தேன்மழை 💞 - (34)

 

(@priyadinesh)
Member Moderator
Joined: 4 months ago
Messages: 44
Thread starter  

ராஜீவ் பேசிய பேச்சில் அத்தனை பேரும் ஆட்டம் கண்டிருந்தனர். ஏன், சண்முகம் அவர்கள் கூட அதே நிலையில் தான் இருந்தார். தெய்வானை அவர்களை, சண்முகம் கனலாக முறைக்க மகனை மிகுந்த கண்டிப்போடு எச்சரித்தார்.

அதன் பின் அவனும் ஒரு பேச்சு கூட பேசாது சென்று விட, ஆனால் சண்முகம் அவர்கள் தான் பேரனது நடவடிக்கை சரியில்லை என்றால் அவனுக்கு இவ்வீட்டில் இடமில்லை என்றிட எல்லோரும் அதிர்ச்சியோடு ஏறிட்டனர்.

அவரிடம் மன்னிப்பு வேண்டிய தெய்வானையை, மிதப்பாக பார்த்து விட்டு அங்கிருந்து கடந்து விட்டார். ஒருபுறம் ஆசையாக வளர்த்த பேரன் என்பதால் வேறேதும் செய்ய தோன்றவில்லை.

சண்முகம் அவர்கள் சேர்த்த சொத்து தான் இவையெல்லாம். திருமணம் முடிந்ததுமே மகன்களுக்கென பாகப்பிரிவினை செய்து விட்டார்.

அதில் அவரவர் குடும்பமென வசித்தாலும், ஏதேனும் விசேஷம் என்றால் தெய்வானை அவர்கள் வீட்டில் தான் எல்லோரும் ஒன்றாக கலந்து கொள்வார்கள்.

முருகன் தெய்வானை வசிக்கும் வீடு தான் பூர்வீக வீடு. அதனால் தான், எவ்வித நல்ல காரியம் என்றாலும் எல்லோரும் துடியலூர் வந்து விடுவார்கள்.

நாட்கள் அதன் போக்கில் உருண்டோடியது. அதிலே ஒன்றரை மாதம் கடந்திருக்க, எவ்வித குடைச்சலின்றி நிம்மதியோடு இருந்தது என்னவோ பிரதீஷ் தான்.

வேலை முடித்து இரவு நேரம் வீடு திரும்பியவனிடம், சினிமாக்கு அழைத்து செல்லுமாறு வினவினாள் ராசிகா.

"போலாமே.. நாளைக்கு போலாம்.." என்றிட, உண்டு கொண்டிருந்தவன் கன்னத்தில் பற்கள் பதிய கடி வைத்தாள்.

"ராசிகா.. வலிக்குது டி.. விடு டி.."

"அப்போ.. சினிமா போறோமா? இல்லையா?" என மோவாயை அவள் புறம் நோக்கி திருப்பி அழுத்தமான பார்வையோடு வினவ, "போ..லா..ம்.." என்றான் சிரமப்பட்டு அவளின் பிடியில்.

நெய் தோசையை உண்டு கொண்டிருந்தவன், அவளை மடியில் அமர வைத்து ஊட்டி விட்டு தானும் உண்ண, அவன் அசைப்போட்ட சத்தம் அவளுக்கு எரிச்சலை உண்டாக்கியது.

"சத்தமில்லாம சாப்பிடு.." என்றவள் அவன் கீழுதட்டை இழுக்க, "மனுஷனை.. சாப்பிட.. விடு டி.." என கெஞ்சியவனை போனால் போகிறதென விட்டாள்.

"மேடம் தள்ளி உட்காருங்க.. அப்போ தான் உங்களுக்கு சாப்பிடுற சத்தம் டிஸ்டர்ப் ஆகாது.."

"முடியாது நான் மடியில தான் உட்காருவேன்.." என்றவள் நகராது காலாட்டிக் கொண்டு அமர்ந்திருந்தாள்.

"ஹான்.. ஒரு விஷயம் சொல்ல மறந்துட்டேன் டா.."

"என்ன?"

"நெக்ஸ்ட் வீக் ஊருக்கு போக போறோம்.."

"ஏன்? எதுக்கு?"

