தேன்மழை 💞 - (32)

 

(@priyadinesh)
Member Moderator
Joined: 4 months ago
Messages: 44
Thread starter  

அவனிருக்கும் மன நிலையில் என்ன செய்தாலும் நம்ப போவதில்லை என தீர்மானித்தவள், அங்கிருந்து கிளம்பிட நினைத்தாள். அவனது அறை நோக்கி ஓடியவள், லக்கேஜ்ஜோடு வெளியே வந்தாள்.

அளவான போதையில் இருந்தவனை, நிதானமற்று இருப்பதாக அவளே முடிவெடுத்துக் கொண்டாள்.

அவனோடு தர்க்கம் செய்வது எவ்வித பலனில்லை என யோசித்தவள், வாயிற் கதவை திறக்கும் நேரம் அழைத்தான்.

"மேடம் எங்க கிளம்பிட்டிங்க? ஓஹ்.. வெளிநடப்பா? சரி சரி.. போயிட்டு வாங்க.. கௌதமனுக்கு கால் பண்ணுறேன் ஒரு வார்த்தை சொல்லிட்டு போங்க.." என்றவன் போனை எடுக்க செல்ல துணுக்குற்றாள்.

"ஏன் இப்படி பண்ணுறீங்க?" என்றவள் ஓடி வந்து அவனிடம் மொபைலை பறிக்க, அதற்குள் அவள் அப்பாவிற்கு போன் செய்து விட்டான்.

"தம்பி நல்லாருக்கீங்ளா? ஹலோ.. தம்பி.." என்ற தந்தை குரல் கேட்டு நடுங்கி போனாள். இவன் வேறு என்ன கூற உள்ளானோ என்னும் அச்சத்தில்.

"உங்க பொண்ணு.." என அவன் கூற வரும் நொடி மொபைலை முழு மூச்சோடு பறித்து விசிறியடித்தாள்.

"ஏன்.. ஏன் இப்படி பண்ணுறீங்க? நான் போலாம்ன்னு தானே கிளம்புனேன்.. அப்பறம் ஏன் அப்பாக்கு கால் பண்ணனும்?"

"என்ன மா கேள்வி இது? உன் அப்பா தானே உன்னை கல்யாணம் பண்ணி வச்சாரு. நானா உன்னை லவ் மேரேஜ் பண்ணேன்?" என்றவன் புருவம் உயர்த்தி சிரிக்க..

அவனது கூற்றில், தனது நிராகரிப்பால் உண்டான கோவத்தை உணர்ந்து கொண்டாள்.

அழுது கொண்டே துவண்டு போய் சோபாவில் அமர்ந்து விட்டாள். அவனோ, எதையும் சட்டை செய்யாது அறை நோக்கி சென்று விட்டான்.

முன்பெல்லாம் அழுதாலே, அத்தனை முத்தமிட்டு கொஞ்சி சமன் செய்பவனை இப்படி தலைகீழாக மாற்றி விட்டதை எண்ணி நொந்தவள் வெகு நேரம் அழுகைக்கு பின் உறங்கி போனாள்.

ஒவ்வொரு நாளும் அவனிடம் மாற்றம் வரும் என எதிர்பார்த்தவளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. பிரதீஷும் குடித்து விட்டு அன்று பேசியதை எண்ணி தனியே நொந்து கொண்டவன், இனி அவளிடம் எக்காரணம் கொண்டும் பேசக்கூடாது என தீர்மானித்து விட்டான்.

திருமணமாகி இரண்டு மாதங்கள் கடந்திருக்க, அவன் கோவம் மட்டும் குறையாதிருப்பதில் ஆச்சர்யமும் அதிர்ச்சியும் வராத நொடியில்லை.

ஒரு வார்த்தை பேசுவது என்ன, திரும்பிக் கூட பாராது சென்று விடுவான். ஆனால், அவள் மட்டும் வீட்டை விட்டு செல்லக்கூடாது என நினைத்தான் ரோஷக்காரன். இந்த இரண்டு மாதங்களில் அவள் மூன்று முறை ஊருக்கு சென்று வந்ததில் அதிலே ஒருமாதம் அங்கு கடத்தினாள்.

