அத்தியாயம் 21
திருப்பூரில் இருக்கும் மிகப்பெரிய ஜவுளி மாளிகையின் அதிபர் தான் திருமூர்த்தி.. அவரின் மனைவி விசித்ரா..
அவர்களின் பெண் தான் அஞ்சலி.. அஞ்சலிக்கு ஒரு அண்ணன் இருக்கிறார் விதுன்..
அவர்களுக்குப் பிடிக்காத காதல் திருமணம் செய்துக் கொண்டதால், குடும்பத்தாரால் ஒதுக்கி வைக்கப்பட்டிருந்தாள் அஞ்சலி..
வருடத்திற்கு ஒரு முறை இங்கு வருவாள்.. ஆனால் கெளதம் வரமாட்டான்..
அவன் மட்டுமில்லை.. அவனைச் சார்ந்த யாரையும் இங்கு வர விடமாட்டாள் அஞ்சலி..
அவமானப்பட்டாலும், பரவாயில்லை.. தான் மட்டுமே அவமானப்பட வேண்டும் என்று நினைத்தாள்..
கெளதமோ, சயந்தனோ அவமானப்படுவதை அவளால் தாங்கிக் கொள்ள முடியாது..
அவளைப் பொறுத்தவரை அந்த வீட்டிற்கும், அவளுக்கு மட்டுமே சம்பந்தம் உண்டு..
வீட்டிற்குள் நுழைந்தவள், இடது பக்கமாக திரும்பினாள்.. அங்கு தான் அவளின் தந்தை அறை இருக்கின்றது..
அங்கு ஹாலில் அமர்ந்திருந்த யாரையுமே அவள் கண்டுக் கொள்ளவில்லை..
நேராக தன் தந்தையின் அறைக்குள் செல்ல நினைத்தாள்..
“எங்கே வந்த?..” என கம்பீரக் குரலில் திரும்பிப் பார்த்த அஞ்சலியின் முகத்தில் அவ்வளவு கர்வம்..
தன் தாயைப் பார்த்தாலே, அந்தக் கர்வம் ஒட்டிக்கொள்ளும் அவள் முகத்தில்..
“ஏன், கண்ணு தெரியலையா?..” என்றாள் படு நக்கலாக,
“கண்ணு எல்லாம் எங்க அண்ணிக்கு நல்லா தெரியும்.. ஆனா வேண்டாத ஒருத்தி வீட்டுக்கு வர்றதை தான் ஏத்துக்க முடியலை..” என்றபடி அங்கு வந்தார் ஆனந்தி..
திருமூர்த்தியின் தங்கை..
“ஆமா, ஆமா.. இந்த வீட்டுக்கு ரொம்ப வருஷமா நீங்க வேண்டாத ஒருத்தர் தான்..” என்றதும், ஆனந்தி நரநரவென பல்லைக் கடித்தார்..
“வந்த வேலையை மட்டும் பாரு.. வீணா குடும்பத்துல பிரச்சினை பண்ற வேலையெல்லாம் வச்சிக்காதே..” என்றார் விசித்ரா, பல்லைக் கடித்துத் துப்பியபடி,
“ம்க்கும்.. நானும் வந்த வேலையை மட்டும் தான் பார்க்கப் போறேன்.. உங்கக்கிட்ட வெட்டியா கதை பேச வரலை.. என் அப்பாவை பார்க்கத் தான் வந்தேன்.. பார்த்துட்டு போயிடுவேன்..” என்றவளின் கைகளில் பளீச்சென்று மின்னிய வைர வளையல் ஆனந்தியின் கண்ணைப் பறித்தது..
வெடுக்கென்று சொல்லி விட்டு அஞ்சலி அப்பாவின் அறைக்குள் சென்று விட,
“என்ன அண்ணி, இப்படி பார்த்துட்டு இருக்கீங்க, வெறும் பையலை கூப்ட்டுட்டு ஓடினா.. இப்போ என்னமோ கையில வைர வளையல் மின்னுது..” என்றதும், விசித்ரா ஒரு கணம் தன் பெண் போன திசையையே பார்த்தார்..
பளீச்சென்று மின்னிய குங்கும நிற சேலை அதன் தரத்தையும், உயரத்தையும் சொல்லாமல் சொன்னது..
“சேலை கூட மின்னுது அண்ணி..” என்றார் ஆனந்தி,
“ம்ம்.. அம்பதாயிரத்துக்கு மேல இருக்கும்..” என்றவர், அங்கிருந்து சோபாவில் அமர்ந்தார்..
