அத்தியாயம் 11.1
“அவ்வளவு தான் உங்களுக்கு மரியாதை..! நான் ஏதோ போனா போகுது தப்பு என் பேர்ல, தெரியாம கத்தி பேசிட்டேன்னு பொறுமையா இருந்தா.. ஒரு வயசு பொண்ண உங்க வீட்ல தூக்கி வச்சு இல்லாத ரவுசு பண்ணிட்டு இருக்கீங்க நீங்க?” கடுகடுவென்று பேசியவளைக் கண்டு அமைதியாக சிரித்தான் திரிபுரபவனன்.
“ஆம்பள இல்லாத வீடு ஆடி பார்க்கலாம்னு நினைக்கிறீங்களா?” என்று சற்று ஆவேசமாகவே கேட்டாள் கிருத்தி. அப்பொழுதும் அதே மௌன சிரிப்போடு,
“ஆம்பள இல்லாத வீடா? அப்ப நீ யாரு லயா?” என்று அவன் நக்கலாக கேட்கவில்லை உணர்ந்துதான் கூறினான்..!
இவன் இங்கே குடி வந்து கிட்டத்தட்ட ஒரு வருடம ஆகிறது.
எதுவுமே வேண்டாம் யாருமே வேண்டாம் என்று எங்கோ பறந்து போனவனை இழுத்து பிடித்து இங்கே அமர்ந்திருந்தார் அவனின் தந்தை வேதநாயகம்..!!
அவனும் ஒரு அப்பார்ட்மெண்டில் தான் அவன் தங்க வீடு பார்த்து இருந்தான். யாரு தொல்லையும் இன்றி..!
அங்கேயென்றால் பக்கத்து போர்ஷனில் யார் இருக்கிறார்கள் என்று கூட தெரியாமல் அவரவர் அவரவர் வேலையை பார்த்துக் கொண்டிருப்பார்கள்..! நமக்கும் எந்த தொந்தரவும் வராது என்று எண்ணி தான் அவ்வாறு வீடு பார்த்தான்.
ஆனால் வேதநாயகம் விடவில்லை. ஏற்கனவே பையனை விட்டாகி விட்டது, இனியும் விடாமல் இறுக பிடிக்க நினைத்தார்.
சிவகாமியிடம் பேசி அவருக்கு தெரிந்த அல்லது அவர் வீட்டுக்கு அருகிலேயே வீடு பார்த்து தான் குடியமர்த்த சொன்னார்.
“பேட்சுலருக்கு வீடு கிடைக்கிறது கொஞ்சம் கஷ்டம் ணே” என்றார் தயக்கத்தோடு சிவகாமி.
“என் பையங்கறத்துக்காக சொல்லல மா. தங்கமான புள்ள மா அவன். அவனைப் பற்றியும் உனக்கு தெரியாதுமா..” என்றவர் அப்பொழுதுதான் வாகீஸ திரிபுரபவனன் பற்றி அனைத்தும் கூறினார்.
தன்னைப்போல பாசம் பெருகியது சிவகாமிக்கு
வாகீஸன் மீது அதன் பின்..!!
இல்லையென்றால் என்னதான் சொந்தக்காரனாக இருந்தாலும், வயது பெண்ணை வைத்திருக்கிறவர் ஒரு கல்யாணம் ஆகாத ஆணை குடி வைத்திருக்கவே மாட்டார்.
“அண்ணே.. என் வீட்டு மாடியில் கூட ஒரு போர்ஷன் இருக்கு. நீங்க வாகீஸன வெளில அனுப்பாதிங்க.. இங்கயே இருக்கட்டும்” என்றதும் அவருக்கு மிகவும் சந்தோஷம்
“ரொம்ப ரொம்ப நன்றி மா..!” என்றவருக்கு குரல் அடைத்தது.
“என்ன அண்ணே.. எனக்கு போய் நன்றி எல்லாம் சொல்லிட்டு” என்ற சிவகாமியிடம்,
“இல்ல சிவகாமி இப்ப நீ செஞ்சிருக்கிறது எவ்வளவு பெரிய உதவின்னு உனக்கு தெரியாதுமா..” என்று நெகிழ்ந்தார்.
