12
பஞ்சநதிக்குளம்!!
முற்காலத்தில் தேனி கம்பம் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்த ஐந்து நதிகள் தங்கள் பாவங்களைப் போக்க.. இத்தலத்தில் அருள்பாலித்த முக்தீஸ்வரரை வேண்டி தவமிருந்து அவர் கடாட்சம் பெற்று அங்கிருந்த தீர்த்தத்தில் மூழ்கி தங்களை பாவங்களை போக்கியதாக ஐதீகம்!! அதனால் அவ்வூருக்கு பஞ்சநதிக்குளம் என்ற பெயர்!!
ஆரம்பக் கட்டத்தில் ஒரே ஊராக இருந்த பஞ்சநதிக்குளம்.. காலப்போக்கில் குளத்திற்கு மறுபக்கம் இருந்த ஊரை கம்பங்கரை என்று வழங்கினர்.
ஊராக பிளவுபட்டத்தோடு மட்டுமல்லாமல் காலங்கள் செல்ல செல்ல ஜாதியின் பெயராலும் பிளவுபட்டு நின்றது. முற்காலத்தில் ஒரே பிரிவில் இருந்த சமூகத்தினர் தங்களுக்குள்ளேயே பிரிவு உட்பிரிவு என்று வைரஸ் போல சட்டென்று சட்டென்று பல்கி பிரிந்து இன்று பல பிரிவுகளாக நிற்கின்றனர்.
இரண்டு ஊர்களுக்கும் தனித்தனி தலைக்கட்டுகள் வந்தன..
அதன்பின் இரண்டு ஊர்களுக்கும் அடிக்கடி பிரச்சனைகளும் வந்தன..
அதிலும் முக்தீஸ்வரர் கோவில் திருவிழா எடுக்க என்றால்.. பெரும் வெட்டுக்குத்து நடந்து இரத்த ஆறு ஓடிய காலமும் உண்டு. அதன் பின் அரசாங்கம் இதில் தலையிட்டு இவர்கள் இவ்வாறு அடித்துக்கொண்டால் கோயிலை நிரந்தரமாக பூட்டி விடுவதாகவும் இல்லை கோவிலை அரசாங்கமே எடுத்துக் கொள்ளும் என்று ஆணை போட.. அதன்பின் இரண்டு ஊர்களும் தங்களுக்குள் ஒப்பந்தம் போட்டுக்கொண்டு வருடம் ஒரு ஊர் என்று விழா எடுக்க ஆரம்பித்தது.
ஒரு வழியா ஷதிருவிழா பிரச்சனை ஓய்ந்தது என்று அரசாங்கம் சற்று நிம்மதி அடைய.. அடுத்த பிரச்சனை பூதாகரமாக வெடித்தது. இந்த ஜாதி பிரச்சனை அதை ஒட்டி வந்த கௌரவக்கொலை பிரச்சனை.
முன்ன காலத்தில் கிராமத்து பெண்களை பெரும்பாலும் வீட்டுக்கள்ளேயே பூட்டி வைத்திருக்க..
காதல் கண்டு ஓடிய ஜோடிகளின் எண்ணிக்கை குறைவாகவும் கௌரவக் கொலைகளின் எண்ணிக்கையும் குறைவாகவே இருந்தது.
நாளாக நாளாக படிப்பறிவு மனிதர்களுக்கு வந்தாலும் பகுத்தறிவு இல்லாமல் தங்களையே பகுத்துப் பார்த்து வெட்டிக்கொண்டு சாய்ந்தனர் இந்த மதம் பிடித்த மனித மிருகங்கள்!!
அப்படியும் சில சமயம் இரு ஊருக்குள்ளும் சுமூக உறவை ஏற்படுத்த இரு ஊரில் உள்ள முக்கிய பிரமுகர்கள் தங்கள் குடும்பத்துக்குள் பெண் கொடுத்து பெண் எடுத்து என்று சில வழக்கங்களை வைத்திருந்தனர்.
நல்லது செய்ய என்று நாலு பேர் இருந்தால்.. நாசமாக்க வென்றே நாற்பது பேர் இருப்பார்கள் இந்த கலியுகத்தில்!!
