13
ஞாயிற்றுக்கிழமை காலை...
இன்று நண்பர்களோடு கெட் டூ கெதர் என்பதால் வழக்கமான அவனது பார்மல் சூட்டுக்கு விடைகொடுத்து.. இலகுவான டீசர்ட் பேண்டில் தயாரானான் ஜெர்ரி.
அரை மணி நேரம் உடை தேர்ந்தெடுக்க ஆனது என்றால், ஒரு மணி நேரம் ஆனது அவனது ஏற்கனவே கலைந்தும் கலையாமல் இருக்கும் அந்த முன்னுச்சி முடியை வாருவதற்கு!!
கண்ணாடிக்கு வாய் இருந்தால் அழுது இருக்குமோ?? இல்லை இல்லை வாய் இருந்தால் அவனது அழகை வாய் பிளந்து பார்த்து இருக்கும்!!
ஒரு வழியாக தனது சிகை அலங்காரத்தை முடித்தவன், அடுத்து ஆசிர்வாதம் வாங்கும் படலம். ஆம்!! இன்று முதன்முதலில் காதல் சொல்லப்போகும் தங்கள் மகனுக்கு காலையில் வாழ்த்து சொல்வதற்காக தயாராக காத்து இருந்தனர், அந்த ஆத்மார்த்தமான காதல் தம்பதி அரங்கநாதனும் லூசியும்!!
இவன் வீடியோ காலில் அழைக்க பிரசன்னமானார்கள் பெற்றோர்கள்!!
"ஆல் த பெஸ்ட் கண்ணா!!" என்று தாய் வாழ்த்த..
"லவ் யூ மாம்!! உம்மா! உம்மா!" என்று நிறைய உம்மாக்களை இவன் வழங்க.. அரங்கநாதனோ "அடே!! என் பொண்டாட்டிக்கு கொடுக்க நான் இருக்கேன். உன் ஆளுக்கு கொடுத்த கொஞ்சம் மிச்சம் வச்சுக்கோடா" என்று அருகில் இருந்த மனைவியை தனக்கு பின்னால் மறைத்துக் கொண்டார்.
"ஹா.. ஹா.. ஜெலஸ்ஸி டாட்!! ம்ம்ம்.. என் பேபிக்கு எங்கிட்ட நிறையவே ஸ்டாக் இருக்கு. ஓகே டூட்ஸ்!! இப்ப சிங்கிளா போறவன் லவ் சொல்லி ஈவினிங் வரும்போது மிங்கிளா வரணும்னு ரெண்டு பேரும் விஷ் பண்ணுங்க" என்றான் தலையை அவர்களுக்கு முன்னால் குனிந்து..
"விஜயீ பவ!! வெற்றி உனதே!!" என்று அரங்கநாதன் வாழ்த்த சாதாரண தமிழே தெரியாத அவனுக்கு சமஸ்கிருதம் கலந்த செந்தமிழ் மட்டும் புரியவா போகிறது?
ங்ஙே என்று முழித்தவன், "நீங்க விஷ் பண்றீங்கன்னு தெரியுது பா.. ஆனா எனக்கு சுத்தமா புரியலை" என்றான்.
"நீ ஒரு ஆங்கிலேயே பெண்ணை லவ் சொல்ல போயிருந்தால் ஆங்கிலத்தில் வாழ்த்து சொல்லி இருப்பேன்.. உங்க அம்மா மாதிரி ஒரு பிரஞ்ச் பொண்ணுக்கு ப்ரோபோஸ் சொல்ல போறேன் சொன்னால் ப்ரஞ்சில் வாழ்த்து சொல்லி இருப்பேன்.. நீ லவ் சொல்லப்போவது ஒரு தமிழ் பொண்ணு இல்லையா?? அதனால தான் செந்தமிழில் உன்னை வாழ்த்துகிறேன் மகனே!!" என்று மறுபடியும் அவர் விளக்க.. "ஐயோ போதும் சாமி!!" என்று கையெடுத்துக் கும்பிட்டான் அவன்.