"அட கிறுக்கா.. வீட்டு வேலை முடிஞ்சுடுச்சு.. கிரஹப்பிரவேஷம்ல.."

"நான் வரல.. நீ போயிட்டு வா.."

"டேய்.. நீ இல்லாம நான் எப்படி?"

"அதெல்லாம் போலாம்.. எனக்கு அங்க வரவே இண்ட்ரஸ்ட் இல்லை.." என்றவன் கை கழுவ கிட்சனுள் நுழைய, அவன் வரவிட்டால் தானும் செல்லப்போவதில்லை என்று அவள் வாதத்தை தொடர்ந்தாள்.

"ராசிகா.. லிசன்.. இதுல கம்பள் பண்ணாதே டி.."

"ப்ளீஸ்.. பிரதீஷ் வாங்களேன்.. எனக்காக.." என்றவள் அவன் பனியனை பிடித்து இழுத்து நெஞ்சில் சாய்ந்து கொள்ள, பாவம் தாலி கட்டியவன் எண்ணம் தான் அவளது நெருக்கத்தில் தாறுமாறாக அலைபாய்ந்தது.

"நிஜமா வரலையா நீங்க?"

"வரல ராசிகா.. நான் ஒன்னும் சொந்த பிசினஸ் பண்ணல.. ஒரு ஹாஸ்பிட்டல்ல ஒர்க் தான் பாக்குறேன்.. என்னை நம்பி தான் சார்ஜன் கேஸ் வருது.. அடிக்கடி லீவ் போட்டா பீஜ்ஜு என்னை வறுத்துடுவார்.."

"ஒரு நாள் மட்டும் வந்துட்டு அதுக்கப்புறம் ஊருக்கு வந்துடுங்க.." என்றவளை நெஞ்சில் சாய்த்தப்படி முறைப்பாக பார்த்தான்.

"ப்ளீஸ் டா.. என் பிரதீஷ்ல.. ஒன் டே எனக்காக.."

சில நொடிகள் என்ன யோசித்தானோ சரி என்றான்.

"பட் ஒன் கண்டீஷன்.."

"என்ன?"

"வந்தா உன் வீட்டுக்கு போயிட்டு தான் வரணும்.." என அவன் கூறிய நொடி இரண்டடி தூரம் பின்னோக்கி நகன்று விட்டாள்.

எதுவும் பேசாது கடந்து சென்றவளை அழைக்க, "ப்ளீஸ்.. பிரதீஷ்.. எனக்கு அங்க வர இஷ்டமில்லை.. ஏன் அவங்க யாரையும் பாக்க கூட விருப்பம் இல்லை.." என வெறுப்பாக கூறியவள் வார்த்தை கேட்டு அதிர்ந்து தான் போனான் ஆடவன்.

கௌதமன் வந்து சென்ற நாளிலிருந்து மருமகனிடம் மட்டும் மகளை பற்றி குசலம் விசாரித்துக் கொள்வார். மகளுக்கு போன் செய்தால் அவள் தான் யாருடைய அழைப்பையும் ஏற்பதில்லையே.

அதை கூறி அவரும், ராணியும் நோகாத நாளில்லை. ஒருபோதும் கூட, ராசிகாவிடம் கூறியதில்லை கட்டிய கணவன். அவள் விதித்த நிபந்தனையை விருப்பமின்றி ஏற்றுக் கொண்டவன் தான், அவளிடம் பீடிகையாக இதை கூறினான்.

அதற்கு பின் வாங்கியவள், முடியவே முடியாது என்றாள் மிக கறாராக.

"ராசிகா.. உன் அப்பா அம்மா என்ன பண்ணுனாங்க? ஏன் அவங்க மேல வெறுப்பை காட்டுற? உன் அக்கா ஏதோ.. புரிஞ்சுக்காம.." என்றவன் முழுவதும் கூறி முடிக்கும் முன்னே, கையை உயர்த்தி பேச்சை கத்தரித்து விட்டு அவ்விடம் விட்டு விலகவே எத்தனித்தாள்.

பிரதீஷ் விடுவதாக இல்லை. அவளிடம் முடிந்த வரை பேசி புரிய வைத்திடவே முயற்சித்தான்.