அவள் ஒருமுறை கூட அவளது வீட்டிற்கு செல்லவில்லை. ஒவ்வொரு முறை ஊருக்கு சென்ற போதும் பாலக்காடில் இருப்பதாக கூறியே அன்னையிடம் பொய்யுரைத்தாள்.

அன்னையும் அவள் பொய்யுரைப்பது அறிந்து, மருமகன் தான் தனது மூத்த மகளை நினைவில் வைத்துக் கொண்டு போகக் கூடாது என்று கட்டளை விதித்து விட்டதாக எண்ணினார்.

மகளை காண வேண்டுமென நினைத்த கௌதமன், வீட்டிற்கு வருவதாக அனுமதி கேட்க மருமகனோ அத்தனை கனிவோடு வர கூறினான். அவர் வருகையை அன்னை உரைக்க, காலையிலே ஷூட்டிங் கிளம்பி சென்று விட்டாள். முதன் முறையாக வந்தவர், பிரதீஷ் வீட்டை பார்த்து நெகிழ்ந்து போனார்.

அவனுக்கும் வார விடுமுறை என்பதால், அவரை கவனிக்க வேண்டிய பொறுப்பு அவனது ஆனது.

"மாப்பிளை நீங்க போய் இதெல்லாம் பண்ணுறீங்க? ராசிகா இல்லை?" என்றவர் அவன் போட்டுக் கொண்டிருந்த டீக்கு வடிகட்டி எடுத்து கொடுத்து, ஒத்தாசை செய்தார்.

"மாமா.. அவ ஃபிரண்ட்க்கு இன்னேக்கி ரிஷப்ஷன்.. அப்பா வராரு போகலைன்னு சொன்னா.. நான் தான் போயிட்டு சீக்கிரம் வந்திடு.. நான் பாத்துக்கிறேன்னு சொல்லி வழியனுப்பி வச்சேன்.." என சமயோசிதமாக பொய்யுரைத்தான்.

"பரவாயில்ல மாப்பிளை.. அதுனால என்ன வரட்டும் பாத்துட்டு போறேன்.. ஊருக்கு வர சொன்னேன்.. உங்களுக்கு லீவ் இல்லைன்னு சொன்னா.."

"ஆமா.. மாமா அடிக்கடி லீவ் எடுக்க முடியாது. இந்த ஒரு நாள் மட்டும் தான் எப்பவும் லீவ். தப்பா நினைச்சுக்காதீங்க. அடுத்த மாசம் வரேன்."

அவரும் தலையசைப்பை குடுத்து விட்டு, அவனோடு பேச்சை தொடர்ந்தார். வந்தவருக்கு அவனே மதிய சப்பாடை தயார் செய்ய போக அவருக்கு தான் தர்ம சங்கடமாக இருந்தது. அதெல்லாம் வேணாம் என்றவர் கிளம்பிட எத்தனித்தார்.

"இவ்வளவு நேரம் இருந்துட்டு சாப்பிடாம போனா எப்படி மாமா? கொஞ்சம் நேரம் இருங்க ராசிகா வந்துடுவா.."

"இல்லை மாப்பிளை நான் நாளைக்கு வரேன். ராசிகா அத்தை வீட்டுல தான் இருக்கேன். வரவும் சொல்லுங்க நானே வந்து பாக்குறேன்."

ஆடவனுக்கோ மனைவி மீது கனலான கோவம் தலை தூக்கியது. விடியற்காலை சென்றவள் எங்கே சென்றாள் என்னும் யோசனையில் குழம்பி நின்றான்.

கௌதமன் தயங்கியப்படி, "மாப்பிளை ஒன்னு கேக்குறேன்னு தப்பா நினைச்சுக்காதீங்க.." என பீடிகையிட அவனுக்கு தான் ஒன்றும் பிடிபடவில்லை.