தெருவிலேயே சில பேர் கேட்டு விட்டார்கள். அனைவரிடமும் அவன் என் அண்ணன் பையன் என்ற ஒற்றை வார்த்தையில் முடித்து விட்டார்..!!
ஆரம்பத்தில் வாகீஸனுக்கு சிவகாமியின் அன்பு பெரும் தொல்லையாக தான் இருந்தது.
அடிக்கடி அவனை வந்து பார்ப்பது.. நலம் விசாரிப்பது வீட்டில் விசேஷமாக ஏதும் பலகாரம் செய்தால் சாப்பிட கொடுப்பது என்று சிவகாமியின் அன்புக்கள் அவனை ஆறுதல் படுத்தியதை விட ரணப்படுத்தியது அதிகம்.
ஆனாலும் அவரை தவிர்க்க முடியாது தவித்தான்..!!
அவனின் தனிமைக் கூட்டை தொந்தரவு செய்கிறாரே என்று தான்..!!
அவரோ தொந்தரவு தான் செய்வார். ஆனால் மற்றொருத்தியோ அடித்து உடைத்து அந்த கூட்டை உடைத்து விட்டு தான் மறுவேலை பார்ப்பாள்.
கூடவே அவனை அரிக்கும் அந்த பாட்டை போட்டு விட்டு அந்த ரணத்தை முழுவதுமாக மனத்தில் வாங்கி.. வலிக்க வலிக்க தன் காயத்தை நக்கி கொடுக்கும் அரிமாவைப் போலவே அவனும் தன் காயத்தை காய விடாமல் வருடிக் கொண்டிருப்பான்.
அப்பொழுது படப்படவென்று கதவு தட்டும் சத்தத்தில் வெளியே சென்று பார்த்தால்..
“என்ன நினைச்சுகிட்டு இருக்கீங்க? ஏன் பாட்டை இவ்வளவு சத்தமா வைக்கிறீங்க? பக்கத்தில் எல்லாம் படிக்கிற பிள்ளைங்க இருக்காங்க.. எல்லாருக்கும் தொந்தரவா இருக்கும்னு தெரியாதா? உங்கள மட்டும் யோசிக்காதீங்க மத்தவங்களையும் யோசிங்க..!” என்று அவள் பாட்டுக்கு வருவாள் சத்தம் போட்டு விட்டு சென்று விடுவாள். இல்லை இல்லை அவன் தனிமை கூட்டை உடைத்து விட்டு செல்வாள்.
ஆனால் அவனோ செல்லும் அவளை கண்ணில் எந்தவித சுவாரசியம் இன்றி பார்த்துவிட்டு,
“நான் ஏன் மற்றவர்களுக்காக யோசிக்க வேண்டும்? முடியாது..!” மீண்டும் ஒரு யூனிட் சத்தத்தை அதிகமாக வைத்து விட்டு அமைதியாக தன் வேலையை பார்ப்பான்.
எப்படியும் அந்த பாட்டு முடிவதற்குள் இரண்டு மூன்று முறை வந்து கத்தி விட்டு சென்று விடுவாள் கிருத்தி.
ஏனோ அவள் கத்துவது.. திட்டுவது.. அந்த நேரத்தில் அவனுக்கு சுத்தமாக பிடிக்காது..!!
ஆனால் திருப்பி எதையும் கூற மாட்டான். வேலைக்கு கிளம்பி சென்று விடுவான்.
அநாவசிய வழிசல்.. அலங்கார பேச்சுக்கள்.. அவள் முன்னே அலங்காரமாய் நடமாடுவது என்று எதுவுமே இருக்காது இவளிடம்.
முடியை தூக்கிப்பிடித்து கேட்ச் கிளிப்பில் ஒரு கொண்டை லூசான டீசர்ட் பளாசோ பான்ட் இல்லையென்றால் நைட் ஷூட்டில் தான் அவளை அதிகம் பார்த்திருக்கிறான் அவன்.
இவள் ஏதோ கொஞ்சம் மற்ற பெண்களை விட வித்தியாசம் தான் என்று மனம் கூறினாலும், அறிவு ‘அப்படி என்ன பெரிய வித்தியாசம்? எல்லா பெண்களும் ஒரே குட்டையில் உரிய மட்டைகள்தான்..! ஏமாற்றும் விதங்கள்தான் வேறு’ என்று அறிவு வாதாடும்.