"பிரதீஷ்.. என் குடும்பம் அம்மா அப்பான்னு தான் நான் உங்களை வேணாம்ன்னு சொன்னேன். இன்னேக்கி நான் அவங்க சொன்ன மாப்பிளையை கல்யாணம் பண்ணுனேன்னு நினைச்சுட்டு தான் என்னை தலை மேல வச்சு கொண்டாடுறாங்க உங்க கிட்ட.

இதே நான் உங்களை என இஷ்டத்துக்கு கல்யாணம் பண்ணுனா சும்மா விடுவாங்களா? எவ்வளவு பேச்சு பேச மாட்டாங்க. அவங்களுக்கு சப்போர்ட் பண்ணி நான் தான் முட்டாளாகிட்டேன்.

அவ என்னென்னா உங்களை பொறுக்கி ரேஞ்ச்க்கு பேசுனா. அதான் அன்னேக்கி போன் பண்ணி என் புருஷனை பேச நீ யாரு டி னு கேட்டேன். அவளும் பேசுனா, நானும் நல்லா பதிலுக்கு என் ஆத்திரம் தீருற வரை பேசிட்டேன்.." என்றவள் மூச்சு வாங்கி பேசி நிற்க, அவளது அக்கா மீதான கோவத்தின் நியாயத்தை புரிந்து கொண்டவன் பெற்றவர்கள் மீது காட்டுவது தவறு என்றே பாடம் நடத்தினான்.

"ப்ளீஸ் பிரதீஷ்.. அவளை பாவம்ன்னு சொல்லாதீங்க. எப்படி அவ பாவம் ஆவா? கல்யாணத்துக்கு முதல் நாள் வரை எவளோ பேச்சை கேட்டு தானே உங்களை வேணாம்ன்னு சொன்னா சதிகாரி.."

"ராசிகா.. அவ வேணாம்ன்னு சொன்னனால தானே, இப்படியொரு மைதா மாவு எனக்கு பொண்டாட்டியா கிடைச்சது.." என்றவன் அவளை நெருங்கி அணைத்து கன்னத்தில் முத்தமிட..

சட்டென அவனை விலக்கி விட்டு நின்றவள், "பிரதீஷ்.. நீங்க என்ன தான் கிஸ் பண்ணுனாலும், நான் எங்க வீட்டுக்கு போக மாட்டேன். யார்ட்டையும் பேச மாட்டேன். அவ கல்யாணம் ஆகி எப்போ போறாளோ அப்போ நான் வீட்டுக்கு போய்க்கிறேன்.." என்றாள் பிடிவாதமாக.

"ராசிகா! நீ பேசுறது ரொம்பவே தப்பு. நாளைக்கி உன் அப்பா அம்மாக்கு முடியலைன்னா போகாம இருப்பயா?"

"நீங்க என்னை பிரைன் வாஷ் பண்ண பாக்குறீங்க.."

"அடியே நான் உண்மையை சொன்னா பிரைன் வாஷ்ன்னு சொல்லுற. கிறுக்கி, இதெல்லாம் அடுத்தடுத்து எதிர்பாராம நடக்க போற விஷயம். நீ அப்போ போகாம இருந்தா உன்னை தப்பா பேசுவாங்க.

கோவத்தை விட்டுட்டு, அந்த சூழ்நிலையில உன் அப்பா எனக்கு உன்னை கல்யாணம் பண்ணி வச்ச நல்ல காரியத்தை மட்டும் நினைச்சுக்கோ.." என்றவன் கை விரல்கள் அவளது கன்னத்தில் கோலமிட, கோவம் விடுத்து அவனையே அவதானித்தப்படி நின்றிருந்தாள் ஐந்தடி மைதா மாவு சிலை.

"ஆமா.. இதென்ன மாலை? புதுசா போட்டுருக்கீங்க? எதுவும் விரதமா? இல்லை வேண்டுதலா?"

"வேண்டுதல் இல்லை.. விரதமும் இல்லை.. இது ரொம்ப ஸ்பெஷல் எனக்கு.."

"இப்போ போட்டுருக்கீங்க.. மத்த டைம் உங்க கழுத்துல இல்லையே.." என்றவள் யோசனையாக விட்டத்தை நோக்க..

