சதாசிவம் அவர்கள் அதன் பின் ஒரு வார்த்தை கூட பேசாது, பொட்டி பாம்பாக அடங்கியப்படி காரை செலுத்தினாலும்; மனம் ஏதோ ஒரு விபரீதம் நடக்கவுள்ளதை அசரிரீயாக கூறியது.
எதிலும் கவனமின்றி காரை செலுத்திக் கொண்டிருப்பதை கவனியாமல் இல்லை சண்முகம் அவர்கள். மகனை காட்டமாக கடிந்ததில், சிந்தை தெளிந்தவர் எப்படியோ வீடு வந்து சேர்ந்து விட்டார்.
பிரதீஷ் ராசிகாவும் மாலை நேரம் வீடு வந்து சேர்ந்தனர். நான்கு வருடங்களுக்கு பின் சுமியை கண்டதில் அத்தனை நெகிழ்ச்சியோடு அவனும் அளவளாவிக் கொண்டிருந்தான்.
எல்லோருக்குமே சொந்த பந்தங்கள் வந்ததில் அப்படியொரு மகிழ்ச்சி.
அதிகாலை வேளையில் ஐயர் கணபதி ஹோமம் தொடங்கி, கோ பூஜை முடித்திட, சுப வேளையில் பால் காய்ச்சி முடித்தனர்.
வந்த விருந்தினர்களை பெரியோர்கள் உபசரிக்க, சுமித்ரா யாரிடமும் நெருங்கி பழகாது விலகி செல்வது ராசிகாவிற்கு புதிதாக தெரிந்தது.
மசக்கையில் இருந்தவள் அறை நோக்கி உறங்க சென்றாள். அதே அறையில் தான் ராசிகாவும் இருக்க, சில நிமிடங்கள் அவளிடம் பேச்சு கொடுத்தவளுக்கு உறக்கம் வந்தது.
சரி அவள் தான் உறங்குகிறாளே என நினைத்து, கதவை அறைந்து சாற்றி வெளியேறிய நொடியில் அவளிட்ட குரலில் துணுக்குற்றாள் ராசிகா.
உறங்கி கொண்டிருந்தவள் கார்த்தி என அலறினாள் பட்ட பகலிலே. அவளது கணவன் பெயர் வேறொன்றாக இருக்க, யார் இந்த கார்த்தி என யோசித்தவள் மேலும் திடுக்கிட்டாள் அவளின் உடல் எதனையோ கண்டு நடுங்கி அசைவதில்.
"அண்ணி.. அண்ணி.. என்ன ஆச்சு?" என்றபடி அவள் நெருங்க, எவ்வித அசைவற்றவள் போல் மீண்டும் உறங்கி விட்டாள்.
எதனுள்ளோ சிக்கி தவித்து கத்தியவள், எப்படி அதற்குள் உறங்கினாள் என யோசித்தவளுக்கு கண் முன் நடந்த நிகழ்வு மீண்டும் ஊசலாடியது.
அதே அதிர்விலிருந்து மீளாது அறையில் இருந்து வெளி வந்தவளை வழிமறித்தான் உரியவன்.
"எங்க டி போற?"
அவளோ பதிலே பேசாது திருதிருவென விழிக்க, "உன்னை தான் டி.. எங்க போற?" என்றவன் கன்னம் கிள்ளியதில் அவனது பெயரைக் கூறி அலறினாள். ஏற்கனவே அவள் காணாத ஒன்றை கண்டு நடுநடுங்கி வர, அவனோ மனைவியை சீண்டிட வழி மறித்து நின்றதை கூட அவள் உணரவில்லை.
ஆனால், மற்றவர்கள் தான் அவர்களின் சேட்டையை பார்த்து குசுகுசுவென பேசி சிரித்துக் கொண்டனர்.
"பரவாயில்லையே.. சிடுமூஞ்சி பையன் பொண்டாட்டி கூட பேசி சிரிக்கிறான்.." என ருத்ரா நக்கலடிக்க..
"அதுக்குன்னு உன்னை மாதிரி ஒரு ஜென்மமாவா இருப்பாங்க?"
"ஹரீஸ்.."
"என்ன டி ஹரீஸ்? எங்க நீ சிரி பாப்போம்.."
"நான் ஏன் சிரிக்கணும்? நீங்க முதல சிரிக்கிற மாதிரி இருங்க.." என்றவள் சிலுப்பிக் கொண்டு, ஊதா நிற பட்டுப்பபுடவை முந்தானையை தூக்கி இடையில் சொருகியப்படி பந்தி நடக்கும் இடத்திற்கு சென்றாள்.
