42
இன்று..!
காரை ஒருவித வெறுப்பாக பார்த்தான் நிரஞ்சன். அன்று மழை இரவில் அவள் பேசி சென்றதிலிருந்து அவனுக்கு வருத்தமாக தான் இருந்தது.
ஏதோ ஒரு உந்துதலில்.. அன்றிருந்த போதையில்…
ஆம் ஆல்கஹால் நார்கோட்டிக்ஸ் மட்டும் போதையில்ல.. இம்மாதிரி ஆஃப்பின் கவர்ச்சியிலும் மயங்கி கிடப்பதும் போதை தான்..!
எண்ணற்ற தரமற்ற ஆஃப் களால் நிறைய இளைஞர்கள் மட்டுமல்ல குடும்பங்களும் சிதைக்கின்றன..!
நெறி தவறி லோன் போட்டு எடுத்து ஆகிவிட்டது. ஆனால் இதை இப்பொழுது விற்க முடியாமல் சிரமப்பட்டு கொண்டிருக்கிறான்.
“வேணும்.. வேணும்.. உனக்கு இன்னும் நல்லா வேணும்டா..!” என்று புலம்பியவன் அந்த காரை ஒரு உதை உதைத்து விட்டு நடந்தே அருகில் இருந்த பேருந்து நிலையத்திற்கு சென்றான்.
சில விஷயங்கள் தப்பு என்று புத்திக்கு தெரியாமல் ஒருவித உள்ளக் கிளர்ச்சியில் அது தரும் போதையில் செய்து விடுகிறோம்.
ஆனால்.. புத்தி தெளிந்து அது தப்பு என்று புரியும் பொழுது நாம் கைவிட்ட உறவுகள் நம்மை கைவிட்டு தொலைதூரத்திற்கு சென்று விடுகின்றன..!
பெருமூச்சோடு வங்கியில் தன் வேலையை தொடர்ந்தான் நிரஞ்சன்.
உள்ளுக்குள் ஆயிரம் கவலைகள் ரணங்கள் வலிகள் இருந்தாலும் அவற்றை எல்லாம் வேலையில் கொண்டு வருவதில்லை நிரஞ்சன்.
மகளைப் பள்ளியில் விட்டு வந்த வதனி மொட்டு மொட்டு என்று தனியாக அமர்ந்திருந்த பிரேமாவை பார்த்து சாப்பாடு எடுத்து வைத்தவள் “வாங்க சாப்பிடலாம்” என்று அழைக்க.. அவரால் சட்டென்று கீழே அமர முடியாது என்பதால் அந்தக் கட்டிலேயே அவருக்கு உணவை வைத்து இவள் கீழே அமர்ந்து உண்டாள்.
பிரேமாவுக்கு தொண்டை வரை வந்துவிட்டது. “எதனால் இருவருக்குள்ளும் பிரச்சினை? அப்படி என்னதான் நிரஞ்சன் செய்தான்?” என்று கேட்க…
ஆனால் கணவன் மனைவியின் அந்தரங்கத்தில் தலையிட முதலில் விருப்பமில்லை. அடுத்து ‘வதனியின் கோபத்தை பார்த்தால்.. மகன் ஏதோ பெருசா தப்பு செய்திருக்கிறான்?’ என்று புரிந்தது.
அதைக் கேட்டு தெரிந்து தன் மகனின் பிம்பம் உடைந்து வருத்திக்கொள்ள அவர் பிரியப்படவில்லை.
சில நேரங்களில்.. சில உறவுகள்.. அப்படித்தான்..!!
அடுத்தவனுக்கு தவறாக இருந்தால் இருந்துவிட்டு போகட்டும் என்னை பொறுத்தவரையில் அவன் நல்லவன் அந்த வகையில் நாம் திருப்திப்பட்டுக் கொள்கிறேன் என்று..!
“எனக்கு வீட்டில் இருந்தே வேலை அத்த.. நீங்க சாப்பிட்டு ரெஸ்ட் எடுக்குறதுன்னா எடுங்க” என்றவள், சோபாவில் அமர்ந்தவள் லேப்டாப்பை எடுத்து ஆர்யன் கூட பைலில் இருந்து ஜிஎஸ்டி வேலைகளை செய்ய ஆரம்பித்தாள்.
