25
வல்லபநாடு ஜமீனின் மாளிகையில் தான் நிச்சயதார்த்த விழா கோலாகலமாக ஏற்பாடு செய்யப்பட்டு நடந்துக் கொண்டிருந்தது. வருபவர்களுக்கு ஒரு பக்கம் ஈவன்ட் ஆட்களை வைத்து உபசரிப்பு நடந்தாலும் சுலோச்சனாவும் லோகநாதனும் முன்னே நின்று அனைவரையும் வரவேற்றனர்..!
அதன்படி வரிசைகளை பெறுவாரியாக எடுத்துக் கொண்டு வந்த தம் பிறந்த வீட்டை.. இனி தன் மகளின் புகுந்த வீட்டை கண்கள் ஆனந்தத்தில் கலங்க.. எதிர்கொண்டு அழைத்தனர் சுலோச்சனாவும் லோகநாதனும்..
மாப்பிள்ளையாகப்பட்டவன் தென்னரசு முன்னால் வர அவனுக்கு ஒரு பக்கம் வைரவேலுவும் மறுபக்கம் ரத்தினவேலுவும் வந்தனர்.
அவர்களுக்குப் பின்னால் பார்கவியும் பைரவியும் வருங்கால மருமகளுக்கான நகைகளை கையில் வைத்திருக்க.. அவர்களுக்கு பின்னே வந்தவர்கள் கைகளில் நிறைய சீர்களை கொண்டு வந்தனர்..!
அனைத்தையும் அங்கே வரிசையாக அழகாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மண்டபத்தில் ஒரு பக்கத்தில் அடுக்கி வைக்க.. அதனை பார்கவியும் பைரவியும் மேற்பார்வை பார்த்தனர்.
இருவரும் பார்த்து பார்த்து மருமகளுக்காக வாங்கி வந்த சீர்கள் அவை. விலை மதிப்பு மிக்கவை. அத்தனையும் என்னதான் வந்தவர்கள் எல்லாம் சொந்தக்காரர்கள் விசுவாசிகள் என்றாலும் எல்லாரையும் நம்ப முடியாது அல்லவா? என்று இருவரும் அதனை கண்காணித்துக் கொண்டனர்.
நிச்சயதார்த்தம் என்னவோ பைரவியின் மகனான தென்னரசுக்கு தான் ஆனால் பார்கவி மிகுந்த பரபரப்புடனும் ஆர்வத்துடனும் அனைத்தையும் செய்துக் கொண்டிருந்தார்.
பார்கவியின் சொந்த தங்கை தான் பைரவி..!
அண்ணன் தம்பிகள் அக்கா தங்கையை திருமணம் செய்து ஒரே வீட்டில் ஒன்றாக தான் கூட்டு குடும்பமாக வாழ்ந்து வருகின்றனர்.
அதனால் இருவருக்கும் பெற்ற பிள்ளைகளுக்குள் பாகுபாடு எல்லாம் கிடையாது. அதிலும் “பாருமா..” என்று தன் முந்தானையைப் பிடித்து சிறு வயதிலிருந்து வரும் தென்னரசு என்றால் மிகுந்த பிரியம்.
கதிர்காமனுக்கும் தென்னரசுவுக்கும் பெரிய வயது வித்தியாசம் கிடையாது ஆறு மாதங்கள் தான்..!
ரத்தினவேலு சமீபமாகத்தான் ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்று தற்போது தங்கள் தொழில்களை தம்பியோடு சேர்த்து நிர்வகிக்கிறார். அதுவரை வைரவேலும் தென்னரசும்தான் பார்த்துக் கொண்டனர். அவர்களின் மகனோ எனக்கும் இந்த தொழிலுக்கும் சம்பந்தமில்லை என்று விட்டான்.
இப்போது வரை வெறும் சட்ட ஆலோசராக மட்டுமே அவர்கள் குடும்ப தொழில் நிர்வாகத்தில் இருக்கிறான்.
மண்டபத்துக்கு அருகிலேயே பெரியவர்களுக்கான அலங்கரிக்கப்பட்ட நாற்காலிகள் போடப்பட்டு இருக்க.. அதில் முதன்மையானதில் அமர்ந்த வீரராகவன் தன் அருகே இருந்த ரத்தினவேலுவைப் பார்த்து “என்னப்பா ஆரம்பிக்கலாமா?” என்று
அதிகாரமாக கேட்க.. அவர் தயக்கமாக வைரவேலுவை பார்த்தார்.