“நம்மளைப் பார்க்க வர்றோம்னு தெரிஞ்சதும், இரவல் வாங்கிப் போட்டு வந்திருப்பா?..” என்ற ஆனந்தியின் புறம் திரும்பிய விசித்ராவின் விழிகள் சுருங்கியது..
“என்ன அண்ணி, என்னை அப்படிப் பார்க்குறீங்க?..”
“உனக்கு யாரு வைர வளையல் இரவல் கொடுக்குறாங்க.. அது அவளோடது தான்.. சென்னையில நல்ல பிரபலமான கடையை தான் வச்சிருக்காங்க.. ஒரு நாளைக்கே வசூல் பல லட்சத்தை தாண்டுது..” என்றார் விசித்ரா, தன் கைகளில் வைத்திருந்த பேப்பரில் கவனத்தை வைத்தபடி..
“அப்போ, அடிக்கடி பொண்ணைப் பத்தி விசாரிக்கிறீங்க போல?.. அது சரி ஆயிரம் தான் இருந்தாலும், அவ உங்க ரத்தம்..” என்றார் ஆனந்தி,
எப்படியாவது போட்டு வாங்கி விடும் சாக்கில்..
“அவளைப் பத்தின அக்கறை எனக்கு எப்பவும் தேவையில்லை.. என்னைப் பொறுத்தவரைக்கும் அவ செத்துட்டா.. நம்ம கணக்குப்பிள்ளை, அவர் பொண்ணு கல்யாணத்துக்கு அவ கடையில தான் சேலையும், நகையும் எடுத்திருக்காரு.. அதை வந்து என்கிட்ட சொன்னாரு..” என்றவர், மேலும் பேச விருப்பமின்றி, அமைதியாக இருந்தார்..
“ஏன், நம்மக்கிட்ட இல்லாத சேலையா?.. மெட்ராஸ்ல போய்த்தான் எடுப்பாகளோ?..” என்றாள் ஆனந்தி விடாப்பிடியாக,
“அவுங்க எடுத்தது கல்யாணப்பட்டு.. அது மாப்பிள்ளை வீட்டுல தான் எடுத்திருக்காங்க.. மாப்பிள்ளை வீடு சென்னை.. அஞ்சலியோட வீட்டுக்கார்க்கு நல்ல பழக்கம் போல.. அதுனால தான் அங்கே போய் எடுத்திருக்காங்க.. புரியுதா?.. எடுத்தது கணக்குப்புள்ளையா இருந்தாலும், காசு கொடுத்தது எல்லாம் மாப்பிள்ளை வீட்டுல.. அவுங்க சொல்ற இடத்துக்குத் தானே போக முடியும்.. இல்ல வேற ஏதாவது விளக்கம் வேணுமா உனக்கு?..” என எரிந்து விழுந்தார் விசித்ரா..
“வேற எதுவும் தேவையில்லை..” என்ற ஆனந்தி, பக்கவாட்டாக இருந்த அறையை நோட்டமிட்டார்..
உள்ளே சென்றவள் என்ன ஆனால் என்று?..
அஞ்சலியோ தன் தந்தையைப் பார்த்து கண்ணீர் விட்டுக் கொண்டிருந்தாள்..
“அழாதே ம்மா..” என வலது கரம் கொண்டு அவளின் கண்ணீரை துடைக்கச் சென்றார்..
அஞ்சலியோ நீட்டியவரின் கையைப் பிடித்துக் கொண்டு அழ ஆரம்பித்து விட்டார்..
“என்னால தான ப்பா.. இந்த நிலைமை உங்களுக்கு?..” என அழுது அரற்றியவரைக் கண்டு, மூரத்திக்கு பாவமாகிப் போனது..
வலது பக்கம் செயல்படும் அவருக்கு, இடது பக்கம் எந்தவித செயல்களும் இருக்காது..
இப்பொழுது தான் லேசாக பேச ஆரம்பித்திருக்கிறார்.. பல வருட சிகிச்சையால் தான் இந்தளவுக்கு முன்னேறியிருக்கிறார்..
