ஓவியம் 3

 

Jiya Janavi
(@jiyajanavi)
Member Admin
Joined: 2 years ago
Messages: 265
Thread starter  

ஓவியம் 5

 

அடிபட்டு கிடந்த வசந்த்குக்கு ஆறுதல் கூறிவிட்டு தன் வீட்டிற்கு வந்த ஜெய்தேவ் மனதில் பெரும் குழப்பம். யார் இந்த பெண்??

 

மூன்று மதத்திலும் சொந்தங்கள் எவ்வாறு இருக்க முடியும்? ஒருவேளை சிறுவயதிலிருந்து பழகினா குடும்பமாக இருந்தால்? என்னவோ குழப்பம் இருக்கிறது!! என்ன என்று நாளைக்கு கண்டுபிடித்தே தீர வேண்டும் என்று இவன் தீர்மானம் எடுக்க.. இவனை தீர்த்துக்கட்ட அங்கே கட்டம் கட்டிக் கொண்டிருந்தனர் அந்தப் பாவையின் சொந்தங்கள்!!

 

அவள் ஆதினி!!

 

அவர்கள் வீட்டு சோபாவில் கால்களை மடக்கிக் கட்டிக்கொண்டு ஆதினி அமர்ந்திருக்க அவள் முன்னே மூன்றுவித பொசிஷன்களில் வெவ்வேறு முக பாவத்தோடு அவளை தான் பார்த்துக் கொண்டிருந்தனர் அந்த மூவரும்.

 

"அன்னைக்கு உன் பின்னாடி வந்தானே நான் அப்பவே அவனை கைமா பண்ணி இருப்பேன்!! நீ தான் வேண்டாம் என்று தடுத்தது. இப்ப பாரு எந்த அளவில் வந்து நிற்குது" என்று அஷ்ரீஃப் கோபத்தில் கத்த..

 

"என்னது அன்னைக்கும் வந்தானாடா? வண்டியில ஃபாலோ பண்ணி?" என்று ஸ்டீபன் கேட்க..

 

"இல்லை இல்லை டா.. அன்னைக்கு நடந்து தான்டா வந்தான்" என்று அஷ்ரீஃப் கூற..

 

"இல்லையே.. நேத்து நான் வேலை விட்டு வரும்போது இவன் என்கிட்டயே ஆதினி பற்றி விசாரிச்சான். அதான் வந்த வேகத்திற்கு நாலு காட்டு காட்டிட்டு தான் வந்தேன். ஆனா.. அவன் வண்டியில் தான் வந்து இருந்தான்" என்று ஸ்டீபன் கூற..

 

"டேய் என்னமோ பிரச்சனையாமே சுவாதி எனக்கு போன் பண்ணி சொன்னா" என்று சட்டையை மடக்கிக்கொண்டு கோதாவில் இறங்குபவன் போல ஆவேசமாக உள்ளே நுழைந்தான் கிரி. ஆதினியின் அக்கா சுவாதியின் கணவன். 

 

ஸ்டீபன் அஷ்ரீஃப் இருவரும் ஆதினியின் பின்னால் வந்த பையனை பற்றியும் அவளை விசாரித்தவனை பற்றியும் கிரியிடம் கூற, "இரண்டு பேரும் வேற வேற ஆளுனு எனக்கு தோணுது. ஒருத்தவன் ஃபாலோ பண்ணாலே உருப்படியா வீடு போய் சேர மாட்டான், இதுல ரெண்டு பேரு வரானுங்களா? இன்னைக்கு வரட்டும் டா ஒரு கை பார்த்திடலாம்" என்று கிரி கர்ஜனையுடன் கூற..

 

மற்ற இருவரும் ஒத்துக்கொள்ள மூவர் குழு சேர்ந்து இன்று ஆதினியின் பின்னே பார்க்குக்கு செல்வதாக திட்டமிட்டு ஜெய்தேவுக்கு வலைவிரித்து காத்திருந்தனர். பாவம் அந்த அப்பாரிணியும் இந்த மூவர் கூட்டத்திடம் மூளையே இன்றி மாட்டிக் கொள்ளப்போவதை அறியவில்லை.

