற்று தள்ளி நின்றான். ஆனாலும் அவளை அவதானித்துக் கொண்டு தான் இருந்தான்.
அலுவலகம் வரும் வரை அவனை திரும்பிப் பார்க்கவே இல்லை. அருகே ஒரு மனிதன் வருகிறான் என்ற உணர்வே இல்லாமல் தன்னுள் உழன்றப்படியே அதிகமாக யாருடனும் பேசாமல் அமைதியாக தன் இடத்தில் அமர்ந்தாள்.
அருகில் ஜெர்ரி அமர்ந்தாலும் அவனிடம் எதுவும் பேசாமல் 'கருமமே கண்ணாக!!' என்று டிரெயினர்ஸ் வந்து எடுக்கும் அப்டேட்களை எல்லாம் மிக உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தாள். இடைவேளையின் போதும் ரெக்ஸியுடன் இணைந்து கொண்டவள், அவளிடம் கூட தேவைக்கு மட்டுமே பேசி விட்டு அமைதியாக இருந்தவளை விசித்திரமாக பார்த்தாள் ரெக்ஸி.
அன்று மட்டுமல்ல அதன் பின் வந்த இரண்டு மூன்று நாட்களும் இப்படியாகவே சென்றது. மீண்டும் கூட்டுக்குள் ஒடுங்கிய கூட்டுப்புழுவாய் சுருங்கிக் கொண்டாள் தாமரை. இரண்டு நாட்களாக மகேஷூக்கு கூட அழைத்து பேசவில்லை. "முக்கிய ப்ராஜெக்ட்!! இரண்டு நாட்களுக்கு பிஸி" என்று மெசேஜ் தட்டி விட்டதோடு சரி!! ஏதோ குற்றம் செய்த குறுகுறுப்பு அவளிடம்!!
தன்னையறியாமல் எதார்த்தமாக நடந்த நிகழ்வு தான். ஆனால் அதுவே அவளுக்குள் ஒரு குற்றவுணர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. அதுவும் அவளுக்கு நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளை என்று ஒருவன் இருக்க, அவனை கூட தீண்ட விடாமல் எட்டியே நிற்பவள், ஜெர்ரிகை அனுமதித்தோடு மட்டுமல்லாமல் தானும் அவனை முத்தமிட்டதை நினைத்துதான் இந்த குற்றவுணர்வு அவளுக்கு.
ரெக்ஸிக்கு தான் மிகவும் கவலை ஆகிப்போனது. வந்த புதிதில் இவ்வாறு சுருண்டு இருந்தவளை பேசி பேசி கரைத்து ஒரு வழியாக இப்போதுதான் நார்மலாக பேசும் அளவிற்கு கொண்டு வந்திருந்தாள் ரெக்ஸி. திரும்பவும் என்னாயிற்று தாமரைக்கு என்று புரியாமல் தவித்தாள்.
இப்பொழுதெல்லாம் அரை மணி முன்னதாகவே அலுவலகத்துக்கு சென்றுவிடுகிறாள். ஜெர்ரிக் முதல் நாள் அவளைக் காணாமல் ரயில் நிலையத்தில் தேடியவன் தனக்கு முன்னே அலுவலகத்தில் அமர்ந்து இருந்தவளை பார்த்தவுடனேயே புரிந்துபோனது தன்னை தவிர்ப்பதற்காக சீக்கிரமாக வந்திருக்கிறாள் என்று!!
அவனும் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. நாம் இயல்பாக தான் அவளிடம் நடக்கிறோம். ஆனால் சில இந்திய பெண்கள் இப்படித்தான் போலும்.. கட்டுப்பெட்டி!! என்று அவளை திட்டியவன், அவளை கடக்க முயன்று டீமில் உள்ளவர்களோடு வழக்கம்போல கலகலத்து வளவளத்துக் கொண்டுதான் இருந்தான்.
அவள் என்ன என்னை தவிர்ப்பது? நான் அவளை தவிர்க்கிறேன்!! என்று இப்படி ஒரு ஜீவன் தன் அருகில் இல்லாதது போலவே அவனும் நடந்து கொண்டான்.
அன்று வெள்ளிக்கிழமை.. காலையிலேயே அவளுக்கு மனம் கணக்க தன் அலமாரிக்குள் வைத்திருந்த மீனாட்சி படத்தை எடுத்து வணங்கிவிட்டு அலுவலகத்திற்கு புடவையில் வந்திருந்தாள்.
