8
இவன் தொனியே சரி இல்லையே?' என்று நினைத்தவன் எதற்கும் தலையை மட்டும் ஆட்டி வைப்போம் என்று ஆம் என்று தலை அசைத்தான்.
"ஏன்டா.. உனக்கு கல்யாணம் ஆகி ஒரு ஆறு மாசம் இருக்காது?" என்று கேட்க..
"என்னைய விட கணக்குல நீதான் மச்சான் சூரப்புலி!! நீனு சொன்னா சரியாதான் இருக்கும்" என்று இவன் ஒத்துக் கொண்டான்.
"அப்புறம் ஏன்டா.. வீட்டுக்குள்ளேயே உட்கார்ந்திருக்கிறவன்? பொண்டாட்டி கூட்டிகிட்டு வெளிய தெருவ போனா தான் என்ன டா? என் தங்கச்சி சூதுவாது தெரியாத பொண்ணு!! சுத்தி இருக்குற சூனியக்கார கிழவிகலாம் எதையாவது சொல்லி அவிங்க பேச நினைக்கிறத அவ வாயால பேச வைக்குதுங்க" என்று சுற்றிலும் ஒரு பார்வை பார்க்க.. அவனின் அந்த சூனியக்கார கிழவி என்ற கூற்றில் அங்கு வந்த உறவினர்கள் எல்லாம் தாடையை தோளில் இடித்துக்கொண்டு முகத்தை திருப்பிக் கொண்டனர்.
"பாரேன்.. புது பொண்சாதிய பார்த்ததும் நாமெல்லாம் சூனியக்கார கிழவியா தெரியுறோமாம்?" என்று வாய் ஓயாமல் பேசினர்.
"வாங்க வேண்டியது தான் நீங்க எல்லாம்.. எவ்வளவு சொன்னாலும் கேட்கிறதே கிடையாது" என்று முணுமுணுத்துக்கொண்டே வடிவாம்பாள் காலை உணவை அனைவருக்கும் பரிமாற ஆரம்பித்தார்.
"போகணும் மச்சான்.. எங்க மச்சான் வேலையே சரியா இருக்கு. நேரமே கிடைக்கிறது இல்லை" என்று மனைவி பரிமாறியதை சாப்பிட்டுக்கொண்டே மச்சானுக்கு பதிலளித்தான் தர்மா.
"கல்யாணத்துக்கு முன்னாடி அந்த கமலாவ கூட்டிட்டு கம்பங் காட்டுக்குள்ள கள்ளன போல கமுக்கமாக இருந்தவதேன் நீயி.. இப்போ கட்டுன பொண்டாட்டிய கூட்டிட்டு போகனும் கூட அறிவே இல்லையோ? என்ன பொழப்பு டா உன்னது?" என்று இவன் உரக்க சொல்ல சாப்பிட்டுக்கொண்டிருந்த தர்மாவுக்கு புரை ஏறியதோ இல்லையோ அஸ்திராவுக்கு வேகமாக புரையேறியது. அதிர்ச்சியோடு கணவனை அவள் திரும்பிப் பார்க்க.. அவள் தலையை தட்டி தண்ணீர் கொடுத்தவன் "பொறுமையா சாப்பிடு டி.. நீயி எதுக்கு அதிர்ச்சியாகுறவ.. அதிர்ச்சியாக வேண்டியவிங்க அதிர்ச்சியான சரிதேன்" என்று மீண்டும் தன் சாப்பாட்டில் கவனம் வைக்க..
பரிமாறிக் கொண்டிருந்த பூங்கோதை டொங்கு என்று சாப்பாட்டை அப்படியே வைத்துவிட்டு கணவன் முன் மண்டை ஓடு இல்லாத பத்திரகாளியாய் இடுப்பில் கை வைத்துக் கொண்டு நின்றாள்.
"அண்ணே சொல்றது நிஜமா? பொய்யா?" என்று கணவனைப் பார்த்து அவள் கேட்க..
"அடியே கமலாங்குறது யாருன்னு தெரியுமா டி உனக்கு? தெரியாம நீ பாட்டுக்கு ஏதாவது பேசாதடி!!" என்று மனைவியை மலை இறக்க முயன்றான் தர்மா.
"அந்த கமலா பத்தி தெரிஞ்சுக்க வேண்டிய அவசியம் எனக்கு கிடையாது. நான் கேக்குறது அண்ணே சொன்னது உண்மையா பொய்யா அத மட்டும் சொல்லுக?" என்று அவள் அழுத்தம் திருத்தமாக கேட்க..