 

ஜெய்தேவிற்கு இன்று வங்கியில் சுத்தமாக வேலை ஓடவில்லை மொத்தமும் கரெப்ட்டான கம்ப்யூட்டர் போலவே அமர்ந்திருந்தான். "இவனுங்க இரண்டு பேரும் யாராக இருக்கும்? அவளை தொடர்வதற்கு இவர்களுக்கு ஏன் இவ்வளவு கோபம் வருகிறது? விசாரித்தற்கே இந்த காட்டு காட்டி இருக்காங்களே அவளை நான் மனதில் நினைப்பதே கண்டால் என்ன செய்வார்களோ? என்ன ஆனாலும் அவர்கள் இவளுக்கு என்ன உறவு என்று இன்று கண்டுபிடித்தால் ஒழிய வேலையே ஓடாது நமக்கு" என்று தனக்குள் முடிவெடுத்து கொண்டவன் இன்றும் அதே போல பார்க்குக்கு சென்று அவளுக்காக காத்திருந்தான்.

 

 

அவளும் சரியான நேரத்துக்கு பிள்ளைகளுடன் அங்கே வர அவளைத்தான் வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டே இருந்தான் ஜெய்தேவ். "எப்பொழுதும் சின்ன சினேகத்தை காட்டும் அவளது விழியோ என்று பயந்தது போல இருக்க.. எதற்காக திடீரென்று என் மேல் இவளுக்கு பயம்? இத்தனை நாளா நம் வரவை எதிர் பார்த்தது போலவே கண்கள் சினேகமாக சிரிக்கும். சற்றும் கொஞ்சலாக முறைக்கும்.. சில சமயம் சுற்றி முற்றிலும் யாரும் பார்த்து விடுவார்களோ என்று அச்சத்தில் பார்க்கும். இன்று ஏன் இவ்வளவு பயத்தை காட்டுகிறது. இந்த மூஞ்ச பாத்தா பூச்சாண்டி மாதிரியா இருக்கு?" என்று அவன் தனக்குள்ளேயே அலசி ஆராய்ந்து கொண்டிருக்க... அவளோ பிள்ளைகளை விளையாட விட்டு விட்டு.. பிள்ளைகள் மீது ஒரு பார்வையும் இவன் மீது ஒரு பார்வையும் மாறி மாறி பார்த்துக் கொண்டே இருந்தாள்.

 

"நமக்கு தான் டென்ஷனா இருக்கு. இவ ஏன் ஏதோ டென்ஷனாக இருக்கா? இன்னைக்கு என்ன ஆனாலும் சரி அவளிடம் பேசியே ஆகவேண்டும்" என்று நினைத்தவாறு மெல்ல எழுந்து அவள் அருகே நெருங்க..

 

அவன் அவள் அருகே நெருங்க.. நெருங்க.. அவனை பார்த்து கண்களாலேயே அருகில் வராதே என்று எச்சரிக்கை செய்தாள். பின்னோக்கி நடந்தவாறு விழிகளாலேயே எச்சரிக்கை செய்தாள்.

 

என்றும் அவள் விழிகளில் தெரியும் அவ்விடத்திலேயே அவளது உள்ளத்தை படிப்பவன் என்று இருந்த டென்ஷனில் அதை படிக்க மறந்து இல்லை முயன்று தோற்றானோ..

"இல்லை மிஸ்!! நான் ஒன்னும் தப்பான நோக்கத்துடன் உங்ககிட்ட பேச வரல.. ப்ளீஸ் நான் என்ன சொல்ல வர்றேன்னு கொஞ்சம் கேளுங்களேன்.." என்று இவனும் விடாப்படியாக முன்னே முன்னேறினான்.

 

'இல்லை!! வேண்டாம்!! கிட்டே வராதே!!' என்பது போல் தலையை இடவலமாக ஆட்டி கொண்டே அவள் பின்புறம் சென்றாள். அதிலும் பயத்தோடு கைகளை பிசைந்து கொண்டே..

 

சட்டென்று அவள் முன்னால் இரு குழந்தைகளும் வந்து நின்று அவனை பார்த்து முறைக்க..

 

"முளைச்சி மூனு இலை விடல இதெல்லாம் என்ன பார்த்து முறைக்குதுங்க" என்று தனக்குள் புலம்பியவன், அவர்கள் அளவுக்கு குனிந்து பிள்ளைகளை தாஜா செய்ய முயன்றான்.