அப்படியும் இவர்களை மீறி பல பிரச்சனைகள் நடந்து கொண்டேதான் இருந்தது. அதன்படி வடிவாம்பாள் அண்ணனான நாச்சிமுத்துவுக்கு தன் ஒன்று விட்ட தங்கையை பெண்கேட்டார் சற்குணம். அனைவரின் சம்மதத்தோடு பரிசம் போட்டு திருமணமும் நன்றாக நடந்தேறியது.
ஆனால் திருமணம் முடிந்த இரண்டாவது நாளே பஞ்சாயத்தின் முன் நின்றாள் அந்த பெண் மல்லிகா..
அதாகப்பட்டது தனக்கு நாச்சிமுத்து உடன் வாழ விருப்பமில்லை என்றும் தான் காதலித்தவரோடு என்னை சேர்த்து வையுங்கள் என்றும் புகார் செய்தார்.
ஆனால் பஞ்சாயத்துக்காரர்களோ அது முடியாது கல்யாணம் நடந்து விட்டது என்று மறுக்க..
மல்லிகாவோ நாச்சிமுத்து ஆம்பளையே இல்லையென்று அந்த சபையில் கூற.. அவளை பெற்றவர்களிலிருந்து ஒன்றுவிட்ட அண்ணனான சற்குணம் வரை எல்லோரும் ஆடித்தான் போனார்கள் அதை கேட்டு.
"உன் கிட்ட சம்மதம் கேட்டு தானே கல்யாணம் செய்தது. இப்படி திடீரென்று பேசி ஏன் எங்க மனதை வாங்குற?" என்று பெற்றவர் எவ்வளவு அடித்தும் வாயை திறக்காமல் ஊமையாகவே நின்றிருந்தாள் மல்லிகா. தன் காதலர் இப்படி செய்ய சொன்னார் என்பதை கூறாமல்..
வேறு வழியின்றி மல்லிகாவை அவன் காதலித்தவனோடு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். அப்புறம் தான் தெரிந்தது அது அம்பலவாணன் என்று!!
ஏற்கனவே ஊருக்குள் ஏதாவது பிரச்சனையை இழுத்துக் கொண்டு இருப்பதில் இவரும் இவரது நண்பர்கள் கூட்டமும் ஒன்று. "போயும் போயும் இவனையா காதலித்தாள்??" என்று நொந்து கொள்ள தான் முடிந்தது சற்குணத்தால் அந்நேரம்!! பின் தான் தெரிய வந்தது நாச்சிமுத்துவை அசிங்கப்படுத்த என்றே.. அம்பலவாணன் இவ்வாறு செய்திருப்பது சற்குணத்துக்கு.
அம்பலவாணனின் அண்ணனான அசோகனுக்கு தன் தங்கை கொடுத்து அவர் தங்கையை சற்குணம் மணந்து கொள்வதாய் ஒரு பேச்சுவார்த்தை ஓடிக் கொண்டிருந்த நிலையில்.. அம்பலவாணன் இந்த துரோகத்தால் தன் தங்கை யோகலட்சுமியை தன் நண்பனான நாச்சிமுத்துவுக்கே தானே முன் நின்று திருமணம் செய்து வைத்தார் சற்குண பாண்டியன்!!
சற்குணத்திற்கு ஆதரவாக இருக்கும் நாச்சிமுத்துவை அசிங்கப்படுத்தி அந்த வீட்டு இரு பெண்களையும் தங்கள் குடும்பத்திற்கு கொண்டு வந்து.. தங்கள் வீட்டு பெண்ணை அங்கே கட்டிக் கொடுத்து சற்குணத்தை ஆட்டி வைக்கலாம் என்று நினைத்துக் கொண்டிருந்த அம்பலவாணனின் வஞ்சக எண்ணமெல்லாம் தவிடுபொடியானது. அதே போல் அவர்கள் தங்கையை கட்டும் எண்ணத்தை விட்ட சற்குணம் நாச்சிமுத்துவின் தங்கை வடிவாம்பாளை மணந்துக் கொண்டார்.
அசோகனும் பெரிதாக இதற்கெல்லாம் கோபமோ வருத்தமோ காட்டவில்லை. சற்குணத்தை புரிந்துகொண்டு அவர் மரகதம் என்ற பெண்ணை அடுத்த வந்த நாளில் திருமணம் செய்து கொண்டவர், தங்கைக்கும் மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைத்தார்.