"அடேய் மச்சான்!! காலங்காத்தாலே யேன் குடும்பத்தில கும்மியடிச்சிட்டு நீ பாட்டு கட்டு கட்டுன்னு கட்டுற சாப்பாட்ட.. முழுசா சொல்லி புரிய வை டா உன் தங்கச்சி கிட்ட" என்று இவன் கதற..
"உன் பொண்டாட்டி மட்டும் காலையிலேயே என் குடும்பத்துக்குள்ள கும்மி அடிக்கிறால.. அப்ப நீயி வேடிக்கை பார்த்துட்டு தான் இருந்த.. இப்போ நான் வேடிக்கை பார்த்துட்டு தான் இருப்பேன்" என்று அவன் உணவில் கவனமானான்.
"டேய் மச்சான்.. நான் இப்ப தான்டா எந்திரிச்சு வந்தேன். இவ என்ன பேசினா கூட எனக்கு தெரியாதுடா" என்றான் விட்டால் அழுதுவிடுபவன் போல..
"அவே புருஷன் தானே நீயி.. அத எப்புடி தெரியாம இருக்கும் உனக்கு? நம்ம பொண்டாட்டி என்ன பண்றா ஏது பண்றானு நமக்கு தெரிஞ்சிருக்கணும் மாப்புள.. அவள் அப்படி கண்டமேனிக்கு பேசவிட்டு வேடிக்கை பார்த்துட்டு இருந்தா.. நீயெல்லாம் எதுக்குடா புருஷனு இருக்க? உனக்கெல்லாம் எதுக்குடா மீச? உனக்கெல்லாம் எதுக்கு டா ஒரு வேட்டி உனக்கெல்லாம் எதுக்கு டா…??" என்று அவன் அடுத்த ஆரம்பிக்கும் முன்னே பாய்ந்து சென்று அவன் வாயை பொத்தினான் தர்மா.
"போதும் மச்சான்.. போதும்!! இன்னிக்கி பயங்கர டேமேஜ் ஆயிடுச்சு.. கொஞ்சம் மீதி வச்சுக்க நாளைக்கு பாத்துக்கலாம்" என்று மச்சானை திட்டியவன் "அடியே.. கோத.." என்று அழைக்க அவளோ கரண்டியை அவன் முன்னே சாப்பாட்டில் வேகமாக போட்டு "என்ன வைச்சியிருக்கீரு கோதைக்கு?" என்றாள் அவனுக்கு குறையாத கடுப்பில்..
'பொண்ண கட்டிக்கொடுக்க சொன்னா போக்கிரிய கட்டிக் கொடுத்திருக்கானுவோ.. இதுல அவளை நான் அடக்கனுமாம்.. இவள அடக்க போனா என்னைய தான் அடக்கம் பண்ணனும். இந்த குடும்பத்தில பொறந்தது எல்லாம் இப்படித்தான் இருக்கு.. ரவடியா.. ரவுசு பண்ணிகிட்டு!' என்று முணுமுணுத்தான்.
"அவன் சொன்ன கமலா.." என்று அவன் திரும்பவும் ஆரம்பிக்க.. 'வாய பொத்து!' என்று சைகை செய்தவள் "அதேன் கூத்தடிச்சு எல்லாம் முடிஞ்சாச்சு தானே.. இனிமே விளக்கம் சொல்லி என்ன ஆகப் போகுது. சாப்பிட்டுவிட்டு மில்லுக்கு போற வேலையை பாருக" என்று அவள் சென்றுவிட்டாள்.
"கமலா யாருன்னு தெரியாமலே நான் கூத்தடிச்சேன்னு சொல்லிட்டு போறாளே.. இவள.." என்று தலையிலடித்துக் கொண்டான்.
"இங்கே பாருடா மச்சான் நான்லாம் எங்க அப்பனுக்கு தப்பாம பிறந்தவன்!" என்க..
"அப்படியா?" என்று வீரா கேட்க..
"ஆமா.. பொண்டாட்டியை எதிர்த்து ஒத்த வார்த்தை கூட பேசினது கிடையாது. அப்புறம் உன் தங்கச்சிய இப்ப நான் ஏதாவது பேசுனேனு வை.. அவ வந்து உன்கிட்ட ஒப்பாரி வைப்பா.. எதுக்கு டா என் தங்கச்சிய பேசுனேனு நீ வந்து என் கொமட்டுல குத்துவ.. எனக்கு தேவையா இது? வந்தோமா மாமியாரு வூட்டில் விருந்தாடுனோமா போனாமானு இருக்கணும்" என்றவன், "சீக்கிரம் சாப்பிட்டு வா மச்சான்" என்று வெளியே சென்று விட்டான்.
