தேன்மழை 💞 - (36)

 

(@priyadinesh)
Member Moderator
Joined: 4 months ago
Messages: 44
Thread starter  

நம்பவும் முடியவில்லை.. நம்பாமல் இருக்கவும் முடியவில்லை பெண்ணவளால்.. ஆனால், அவர் கூறியது முதலில் கதையாக தெரிந்தாலும், சண்முகம் அவர்களின் குணநலனை எடை போட்டு பார்த்தவளுக்கு ஊர்ஜிதம் ஆகியது.

"கொலை.. பண்ணுனது அவங்க தானே.. அப்பறம் எனக்கு ஏன் பிரச்சனை வரப்போது?"

அந்த வேலையாள் முகத்தில் எதனையோ அறிந்து கொண்டது போல் மிதப்பான சிரிப்பு.

அதற்கான அர்த்தம் புரியாதவள், அவர் முகத்தை அச்சத்தோடு ஏறிட்டாள்.

"இவர் பண்ணுன கொலையை அவங்க வீட்டுல பிள்ளைங்க ரெண்டு பேரை தவிர யாருக்கும் தெரியாது. ஆனால், உங்களுக்கு இப்போ தெரிய வந்திடுச்சுல.."

"என்ன குழப்புறீங்க?"

"நான் குழப்பல மா.. உண்மை உங்க மூலமா வெளிய வரும் போது, அவர் உங்களை சும்மா விடுவாரா?"

யோசனையின் ரேகை அவள் முகத்தில் தீவிரமாக, ஒருக்கணம் ஆழ்ந்து அந்த பணியாள் முகத்தை உற்று பார்த்தாள்.

"நீங்க சொல்லுறது கட்டுக் கதை இல்லையே?"

"கண்ணு இது கட்டுக் கதை இல்லை. இவங்க கட்டி வச்சு மறைச்ச கதை.." என்றவர் அதற்கு மேல் எதுவும் பேசாது நகர, பெண்ணவளுக்கு பல குழப்பங்கள் ஊடாடியது.

ஏதேதோ சிந்தையில் அகப்பட்டவளுக்கு உரியவனிடம் இருந்து வந்த அழைப்பு கூட செவியில் விழாது போக, அதன் பின் எப்படியோ சுயம் பெற்றாள் இடைவிடாது ஒலித்த அழைப்பில்.

"பிரதீஷ்.."

"ராசிகா.. வேலை முடிஞ்சதா?"

"ம்ம்ம்.."

"சரி நான் வரவா உன்னை பிக்கப் பண்ண?"

"ம்ம்ம்.."

அவன் போனை வைத்திருந்தாலும், என்ன பேசினான் எதற்கு ம்ம் கொட்டினோம் என்ற நினைவு கூட அவளிடம் இல்லை.

சில நிமிடங்களுக்கு பின் பிரதீஷ் அங்கு வந்து சேர, மனைவியின் முக மாற்றத்தை படித்தவன் கேள்வியாக கேட்டும் அவளிடம் சரியான பதில் வரவில்லை.

அன்று காலை குழம்பியவள் மாலை நேரம் வரை தெளிவடையவில்லை. அவளது குழப்பங்களுக்கு தீர்வு தேட நினைத்து, சுமித்ராக்கு போன் செய்தாள். அதுவும் தொடர்பு கொள்ள முடியாத நிலையில் இருக்க, எங்கேனும் முட்டிக் கொள்ளலாம் போல் இருந்தது.

வீட்டில் பெரியவர்கள் உரக்க பேசிக்கொண்டிருக்கும் சத்தம், அறையில் இருந்த ராசிகாவிற்கு கேட்க என்னவென காண கூடம் நோக்கி வந்தாள். எல்லாம், அவ்வீட்டில் யாரையும் குடி வைக்கலாமா? இல்லை என்ன செய்யலாம் என்னும் பேச்சே..

ஆளாளுக்கு ஒவ்வொன்று கூற, ராசிகா அவள் அத்தையிடம் வேறொன்று கிசுகிசுத்தாள்.

"இப்போ பிரதீஷ் ஊருக்கு போற வரை அங்க இருக்கட்டும். அதுக்கு அப்பறம் என்ன செய்யலாம்ன்னு முடிவு எடுத்துக்கலாம்.."

"கல்யாணி இதே தான் நானும் சொன்னேன். நீ என்னென்னா இப்போ தான் தெளிவா பேசுற மாதிரி பேசுற. அப்போ முன்னே இருந்து சொல்லுற, நானும் அப்பாவும் கேனயனா?" என சதாசிவம் அவர்கள் வினவ, எல்லோருக்கும் சிரிப்பு தான் வந்தது.