"சொல்லுங்க மாமா.."

"இல்லை.. உங்களுக்கு எங்க மேல எதுவும் கோவம் இல்லையே?"

அந்நொடி அவன் சிந்தனைக்கு வந்தது குழலியவள் பிரிவினை பற்றி கூறியிருப்பாளா என்னும் யோசனை தான்.

"மாமா.. நான் அப்படிலாம் எதுவும் இது வரை நினைக்கல."

"இல்லை மாப்பிளை.. ஏன் கேக்குறேன்னா.." என்றவர் விடயத்தை கூறலாமா என தயக்கமாக மருமகனை காண..

"எதுனாலும் சொல்லுங்க மாமா.. சில விஷயங்களுக்கு பேசாம தீர்வு வராது.." என தெம்பூட்டும் விதமாக கூறியதில் தயக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டு வினவினார்.

"இல்லை தம்பி நீங்க எதுவும் ராசிகாவை எங்க வீட்டுக்கு வரக்கூடாதுன்னு சொல்லிடீங்களா? ஊருக்கு வந்தப்போ கூட உங்க அம்மாவோட ராசிகாவை கோவில்ல பாத்தேன். வீட்டுக்கு வாம்மான்னு சொன்னேன்.

ஏனோ தெரிய வரல. அப்பறம் அவ அம்மா கூப்பிட்டதுக்கும் உங்களுக்கு லீவ் இல்லைன்னு சொன்னா. உங்களுக்கு லீவ் இல்லைனாலும், ஊருக்கு வந்த பொண்ணு ஒரு எட்டு வரலாமே.

அப்பறம் போன வாரம் பிருந்தா கூட ரொம்ப நேரமா போன்ல பேசுனா. பிருந்தாவும் கோவமா பேச, ராசிகாவும் பதிலுக்கு ஏதோ பேசுனதா மட்டும் ராணி சொன்னா.

ஏதோ சூழ்நிலையில இந்த கல்யாணம் நடந்துருக்கலாம். பிடிக்காம நடந்துருந்தாலும், நீங்க கொஞ்சம் கோவத்தை விட்டுருங்க தம்பி. ரெண்டு பொண்ணையும் ரொம்ப செல்லமா வளத்தேன்.

அன்னேக்கி எதிர்பாராத நிலையில உங்க கூட கல்யாணம் பண்ணி வச்சுட்டேன். அதுனால தான் வீட்டுக்கு வர மாட்டுறாளா? இல்லை எங்க மேல வெறுப்பு வந்துடுச்சா தெரியல. இப்போ கூட நான் வர்றது தெரியும்.

இருந்தும் அவ இவ்வளவு நேரம் வராம இருக்கான்னா ஒன்னும் புரியல. நீங்களும் நான் பேசுனதை கேட்டுக்க வேணாம் அவகிட்ட.

நீங்க ரெண்டு பேரும் சந்தோஷமா இருந்தாலே எனக்கு போதும். என் பொண்ணு என் பேச்சை கேட்பான்னு இந்த கல்யாணத்துல தான் நானே நம்புனேன். இந்த விளம்பரம்லாம் வேணாம்ன்னு, சொன்னப்போ கூட பிடிவாதமா நடிச்சா.

அதெல்லாம் வச்சு நான் அவளை அடங்காத பொண்ணுன்னு தப்பு கணக்கு போட்டேன். நான் சொன்ன ஒரு வார்த்தைக்கு உங்களை கல்யணம் பண்ண சம்மதிக்கவும் தான் எனக்கே மனசு நிறைஞ்சிடுச்சு." என்றவர் கண்ணில் நீர் சுரக்கவும், அவனுக்கும் மனம் கனத்தது.

தானும் இவ்விடயத்தில் கோவம் என்பதை மையப்படுத்தி தவறு செய்து விட்டோமோ என யோசித்தவன் புருவம் சுருங்கியது.