அதன்பிறகு சற்குணத்துக்கு வீரநெடுமாற பாண்டியனும்.. நாச்சிமுத்துவுக்கு தர்மராஜூவும்.. அசோகனுக்கு ஜெகந்நாதனும் பிறந்தனர். மூன்று வருடங்கள் கழித்து பூங்கொடி பூங்கோதை என்ற இரட்டையர்கள் சற்குணத்துக்கு பிறந்த பின்பும், யாரை ஆம்பள இல்லை என்று சொல்லி சென்றாளோ அந்த மல்லிகாவுக்கும் அவரை மணந்த அம்பலவாணனுக்கும் வெகுகாலம் குழந்தை இல்லாமல் பின் பிறந்தவளே அஸ்திராவதி!!
குழந்தை முதல் பள்ளிக்கு ஒன்றாக செல்லும் வீராவுக்கும் தர்மாவுக்கும் ஊருக்கு தெரியாத ரகசிய நட்பு தான் ஜெகந்நாதனும் அவனின் அத்தை பையன் சஞ்சயனும்.
சைக்கிளில் ஒன்றாகத்தான் செல்வார்கள். இடையில் ஜெகனும் சஞ்சயனும் வந்து இவர்களோடு இணைந்து கொள்வார்கள். அப்பொழுது பத்தாவது படித்துக் கொண்டிருந்த சமயம், ஐந்தாவது படிக்கும் தன் தங்கை அஸ்திராவையும் தன்னோடு அழைத்து வந்திருந்தான் ஜெகன்.
"என்னடா அதிசயமா இருக்கு?? எப்பொழுதும் உன் தங்க கால கீழ படாம உன் சித்தப்பா வண்டியில கொண்டுபோய் விட்டுட்டு கூட்டிட்டு வராவாரு. இன்னைக்கு என்ன உன் கூட வந்து இருக்கா?" என்று கேட்டான் அவன் ஜடையை இழுத்தப்படி வீரா..
"கொஞ்ச நாளு சித்தப்பா வெளியூர் போறாரு டா.. அதுவரைக்கும் இவளும் யேன் கூட சைக்கிள் வர ஆசப்பட்டா.. அதேன் நானு கூட்டியாந்தேன்" என்றான் ஜெகன்.
"இவளே குண்டு பூசணிக்கா மாதிரி இருக்கா.. நீயி இவள வைச்சு எப்படிடா சேர்த்து கூட்டிட்டு போவ?" என்று கிண்டல் செய்தாலும் ஏனோ அஸ்திரா மீது ஒரு பாசம் உண்டு வீராவுக்கு. ஆனாலும் அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் நித்தமும் அவளிடம் ஒரு சண்டை வம்பு என்று அவள் வெறுப்பை
கணக்கு வழக்கு இல்லாமல் சம்பாதித்துக் கொண்டிருந்தான் வீரா. அதுவும் அவளை கூப்பிடுவதே அணுக்குண்டு என்ற செல்லப்பபெயரோடு தான்!!
அதனால் சுத்தமாக வீராவை கண்டாலே பேச மாட்டாள் அஸ்திரா. கூடவே முணுக்கென்றாலும் கோபம் கொண்டு அவனை முறைத்துக் கொண்டே தான் அவர்களோடு இவளும் பள்ளிக்கு சைக்கிளிலேயே வருவாள்.
சிறிது நாட்கள் என்று கூறியவள் அதன் பிறகு அவளது அப்பாவை தாஜா செய்து தினமும் சைக்கிளில் தான் வந்து கொண்டிருந்தாள். புதிதாக சைக்கிள் வாங்கிக் கொண்டு..
மல்லிகா தான் "பொட்ட புள்ள சமைற வரைக்கும் தானே வெளிய தெருவ போக போகுது.. அதுக்கப்புறம் வண்டியில் போய் விடலாம்.. அதுவரைக்கும் அனுமதி கொடுங்க மாமா" என்று கேட்ட.. மல்லிகாவை அம்பலவாணனால் மறுக்க முடியவில்லை. அவருக்காக தாலிக் கட்டியவனை வேண்டாம் என்று வந்தவர், இன்னமும் தன் பிறந்த வீட்டை எட்டிப் பார்க்காமல் அவருடன் சுமூகமாக குடும்பம் நடத்துபவர், அதனால் அனுமதி அளித்தார் அம்பலவாணன்.
