அத்தியாயம்: 10
வீட்டுக்கு வந்தது முதல் நடுக்கத்தோடு காணப்படும் மகளை கண்டு பதறிவிட்டார் கலாவதி. உடனே கணவன் ரங்கராஜனுக்கு ஃபோன் செய்து விஷயத்தை கூறி அவரை வரவழைத்தார்.
ரங்கராஜனும் மகளின் நிலை கண்டு பதட்டம் அடைந்தார். என்ன நடந்தது என்று தெரிய, சிவப்பிரசாத்துக்கு ஃபோன் செய்ய, அவனோ அவர்கள் ப்ராஜெக்ட் சம்பந்தப்பட்ட மீட்டிங்கில் இருந்தான்.
என்ன நடந்தது என்று யாருக்கும் தெரியவில்லை. தெரிந்தவளும் சொல்லும் நிலைமையில் இல்லை.
"எதுக்கும் நம்ம டாக்டர் கிட்ட காமிச்சிட்டு வந்துடலாங்க. எனக்கு பயமா இருக்கு" என்று கலாவலதியின் கூற்றை ஏற்று, மகளை பார்க்க அறைக்குள் சென்றனர். குளிருக்காக போர்வையை முகம் மூடி படுத்திருந்தவள் ஜுரம் கண்டு இருந்தாள்.
கை தாங்கலாக அவளை அழைத்து செல்லலாம் என்று பார்த்தால், அவளின் நிலை ஒத்துழைக்கவே இல்லை.
"என்னங்க இப்படி இருக்கா? எனக்கு ரொம்ப பதட்டமா இருக்கு" என்று கையை பிசைந்து கொண்டு மகளைப் பார்த்த கலாவதியின் கண்கள் கலங்கியது. ரங்கராஜன் "இரு நான் டாக்டரை வீட்டுக்கே வரவழைக்கிறேன்" என்று வரவழைத்தார்.
"உடம்பு அசதி இல்ல ஏதாவது அதிர்ச்சியான சம்பவங்கள் இல்லைன்னா தண்ணி சரியா குடிக்காம இருந்து டீஹைட்ரேட் அப்படின்னாலும் ஜுரம் வந்திருக்கலாம். மத்தபடி வைரஸ் ஃபீவரெல்லாம் ஒன்னும் இல்ல" என்றார் அந்த பெண் மருத்துவர்.
கூடவே கலாவதியை தனியாக அழைத்து வீட்டுக்கு வரும்போது அவளுடைய நடை உடை எப்படி இருந்தது என்று கேட்க.. அவர் கூற வருவதன் அர்த்தம் புரிந்தவர் "இல்ல மேடம் நார்மலா எப்படி காலையில ஆபீஸ் போனளோ அப்படித்தான் வந்தா.. அந்த மாதிரி ஹாரஸ்மெண்ட் நடக்க எல்லாம் வாய்ப்பே இல்லை. அவ வேலை செய்றது எங்க ஆபீஸ்ல தான்" என்றார்.
"இருக்கலாம் மேடம் உங்க பாதுகாப்பிலேயே புள்ளைங்க இருந்தாலுமே.. டாக்டரா இதை சொல்ல வேண்டியது என்னோட கடமை! இப்பல்லாம் பெண்களுக்கு ஆபத்து வெளியில் இருந்து வருவதை விட வீட்டில் உள்ளவர்களாலும் வருது. உங்க பொண்ணு முழிச்சவுடன் பொறுமையா அவங்க கிட்ட பேசுங்க" என்று சென்றவர், அவளுக்கு ஊசி மூலம் மருந்து செலுத்தி விட்டு சென்றார்.
அவர் பேசி சென்றது குறுகுறுத்துக்கொண்டே இருந்தது கலாவதிக்கு. ஆனால் கணவனிடம் காட்டிக் கொள்ளாமல் அமைதியாக மகளையே பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தார்.
மருத்துவர் கொடுத்த மருந்தின் வீரியத்தில் ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்று விட்டாள் சித்ரா.
