40
இன்று..
“நீ எனக்கு வேண்டும் என்பது..
ஆசையும் இல்லை..
தாபமும் இல்லை..
தேவையும் இல்லை..
காமமும் இல்லை..
அதீத ஏக்கம் மட்டுமே..!!”
எங்கோ படித்தது. இன்று அவன் நினைவில் வர விரக்தியாய் சிரித்துக்கொண்டான்.
நிரஞ்சனுக்கு மிக மிக பொருத்தமாய்..!!
தன் முன் மண்டியிட்டு கண்ணீர் விழிகளோடு அமர்ந்திருந்த கணவனை கண்டவளின் உள்ளத்தில் லேசாக ஈரம் கசிந்தது.
அவனின் அகங்காரத்தை.. கோபத்தை.. ஆண்மையை.. காதலை பாசத்தை.. நேசத்தை.. ஏன் துரோகத்தை கூட கண்டிருக்கிறாள், ஆனால் இப்படி இடிந்து போய் கெஞ்சி அழும் அழுகையை இதுவரை அவள் கண்டதே இல்லை..!!
‘இவன் அழுது என்னை வீக் பண்ணு பார்க்கிறான்.. நடக்காது என்னிடம்’ என்று முகத்தை திருப்பிக் கொண்டாள்.
“மேகா… மேகா.. என்னை தனியா விட்டுடாதேயேன்..! ரொம்ப பயமா இருக்கு” என்றான் கெஞ்சல் குரலில், அதே முட்டி போட்ட நிலையில் நின்றே அவளிடம் யாசித்தான்.
அன்று யோசிக்காமல் செய்த வேலை.. இன்று மனைவியிடமே யாசிக்க வைத்தது அவனை..!
“அம்மாவுக்கு நம்ம பிரச்சனை தெரியலனாலும் ஏதோ பிரச்சினை நமக்குள்ளன்னு தெரியும் தானே? அவங்களுமே இவ்வளவு நாளா என்கிட்ட சரியாவே பேச தெரியுமா?
மருமக பேத்திய அழைச்சிட்டு வா என்று என்கிட்ட அவ்வளவு சண்டை”
“தனியே உண்டு.. தனியே பேசி.. தனியே தூங்கி.. தனியே வாழ்ந்து தனியே படுத்து.. வாழ்க்கை ரொம்ப ரொம்ப கொடுமையா போகுது மேகா..!” கண்களில் வலியை தேக்கி அவன் கூறிய விதம் பார்க்கும் கல்நெஞ்சை கூட கரைக்கும். ஆனால் மேகாவை கரைக்கவில்லை.
“தனியே அமர்ந்து உணவு உண்டு நாக்கு கூட மரத்து போய்விட்டத டி..
சிறிது நேரம் அருகே உட்காரேன்.. உன் ஸ்பரிசம் கூட வேணாம்.. உன் வாசம் மட்டும் போதும் என் நாக்கும் நானும் புத்துணர்வு கொள்ள..
ஒருவாய் உணவு உள்ளிருக்கும் மனமார..” என்றான் உளமார..
‘வார்த்தை ஜாலத்துல ஆள மடக்குற வித்தையை இவன் கிட்ட தான் கத்துக்கணும்’ என்று மனதில் நினைத்தவள் முகத்தில் எந்த உணர்ச்சியும் காட்டவே இல்லை.
“எவ்வளவு நாளா அப்படி தனியா இருந்தீங்க?” என்ற அவள் பொறுமையாக கேட்க..
“நீயும் மிருவும் என்னை விட்டு வந்ததிலிருந்து நான் தனியா தான் இருக்கேன் மேகா” என்றான் பாவமாக..
“ஓஹ்ஹோ… அப்போ அதுக்கு முன்னாடி மட்டும் எங்க கிட்ட பேசி சிரிச்சு.. எங்களோட சேர்ந்து சாப்பிட்டு.. நாங்க தூங்கும்போது எங்க கூடவே கதை பேசி தூங்கிட்டு.. எங்களோடவே இருத்தீங்களா என்ன? நீங்களும் உங்க போனும் கூடவே உங்க கள்ளக்காதலியும் தானே இருந்தீங்க? இப்பவும் அதே மாதிரி இருப்பதற்கு என்ன?”
“அந்த வார்த்தையை சொல்லாதடி” என்று அவன் கலங்கி துடிக்க..
“ஒரு முறை அல்ல ஓராயிரம் முறை சொல்வேன் அவ உன் கள்ளக்காதலி..! இப்ப மட்டும் ஏன் பொண்டாட்டி பிள்ளை எல்லாம் உங்களுக்கு வேணும்னு தோணுது? எப்போதும் போல நீங்க நீங்களாவே இருங்க மிஸ்டர் நிரஞ்சன்.. நாங்க நாங்களாகவே இருக்கோம். என் வேலை தடைபடுது.. தள்ளுங்க” என்றவள், விறுவிறுவென்று அவன் கொடுத்த காஃபியை கண்களால் கூட சீண்டாமல் சமையலறை சென்று தன் காலை வேலையை ஆரம்பித்தாள்.