"தம்பி.. நான் எதுவும் தப்பா சொல்லிட்டேனா?"

"ஐயோ மாமா.. நாங்க நல்லா தான் இருக்கோம்.. ராசிகா என்ன மனநிலையில இப்படி பண்ணுறான்னு தெரியல. நான் பேசுறேன் அவகிட்ட. நெக்ஸ்ட் மந்த் ஊருக்கு கூட்டிட்டு வரேன். நீங்க கவலைப்படாதீங்க மாமா.." என்றவன் அவரது உள்ளங்கை பற்ற, அதில் நெகிழ்ந்தவர் மருமகனிடம் விடைபெற்று கிளம்பி விட்டார்.

அவர் கிளம்பிய பின் ஆயாசமாக அமர்ந்தவன் எண்ணங்கள் சுழலில் சிக்கி தவித்தது.

'பேசியவளே நிம்மதியாக இருக்கும் போது, தான் காதலித்தவளை ஏன் வெறுக்க வேண்டும். அத்தனையும் தனது தாத்தாவின் சதியினால் தானே நடந்தது.

அவளும் குடும்ப சூழ்நிலை காரணம் கருதி, இப்படியொரு நிர்பந்தத்திற்கு ஆளாகி விட்டாள். எது, எப்படியோ தான் கொண்ட காதலுக்கு திருமணமே அனைவரின் ஆசிப்படி நடந்து விட்டது.

இதன் பின் அவளை வெறுப்பது தான், அவளின் கோவம் குடும்பத்தின் மீது திரும்பியதோ. அதனால் தான் அப்பாவை கூட காணாமல் எங்கோ சென்று விட்டாளோ..' என தீவிர யோசனையில் இருந்தவன் நெற்றி ரேகைகள் தெரிவதை, உள்ளே நுழைந்த மணவாளினி கண்டும் காணாதும் தான் சென்றாள்.

ஏன் வில்லங்கத்தை விலைக்கு வாங்கி தன் தலையில் ஏற்றிக் கொள்ள வேண்டும் என்னும் யோசனையில் அவனை கடைக்கண்ணால் அளந்தப்படி நகர்ந்து விட்டாள்.

அவள் தன் முன் கடந்து சென்றதை கூட அறியாதவன், அவள் அடுக்களையில் ஏதோ உருட்டும் சத்தம் கேட்டு தான் திடுக்கிட்டு வேகமாக சென்று எட்டி பார்த்தான்.

நாயகியோ, புத்துணர்ச்சியோடு அடுப்பை பற்ற வைத்து தேநீர் தயாரிக்க ஆயத்தமானாள்.

'இவ எப்போ வந்தா?' என யோசித்தவன் உதடுகள் தன்னையும் மீறி, "எப்போ.." என கேட்க வேண்டிய கேள்வியை வாய்க்கா தகராறு மறந்து கேட்டிட..

சட்டென சுதாரித்தவன் மூளை அவள் சண்டைக்காரி என்னும் நினைவை கொண்டு வர, ஓட்டமாக படியேறி ஓடுபவனை இடையில் கை வைத்து நின்றப்படி குழப்பமாக பார்த்தாள்.

"ஏதோ பேசுன மாதிரி இருந்துச்சே.. நம்மகிட்டயா.. வாய்ப்பில்லையே.. கெத்து குறைஞ்சிடாது.." என முனங்கியவள், வழக்கம் போல் அவனுக்கும் தேநீர் எடுத்து டீ பாயில் வைத்தாள்.

எப்போதும் அது கீழே தான் ஊற்றப்படும். பிடிவாதம் காரணமாக குடிக்க மாட்டான். அவளுக்கோ, அவனை தனியே விடுத்து உண்ணவோ எதுவும் குடிக்க கூட மனம் வராது.

