19
“டீ குடிக்கிறீங்களா சார்?” என்று ரதி
சற்று பயத்துடன் கதிர்காமனிடம் கேட்டாள்.
“ம்ம்ம்…” என்று அவளை நிமிர்ந்து பார்த்தவனுக்கும் டீ குடித்தால் பரவாயில்லை என்று தோன்ற..
“எடுத்துட்டு வா” என்றவன், தன் கேஸ் ஃபைலில் மூழ்கிவிட்டான்.
ரதி இவனிடம் இங்கே வேலைக்கு வந்து பத்து நாட்களுக்கு மேலாகிறது. மாலை போல கல்லூரி முடித்து வருபவளுக்கு வேலை ஒன்றும் பெரிதாக இருக்காது. மாலை செல்லும் வேலையாள் அனைத்து வேலையும் முடித்தே செல்வார்.
இரவு உணவு கதிர்காமன் பெரும்பாலும் வெளியில் தான். எப்போதாவது தான் இங்கே..!
அதனால் தான் படிக்க வேண்டியவற்றை எடுத்து வருபவள், ஓரமாக ஒரு நாற்காலியில் அமர்ந்து அமைதியாக படித்துக் கொண்டிருப்பாள்..! அவன் வீட்டு சோபாவில் கூட அமர மாட்டாள்..!
ஏன் வினையை விலை கொடுத்து வாங்க வேண்டும் என்று..!
இவள் வேலைக்கு சேர்ந்த இந்த பத்து நாட்களில் ஒரு நாள் கூட அவன் இங்கே இரவு உணவு உண்டது இல்லை. இரவு வெகுநேரம் சென்று வருபவன், ஒரு குளியல் போட்டு சாதாரண டீசர்ட் ஷார்ட்ஸூக்கு மாறுபவன்,
“வா.. உன்னை கொண்டு போய் ட்ராப் பண்றேன்” என்று பொறுப்பாக அவளை கொண்டு போய் வீட்டில் விடுவான்.
‘நிஜமாலுமே நாம இவன்கிட்ட வேலையில இருக்கோமா என்ன? வரான்.. குளிக்கிறான்.. ட்ரஸ் மாத்துறான்.. என்னை வீட்டுல ட்ராப் பண்றான்.. ரிப்பீட்டு..!! என்ன மேன் நடக்குது?’ என்று இவள் தான் தானாக புலம்பிக் கொண்டு வருவாள்.
“எக்ஸாம் வருதுல.. எப்போ?” கேட்டான் காமன்.
“நெக்ஸ்ட் வீக்..!” என்றாள் ரதி..
“அப்போ.. ஒழுங்கா அதுல கான்ஸன்ட்ரேட் பண்ணு.. தேவையில்லாம யோசிக்காத..!” என்று அறிவுரை கூறுவான்.
“ஓகே சார்..” என்று வாயை மூடிக் கொள்வாள்..!
வீட்டில் தம்பியிடம் தன் வேலை மட்டும் சொல்லி இருந்தாளே தவிர, அவன் செய்த வேலைகளைப் பற்றி ஒன்றும் மூச்சுவிடவில்லை..!
ராகவ்வுக்கு தெரிந்திருந்தால் அவ்வளவுதான்..!
“உன்னை வித்து நான் இங்க பொழைக்கணும்னு இல்ல.. நான் ஜெயிலிலேயே இருக்கிறேன்” என்று இவனே வாலண்ட்ரியாக போய் அங்கே அமர்ந்து இருப்பான்.
நேரம் சென்று வீட்டிற்கு வரும் அக்காவை அவன் கவலையாக பார்த்தால் “நீ கவலைப்படுகிற மாதிரி எனக்கு அங்க பெரிய வேலை எதுவுமே இல்லை.. நான் உட்கார்ந்து படிச்சிட்டு தான் இருப்பேன். நைட் டின்னர் வேணும்னா சார் இன்ஃபார்ம் பண்ணுவாரு.. சமைச்சு வைக்கணும். அவரு நல்ல நேரம் இதுவரைக்கும் ஒரு நாள் கூட அந்த வாய்ப்பு எனக்கு கிடைக்கவே இல்ல” என்று சொல்லி கண்ணடிக்கும் அக்காவை கண்டு சிரித்துக் கொள்வான்.