ராசிகா ஏதோ கடமைக்கு பேசி சென்ற உணர்வு ராணி மற்றும் கௌதமனிற்கு கலக்கத்தை உண்டாக்க, சதாசிவத்திடம் மனம் வெம்பி முறையிட்டனர்.
அவரும் முடிந்த வரையில், அவர்களை சமன் செய்திட ஆனாலும் மகளின் விலகல் அவர்களுக்கு காயத்தை உண்டாக்கியது.
"எதிர்பாராத கல்யாணம் அதான் பொண்ணு அப்படி இருக்கா. கொஞ்ச நாள்ல சரியா போய்டும் சம்மந்தி."
"இல்லை சம்மந்தி, அவ கோவம் தீராது. ஏதோ ஒன்னு எங்க கிட்ட அவளுக்கு பிடிக்கல. அதான் நெருங்கி வராம, விலகி போறா. எப்படியோ சந்தோஷமா இருக்கட்டும்.." என்றவர் குரலில் வேதனையின் உச்சமே பிரதிபலிக்க, நம்பிக்கையூட்டும் விதமாக அவர் உள்ளங்கையை அழுத்தமாக பற்றினார் சதாசிவம்.
பெற்ற அன்னை மனம் தான் எதனிலும் அமைதியடையவில்லை. மகள் மருமகனிடம் சிரித்து பேசும் நிகழ்வை கண்டு மனதை தேற்றிக் கொண்டார் ராணி.
இவையெல்லாம் தூரத்தில் இருந்து பார்த்தப்படி ராசிகாவோடு கிசுகிசுத்துக் கொண்டிருந்தான் பிரதீஷ். ராசிகாவை ஒருநாள், அவள் வீட்டிற்கு அழைத்து சென்றால் தான் இதற்கு சரியான தீர்வு கிடைக்கும் என தீர்மானித்தான்.
இரண்டு தினங்கள் கடந்திருந்தது. சுமித்ரா ஊருக்கு செல்ல கிளம்பிட, பிரதீஷும் ஊருக்கு கிளம்பலாம் என மனைவியிடம் முறையிட அவளோ பிடிவாதமாக இரண்டு நாட்கள் இருந்து விட்டு செல்லலாம் என்றாள். அவனோ வேலையை காரணம் காட்டி கூற, ஒருநாளாவது இருந்து செல்லலாம் என்றாள் பிடிவாதமாக.
ஆனால், சுமி தான் யாரிடமும் ஒட்டாது கடமைக்கு வந்தோம், கிளம்புவோம் என்னும் மனதோடு கிளம்பி சென்றாள். பக்கவாதத்தில் படுத்திருந்த முருகனுக்கு தான் மகள் வருகை தெம்பூட்டினாலும், இனி அவள் எப்போது வருவாள் என்ற ஏக்கமும் மனதை கொய்த ரணமான வலியில் நீர் கரித்தது.
"வருவாங்க.. அழாதீங்க.."
அவரோ தலையை மறுப்பாக அசைத்து வர மாட்டாள் என்றதோடு, மீண்டும் ஏதோ ஒன்று கூறியதில் தெய்வானைக்கு தான் அது என்னவென புரியவில்லை.
"அப்பா.. சுமி வருவா.. எங்க போக போறா? நாங்க எல்லாம் உங்க கூட இருக்கும் போது ஏன் இப்படி குழந்தை மாதிரி அழறீங்க?" என்றவன் வீல் சேரில் அமர்ந்திருந்த தந்தையை தேற்ற, அவரோ ஏதோ ஒன்றை மீண்டும் கூறி தலையை மட்டும் இட வலமாக அசைத்தார்.
அவர் கூற விழைவது யாருக்கும் புரியாமல் போக, "அப்படிலாம் சொல்லாத முருகா.. உனக்கு ஒன்னும் ஆகாது. நாங்க இருக்கோம் புரியுதா? சுமிகிட்ட வளைகாப்பு விஷயமா பேசிருக்கோம்.
எப்படியும், இன்னும் ரெண்டு மாசம் கழிச்சு குழந்தை பிறக்குற வரை நம்ம கூட தான் இருக்க போறா.." என்ற சாவித்திரி பாட்டி, மகனுக்கு ஆறுதல் அளிக்க அவர் மனம் அப்போது தான் லேசாக அமைதி அடைந்தது.
"ரெண்டு நாள் இங்க இருந்து என்ன டி செய்ய சொல்லுற?"