சிறிது நேரத்திற்கு பின் வந்தவன், அவள் வழக்கம் போல் தனக்கென ஒரு கப்பில் டீ வைத்திருப்பதை பார்த்து விட்டு போன் பேசிக் கொண்டிருந்த மனைவியை இரண்டு மாதங்களுக்கு பின்பு தான் சீண்டி பார்க்க ஆசை வந்தது நாயகனுக்கு.

அதிலும் அவள் அவனது ஃபுல் ஹேண்ட் டி-ஷர்ட்டை அணிந்திருப்பதை மேய்ச்சல் நிலத்தை பார்ப்பது போல் பார்த்தான். எங்கு அவள் பார்த்து விட்டால் மானம் போய் விடுமோ என்னும் ரீதியில் சட்டென திரும்பிக் கொண்டு ஃபிரிட்ஜில்  இருந்த ஒயின் போத்தலை எடுத்தான் ஆடவன்.

அச்சத்தம் கேட்டு அவள் அவனை முறைத்து பார்க்க, அவனுக்கு தான் இம்முறைப்பில் குளுகுளுவென இருந்தது.

'இரு குடிக்கிறேன்.. அதோட நீ டோட்டல் காலி..' என எண்ணியவன் கூல் ட்ரிங்க்ஸ் குடிப்பது போல், டைனிங் டேபிள் மீது அவளுக்கு முதுகு காட்டி அமர்ந்து குடித்தான்.

போன் பேசியவளுக்கு புசுபுசுவென சினம் சிரசேறியது.

'இவனுக்கு ஏன் தான் வாரத்துல ஒரு நாள் லீவ் விடுறானுங்க? கேஸ் இருக்குன்னு போன் பண்ணி கூப்பிட கூடாதா..' என பொருமியவள் அவனை முறைப்பதை ஓரக்கண்ணால் பார்த்ததோடு, குரலும் உள்வாங்கியத்தை கவனித்தான்.

அதோடு நிறுத்ததாதவன் அவன் தனக்கென ஊற்றி வைத்திருந்த தேநீர் கோப்பையில் உள்ள தேநீரை அவள் முன்பே கீழே ஊற்றி விட்டு, ஓயினை ஊற்றி அவளுக்கு நேராக வைத்துச் சென்றான்.

அதனை கண்டவள் பட்டென போனை துண்டித்து விட்டு, ஆவேஷமாக அவன் பெயரை உச்சரிக்க வந்தவள் வேண்டாமென யோசித்து இறுக பல்லை கடித்துக் கொண்டு நின்றாள்.

அவனோ, சோபாவில் காலாட்டிக் கொண்டு அமர்ந்திருந்தான்.

அவன் செய்த செயல் ஏனென பாவி மகளுக்கு தான் அர்த்தம் புரியவில்லை. ஆனால், அவன் வேறொரு நோக்கத்தோடு தான் இதனை செய்தான்..

அவன் டீயினை கொட்டிய இடத்தை சுத்தம் செய்தவள், குளிக்க சென்றாள்.

குளித்து முடித்து வந்தவள் ஈரத்தலையை கூட துவட்டாது, போனை எடுப்பதும் வைப்பதுமாக இருப்பதை மொபைலை பார்ப்பது போல் பார்த்தான். சில நிமிடங்களுக்கு பின் அவனும் குளிக்க சென்று விட்டான்.

நீல வண்ண நிற சுடிதாரில், ஃப்ரீ ஹேர் விட்டு கிளம்பி நின்றிருந்தவள் போனை தேடுவதை கண்டு அவனுக்கோ கை தட்டி சிரிக்க வேண்டும் போலிருந்தது. சிரித்தால் சிக்கி விடுவேனே என யோசித்தவன், ஷார்ட்ஸ் பனியனுக்கு மாறிக் கொண்டான்.

அவள் அறை நோக்கி வரும் கொலுசு சத்தம் கேட்டு, ஏதோ தேடுவது போல் பாவனை செய்தான்.