மனது என்னவோ போல் இருக்க புடவை அணிந்து சிறிது நேரம் சாமி படத்தின் முன் தியானம் செய்தவளுக்கு சற்று அமைதி கிடைக்க வழக்கமான நேரத்திற்கு அலுவலகத்திற்கு கிளம்பி இருந்தாள். லிஃப்டில் முதலில் ஏறிய ஜெர்ரிக் நாசியில் சட்டென்று ஏதோ ஒரு மணம் அவனை சூழ்ந்தது, இதுவரைக்கும் அறிந்திராத ஒரு மணம்.. மயக்கவில்லை.. கிறக்கவில்லை.. ஆனால் ஃபீல் குட் என்பதைப்போல மனத்திற்கு இதமளித்தது.
மூச்சை நன்றாக இழுத்து சுவாசித்தவன் கண்ணைத் திறக்க, அவன் கண் முன்னே சற்று பக்கவாட்டில் நின்றிருந்தாள் தாமரை. லிஃப்ட்டில் வேறு யாரும் இல்லை. இந்த சுகந்த மணம் அவளிடம் இருந்து தான் வந்து சுகம் அளிக்கிறது என்று புரிந்தவன் மெல்ல தனக்குள் புன்னகைத்துக் கொண்டான்.
காலை உணவை காபிடேரியாவில் சாப்பிட்டுக் கொண்டிருந்த தாமரை, அருகில் அமர்ந்து ரெக்ஸி அவள் கழுத்து அருகே மூக்கை வைத்து இழுத்து சுவாசித்தவள், "திஸ் இஸ் தட்.. தட்..." என்று அதன் பெயரை உச்சரிக்க முடியாமல் தவித்தாள். மென்னகையோடு "கஸ்தூரி மஞ்சள்" என்றாள் தாமரை.
"யா.. யா.. சூப்பர் ஸ்மெல்" என்று அவள் கூற.. அவர்கள் பின்னே அமர்ந்திருந்த ஜெர்ரிக்கும் க்ரீன் டீயை அருந்தியப்படி ஆமோதித்து கொண்டான்.
"இன்னைக்கு தான் நீ கொஞ்சம் சிரித்து இருக்க.. ரெண்டு மூணு நாளா உம்முன்னு இருந்த. எங்க மறுபடியும் டார்டாய்ஸ் மாதிரி சுருண்டு கிட்டியோனு நான் பயந்துட்டேன்" என்று பின்னால் ஒருவன் இவர்கள் சம்பாஷணையை கேட்டுக் கொண்டிருக்கிறான் என்பதை அறியாமல் தாமரையிடம், அவள் வேலைக்கு வந்த புதிதில் எப்படி எல்லாம் உம்முன்னு இருந்தாள், அவளை எப்படி இவள் பேச வைத்தாள் என்பதை விவரித்துக் கொண்டிருந்தாள்.
முதலில் உதடு கடித்து ஒரு நிமிடம் அமைதியாக நின்றவள் பின்பு திரும்பி "சாரி ரெக்ஸி!! இனி அது போல இருக்க மாட்டேன்" என்று மனதார கூற..
"இட்ஸ் ஓகே டாம்.. பட் திரும்பவும் அப்படி போய்டாதே.. நான் ரொம்ப கஷ்டப்படுவேன் உன்னை மாத்த.." பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு பேசினாள் ரெக்ஸி. சிரிப்புடன் அவள் தோளோடு சேர்த்து அணைத்து "நோ!! நோ!!" என்றாள் தாமரை!!
"தட்ஸ் மை கேர்ள்!!" என்று அவள் கன்னத்தில் முத்தம் வைத்த ரெக்ஸியை தாமரை முறைக்க..
"ஒரு கிஸ்ஸூக்கு இப்படி பிகேவ் பண்ணாதே டாம்.. இட்ஸ் கைண்ட் ஆஃப் லவ் தான். பாவம் உன் புருஷன்!! உன்னை கட்டிட்டு என்னென்ன கஷ்டப்பட போறாரோ??" என்று ரெக்ஸி கூறி சிரிக்க, இவர்களுக்குப் பின்னால் டீ குடித்துக்கொண்டிருந்த ஜெர்ரிக்கு சிரிப்பில் புரையேறியது.
அவன் திரும்பி அவர்களை பார்க்கும் முன் இவர்கள் தங்கள் டெஸ்கிற்கு சென்றுவிட்டார்கள். அவர்கள் பேச்சிலிருந்து ஒன்று மட்டும் புரிந்தது ஜெர்ரிக்கு. இவனிடம் மட்டும் இல்லை பொதுவாகவே அவள் குணம் அப்படித்தான் போலும்!! ஒரு தோள் குலுக்கலுடன் வேலை செய்யும் இடத்திற்கு சென்றான்.