"என்ன தம்பி இது.. என்ன இருந்தாலும் அவரு இப்ப நம்ம வூட்டு மாப்புள்ள இல்லையா? இப்படித்தான் எல்லாருக்கும் முன்னாடியே பேசுகிறதா?" என்று வடிவாம்பாள் மகனை கண்டித்தார்.
"ஆமா.. பெரிய மாப்புள்ள.. உங்களுக்கு மாப்பிள்ளை ஆகுறதுக்கு முன்னாடியே எனக்கு மச்சான்.. நண்பன்! அதனால எங்களுக்குள்ள நாங்க எப்படி வேணாலும் பேசிப்போம். இதுல எல்லாம் நீங்க தலையிடாதீக மா.. இப்படி எல்லாம் நான் பேசல.. அப்புறம் உங்க பொண்ணு வாயும் சும்மா இருக்காது. நல்ல பொண்ணு பெத்து வச்சு இருக்கீக.. சொந்தமா யோசிக்காம எல்லா சொந்தக்காரங்க என்ன சொன்னாலும் அப்படியே காது வலியா மண்டைக்குள்ள ஏத்தி அப்புறம் என்கிட்ட வந்து வாந்தி எடுக்கிறா.. அவளுக்காவது கொஞ்சமாவது சுயபுத்தி வேணாம்.. இவளோட ஒட்டிப்பிறந்தவ தான பூங்கொடி. அவ இப்படியா இருக்கிறா?" என்று ஆற்ற மாட்டாமல் தங்கையின் இந்த செம்மறி ஆட்டு புத்தியை நினைத்து தாயிடம் வருத்தப்பட்டான்.
"என்ன செய்யுறது தம்பி.. இரட்டைகளில் ஒன்று சூட்டிகை என்றா மற்றது கொஞ்சம் மந்தமாக தான் இருக்கும் போல" என்று புலம்பியபடியே வந்தவர்களை கவனித்தார் வடிவாம்பாள்.
உணவு முடித்தவுடன் அன்னையிடம் அஸ்திராவை விட்டவன் "எப்ப பாத்தாலும் அவள கொலு பொம்மையா அடைத்து வைத்திருக்க நான் இங்கே அவள் கல்யாணம் கட்டி அழைச்சிகிட்டு வரல.. இது அவ வூடு!! அவ இஷ்டப்படி எங்க வேணாலும் இருக்கட்டும்.. யாராவது ஏதாவது பேசினா எனக்கு ஒரு போன் போடுங்க.. வந்து வச்சுக்கிறேன் கச்சேரியை எல்லாருக்கும்!!" என்று உறவினர்களைப் பார்த்து இடது கையால் மீசைய முறுக்கியவன் "நான் வரேன் மா" என்றவன் அஸ்திராவை பார்த்து "ஏ பொண்டாட்டி!!" என்று சத்தமாக கூப்பிட.. ஓரமாக அமர்ந்திருந்தவள் அவனது விளிப்பில் அதிரி புதிரி எழுந்து அவனை பார்க்காமல் மற்றவர்களை தான் பார்த்தாள்.
"கூப்பிடுறது நான் டீ பொண்டாட்டி.." என்று சத்தமாக சொன்னவன் "மாமா வெளியில போறன் வரத்துக்கு லேட் ஆகும். ஏதாவதுனா போன போடு. சரியா?" என்றவன் தங்கையை அழைத்தான் "கோதை..!!" என்று சத்தமாக..
"நாள பின்ன அண்ணா உறவு வேணும்னு நினைச்சா.. அண்ணிங்கிற வார்த்தை மாற கூடாது. மரியாதையும் மதிப்பும் சரியா வரணும். இல்லன்னா என் நண்பனோட பொண்டாட்டியா தான் உன்னைய பார்ப்பேன்" என்று தங்கைக்கு மட்டும் கேட்கும் குரலில் அவளை கண்டித்துவிட்டு வெளியில் காத்திருந்த தர்மராஜூவோடு தனது புல்லட்டில் சென்றான்.
சென்றவன் மாலை திரும்பும்போது கை அடிபட்டு இருக்க.. கைத்தாங்கலாக அவனை அழைத்து வந்தான் தர்மா..
ஏற்கனவே அவலுக்காக வாயை பிளந்து கடந்த சொந்தங்களுக்கு விருந்து வைத்தது போல் ஆனது இவனது காயம்!!
அன்றிரவு யாரும் அறியாமல் கொல்லையில் இருந்த கிண
ற்று மேடையை நோக்கி சென்றாள் அஸ்திரா!!
தீருமோ தாகம்!!