நால்வரோடு ஐவராக இவளும் சைக்கிளில் பள்ளிக்கூடத்திற்கு பயணித்தாள். இப்படியே ஒரு வருடம் போனது. இவளை நடுவில் விட்டு இரு பக்கமும் பின்னுமாக தான் மற்றவர்கள் செல்வார்கள். அன்றும் அதுபோல இவர்கள் சென்று கொண்டிருக்கும் போது.. வயலில் மேய்ந்து கொண்டிருந்த ஒத்தை காளைமாட்டை யாரோ விரட்ட.. அது வேகத்தோடும் மூர்க்கத்தோடும் திடீரென்று சாலைக்குள் பாய்ந்து இவர்கள் முன் நின்றது.
இதுபோல் அவ்வப்போது நிகழ்வதுதான் என்றாலும் சட்டென்று பயந்த அனைவரும் சைக்கிளை போட்டு விட்டு ஓடிவிட.. சிறிது தூரம் சென்று தான் கவனித்தான் வீரா அஸ்திரா அவர்களோடு வரவில்லை என்று!!
அவளது பாவாடை சைக்கிள் வீலில் மாட்டிக் கொள்ள... எதிரே பொசுபொசுவென்று மூச்சை விட்டவாறு காளை.. கூட வந்தவர்கள் அனைவரும் ஓடிவிட.. இவள் ஓட முடியாமல் பயத்தில் அழுகை பொங்க.. உதட்டை கடித்து மடித்து அப்படியே அமர்ந்திருந்தவளை நெருங்கியது காளை!!
வேகமாக ஓடி வந்த வீரா.. அந்த காளையின் மீது தன் பாட்டிலுள்ள தண்ணீரை ஊற்ற அது சிலிர்த்து சிலப்பி இவர்களை நெருங்கும் முன் அவளது பாவாடையை கிழித்து தன்னோடு அணைத்தவாறு அருகில் இருந்த வயலுக்குள் உருண்டு விட்டான்.
காளையும் இவர்களை காணாது மூர்க்கத்தோடு அங்கும் இங்கும் பார்த்து விட்டு மீண்டும் ஓடிவிட.. அதன்பின் பயந்து நடுங்கி தன்னோடு ஒட்டி கொண்டிருந்தவளை அணைத்து கொண்டு முதுகில் நீவி விட்டு.. "ஒன்னுமில்ல தீரா.. மாடு போய்டீச்சு பாரு.. பயப்படாத" என்று அவன் சமாதானம் செய்தான்.
மற்றவர்களும் வர, அவளிடம் மாடு மிரட்டியதை வீட்டில் சொல்லக்கூடாது சொன்னால் திரும்பவும் சைக்கிளில் அனுப்பமாட்டார்கள் என்று எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தான் வீரா. அது அவனுக்காகவா? இல்லை அவளுக்காகவா? என்ற புரியாத வயது!!
அன்று தன்னைக் காத்த வீராவின் மீது இனம் புரியாத ஒரு நம்பிக்கை பாதுகாப்பு தன்மை உண்டானது அஸ்திராவுக்கு. ஆனால் அதை எள்ளளவும் வெளியில் காட்டிக்கொள்ள மாட்டாள். திரும்பவும் அவர்கள் பாதையில் ஏதாவது வந்தாலோ வேறு எந்த பிரச்சனை என்றாலோ அவளது கண்கள் தானாக வீராவிடம் தான் செல்லும். அவன் கண்களை மூடி திறந்தால் போதும் அவளுக்குள் ஒரு புது தைரியம் பிரவாகம் எடுக்கும்.
ஆனால்.. அந்த நம்பிக்கை எல்லாம் போனது அவளுக்கு.. சஞ்சயனை உயிரற்ற உடலோடு வீராவின் அருகே பார்த்த
போது!!
ஆம் சஞ்சயன் தான் அஸ்திராவின் முன்னால் கணவன்!!
தீருமோ தாகம்!!