 

"டேய் மாமா உங்களுக்கு சாக்லேட் வாங்கி தரேன் டா.. கொஞ்ச நேரம் சாப்பிட்டுட்டு அந்த பக்கமா விளையாடுங்க.. அக்கா கிட்ட பேசிட்டு வரேன் டா" என்று இவன் ஐஸ் வைக்க…

 

"எனக்கு சாக்லேட் எல்லாம் பிடிக்காது ஐஸ்கிரீம் தான் வேணும்!!" என்று ரஃபிக் கூற..

 

"அவ்வளோ தானே ராசா.. வாங்கி தரேன்!" என்று ஐஸ் கொடுத்து அவனுக்கு ஐஸ் வைக்க முயன்றான்.

 

"எனக்கு?" என்று அந்த குட்டி பெண் ஜனனி கேட்க..

 

"உனக்கு என்ன வேண்டும்?"

 

"பெரிய சாக்லேட் பார்!!" என்றாள் அவள்.

 

"ஓகே டன்!! உனக்கு ஐஸ்கிரீம்.. உனக்கு சாக்லேட் சரியா? ரெண்டு பேருக்கும் வாங்கித்தரேன் சாப்பிட்டு அப்படிக்கா போய் விளையாண்டு கிட்டு இருக்கணும். சரியா? நான் கொஞ்சம் அக்காகிட்ட பேசிட்டு வரேன்!" என்று இவன் டீல் பேச..

 

"எங்களுக்கு ஓகே.. அப்போ அவங்களுக்கு??" என்று அவனுக்குப் பின்னால் பார்த்தான் அந்த வாண்டு பையன் ரஃபிக்.

 

"அவங்களுக்கும் சாக்லேட்..." என்று உட்கார்ந்த வாக்கிலேயே திரும்பிப் பார்த்தவன் மூன்று ஆஜானுபாகுவான ஆட்களைப் பார்த்து அதிர்ந்து எழுந்து நின்றான். 

 

ஒருவன் தன் கையிலுள்ள காப்பை முறுக்கியவாறு அவனை பாசத்தோடு பார்க்க..

 

மற்றவனோ சட்டையை முழங்கைக்கு மேலே சுருட்டியப்படி ரெடியாக..

 

மூன்றாமானவனோ.. சட்டை காலரை பின்னுக்குத்தள்ளி வாடா வட்டப்பாறைக்கு என்றவாறு முறைக்க...

 

"ரெண்டு அண்ணன் தானே வசந்த் சொன்னான்.. இவன் யாரு மூணாவது ஒருத்தன் வந்து இருக்கான்?" மைண்ட் வாய்ஸ் என்று சத்தமாக ஜெய்தேவ் பேச..

 

"ம்ம்ம்.. அவன் எங்க மச்சான்" என்றான் ஸ்டீபன்.

 

"ஓஹ்.. க்ளாட் டூ மீட் யூ சார்" இதை மறைத்து நடுங்கும் கைகளை அவர்களை நோக்கி நீட்டினான் தேவா.

 

அவன் கையை பற்றாது மேலும் கீழும் அவனை நோட்டம் விட்டவர்கள், மூணு பேரும் அவனை வட்டமிட.. "நான் என்ன குத்த வச்ச பொண்ணா? முறைமாமன்கள் மாதிரி என்னை சுத்தி வரீங்க" என்று ஜெய்தேவ் கேட்க..

 

"உன் முறைமாமன்கள் இல்லடி மாப்பிள.. உன் மச்சானுங்க, எவ்வளவு தைரியம் இருந்தா எங்க வீட்டு பெண்ணையே ஃபாலோ பண்ணுவ.. விசாரிப்ப.. தனியா வந்தா உனக்கு லந்தா டா டுபுக்கு" என்றவர்கள் பாய்ந்து அவனை அடிக்க செல்ல..

 

"நான் ஃப்ளிரிட் எல்லாம் பண்ணல சார்.. என்னை கொஞ்சம் பேச விடுங்க சார்.. நான் நல்ல குடும்பத்து பையன் தான்‌ சார்.. தப்பான செயல் எல்லாம் செய்ய மாட்டேன் சார்" என்று நூறு சாரி.. ஆயிரம் சார்.. போட்டான்.

 

எதிர்த்து நின்றால் அடித்து அடக்கலாம்..

தப்பான வார்த்தை பேசினால் தட்டலாம்..

வீம்புக்கு என்று நின்றால் முட்டியை தட்டி பெயர்க்கலாம்..