இடையில் அவ்வப்போது அவளது சில பல சந்தேகங்களையும் சில விளக்கங்களையும் ஆரியனிடம் ஃபோன் மூலமாக நிவர்த்தி செய்து கொண்டு, தன் வேலையை அவள் தொடர… உட்கொள்ள வேண்டிய மாத்திரைகளை உண்டு பிரேமா சிறிது நேரம் மருமகளை பார்த்திருந்தவர் அப்படியே உறங்கிவிட்டார்.
இவளும் மகள் என்றால் மதிய சமைக்கும் வேலை இவளுக்கு இல்லை. மகளுக்கு என்ன மதியம் கட்டிக் கொடுக்கிறாளோ அதையே தனக்கும் வைத்துக் கொள்வாள. இரவு ஏதேனும் பார்த்துக் கொள்வர்.
“இப்பொழுது மாமியார் வேறு?” அவளுக்கு அலுப்பாகவும் உடல் அசதியும் இருந்தது. அதனால் இருவருக்கும் மட்டும் சிம்பிளாக மதிய உணவு முடித்தவள் உணவுகளை கொண்டு வைத்து விட்டு உறங்கினாள்.
மீண்டும் வதனி கண் விழிக்கும் போது மணி மூன்றையாக இருந்தது “அச்சோ இவ்வளவு நேரம் ஆச்சா.. என்ன இப்படி தூங்கிட்டேன். மிருவுக்கு நாலு மணி போல் ஸ்கூல் விட்டுடுவாங்களே” என்று முதலில் அவசர அவசரமாக குளித்து வந்தவள், ஹாலில் வந்து பார்க்க அவள் வைத்து விட்டு சென்ற உணவு அப்படியே இருந்தது பிரேமா ஃபோனில் ஏதோ பார்த்துக் கொண்டிருந்தார்.
“நீங்க சாப்பிடலையா அத்த?” என்று கேட்க..
“அங்கு இருக்கும் போது தான் தனியா சாப்பிட்டேன். இங்கேயுமா? நீ வரலைன்னு வெயிட் பண்ணுனேன் வதனி” என்றார்.
‘இந்த அக்கறையெல்லாம் எங்கே சென்றிருந்தது எத்தனை காலமாக இவரிடம்’ என்று இடவலமாக தலையாட்டிக் கொண்டு,
“சரி வாங்க” என்று அவரிடம் வாக்குவாதம் பிடிக்காமல் உணவை முடித்து கொண்டாள்.
“எனக்கு உணவு நேரம் மாறி மாறி வரும் அந்த. எனக்காக எல்லாம் நீங்க வெயிட் பண்ணாதீங்க முடிஞ்ச அளவு நீங்க சீக்கிரம் சாப்பிடுங்க நான் போய் மிருவ கூட்டிட்டு வந்துடறேன்” என்றவள் மணியை பார்க்க அது நாலரை நெருங்கிக் கொண்டிருந்தது.
“போச்சு.. டைமாச்சு..” என்று அவள் கிளம்பி வாயிலுக்கு செல்ல.. மகளை அழைத்துக் கொண்டு வந்தான் நிரஞ்சன்.
வதனியின் முறைப்பில் “ஆட்டோல தான் வந்தோம்” என்று முணுமுணுத்தான்.
மகள் அழைத்து வந்தவன் வெகு நேரம் இருக்கவில்லை. அம்மாவிடம் சொல்லிவிட்டு அடுத்த ஐந்து நிமிடத்தில் கிளம்பி விட்டான் வங்கிக்கு.
இரண்டு நாட்கள் இப்படியாக சென்றது. காலையில் இவள் உணவு வேளையில் அவளிடம் எதுவுமே கேட்காமல் தன் உணவை மகளோடு முடித்துக் கொண்டு மகளை அழைத்துக்கொண்டு ஆட்டோவில் செல்வான். மதிய உணவு இவர்களுக்கு மட்டும் பார்த்துக் கொள்வாள்.
நிரஞ்சன் கேண்டிலேயே மதிய உணவை முடித்துக் கொள்வான். இரவு தினமும் மிருவுக்கு தோசை தான் வேண்டும். அதனால் சட்னி அரைத்து மகளுக்கு பிரேமாவுக்கு வார்த்து கொடுத்து தானும் உண்டு விடுவாள். அடுத்து அறைக்குள் முடங்கிக் கொள்ள நிரஞ்சன் ஒரு தோள் குலுக்களோடு தானே சுட்டு உண்பான்.