"எல்லா நேரமும் போட்டுருந்தா மாலைக்கு என்ன மரியாதை? என் மனைவிக்கு என்ன மரியாதை?" என்றவன் விழிகள் அவளை தாறுமாறாக மொய்த்து எடுக்க, "ஒஹோ.." என உதடு குவித்தவள் இதழில் கரைந்தது அவனது பார்வை.

"நாம விரதம்.." என்றவள் கண்ணை சிமிட்டிக் கூற..

"எது? விரதமா? ஏன்?"

"ம்ம்.. வீடு கிரஹப்பிரவேஷம் பண்ணுனா விரதம் இருக்கணும் டா.."

"அது அவங்க தான் இருக்கணும். நான் ஏன் டி இருக்க?"

"அது உங்களுக்கு தானே கட்டுறாங்க.."

"அப்படின்னு.. என் அப்பா சொன்னாரா உன்கிட்ட.." என்றவன் அவள் காதை பிடித்து திருக, அவளோ ஐயோ அம்மா என அலறினாள்.

"நீ இரு.. நான் விரதம் இருக்க மாட்டேன்.."

"ப்ளீஸ்.. இனி ஒன் வீக் நோ நான்வெஜ்.."

"வாட்!! அப்போ ஸ்நொக்?"

"நான் வெஜ்ஜே இல்லை.. அப்பறம் எப்படி ஸ்நொக்?" என்றவள் அவனிடமிருந்து விலகி பளிப்புக் காட்டி செல்ல ஏற்ற இறக்கமாக பார்த்தான்.

பின்பு என்ன நினைத்தானோ குட் நைட் கூறி அறை நோக்கி படியேறினான்.

"அப்போ சினிமா.."

"விரதம் முடியட்டும்.. அது வரை ஸ்நொக்கே இல்லை.. என்ன டி சினிமா உனக்கு? போய் படு.." என நக்கல் தொனியில் பேசி செல்பவனை ஏமாந்து போன பார்வை பார்த்திருந்தாள் பூவையவள்.

ஆறு நாட்களுக்கு பின்..
அத்தனை வேலையும் மும்மரமாக நடந்து கொண்டிருந்தது. வீட்டினர் அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்தது என்னவோ பிரதீஷ், ராசிகா வருகையே.

"எல்லாரும் வந்து சேந்துடுவாங்க போல. இவங்க இன்னும் வந்துருக்காங்களா பாருங்க அத்தை.."

"கல்யாணி புலம்பாம இரு மா. வந்துடுவாங்க.."

"அக்கா ஏன் கா இப்படி பதட்டப்படுற? வந்துடுவாங்க.." என்ற தெய்வானை வாழை இலையை மதிய உணவுக்காக நறுக்கிக் கொண்டிருந்தார்.

சிவப்பு நிற ஆடி கார் தார் சாலையை உரசியப்படி வந்து நிற்பது கண்ணில் பட்டது. யாராக இருக்கும் என எட்டி பார்த்தவர் கண்ணில் ஆனந்தக் கண்ணீர் குளம் போல் தேங்கியது.

"சுமித்ரா.. சுமி நல்லாருக்கயா?" என ஓடிச்சென்று மகளை கட்டியணைத்த தெய்வானை குரல் கேட்டு, அனைவரும் அவளை ஆரத்தழுவி வரவேற்க வந்தனர்.

எல்லோரையும் நான்கு வருடங்களுக்கு பின் தான் நேரில் சந்திக்கிறாள். திருமணம் முடிந்து ஒன்றரை மாதங்களுக்கு பின், சிங்கப்பூர் சென்றவள் இப்போது தான் வீட்டின் பக்கமே வருகிறாள். அதுவும் ராஜீவ் கட்டாயத்தின் பேரில்.

புடவையில் லேசாக தெரிந்த அவள் மேடிட்ட வயிறு கண்டு, அத்தனை பேருக்கும் அப்படியொரு நெகிழ்ச்சி. இத்தனை வருடங்களுக்கு பின் அவளை கண்ட சந்தோஷத்தில், அவள் கருவுற்று இருக்கும் சேதி இரட்டிப்பு மகிழச்சியை தந்தது.

