9
மறுநாள் காலையில் சற்றே பதற்றத்தோடு காணப்பட்டாள் ரதி. காரணம் நேற்று இரவு கண்ட கனவின் தாக்கம்..!
காலையில் இருந்து அவள் எது செய்தாலும் அதில் கவனம் இல்லை. கையில் எடுத்த பொருட்கள் எல்லாம் தவறி கீழே விழுந்தது.. விழுந்த பொருட்களை எடுப்பதற்கு பதில் வேற பொருட்களை எடுத்தாள்.. குளியலறைக்கு செல்வதற்கு பதில் சமயலறையில் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்தாள் குளிப்பதற்கு..
இவ்வாறாக அவள் செய்துக் கொண்டிருந்தவற்றை கவனித்துக் கொண்டிருந்த ராகவ் ஒரு கட்டத்திற்கு மேல் கடுப்பாகி, அவள் பிடித்துக் கொண்டு இருந்த தண்ணீரை எடுத்து அவள் முகத்திலே ஊற்றினான். குளிர்ந்த தண்ணீரில் சில்லென்று உடல் அதிர தம்பியை முறைத்தாள்.
“ஏன் டா என் மேல தண்ணிய ஊத்தின.. லூசு.. லூசு...” என்று கடுப்படித்தாள்.
“யாரு லூசு? நானா நீயா? என்னை முறைக்காத..! நீ என்ன பண்ணிட்டு இருக்க மார்னிங்ல இருந்து. நானும் கவனிச்சிட்டு தான் இருக்கேன். ஆனா உன் கவனம் நீ செய்ற வேலையில இல்ல.. அப்படி என்ன நினைப்பு உனக்கு ரதி?” என்று அவன் கோபமாக ஆரம்பித்து ஆற்றாமையாக கேட்டான்.
“இன்னைக்கு அந்த வக்கீல் வர சொல்லி இருக்காரு டா.. அதான் ஒரே நெர்வஸ்ஸா இருக்கு” என்றதும் தலையை இடவலமாக ஆட்டிக் கொண்டு சென்ற தம்பியை பிடித்து நிறுத்தினாள் ரதி.
அவள் கையை தட்டி விட்டவன், “மொதல்ல போய் குளி.. ஈரத்தோட நிக்குற, அப்புறம் சளி பிடிக்கும். சளி ரொம்ப ஆச்சுனா உனக்கு வீஸிங் வரும் ரதி” என்றவனின் அதட்டலில்,
“நான் சொல்றதை ஒரு நிமிஷம் காது கொடுத்து கேட்டா தான் என்ன?” என்றவள் கோபத்தோடு குளித்துவிட்டு உடைமாற்றி வர இருவருக்கமான உணவை எடுத்து பேக் செய்துக் கொண்டு இருந்தான் ராகவ்.
“அய்யய்யோ..! காலையில நம்ம சமைக்கலையே.. இவன் என்ன செஞ்சு வைச்சிருக்கான் தெரியலையே?” என்றவள் வந்து பார்க்க அங்கே உப்புமா அவளை பார்த்து பல்லு இளித்தது.
“டேய்.. உப்புமாவா?” என்று அவள் சிணுங்கலாக கூறி முகத்தை சுழிக்க..
“ஆமா.. உப்புமா தான்..! என்னால அது தான் செய்ய முடிஞ்சது. இன்னைக்கு எனக்கு எக்ஸாம்.. நீ காலை டிபன் செய்வனு பார்த்தா காலைல இருந்து நீ ட்ரீம்லயே சுத்திக்கிட்டு இருக்க.. இன்னைக்கு உனக்கு பனிஷ்மென்ட் உப்புமா தான்..! எனக்கு தெரியாம கேண்டின்ல ஏதாவது வாங்கி சாப்பிட்டனு தெரிஞ்சுது தொலைச்சிட்டேன் உன்னை பார்த்துக்கோ..!” என்றவன் அக்காவை மிரட்டி இருவருக்கும் லஞ்ச் பேக் செய்து வைத்தவன், காலை உணவாக நூடுல்ஸை அவள் தட்டில் வைத்தான்.