வலிக்க வலிக்க அவனை திட்டினாலும்.. அவன் விலகுவதில்லை..!
சுட சுட வார்த்தைகளை அவள் கொட்டினாலும் சிரிப்போடு கடந்து விடுவான்..!
என்னதான் செய்வது இவனை என்று தெரியாமல் கடுப்பாக இருந்தது.
அதிலும் இவர்கள் வந்து ஒரு வாரம் கழித்து அவளின் இரு நாத்தனார்களும் வதனியின் வீட்டிற்கு வந்தனர்.
அன்று இரண்டாம் சனிக்கிழமை நிரஞ்சனும் வங்கி விடுமுறை என்று வீட்டில் தான் இருந்தான்.
பிரேமா கட்டிலில் அமர்ந்து கீரை உருவி கொண்டிருக்க.. நிரஞ்சன் ஃபோனில் தன் வங்கி நகை மதிப்பீட்டாளரிடம் பேசி ஏதோ லோன் பற்றி பேசிக் கொண்டிருந்தான். வதனியோ வழக்கம் போல ஜிஎஸ்டி வேலையில் தன்னை மூழ்கடித்து இருந்தாள்.
“அம்மா..” என்றபடி வந்தனர் நிர்மலாவும் ஆர்த்தியும்.
வந்தவர்களை அதுவும் தன் வீட்டுக்கு வந்தவர்களை எப்படி கண்டு முகம் திருப்பிக் கொள்வது என்று வாங்க என்றபடி அவர்கள் அமர இடம் கொடுத்துவிட்டு தன் லேப்டாப்பை அறையில் வைத்து விட்டு வந்தாள் வதனி.
அதற்குள் இருவரும் அன்னையிடம் அத்தனை வாக்குவாதம் சண்டை போட்டுக் கொண்டிருந்தார்கள்.
“எப்படி நீங்க சொல்லாம கொள்ளாம ரெண்டு பேரும் இங்கு வருவீங்க? நாங்க போய் அங்க பழைய வீட்டை பார்த்துட்டு எங்கடா காணோம் எவ்வளவு தேடினோம் நான் தெரியுமா? ரெண்டு நாளா சாப்பாடு கூட எனக்கு இறங்கல” என்று ஆரம்பித்தார் ஆர்த்தி.
“ஒரு போன் பண்ணி கேட்டிருந்த பிரச்சனை முடிந்திருக்குமே” என்று தனக்குள் முணுமுணுத்துக் கொண்டாள் வதனி.
“ஆமா.. ஆமா.. வீட்டுக்கு வரலாம்னு பார்த்தா வீடு பூட்டி இருக்கும்போது ஒரு வார்த்தை சொல்லட்டு போக மாட்டியா” என்று நிர்மலாவும் விடாமல் சண்டை பிடிக்க இருவரையும் அமைதியாக பார்த்திருந்தார் பிரேமா.
பின் இருவரும் அன்னையின் கட்டிலிலே வந்து அமர்ந்து “உனக்கு என்ன தலை விதியா? அவன் தான் பொண்டாட்டி வேணும்னு அவ முந்தானைற புடுச்சுகிட்டு இங்க வந்து இருக்கானா? நீயும் ஏம்மா இங்க வந்த? உனக்கு சொந்த வீடு இல்லையா?” என்று இருவரும் மாற்றி மாற்றி அன்னையிடம் கேள்வி கணைகளை தொடுத்தனர்..
இவற்றையெல்லாம் வதனியும் கேட்டுக் கொண்டுதான் இருந்தாள் ஆனால் பெரிதாக ரியாக்ட் செய்யலாம் இல்லை. இருவருக்கும் அவர்களுக்கு பிடித்தது போல காஃபி போட்டு கொண்டு போய் வைத்தவள் “காஃபி எடுத்துக்கோங்க அண்ணி” என்றவள் திரும்பவும் தன் அறைக்கு செல்ல திரும்ப..
“நில்லு நாங்க பேசிட்டு இருக்கோம் தானே.. நீ பட்டுக்கு போனா என்ன அர்த்தம்?” என்றதும் திரும்பி கணவனை ஒரு பார்வை பார்த்தவள்,
“நீங்க உங்க அம்மா கிட்ட பேசிட்டு இருக்கீங்க இங்க நான் எதுக்கு? என்றாள் விட்டேரியாக..
