அத்தியாயம் 4
"ஹாய் அண்ணா.. என்ன இரண்டு நாளா சரியா பேசல நீ? ரொம்ப பிஸியோ?" என்று அண்ணனுடன் பேசிக்கொண்டே அங்கிருந்த அவர்களது அலுவலகத்தில் கணினியை பார்த்துக் கொண்டு ஏதோ வரைந்து கொண்டு இருந்தாள் சித்ரலேகா.
"ஆமா.. சித்துமா கொஞ்சம் பிஸிடா. அந்த டிசைன் நான் சொன்னது போலவே இருக்கணும். அவன் என்னோட பிரண்டு.. இந்த ஹோட்டல் அவன் முதன் முதல்ல கட்டறது. அதனால இன்டீரியர் ரொம்ப பக்காவா இருக்கணும் புரியுதா?" என்றான்.
"அண்ணா நான் இருக்கேன் இல்ல.. கவலைப்படாதே எல்லாம் நான் பார்த்துக்கிறேன்" என்றதும் "நீ இருக்கின்ற தைரியத்துல தான் இது உன்கிட்ட கொடுத்தது. இதே அந்த குட்டி பிசாச இருந்தா அவளிடம் கொடுத்திருக்கவே மாட்டேன்" என்று தன் பெரிய தங்கையை தான் திட்டிக் கொண்டு இருந்தான்.
"அக்காவை திட்டாதே அண்ணா" என்று மிரட்டினாள்.
"சும்மா என்ன மிரட்டாதே சித்து. அவ செஞ்ச வேலை எல்லாம் அப்படியே நிக்குது. அதெல்லாம் யாரு செய்வார்களாம்? கொஞ்சம் கூட தொழில் மீது அக்கறையோ பக்தியோ எதுவும் கிடையாது. என்ன நம்மள விட பெரிய ஆளா பார்த்து புடிச்சிட்டோம்னு ஏக திமிர் அவளுக்கு" என்று சிறிய தங்கையிடம் தாத்ரியை பற்றி புலம்பிக் கொண்டிருந்தான்.
அண்ணனாய் அவளை பிடிக்கும் தான். ஆனால் அதை தாண்டி அந்த திமிர் கர்வம் இதெல்லாம் அவளிடம் கண்டால் பிடிக்கவே பிடிக்காது ஆகாஷூக்கு.
"ஆகாசவாணி.. போதும் போதும் நிப்பாட்டுங்க! ரொம்ப ஓவரா பேசுறிங்க. சிங்கப்பூரில் இருந்து நீங்க பேசுறது அலை அலையாய் வந்து இங்கே என் காதை கடிக்குது. சென்னைக்கு வர கேப்ல அப்படியே ஆந்திராவுக்கு போயிட போகுது.. அவள் ஆண்டெனா வச்சு எல்லாத்தையும் கேட்டு உங்களை ஒரு வழி பண்ண போறா பாருங்க" என்று அழகாக சிரித்தாள் சித்ரலேகா.
"செஞ்சாலும் செய்வா டா! சொல்ல முடியாது குட்டி பிசாசு தான் அது" என்று ஆகாஷூம் சேர்ந்து சிரித்தான்.
"ஆமா.. எனக்கு ஒரு டவுட் ணா.. அக்காவ மட்டும் குட்டி பிசாசு குட்டி பட்டாசு என்கிற… அப்போ நான் யாராம்?" என்று தான் வரைந்த இன்டீரியர் டிசைனை ஒரு முறை சரி பார்த்துக் கொண்டே கேட்டாள் சித்ரா.
"நீ யாரு? ம்ம்.. பேயா… பிசாசா… மோகினியா… இல்லை இல்லை நீ யட்சிணி" என்று சிரித்தான் அவன்.
"யட்சிணியா? இந்த பெயர் புதுசா கேள்விப்படுகிறேன் அண்ணா" என்றாள் தங்கை.
"யட்சிணிய கேள்விப்பட்டது இல்லையா நீ? நம்ம ஊர்ல இந்த மோகினி பிசாசு வந்து மயக்கும்னு சொல்லுவாங்களே அதுபோல கேரளாவுல இந்த யட்சிணிய சொல்லுவாங்க… அழகோ அழகு அவ்வளவு அழகா இருக்குமாம் உன்னை போல.. ஆனா குணம் மட்டும் குட்டி பிசாசு மாதிரி தான்.." என்று அவன் சிரிக்க..