அவர் கேனயனா என கேட்ட கேள்வியில். ஒரு சிலருக்கு அவர் சீரியசாக பேசும் பேச்சு சிரிப்பாக தோன்றும். அதே போல் தான் இப்போதும் கேட்டு வைத்திட, எல்லோரும் சிரிப்பை அடக்க பெரும்பாடு பட்டனர்.

"கல்யாணி.. பிள்ளைங்களுக்கு டிஃபன் எடுத்து வை சாப்பிட்டு போய் தூங்கட்டும்.."

அவனது விரதத்திற்கு மனைவி விருந்து படைக்க போகிறாள் என்றெண்ணி, சாப்பாடு வேண்டாமென கூறி ராசிகாவிடம் உணவை பேக் செய்து எடுத்து வருமாறு கார் நோக்கி சென்று விட்டான்.

இருவரும் காரில் பயணிக்க, குழலியின் சிந்தை முழுவதும் சுழலில் சிக்கியது போல் வழி தெரியாது சிக்கி தவித்தது.

மனைவியின் மனதை படித்தவன், அவள் முக மாற்றம் கண்டு காரை வழியிலே நிறுத்தினான்.

"என்ன டி ஆச்சு? ஏன் டல்லா இருக்க?"

"..........."

"ராசிகா!!"

"..........."

அவளது முகத்தில் படிந்த சிந்தனை கோடுகள் அவனுக்கு குழப்பத்தை உண்டாக்க, மோவாயை பற்றி அவன் பக்கம் உயர்த்தினான்.

நயனங்களில் குடி கொண்டிருக்கும் நாணமும், சிறுபிள்ளைத்தனமும் காணாது மௌன வெறிப்பே நிறைந்திருந்தது.

"என்ன டி ஆச்சு? எதுவும் பேசாம வர்ற? யாரும் எதுவும் சொன்னாங்களா என்ன?"

"இல்லை.. அதெல்லாம் யாரும் ஒன்னும் சொல்லல.. வீட்டுக்கு போங்க பிரதீஷ் கொஞ்சம் தூங்கணும் போல இருக்கு.."

"வேற ஒன்னும் இல்லைல?"

இல்லை என்றாள் தலையசைப்பை மட்டும் தந்தவளாக. வீடு வரும் வரை அவளை ஆராயதவன், வந்து சேர்ந்த நொடிதனில் இருந்து அவளை கவனிக்கலானான்.

வழக்கமாக சாப்பாடு எடுத்து வைப்பவள், அவள் பாட்டிற்கு எங்கோ வெறித்தபடி அமர்ந்து விட்டாள்.

சரி சோர்வோடு இருக்கிறாள் என நினைத்து, ஊட்டி விட தட்டை எடுத்துக் கொண்டு அவளருகே அமர்ந்தவனுக்கு அவள் தீவிர சிந்தனையில் இருப்பது புரிந்து போனது.

"ராசிகா.. பசிக்கலையா?"

"ஆங்.. பசிக்குது.. சாப்பிடலாம்.." என்றவள் ஏதோ திடுக்கிட்டு சிந்தனை கலைந்து கூறுவது போல் கூறியவளை நன்கு கண்டு கொண்டது அவன் நேத்திரங்கள்.

சப்பாத்தியை தக்காளி தொக்கில் தோய்த்து அவளுக்கு ஊட்டி விட, காதல் கணவனை சலனமாக ஏறிட்டாள்.

"ராசிகா எதுனாலும் வாயை திறந்து பேசு. வேற எதுவும் பெயின்னா இருக்கா?"

'சமாளிக்க வழியில்லையே. இருந்தாலும், வயிறு வலின்னு சொல்லிடுவோம்.' என யோசித்தவள் தயங்காது அதையே கூற, அவன் அந்நொடியே மருத்துவனாக மாறி விட்டான்.

அவளை அந்த சோபாவிலே படு என்று கூறி, வயிற்றில் கை வைத்து ஒவ்வொரு இடமாக அமுத்தி கேட்டதில் அவளது விழிகளில் தான் அரண்டு போன பார்வை.

"ஐயோ.. வேற வலி இல்லை.. ஜஸ்ட் ஹீட் பெயின் தான் டா.."

"அதுக்கா டி இப்படிருக்க?"

சட்டென எழுந்து அமர்ந்தவள், ஆம் என்றே இல்லாத வலியை இருக்கு என கூறி சமாளிக்க.. அவனும் அது தவிர வேறு எதுவுமில்லையே என உறுதி கேட்ட கொண்ட பின்பு தான் அவ்விடம் விட்டு நகன்றான்.