"ம்ம்ம்.. இருங்க அவ்வளவு தான்.. நான் அத்தைக் கூட, புது வீடு வரை போயிட்டு வரேன்.."
"நீ அடங்கவே மாட்டியா டி?"
"ஏன் அடங்கணும்?" என்றவள் அவனை உரசிக் கொண்டு நிற்க, வம்பிழுக்க முன் வந்து நிற்கும், மனைவியின் முக பாவனையை ரசித்தவன் பட்டென பாவையவள் கன்னத்தில் முத்தமிட்டான்.
அதில் சிலாகித்தவள் மேலும் செல்லங் கொஞ்சி சிணுங்கி கடக்க, ஆண்மகனின் மனதில் கடந்து வந்து காதல் நினைவுகள் சாமரம் வீசியது முறுவலாக.
புது வீட்டில் அத்தியாவசிய பொருட்களை அடுக்கி வைக்கும் பணிகள் நடக்க, அதனை மேற்பார்வையிட கல்யாணி மற்றும் ராசிகா சென்றனர். மகனுக்கென தங்களால் செய்ய வேண்டிய கடமையை செய்து முடித்த மன நிம்மதியில், ஒவ்வொரு பொருட்களையும் அவர் இடம் பார்த்து வைத்திட வேலையாட்களிடம் பணித்தார்.
வீட்டை சுற்றி அமைந்துள்ள தென்னைந்தோப்பையும், பக்கவாட்டில் வைக்கப்பட்டுள்ள அழகு செடிகள் ஒவ்வொன்றையும் ரசனையோடு பார்த்தாள்.
போதுமான இடத்தை சுத்தம் செய்து வீட்டை கட்டி, சுற்றியுள்ள இடங்களை தோப்பாக விட்டு விட்டனர். டொம்மென சத்தம் கேட்டு, பக்கவாட்டில் திரும்பி பார்த்தாள்.
ஒன்றுமில்லை என்பதில் அதன் பின் நெஞ்சை பிடித்துக் கொண்டு ஆசுவாசமாக மூச்சை வெளியிட்டவளை, "அம்மாஆஆ.. அம்மாஆஆ.." என்ற ஆண் ஒருவன் குரல் கேட்டு வெகுவாக மிரண்டு திரும்பி பார்த்தவள் முன்பு 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் நின்றிருந்தார்.
லேசாக அழுக்கு படிந்த கைலி. வியர்வை படிந்த உள் பனியன். தோளின் மீது சிவப்பு துண்டு என வேலை செய்து வியர்த்து வடிந்த முகத்தை பார்த்தவளுக்கு, தாகமாக இருக்கிறாரோ என நினைத்து தண்ணீர் வேண்டுமா என்றாள் இன்முகமாக.
"எனக்கு அதெல்லாம் வேணாம் கண்ணு.. என் மகளா நினைச்சு உன்கிட்ட ஒன்னு சொல்லணும்.."
"சொல்லுங்கண்ணா.."
"இந்த வீட்டுல நீ தான் இருக்க போறன்னு சொன்னாங்க சண்முகம் ஐயா.. இந்த வீடு.. வேணாம் மா.. நீ குழந்தை குட்டின்னு நல்லா வாழனும்.. இப்போ தான் கலியாணம் முடிஞ்சிருக்கு.. தம்பியை கூப்புட்டு ஊருக்கே போய்டு கண்ணு.." என்றவர் அறிவுரையில் அவள் முகத்தில் பீதியின் சாயலே.
"ஏன் இப்படி.. சொல்லுறீங்க.."
"கண்ணு.. இந்த வீடு வேணாம் நான் சொல்லுறதை மட்டும் கேளு.. இங்க இருந்தா ரெண்டு பேருல யாராவது ஒருத்தவங்க தான் உயிரோட இருப்பீங்க.."
ரசிகாவிற்கு அவரின் பேச்சில், அடிவயிற்றில் புளியை கரைக்க துவங்கியது. அவர் கூறுவது போல், பிரதீஷிற்கு ஏதேனும் ஆகி விடுமோ என்னும் பயமே மேலோங்கியது.
என்ன ஏதேன கூறாது பீடிகையாக அவர் கூறியதில், குழம்பியவள் எங்கோ வெறித்திருக்க இருப்பினும் அவளால் எளிதில் இதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
"இப்போ தான் கிரஹப்பிரவேஷம் முடிஞ்சிருக்கு. நீங்க என்ன உளறுறீங்க? இதெல்லாம் யாரோ உங்களை குழப்பி விட்டதா இருக்கும்.."
