24
நெற்களஞ்சியமாம் தஞ்சாவூர் அருகே வல்லம் என்ற ஊர். தற்போது சிறிய ஊராக இருக்கலாம். பண்டைகாலத்தில் சிற்றரசாக இருந்த ஊர். அந்த சிற்றரசர்களின் வாரிசுகள் இன்னும் இங்கே வாழ்கின்றனர்.
பெயரில் ராஜா இல்லை என்றாலும் அரச மரபோடு பிணைந்தவர்கள்..!
வல்லபநாடு என்று அறியப்பட்ட ஊர் அது..!
17–18ம் நூற்றாண்டில் மராத்தியர்கள் தஞ்சாவூரை ஆண்ட காலத்தில் இவர்கள் சிற்றரசர்களாய் இங்கே அரசாண்டவர்கள். அவ்வூரை சுற்றி கடவுளுக்காக கற்களாலான பல சமய கோவில்களையும்.. தன் குடிமக்களின் விவசாயத்திற்கு பல பாசன ஏரி குளங்களையும் அமைத்தவர்கள்.
ஆக கடவுளையும் தன் குடிகளையும் சமமாக பாவித்து அவர்கள் நலனை பேணியவர்கள்..!
நாம் சொல்லலாம் மக்களின் வரிப்பணத்தில் தானே செய்தார்கள் என்று..!
மக்களின் வரிப்பணமே என்றாலும் இன்றைய காலத்தில் எத்தனை பேர் அதை மக்களுக்காகவே செலவழிக்கிறார்கள்??
இவர்களோ மக்களின் வரிப்பணத்தில் மட்டுமல்ல வருங்காலத்தில் நம் குடிகள் நன்றாக இருக்க வேண்டும் என்று பல தான தருமங்களை தங்கள் வருமானத்தில் செய்து அறம் போற்ற வாழ்ந்தனர்..! இன்றும் வாழ்ந்து வருகின்றனர்..!
அவ்வாறு சிற்றரசர்களாக இருந்தவர்கள் ஆங்கிலேயர் படையெடுப்புக்கு பின் அவர்களது ஆட்சிக் காலத்தில் ஜமீன்களாக மாற்றப்பட்டனர்.
பெயர் மாறினாலும் அதிகாரம் அதே தான்..! மக்கள் அவர்கள் மீது கொண்ட அபிமானமும் அதேதான்..!
1947க்கு பிறகு நில சீர்திருத்தத்தில் பெரும்பாலான நிலங்களை இழந்தனர்… இல்லை இல்லை இவர்களே தன் குடிகளுக்கு மாற்றி எழுதி வைத்தனர்..!
ஆட்சி இல்லை, ஆனால் அதிகாரம் இன்றளவும் உண்டு..!
எந்த அரசியல் கட்சி அங்கே தேர்தலில் நின்றாலும் இவர்களது ஆதரவின்றி ஜெயிக்க முடியாது.
“ஒரு காலத்தில் அரசர்” என்ற நினைவு மட்டுமல்ல.. அதை நிஜத்திலும் சில பரம்பரை பழக்கவழக்கங்களால் அனைவருக்கும் பறைசாற்றிக் கொண்டிருக்கின்றனர்.
இப்போதைய நிலையில்
குடும்பத்துக்கு அன்றைய காலகட்டத்தை போல பெரிய அரண்மனை இல்லை..!
ஆனால் பழைய மாளிகை உள்ளது..! அதில் தான் அவர்களின் ஜாகை..!
பல ஏக்கர்களில் நிலம் தோப்பு தொரவு, விவசாயத்தை ஒட்டிய சில பல மில்கள் என்று முன்பு இழந்ததை விட இன்று அதிகம் சம்பாதித்து நன்றாக வாழ்கின்றனர்.
அதேசமயம் மரியாதைக்கும் குறைவில்லை..! இன்றுவரை கோவில் நிர்வாகத்தில் மரபு உரிமை.. ஊரில் “ஜமீன்தாரய்யா, சமஸ்தானக்காரர்” என்று தான் மக்கள் மரியாதையோடு அழைப்பார்கள்.
இப்போதுள்ள குடும்பத் தலைவர் வீரராகவன், வயது எண்பதை கடந்து விட்டது. முன்னாள் அரச மரியாதையை விட முடியாமலும்..
தற்போதைய நவீன காலத்தில் ஒத்துப் போக முடியாமல் தவிக்கும் அந்த ஜமீனின் பெரிய ஜமீன்தார்..!
அவருக்கு ஒரே மகன் பெயர் லோகநாதன்..! லோகநாதனின் மனைவி சுலோச்சனா..!