அவள் சென்றதும் அதே இடத்தில் அப்படியே அமர்ந்திருந்தவன் “நீ எத்தனை முறை என்னை திட்டினாலும் எனக்கு வலிக்காது டி. ஏன்னா இது செத்த பாம்பு..! நீ தானே திட்டுற திட்டிக்கோ.. ஆனாலும் இனி ஒரு முறை அந்த தனிமை வனவாசத்தை என்னால் அனுபவிக்க முடியாது. நீ திட்டினாலும் அடித்தாலும் காரி உமிழ்ந்தாலும் இனி உன்னோடு தான். இங்கேதான் உன்னோட தான் நம்ம பிள்ளைகளோட தான் இருப்பேன்..!” என்று முடிவு எடுத்தவன் மிருவை எழுப்பி வழக்கம் போல அவளை பள்ளிக்கு தயார் செய்தான்.
காலை உணவை முடித்தவள் அறையில் வந்து பார்க்க மகளுக்கு யூனிபார்ம் அயர்ன் செய்து கொடுத்துக் கொண்டிருந்தான் நிரஞ்சன்.
“இவனை..” என்ற பல்லை கடித்தவள், மகளின் முகத்தில் இருக்கும் அந்த சந்தோஷத்தை பார்த்துவிட்டு அமைதியாக சென்று மாமியாருக்கு காலை காஃபி கொடுத்தாள். அவள் கொடுத்த காஃபியை மூக்கு அருகே வைத்து ஆழ்ந்த மணத்தை சுவாசித்தவர் “ரொம்ப நாளாச்சு வதனி” என்று ரசித்து ருசித்து குடித்தார்.
அவரைப் பார்க்கவும் பாவமாகத்தான் இருந்தது. “ஆனாலும்…” தலையை உலுக்கிக்கொண்டு இவள் வேகமாக மகளுக்கு மதிய உணவு கட்டுக்கொடுத்து, காலை உணவு எடுத்து வந்து வைக்க..
மகளோடு அவனுமே கிளம்பி வந்து இருந்திருந்தான்.
அவள் ஒரு தட்டு தான் வைத்திருந்தாள் பிள்ளைக்கு மட்டும். இவன் கேட்க கூட இல்லை அவனாக சென்று சமையலறையில் இருந்து தனக்கு தட்டு எடுத்து வந்து சாப்பாட்டு போட்டு சாப்பிட்டவன், அம்மாவிடம் “நீங்கள் சாப்பிட்டீர்களா அம்மா?” என்று கேட்க..
“இல்லப்பா நீ சாப்பிட்டு பேங்க் கிளம்பு. நான் வதனி கூட சாப்பிட்டுக்குறேன்” என்றார்.
“பை மேகா.. வரேன் மா” என்றவன் மகளை கைப்பிடித்து அழைத்துச் செல்ல..
அவன் பின்னே கீழே வந்தவள் அவன் கார் எடுக்கும் சமயம் மகளின் கை பிடித்து விறுவிறுவென்று அழைத்துக் கொண்டு நடந்து சென்றாள்.
“முதலில் எங்கே செல்கிறாள் இப்படி வேகமாக? ஏன் இப்படி செய்கிறாள்?” என்று புரியவே இல்லை நிரஞ்சனுக்கு.
“நான் அழைத்துக் கொண்டு போக கூடாதா என் பிள்ளை தானே அவ?” என்று காரில் சாய்ந்தவாறு வருத்தமாக யோசித்தவனுக்கு அப்புறம் தான் காரின் ஞாபகமும், அதற்கு வதனி சொன்னது ஞாபகம் வர.. “ஓ ஷிட்..!” தன்னைத்தானே நொந்தவன்,
“ம்ப்ச்..” என்று தலையடித்துக் கொண்டவன், “மேகா… மேகா…” என்று அவள் பின்னாலேயே ஓடினான்.
"ப்ளீஸ் மேகா.. பாரு நான் சொல்றதை கேளு அந்த வண்டிய என்னால ஒருத்தன் கிட்டேயும் விக்க முடியல.. நானும் ட்ரை பண்ணிட்டு தான் இருக்கேன். ஒரு ரெண்டு மாசம் பொறுத்துக்கோ.. ஏதாவது நல்ல விலைக்கு வந்தா கொடுத்துடறேன்" என்றதும் அவளை தீர்க்கமாக பார்த்தவள்,
"நீ உன் கள்ள காதலிக்க வாங்கின கார்.. அதுக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. எனக்கும் என் பிள்ளைகளுக்கும் அது தேவையும் கிடையாது. என்னால முடிஞ்சா டூவீலர்ல போவேன் இல்லைன்னா ஆட்டோவில் கூட்டிட்டு போக முடியும். உன் வேலைய பாத்துட்டு போ" என்று மகளுக்கு கேட்காத குரலில் கடிந்தவள்,
மகளிடம் திரும்பி "அப்பா காரு ரிப்பேரு. நாம ஆட்டோவுல போகலாம் சரியா?" என்று காலையில் காரில் செல்லலாம் என்று சந்தோஷமாக வந்த மகளின் முகம் வருத்தம் அடைவதை பார்க்க சகிக்காதவள் மகளுக்கு சமாதானம் கூறினாள் கணவனை முறைத்துக் கொண்டே..
பின் மகளை அங்கு வந்த ஆட்டோவில் ஏற்றி பள்ளிக்கு அழைத்து சென்றாள்.
தொடரும்..