“இருங்க ணா.. இன்னும் கொஞ்ச நேரம் தானே.. பெரியவன் வந்துடட்டும்” என்று அவரும் சைகை செய்ய..
ரத்னவேலு மரியாதையாக வீரராகவன் முன்குனிந்து “ஐயா பெரியவன் வந்துக்கிட்டு இருக்கான் அவன் வந்த உடனே நாம ஃபங்ஷனை வச்சுக்கலாமா?” என்று கேட்டார்.
அவரோ தன் கைக்கடிகாரத்தை ஒருமுறை பார்த்துவிட்டு சரி என்று உறுமினார்.
தன் பேத்தியின் புகுந்த வீடு என்பதை விட தன் மருமகளின் பிறந்த வீடு தானே என்று சற்று அலட்சியம் வீரராகவனுக்கு..!
‘அதிலும் இத்தனை பெரிய மனுஷங்க இங்கு வந்து காத்திருக்கிறோம். இன்னும் இவங்க வீட்டு பெரிய பையன் வரல.. கொஞ்சம் கூட மனசுல எங்க குடும்பம் மேல மட்டு மரியாதையோ.. ஜமீன் குடும்பம்னு எங்க மேல பயமோ இல்லை. இவனுங்களுக்கெல்லாம்..’ என்று மனதில் பொரிந்துக் கொண்டிருந்தார்.
“அவன் வரப்படி வரட்டும் நம்ம மத்த சடங்கு எல்லாம் பண்ணிக்கிட்டே இருப்போம்” என்று வீரராகவன் முகத்திலிருந்து அதிருப்தியைக் கண்டு பார்கவி கூற..
பைரவியோ “கொஞ்ச நேரம் வெயிட் பண்ணுவோம் அக்கா” என்று எவ்வளவு கூறியும்..
“இப்ப அவன் இங்க வந்து என்ன பண்ண போறான்? ஜஸ்ட் நம்மளோட போட்டோ தான் எடுத்துக்க போறான். அதுக்குள்ள நம்ம ஃபங்ஷனை ஆரம்பிச்சிடுவோம்.. அவன் வர்றபடி வரட்டும்” என்று பார்கவி கணவனை பார்த்து தீர்க்கமாக கூற..
சரி என்று ரத்தினவேலும் வைரவேலும் தங்கள் சரிபாதியோடு முன் நின்று மணப்பெண்ணுக்கான உடைகள் நகைகள் பழங்கள் அடங்கிய பெரிய வெள்ளி தாம்பாளத்தை நீட்ட..
வீரராகவனின் இருபுறத்திலும் லோகநாதனும் சுலோச்சனாவும் நின்று அதனை மகிழ்வோடு பெற்றுக் கொண்டு, மாப்பிள்ளைக்கான உடையை அதே போல பெரிய வெள்ளி தாம்பாளத்தில் வைத்து அவர்கள் புறம் நீட்டினர்.
அவர்களும் அதை மகிழ்வோடு பெற்றுக்கொண்டு தங்கள் அருகில் இருக்கும் மணமகன் தென்னரசுவிடம் கொடுக்க..
“எப்பா ரத்தினவேலு.. இரு மச்சான் இருக்கான் தானே? அவன் கூட்டிட்டு போவான்” என்று தன் பேரனை தென்னரசுவோடு அனுப்பி வைத்தார் வீரராகவன்.
அதை போல் மணமகளுக்கும் தன் அன்னையை நாத்தனார் தானே சுலோச்சனாவும் சின்ன மகளோடு பெரிய மகளை அனுப்பி வைத்தார் உடைமாற்ற…
முதலில் உடை மாற்றி வந்த தென்னரசு மாப்பிள்ளையாக கன கம்பீரமாக அங்கே போடப்பட்டிருந்த அலங்கார இருக்கையில் அமர்ந்திருக்க.. அவனுக்கு அவர்கள் முறைப்படி நலங்கு வைத்தனர்.
“எங்கப்பா பொண்ணு இன்னும் காணல..” என்று ஒரு பெருசு சத்தம் கொடுக்க..
“பொண்ணு என்ன மாப்பிள்ளை போல பேண்ட் சட்டை போட்டுட்டு உடனேவா வர முடியும்? எவ்வளவு அலங்கார வேலையெல்லாம் இருக்கு? கொஞ்சம் பொறுங்க பொறுங்க..!” என்று ஒரு முதிய பெண்மணி கூற..