பெண்ணிடம் வாலாட்ட இருந்தால் வாலை ஒட்ட நறுக்கலாம்..

ஆனால் பயந்து தன்னிலை விளக்கம் கொடுப்பவனை என்ன செய்வது என்று மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள..

 

ஸ்டீபன் கண்கள் இன்னும் அவனை நம்பா பார்வை பார்த்தது. தன் நண்பர்களுக்கு செய்கை செய்து "போற போக்குல ஒரு நாலு போட்டுட்டு போவோம். அப்புறம் மேல விளக்கம் கேட்கலாம்" என்றான்.

 

"ஐயையோ!! நீங்க நினைக்கிற மாதிரி எல்லாம் தப்பா இல்ல.. நான் ஒரு ட்ராயிங் காம்படீஷனுக்கு ரெடி ஆகுறேன். அதுக்கு அவங்க கண்ணு வரைய அனுமதி கேட்பதற்காகத்தான் ஃபாலோ பண்ணி வந்தேன்.. சத்தியமா சார்.. நம்புங்க!!" என்று தன் கைகளை மேலே தூக்கியவாறு சரண்டர் ஆகி அவன் கூற..

 

பார்த்துக்கொண்டிருந்த பாவை அவளுக்கு லேசாக மனம் வலித்தது!! வெறும் ஓவியத்திற்காகத்தான் வந்தானா என்று!! அதை அப்படியே அவளது கண்கள் பிரதிபலிக்க.. பார்த்த காளையவன் இப்பேது சரியாக படித்தான் பாவை மனதை விழிகள் வழியே!!

 

வார்த்தை தேவையில்லை.. 

வாழும் காலம் வரை பாவை பார்வை மொழி போதுமே..

என்று‌ அவன் மனதினுள் மெல்லிய சாராலாய் காதல்!!

 

ஆனால்.. அவர்கள் வீட்டு பெண்ணை ஃபாலோ பண்றதுக்கே அடித்து உதைக்க வந்த மூவர் படை இவன் காதலிப்பதை அறிந்தால்??

 

ஓவியம் 6

 

ஓங்கிய கை அந்த இடத்திலேயே நிற்க மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருந்தனர் இவன் சொல்வது உண்மைதானா என்று!!

 

"சத்தியமா உண்மைதான்!!" என்றவன் தன் லேப்டாப் பேக்கில் இருந்த தன்னுடைய ஓவியங்களை எல்லாம் எடுத்து அவர்களிடம் காட்டினான். 

 

"இதெல்லாம் என்னுடைய கலெக்ஷன்ஸ் சார். நிறைய ட்ரை பண்ணிட்டேன் சார்!! ஆனா கண்கள் மட்டும் எனக்கு சரியான உயிர்ப்பு உள்ளதா கிடைக்கவே இல்லை. நான் இந்த பேங்க்ல வேலை பார்க்கிறேன்" என்று தன்னுடைய விசிட்டிங் கார்டையும் அவர்களிடம் எடுத்து காட்டினான்.

 

"வேலை முடிந்து பார்க்கில் வந்தா பலதரப்பட்ட மக்களை பார்க்கலாம் அதில் யாரு கண்கள் ஒத்துப்போகும்னு பார்க்க தான் டெய்லி வருவேன்" என்று தன்னை நம்புகிறார்களா என்று மூவரையும் அவன் சுற்றி சுற்றி பார்க்க..

 

"மேலே சொல்லு" என்பதுபோல கையசைத்தான் கிரி.

 

"ஒருமுறை அவங்க கண்களை பார்த்தேன்!! ஸ்ஸ்ப்பா என்னா கண்கள் சார்!!" என்றவன் சிலாகித்து கூறி

ஆதினியை சுட்டிக்காட்டியவன் "சரியா இருக்கும்னு எனக்கு தோணுச்சு அதிலிருந்து அவங்ககிட்ட பேச ட்ரை பண்றேன் என்னால முடியல" என்று சோகத்தோடு முடித்தான்.

 

"நேத்து இவளைப் பற்றி விசாரிக்க யார அனுப்புன?" என்று ஸ்டீபன் கேட்க..