ஆனாலும் அவன் முகம் தெளியாததை கண்டு, “ரொம்ப பயந்தா ஒரு நாள் என் கூட வந்து பாரு டா” என்று ஒருநாள் அழைத்தே அவள் சென்று காட்ட.. இரவு வந்த கதிர்காமன் ராகவ்வை கேள்வியாய் நோக்க..
“இல்ல சார்.. எனக்கு இங்க ஒரு ப்ரண்ட் இருக்கான். அவனை பார்க்க வந்தேன். அப்படியே அக்காவையும் கூட்டிட்டு போகலாம்னு..” என்று அவன் இழுக்க..
“உன்னை தான் இப்படி வெளியில பிரண்ட்ஸ் கூட சுத்த கூடாது.. எங்கயும் போக கூடாதுன்னு சொல்லி இருக்கேன் தானே?” என்று அவன் அதட்டலாகக் கேட்டதும்..
“சாரி சார்..! இனிமே இப்படி பண்ணல..!” என்று பம்மி மன்னிப்பு கேட்டான். ரதிக்கு சிரிப்பு வந்தாலும் அதனை மறைத்துக் கொள்ள.. ராகவ் வீட்டிற்கு வந்து அக்கா சிரித்ததற்கு இரண்டு அடி போட என்று கலகலப்பாக நேரம் அவர்களுக்கு மாறியது.
“இங்க பாரு அடுத்து என்னென்ன காலேஜ்ல என்னென்ன கோர்ஸ் இருக்கு.. அதுல உனக்கு எது செட் ஆகும்.. இதெல்லாம் நீ உட்கார்ந்து இந்த ஃப்ரீ டைம்ல அனலைஸ் பண்ணு ராகவ்..” என்று அக்காவாய் அவள் அறிவுரை கூற,
“அதெல்லாம் நான் எப்பவோ பண்ணிட்டேன். வீட்ல நேரமே போக மாட்டேங்குது டி ரதி” என்றவனை ஆன்லைனில் சில கோர்ஸ்களில் சேர்த்து விட்டாள்.
ராகவ் சாஃப்ட்வேர் இன்ஜினியர் தான் என்பதில் தீவிரமாய் இருந்தான். அதற்கு தகுந்தாற் போல கல்லூரியில் கற்று தருவதை தவிர என்னென்ன கோர்ஸ்கள் இருக்கிறது என்பதை அவனை விட்டு ஆராய சொல்லி.. அவனோட படிப்புக்கு எது இலகுவாக இருக்குமோ.. வருங்காலத்துக்கு எது பயனுள்ளதாக இருக்குமோ.. அதனை கண்டறிந்து அதன் ஆன்லைன் வகுப்பில் சேர்த்து விட்டிருந்தாள் அவனை ரதி.
தம்பியின் ஆன்லைன் கோர்ஸூக்காக தனது சில நகைகளை அடகு வைத்திருந்தாள்.
அதனால் அடுத்து வந்த நாட்களும் அவனுக்கும் நேரம் சுவாரசியமாகவே கரைந்தது. இடையிடையே அவனுக்கு தேவைப்படும் சில புத்தகங்களை வாங்கி வருமாறு ரத்னாவை பணித்தாள்.
“வா வா நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து போகலாம். சேர்ந்து ஊர் சுத்தி ரொம்ப நாளாச்சு டி. வாடி போகலாம்” என்று ஒருநாள் ரத்னா அழைக்கும் போது தான், இப்படி கதிர்காமன் வீட்டில் தான் வேலை செய்வதாய் கூறினாள் ரதி.