"அப்புறம் இன்னைக்கு நல்ல சுபமுகூர்த்த தினம்!" என்று அவர் கூற..
"யார் அந்த சுபா?" என்றான் இவன் புரியாமல்..
"அதோட கூட, அமிர்தயோகம்" என்று அவர் விழிகள் மிளிர கூற..
"அப்போ சுபா இப்போ அமிர்தா வா? மாம் இதெல்லாம் நீங்க கேக்க மாட்டீங்களா?" என்று லூசியை அவன் உசுப்பி விட்டான்.
அவன் இடை இடையே பேசியதெல்லாம் கண்டுகொள்ளாமல் "முழு பௌர்ணமி வேற.. இதைவிட ஒரு அருமையான நாள் கிடையவே கிடையாது டா மகனே காதல் சொல்வதற்கு!!" என்று கூற..
"ஹோரஸ்கோப் பார்த்து காதல் சொல்ல அனுப்பி வைக்கிற ஒரு டாட் நீங்கள் தான் இருப்பீங்க இந்த உலகத்திலே!! ஐ லவ் யூ டாட்!! பக்கத்துல இல்லாம போய்ட்டிங்கனு ரொம்ப பீலிங்கா இருக்கு. இருந்தா உங்களுக்கு உம்மாக்களை கொடுத்து இருப்பேன்" என்றான் பாசத்தோடு..
"விட்றா.. விட்றா.. மகனே!! ஜென்ரல் விஷயங்களை தான் சொன்னேன். இனிமேல் உன் அப்பா சொல்லுறது ரொம்ப ரொம்ப முக்கியம்! கவனத்தில் வச்சுக்கோ" என்றார் அங்கு.
'அப்படி என்ன முக்கியமான விஷயம்!' என்று இவனும் அவரைக் கூர்ந்து கவனிக்க..
"இன்னைக்கு நல்ல நேரம் அமெரிக்காவில் நீ இருக்கிற டயம் படி 4 லிருந்து 5 மணி வரை.. அந்த நேரத்தில் உன் லவ்வை சொல்லிடு கண்டிப்பா சக்ஸஸ் ஆகிடும் மகனே!!" என்று இரு விரல்களையும் தம்சப் உயர்த்திக் கூற, அவரை பார்த்து இவனும் புளிகிதமடைந்து கண்களை உயர்த்தி காண்பித்தான்.
லூசி அப்பா மகனின் இந்த அட்ராசிட்டியை பார்த்து வழக்கம்போல சிரித்த முகமாகவே இருந்தார்.
வெற்றிகரமாக அன்னை தந்தையிடம் ஆசீர்வாதம் வாங்கி காதல் சொல்ல புறப்பட்டது இந்த காளை!! காளை போகும் இந்த வேகத்தை பார்த்தால் காரிகையின் நிலை என்னவோ??
ஆனால் இவனுக்கு எதிர்மறையான மனநிலையில் இருந்தாள் தாமரைச்செல்வி. நேற்று மகேஷ் பேசிய பேச்சின் வீரியம் அவளை அந்த அளவு பாதித்திருந்தது.
"வர வர நீ சரியா என் போனுக்கு ரெஸ்பான்ஸ் பண்ணவே மாட்டேங்குற தாமரை.. என்ன விட அதிக சம்பாதிக்கிறோம்னு திமிரு வந்திருச்சா உனக்கு? என்னதான் கூரைமேல் ஏறி நின்னு தொண்டை கிழிய கூவினாலும் பெட்டை சேவல் ஆகாது!! இந்த வேலை எனக்காகவா போயிருக்க? உனக்காக? உன் குடும்பத்துக்காக? உன் தம்பி தங்கச்சிகளுக்காக போயிருக்க? இந்த மூணு வருஷம் இடைவெளி எல்லாமே உனக்காகத்தான், பின்னால உன் தம்பி தங்கச்சிங்க வருமையில் கஷ்டப்படாமல் ஏதோ அவங்களுக்கு கொஞ்சம் பணம் சேர்த்து வைக்கலாமே நானும் என் குடும்பமும் பெருந்தன்மையா உன்னை அங்க அனுப்பி வச்சிருக்கோம்.
