Share:
Notifications
Clear all

காமன் 1

 

Jiya Janavi
(@jiyajanavi)
Member Admin
Joined: 2 years ago
Messages: 265
Thread starter  

அத்தியாயம் 1

 

 

 

மும்பை மாநகரம்...

 

 

 

மகாராட்டிர மாநிலத்தின் தலைநகரம் மற்றும் இந்தியாவின் நடைமுறைப்படியான நிதி மையம் என்றால் அதில் வியப்பில்லை..!

 

 

 

எத்தனை பெரிய தொழில் நகரம்..

 

எத்தனை பெரிய கோடீஸ்வரர்களின் கோட்டை..

 

எத்தனை பெரிய ஜொலிக்கும் சினிமா நட்சத்திரங்களின் நீள் வானம்..

 

எத்தனை பெரிய கிரிக்கெட் ஜாம்பவான்களின் தளம்..

 

 

 

உண்மையே..!

 

 

 

தூங்கா மாநகரம்.. கனவுகளின் நகரம்.. ஏழுதீவுகளின் நகரம்.. இந்தியாவின் நுழைவு பாதை என்றெல்லாம் அடைமொழியோடு அழைக்கப்படும் மும்பை இந்தியாவின் பொருளாதாரத்தில் பெரும் பங்கு வகிக்கிறது என்பது அசைக்க முடியாத உண்மை.

 

 

 

இந்தியாவின் பொருளாதாரத்தில் மூலதன பரிவர்த்தனையில் 70% விகிதங்களை மும்பை கொண்டுள்ளது. உலகின் எந்த நகரத்திலும் இல்லாத வகையில் மும்பையில் எட்டு மிகப்பெரிய பில்லியனர்கள் உள்ளனர் என்பதே நம் போல் பாமரர் அறியாத உண்மை..

 

 

 

மும்பையின் வணிக வாய்ப்புகள்

 

இந்தியா முழுவதிலும் இருந்து வரும் புலம்பெயர்ந்தோரை ஈர்க்கின்றது.

 

 

 

எத்தனை பெரிய நகரம் என்றால் அதில்.. எத்தனை கோடி மக்கள்…? குறைந்த பட்சம் இரண்டு கோடி மக்களாயினும் இருப்பர்.. இருந்தும் என்ன பயன்? இதில் யாரேனும் ஒரே ஒருத்தரால் என் நிலையை மந்திரக்கோலால் மாற்றத் தான் முடியுமா? இல்லை.. எனக்கு உதவ தான் முடியுமா?

 

 

 

ம்ஹூம் முடியாதே..!!

 

 

 

சோகமே உருவாக எதிரே இருந்த கடல் நீரை வெறித்தாள் அவள்..!

 

 

 

‘கடல் முழுக்க தண்ணீர் ஆனால் குடிப்பதற்கு ஒரு சொட்டு கூட தண்ணீர் இல்லை என்பது போல.. இந்நகரம் முழுக்க மக்கள் அதுவும் செல்வந்தர் சீமாட்டிகள் அதிகம் இருந்தும் எனக்கு உதவ ஒருத்தர் கூட இல்லை’ என்று பெருமூச்சு விட்டப்படி, தன் எதிரிலே இருக்கும் கடற்கரையை வெறித்தபடி அமர்ந்திருந்தாள் ரதி சிற்பிகா.

 

 

 

நவி மும்பையில் உள்ள ஒரு கடற்கரையான என்ஆர்ஐ காம்ப்ளக்ஸ் பீச்சில்தான் கடலை வெறித்தபடி அமர்ந்திருந்தவள், அங்கு ரோந்து வந்த காவல்அதிகாரியின் விசிலில் இருட்டிவிட்டதை உணர்ந்து மெல்ல நடந்துக் கொண்டு தன் போக்கில் யோசித்துக் கொண்டே சென்றாள்.

 

 

 

'இன்னும் பத்து நாள்ல ஏதாவது பண்ணியே ஆகணும். இல்ல எல்லாமே முடிஞ்சது. அவ்வளவுதான்..!' என்று யோசித்துக் கொண்டே சென்றவளுக்கு 22 வயதே இருக்க கூடும். சட்டக்கல்லூரி மாணவி அவள்.

 

 

 

நவி மும்பையில் உள்ள மகாத்மா காந்தி மிஷன் காலேஜ் ஆஃப் லா வில் கடைசி வருடம் பயிலும் மாணவி.

 

 

 

ஆறு மாதங்களுக்கு முன்பு வரை அத்தனை சந்தோஷமாக கடைசி வருட படிப்பை அவளது உயிர் தோழியான இரத்னாவோடு அத்தனை கனவுகளோடு எந்த தொல்லையும் இன்றி படித்துக் கொண்டிருந்தவள் தான். ஆனால் ஆறே மாதத்தில் எல்லாம் மாறிப்போனது அவளை பெத்தவரின் திடீர் மரணத்தால்..!!

 

 

 

எந்தவித வியாதியும் இல்லாமல் திடகாத்திரமாக இருந்த 45 வயது சித்தாரா மும்பை பெருநகரத்திற்கு ஒரு திருமண விழாவிற்கு சென்று திரும்பிக் கொண்டும் இருக்கும் நேரத்தில் கண்டெய்னர் லாரியால் அடித்து தூக்கப்பட்டு அவ்விடத்திலேயே உயிர் துறந்தார்.

 

 

 

பெற்று போற்றி வளர்த்த அன்னையை ஒரே இரவில் மொத்தமாக வாரி கொடுத்துவிட்டு இரு குழந்தைகளும் தேற்றுவார் இன்றி அழுது கரைய..

 

 

 

அடுத்து இரண்டாவது நாளில் வந்தது வக்கீல் நோட்டீஸ் அவர்களை நோக்கி..!