காலை பொழுது அழகாக விடிந்தது. சுற்றிலும் தென்னைந்தோப்பு, பறவையினங்களின் இனிய இசை அத்தனையையும் சாளரத்தின் வழியே ரசித்துக் கொண்டிருந்த கணவனை பின்னால் இருந்து கட்டிக் கொண்டாள்.

"என்ன மேடம் எப்போ எந்திருச்சீங்க?"

"ம்ம்ம்.. இப்போ தான்.."

"அவ்வளவு தூக்கமா?"

"பெயின் எப்படிருக்கு?"

"மச் பெட்டர்.."

"நிறைய தண்ணி குடி.. இல்லைனா ஹெட்ஏக், லோ பிபி, ஃபேட்டிக், ஹீட் இன்டாலரன்ஸ்.." என அவன் அடுக்க ஐயோ என்னும் ரீதியில் அவள் பார்வை போனது.

"ஹெல்த்தை மெயின்டைன் பண்ணுறதுல கேர்ஃபுல்லா இரு.." என்றவன் அவளை இழுத்துக் கொண்டு பாத்ரூம் அருகில் நிறுத்தி விட்டு, குளித்து வா என்றான்.

அவளோ கணவனை இறைஞ்சினாள். ஆடவனோ, போன் ஹோல்டில் சீஃப் இருப்பதாக கூற அவளுக்கு தான் ஏமாற்றமாகி போனது.

கதவை அறைந்து சாற்றியவள் விழிகள், ஷவரில் நின்றபடி கண்ணீரை தத்தெடுத்தது.

எத்தனை.. எத்தனை வலிகள்.. மரண ஓலம்.. அதுவும் துடிதுடிக்க இறந்து போன நிகழ்வுகள்..

அனைத்தும் அவளுக்கு கனவாகவும், சில விடயங்கள் அமானுஷ்யமாக அறிந்து கொண்டவளுக்கு பிரதீஷ் வீட்டு ஆண்கள் மீது அத்தனை காட்டம்.

நேரே சென்று கேட்டு விடலாம் போல கூட தோன்றியது. ஏன், செய்த தவறுக்கு தானே பழி தீர்க்க வேண்டும் என்ற யோசனை கூட ஒருபுறம் வந்து சேர்ந்தது.

"ராசிகா.. ஐம் ஃப்ரீ டி.. குளிச்சுட்டயா?"

கண்ணீரை துடைத்துக் கொண்டு பொய்யுரைத்தாள். எதிலும் மனம் லயிக்காதவளாக.

"டேய் நான் குளிச்சுட்டேன்.."

"சோ வாட் குட்டி?"

"ம்ம்ம்.. வெளியே வந்தேன் அறைஞ்சிடுவேன்.."

"அப்படியே வரயா? எனக்கு ஒகே.."

"டேய்.. பேசாம போடா.."

"வரேன்னு சொன்ன.. மே ஐ ஹெல்ப்?"

"நோ நீட்.."

"ஓகே டி நான் கிளம்புறேன்.. நீ வரயா இல்லை இங்க இருக்கயா?"

"அப்பறமா வந்து கூட்டிட்டு போங்க.. இப்போ ரெஸ்ட் எடுக்க போறேன்.."

"வீடு கட்டுனவன்னுக்கு கூட இவ்வளவு டைர்ட் இருக்காது. உனக்கு எந்நேரமும் ரெஸ்ட் தேவை தான்.." என தானாக முணுமுணுத்துக் கொண்டு கிளம்பி சென்று விட்டான்.

அதன் பின் குளித்து வந்தவளுக்கு கண்ணீர் நிற்கவில்லை. இறந்தவர்களின் வலியை தனதாக உணர்ந்தாள்.

சில மணி நேரங்களுக்கு பின்..
வீட்டை சுற்றியுள்ள தோப்பில் நடந்து கொண்டிருந்தவளை யாரோ கவனிப்பது போன்று உணர்வு உறுத்தியது. சுற்றி முற்றி பார்த்தாள் எவரும் தென்படவில்லை.

அதே உணர்வு சில நிமிடங்கள் தொடர ஏதேர்ச்சியாக பின் பக்கம் திரும்பியவள் கண்ணிற்கு, 60 ஐ கடந்த ஒருவர் ஸ்கூட்டியின் அருகே நிற்பதை கண்டாள்.

ராசிகா அவரை பார்த்து விட்டாள் என்பதறிந்து அவர் ஓடவோ, ஒளியவோ இல்லை. நேரே அவளை நோக்கி தான் புன்னகை மலர வந்தார். அவளுக்கு அப்புதிய முகம் யாரென அறியவில்லை. இருப்பினும் அவரை நோக்கி வேக எட்டுக்கள் வைக்காது, முன்னேறினாள்.