ஆனால் அதற்கு தக்கபடி நீ கொஞ்சம் கூட நடக்கவே இல்லை" என்று குற்றம் சாட்டினான்.
அவளுக்கு ஆயாசமாக இருந்தது. வாரத்தில் அதுவும் இந்த ப்ராஜக்ட் சீக்கிரம் முடிக்க வேண்டும் என்று ஆறு நாளாக வேலை செய்து இரவு சிறிது நேரம் ஓய்வு எடுக்கலாம் என்று வந்தால், இவனது பேச்சு வேறு அவளை இன்னும் சோர்வாக்கியது. மனதை பலவீனப் படுத்தியது. ஆனால் அவளுக்கு தெரிந்த வரையில் மகேஷின் பேச்சை அவள் தவிர்க்கவே இல்லை. சில சமயம் அவனே மெசேஜ் செய்து பிஸியாக இருக்கிறேன் என்று விடுவான். சிலசமயம் இவள் பேசினால் ஒரு நாள் நன்றாக பேசுவான். மறுநாள் வேலை இருக்கிறது என்று சென்று விடுவான் அவன். இதில் என்னை ஏன் இவர் குற்றம் சொல்கிறார் என்று புரியாது விழித்தாள்.
ஆனாலும் என்னதான் அவன் சண்டை போட்டாலும், தப்பு அவன் மீதே இருந்தாலும் சமாதானப்படுத்தும் முதல் அடி இவள் உடையதாக இருக்கும். இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பவன் அவன்!
"மகேஷ் நீங்க சொல்றது எனக்கு புரியல? ஆனா தெரியாம ஏதோ தப்பு செஞ்சிருந்தா சாரி" என்று மெதுவாக மென்குரலில் கூற.. "ஓ என்ன தப்பு செஞ்சேன் கூட உனக்கு தெரியாம போயிடுச்சா? அந்த அளவு மகாராணி பணத்தோட மமதையில் இருக்கீங்க? அப்படித்தானே!!" என்று அதற்கும் குத்தினான்.
சிறுவயதில் இருந்தே வரும் இந்த குத்தல் பேச்சு! இனியாவது தன் வாழ்வில் இருந்து மறையும் என்றுதான் தன்னைத் தேடிவந்த காதல் செய்த இவனை கல்யாணம் செய்த ஒத்துக்கொண்டாள். ஆனால் அவனிடம் இருந்தும் அதே குத்தல் பேச்சு!! கண்களை மூடி ஒரு நிமிஷம் ஆழ்ந்து மூச்சை இழுத்து விட்டாள்.
"மகேஷ்.. நிஜமா எனக்கு என்ன தப்பு பண்ணேன் தெரியல. அப்படி ஏதாவது செய்திருந்தால், இதுதான் நீ செஞ்ச நீங்க என்னை கேட்ட சுட்டிகாட்டுங்க. அடுத்த தடவை செய்யாமல் நான் பாத்துக்குறேன். அதைவிட்டுட்டு இப்படி பேசிட்டு இருந்தீங்கன்னா எப்படி? எனக்கும் டயர்டா தான் இருக்கு. நான் தூங்க போறேன்" என்று சற்று தன் பேச்சில் வேகத்தை கூட்ட..
"சரி சரி முதல்ல நேத்து நான் என்ன சொன்னேன் உனக்கு ஞாபகம் இருக்கா? அதையாவது சொல்லு பார்ப்போம்" என்றான்.
பாதி நேரம் அவன் பேச்சுக்கு வேறு ஆமா மட்டுமே போடுவாள். இன்னும் சில நேரம் தூக்கம் கலையாமல் தூங்கி வழிந்து கொண்டே தான் கேட்டுக் கொண்டிருப்பாள். இதில் எதை ஞாபகம் வைத்துக்கொள்ள என்று நொந்தவள், "இப்பதானே சொன்னேன் திரும்பவும் ஆரம்பிக்காதிங்க" என்று இவள் சலித்து குரலில் கூறியவுடன், "நேத்து எங்க அம்மாவுக்கு உடம்பு சரியில்லை என்று சொன்னேன். இதுவரைக்கும் நீ போன் பண்ணி ஒரு வார்த்தை அவங்க எப்படி இருக்காங்கன்னு கேட்டியா?" என்றான்.