'இவனே ஏதோ தேடிட்டுருக்கான்.. இப்போ போய் நான் என் போனை காணாம்ன்னு கேட்டா, என்னை கடிச்சே வச்சிடுவான்..' என யோசித்தவள் அவ்வறை முழுவதும் தேடி பார்த்தாள். எங்கும் போன் தென்படவில்லை.

'தேடு தேடு நல்லா தேடு.. எங்க தேடுனாலும் உன் மொபைல் கிடைக்காது..' என எண்ணி நகைப்பை அடக்கிக் கொண்டவன் ஏதோ மும்மரமாக இருப்பது போல் கேன்சர் சம்மந்தமாக மொபைலில் வீடியோ பார்த்துக் கொண்டிருந்தான்.

ஆனால் மனம் முழுவதும் அவள் பயன்படுத்திய ஃபெர்பியூம் என்னவாக இருக்கும் என்ற யோசனையே ஓடியது.

'இவன் கிட்ட எப்படி கேப்பேன்..' என யோசித்தவள் மிக தயக்கத்தோடு அவனை பார்த்தப்படி நிற்பதும் அவனுக்கும் தெரியும். இருந்தும் அவளை ஏறேடுத்து பார்க்காது இருந்தான்.

பட்டென யோசித்தவள், கண் முன் இருந்த டைரியில் கடகடவென எழுதி அவன் மபார்வை படும்படி வைத்தாள்.

"மை மொபைல் வாஸ் மிஸ்ஸிங். டிட் யூ சீன் இட் ஆர் நாட்?"

அதனை படித்து பார்த்தவனுக்கு குபீரென சிரிக்க வேண்டும் போலிருந்தது. சிரிப்பை அடக்கிக் கொண்டு, பதில் எழுதினான். அவள் கண்களோ சந்தோசத்தில் விரிந்தது. மொபைல் இருக்கும் இடம் இவனுக்கு தெரியும் என நினைத்து.

எழுதி முடித்தவன் டைரியை அவளை நோக்கி வைத்தான்.

ஆவலோடு படித்து பார்த்தவளுக்கோ அவனை அறைய வேண்டும் போல் இருந்தது. கூந்தலை பிடித்து ஆட்டிடக் கூட தோன்றியது.

"மை டவல் இஸ் ஆல்சோ மிஸ்ஸிங். ஐ டோன்ட் ஃபீல் கம்பஃர்டேபிள் டேக்கிங் வித்தவுட் ஷவர் இட். இப் யூ ஃபைன்ட இட் லெட் மீ க்நொவ். ஐ வாண்ட் டூ ஷவர் அகைன் மை டவல்."

'கருமம் பிடிச்சவன் உன் துண்டை காணாம்ன்னா போய் தேடு அதுக்கு நான் என்ன செய்ய? இதுல அது இல்லாம குளிச்ச மாதிரி இல்லையாம்.' என தலையில் அடிக்காத குறையாக நொந்து கொண்டு செல்பவளை ஓரக்கண்ணால் பார்த்தான்.

அவளுக்கும் அவன் பார்த்தது போன்ற உணர்வு தோன்றியது. அதே நொடி புது வித சிலிர்ப்பை உணர்ந்தாள்.

'இப்போ பாத்தா மாதிரி இருந்துச்சே.. நம்மளை தான் பாத்தானா? இல்லை பிரமையா?' என படியில் இறங்கியப்படி யோசித்தவள் ஷூட்டிங் செல்ல வேண்டியதை மறந்து விட்டாள்.

"லொகேஷனா அனுப்புற ஜனனி.. இனி இந்த போன் இருக்க வேண்டிய லொகேஷனே வேற.." என தானாக பேசிக்கொண்டவன் முதலில் கபோர்டில் அவனது ட்ரெஸ்க்கு அடியில் ஒளித்து வைத்தான்.

அதன் பின் அவள் இங்கு வந்து தேடி விட்டால் மாட்டிக் கொள்வோமே என நினைத்து, தனது உள் பனியனில் முதுகுக்கு பின்னால் போட்டுக் கொண்டு மெத்தையில் சாய்வாக அமர்ந்து கொண்டான்.