“உனக்கு என்ன பெரிய எலிசபெத் மகாராணினு நினைப்பா…ரொம்ப தான் உச்சாணி கொம்புல ஏறிக்கிட்டு இறங்க மாட்டேங்கற.. வீடுன்னா நாலு சச்சரவு சண்ட இருக்க தான் செய்யும். அதுக்குன்னு இப்படி தான் வந்து உட்கார்ந்துக்குவியா? உன்னால பாரு எங்க அம்மாவை எவ்வளவு கஷ்டப்படுறாங்க.. அவ்ளோ பெரிய வீட்டுல சுதந்திரமா இருந்தவங்க இத்துனோடு புறா கூடு வீட்ல ஒரு கட்டில் ஒரு குறுக்கிட்டு உட்கார்ந்து இருக்காங்க?” என்று ஆர்த்தி படப்படக்க
பிரேமவோ “சும்மா இரு ஆர்த்தி” என்று மகளை அடக்கினார்.
நிர்மலாவும் தன் பங்குக்கு “நீ இங்க வந்ததது எதனாலன்னு எனக்கு தெரியும். இப்படி தனியா வந்தா தானே நாங்க இந்த பிள்ளைங்களோட வந்து போக இருக்க முடியாது. ஒரு இரண்டு நாளு தங்க முடியாது.. அதுக்கு தான் நைசா தனியா வந்துட்டு கூடவே புருஷனையும் இழுத்துட்டு வந்து இருக்கா” என்று நொடித்தாள்.
“முதல்ல நீங்க ரெண்டு பேரும் வந்திருக்கிறது என் வீட்டு.. இந்த வீட்டுக்கு வாடகை கொடுக்கிறது நான். உங்க தம்பி இல்ல..! சரியா? அதனால பார்த்து பேசுங்க? நான் ஒன்னும் உங்க தம்பி இழுத்திட்டு வரல.. அப்படி ஒன்னும் எனக்கு தேவையும் இல்ல.. போகும்போது உங்க அம்மாவையும் உங்க தம்பி உங்க கூடவே கூட்டிட்டு போய்டுங்க..! உங்க அம்மா இந்த புறா கூட வீட்டில் உட்கார்ந்து கஷ்டப்பட வேண்டாம். நீங்க தான் நல்ல வசதியா இருக்கீங்களே.. உங்க வீட்ல கொண்டு போய் வச்சுக்கோங்க..! நல்லா பார்த்துக்கோங்க உங்க அம்மாவ..! ஏன் அவங்க வீட்டுல மட்டும் அவங்கள தனியா இருக்க விடுறீங்க..?” என்றவள் அதற்குப்பின் அவர்களோடு பேச பிடிக்காமல் தன் அறை நோக்கி சென்றவள் அறைவாசலில் நின்று திரும்பி..
“உங்க அம்மாவ பாக்கணும்னா மட்டும் இங்க வாங்க.. அதை விட்டு சிண்டு முடிஞ்சு விட்ற வேலை.. கோலி முட்டுற வேலை.. ஏத்தி விடுற வேலையெல்லாம் இங்க வச்சுக்காதீங்க..! அப்படி எதாவது செய்யணும்னா தாராளமா உங்க அம்மா கூட்டிட்டு போங்க நான் யாரையும் புடிச்சு வைக்கல” என்று படார் என்று கதவை சாத்திக் கொண்டாள்.
“பார்ரா ஆதவா.. எவ்வளோ திமிர.. அவள..” என்று இருவரும் ஆரம்பிக்க..
“இங்க பாருங்க என் வாழ்க்கை ஏற்கனவே அத்தனை பிரச்சினைகளோட ஓடிட்டு அந்தரத்துல தூங்குது. நீங்க வேற வந்து உங்க பங்குக்கு அதுல கல் எறியாதீங்க.. இத்தனை நாளா நீங்க தான் வந்து என்னை பாத்துட்டீங்களா? இல்ல அம்மாவ தான் பாத்துட்டீங்களா? நான் தானே பார்த்துக்கிட்டேன். அதேபோல இப்பவும் இருங்க..! உங்களை விட மேகா நல்லா தான் அம்மாவ பாத்துக்குறா.. புறா கூட்டுல குடும்பாமா இருக்குறதும்.. பெரிய வீட்டுல
தனியா இருக்கிறதும் அம்மாவோட இஷ்டம்..!” என்றவன் விறுவிறுவென்று வெளியில் சென்று விட்டான்.
தொடரும்..