“வீட்டுல பிரச்சினையா ம்மா?..” என கேட்ட தந்தையைப் பார்த்து, இல்லை எனும் விதமாய் சிரித்த அஞ்சலி,
“உங்களைப் பார்க்கணும் போல இருந்திச்சு ப்பா.. எனக்கு என்னப்பா பிரச்சினை வரப் போகுது?.. கண்ணுக்குள்ள வச்சி தாங்குற புருஷன்.. அம்மா ன்னா அப்படி ஒரு மரியாதை என் பையனுக்கு..” என அவளாக அடித்து விட்டாள்..
வேறு வழி.. உண்மையை சொல்ல முடியாதே..
“சரி ம்மா.. சாப்பிட்டீயா?..” என்றார்..
“ம்ம்.. அதெல்லாம் உங்க மருமகன் கரெக்டா என் வயித்தை நிறைச்சிடுவாரு ப்பா..” என சிறு வெட்கத்துடன் கூறி முடித்தாள்..
“ம்ம்.. மாப்பிள்ளையை வீட்டுக்கு வரச் சொல்லலாம் தானே ம்மா..” என்றதும், அஞ்சலியின் கடுகடுவென மாறியது..
“அப்பா.. நீங்க என்ன வேணும்னாலும் சொல்லுங்க.. ஆனா மரியாதை இந்த வீட்டுக்கு அவரை வரச் சொல்லாதிங்க.. அவரே வாரேன்னு சொன்னாலும், நான் வர விடமாட்டேன்..”
“இன்னும் கோபம் போகலையா ம்மா?..”
“எப்படி ப்பா போகும்?.. என்னைக் காதலிச்சாருங்கிறதுக்காகத் தானே, எல்லாரும் மாட்டை அடிக்கிற மாதிரி அவரை அடிச்சு வெளியே தள்ளுனீங்க?..”
“போகும் போது, எங்க வீட்டுப் பொக்கிஷம் உன்னையும் தூக்கிட்டுப் போயிட்டாரே..” என்றார் மூர்த்தி குறைபடும் சாக்கில்,
“அவர் ஒன்னும் தூக்கலை.. நானா தான் ஓடிப்போனேன்.. அப்போ கூட அவர் வேண்டாம்.. நீ போயிடு ன்னு தான் சொன்னாரு.. நான் தான் அவரை மிரட்டி, உருட்டி கல்யாணம் பண்ணிக்கிட்டேன்..” என்ற மகளை மேலிருந்து கீழ் வரை பார்த்தார்..
பணத்தின் செழுமை அவளைப் பார்த்தாலே தெரிந்துக் கொள்ளலாம்..
இங்கேயிருந்து செல்லும் போது கெளதமின் கைகளில் ஒற்றை ரூபாய்க்கூட கிடையாது..
இவளும் நகையெல்லாம் கழற்றி வைத்துவிட்டுத் தான் போனாள்..
அநாதையாகத் தான் அண்ணன், தம்பி இருவருமே கிளம்பினார்கள்..
படிக்கும் பையன் சந்தோஷின் படிப்பைக் கூட நிறுத்தாமல், ஒற்றையாளாக போராடித்தான் இந்த நிலைக்கு கெளதம் வந்திருக்கிறான் என்பதை அறிந்ததில் இருந்தே, கெளதமின் மேல் அவ்வளவு மரியாதை திருமூர்த்திக்கு..
அடிக்கடி கெளதமைப் பற்றி விசாரித்துக் கொள்வார்..
“என்ன ப்பா ட்ரீம்மா?..”
“அதெல்லாம் ஒன்னுமில்லை.. பழசையெல்லாம் நினைச்சேன்..” என்றவர், ஒரு கணம் தயங்கி,
“ஏன் ஆத்தா, மாப்பிள்ளையைத் தான் வர விடலை.. பேரனையாவது அழைச்சிட்டு வந்திருக்கலாமே?..”
“ஏன் பேரன்ங்கிற பாசம் உங்களுக்கு மட்டும் தான் இருக்கணுமா?.. உங்க சம்சாரத்துக்கு இருந்தா, உங்களையும் சேர்த்து அழைச்சிட்டு எங்க வீட்டுக்கு வாங்க.. கண் குளிர பேரனைப் பாருங்க.. யாரு வேண்டாம்னு சொன்னா?..”
“அப்போ நீ இங்கே வர விடமாட்ட?..”