லோகநாதன் நன்கு படித்தவர், அப்பாவை போல இந்த அரசர்குலம் எல்லாம் “அரச மரபு வெறும் நினைவு தான்” என்று நினைத்து இந்த காலத்திற்கு ஏற்ப சிறந்த தொழிலதிபராக விளங்குகிறார்.
இதைத்தவிர அரச குடும்பத்தின் தனிச்சிறப்புகள் என்று பலதும் உண்டு..! ஆனால் அவையெல்லாம் இப்படி பழையதானதும் உண்டு..!
குடும்பத்தில் உள்ள பழைய செப்பேடுகள்.. சாசனங்கள்.. பாரம்பரிய வாட்கள் கேடயங்கள் போன்ற போரில் பயன்படுத்தப்பட்ட வீர கருவிகள், பட்டயம் ஓலைச்சுவடி என்று ஏகப்பட்டது உண்டு..!
அவை அனைத்தும் ஒரு பெரிய அறையில் நூலகமாக மாற்றி இன்றுவரை பாதுகாத்து வருகின்றனர்..!
வீரராகவனுக்கு பெருமையே புதிதாக வருபவர்களுக்கு தங்கள் பழம்பெரும் மாளிகை.. இவற்றையெல்லாம் சுற்றி காண்பித்து தனது பழம் பெருமைகளை பேசி காட்டி பூரித்து பேசுவது தான்..!
அது தவிர இவர்களின் கிளை வாரிசுகளும் பலரும் பல ஊரில் வாழ்கின்றனர். வருடம் ஒருமுறை குடும்பத்தார் நடத்தும் அவர்கள் குலதெய்வ கோவில் மண்டகப்படியில் மறக்காமல் தவறாமல் அனைவரும் கலந்துக் கொள்வார்கள்..!
இன்றுமே ஊர்க்காரர்களுக்கு ஒரு பிரச்சனை வந்தால் முதலில் இவர்களிடம் தான் வருவார்கள்.
பிரச்சனையின் தீவிரத்தை பொறுத்தே அதை இவர்களே தீர்த்து வைப்பதும் இல்லை காவல்துறைக்கு நீதித்துறைக்கு அனுப்புவது இந்த வல்லபநாடு வாரிசுகளின் விருப்பம் தான்..!
அப்படிப்பட்ட இந்த வல்லபநாடு ஜமீனின் தற்போதைய பெண் வாரிசுக்கு தான் கோலாகலமாக நிச்சயதார்த்த விழா நடந்துக் கொண்டிருந்தது..!
மாப்பிள்ளை வேறு யாரும் இல்லை லோகநாதனின் மனைவி சுலோச்சனாவின் சித்தப்பா வைரவேலுவின் ஒற்றை தவ புதல்வன் தென்னரசு..!
இவர்களும் லேசு பட்டவர்கள் கிடையாது..!
பாபநாசத்தை சுற்றியுள்ள ஜமீன்தாரர்களின் தற்போதைய வாரிசுகள் தான் இவர்கள்.
பெரியவர் ரத்தினவேல் அவரின் மனைவி பார்கவி. இவருக்கு சிறுவயதிலேயே ராணுவத்தில் அதிக விருப்பம். அடம்பிடித்து செல்ல முயன்றவரை, தடுத்து வாரிசு இல்லாமல் உன்னை அனுப்ப முடியாது என்று பெற்றவர்கள் காரணம் சொல்ல..
20 வயதிலேயே பார்கவியை திருமணம் செய்து வைத்து, சுலோச்சனா அவர் வயிற்றில் உண்டானதும்.. மகிழ்வோடு இராணுவத்திற்கு அனுப்பி வைத்து விட்டனர் அவரது பெற்றோர்கள்.
சுலோச்சனா பிறந்து பத்தாண்டுகளுக்கு பிறகு அவர்களுக்கு ஒரு மகன்..! அவன் தான் நம் லாயர் கதிர்காமன்..!
சுலோச்சனாவுக்கு தங்கள் மூத்த மகளை தன் தம்பி கதிர்காமனுக்கு மணமுடித்து வைக்க தான் அதி பிரியம்.
ஆனால் அவனோ எனக்கு இந்த கல்யாணம் குடும்பம் ஃபேமிலி எல்லாம் செட் ஆகாது என்று மும்பையில் போய் உட்கார்ந்துக் கொள்ள..
பார்கவியும் சுலோச்சனாவும் எவ்வளவோ கெஞ்சி பார்த்து அவன் முடியாது என்றவுடன், தன் சித்தப்பா மகன் தென்னரசுவுக்கே மகளை கட்டிக் கொடுக்க முடிவு எடுத்தார் சுலோச்சனா, கணவன் மற்றும் மாமனாரோடு கலந்து..!