“என்ன அவர்கிட்ட வேலை செய்றியா? அடிப்பாவி பாதகி.. ஒரு வார்த்தை என்கிட்ட சொல்லியிருந்தா நானும் வந்து ஜாயின் பண்ணி இருப்பேன் இல்ல.. நீ மட்டும் அவரிடம் ஜூனியரா சேர்ந்திருக்க.. நீ எல்லாம் பிரண்ட்டா டி??” ரத்னா அதிர்ச்சியாகி திட்டிக் கொண்டே செல்ல.. அவள் முதுகில் ரெண்டு போட்டவள்,
“எரும.. எரும.. நான் அவரு வீட்ல வேலை பார்க்குறேன்னு சொன்னேனே தவிர அவர் கிட்ட வேலை பார்க்கிறேன்னு சொன்னேனா?” என்று ரதி கடுப்பாக பேச..
“ஆமாமில்ல.. நீ அப்படித்தான் சொன்ன. ஆனா ரெண்டுத்துக்கும் என்ன வித்தியாசம்?” என்று ரதியை பார்த்து கன்னத்தில் கை வைத்து ரத்னா கேட்க..
“ஆபீஸ்ல வேலை பார்த்தா அவருடைய ஜூனியர்னு அர்த்தம்.. வீட்ல வேலை பார்த்தா அவருக்கு ஆயா வேலை பார்க்குறேன்னு அர்த்தம்..!” என்றதும் ரத்னா நம்ப முடியாமல் அவளைப் பார்க்க..
“பக்கி நம்புறாளா பாரு..!” என்று புலம்பிய ரதி, அன்று நடந்த விவரத்தை எல்லாம் கூறினாள்.
அதில் அவன் சொன்ன ஆஃபரை தவிர்த்து ஆயா வேலை செய்வதாக அவளே ஒத்துக் கொண்டதாக கூறினாள்.
“பொய்யும் நன்மையிடத்து” என்ற குறளுக்கு இணங்க.. கதிர்காமன் பற்றிய உண்மைகளை கூறி ரத்னாவுக்கும் பார்த்திவ்வுக்கும் இடையே இருக்கும் காதலில் விரிசல் விழுவதை ரதி விரும்பவில்லை.
“இப்போதைக்கு இந்த வேலையும் எனக்கு ரொம்ப யூஸா இருக்குடி இதுல ஒரு அமௌன்ட் கிடைச்சுதுனா.. எங்க செலவுக்கு ஆகும் இல்ல..” என்று ரதியை கண்டவளுக்கு வருத்தம் மேலோங்க அவளை தோளோடு அணைத்து,
“கவலைப்படாதே..! எல்லாம் சீக்கிரம் சரியாகும்..! சீக்கிரம் நமக்கு நல்ல லாயர் கிட்ட ஜூனியரா வேலை கிடைக்கும்” என்றாள் ரத்னா.
பெரும்பாலும் ராகவ்வை வெளியில் விடுவதில்லை. நண்பர்களோடு பேச வேண்டும் அவன் விருப்பப்பட்டாலும் வருணோடு மட்டுமே பேச அனுமதித்தாள் ரதி.
திரும்பவும் ஏதேனும் பிரச்சனையில் தம்பி சிக்கிக் கொள்வதை அவள் விரும்பவில்லை.
“எவ்ளோ பெரிய கண்டத்தில் இருந்து தம்பி வந்திருக்கிறான்.. கரணம் தப்பினால் மரணம் என்பது போல..” அன்று மட்டும் கதிர்காமன் வராமல்.. இவளுக்கு உதவிடாமல் போயிருந்தால்.. தன் தம்பியின் நிலையை நினைத்துப் பார்க்கவே அவளால் முடிந்திராது..!
அதனால் தானே.. தானே முன்வந்து அவனுக்கு தன்னை தர விழைந்தது..!