 

"அவன் என் ஃப்ரெண்ட் வசந்த்.. டிடெக்டிவ் ஏஜென்சி வச்சிருக்கான். நான் அவங்கள பத்தி விசாரிக்க சொன்னேன்" என்றதுதான் தாமதம் அஷ்ரஃப் அவன் சட்டையை கொத்தாக பிடித்து "எவ்வளவு தைரியம் இருந்தால் அடுத்த வீட்டு பெண்ணை விசாரிக்கச் சொல்லி டிடெக்டிவ் ஏஜென்சி அனுப்பி இருப்ப.. உன்னை?" என்று அடிக்க கையை ஓங்கி விட்டான்.

 

"சார்.. சார் கோபப்படாதீங்க.. முதல் நாள் பார்த்த போது இவங்க பார்தா போட்டு இருந்தாங்க.. நான் முஸ்லிம் பொண்ணு நினைச்சேன். ஃபேஸ் பார்த்து வரைய அலோ பண்ணுவாங்களான்னு பெரிய சந்தேகம்?? சரி ட்ரை பண்ணுவோம்ன்னு மறுநாள் பேச வந்து பார்த்தா.. அப்போ ஒரு ஹிந்து குழந்தையை கூட்டிட்டு வந்தாங்க. அன்னைக்கு வேற ஒரு பிளாக் போனாங்க. எனக்கு இவங்க யாருன்னு தெரிஞ்சுக்க ஒரே கன்பூஷன். அதான் சார் ஃபர்ண்ட் கிட்ட பேசினேன். நான் விசாரிச்சு சொல்றேன் சொன்னவனுக்கோ என்னை விட பெரிய கன்பூஷன். இவங்க ஒவ்வொரு நாளும் இவங்க ஒவ்வொரு பிளாக் போறதை பார்த்து" என்று அவர்கள் விளக்கத்திற்காக காத்திருக்க..

 

மூவரும் ஒரு நிமிடம் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு "நாளைக்கு சாயந்தரம் உனக்கு நாங்க போன் செய்து சொல்றோம்" என்றவாறு ஆதினி குழந்தைகளை அழைத்து கொண்டு மூவரும் சென்று விட்டனர்.

 

ஆதினி செல்வதையே ஒரு இயலாமையுடன் பார்த்துக் கொண்டிருந்தான் அவன்.

 

இது நாள் வரை அவள் கண்களில் கண்ட ஸ்னேக பார்வை முற்றிலுமாக மறைந்து.. இதற்குத்தான் வந்தாயா என்று கேள்வியை தேக்கி.. பின்பு நிராசை போல வந்து சென்றது.

 

அதன் பின் அவ்வளோதான் என்று ஒதுக்கத்தோடு அவள் கண்கள் விலகி செல்ல.. அதை விலக்க முடியாமல்.. விளங்கி கொள்ள முடியாமல் பார்த்துக்கொண்டே இருந்தான் தேவா.

 

என்ன இருந்தது அவளது கண்களில்?

எனக்கான தேடலா?

எனக்கான பரிதவிப்பா?

எனக்கான நேசமா??

நான் வெறும் வேஷம் என்று சொல்லாமல் சொல்லிவிட்டுப் போகிறாளா??

 

என்று தொப்பென்று அருகில் இருந்த இருக்கையில் அமர்ந்தவன் மீண்டும் மீண்டும் தன் கண்களை மூடி அவளின் கண்களின் பாவனைகளை தன் மனதில் கொண்டு வந்து பார்க்க பார்க்க சட்டென்று பாவையின் பார்வையின் அர்த்தம் புரிந்தது!!

 

அவளது பார்வை என்னை சொந்தம் கொண்டாடுகிறது என்று புரிந்தவனுக்கு சந்தோசம் தலைகால் புரியவில்லை.

 

இன்னும் அவள் யார் என்று தெரியவில்லை? அவள் எந்த மதத்தவள் என்று தெரியவில்லை? இங்கே வந்தவர்களுக்கும் அவளுக்கும் என்ன சம்பந்தம் என்றும் தெரியவில்லை? இத்தனை இருந்தும் அவனின் மனம் அவளை மட்டுமே யாசித்தது!! நேசித்தது!!

 

மனதினில் மெல்லிய சாரலாய் காதல் மழை பொழிய தன் விழியாளை எண்ணிக்கொண்டு விழிமூடி அப்படியே அமர்ந்திருந்தான் ஜெயதேவ்!!

 

எங்கே கண் திறந்தால் இந்த கன சந்தோஷம் பறிபோய்விடுமோ என்ற பரிதவிப்போடு அமர்ந்திருந்தான் இருள் சூழும் வரை.. தந்தையிடமிருந்து இவனுக்கு போன் வர அதற்கு பின்னே அவ்விடத்திலிருந்து சென்றான்.