இப்பொழுது இங்கே கோலாகலமாக நிச்சயதார்த்த ஏற்பாடு நடந்துக் கொண்டிருக்கிறது.
“ராசாத்தி.. இதை பாரேன்.. இது உனக்கு நல்லா இருக்கும். ஈவினிங் நீ போடுற லெஹங்காவுக்கு இந்த ரூபி செட் ரொம்ப பொருத்தமா அம்சமா இருக்கும்” என்று சுலோச்சனா அவளிடம் காட்ட..
“எனக்கு இது பத்தி எல்லாம் எதுவும் தெரியாது. நீங்க எனக்கு என்ன செஞ்சாலும் ஓகே” என்றவளை பார்த்து வழக்கம்போல கவலை கொண்டார் சுலோச்சனா.
“இங்க கொடுங்கம்மா நான் பார்த்துக்கிறேன். தஞ்சாவூர்ல இருந்து ஆள் ஏற்பாடு பண்ணி இருக்கேன் மேக் ஓவர்க்கு.. எல்லாமே அவங்க பார்த்துக்குவாங்க. நீங்க உங்க பெரிய பொண்ணு கவலைய விட்டுட்டு மத்த ஏற்பாட்டை போய் பாருங்க” என்றாள் சிறிய மகள் மஹிமா..!
“என்னவோ போ மகி.. அவ எதுலயுமே ஒட்டாம இருக்கா. கல்யாணம் பொண்ணுக்கான ஒளியே அவ கிட்ட இல்ல..” என்று வருந்திய அன்னையைத் தேற்றி “நான் பார்த்துக் கொள்கிறேன்” என்று சொல்லி அனுப்பி வைத்த மஹிமா அக்காவை தேடி அவள் அறை உள்ளே சென்றாள்.
“என்னங்க… தம்பி இன்னும் வரல.. இன்னைக்கு காலேஜுக்கு போக வேண்டாம்னு சொன்னாலும் அவன் கேட்கவே இல்லை” என்று மகனைப் பற்றி கணவனிடம் அவர் குறை கூறினார்.
மகனுக்கு மாமனார் பெயரை வைத்ததனால் அந்த பெயரை சொல்லி கூப்பிடாமல் தம்பி என்று தான் அழைப்பார்.
“இன்னைக்கு அவனுக்கு செமஸ்டர் மா. கண்டிப்பா போய் ஆகணும்னு போயிட்டான். இல்லன்னா அக்கா ஃபங்ஷனை வச்சுட்டு அவன் காலேஜ் போவானா? நான் அவனை அழைச்சிட்டு வர அப்பவே டிரைவர் அனுப்பிட்டேன்.. தஞ்சாவூர்ல தானே படிக்கிறான் வந்துருவான்.. நீ பிள்ளைங்களை நினைச்சு கவலைப்படாமல் நீ ஜம்முனு ராணியாட்டம் ரெடி ஆகு.. போ போ” என்று மனைவியை அனுப்பி வைத்தவரின் கண்களில் இன்றும் அதே அன்னியோன்யம், திருமணம் முடிந்து பல வருடங்கள் கழித்தும்..!
“சரிங்க.. நான் போய் மாமாவை ஒரு எட்டு பார்த்துட்டு அப்புறம் ரெடி ஆக போறேன்” என்றவர் தன் மாமனாரான வீரராகவனை சென்று பாரத்து, நிச்சயதார்த்த ஏற்பாட்டை எல்லாம் ஒரு முறை கூறினார்.
எல்லாத்தையும் கவனமாக கேட்டுக் கொண்ட முதியவரோ “சரி சரி மருமகபொண்ணே.. உங்க வீட்ல இருந்து எல்லாம் கிளம்பிட்டாங்களான்னு போன் பண்ணி ஒரு தடவை கேட்டுக்கோ. நீ என்ன இப்படியே நிக்கிற.. உங்க அத்தை இந்த மாதிரி ஃபங்ஷனுக்கு எல்லாம் எப்படி ராணி மாதிரி இருப்பா தெரியுமா? சீக்கிரம் கிளம்பு..!” என்று அதட்டல் போட்டாலு
ம் மருமகள் மீது பாசமானவர் தான் வீரராகவன்.
“இந்தா இந்த மரகத கல் வச்ச அட்டிகையை பெரிய பேத்திக்கு போட்டு விடு.. இது அவங்க பாட்டியோடது” என்று அட்டிகையை அவர் கையில் கொடுத்தார்..
தொடரும்..