அவரது கையில் இருந்த மிகப்பெரிய பையை மூச்சு வாங்கியப்படி தூக்கி வந்தவர், சோர்வாக மண்தரையில் வைத்து விட்டு குடிக்க நீர் வேண்டுமென்று கேட்டார் சற்று பதட்டமாகவே.

அவளோ வேகமாக நீரை எடுத்துக் கொண்டு வந்து கொடுக்க, வாங்கி அருந்தியவர் அவளை நலம் விசாரித்தார்.

ஏற்கனவே பிரதீஷ் நடத்திய பாடம் நினைவுக்கு வர, முன் பின் அறியாதவர் என்பதால் அவரை ஒருவாறு அச்சத்தோடு பார்த்தாள்.

அதற்குள் அவர் திருமணம் முடித்த புதிய தம்பதிகளுக்கு செய்ய வேண்டிய முறையை, தாம்பூலத்தில் எடுத்து வைத்து நீட்ட விழிகளில் ஆழியளவு அதிர்ச்சி.

"யார்.. நீங்க? இதெல்லாம் என்ன?"

"நான் யாருன்னு தெரிஞ்சவங்களே என்னை ஓரம் தள்ளி வச்சுட்டாங்க. புதுசா வந்த உனக்கு எப்படி தெரியும்?" என்றவர் இதழில் ஏமாற்ற வளைவு.

"நிஜமா நீங்க யாருன்னு தெரியல.. ஒருவேளை கல்யாணத்துக்கு வந்த உங்களை நான் தான் சரியா பாக்கலையோ?"

"என்னை கூப்பிடல மா உங்க கல்யாணத்துக்கு.." என்றவர் அடிப்பட்ட வலியில் புன்னகைக்க, அவளுக்கு மீண்டும் குழப்பமே அதீதமாகியது.

"யாருன்னு தெரியாத உங்க கிட்ட.." என அவள் கூற வர..

அவரோ, "நான் மாலதி அப்பா செல்வராஜ்" என்றதில் விழிகள் இடுங்க அவரை பார்த்தார்.

"வாங்க அங்கிள்.. உள்ளே வாங்க.."

"வேண்டாம் மா.. நீ இதை வாங்கிக்கோ நான் கிளம்புறேன்.." என்றவர் முறையை அவள் கையில் வலுக்கட்டாயாமாக திணிக்க, அவள் வாங்கிய நொடி வாசலில் கார் வந்து நின்றது.

"அஸ்வத்.."

"மா.. எனக்கு கல்யாணம் வேணாம்.. அதுவும் அவ அக்காவை எப்படி? நீ எதுவும் பழி வாங்க இப்படி பண்ணுறயா?"

"நான் ஏன் டா அவங்க குடும்பத்தை பழி வாங்க போறேன்?"

"அப்போ ஏன் அவங்க குடும்பத்தை பிடிச்சு தொங்கிட்டே இருக்க?" என்றவன்  வார்த்தை காதல் தோல்வியில் மட்டு மரியாதையின்றி அன்னை மீது விழ, பெரிய பதவியில் இருக்கும் அவருக்கு கோவமே முன்னுக்கு வந்தது.

"அஸ்வத்!!"

"என்ன வேணும்? வேலை பாத்துட்டுருக்கேன் தெரியுதுல.. அப்பறம் ஏன் நொய் நொய்ன்னு கேள்வியா கேக்குறீங்க?"

"டேய் வயசு எத்தனை ஆகுது தெரியுமா?"

"ஹ்ம்ம்.. யாருக்கு? உங்களுக்கா?"

"இடியட்?"

"மா.. நீ என்ன வேணாலும் சொல்லு என்னால பிருந்தாவை கல்யாணம் பண்ணிக்க முடியாது.."

"ஏன் டா முடியாது? ஏன்?" என்றவர் மகன் மனதை அறிய எதிரே இருந்த சோபாவில் அமர, அவனோ எழுந்து கொண்டான் லேப் டாப்பை கையில் எடுத்தப்படி.

"அஸ்வத் நீ ரொம்ப முரண்டு பிடிக்கிற.. அப்பறம் என்னை வேற மாதிரி தான் பாக்க வேண்டியதா இருக்கும்.."

"மா.. என்னால பிருந்தாவை கல்யாணம் பண்ணிக்க முடியாது.. அதுவும் அவங்க வீட்டுல.. அவ முன்னாடி.." என்றவன் கையில் இருந்த லேப்டாப்பையே தூக்கி எறிய போகும் நேரம், எதிரே வந்து நின்றாள் பிருந்தா.

தேன்மழை💖


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top