 

 

 

அந்த வீடு கடனில் இருப்பதாகவும், அதுவும் பல லட்சங்களில் இருக்கும் கடனை உழைத்து கட்டும் அளவிற்கு அங்கே சம்பாதிக்க கூடியவர்கள் இல்லை என்பதாலும்.. அந்த வீட்டை கம்பெனிக்கு கொடுத்து விட்டு, ஒரு மாதத்தில் காலி செய்ய வேண்டும் என்ற வக்கீல் நோட்டீஸ் வந்ததைக் கண்டு ஆடித்தான் போனாள் ரதி.

 

 

 

“கடனா??? அதுவும் நம் வீட்டின் பேரிலா? வாய்ப்பே இல்லையே..!! அம்மாவின் சிறு சிறு நகைகள்.. சிறு சிறு‌ சேமிப்புகளை.. கரைத்து கட்டிய வீடல்லவா இது? இதில் கடன் எங்கிருந்து வந்தது?” என்று விழி பிதுங்கினாள் ரதி.

 

 

 

அவளும் ஒன்றும் சாதாரண மாணவி அல்லவே..! சட்டம் பயிலும் மாணவி..!

 

 

 

அதனால் சட்டத்தின் உதவியை நாடினாள், அவளின் பேராசிரியர்கள் விரிவுரையாளர்களை அணுகினாள்.

 

 

 

அவளது இந்த வழக்கை ஒரு பாடமாகவே அனைவரும் விவாதித்து கடைசியில் “உன் அம்மாவோட கையெழுத்து கைநாட்டு ரெண்டுமே பக்காவா இருக்கே ரதி.. பண பரிவர்த்தனை நடந்த அக்கவுண்ட் டீடைல்ஸூம் சரியா இருக்கு.. அதனால வேற வழியே இல்ல ஒன்னு நீயே வீட்டை காலி பண்ணிடு இல்லன்னா.. கடன் அடைக்க முடியும்னா பேசி பாரு..” என்று கையை விரித்து விட்டனர்.

 

 

 

ஆனால் அவள் மேல் அக்கறை கொண்ட சிலரோ “ரதி.. எல்லா சட்டத்துக்கும் ஓட்டைகள் உண்டு..! அந்த ஓட்டையை கண்டுபிடிச்சு இந்த வழக்கிலிருந்து உன்னை விடுவிக்கிறதுக்கும் சில முன்னணி லாயர்ஸால கண்டிப்பா முடியும்.. அந்த மாதிரி உள்ள ஆட்களை தேடி போய் பாரு ரதி..! கண்டிப்பா உனக்கு நியாயம் கிடைக்கும்.. உங்க அம்மா இவ்வளவு பெரிய அமௌன்ட் வாங்கி இருக்க வாய்ப்பு இல்லைனு நீ சொல்ற.. அதனாலதான் இந்த யோசனை நான் உனக்கு சொல்றேன்” என்று அவர்களால் முடிந்த அளவு அறிவுரை அள்ளி அள்ளி மட்டுமே கொடுத்தனர்.

 

 

 

“அப்படிப்பட்ட சீனியர் லாயர்களை எங்கே சென்று தேடுவது? அப்படியே தேடி கிடைத்தாலும்.. அவருக்கு வாதாடவே சில லட்சங்களை ஃபீஸாக கொடுக்க வேண்டுமே? அந்த அளவுக்கு என்னிடம் ஏது பணம்?” என்று மருகி நின்றாள் மாது‌..!

 

 

 

யாரிடம் சென்று உதவி கேட்க? யாரையுமே தெரியாதே..!

 

 

 

உறவுகள் என்று யாரும் இல்லை. தமிழரான ரவீந்திரன் மராட்டிய பெண்ணான சித்தாராவும் விரும்பி திருமணம் செய்திருக்க..

 

 

 

மகள் தங்களை எதிர்த்து ஒரு மதராஸியை காதல் கொண்டு திருமணம் செய்ததை சித்தாராவின் பெற்றோர்களால் ஏற்க முடியவில்லை.

 

 

 

அதுவும் தமிழ்நாட்டில் இருந்து மும்பைக்கு வந்து இப்பொழுதுதான் தொழில் தொடங்கி இருந்த லோகநாதனை அவர்கள் நம்பவும் இல்லை..!

 

 

 

“எப்போ அவன் சம்பாதிச்சு எப்போ அவன் உன்னை சந்தோஷமா வைச்சுக்குவான்? பொருளாதார ரீதியா உன்னை நிம்மதியா அவனால் வைச்சிக்க முடியுமா?” என்று ஏகப்பட்ட கேள்வி கேட்டார்கள்.

 

 

 

பின்னாளில் இவன் பெரிய கோடீஸ்வரன் ஆவான் என்று கேட்டவர்கள்.. இந்நாளில்

 

தன் மகளை சந்தோஷமாக வைத்துக் கொள்வானா? அடுத்த பெண்ணிடம் போகாமல் அவளுக்கு உண்மையாக இருப்பானா? என்றெல்லாம் இன்றைய காலகட்டத்தில் யாரும் பார்ப்பதில்லை..! யோசிப்பதில்லை..!

 

 

 

சொத்து இருக்கிறதா? பணம் இருக்கிறதா? இவன் நாளைக்கு இல்லாமல் சென்றாலும் மகளுக்கு அவையெல்லாம் இருக்கும் என்று அதீத நம்பிக்கை பெற்றோருக்கு.

 

 

 

உறவே பொய்த்து விட்டால்?? சொத்து பத்தை வைத்து என்ன செய்வது என்று புரியவில்லை?

 

 

 

ஏனென்றால் இன்றைய காலகட்டத்தில் பணமே பிரதானம்..


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top