ஆனாலும்.. அதுவும் அவளால் முடியாமல் போக.. அதை அவனிடம் சொன்ன பிறகு, அவன் அவளிடம் நடந்துக் கொண்ட விதம் இன்னமும் அவளுக்கு அவனை நினைத்து பெருமிதமாக இருந்தது..! அவனிடத்தில் பாதுகாப்பாகவும் உணர்ந்தாள்..!
இதோ இந்நாள் வரையிலும் எந்த ஒரு தப்பான பார்வையும் அவனிடம் இல்லை..! அதன்பின் அந்த நாளை பற்றி குறிப்பாகவும் அவளிடம் கூறியதும் இல்லை..!
தம்பி பற்றிய கவலையின்றியும் கதிர்காமன் பற்றி பெரிதாக பயமின்றியும்.. தன் படிப்பில் கவனம் வைத்தாள் ரதி.
இதோ அதோ என்று அவளது தேர்வுகளும் முடிந்து விட்டன..!
பரீட்சை நேரத்திலும் சில பல சந்தேகங்களை இவள் குறித்து வைத்து அவன் வீட்டிற்கு வந்ததும் கேட்க..
“நீ எனக்கு தானே வேலை பார்க்கிற? இதுல உனக்கு என்னை டியூட்டர் வேலை பார்க்க வைக்கிற?” என்று அவளை முறைத்தாலும் அவன் அவள் சந்தேகங்களை அழகாக நிவர்த்தி செய்வான்..!
முதலில் அவன் பேச்சிலும்.. அவனை நடவடிக்கைகளை கண்டு பயந்தாலும்.. இத்தனை நாட்களில் அவனைப் பற்றி தெளிவாகவே புரிந்து இருந்தாள்..!
அதுவும் அவளது பரீட்சை நாட்களில் எல்லாம் இவள் வழக்கமாக வீட்டுக்கு வரும் நேரத்தை விட நேரமாகும்..!
அவனிடம் பாடத்தில் சில சந்தேகங்களுக்கு விளக்கம் கேட்டு அவன் விளக்கம் கொடுத்து வர இன்னும் நேரம் சென்றது. அப்போதும் அவனே கொண்டு வந்து அவளை வீட்டருகே விட்டுவிட்டுச் செல்வான்.
இப்படி தினமும் இரவு ஒருவனோடு இவள் வந்துச் செல்வது.. அதுவும் உயர்தர காரில் வருவது
அங்குள்ள காலனி மக்களுக்கு பேச்சு பொருள் ஆனது..!
பொதுவாக நம் சமுதாயத்தில் ஒரு குறை உண்டு..!
ஒரு பெண் கணவன் இல்லாமல் தனியாக இருந்தாலோ.. அம்மா அப்பா என்று இல்லாமல் சுயமாக வளர்ந்து வந்தாலோ அது இந்த சமுதாயத்தின் கண்ணுக்கு பொறுக்கவே பொறுக்காது..!
அவர்களை.. அதாவது இந்த சமுதாயத்தை பொருத்தவரை அவர்களெல்லாம் ஒழுக்கம் கெட்டவர்கள்..! கேடு கெட்டவர்கள்..! சரியான வழியில் செல்லாமல் உடலை விற்றுப் பிழைக்கும் விலைமாதர்களுக்கு ஒப்பானவர்கள்..!
இங்கு வருணின் அப்பா மூலமாக இவள் வந்திருந்ததால், முதலில் பெரிதாக யாரும் இவளைப் பற்றி பேசவில்லை.
ஆனால் அன்று “என் தம்பி போலீஸ் ஸ்டேஷன்ல இருக்கிறான்..உதவி செய்யுங்க” இரண்டு மூன்று இடத்தில் ரதி சென்று உதவி கேட்டுயிருக்க.. அப்பொழுது மறுத்தவர்கள் அவள் சென்றவுடன் அவள் முதுகுக்கு பின்னால் பேச ஆரம்பித்தார்கள்.