ஏனோ, இத்தனை வருட பிரிவு அவர்களிடம் எப்போதும் போல் பேச தடையாக இருந்தது. ஆனால், அவர்களின் உபசரிப்பு கண்டு சுமி மற்றும் அவளது கணவன் விஜய் நெகிழ்ந்து தான் போயினர்.

வீடே, விருந்தினர் வருகையால் கலை கட்டியிருக்க.. எவன் வரவேண்டுமோ அவன் இன்னும் வந்து சேரவில்லை.

சண்முகம், சதாசிவம் அவர்கள் காரில் ஒரு வேலை முடித்து திரும்பிக் கொண்டிருந்தனர்.

"அப்பா.. என்ன ஏதோ யோசனையில வரீங்க.. நான் எதுவும் தப்பா பேசிட்டேனா?"

"அதெல்லாம் இல்லை சதாசிவா. நான் உன் மகன் கல்யாணத்துக்கு சம்மதிச்சேனா, அவங்க அப்பா சந்தர்ப்ப சூழ்நிலையில பண்ணி வச்சனால தான்.

இது நமக்குள்ள இருக்குற வரை பிரச்சனை இல்லை. ராஜீவ்க்கு தெரிஞ்சா அவனும் இதே வழியில போய் பாப்போம்ன்னு யோசிப்பான்.

எப்பவும் நாம ஒருத்தவங்களுக்கு நல்ல விஷயத்தை தான் சொல்லி தரணும். குலம், கோத்திரம் மாறி கல்யாணம் பண்ண வழிகாட்டியா இருக்கக் கூடாது.

அந்த பொண்ணு உனக்கு மருமகளா இருக்கலாம். ஆனால், என் மனசுக்கு பிடிச்ச பொண்ணா நினைச்சது பிருந்தாவை தான்.

அதுனால, அந்த பொண்ணுக்கும் எனக்கும் எந்தவொரு பேச்சு வார்த்தை இப்போன்னு இல்லை எப்போவும் இருக்காது. நீங்க வேணும்ன்னா கொண்டாடுங்க." என்றவர் தனது வரட்டு கவுரவம் விடாது பேசிக் கொண்டிருப்பது, மகனுக்கே பிடிக்கவில்லை.

வேறு வழியற்று காது கொடுத்து கேட்டுக் கொண்டிருந்தவர் கண்கள் அதிர்ச்சியில் உறைய, ஐயோ கடவுளே என்ற சத்தத்தோடு காரை சடன் பிரேக் அடித்து நிறுத்தினார்.

கார் வந்த வேகத்தில், எங்கிருந்தோ ஓடி வந்த கன்னுக்குட்டி வண்டியில் விழுந்தது.

சதாசிவம் மற்றும் சண்முகம் அவர்கள் ஐயோ அம்மா என அலறியப்படி, காரிலிருந்து இறங்கி பார்க்க கன்னுக்குட்டி எப்போதோ உயிரை விட்டிருந்தது.

"அப்பா.. கன்னுக்குட்டி இப்புடி.. செத்துடுச்சே.."

"சதாசிவா காரை பாத்து ஓட்டிட்டு வரக்கூடாதா? கண்ணை எங்க டா வச்சு வண்டி ஓட்டுற? லூசுப்பயலே.."

"அப்பா.. இப்போ என்ன பா செய்ய?" என்றவருக்கு கிலி பிடிக்க, "என்னை என்ன செய்ய சொல்லுற? கிளம்பு பேசாம.." என்றவரின் கூற்றில் விதிர்த்து நின்றார் சதாசிவம்.

"பாஆஆ!!"

"என்ன டா? ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போய் வைத்தியம் பாக்க போறயா? இல்லை கன்னுகுட்டிக்காக நீ இங்கயே அசையாம நின்னு எதுவும் சாதிக்க போறயா? வாடா பேசாம, ஏகப்பட்ட வேலை இருக்கு." என்றவர் பேச்சை கேட்டு துணுக்குற்றவர் விழிகள் விரித்த வண்ணம் அவரது அப்பாவையே பார்த்திருந்தார்.

தேன்மழை💖💖


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top