“கண்டிப்பா மாட்டேன் ப்பா.. மரியாதை இல்லாத வீட்டுல, நான் வந்தா மட்டும் போதும்.. என் புருஷன், புள்ள எல்லாம் அவமானப்பட வேண்டாம்.. அதிலையும் உங்க பேரன் அநியாயத்துக்கு கோவக்காரன் வேற.. இங்கே நடக்கிறது தெரிஞ்சது, அவ்வளவு தான்.. ஆடித்தீர்த்திடுவான்..” என்றவள், சிறிது நேரம் தந்தையிடம் பேசி முடித்து விட்டு வெளியே வர, அப்பொழுதும் விசித்ரா அந்த இடத்தை விட்டு அகலவில்லை..
அவரைப் பார்த்ததுமே, “ம்க்கும்.. ரொம்பத்தான்.. பெத்த மகளை வரவேற்க துப்பில்லை.. ஊருலேயே பெரிய ஆளுன்னு பெருமை பேசிக்கிட்டு சுத்துறாக..”
“அப்படித்தான் டி சுத்துவோம்..” என்றார் ஆனந்தி, ஏக கடுப்பில்..
“ஏய்ய்ய்.. அத்தைக்காரி, என்னைக்காவது ஒரு நாள் என் பையன் துப்பாக்கியை எடுத்து உன் நெத்திப் பொட்டுல, பட்டு பட்டுன்னு போடலை.. நான் போலீஸ்காரனோட ஆத்தா இல்ல பார்த்துக்கோ.. சும்மா, சும்மா குறுக்கால வந்து பாஞ்சிக்கிட்டு..” என வேகமாக வெளியே சென்றாள்..
சற்று தூரம் தான் நடந்திருப்பாள்.. அவளின் முன்பாக அடர் சிவப்பு நிற ஆடிகார் வழுக்கிக் கொண்டு வந்து நின்றது..
அதைப் பார்த்ததுமே மென்புன்னகை..
சிரித்த முகத்துடனே ஏறியமர்ந்துக் கொண்டாள்..
அவள் உள்ளே ஏறிக் கொண்டதும், தண்ணீர் பாட்டிலை நீட்டினான் கெளதம்..
நிச்சயமாக அங்கே அவள் தண்ணீர் கூட அருந்தியிருக்க மாட்டாள் என்பது அவனுக்குத் தெரியும்..
“ஏதாவது பாட்டு போடுங்க கெளதம்..”
தன்னந்தனிச்சிருக்க
தத்தளிச்சு தானிருக்க
உன் நினப்பில் நான் பறிச்சேன்
தாமரையே...
புன்னை வனத்தினிலே
பேடை குயில் கூவையிலே
உன்னுடைய வேதனைய
நான் அறிஞ்சேன்
என ஜானகியின் குரலில் மெய் மறந்து, சீட்டில் தலைசாய்த்துக் கொண்டாள் அஞ்சலி..
அவளின் நிலை உணர்ந்த கெளதமும் எதுவும் பேசவில்லை.. அவளின் வலது கரத்தை தன் கரத்தோடு கோர்த்துக் கொண்டான்..
அதுவே அவளுக்குப் பெரும் ஆறுதலாக இருந்தது..
பல வருடங்களாக தவம் இருக்கிறாள்.. அவளின் தாய் மன்னித்து ஏற்றுக் கொள்ள மாட்டாரா?.. என்று.. ஆனால் இன்று வரை அவரின் பாராமுகம் தான் அவளை வரவேற்கிறது..
“சார்.. நீங்க கேட்ட பைல்..” என கண்ணன் இரண்டு பைலை எடுத்து நீட்டினான்..
“நான் சொன்ன மாதிரியே பண்ணிட்டீங்களா?..”
“ஆமா சார்.. நீங்க சொன்ன மாதிரியே, எல்லாருக்கும் டிஎன்ஏ டெஸ்ட் எடுத்துட்டோம்..” என்றான் மரபணு நிபுணரான கண்ணன்..
“குட் கண்ணன்.. ரிசல்ட்.. பாசிட்டிவ்..”
“எஸ் சார்.. ஒரு ரிசல்ட் பாசிட்டிவ்.. இன்னொரு ரிசல்ட் நெகட்டிவ்..” என்றான் கண்ணன்.
“ஓஹ்..” என்ற ப்ரணவ்,
“யாரோடது நெகட்டிவ்..”
“சார்.. அஞ்சலி, கெளதமோட டிஎன்ஏ சயந்தன் சாரோட மேட்ச் ஆகுது.. சோ அஞ்சலி, கெளதம், சயந்தன் மூணு பேரோடதும் பாசிட்டிவ்..” என்றார் கண்ணன் சிறு தயக்கத்துடன்,
“அப்போ, மஹாலெட்சுமி, சந்தோஷ், யாதிரா.. இவுங்க டிஎன்ஏ தான் நெகட்டிவ்னு வந்திருக்கு..”