”ஏதோ நல்ல குடும்பம் பொண்ணு வக்கீலுக்கு படிக்கிறானு சொன்னாங்க.. இப்ப என்ன இவ தம்பி போலீஸ் ஸ்டேஷன்ல இருக்கான்னு சொல்றா? என்ன தப்பு செஞ்சானோ?”
“உண்மையிலேயே இந்த பொண்ணு வக்கீலுக்கு தான் படிக்கிறாளா?”
“யாருக்கு தெரியும்? எந்த புத்தில் எந்த பாம்பு இருக்குமோ?” என்று அன்று பேசிக்கொண்டவர்களின் வாய்க்கு மேலும் அவலாகி போனாள் ரதி, அதன் பின் வந்த நாட்களில்..!
அதுவும் இவள் சென்று இரவு வெகு நேரமாகியும் வீடு திரும்பவே இல்லை.
ஆனால் அர்த்தராத்திரியில் இவள் வீடு திரும்பியது அவர்களுக்கு தெரியாது அல்லவா?
காலையில் இவளை கண்டதும் அதுவும் ராகவ்வையும் சேர்த்து பார்த்ததும்..
“ஆக.. என்னவோ பண்ணி தம்பியை கூட்டிட்டு வந்துட்டா? ஜெயிலுக்கு போற அளவுக்கு அந்த பையன் என்ன தப்பு பண்ணி இருப்பான்?” என்று தப்பே செய்யாமல் மாட்டிக் கொண்ட ராகவ்வை பற்றி தெரியாமல் அவனையும் தப்பாக பேசியது, அந்த தப்பிலிருந்து தம்பியை மீட்டுக் கொண்டு வந்த அவளையும் தப்பாகத் தான் பேசியது.. பார்த்தது.. நடத்தியது..!
இப்படியாக ஒரு உலகம் தங்கள் முதுகுக்கு பின்னால் தங்களைப் பற்றி தப்பும் தவறுமாக பேசி பேசி அதையே உண்மை என்று நம்பி மற்றவர்களிடமும் அதை பகிர்ந்து என்று தங்களைப் பற்றிய ஒரு நன்மதிப்பு இல்லாத கட்டமைப்பு உருவாகியதை பாவம் இந்த அக்கா தம்பி இருவரும் அறியவில்லை…!
காரணம் இருவரும் அவரவர் வேலைகளில் முழு மனதோடு ஈடுபட்டு இருந்தனர்.
ரதிக்கு இது கடைசி வருடம் எந்த அரியர்ஸூம் இல்லாமல் நல்லபடியாக அவளது தேர்வை படிப்பை முடிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருந்தாள்.
அந்த பக்கம் ராகவ்வோ “நாம அக்காவுக்கு உதவி செய்றேன்னு போய் மாட்டிக்கிட்டோம்.. இனி எந்த ஒரு ட்ராப்லையும் நாம மாட்டக்கூடாது. ஃப்யூச்சர்க்கு என்ன தேவையோ அதை படிப்போம்” என்று தீவிரமாக ஆன்லைன் கோர்ஸ்களை படித்துக் கொண்டிருந்தான்.
அவனது நண்பர்கள் கூட வந்து அழைத்து பார்த்து விட்டார்கள் “நான் வரல..!” என்ற பதில் தான் அவனிடம்..!
சிறிது காலமாக வருண் கூட அவன் வீட்டிற்கு வருவது இல்லை. ஆன்லைன் கோர்ஸில் தீவிரமாக இருந்த ராகவ் அதனை பற்றி சிந்திக்கவே இல்லை.