சில சமயங்களில் அவர்கள் வீட்டில் நடக்கும் பேச்சு கூட தெள்ளத் தெளிவாக அவன் மாடியில் உலாவும் நேரத்தில் அவன் காதைச் சென்றடையும்.
அதுவும் அக்கா தம்பி சண்டை என்றால் மௌன சிரிப்போடு கேட்டுக் கொண்டிருப்பவனுக்கு அவனது தங்கை தான் ஞாபகத்திற்கு வருவாள். அவளுக்கு அழைக்க வேண்டும் போல கைகள் பரபரத்தாலும்.. மனது அவர்களது செல்ல சண்டைகளை வேண்டினாலும் தேடினாலும் அனைத்துக்கும் விலங்கிட்டு கொண்டு அமைதியாக இருந்து விடுவான்.
அதிலும் அன்று கோவிலில் நடந்ததை இவனும் பார்த்துக் கொண்டுதான் இருந்தான்..
கார்த்திகை என்று அவன் வரவில்லை, அவன் தங்கைக்கு அன்று பிறந்தநாள். அவளுக்கு வாழ்த்து சொல்லவில்லை என்றாலும் அவள் எங்கிருந்தாலும் நன்றாக வாழ வேண்டும் என்பதற்காக அன்று கோவிலுக்கு வந்திருந்தவன், கிருத்தி யாரிடமோ சத்தம் போடுவது கண்டு “எல்லோரிடமும் இப்படித்தான் பேசுறா இவ” என்று கடக்க முடிந்தவன், அதன் பின் அவள் பேசியவற்றை கேட்டு கடக்க முடியாமல் அங்கே தூணின் பின்னே தேங்கி நின்றான்.
அன்னையை தாங்கியது.. ஒழுக்கம் இல்லாத அப்பனை சாடியது.. அதற்காக தாங்கள் எந்த விதத்தில் தாழ்ந்து போய்விட்டோம் என்று நிமிர்ந்து நிற்பது.. கடைசியில் பேசிய அந்த பெண்மணிக்கு ‘5000 ரூபாய் பாக்கி இருக்கு எடுத்து வைங்க இல்ல வீட்டுக்கு வந்தே பேசுவேன்’ என்று பயம் காட்டி சென்றது என்று அனைத்துமே அவனை ஈர்த்தது..!!
“சில்லா.. சம்திங் டிஃப்ரண்ட்..!” என்று சிரித்துக் கொண்டான்.
அதுவும் அன்று இரவு அவனைப் போலவே துக்கத்தில் இசையை துணைக்கு கொண்டு தனித்து அந்த வலியை அனுபவிப்பவளை கண்டு மனம் பாரமாகி அவள் அருகே அமர்ந்தான்.
ஆனால் அதையே அவளும் அவனுக்கு தனக்கு திருப்பி செய்வாள் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை..!!
ஆச்சரியம் தான்..!
அன்று கோவிலில் இவள் பேசியது புரிந்து தந்தை செய்த துரோகத்தால் துன்பப்படுகிறாள் என்று ஆறுதல் அளிக்க அவனின் பாலினம் தடையாய் இருக்க.. அருகே அமர்ந்து இருந்தான், ஆறுதலாய்..!
ஆனால் அவளுக்கு என்னைப் பற்றி ஒன்றும் தெரியாது பின் எப்படி அத்தனை ஆதரவாய் எனக்காக அமர்ந்திருந்தாள்? என்று நினைக்கவே அவனுள் அவள் மாயம் செய்ய தொடங்கி விட்டாள் என்று புரிந்து கொண்டான். மெல்ல சிரித்துக் கொண்டான்.
நேற்று இரவு தனக்காக அமர்ந்திருந்தாள்.. அதுவும் நண்பர்களுக்காக அத்தனை வேலை செய்து தூக்க கலக்கத்திலும் பெரும் களைப்பிலும் கண்ணைத் துடைத்து துடைத்துக் கொண்டு அவள் அமர்ந்திருந்த விதமே.. அவனை இ
ன்னும் அவளுள் விழச் செய்தது.
“மை ஸ்வீட் சில்லா..!” என்று கொஞ்சியது மனம்.
மயக்கம் வருவான்...