"பார்த்தியா என்னையும் சேர்த்து நீ கலாய்க்கிற? எப்படி இருந்தாலும் சுத்தி முத்தி ஊருக்கு தானே வரணும் வா அப்போ இருக்கு உனக்கு" தங்கையாய் உரிமையாய் சிணுங்கலோடு கூறினாள்.
"ஏய் சித்து.. அவசரப்பட்டு நீ எந்த முடிவும் எடுக்காதடா. யட்சிணிய சாமியா கும்பிட்டா அது அவ்வளவு நல்ல சக்தியை தருமாம். அதாவது அதை பயன்படுத்துறவங்களை பொறுத்து அப்படின்னு என் பிரண்டு மோசஸ் சொல்லுவான்" என்றான் ஆகாஷ்.
"நீ என்ன ரொம்ப டீஸ் பண்ணிட்ட.. இரு நீ வரும்போது பெரியப்பா பெரியம்மா கிட்ட சொல்லி உனக்கு ஒரு பெரிய பேயா பார்த்து கட்டி வைக்க சொல்றேன்" என்று அவள் அவனை பயமுறுத்துவது போல் பேச..
"புதுசா எதுக்குடா பேயா பாக்கணும். நீங்க.. அதாவது பொண்ணுங்கள்னாலே பேய் தானே" என்றவன் மீண்டும் அவளை வாரி விட்டு சிரித்தான்.
"என்னன்னா இன்னைக்கு என்ன ஓவரா டீஸ் பண்ற? இரு இரு உனக்கு இருக்கு" என்று சித்ரா மிரட்டினாள்.
"ஆமா.. நீ சொன்ன எனக்கு பேய் பார்த்து கட்டணும்னு, எனக்கு பேய்னா உனக்கு யாரை கட்டலாம்? நீ யட்சிணி அப்போ உனக்கு ஏற்றவனா… அப்போ இரு ஒரு பெரிய யட்சனா பாத்து உன்னை வந்து தூக்கிட்டு போக சொல்லுகிறேன்" என்றதும் அதிர்ந்து நின்று விட்டாள் அவனது வார்த்தைகளில்.
"ஒரு வாரத்திற்கு முன் தானே இம்மாதிரியான கனவுகளை கண்டோம். அதுவும் யாரோ ஒரு அழகிய கந்தர்வன் போன்ற ஒருத்தன் நம்மை தூக்கி செல்வது போல.. பெரியம்மா கூட அவன் யட்சன் என்றார்களே.. இப்போ அண்ணா என்ன அதுவே சொல்கிறான்" என்று அவளுக்குள் ஒரு படபடப்பு பெருகியது.
ஆனால் ஏதோ நடக்கக்கூடாது நடக்க போகிறது போலவும் தோன்றியது. "சம்திங் கோயிங் டு ஹேப்பண்" என்று மனம் பதறியது.
அப்பொழுது "எக்ஸ்கியூஸ் மீ" என்று குரல் கேட்க "அண்ணா அப்புறம் பேசுகிறேன்" என்று போனை வைத்தவள், யார் என்று பார்க்க அங்கு அழகிய சிரிப்போடு நின்று இருந்தான் சிவப்பிரசாத் ரெட்டி.
சிவப்பிரசாத் வெற்றி தாத்ரி உடைய நெருங்கிய நண்பன். இருவரும் ஒன்றாகத்தான் இங்கே சென்னை அண்ணா யுனிவர்சிட்டியில் இன்ஜினியரிங் பயின்றார்கள்.
வெறும் நண்பன் மட்டுமல்ல இப்பொழுது சொந்தமும் கூட! சிவப்பிரசாத்ரெட்டியின் பெரியப்பாவின் மகன் விஷ்ராவணனை தான் தாத்ரி திருமணம் செய்திருக்கிறாள்.
அதுவும் இவனோடு அவர்கள் வீட்டுக்கு சென்றபோது ராவணனைப் பார்த்த மாத்திரத்தில் இருந்து அவன் மீது மைலாகி.. வம்படியாக வீட்டில் சண்டை போட்டு திருமணம் செய்து இருக்கிறாள்.
சிவபிரசாத்தை முன்னமே அதாவது தாத்ரியோடு அவன் படிக்கும் பொழுது சித்ராவுக்கு நன்றாக தெரியும். அதுவும் அவன் ஹாஸ்டல் என்பதால் அடிக்கடி இவர்கள் வீட்டுக்கு வருவான்.