"இல்லை கண்ணு.. இது ரெண்டு கொலை நடந்த இடம்.. என் கண்ணால நானே பாத்தேன்.. அவனுங்க கொலைகாரனுங்க.. நீ நல்ல பொண்ணா இருக்க.. சொன்னா கேளு மா.. உன் புருஷனை கூட்டிட்டு ஊருக்கு போய்டு..
இங்க இருந்தா நிச்சயம் ஆபத்து உனக்கு தான்.. காலையில கண்ட கனா அப்படி தான் வந்துச்சு.. நீ இங்க இருக்காதே மா.. உசுரோட இருக்கணும் நினைச்சா, இந்த வீட்டை விட்டு போய்டு.. இங்க நிம்மதியா வாழனும்ன்னு கனவுல கூட நினைக்காத.."
அவரின் பேச்சை சுத்த பைத்தியக்காரத்தனமாகவே நினைத்தாள். ஏன், யாரோ அவருக்கு நல்ல அமானுஷ்ய கதை கூறியுள்ளார்கள் என கலகலவென சிரித்தவளை அவர் தான் பாவமாக பார்த்தார்.
"ஏன் சுமி உடனே கிளம்ப சொன்ன?"
"அங்க இருந்து என்ன பண்ண போறோம்? அத்தை வீட்டுக்கு போயிட்டு ஊருக்கு கிளம்ப வேணாமா? அவங்களுக்கென்ன வருஷக் கணக்கா இருந்தா கூட, சரின்னு தான் சொல்லுவாங்க.."
"இது என் வேலை மேல உள்ள அக்கறையா? இல்லை அவங்க மேல இருக்க கோவமா?"
"இல்லை விஜய்.. உங்க மேல இருக்க அக்கறை.."
"உனக்கு என்ன கோவம்? சொன்னா தானே டி தெரியும்.. வீட்டுக்குன்னு கூப்பிட்டா வர மாட்டுறயே டி.."
"ப்ளீஸ்.. விஜய் வேற ஏதாவது பேசுங்க... சின்ன சின்ன விஷயங்கள் தான் பெரிய கோவமா மாறும்.. மத்தபடி ஒண்ணுமில்ல.. இப்போ கூட, அப்பாவை என்னால அப்படி பாக்க முடியல.." என்றவள் விசும்பலாக கூற, அவளை சுற்றி வளைத்து நெஞ்சில் சாய்த்துக் கொண்டான் அப்பாவி கணவன். அவள் மழுப்புகிறாள் என அறியாது.
"தோட்டத்துல வேலை பாத்த ஆளையே அடிச்சு கொலை பண்ணுனவங்க மா.. அதுவும் அந்த சண்முகம் ஐயாக்கு கட்டப்பஞ்சாயத்து, அடிதடி தான் தொழிலே.
அதுல வாங்கிப்போட்டது தான் இந்த இடமே. ரொம்ப வருஷமா வேலை பார்த்த தோட்டக்காரர் ஊருக்கு போன நேரம், அவர் வீட்டை ராவோடு ராவா இடிச்சுட்டானுங்க. திரும்ப வேலைக்கு வந்தவர் என்ன ஏதுன்னு கேக்க, நீ இங்கயா வேலை பாத்த? யார் நீன்னு அடிச்சு விரட்டி விட்டாங்க மா..
அதோட விடல மா.. அவங்க பேத்தி அந்த தோட்டக்காரர் பையனை தான் காதலிச்சாங்க.. அதை ஏத்துக்காதவர், இந்த இடத்துலயே அந்த பையனை அடிச்சே கொன்னுட்டாங்க. கடைசியில கேஸை.. எப்படி எப்படியோ மாத்தி விட்டுட்டாங்க..
அந்த ஐயாவை சும்மான்னு எடை போடாதீங்க.. அவர் தொழிலே இதான் மா.. இப்போ தான் அடங்கி ஒடுங்கி இருக்காரு.. இங்க வீடு ஆரம்பிக்கும் போதே, முதல ஒருத்தர் பாம்பு கடிச்சு தான் இறந்தார். அதான் மா சொல்லுறேன், இங்க நீங்க இருக்காதீங்க. பாவம் பண்ணுனவங்களே அதுக்கான தண்டனையை அனுபவிக்கட்டும்.."
அவர் கூறியதை முன்பு நம்பாதவள் இப்போது, விழி பிதுங்கி நெஞ்சாங்கூடு அடைக்க திடுக்கிட்டு நின்றிருந்தாள்..
தேன்மழை💖💖
