6
பெண்களுக்கே உள்ள உள்ளுணர்வு உறுத்த, இடப்பக்கமாக திரும்பி பார்த்தவள், தன்னையே பார்த்திருக்கும் ஜெர்ரிக்கை பார்த்து என்னவென்று புருவம் உயர்த்த..
"கார்ஜியஸ்!!" என்று முணுமுணுத்தான்.
"என்ன?" என்று அவள் புருவம் சுருக்கினாள் புரியாமல்..
"ஒன்னுமே சொல்லல!!" என்று பேச்சை மாற்றி உதட்டை பிதுக்கினான்.
"என்ன? என்ன சொல்லனும்?" என்றவளிடம்,
"நீ மட்டும் ஏதோ வொர்க் அவுட் பண்ற.. என்கிட்டேயும் சொன்னால் நானும் ஜாயின் பண்ணிக்குவேன்ல.. அப்படி என்ன நீ மட்டும் நல்ல பெயர் வாங்க போற? டீமுக்கு தான் மார்க் போடுவாங்களாம்.. இன்டிஜூவல் பெர்ஷனுக்கு இல்லையாம்" என்றான் மீசைக்குள் உதட்டை புதைத்து சிரிப்பை மறைத்தபடி..
"நீ மத்தவங்க கூட வெட்டியாக அரட்டை அடிச்சிட்டு இருந்தால் அதற்கு நான் பொறுப்பாக முடியுமா? அட்லீஸ்ட் டீம்ல ஒருவருக்காவது விஷயம் தெரிஞ்சு இருக்கட்டுமே!!" என்று அவனுக்கு குறையாத நக்கல் குரலில் கூறிவிட்டு அவள் திரும்பி கொள்ள..
"இன்ட்ரஸ்டிங்!!" என்றான் மேலும் கள்ள புன்னகையை சிந்தியவாறு!!
"ஓகே ப்ராஜெக்ட் பத்தி ஏதாவது யோசித்திருக்கிறீர்களா?" என்றவள் கேட்க.. அவள் புறம் பக்கம் நன்றாக திரும்பி அமரந்தவன் தொண்டையை கணைத்துக் கொள்ள.. அவன் சொல்ல வருவதை கேட்பதற்கு என்று இவளும் லேப்டாப்பை ஸ்லீபிங் மோரில் போட்டு விட்டு அவன் புறம் திரும்ப..
தன்னையே ஆர்வத்தோடு தான் பேசப்போகும் விஷயத்தை கவனிக்கும் விதத்தில் அமர்ந்தவளை பார்த்தவன் "இன்னும் யோசிக்கல!!" என்றான் மிகத் தீவிரமாக குரலில் கூற.. அவளுக்கோ பிபி எகிற.. போடா என்று முணுமுணுத்து திரும்பிக் கொண்டாள்.
அன்று முழுவதும் அதே புன்னகை மாறாமல் அவ்வபோது அவளை திரும்பி திரும்பி பார்த்துக்கொண்டே சென்றது அவனது நேரம்.
மாலை போல எல்லோரும் கிளம்பும் முன் மீண்டும் கையில் மைக் பிடித்த நம் பீட்டர்.. "ஹாய் கைஸ் நாளைக்கு நைட் பார்ட்டி வித் டின்னர். டிரஸ் கோட் ரெட்" என்றான்.
"ஆரம்பிச்சுட்டானுங்க இவனுங்க!! பார்ட்டி டின்னர் போதாக்குறைக்கு டிரஸ் கோட்.. இவனுங்களும் இவனுங்க ஐடி கலாச்சாரமும்" என்று பொருமியப்படி சென்றாள் தாமரை.
சென்னை போன்ற பெரு நகரங்களில் நடக்கும் பார்ட்டியில் கூட கலந்து கொள்ளாமல் இருந்தவளுக்கு, இந்த ஆறு மாத காலமாக இங்கே நடக்கும் பார்ட்டியில் தவிர்க்க முடியாமல் கலந்து கொண்டே ஆக வேண்டிய நிர்பந்தம்.