 

மறுநாள் இவர்கள் போன் செய்வார்கள் என்று காத்துக் கொண்டிருந்தான் ஜெய்தேவ்.

 

அதேபோல மாலை போன் செய்த ஸ்டீபன் அட்ரஸ் சொல்லி "இந்த அட்ரஸூக்கு வாங்க!" என்றான். இவன்தான் எப்போது எப்போது என்று காத்திருந்தானே!! அடுத்த நிமிடம் பிறந்துவிட்டான் ஸ்டீபன் சொன்ன அட்ரசுக்கு.

 

அங்கே கிட்டத்தட்ட இருபது பேர் இருக்க சற்றே மிரண்டு போனான் ஜெய்தேவ். ஏதோ பெண் பார்க்க வந்தது போல மனதுக்குள் சின்ன சந்தோசம் கூட எட்டிப்பார்த்தது ஆனால் அறிவு அவன் மனதை தட்டி வைத்தது. 'அவர்கள் நம்பி உன்னை அழைத்திருக்கிறார்கள்.. அதற்கு நம்பிக்கை துரோகம் செய்யாதே!' என்று அறிவுறுத்தியது. அறிவுக்கும் மனதுக்கும் அல்லாடியவனை கிரியின் குரல் நிகழ்காலத்திற்கு அழைத்து வந்தது.

 

"உக்காருங்க ஜெய்தேவ்!!" என்று கிரி உபசரிக்க..

 

அவர்களை எல்லாம் பார்த்தபடி தயங்கி தயங்கியே சோபாவில் அமர்ந்தான்.

 

"எங்க வீட்டு பெண்ணை நீங்க வரைவதற்கு எங்க எல்லாருக்கும் விருப்பம். அதுக்கு முன்ன அவளை பத்தி நீங்க கொஞ்சம் தெரிஞ்சுக்கணும்" என்று ஆரம்பித்தான் ஸ்டீபன்.

 

"ஸ்டீபன்.. சுவாதி.. எங்க குடும்பமும் சின்ன வயசுல இருந்து பக்கத்து பக்கத்துல தான் வளர்ந்து வந்தோம். எங்க எல்லாருக்கும் சின்னவளா பொறந்த ஆதினி மீது எப்போதும் பாசம். திருமணமாகி நாங்க செட்டில் ஆனாலும் எங்களுக்குள் இருந்த அந்த பாசப்பிணைப்பு எதுவும் போகல.." என்றவன் பாசத்தோடு அவளை பார்த்தான்.

 

"இதுக்கு இடையில ஆதினியை ஒருத்தன் ரொம்ப நாளா ஃபாலோ பண்ணி லவ் பண்றேன்னு டார்ச்சர் பண்ணிட்டு இருந்தான். இவளும் எங்க கிட்ட சொன்னா எதாவது பிரச்சனை ஆயிடும்னு பயந்து சொல்லவே இல்ல.. ரொம்ப நாள் தொந்தரவு செய்து கொண்டே வந்தவன் இவள் சம்மதிக்கவில்லை என்றவுடன் அவ முகத்துல ஒரு நாள் ஆசிட்டை விசிட்டான். எஸ் ஆதினி இஸ் அ ஆசிட் விக்டிம்" என்று அஷ்ரஃப் ஆதினி அணிந்திருந்த ஸ்கார்ஃப்பை நீக்க.. அதில் இடது பக்கம் முழுவதும் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டு இருந்தது. அவ்வளவு அழகிய முகத்தில் திருஷ்ட்டியாக... 

 

இதை சற்றும் எதிர்பாராத ஜெய்தேவோ அதிர்ந்து எழுந்தே விட்டான். அவன் அதிர்ந்ததை பார்த்து அவள் கண்களில் தெரிந்த வலி இவன் உள்ளும் தாக்க இடது கண்ணில் ஓரமாக கண்ணீர் வழிந்தது ஜெய்தேவ்கிற்கு.

 

மனது சந்தோசமாக இருந்தால் வலது கண்ணிலிருந்து ஆனந்த கண்ணீர் வழியுமாம்.. மனதில் துக்கம் மிகும் போது இடது கண் அதுவாக கண்ணீர் பொழியுமாம். இது எங்கோ படித்த ஞாபகம் ஆதினிக்கு! இன்று அவனது இடது கண்ணில் வழிந்த கண்ணீரை பார்த்தவாறு அமர்ந்திருந்தாள்.