மீட்டிங் முடித்துவிட்டு வெளியில் வந்த சிவப்பிரசாத் தன் ஃபோனை எதார்த்தமாக பார்க்க அதில் வந்திருந்த மிஸ்டு கால்கள் ரங்கராஜன் நம்பரை தங்கி இருந்தது. அதுவும் மூன்று முறை.
"என்ன அங்கிள் கூப்பிட்டு இருக்காரு… எதுக்காக இருக்கும்? ஒருவேளை சித்துவுக்கு?? ஓஓஓ காட்" என்று அவருக்கு போன் செய்தான்.
அவர் போன் எடுக்கும் வரையிலே இவனுக்கு தவிப்பு அதிகமானது. அதிலும் இராவணன் வந்து சென்றவுடனே சிவப்பிரசாத்துக்கு அழைத்து "முக்கியமான ஒரு மீட்டிங் அதுவும் இந்த கன்ஸ்ட்ரக்ஷன் பத்தி தான். பத்து நிமிஷத்துல நீங்க அந்த ஹோட்டலில் இருக்க வேண்டும்" என்று கட்டளையிட்டு இருக்க.. ஓவியம் வரைந்து கொண்டிருந்த சித்ரகாவை திரும்பி பார்த்தான், அவ்வளவு ஓவியத்தில் லயித்து இருந்தாள்.
பிரசாத் அவ்வாறுதான் நினைத்தான். அவனுக்கு தான் ராவணன் நடத்திச் சென்று லீலைகள் தெரியாது அல்லவா.
"சித்து.. அண்ணையா போன் பண்ணி இருக்கார். ஒரு மீட்டிங் ஒன்னு அட்டென்ட் பண்ணனுமாம். எப்படியும் ஒரு ஹாஃப்அனவர் ஆகும்னு நினைக்கிறேன்.. இல்ல சொல்ல முடியாது ஒன் அவர் கூட ஆகலாம். நீ என்ன பண்ற சீக்கிரமே கிளம்பிடு. எனக்காக வெயிட் பண்ணாத" என்று அவள் முதுகு பின்னே நின்று ஃபோனை பார்த்துக்கொண்டே கூறியவன் வேகமாக சென்றுவிட்டான்.
வழக்கம் போல போகும்போது பாடிகார்டிடம் கூறிவிட்டு தான் சென்றான்.
மீட்டிங் ஆரம்பிக்கும் சில நொடிகளுக்கு முன்பு சித்துவுக்கு அழைக்க அவள் எடுக்கவில்லை. வெளியில் இருந்த பாடிகார்டுக்கு அழைத்து கேட்க "மேடம் அப்போவே எப்போதும் அவர்களுக்கு வரும் காரில் சென்று விட்டார்கள் சார்" என்றதும் தான் இவன் மீட்டிங்கில் தன் கவனத்தை பதித்தான்.
ரங்கராஜன் ஃபோன் எடுப்பதற்குள் அத்தனை வேகமாக அவனது மன ஓட்டங்கள் இருந்தது. அதற்குள் ரங்கராஜன் ஃபோனை எடுத்ததும் "ஃபோன் பண்ணி இருந்தீங்க அங்கிள். சித்து ஓகே தானே?" என்றான்.
"அதை நான் தான் கேக்கணும் சிவப்பிரசாத். ஆபீஸிலிருந்து வீட்டுக்கு வந்ததிலிருந்து ஒரு மாதிரியா இருந்தானு ஆன்ட்டி போன் பண்ணி எனக்கு சொன்னதும்.. வந்து பாத்தா நல்ல காய்ச்சல்
"என்ன அங்கிள் சொல்றீங்க?" என்று பதட்டத்தோடு கேட்டவன் "நான் ஒரு மீட்டிங்க்காக போயிட்டேன். எப்பொழுதும் சித்துக்காக இருக்கும் பாடிகார்ட் சித்து கிளம்பினதும் எனக்கு ஃபோன் பண்ணி சொன்னான்" என்று யோசனை கொண்டவன் "நான் வந்து பார்க்கிறேன் அங்கிள்" என்று அவர்கள் வீட்டுக்கு கிளம்பி வந்தான்.