காலனியில் இவ்வாறாக பேச்சு நிலவுவதை கேட்ட வருணின் தாய் அதை அவன் தந்தைக்கு தெரியப்படுத்தி “நீங்க தானே அந்த பிள்ளைகளை கொண்டு வந்து குடி வச்சீங்க.. நாளைக்கு ஏதாவதுனா உங்கள தான் வந்து கேட்பாங்க.. ஜாக்கிரதையாக இருங்க..!” என்று அவருக்கு அறிவுரை கூறியவர்,
மகனிடமும் கடிந்துக் கொண்டார். “இங்க பாரு வருண். இனி அந்த பையன் வீட்டுக்கு போக கூடாது. அவன் கூட விளையாட கூடாது சரியா? அவனை பத்தி நல்லா அபிப்பிராயமே இங்க இல்ல.. ஏதோ தப்பு செஞ்சு போலீஸ் ஸ்டேஷன் எல்லாம் போய்ட்டு வந்தானாம்” என்று கூறிய அம்மாவிடம்.. தானும் அன்று போலீஸ் ஸ்டேஷனில் தான் இருந்தேன் என்று தெரியப்படுத்த அத்தனை பயம் அவனுக்கு.
அப்படி சொல்லி இருந்தால் ரதி தன் தம்பியை மட்டும் காப்பாற்றவில்லை. தங்கள் மகனையும் சேர்த்து தான் காப்பாற்றி வந்திருக்கிறான் என்று உண்மை புரிந்து இருக்கும். அவரும் நாலு பேரிடம் அதை எடுத்துச் சொல்லி இருப்பார்.
ஆனால் வருணின் பயம் அவனை மட்டும் அல்ல அவனுக்கு உதவி செய்த நண்பனின் குடும்பத்தையும் சிக்கலில் மாட்டி வைத்தது.
வருணுக்கும் உள்ளுக்குள் உதறல் எடுத்தது. “போலீஸ் ஸ்டேஷன் போன விஷயம் தந்தை கேட்டால்.. 90ஸ் ஃபாதர் போலவே பெல்ட் எடுத்து விளாசி தலையிடுவார்” என்பதை உணர்ந்தவன்,
“சரிமா.. நீங்க சொன்னா ஓகே தான். அடுத்து என்ன காலேஜ் படிக்கலாம்?” என்று பேச்சை மாற்றி விட்டான்.
ஆனால் உள்ளுக்குள் ஒரு மனம் நண்பனுக்காக வருந்தியது. இதை எப்படியாவது அவனிடம் தெரியப்படுத்தினால் போதும் என்று நினைத்துக் கொண்டே இருந்தான்.
காலம் கடந்து செய்த உதவி அது எவ்வளவு பெரிதாக இருந்தாலும் அதனால் எந்த பயனும் இல்லை என்பது போல தான் வருண் நிலையும்..!
அன்று ரதி அவன் வீட்டிற்கு வரும் வேளையிலேயே கதிர்காமன் வீட்டில் தான் இருந்தான்.
“இவன் தங்களை எல்லாம் ஜூனியர் ஆக சேர்த்துக் கொள்வானா என்று தெரியாது, ஆனால் கேட்டு பார்ப்போமே?” என்று தைரியத்தை வரவழைத்துக் கொண்டு,
“சார்.. நான்.. நான் வந்து.. உங்க… உங்க கூட.. வந்து..” என்று அவள் திக்கி தடுமாறியவளின் ஈர இதழ்கள் அவனை அதனுள் தொலைய வைக்க…
மெல்ல அவளை நெருங்கி “என் கூட.. ம்ம்ம்.. என் கூட ஓ
கே வா?” என்று கேட்டவனை அவள் அதிர்ந்து பார்க்க..
பாவையின் பார்வை பார்த்தவனை பாதிக்க..
அவளை தன் இடையோடு இணைத்தவன், இதழ்களுக்கான இடைவெளியை குறைத்தான்..!
உதட்டை அசைத்தால் உரசி விடுமோ என்ற பயத்தில் அவள் அதரங்களை உள்ளிழுத்துக் கொள்ள.. அதன் கவர்ச்சியில் கவரப்பட்டவன், அவளின் மூடிய அதரங்களை தன் அதரங்களால் கொய்தான்..!