 

"அப்புறம் அந்த ஏரியாவில் இருக்க எங்களுக்கு பிடிக்கல.. இந்த அப்பார்ட்மெண்ட் பத்தி தெரிஞ்சு இங்கே பக்கத்து பக்கத்துல வீடு வாங்கிட்டு நாங்க செட்டில் ஆயிட்டோம்" என்று ஸ்டீபன் கூறி முடிக்க..

 

"அவனை எல்லாம் சும்மாவா விட்டீங்க?" என்று அவர்களைப் பார்த்து ஆத்திரத்துடன் கேட்டான் ஜெய்தேவ்.

 

"உன் பிரண்டு நிலைமையை பார்த்துமா அவனை நாங்க சும்மா விட்டு இருப்போம்னு நீ நினைக்கிற?" என்று மூவரும் ஒருவருக்கொருவர் பார்த்து சிரித்துக் கொள்ள.. அந்த சிரிப்பே சொன்னது ஆசிட் ஊத்தியவன் எவ்வாறு இவர்களால் தண்டிக்கப்பட்டு இருப்பான் என்று!!

 

"அதனாலதான் அவள நாங்க அவ்வளவு புரோடக்ட் பண்றோம். நீயோ தப்பிச்சிட்ட.. இல்லைன்னா உன் பிரெண்டுக்கு பக்கத்து பெட்டுல தான் நீ படுத்து இருப்ப" என்று கிரி சிரிக்க..

 

நல்ல நண்பர்கள்!! நல்ல குடும்பம்!! என்று மனதிற்குள் நினைத்தவன் "நான் வரையட்டுமா சார் அவங்க கண்களை?" என்று அனுமதி கேட்டான்.

 

எல்லோரும் சுற்றி அமர்ந்து கொண்டு "வரை!!" என்றனர்.

 

ஜெய்தேவோ ஆதினியின் கண்களை பார்க்க.. அனைவரும் கண்களும் ஜெய்தேவ் மேலே!!

 

'"இப்படி இருந்தா நான் எப்படி வரையறது?" என்று அவர்களைப் பார்த்து கெஞ்சலாக கேட்க "சரி!! சரி நீங்க எல்லாரும் போங்க நான் மட்டும் இங்க இருந்து பார்த்துக்கிறேன்" என்று ஸ்டீபன் அமர்ந்துவிட்டான்.

 

அனைவரும் சென்றுவிட.. ஆதினியின் கண்களை பார்த்தவனுக்கு ஆழியென தன்னை இழுக்கும் அதில் தொலையவே ஆசை கொண்டான். அரை நிமிடங்களில் ஆறுகோடி அபிநயங்கள் பிடிக்கும் விழிகளிலிருந்து கண்ணை எடுக்கவே முடியவில்லை அவனால்!! 

 

அரை மணி நேரத்தில் வந்து விடுவேன் என்று சொன்னவன் அந்த கண்களையே உற்று உற்றுப் பார்த்து பலகோணங்களில் வரைந்தான் அதுவும் அவன் பார்க்கும் நேரத்தில் அவள் கண்களில் காட்டும் பாவங்கள் அப்பப்பா சொல்ல முடியாது கவிதைகள் அவை!! மற்றவர் விலங்க இயலா பொருள் பல தந்தன அவை!!

அந்த விழி என்னும் தடாகத்தில் நீந்தி ஓடும் மீனாய் கருவிழிகள்.. என்ன ஒரு அழகு!! மீண்டும் மீண்டும் அதில் தொலைவை விருப்பம் கொண்டான் இந்த ஓவியன்!!

 

அவளது அகத்தினை காட்டும் விழிகள் போல இவனது விழிகள் அல்ல.. அதனால் அவன் மனதில் உள்ளதை அவளால் அறிந்து கொள்ள முடி

யவில்லை.

 

ஒருவழியாக வரைந்து முடித்தவன் பொதுவாக எல்லோருக்கும் நன்றி என்று கூறிவிட்டு சென்று விட்டான்.

 

போகும் அவனையே மனதில் தோன்றிய தவிப்பை கண்களை காட்டி பார்த்தாள் ஆதினி.


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top