வரவேற்பு அறையிலேயே ரங்கராஜன் சற்று கலவரம் சுமந்த முகத்தோடு தான் அமர்ந்திருந்தார். சாதாரண சீதோசன நிலை காரணமாக ஜுரம் வந்திருந்தால் இப்படி பயந்து இருக்க மாட்டார். அதே சமயம் அவர்களோடு அலுவலகத்திற்கு வந்திருந்தால் கூட இப்படி பெண்ணை நினைத்து கவலைப்பட்டு இருக்க மாட்டார்.
தம்பியும் தம்பி மனைவியும் அற்பாயுசில் இறந்து விட, அவர்களது ஒற்றை மகளை அவரின் பொறுப்பில் விட்டு விட்டு சென்ற நிலையில் அவளுக்கு சிறு உபாதை என்றாலுமே ரங்கராஜனுக்கும் காலாவதிக்கும் நெஞ்சம் பதைப்பதைத்து துடித்து துடித்து போயினர். இருவருக்கும் தங்கள் சகோதரத்தின் ஒற்றை வாரிசு அல்லவா?
கவலையாக உள்ளே வந்த சிவப்பிரசாத்தை பார்த்தவர் வரவேற்பாய் தலையசைத்து நடந்ததை கூறினார்.
"அப்படி அவள் பயந்த அளவுக்கு ஒன்னு இருக்காது அங்கிள். வேணும்னா சரியா தண்ணி குடிக்காம இருந்திருக்கலாம் சித்து. ஓவியத்தையே பாத்துட்டு இருந்தா.. லஞ்சுக்கு நான் போகும்போது கூட கூப்பிட்டேன், வீட்ல இருந்து சாப்பாடு வந்து இருக்குனு சொன்னா… நான் கிளம்பும்போது கூட அந்த பெயிண்டிங்கை பார்த்துட்டே தான் இருந்தா அங்கிள்" என்றான்.
"இப்ப எப்படி அங்கிள் இருக்கா? நான் பாக்கட்டுமா?" என்று தயக்கத்தோடு கேட்டான்.
"சரி வாங்க.." என்று அவனை அழைத்துக் கொண்டு அவர் மாடிப்படி ஏற..
"ஷிட்! மறந்துவிட்டேன் அண்ணைய்யாவும் வந்திருக்காரு" என்றான்.
"யாரு மாப்பிள்ளையா?" என்று ரங்கராஜன் அவனிடம் ஆச்சரியமாக கேட்டுக் கொண்டே வாயில் புறம் திரும்பி நடக்கும் பொழுதே… தன் வேக நடையோடு அதிக உயரத்தோடு அந்த வீட்டிற்குள் இரண்டாவது முறையாக நுழைந்தான் விஷ்ராவணன் ரெட்டி!
இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே கலாவதியும் கீழே வந்திருக்க, இராவணனை பார்த்தவர் "வாங்க மாப்பிள்ளை" என்று வாய் நிறைய அழைத்தாலும், அவர் கண்களில் ஒரு சோகமும், ரங்கராஜன் முகம் அவ்வளவு தெளிவு இல்லாததை கண்டு தம்பியை கேள்வியாக பார்த்தான்.
"அண்ணையா.. அது சித்துவுக்கு ஃபீவர்" என்று அவன் தெலுங்கில் அண்ணனிடம் பேச நெற்றி சுருக்கி தம்பியை ஒரு பார்வை அழுத்தமாக பார்த்தான்.
"இல்லை அண்ணையா… நான் மீட்டிங்கு அப்பவே போயிட்டேன்" என்று குரலில் அத்தனை பயம் பதட்டம் அவனிடம். ரங்கராஜன் வியப்பாக பார்த்தார் அவனை. ஒரு வார்த்தை பேசவில்லை ஆனால் கண்களாலேயே இத்தனை ஆளூமை காட்டுகிறானே என்று.
விடுவிடு என்று முன்னே சென்றவன் திரும்பி தனது மாமனார் மாமியாரை பார்க்க, கலாவதி "வாங்க மாப்பிள்ளை" என்று அவனை அழைத்துச் செ
ன்றார். நால்வரும் சித்ரலேகாவின் அறைக்குள் நுழைந்தனர்.
தொடரும்…