இன்றைய ஷூட்டிங்கிற்கு ஜனனி சிறிது நேரத்திற்கு பின் லொகேஷன் அனுப்புகிறேன் என்றாள் அவள் போனில் பேசும் போது. அதை கேட்டு கடுப்புற்றவன் தான், டீயை கீழே ஊற்றி விட்டு ஒயினை அந்த கப்பில் நிரப்பி சென்றான்.

இப்போது ஷூட்டிங் செல்ல முடியாது போனதில் தலையில் கை வைத்து அமர்ந்து விட்டாள்.

வீட்டில் இருந்த லேண்ட்லைன் எண்ணில் இருந்து அவளது மொபைலுக்கு அழைத்து பார்த்தாள் ரிங் ஆனது. ஆனால், சத்தம் வரவில்லை. அவன் தான் சைலன்டில் போட்டு விட்டானே.

'எங்க வச்சேன்? ஒருவேளை எடுத்து வச்சிருப்பானோ.. அவன்தான் ரோஷக்காரன் ஆச்சே.. எப்படி என் போனை தொடுவான்..' என தானே புலம்பிக் கொண்டு தீவிர யோசனையோடு குறுக்கும் நெடுக்கும் நடப்பவளை, படியில் ஒளிந்து நின்று எட்டி பார்த்தவனுக்கு சிரிப்பாக வந்தது.

சில நிமிடங்களுக்கு பின் அறை நோக்கி ஏதோ எடுக்க வந்தவள், அவன் குனிந்த நேரம் முதுகுக்கு பின்னால் தெரிந்த போனின் ஒளி கண்டு அதிர்ந்து போனாள்.

'அப்போ இது.. என் போனா? அடேய்.. என்ன டா.. போனை இப்படி ஒளிச்சு வச்சுருக்க.. என்ன ஆச்சு இவனுக்கு? மென்டல் சரி ஆயிடுச்சா.. இல்லை வேற எதுவும் வம்பிழுக்க முடிவு பண்ணிட்டானா?' என அவனை வெறிக்க பார்த்திருந்தவளுக்கு விஷயம் அறிந்து விட்டது என புரிந்து கொண்டான்.

அவளை நிமிர்ந்து பார்த்தவன், இரு புருவங்களை உயர்த்தி என்னவென கேட்டதில் பேதையவளுக்குள், ஒவ்வொரு அணு வரை மின்சாரம் பாய்ந்தது போல் இருந்தது.

திருமணம் முடிந்து இரண்டு மாதங்களுக்கு பின் அவன் பார்க்கும் முதல் பார்வையல்லவா. அவனையே அவதானித்திருந்தவள் விழிகள், அதிச்சியில் இமைக்க மறந்தது.

மீண்டும் அதே போல் இரு புருவம் உயர்த்தி என்னவென கேட்டான். நாயகியோ, அவனது செயலில் சித்தம் கலங்கியது போல் சிலையாக நின்றாள்.

அவளை நோக்கி சுருட்டப்பட்ட பேப்பரை விசிறியடித்தான். அதில் அவளுக்கு மேலும் பதட்டம் கூடியது.

அவனையே கைகள் பிசைய பார்த்திருந்தவளிடம், விழிகளை உருட்டி பேப்பரை எடு என்றவன் தனது தடித்த இதழை புன்னகை மலர ஈரமாக்கிக் கொண்டான்.

கணவன் செயலில் நடுங்கியவள் பேப்பரை எடுத்து பிரித்து படித்தாள். அதை படித்தவளுக்கு, விழிகள் இரண்டும் கோழி குண்டுகளாக விரிந்தது வெளியே தெறித்து விடுவது போல்.

"இப் யூ வாண்ட் யுவர் மொபைல்.. கிவ் மீ அ ம்வாஹ் அண்ட் டேக் இட்.."

தேன்மழை💖💖


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top