“அய் நூடுல்ஸ்..! தாங்க்ஸ் டா தம்பி” என்றவள் அவன் கன்னம் கிள்ளி கொஞ்ச…
“ரொம்ப கொஞ்சாத.. சீக்கிரம் சாப்பிட்டு கிளம்பு.!” என்றவன் தானும் சாப்பிட, அவளோ மீண்டும் கதிர்காமன் புகழை பாடினாள்.
“அவர் எவ்ளோ பெரிய லீடிங் லாயர் தெரியுமா? கண்டிப்பா நம்ம வீடு நமக்கு கிடைச்சிடும்னு அவரை பார்த்ததுமே எனக்கு நம்பிக்கை வந்துடுச்சுடா ராகவ். ஆனா.. அவர்கிட்ட பேச தான் எனக்கு கொஞ்சம் பயமா நெர்வசா இருக்குடா.. அவரை பார்த்தாலே கை கால் எல்லாம் நடுங்குது நாக்கு டைப்ரைட்டிங் அடிக்குது” என்று பாவமாக முகத்தை வைத்து கூறினாள் ரதி.
“நீ எல்லாம் லா காலேஜ் ஸ்டுடென்ட்.. வருங்கால லாயர்னு வெளியில சொல்லாத..! கை கால் எல்லாம் நடுங்குதாம். நாக்கு டைப்ரேட்டிங் அடிக்குதாம்.. நாளைக்கு இவரே உனக்கு எதிர்க்கட்சி வக்கீலா வந்து ஆஜரானா அப்ப என்ன பண்ணுவ நீ?” என்று கேட்க அவளோ திரு திருவென்று விழித்தாள்.
“நம்மை விட யாரும் பெரியவங்க இல்ல.. அதே சமயம் நமக்கு விட யாரும் சின்னவங்களும் இல்ல..! புரியுதா? எல்லாரையும் மரியாதையான தூரத்துல பார்த்தா போதும்..! இப்படி பயந்து நடுங்கற அளவு எல்லாம் பார்க்காத..!” என்று அறிவுரை கூறியவனை ஆச்சரியமாக பார்த்தாள் ரதி.
“சீக்கிரம் கிளம்பு டிரெயினுக்கு டைம் ஆகுது” என்று அவன் வேகமாக சாப்பிட இவளுக்கோ மீண்டும் மீண்டும் ஞாபகம் எல்லாம் இந்த வீட்டிலும் இன்றைக்கு சந்திக்க போகும் கதிர்காமன் மீதுமே இருந்தது ரதிக்கு. சாப்பிடாமல் தட்டை அளந்துக் கொண்டிருந்தாள்.
“யக்கோவ்.. ரதி.. திரும்பவும் ட்ரீம்ஸா?” என்று அவன் சற்று கோபமாய் கேட்க..
“அக்கா ஒன்னும் ட்ரீம்ஸ்ல சுத்தலடா என்னோட ட்ரீம் எல்லாம் நம்மளோட இந்த சொந்த வீடு தான்..! ஒரு பழமொழி ஒன்னு இருக்கு தெரியுமா?” என்ற அவள் தம்பியை பார்க்க அவனும் சொல்லு என்பது போல பார்த்தான்.
“எலி வலையானாலும் தனி வலைனு அது போல நமக்கே நமக்கென ஒரு வீடு. இது எந்நாளும் நம்ம கைவிட்டு போய்ட கூடாது ராகவ். அதுக்கு தான் நான் இவ்வளவு கஷ்டப்படுறேன்” என்ற அக்காவை நிமிர்ந்து பார்த்தவன்
ஒன்றும் சொல்லாமல் சாப்பிட்டுக் கொண்டிருக்க..
“என்னடா நான் இவ்வளவு சொல்றேன். இந்த வீட்டுக்காக இவ்வளவு பரிதவிக்கிறேன்.. நீ ஒண்ணுமே பேசாம சாப்பிட்டுக்கிட்டே இருக்கியே?” என்று ஆதங்கமாக கேட்டாள் ரதி.