தாத்ரியும் வார நாட்களில் சாப்பிட அழைத்து வருவாள். தாத்ரி ஆகாஷ் சிவப்பிரசாத் சித்ரலேகா நால்வரும் அவ்வப்போது அவுட்டிங் செல்வதும் உண்டு. அதைப்போல சேர்ந்து விளையாடுவதும் உண்டு. திருமணத்திற்கு பின் இப்பொழுதுதான் சிவப்பிரசாத்தை பார்க்கிறாள்.
"வாங்க.. அண்ணா" என்ற அழைக்க வந்தவள் அதை வாய்க்குள்ளே முழங்கி விட்டாள். முன்னே அக்காவின் நண்பன் என்ற முறையில் அண்ணா என்று அழைத்து தான் பேசுவாள். இப்பொழுது அக்காவுக்கு மைத்துனன் என்றால் இவனை அண்ணா என்று அழைப்பது தவறு தானே என்று அதை விழுங்கி விட்டாள்.
"ஹாய் சித்து.." என்றபடி அவள் முன்னே அமர்ந்தவன் "எப்படி இருக்க? வேலையெல்லாம் எப்படி போகுது? அங்கிள் எப்படி இருக்காங்க என் மேல் இன்னும் கோபம் குறைந்ததா இல்லையா?" என்று அவன் கண்சிமிட்டி அழகாய் புன்னகைக்க அவனோடு சேர்த்து சிரித்தவள், "பரவாயில்லை முன்னைக்கு இப்போ.. சீக்கிரமா அக்காக்கு ஒரு குழந்தை பிறந்தால் இந்த கோபம் கூட காணாமல் போய்விடும்" என்று அவள் சிரிக்க "கண்டிப்பாக!" என்றாள் அவனும்.
இருவரும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருக்கும்போதே இண்டர்காமை எடுத்து அவனுக்கு பழரசம் வரவழைத்து கொடுத்து விருந்தோம்பினாள்.
"சூப்பர் எனக்கு கிர்ணிப்பழம் ஜூஸ் பிடிக்கும்னு கரெக்டா எடுத்துட்டு வர சொல்லி இருக்கியே" என்று பழரசத்தை அருந்திக்கொண்டு இருந்தவனின் கண்கள் எதிரில் உள்ளவளை மிக ஆவலாக தழுவிக் கொண்டது.
"அப்புறம் நான் முக்கியமாக இங்க வந்தது… உன்கிட்ட ஒரு ஹெல்ப் கேட்டு தான். எங்க அண்ணன் ஒரு கன்ஸ்ட்ரக்ஷன் ப்ராஜெக்ட் எனக்கு கொடுத்து இருக்கான். பிசினஸ்மேன் ஒருத்தருக்கு நம்ம நாட்டு கலை நயத்தோடு வீடு கட்டனுமாம். அதாவது அவர் இந்த காரைக்குடி வீடெல்லாம் இருக்கு இல்லையா அந்த மாதிரி இருக்கணும் சொல்றார். எனக்கு கட்டுறது எல்லாம் ஓகே.. கிட்டத்தட்ட முக்கால்வாசி முடிஞ்சது. ஆனா இன்டீரியர் டெகரேஷனுக்கு உன் ஞாபகம் தான் வந்தது. அதனால நீ தான் இதுல எனக்கு ஹெல்ப் பண்ணனும்" என்று கண்களில் கெஞ்சலோடு அவன் கேட்டான்.
"உங்களுக்கு தனிப்பட்ட முறையில் உதவுவது வேறு. இது பெரிய ப்ராஜெக்ட்டா இருக்கே… அப்படி என்றால் இதை நான் கம்பெனியில் இருந்து தான் செய்ய முடியும். நீங்க இதுக்கு பெரியப்பாகிட்டயும் அண்ணா கிட்டயும் தான் பேசணும்" என்றது பெண்.
"அய்யோ.. அங்கிள் கிட்டையா? ஏற்கனவே அவர் என் மீது காண்டா இருப்பாரே… சித்துமா சித்துமா நீ தான் எனக்கு ஹெல்ப் பண்ணனும்" என்று அவளது கைகளை பற்றிக்கொள்ள.
அந்த கையை சற்றென்று உதறி கொள்ளத் தோன்றியது அவளுக்கு.
அதே போல உதறி கொண்டவள் "ஓகே நான் பேசுறேன்" என்றாள்.
ஆனால் அதில் தான் அவளது வாழ்க்கை முற்றிலுமாக மாறப்
போகிறது என்று தெரிந்தால் ஒத்துக் கொள்ளாமல் இருந்திருப்பாளோ?
தொடரும்…