சிலர் தங்கள் டெஸ்கில் லேப்டாப்பை ஆன்னே செய்யாமல் பார்த்துக் கொண்டும்.. சில பேரு அருகிலுள்ள தன் பார்ட்னரிடம் வளர்த்துக் கொண்டும்.. சில பேர் டெஸ்க் தாண்டி மற்றவர்களோடு பேசிக் கொண்டும் இருக்க.. இவள் ஒருத்தி மட்டும் தான் மிக மும்முரமாக தனது லேப்டாப்பில் ஏதோ தட்டிக்கொண்டு இருந்தாள். முகத்திலோ இரண்டு நாட்களாக அவன் பார்த்த இறுக்கம் இல்லாமல் அமைதியாக இருந்தது. அதுவே போதுமானதாக இருந்தது அவனுக்கு.
அதிலும் இன்று புடவையில் வந்து இருப்பவளை ஆச்சரியத்தோடு பார்த்தான். இள நீல நிற ஷிபான் புடவை.. அவளுக்கு அவ்வளவு பொருத்தமாக இருந்தது. கூடவே தலைக்கு ஊற்றி இருப்பாள் போலும், அலையலை கேசத்தை ஒற்றை கிளட்ச் கிளிப்பில் அடைத்திருக்க, அது இன்னும் அவளின் அழகை மெருகேற்றியது போல இருக்க.. ஒரு நொடி அவளைத்தான் பொருள் விளங்கா பார்வை பார்த்துக் கொண்டு நின்றான்.
"இந்த அமைதியும்.. அழகும்.. ம்ஹூம்!!" ஒரு பெரு மூச்சோடு அவள் அருகில் அமர்ந்தான். அவள் எப்படியும் பேசப்போவதில்லை என்று உணர்ந்து இவனே "குட்மார்னிங்!!" என்று கூற..
மெல்ல நிமிர்ந்து பார்த்தவள், ஏற்றுக் கொண்டதாக தலையசைத்து "குட்மார்னிங்!!" என்றாள் மெல்லிய குரலில்.
ஆச்சிரியத்துடன் "ஸர்ப்ரைஸிங்!!" என்று விழி விரித்து, "லெட்ஸ் பீ அ ப்ரண்ட்ஸ் டாம். ட்ரெயினில் நடந்ததெல்லாம் ஜஸ்ட் ஆக்சிடென்ட்.. எவ்ளோ நாளைக்கு அதையே நெனச்சுக்கிட்டு எப்படி என்கிட்ட பேசாம தவிர்க்க போறீங்க? ஒன் வீக் ஓடிப்போச்சு. நாம நம்ம ப்ராஜெக்ட்டுக்கு பத்தி ஒண்ணுமே டிஸ்கஸ் பண்ணல. மத்த டீம்ஸ் மேட்ஸ் க்ளோஸாவாது பேசிக்கிறாங்க.. ஆனா நம்ம ரெண்டு பேருக்குள்ளே..." என்று இருபுறமும் விரலால் சுட்டிக் காட்டியவன் உதட்டைப் பிதுக்கி தலையை இட வலமாக ஆட்டினான்.
அவன் சொல்ல வருவதும் அவளுக்கு புரிந்தது. இதே நிலை நீடித்தால் மத்தவங்க எல்லாம் பிராஜக்ட் ஆரம்பித்துவிட இவர்கள் இருவரும் இப்படியே இருக்க வேண்டியதுதான் என்று நினைத்தவள் மெல்ல தலையசைத்து "பிரண்ட்ஸ்!!" என்று கூறிவிட்டு மீண்டும் லேப்டாப்பில் தலையை நுழைத்துக் கொண்டாள்.
அடுத்த சில நிமிடங்களில் தாமரையின் தளிர் விரல்களோ கீபோர்டில் நர்த்தனங்கள் ஆட.. கண் விழிகளோ இங்குமங்கும் ஓடியாட.. மிகத் தீவிரமாக இதுவரை ட்ரைனர்ஸ் கூறியவற்றை எல்லாம் இவள் வொர்க் அவுட் செய்து கொண்டிருந்தாள்.
ஜெர்ரிக் அவளது கஸ்தூரி மஞ்சளின் மணத்தை நுரையீரலுக்குள் நிரப்பியப்படி, அவள் மீதிருந்த தன் விழிகளை நகர்த்த மு
யற்சிக்காமல்... வலது கையால் தாடையை தாங்கியப்படி அவளை தான் பார்த்துக் கொண்டிருந்தான்.