“ம்ம்..” என யோசித்தவாறே,
“மஹாலெட்சுமி, சந்தோஷ் இரண்டு பேர்ல யாரோட டிஎன்ஏ யாதிராவோட மேட்ச் ஆகுது..” என்றார் ப்ரணவ்..
“யாரோடதும் மேட்ச் ஆகலை சார்..” என்ற கண்ணனை அதிர்ந்துப் பார்த்தார் ப்ரணவ்..
“என்ன சொல்லுறீங்க?.. யாரோடதும் மேட்ச் ஆகலைன்னா, எப்படி?.. ஒழுங்கா டெஸ்ட் எடுத்தீங்களா?.. இல்லையா?..” என்றார் ப்ரணவ், கோபத்தின் உச்சத்தில்..
“சார்.. நீங்க யார்க்கிட்ட டெஸ்ட் எடுத்தாலும், இது தான் சார் வரும்.. இவுங்க மூணு பேரும் பயாலாஜிக்கலா எந்த வித சம்பந்தமும் இல்லை.. சந்தோஷ், மஹாலெட்சுமி இரண்டு பேருமே கணவன் மனைவி தான்.. ஆனா அவுங்களோட டிஎன் ஏ யாதிராவோட கொஞ்சமும் சம்பந்தப்படலை..” என்றவர், ஒரு கணம் தயங்கி,
“சார்.. நீங்க சொல்லாமலே நான் இன்னொரு விஷயம் பண்ணியிருக்கேன்..” என்றார் கண்ணன்.
“என்னஹ்?..” என சிடுசிடுத்தார்..
“அது.. தப்பா நினைச்சிக்க மாட்டீங்களே சார்?..” என்ற கண்ணனை கண்கள் இடுங்க பார்த்தார் ப்ரணவ்..
“தப்பா நினைக்கிற அளவுக்கு என்ன பண்ணீங்க கண்ணன்?..”
“சார்.. எதுக்கும் இருக்கட்டுமேன்னு..”
“இருக்கட்டுமேன்னு..”
“உங்களுக்கும் டிஎன்ஏ டெஸ்ட் எடுத்துப் பார்த்தேன்..” என்றவரைக் கண்டு முறைத்தாலும், சட்டென்று கோபப்பட முடியவில்லை அவரால்..
ஏதோ ஒன்று அவரை தடுத்து நிறுத்தியது..
“சரி.. இப்போ அதுவும் நெகட்டிவ் தானே.. அப்புறம் என்ன?..” என ப்ரணவ், சீட்டில் தலைசாய்த்து அமர,
“அது தான் சார் இல்லை.. யாதிராவோட டிஎன்ஏ வும்.. உங்களோட டிஎன்ஏ வும் 94% பர்சன்ட் மேட்ச் ஆகுது..” என்றதும் சேரை விட்டு எழுந்தே விட்டார் ப்ரணவ்..
“என்னச் சொல்லுற?..” என நாக்கு தந்தியடித்தது அவருக்கு..
“ஆமா, சார்.. யாதிரா உங்கப் பொண்ணு தான்.. அவுங்க உங்களுக்குப் பிறந்தப் பொண்ணுங்கிறதுல எந்தக் குழப்பமும் இல்லை.. நீங்க சொல்லுற மாதிரி மஹாலெட்சுமி மேடமும், யாதிராவும் ஒரே உருவத்துல இருக்காங்கன்னா, உங்களோட முன்னோர்கள் யாராவது அந்த மாதிரி இருந்திருக்கணும்.. அது ஜீன் மூலமா கூட மஹாலெட்சுமி மேடம், யாதிரா ரெண்டு பேருக்கும் வந்திருக்கணும்..” என்றபடி கண்ணன் வெளியேறி விட,
மூன்றாவதாக இருந்த கவரை எடுத்துப் பார்த்தார் ப்ரணவ்..
அதிலிருந்த ரிசல்ட்டை பார்த்தவருக்கு தலைசுற்றிட, அப்படியே சரிந்து நாற்காலியில் விழுந்தார்..
அதில் யாதிரா, ஈஸ்வர ப்ரணவ் இருவரின் டிஎன்ஏ வும் மேட்ச்சாகி இருந்தது..