ஆண் பெண் விகர்ப்பம் இல்லாமல் குடிப்பவர்களை பார்ப்பவளை பார்த்து முதலில் பயந்து அதிர்ந்தாலும் அதற்கு பின் அவை சர்வ சாதாரணமாகப் பழகினால் கூட ஏதோ ஒரு ஒவ்வாமை அவளிடம் இருக்கதான் செய்தது. அதிலும் சிலசமயம் அவர்கள் நடனம் என்ற பெயரில் இவளையும் கூப்பிடும் பொழுது தட்டி கழிப்பதற்குள் இவளுக்குப் பெரும் பாடாகிவிடும்.
அதிலும் சிலர் குடித்துவிட்டு இவளை பார்க்கும் மேய்ச்சல் பார்வை இன்னும் பதற வைக்கும். ஓவர் கோட்டை மேலே இழுத்து போர்த்திக்கொண்டு அமர்ந்திருப்பாள். நாளை பார்ட்டி நினைத்தாலே கொஞ்சம் கலக்கமாக தான் இருந்தது தாமரைக்கு.
இன்னும் சிலர் நேரடியாகவே நைட் ஷேர் பண்ணலாமா என்று கேட்கும்போது அடிக்க துடிக்கும் கையை கட்டுப் படுத்திக் கொள்வாள். ஆனால் நோ என்று இவள் மறுக்கும் சமயங்களில் வற்புறுத்தாமல் நாகரீகமாகவே நகர்ந்து விடுவர். அந்த மட்டிலும் பெருத்த நிம்மதி.
இவர்கள் கம்பெனி வளாகத்தில் அமைந்த தோட்டத்தில் தான் டின்னரும் அதற்குப் பின்னான பார்ட்டியும், அடுத்தடுத்த வாரங்களில் வேறு இடம் பார்த்துக் கொள்ளலாம் என்று பீட்டர் கூறிவிட அனைவரும் மகிழ்வுடன் சென்றனர்.
அன்று இரவு வழக்கம் போல மகேஷ் மிஸ்டுகால் கொடுக்க இவள் எடுத்து ஹலோ என்பதற்குள் வாங்க வாங்க என்று வாங்கி விட்டான்.
அவளுக்கு பொறுப்பே இல்லையாம்.. வருங்கால கணவன் என்று அவன் மேல் பாசம் அன்பு காதல் இல்லை என்றாலும் கூட அக்கறை என்பது துளிகூட இல்லையாம்... ஆனால் அவனுக்கு கொள்ளை கொள்ளையாக அவள் மீது அன்பு அக்கறை இருக்கிறதாம்.. இந்த இரண்டு நாட்களாக அவளது போன் கால் இல்லாமல் இவன் தவியாய் தவித்து துடியாய் துடித்து போனானாம்... ஆறு மாதங்களாக நன்றாகத்தான் இருந்தாலும் இப்போது சில நாட்களாக அவர்களது நடவடிக்கையில் மாற்றங்கள் தெரிகிறதாம்.. இந்த மாற்றங்கள் அவரது வாழ்க்கைக்கு நல்லது செய்யாதாம்.. இந்தியர் அதிலும் தமிழரான நமக்கு சில கட்டுப்பாடுகள் இருக்கிறதாம்.. அதுப் படித்தால் நாம் வாழ வேண்டுமாம்.. என்று அவள் காதில் ரத்தம் வர வர பேசித் தள்ளிவிட்டான் மகேஷ் வட்டியும் முதலுமாக!!
பத்து மணி நேரங்கள் வேலை செய்யும்போது வராத அயர்வு சோர்வு எல்லாம்.. இவனுடன் ஒரு மணி நேரம் பேசினால் வந்துவிடும் போல.. என்றுமில்லா அதிசயமாக அவன் இவர்கள் நேரப்படி ஒன்பது மணிக்கு அழைத்துவிட்டான். அப்போதுதான் உணவை கையில் எடுத்தவள், அவனிடம் பேசிக்கொண்டே சாப்பிடலாம் என்ற எண்ணத்தை அவன் பேசிய இரண்டாவது நிமிடத்தில் கைவிட்டாள்.