'என்னது நேத்து ஏதோ கறி விருந்து சாப்பிட்டு வந்து உப்புசமாக இருக்கிறது என்று கூறினாராம். அதற்கு இவன் ஜெலுசில் வாங்கப் போகிறேன் வந்து பேசுகிறேன் என்று போனை வைத்தான். அந்த வயிறு உப்புசம் எப்போதடா வியாதியாக மாறியது என்று புரியவில்லை அவளுக்கு.
"எனக்கு காலையா இருக்கும்போது அத்தைக்கு அங்கு இரவு நேரமாக இருக்கும். தூக்கத்துல எப்படி அவங்கள டிஸ்டர்ப் பண்றது தான் நான் பேசல. இப்பதானே நீங்க பேசி இருக்கீங்க பக்கத்துல அத்தை இருந்தா போன கொடுங்க நான் பேசுகிறேன்" என்றாள்.
"இல்லை இல்லை நான் வெளியில் தான் இருக்கேன். நீ அவங்க நம்பருக்கு போன் செய்து பேசு" என்று போனை வைத்து விட்டான்.
"அடுத்து அவர்கள் வேறயா?" என்று நொந்துகொண்டே.. இரண்டு பிராட்டியினை ஒரு முட்டையோடு சேர்த்து போட்டு பிரட்டி வைத்துக்கொண்டு மகேஷின் அன்னை மனோகரிக்கு அழைத்தாள்.
மகன் பரவாயில்லை என்பதாக இருந்தது அவரது புலம்பல்கள் எல்லாம்.. முதலில் அவர்கள் வீட்டின் அருமை பெருமைகளை அறிவித்தவர், அதன்பிறகு பிள்ளை மீது அவர் வைத்த பாசத்தை பற்றிய ஒரு சொற்பொழிவு ஆற்றி முடித்து, அதன் பிறகு ஒன்றுமில்லா குடும்பத்தில் இருந்து ஒரு பொட்டு நகை கூட இல்லாமல் வரும் ஒருத்தியை தன் மகனின் மகிழ்ச்சிக்காகவே மருமகளாக ஏற்று இருப்பதை கூறி, தனது பெருந்தன்மையை பலமுறை நிலைநாட்டி விட்டே அவளை பேச விட்டார்.
தாமரையும் மேலே அவர் பேசியவற்றை எல்லாம் ரப்பர் வைத்து அழித்தது போல மறந்துவிட்டு "நேத்து உடம்பு சரியில்லை என்று சொன்னாரே நல்லா இருக்கீங்களா அத்த?" என்று பொதுவாக கேட்க..
"நேத்து உடம்பு சரியில்லாததுக்கு இப்போ வந்து கேட்கிறவ" என்று அதுக்கும் ஒரு பக்கம் நீட்டி முழக்கி பேசி விட்டு, அன்னை இல்லாத அவளை அன்னையாக மாமியாராக பார்த்துக் கொள்ளப் போகும் அவரை இதுவரை உடல்நிலை பற்றிக் கேட்கவில்லை என்று அதற்கும் ஒரு அறிவுரை கூறிவிட்டே போனை வைத்தார்.
ஞாயிற்றுக்கிழமை காலை ஏதோ ஏனோ தானோ என்று வழக்கம் போல ஒரு குர்தி ஜீன்ஸில் கிளம்பி இவள் வெளியில் வரவும், ஜெர்ரி அவளோடு இணைந்து கொள்ளவும் சரியாக இருந்தது.
உள்ளம் முழுக்க காதலும் உற்சாகம் பொங்க அவனும்!!
மனம் முழுக்க வலிகளும் எரிச்சலின் உச்சத்தில் அவளும்!!
எதிரெதிர் துருவமாக இருக்கும் இந்த டாம் அண்ட் ஜெர்ரி காதலிப்பார்களா?