“என்னை வேற என்ன செய்ய சொல்ற? இப்ப நம்ம ரெண்டு பேரும் எந்த சிச்சுவேஷன்ல இருக்கோம் தெரியுமா? நான் +2..! நீ காலேஜ் ஃபைனல் இயர்..! இது ரெண்டு பேருக்கும் ரொம்ப ரொம்ப இம்போர்டன்ட்டான டைம். இதுல தான் ரெண்டு பேருடைய ஃபியூச்சர் கேரியரே இருக்கு. இந்த வீடு நமக்கு ரொம்ப ரொம்ப முக்கியம் தான். நம்ம அம்மாவோட நினைவா நம்ம கிட்ட இருக்கிறது தான்.. நான் இல்லைன்னு சொல்லல? அதுக்காக அவ்ளோ பெரிய கார்ப்பரேட்டோட சண்டை போட்டு எதிர்த்து ஜெயிக்கிறது நாம ஒன்னும் படத்துல வர ஹீரோவோ.. ஹீரோயினோ கிடையாது ரதி..! சாமானிய மனுஷனுங்க..! இதை நான் உனக்கு எவ்வளவு தான் எடுத்து சொன்னாலும் நீ புரிஞ்சுக்க மாட்டேங்குற ரதி..!” என்றான் வருத்தமான குரலோடு.
“எல்லா கார்ப்பரேட்டையும் ஒரு வகையில் ஆட்டி படைக்கிறது ஒரு சாமானிய மனுஷன் தான்டா. ஒரு சிறு உளி போதும் எவ்வளவு பெரிய மலையையும் உடைச்சு தள்ள..!” என்று அவள் மீண்டும் பழமொழியாய் விளாச..
“வாய மூடு..! அவ்வளவு பெரிய மலையை ஒரு சின்ன உளிய வச்சு எவ்வளவு நாளைக்கு நீ உட்கார்ந்து தட்டிக்கிட்டே இருக்க போற? சொல்லு..! அதோட உன்னோட காலமே முடிஞ்சிடும். நமக்கும் லைஃப் இருக்கு ரதி.. அம்மாவோட கனவு இந்த வீடுதான்..! இல்லைன்னு சொல்லல.. இப்போ அவங்களே இருந்தாலுமே வீடா புள்ளைங்களானு கேட்டா கண்டிப்பா நம்ம வாழ்க்கை தான் அவங்களோட ஃபர்ஸ்ட் ப்ரீயாரிட்டியா இருக்கும். இப்ப அம்மா இருந்தா என்ன பண்ணி இருப்பாங்க தெரியுமா?" என்று கேட்டதும் அவள் முறைத்துக் கொண்டே அவனைப் பார்த்து இல்லை என்று தலையாட்டினாள்.
“அந்த கார்ப்பரேட்காரன் கிட்ட இந்த வீட்டுக்கு இன்னும் கொஞ்சம் பேரம் பேசி.. வீட்டை அவன் கிட்ட வித்துட்டு, அவன் கொடுக்கிற பணத்தை நம்ம பேர்ல டெபாசிட் பண்ணிட்டு, அழகா வாடகை வீட்டில் வந்து இருந்திருப்பாங்க..! அடுத்து நம்ம லைஃப்க்கு என்னன்னு திட்டம் போட்டு இருப்பாங்க.. இதுதான் ஃபேக்ட்..! இதுதான் நிதர்சனம் ரதி”
அவன் சொல்வதும் ஏற்புடையதாக தான் இருந்தது ரதிக்கு கண்டிப்பாக அவர்களின் அம்மா இருந்தால் இதை தான் செய்திருப்பார்.
“இதெல்லாம் எப்போ உன் மண்டையில நீ ஏத்திக்க போறனு தெரியல.. எனக்கு டைம் ஆச்சு நான் கிளம்புறேன். நீ பத்திரமா போயிட்டு எனக்கு ஒரு மெசேஜ் போடு. ஈவினிங் எங்கேயும் தனியா சுத்த கூடாது. ரத்னா அக்காவுடன் தான் போகணும்.. ரத்னா அக்காகிட்ட நான் ஃபோ
ன் பண்ணி கேட்பேன்” என்று தமையனாய் அவளை மிரட்டி விட்டுச் சென்ற ராகவ்வை பெருமையோடு பார்த்தாள் ரதி.
தொடரும்..