அதிசயமாக அவளும் இன்று சாதம் குழம்பு வைத்திருக்க.. அதுவும் அந்த ஒரு மணி நேரத்தில் ஆறி காய்ந்து போய்க் கிடந்தது. அதற்குப் பின்னும் அதை சாப்பிட வேண்டுமா? என்று எண்ணம் தோன்ற.. இந்த சாப்பாடு கூட கிடைக்காமல் ஒரு சில தினங்கள் அவள் பட்ட கஷ்டங்கள், அந்த பசியின் வலி அவள் கண் முன்னே வந்து போக "பழையதை எதையும் நினைத்துப் பார்க்காதே!! அதுவும் சாப்பிடும்போது எதுவும் நினைத்து பார்க்க கூடாது செல்லம்மா.. என் செல்விகண்ணு சாப்பிடு டா தங்கம்!!" என்று மீண்டும் அந்த பாசமான ஆணின் குரல் அவள் காதில் கேட்க.. கண்களை தாண்டி விழுந்த கண்ணீரை புறங்கையால் துடைத்து விட்டு வேக வேகமாக உணவை முடித்தாள்.
மறுநாள் காலை அவளுக்கு வேலைக்கு செல்ல வேண்டிய கட்டாயம் இல்லை அதனால் நிதானமாகவே எழுந்தாள். ஞாயிற்றுக் கிழமை செல்லவேண்டிய லாண்டரிக்கு இன்றே சென்று வந்தாள்.
மெதுவாக குளித்து ஆற அமர உண்டு என்று வெகு நாளாக பிறகான ஓய்வான நேரத்தை அனுபவித்தபடி, மதியம் தூங்கி எழுந்தாள்.
மாலை நெருங்கி விட.. அடர் சிவப்பில் அனார்கலி சுடிதார் ஒன்றை அணிந்து, அதிலிருந்த வெண் கற்களுக்கு போட்டியாக, கிரிஸ்டல் பதித்த பெரிய தோடு அதற்கு மேட்சான ப்ரேஸ்லெட் என்று அணிந்தவள், நீள கழுத்தில் எதுவும் அணியாமல் இருக்க.. அதுவே தனி அழகை கொடுத்தது.
ஓவர்கோட் கழட்டி அதற்கான இடத்தில் வைத்து விட்டு இவள் பார்ட்டி நடக்கும் இடத்திற்கு வர.. மிதமான ஒப்பனையில் அழகாக மிளிர்ந்தவளை அங்கிருந்த ஒவ்வொருவரின் கண்களும் ரசனையோடு வருடி சென்றது.
இவள் நேராக சென்று ரெக்ஸியுடன் நின்று கொண்டாள்.. பேசியபடியே இவர்கள் தங்கள் உணவை முடிக்க.. அடுத்தது குடிமக்கள் குடியில் மூழ்கி விட.. அடுத்து நடனம் ஆரம்பித்தவுடனே "எனக்கு டைம் ஆயிடுச்சு இதுக்கு மேல என்னால இருக்க முடியாது" என்று ரெக்ஸியை நச்சரிக்கத் தொடங்கினாள் தாமரை.
ரெக்ஸி மொடா குடிகாரி எல்லாம் கிடையாது.. அவ்வப்போது இந்த பார்ட்டிகளில் இரண்டு மூன்று கல்ஃப் உள்ளே போகிவிடும் ஆனாலும் நிதானம் இழக்க மாட்டாள். "சரி சரி வா அழாதே!!" என்று அவளுடன் இணைந்து ரயில் நிலையம் அடைந்தனர்.
அங்கே அவர்களுக்கு முன்னால் வந்து அமர்ந்திருந்தான் ஜெர்ரிக். "ஜெர்ரிக் ரொம்ப டீசண்ட் ஆளு போல.. பாரு ட்ரிங்க்ஸ் டான்ஸ் எல்லாத்தையும் அவாய்ட் பண்ணிட்டு இங்கே வந்து உட்கார்ந்து இருக்கான் பாரேன்!!" என்று பெருமையாக பேசிய படி அவனை நெருங்க..
தன்னை நெருங்கிய ரெக்ஸியை பார்த்தவன், "உனக்கு டிவின்ஸ் இருக்கிறாள்னு எனக்கு சொல்லவே இல்லையே ழெக்ஸி" என்று குளறால முழு போதையில் தெளிவாக கூறினான் ஜெர்ரிக்.
ரெக்ஸி முகம் போன போக்கை பார்த்து அடக்கமாட்டாமல் சிரித்துவிட்டாள் தாமரை.