இன்னொரு வாய் துடுக்கான பொண்ணோ “எங்க வீட்டுப் பொண்ண அவ்ளோ சீக்கிரம் எல்லாம் பார்த்திட முடியுமா என்ன? கொஞ்ச நேரம் மாப்பிள்ளை சார் காத்திருங்க..!” என்றதும் இளவட்டங்கள் சிரிக்க அந்த இடமே கொண்டாட்டமாக இருந்தது.
“சந்து இங்க வா..” என்று தென்னரசு அருகில் இருந்த மகனை அழைத்து “இந்த நகையை அக்காகிட்ட கொடுக்க மறந்துட்டேன். அவ வரும்போது இதையும் மறக்காம போட்டு கூட்டிட்டு வர சொல்லு சின்ன அக்காகிட்ட” என்று கொடுத்து அனுப்பினார்.
“என்னத்த மறந்த?” என்று அருகில் இருந்த லோகநாதன் கிசுகிசுக்க..
“அது அத்தையோட அட்டிகை ஒன்னு மாமா கொடுத்தாங்க.. பத்திரமா இருக்கட்டும்னு என் பேக்லேயே வைச்சிருந்தேன். அதுதான் போட்டுவிட மறந்துட்டேன்” என்று அவரும் கணவனின் காதில் முணுமுணுத்தார்.
அதேநேரம் கூட்டத்தில் ஒரு சலசலப்பு..!
“பெரிய தம்பி வந்துடுச்சு” “பெரியவன் வந்துட்டான்” என்று உறவினர்களின் சத்தம் கேட்டு எல்லாரும் அங்கே திரும்பிப் பார்க்க..
அலையென கேசத்தை தன் ஒரு கையால் ஒதுக்கிய படி.. நெடுநெடுவென்று தன் உயரத்தால் அங்கே உள்ளவர்களை குள்ளமாக்கியபடி.. வேகமாக அவர்களை நோக்கி நடந்து வந்த கதிர்காமனை அனைவரும் கண்களில் அன்பும் பாசத்தோடு கலந்து வரவேற்றனர்.
நேராக தென்னரசு அருகில் வந்து நின்றவன் “வாழ்த்துகள் டா அரசு” என்று கை கொடுக்க..
“உன் வாழ்த்துகளை நீயே வச்சுக்கோ கதிரு.. உன்னை எப்ப வர சொன்னா எப்ப வந்திருக்க? கரெக்டா எங்கேஜ்மென்ட் ரிங்க் மாத்திக்கிறதுக்கு முன்னாடி தான் வரணுமா? எப்படிடா இப்படி டைம் பார்த்து வந்திருக்க?” என்று கடிந்தான் அண்ணனை தென்னரசு..
“ஹா..ஹா.. அதெல்லாம் ஒரு டேலண்ட் டா தம்பி.. எப்படி பர்ஃபெக்ட்டா டைமுக்கு வந்தேனா?” என்று தம்பியின் தோள் தட்டினான்.
“அந்த பர்ஃபெக்ட் இருக்கட்டும்..! ஏன் டா எப்படி தாடியோட.. கண்ணெல்லாம் டார்க் சர்க்கிளோட இப்படி வந்திருக்க?” என்று ஆதங்கப்பட்டான் தென்னரசு.
தன் மழிக்கப்படாத தாடியை லேசாக தடவி பார்த்துக் கொண்ட கதிர்காமனோ
“அது.. அது.. ஒரு இம்பார்டன்ட் ஒர்க். அதுல கொஞ்சம் பிஸியா இருந்துட்டேன் விடு விடு..! ஆமா.. இங்க நீ மட்டும் சோலோவா உட்கார்ந்துக்க.. உன் கூட டூயட் பாட போகிற மகராணிய எங்க காணோம்?” என்று கிண்டலாக கேட்டான்.
அதே நேரம் “பொண்ணு வந்தாச்சு.. பாருங்க..!” என்று கூட்டத்தில் கேட்ட சத்தத்தில் இருவரும் அந்த திசையை பார்த்தனர்.
தென்னரசுவோ சிறு வெட்கத்தோடும் தன்னவளின் பேரழகில் மயங்கியும் பார்த்திருக்க..
கதிர்காமனோ பேரதிர்ச்சியோடு எதிரே வந்தவளை பார்த்தான்..!
பின்னே
ஆறு மாத காலமாக மும்பையையே சல்லடை போட்டு அவன் தேடிக் கொண்டிருந்த ரதி சிற்பிகா, தன் தம்பியின் வருங்கால மனைவியாக வந்தால்.. அதிர்ச்சி கொள்ளாமல் எப்படி இருக்க முடியும் அவனால்??
தொடரும்..