"குடிச்சிருக்கியா?" என்று ரெக்ஸி கேட்டவுடன், "உன்னை விட இரண்டு பெக் தான் அதிகம்" என்று அதற்கும் அவளை வாரி விட்டு பதில் கூறினான்.
"பிராண்ட் மாத்தி குடிச்சிட்டேன் போல பார்க்கிறது எல்லாம் ரெண்டு ரெண்டா தெரியுது.. ட்ரெயின் கூட எனக்கு இரண்டா தான் தெரியுது. அதான் ஏற முடியாமல் தடுமாறிகிட்டு இருக்கேன். ப்ளீஸ் ஹெல்ப் மீ டாம்" என்று அருகில் இருந்த தாமரையும் இரண்டாக தெரிய இரண்டு கைகளாலும் இருவரையும் பிடிக்கிறேன் என்று அவன் செய்த அட்டகாசங்களை பார்த்தவளுக்கு சற்று கோபம் வரத்தான் செய்தது.
ஆனாலும் ரெக்ஸியின் கெஞ்சுதல் பார்வையும் அவன் எந்த நிலையிலும் அவள் மனம் இரங்க.. அடுத்து வந்த ட்ரெயினில் மெதுவாக அவனைத் தாங்கி அழைத்துக் கொண்டு சென்றாள்.
ட்ரெயின் ஏறிய அடுத்த நிமிடமே அவன் அவள் தோள் வளைவிலேயே தூங்கிவிட.. முதலில் அது குறுகுறுத்தாலும் "இவன் நொய் நொய்னு பேசிட்டு வரத்துக்கு தூங்குவதே பெட்டர்!!" என்று நினைத்து அவளும் அமைதியாகவே இருந்தாள்.
ட்ரெயின் விட்டு இறங்கிய பின்னும் அவர்கள் வீடு வரும் வரையிலும் அவன் புஜத்தை இறுக்கி பிடித்தபடி தட்டுத்தடுமாறி அவனை அழைத்துக்கொண்டு வந்தாள் தாமரை.
"உங்க வீட்டுக்கு போய்டுவீங்க தானே?" என்று அவள் கேட்க..
"தாராளமா டாம்!! ஆனால் அந்த நாலு வீட்டில் எந்த வீட்டுக்குள்ள சாவியை போட?" என்று இவன் கேட்க..
இரண்டாக தெரிந்தது இப்போ நாலா தெரியுதா? என்று தலையில் அடித்துக் கொண்டவள் அவனிடம் சாவியை கேட்க.. "நான் சாவி போடும் போது ரெண்டு கால் தான் இருந்தது. இப்ப நாலு காலு தெரியுது.. எந்தக் காலுன்னு மறந்து போச்சு" என்று அவன் அப்பாவியாய் முகத்தை வைத்து கேட்ட தொணியில் "இவனையெல்லாம்!!!" என்று பல்லை கடிக்க தான் முடிந்தது அவளுக்கு.
வேறு வழியின்றி தாமரையே அவன் பாக்கெட்டில் துலாவி சாவியை கண்டுபிடித்து வீட்டை திறந்து அவனை உள்ளே தள்ளி சென்றாள்.
அதுவரையிலும் நன்றாகத்தான் சென்றது. அவனை பெட்டில் கொண்டு விட்டு... "இதோட இன்னொரு சாவி உங்ககிட்ட இருக்கும் இல்லையா? அதனால நான் வெளியில பூட்டிட்டு போறேன். நாளைக்கு சாவியை வாங்கிகோ" என்று இவள் செல்ல..
"தேங்க்யூ டாம்!! யூ ஆர் சோ ஸ்வீட் டாம்!! சோ நைஸ் கேர்ள் டாம்!! என்று போதையில் பிதற்றியவன், அடுத்த நொடி அவளது கன்னத்தில் இதழ்கள் அழுத்தமாக பதிக்க.. இதுவரை அவன் செய்த அலப்பறையிலேயே லேசாக முளைவிட்டு இருந்த கோபம் இப்போது பெரும் தணலாய் பற்றி எரிய, அவனது வெண்ணிற மேனியில்
தனது கை தடங்கள் கன்றிப் போகும் அளவு அறைந்திருந்தாள் தாமரை!!
டாம் அண்ட் ஜெர்ரி... வருவாங்க..
